உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 11 ‘அப்பாடா!’ மிகுந்த பாதுகாப்பான சூழ்நிலைக்கு வந்துவிட்ட பிறகு, ஆபத்தின் அறிகுறி நீங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக கயல்விழியின் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது. சோமனும் உற்சாகத்துடன் சிரித்தான். அப்போது ‘பொட் பொட்’ என்று விழுந்து கொண்டிருந்த தூறலும் நின்று, கதிரவனும் கிழக்கே கிளம்பியிருந்தான். காலை வெளிச்சம்- மண்டபத்தின் மணற்சரிவில் சோமனுடன் இறங்கினாள். வேகமாக இறங்கும் காலடியோசை கேட்டு மண்டபத்திலிருந்து நாகபைரவனும், சித்திரமாயனும் வெளிவந்து பார்த்தனர். கயல்விழி! - தோளில் பல்லவமல்லன்! தன்னை மறந்து “சபாஷ்” என்று பெருத்த தன் உடம்பு குலுங்கத் தன்னை மறந்து குதித்தான் நாகபைரவன். சித்திரமாயனுக்குச் சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை. “கெட்டிக்காரி!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். “இத்தகையவள்...” என்று மேற்கொண்டு அவனால் தொடர முடியவில்லை. மழையில் நனைந்துவிட்ட உடைகள்... கூந்தல் கலைந்து... அங்குமிங்கும் அலைந்து... முகத்தில் அந்தச் சோபையில்லாதிருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. பளபளப்பாய் இருக்கும் கருவிழிகள் கூடக் குழி விழுந்து சோர்ந்திருந்தன. கை கால்கள் முகம்... எல்லாம் வெளுத்து... “இரவு முழுவதும் இவனைக் கடத்துவதற்கு மிகுந்த துன்பமோ?” என்றான் சித்திரமாயன். “ஆம் சக்கரவர்த்தி!” மீண்டும் சித்திரமாயன் நினைத்தான். இத்தகையவள் ஏன் தனக்கு மனைவியாகக் கூடாதென்று? நீண்ட நாட்களாகவே அவள் இளமையின் வனத்தில் கருத்து வைத்திருந்த அவன், இப்போது அதைக் கேள்வியாக மனத்தில் உருவெடுக்கச் செய்தான். அறிவும், ஆற்றலும், அத்துடன் அழகும் சேர்ந்து ஒரு பெண் கிடைப்பதென்பது இவ்வுலகத்தில் முடியாத ஒன்றாகும். அது இங்கே முடிந்து பெண்ணாய்க் கயல்விழி என்ற வடிவில் வந்து நிற்கும் அவளை, நான் மனைவியாக, ஏன் பட்டத்து அரசியாகவும் ஏற்றுக் கொள்வது என்பது எனக்கு நன்மையே தரும். “என்ன சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்?” நாகபைரவன் கேள்வி. சுய நினைவு பெற்று, மூச்சொன்றைப் பலமாக வெளியிட்டு, உதட்டில் முறுவலை நெளியவிட்டு. “ஒன்றுமில்லை!” என்றான். சக்கரவர்த்தி சொல்வது உண்மையா? நாகபைரவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் மேலும் கேட்க விரும்பாமல், “கயல்விழி, மிகக் களைப்பாய் வந்திருக்கிறாய்! நீராடி, உணவு உண்டு வேறு உடை உடுத்திக் கொள். சரியாக... இன்று உச்சி வெய்யிலுக்கே இந்தப் பையனைப் பைரவருக்குப் பலி கொடுத்துவிடுவோம்!” என்று சித்திரமாயன் பக்கம் திரும்பினான். “ஆமாம்! அப்படியே செய்துவிடு நாகபைரவரே! நானும் பாண்டிய மன்னன் கோச்சடையன் இரணதீரனைப் பார்க்க வேண்டும்!” என்றான். கயல்விழி, மணற்சரிவில் இறங்கி மண்டபத்துள் நுழைந்தாள்! அப்போதுதான் அவளுக்கும் களைப்புத் தெரிந்தது. ‘இரவு முழுவதும் ஓடி வந்திருக்கின்றேன்! ப்பா!’ அவளுக்கே வியப்பாக இருந்தது. எத்தனை துணிவுடன் இக்காரியத்தை நிறைவேற்றியிருக்கின்றேன்! ஒருமுறை அதை நினைத்துப் பார்த்தாள். சிறுவன் பல்லவமல்லன் அந்தக் குதிரைக்காக அடம்பிடித்து அழுததை, யவன வணிகன் இருப்பிடத்திலேயே வைத்துக் கண்டு கொண்டு, அதையே அவனைக் கடத்துவதற்கு முக்கிய காரணமாக்கி, விம்மலுடன் இராசசிம்மனிடம் இருந்த அவனைச் சாந்தப்படுத்துவதாகச் சொல்லி, இன்று இரவு எப்படியும் அதை அவனுக்குத் தருவதாகச் சொல்ல, அதைக் கேட்ட மல்லனும் அழுகையை நிறுத்த இரவு மன்னர் உறங்கிய பிறகு தயாராக இருக்கும்படி சொல்லி, அதையே அச்சிறுவனும் உண்மையென்று நம்பித் தன்னுடன் வர, மாளிகையின் பின் பக்கமிருந்த கதவைத் திறந்து கொண்டு மல்லனுடன் வெளியேறி அம்மாளிகையின் பக்கத்திலேயே இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் குதிரையில் ஏறிக் கொஞ்ச தூரம் வந்ததும், மல்லன் ‘எங்கே குதிரை?’ என்று உரக்கக் கேட்டு அழ ஆரம்பிக்க, இவனை இப்படியேவிட்டால் நகரக் காவலுக்குச் செல்லும் வீரர்கள் கண்ணில் தான் பட வேண்டியிருக்கும் என்று பயந்து மயக்கம் தரும் மூலிகைச் சாறை அவன் நுகரும்படி செய்து, பிறகு இடைவிடாது பெய்த மழையுடன் போராடி.. அப்புறம் தன்னைத் துரத்தி வந்தவர்களை ஏமாற்றி.. பெருமிதத்துடனே நீராடச் சென்றாள் கயல்விழி. காலைக் கதிரவன் ஒளி, பசிய புல்தரையின்மீது பரவி, அதன் மீதிருந்த பனித்துளிகளை அழகாய் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. விஜயவர்மன் குதிரையை இழுத்து நிறுத்தினான். காரணம்? எதிரே பெரிய கால்வாய் தெற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இனி மேற்கொண்டு போக வழியில்லை. என்ன செய்வதென்று புரியாமல் புரவியிலிருந்து இறங்கினான். குருவிகள் அங்குமிங்கும் ‘கீச் கீச்‘ என்று ஒலித்துக் கொண்டிருந்தன. உடற்சோர்வு ஒருபுறம் இருக்க மனச்சோர்வு வேறு சேர்ந்து கொண்டது அப்போது. எத்தனை தூரம்தான் இப்படி போவது? ம்.. பசிமயக்கம் வேறு. கால்வாயை ஒட்டிக் கொஞ்ச தூரம் தள்ளித் தென்னந்தோப்பு ஒன்று செழுமையாய் விஜயவர்மன் கண்களுக்குத் தெரிந்தது. “சேனாதிபதி, என்ன செய்யலாம்?” என்று பின்னால் வந்த வீரனும் கேட்டான் அப்போது. “அதோ பார் தென்னந்தோப்பு... அங்கே சென்று முதலில் பசியாறுவோம்! அப்புறம் மல்லனைத் தேடும் வேலையைத் தொடர்வோம்!” என்றான் விஜயவர்மன். அவனும் ஆமோதித்தான். இருவரும் புரவிகளை நடத்தியே அழைத்துச் சென்றனர். தோப்பில் நுழைந்து, செழுமையாகக் குலைதள்ளியிருக்கிற மரமாகப் பார்த்து நின்றனர். வீரன் மரமேறுவதற்கு ஆயத்தமானான். “சொந்தக்காரன் எந்த மூலையில் இருக்கின்றானோ” என்று சொல்லிக் கொண்டே மரமேறத் துவங்கினான் அவன். பாதி தூரம்தான் சென்றிருப்பான். தேள் கொட்டியவன் போல மடமடவென்று இறங்கலானான் அவன். விஜயவர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னப்பா, சொந்தக்காரனைப் பார்த்துவிட்டியா?” என்றான் சிரிப்போடு. கீழே மிக வேகமாக இறங்கி, “இல்லை சேனாதிபதி...” என்று பதறிய அவன் வார்த்தைகள் வெளிவராமல், “ஒரு காபாலிகன்... காபாலிகன்...” என்றான் மூச்சிரைக்க. “என்ன காபாலிகனா?” என்று படபடப்புடன் வினவ, “ஆமாம், குதிரையில் போய்க் கொண்டிருக்கின்றான்! அதுவுமில்லாது இதன் நடுவே பெரிய மணல்மேடு இருக்கிறது. அதற்கு நடுவில் தடாகம் ஒன்று... அதன் ஒரு ஓரத்தில் மாளிகையா... மண்டபம்... சரியாகக் கண்ணுக்குப் புலப்படவில்லை!” என்றான். “இங்கிருந்து எவ்வளவு தொலைவு?” “பக்கத்தில்தான்!” “சரி, அப்படியென்றால் புறப்படுவோம்!” என்று புரவியருகில் சென்றவன், “பக்கத்தில் என்றுதானே சொன்னாய்? நாம் குதிரையில் சென்றால் அதன் ஓசை கேட்டு எச்சரிக்கை பெறப் போகின்றார்கள்! அதனால் நடந்தே போவோம்!” என்று புரவிகளைத் தென்னை மரத்தில் கட்டிவிட்டு விஜயவர்மன் வீரன் காட்டிய திசையில் மெல்ல நடந்தான். மணல் மேடு... அதற்கு நடுவில் பெரிய தடாகம்... “இந்த இடம்தான்!” என்று வீரன் சொன்னான். சட்டென்று போய்விட முடியாது! எப்படிப்பட்ட இடம்? அங்கே இருக்கும் ஆட்கள் எத்தனை பேர்... இவற்றையெல்லாம் கவனித்துச் செல்ல வேண்டும் என்று, அருகிலிருந்த அடர்த்தியான புதர்ப்பக்கம் சென்று மெல்ல எட்டிப் பார்த்தான். ஏறக்குறைய அவன் இருக்கும் இடத்திற்கும், அந்தப் பகுதிக்கும் இரு தென்னை மர தூரம் இருந்தது. தடாகம்... அதற்கப்புறம் மணல்மேடு, அதற்கப்புறம்தான்... அது மண்டபமா அல்லது மாளிகையா? சரியாகத் தெரியவில்லை. ஏறக்குறைய அது பாதிக்குமேல் மணலில் மறைக்கப்பட்டிருந்தது. அதோ... சித்திரமாயன் நின்று கொண்டிருக்கின்றான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு காபாலிகன்... குனிந்து என்ன செய்து கொண்டிருக்கின்றான்... ஓ... அந்தச் சிலை... பைரவர் சிலைதான்... அதை நீரால் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றான்? பக்கத்தில் பெரிய கத்தி பைரவருக்குப் பலிதரப் பயன்படுத்தப்படும் வெட்டரிவாள்! ப்பா! இவர்கள், என்ன செய்யப் போகிறார்கள்? அப்போது மண்டபத்திலிருந்து ஒரு பெண்... உற்றுக் கவனித்த விஜயவர்மன் திகைக்கின்றான். வீரனைக் கூப்பிட்டு, “இந்தப் பெண் நம் அரண்மனையில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தவள் அல்லவா?” என்று ஐயத்துடன் வினவ, வீரன் உற்றுக் கவனித்து, “ஆம் சேனாதிபதி” என்றான் ஆச்சரியத்துடன். “சத்திரத்தில் நாம் மழைக்காக ஒதுங்கிய போது மூலையில் இருந்தவன், பிறகு நம் கையில் சிக்கியவன், உன் சக வீரனைக் கொன்றுவிட்டு ஓடியவன்... சரிதான்! இது என்ன... இதுதான் சித்திரமாயன் இருப்பிடமோ? இங்குத்தான் சூழ்ச்சியே உருவாகிறதோ!” “இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் சேனாதிபதி?” “என்ன செய்வார்கள்? கடத்திய பல்லவமல்லனைப் பைரவருக்குப் பலிதரப் போகின்றார்கள்!” “என்னது?” - திகைத்துவிட்டான் வீரன். “ஆமாம்! அதற்குள் நாம் இதைத் தடுத்தே ஆக வேண்டும்!” “நாம் இருவர்! அவர்கள்... ஒன்று... இரண்டு...” என்று எண்ணிய விஜயவர்மன், ஐந்து பேர் இருக்கிறார்கள்!” என்றான். “குதிரை மூலம் அவர்களை மடக்கிவிடலாம் சேனாதிபதி!” “குதிரை இந்த மணற்சரிவில் அவ்வளவு வேகமாக இறங்க முடியாது! அதை நம்பினால் அவ்வளவுதான்! அதிரடித் தாக்குதல்... திடீரென்று நாம் பாய வேண்டும்! பாய்கின்ற வேகத்தில் இரண்டு தலைகள் உருள வேண்டும். அப்படி உருண்டால் வெற்றி நமக்கு. இல்லையென்றால்...?” “ஏன் நிறுத்திவிட்டீர்கள் சேனாதிபதி?” “நிறுத்தியதின் அர்த்தத்தை நீ புரிந்து கொண்டிருப்பாய்! என்று நினைத்தேன்! இல்லையென்றால் நாம் இருவரும் அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான்!” “அப்படியா?” “ஆமாம்! நான் சொல்வதைக் கேள்! இந்தத் தாக்குதல் மிகவும் முக்கியம். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போம்! ஐந்துபேர் தவிர வேறு யாராவது இருக்கிறார்களாவென்று! அப்படியில்லையென்றால் மிகவும் சந்தோஷம். இருந்தாலும் நாம் எதிர்த்தே ஆகவேண்டும்! ஏறக்குறைய இது புனிதப்போர் என்றே கருதுகின்றேன். எப்படியும் பல்லவமல்லனை மீட்டே ஆகவேண்டும். ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்!” என்றான். வீரன் பற்களைக் கடித்தான். மீசை துடித்தது. “கவனி, முதலில் இவர்கள் ஐந்து பேர்கள்தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்! அப்படி இவர்கள் ஐந்து பேர் என்றதும், அவர்கள் கவனம் முழுவதும் பூசையில் இருக்கும் போது நாம் பாய்ந்து சென்று தாக்க வேண்டும்! அப்போது வெற்றி நமக்குத்தான்!” என்றான். “அப்படியே செய்வோம் சேனாதிபதி” என்று வீரன் ஆமோதிக்க, இருவரும் புதரில் மறைந்தனர். பசி வயிற்றைக் கிள்ளியது. எச்சிலைக் கூட்டி விழுங்கினான் விஜயவர்மன். அந்த எரிச்சல் இலேசாய்த் தணிவது போலிருந்தது. கண்களை மூடித்திறந்தான். பசி தணிந்துவிட்டதற்கு அடையாளமா அது? புன்முறுவலுடன் அந்த வீரன் பக்கம் திரும்பினான். “சேனாதிபதி!” “என்னப்பா?” முகத்தில் சோர்வு பரவ, “பேசாமல் தென்னை மரத்தில் ஏறியவன் இரண்டு இளநீரோடு இறங்கி வந்திருக்கக் கூடாதா?” என்றான் ஆதங்கத்தோடு. “அதுதான் புத்திசாலித்தனம்! ஆனால் அதையெல்லாம் இப்போது திரும்பச் சொல்வது... இலட்சிய வீரர்கள் பசியை எதிர்பார்க்கக் கூடாது. பசியிருந்தால் காரியம்...” - திரும்பவும் வயிறு எரிய எச்சிலைக் கூட்டி விழுங்கினான். உயரக் கிளம்பிய கதிரவன் ஒளி தகிக்க ஆரம்பித்தது. ஏறக்குறைய உச்சியைச் சூரியன் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, பைரவர் சிலையை மலரினால் அலங்கரித்து, அதற்கு இருபக்கமும் தேங்காய்ப் பாளையை வைத்தான். தரையைச் சுத்தம் செய்து, பைரவர் சிலைக்கு எதிரிலிருந்த பலிபீடத்தை நீர்விட்டுத் துடைத்தான். வெட்டரிவாள் பலி பீடத்தின் அருகில் வைக்கப்பட்டது. சித்திரமாயன், வீரசேகரன் ஒரு பக்கம் நின்றனர். உச்சியைப் பார்த்து நாகபைரவன் வாய் எதையோ முணுமுணுத்தது. மாட்டுக்கொம்பை எடுத்து ஊதினான். திரும்பவும் அவன் வாய் மந்திரத்தைச் சொல்லியது. கயல்விழி மண்டபத்தின் உள்ளே சென்று மயக்க நிலையிலிருந்த பல்லவமல்லனைக் கொண்டு வந்தாள். “அதோ!” - தன்னை மறந்து சிறிது உரக்கவே உணர்ச்சியின் மிகுதியால் சொன்ன விஜயவர்மன், தன் தவறை உணர்ந்து வாளை உருவிக் கொண்டான். பக்கத்திலிருந்த வீரனைத் தொட்டு “எச்சரிக்கை! நாம் விழிப்பாக இருக்க வேண்டும்! நாம் செலவிடுகிற ஒவ்வொரு நொடியும் நம் காரியம் வெற்றியடையச் செலவிடப்படுகின்ற மதிப்பு வாய்ந்த பொருளுக்குச் சமமானது! நான் எழுந்து ஓட ஆரம்பித்ததும் நீ சிறிதும் தாமதியாமல் என் பின் தொடர வேண்டும்! அதற்கு முன் அவர்களுக்கும் நமக்குமுள்ள இடையேயுள்ள இடத்தை நன்கு பார்வையிட்டுக் கொள்! ஓடுவதில் எந்தவிதத் தொய்வும் இருக்கக் கூடாது! அவர்களையடைந்ததும் வாளின் வீச்சு வீணாகக் கூடாது! இரு தலைகள் உருள வேண்டும்!” என்று ஓடத் தயாரானான் விஜயவர்மன். அங்கே நாகபைரவன் உரக்க வாய்விட்டு ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். அடிக்கடி வானத்தை அண்ணாந்து பார்த்து எதையோ சொன்னான். சோமன், அடிக்கடி தன் கழுத்திலிருந்த மாட்டுக் கொம்பை எடுத்து ஊதிக் கொண்டிருந்தான். அப்போது- முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, விஜயவர்மன் - வாளுடன் ஓடத் தயாரான போது, தொலைவில் குதிரைகள் வரும் ஓசை கேட்டது. சிறிதும் இதை எதிர்ப்பார்க்காத விஜயவர்மன், என்னவென்று பார்த்த போது, இவனுடன் வந்த வீரர்கள்தான் அவ்விதம் வேகமாக வந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்தது. அங்கே இருந்தவர்கள் அனைவர் கவனமும் குதிரை வரும் ஒலியின் பக்கம் திரும்பியது. “யாரோ வருகிறார்கள்?” என்று சித்திரமாயன் மணல்மேட்டில் ஏற, கயல்விழி, அதற்குள், “என்னைத் துரத்தியவர்கள்!” என்று உரக்கக் கூவினாள். “அப்படியா?” என்ற அனைவரும் வாட்களுடன் எதிர்க்கத். தயாராயினர். “முட்டாள்கள்!” என்று முனிவுடன் கூறிய விஜயவர்மன், “காரியத்தைக் கெடுத்து விட்டார்களே!” என்றான் சலிப்போடு. “சேனாதிபதி, இதுவும் நல்ல சந்தர்ப்பம்தான்! நமக்குத் தாக்க வசதியாகப் போயிற்று” என்றான் உற்சாகத்துடன். ஆனால் விஜயவர்மனுக்கு அந்த உற்சாகம் இல்லை. இன்னும் கொஞ்சம் சிறிது தாமதித்து வந்திருந்தால் நடப்பதே வேறுவிதமாக இருக்கும்! என்று குதிரை வீரர்களுடன் சேர்ந்து கொள்ள எழுந்த போது தொலைவிலிருந்து அம்பு ஒன்று பாய்ந்து வந்து நாகபைரவன் அருகில் விழுந்தது. “என்ன அம்பு? யார்விடுவது?” என்று சுற்றுமுற்றும் பார்த்தான். “ஒருவேளை அவர்களின் ஆட்களே வில் அம்புடன் மறைவில் இருக்கிறார்களோ?” என்று சந்தேகத்துடன் குழம்பி நின்ற போது, குதிரையில் வந்த நான்கு வீரர்களும், பல்லவமல்லனையும் சித்திரமாயனையும் மற்றும் நாகபைரவனையும் மணற் சரிவின் கீழே நிற்பதைப் பார்த்துவிட்டனர். நால்வரும் அவர்களை நோக்கி, “நீங்கள் யார்?” என்று கேட்க, அதற்குச் சித்திரமாயன் உரக்கச் சிரித்தான். இரண்டாம் பரமேசுவரவர்மன் மகன் அங்கே இருப்பதினால் தாக்குவதில் தயக்கம் காட்டி நிற்கப் போகிறார்களென்று பயந்த விஜயவர்மன், புதரைவிட்டு வேகமாக வெளியே வந்து, “பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. அவர்களைப் பிடியுங்கள்!” என்று உரக்கக் கூவினான். நான்கு வீரர்களும் புரவியிலிருந்து இறங்கி அவர்களை நோக்கிப் பாய்ந்தனர் வாட்களுடன். சித்திரமாயன் அருகிலிருந்த வீரசேகரன் தலை உருண்டது. குருதி கொப்பளிக்கத் துடித்த அந்த உடலைக் கண்ட சித்திரமாயனுக்கு ஆத்திரம் மிக, நால்வரில் ஒருவரை வாளினால் வீழ்த்தினான். இதற்குள் அங்கே வந்த விஜயவர்மன் நாகபைரவனைத் தாக்க மணிக்கட்டுடன் வெட்டரிவாள் பிடித்த கை தூரப் போய் விழுந்தது. கயல்விழி பல்லவமல்லனுடன் மண்டபத்துக்குள் ஓடினாள். அவளைத் துரத்திப் பின்னால் ஓடிய வீரர்கள் ஒருவனின் முதுகில் சோமனின் குத்துவாள் பாய்ந்தது. அடுத்தகணமே அவனை நோக்கிப் பாய்ந்தான் விஜயவர்மன். வாள்முனைபட்டுச் சோமனின் கட்டைவிரல் தூரப்போய் விழுந்து துடிக்கலாயிற்று. இதற்குள் கயல்விழி பல்லவமல்லனுடன் மண்டபத்துக்குள் மறைய, அவளைத் துரத்திப் பின்னால் போன விஜயவர்மன், அங்கே யாரையும் காணாது திகைத்து நின்றான். உள்ளே வெற்றிடமாக இருக்க, சுரங்க வழியில் போய்விட்டாளோ என்று அங்குமிங்கும் பரபரப்புடன் விஜயவர்மன் பார்க்க வேறுவழியாக அவன் பின்பக்கமாக வந்த கயல்விழி, கனத்த குறுந்தடியுடன் அவன் தலையை நோக்கிப் பாயத் தன் பின் மனித அரவம் கேட்டுத் திரும்புவதற்குள், அந்தக் குறுந்தடி அவன் தலையைப் பதம் பார்த்துவிட்டது. மயங்கிக் கீழே சாய்ந்தான். அந்த உற்சாகத்துடன் அவள் வெளியே வந்த போது அங்கே நடந்த நிகழ்ச்சியைக் கண்டு திகைத்துவிட்டாள். சித்திரமாயன் தோளின் ஒரு பகுதி வாளினால் வெட்டப்பட்டுக் குருதி சொட்டச் சொட்ட, அருகிலிருந்த குதிரையில் பாய்ந்து தப்பி ஓடிக் கொண்டிருந்தான். சோமன், ஆயுதம் எதுவுமின்றி மணற்சரிவில் வீரர்களிடமிருந்து தப்பி அடர்ந்த புதரை நோக்கி வேகமாய் ஓடிக் கொண்டிருந்தான். தன் தந்தை ஒரு கையின் மணிக்கட்டு இழந்த அதிர்ச்சியில் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்திருந்தார். கயல்விழிக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்குள் சோமனைத் துரத்திச் சென்ற வீரர்கள், கயல்விழியைக் கவனித்துவிட்டனர். “அவள்தான்! அவளிடம்தான் மல்லன் இருக்கின்றான்!” என்று சொல்ல, மூவரும் கயல்விழியை நோக்கி ஓடி வந்தனர். அவர்களிடமிருந்து தப்புவதற்காகப் பல்லவமல்லனைத் தோளில் சாய்த்துக் கொண்டு மண்டபக் கதவை மூடிக் கொண்டாள். ஓடிவந்த வீரர்கள் கதவை தட்டப் பின்பக்க வழியாகச் செடிகளைத் தள்ளிக் கொண்டு மணலின் மேற்பரப்புக்கு வந்தாள். நின்றிருந்த குதிரைகளில் ஒன்றைத் தப்புவதற்குப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வதற்குள், கதவைத் தட்டிய வீரர்களில் ஒருவன் அவளைக் கவனித்துவிட்டான். “அதோ, வஞ்சகி, விடாதே பிடி!” என்று கத்த, இனி அதுவும் பயன்படாதென்று வேகமாக ஓட ஆரம்பித்தாள். மணற்பாதையில் ஓடி அடர்ந்த தென்னை மரங்களின் நடுவில் புகுந்து, பெரிய புதரை நோக்கி ஓடிய போது ஒரு கரம் அவளை இழுத்துப் புதருக்குள் மறைத்துக் கொண்டது. யார்? காபாலிக சமயத்திற்குரிய சின்னங்களுடன் ஆனால் பார்த்த முகமாகத் தெரியவில்லையே? என்று அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்த போது, “உஸ்... சப்தம் செய்யாதே! அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!” என்றான் அக்காபாலிகன். கயல்விழி, பேசாமல் மௌனமானாள். ஓடி வந்தவர்கள் அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, எந்தப் பக்கம் போயிருப்பாள் என்று இன்னொரு பக்கமாக ஓடக் காபாலிகன் அவள் தோளிலிருந்த பல்லவமல்லனை வாங்கிக் கொண்டான். “என்ன இன்னுமா இவனுக்கு மயக்கம் தெளியவில்லை?” என்று கேட்டான். “இல்லை, காலையில்தான் அழுது அமர்க்களப்படுத்துகிறான் என்று மயக்கம் கொடுத்தோம்!” என்று கூறிவிட்டு, “நீங்கள் யார்?” என்று கேட்டாள். “உங்கள் தந்தைக்கு வேண்டியவன்! உங்கள் நன்மைக்காகவே பாடுபடுபவன்! இந்தப் புதர் மறைப்பு நீண்ட நேரம் நம்மைப் பாதுகாக்க முடியாது. அதனால் நான் அதோ அந்தக் குதிரையில் அவர்கள் கண்களுக்குத் தெரியும்படியாக வேகமாகப் போய் அவர்கள் கவனத்தைத் திருப்பிவிடுகின்றேன். நீ அதற்குள் தப்பித்துவிடு!” என்றான். “மல்லன்?” - என்றாள் கயல்விழி. “மல்லனை காஞ்சிக் காபாலிக மடத்தில் பத்திரமாகச் சேர்ப்பித்துவிடுகின்றேன்!” என்றான். “உங்கள் பெயர்?” புன்னகை புரிந்த அவன், “சாமன்” என்றான். “அந்த வீரர்கள் குதிரையில் உங்களைத் தொடர்வார்களே!” “நிச்சயம் என்னை பிடிக்க முடியாது! இந்தக் குதிரையின் ஓடும் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட அவர்களிடம் குதிரை இல்லை! நான் தப்பிவிடுவேன்! என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்றான். திடீரென நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்த கயல்விழிக்கு அப்போதைக்கு அவன் சொன்னது சரி என்றது போல்பட்டது. அதற்கு ஏற்றாற் போல புதரை நோக்கி வீரர்கள் வரும் ஓசை, அவள் காதில் விழுந்தது. “தயக்கம் வேண்டாம்!” என்று புதரின் அருகிலிருந்த குதிரையில் தாவி ஏறினான். மணற் பாதையில் குதிரை அந்த மூன்று வீரர்களுக்கு முன்பாகத் தாவியது. திடீரெனத் தங்கள் முன் காபாலிகன் ஒருவன், பல்லவமல்லனுடன் குதிரையில் போவதைப் பார்த்துப் “பிடி பிடி” என்று சப்தமிட்டபடி அவர்களும் புரவியில் துரத்தலாயினர். சிறிது நேரம் சென்றது. இதுவரை அமர்க்களப்பட்ட அப்பகுதி நிசப்தமாகியது. தொலைவில் புரவிகள் ஓடும் சப்தம், அவள் செவியில் விழப் புதரைவிட்டு வெளியே வந்தாள். “தந்தையைக் கவனிக்க வேண்டும்!” என்று மணற் சரிவில் இறங்கி நாகபைரவன் பக்கம் சென்றாள். அதிக இரத்தம் வெளியேறியிருந்ததால் இன்னும் மயக்க நிலையிலே இருந்தான் அவன். மண்டபத்தின் பின்பக்க வழியாகச் சென்று, கதவுகளைத் திறந்து மரப்பெட்டியைத் திறந்து வெட்டுண்ட நாகபைரவன் கையில் மருந்து வைத்துக் கட்டினாள். அச்சமயம் மண்டபத்திற்குள் விஜயவர்மன் தலையில் பட்ட பலத்த அடி தாளாது முனகிக் கொண்டிருந்தான். |