(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 14

     மதிற்கச்சி எனத் தேவாரத் திருப்பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்படும் அக்காஞ்சியின் உயர்ந்த கோட்டைச் சுவரில் வீரர்களின் காவல் பலத்திருந்தது. ஏறத்தாழ ஆறு கல் சுற்றளவு பரப்புடன், மேற்கிலிருந்து கிழக்கே வில்லைப் போல் வளைந்து, அகன்ற தெருக்கள் பல கொண்ட அக்காஞ்சியின் அரசவீதியில் இரண்டாம் பரமேசுவரவர்மனின் தேர், வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மக்கள் கூட்டம், மன்னனை வாழ்த்தி முழங்க, வீரர்கள் அணிவகுத்துச் செல்ல, அணிதேரும் புரவியும், ஆட்பெரும் படையும், யானையும் மன்னன் தேருக்கு முன்னும் புறமும் செல்லத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது காஞ்சிமா நகர்.

     கடல் திரண்டு ஓய்ந்தது போலச் சற்றுமுன் மன்னன் வரவால் அமர்க்களப்பட்ட அந்த அரசவீதி, இப்போது ஒலி அடங்கி, மக்கள் கூட்டம் அமைதியுடன் கலைந்து கொண்டிருந்தது.

     மன்னரின் தோற்றத்தைச் சிலாகித்தும், அவரின் தேர், புரவி, யானை, வீரர்கள் இவற்றின் அணிவகுப்பை வியந்தும், முகத்தில் தவழ்ந்த அரச களையையும் புகழ்ந்து பேசும் அந்தப் பேச்சுக்களைக் கவனித்தபடி, ஒரு காபாலிகன், வீதியோரமாக நின்று கொண்டிருந்தான்.

     அவன் பார்வை வீதியில் போவோரை வெறித்து நோக்கியபடி இருந்தது.

     “வணக்கம் சுவாமிகளே!” - காபாலிகன் அருகே வந்த ஒருவன் கைகுவித்து வணங்கினான்.

     யார்? - காபாலிகன் கேள்வி அவன் பார்வையிலேயே இருந்தது.

     “அடியேன் பெயர் சாம்பனுங்க!” என்று சொல்லிவிட்டு அர்த்த புஷ்டியுடன் கண் சிமிட்டினான்.

     “ஓ...” - புரிந்து கொண்டது போல காபாலிகனும், சாம்பனும் இராச வீதியிலிருந்து புத்தர் தெருவுக்குச் செல்லும் வீதி நோக்கி நடந்தனர்.

     “சாமிகள் எந்த ஊரோ? காஞ்சிக்குப் புதியவர் போல் தோன்றுகின்றதே” என்றான் சாம்பன் புன்முறுவலுடன்.

     “நாகபைரவர் பெயரைத் தாங்கள் கேள்விப்பட்டிருந்தால் என்னைப் புதியவராகப் பார்க்க எண்ணம் வராது!” என்றான் அக்காபாலிகன்.

     “ஓ... நாகபைரவர்...” என்ற சாம்பன், “உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்றான்.

     காபாலிகன் சிரித்தான்.

     “எனக்கு நண்பர்!” என்றான்.

     “தாங்கள் காஞ்சிக் காபாலிக மடத்திலா தங்கியிருக்கின்றீர்கள்?”

     “இல்லை.”

     “அதுதானே கேட்டேன்! காபாலிக மடத்தில் தங்கியிருக்கிற அத்தனை பேரையும் எனக்குத் தெரியுமே! அதனால்தான் உங்களை பார்த்ததில்லை என்றேன்!”

     “ஆனால் உன்னை எனக்குத் தெரியும்!” என்றான் அக்காபாலிகன் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது.

     உடனே சாம்பனுக்கு முகம் மாறியது. “எப்படி?” என்றான்.

     “மணிப்புறா... செய்தி... இந்த இரு வார்த்தைகள் போதும் என்று நினைக்கின்றேன்!”

     உடனே சாம்பனின் குரல் கம்மியது. “மன்னிக்க வேண்டும் சுவாமிகளே! தாங்கள் யாரோ, எதுவோ என்று ஒரு மாதிரி பேசிவிட்டேன்! அதற்காக மன்னித்துவிடுங்கள்!”

     “நாகபைரவரின் வெட்டப்பட்ட மணிக்கட்டு ஆறிவிட்டதா?” என்றான்.

     “சிரமப்படுகிறார்! மாமல்லையில் சித்திரமூல மூலிகை கிடைக்கவில்லை என்று செய்தி வந்தது. இங்கிருந்து அனுப்பியிருந்தேன்! இப்போது தேவலை. அவர் கூடப் பாண்டிய நாடு புறப்பட்டுவிட்டதாகக் கேள்வி!”

     காபாலிகன் நின்றான். பின்னால் அரசாங்கத்தைச் சேர்ந்த வீரன் கையில் வேலுடன் வந்து கொண்டிருந்தான்.

     “கொஞ்சம் அப்புறம் போய்ப் பேசலாமே! ஏனென்றால் காஞ்சிக் கோட்டைக்கு ஆயிரக்கணக்கில் செவிகள்... அந்தச் செவியில் நாம் பேசுகின்ற செய்தி ஏன் நுழைய வேண்டும்?” என்று சிரித்தபடி கூறினான் காபாலிகன்.

     “உண்மை. வாருங்கள்! அப்புறம் போகலாம்!” என்று அரசமர நிழலில் இருவரும் நின்றனர்.

     வேலுடன் வந்த வீரன். இவர்களைப் பார்த்தபடியே, எதையோ சொல்லிக் கொண்டே சிரித்தவாறு சென்றான்.

     காபாலிகன், அதைச் சுட்டிக்காட்டிவிட்டுச் சொன்னான்.

     “காஞ்சி அரசர்களுக்கே காபாலிக மதம் என்றாலே நகைப்புக்குரிய விஷயம்தான் போலும்! இல்லையென்றால் அந்த வீரன் ஏன் சிரித்துக் கொண்டே எதையோ சொல்லிவிட்டுச் செல்கின்றான்! இப்படித்தான் இராசசிம்மன் நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான். ஆண்டவனுக்கே மனம் இல்லாமல் அவனைப் பாசக் கயிற்றில் பிணைத்து ஆவியைப் போக்கிவிட்டார்! அடுத்து வந்திருக்கின்றான் பரமேசுவரவர்மன்! இவன் எத்தனை நாளைக்கோ? நம் தலைவர் சித்திர மாயனை ஆட்சிப் பொறுப்பில் ஏற்கும் வரை நாம் ஓயக்கூடாது!” என்றான்.

     “ஆம்! நீங்கள் சொல்வதுதான் உண்மை!”

     “இப்போது அந்தத் தென்னந்தோப்பில் இல்லை போலிருக்கே!”

     “ஆமாம், எதிரிகளுக்கு அந்த இடம் தெரிந்துவிட்டதென்று குகைக்குப் போய்விட்டார்கள்!”

     “குகை...?” என்ற காபாலிகன் புரியாமல் சாம்பனைப் பார்க்க, “அதான் கடல் பக்கம் இருக்கும் குகை” என்றான்.

     உடனே காபாலிகன் சமாளித்து, “ஆமாம். ஆமாம்!” என்றான்.

     “பல்லவமல்லனைப் பற்றி ஏதாவது செய்தி தெரிந்ததா?” என்று மெல்லக் கேட்டான் காபாலிகன்.

     “யாரோ ஒருவன் காஞ்சிக் காபாலிக மடத்தில் சேர்ப்பதாகச் சொல்லிக் கயல்விழியிடமிருந்து ஏமாற்றி வாங்கியிருக்கிறான். இன்னும் மடத்துக்கு வந்து சேரவில்லை” என்றான்.

     “நல்லது. நான் வரட்டுமா சாம்பா?”

     “என்ன சுவாமிகளே, புறப்பட்டுவிட்டீர்கள்?”

     “எனக்கு அவசர வேலை... நாளை இதே நேரத்தில் இங்கு வந்து சந்திக்கின்றேன்! வரட்டுமா?”

     சாம்பன், தலையசைத்தான். காபாலிகன், அங்கிருந்து வேகமாக நடக்கத் துவங்கினான்.

     அரசமரத்தின் கீழிருந்த சாம்பன் போவதற்காகத் திரும்ப, “என்ன சாம்பனாரே, அரசமரத்தின் கீழ்த் தவமா?” என்ற கேள்வி பின்னாலிருந்து வந்தது.

     சாம்பன் நின்று பார்த்தான். காபாலிகன் ஒருவன் தன் பெருத்த உடம்பை அசைக்க முடியாதபடி அசைத்த வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தான்.

     “ஓ, நீங்களா? என்ன இது? இன்று ஒரே சாமிகள் தரிசனமாக இருக்கிறதே!” என்றான்.

     “சாமிகள் தரிசனமா? என்ன?” என்று புரியாமல் அந்தக் காபாலிகன் வினவச் சாம்பன், தொலைவில் சென்று கொண்டிருந்த காபாலிகனைச் சுட்டி, “அதோ பாருங்கள்! அவரிடம்தான் இதுவரை பேசிக் கொண்டிருந்தேன்!” என்றான்.

     “அவரா...” என்று பார்த்துவிட்டு, “புதியவராக இருக்கிறாரே, யார், நம் மடத்தைச் சேர்ந்தவரா?” என்றான்.

     “இல்லை, நாகபைரவருக்கு நண்பராம்!” என்றான் சாம்பன்.

     “நாகபைரவர்... கூப்பிடப்பா! அவரிடம் அவசரமாகப் பேச வேண்டியிருக்கிறது!” என்றான் காபாலிகன்.

     சாம்பன் கை தட்டினான். தொலைவில் சென்று கொண்டிருந்த காபாலிகன் நின்று, ‘என்ன செய்தி?’ என்று கைச்சாடையால் கேட்கச் சாம்பன், அருகிலிருந்த காபாலிகனைச் சுட்டி, “இவர் பேச வேண்டுமாம்!” என்றான்.

     ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று கைச் சாடை காட்டிக் காபாலிகன், திருப்பத்தில் வேகமாய் நடந்து மறைந்தான்.

     பருத்த உடம்புடனிருந்த காபாலிகன், “இவன் காபாலிகன் இல்லையப்பா! கள்ளன்! இவன்தான் கயல்விழியிடமிருந்து பல்லவமல்லனைக் கடத்தியவனாய் இருக்கலாம்! வேகமாக நடப்பா” என்று சாம்பனிடம் சொல்லிக் காபாலிகன், தன் பெருத்த உடம்புடன் ஓடினான். இருவரும் அத்திருப்பத்தைக் கடந்து, எங்கு நுழைந்தான் என்று புரியாமல் திகைத்து நின்றுவிட்டனர்.

     “கள்ளன், அப்போதே எனக்கு ஐயம்தான்! இருக்கட்டும் இன்னொருமுறை பார்த்தால் ஆளை அப்படியே அமுக்கிவிடுகின்றேன்!” என்றான் சாம்பன்!



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19