உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 5
“தடமார்ந்த கடல் மல்லைத் தலசயனத்துத்
என்று திருமங்கையாழ்வாரால் சிறப்பித்துப் பாடப்பட்ட மாமல்லபுரக் கடற்கரையில் ஆனந்த நித்திரை புரியும் அண்ணல் திருமாலின் கோவில் ஒருபுறமும், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெயர் சொல்ல மற்றொரு கோவில் இன்னொரு பக்கமும், இவ்விதம் சைவமும் வைணவமும் வேறுவேறல்ல; ஒன்றே என்று காண்பிக்கும் விதத்தில் கடற்கரைக் கோவிலாக அமைந்திருந்த அவை, அந்தப் பகல் நேரத்தில், பகலவன் ஒளியில் வெண்ணிறமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.தாமரைக் கண் துயிலமர்ந்த தலைவன்” ஆரவாரிக்கும் அலைகள் உயர எழும்பி, அதே வேகத்தில் ஓடி வந்து அந்தக் கோவிலைத் தொட முயலும் விரைவைப் பார்த்தால், அவற்றின் அற்புத நேர்த்தியைக் காண, அவ்விதம் ஓடி வந்தன போல் தோன்றியது. தொலைவில் களங்கள் வந்து நின்றிருந்தன. அவைகளில் அந்தந்த நாட்டுக்குரிய கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தன. அவற்றிலிருந்து உயர்ந்த ஜாதிக் குதிரைகளும், வாசனைத் திரவியங்களும் இறங்கிக் கொண்டிருந்தன. அவை கனைக்கின்ற கனைப்புச் சப்தங்களும், வாசனைப் பொருள்களிலிருந்து எழுந்த வாசனையும் காற்றில் பரவி, அப்பகுதியெங்கும் கலகலப்பாக இருந்தன. அது தவிரக் கலங்களிலிருந்து இறங்கும் பொருட்களை, அவற்றுக்கென்று உரிய இடத்தில் சேர்ப்பிக்கப் போடும் கூலியாட்களின் கூச்சல் வேறு, அக்கலகலப்பில் கலந்து கொண்டது. பரதவர் தெருக்களில் மிக நெருக்கமாக மக்கள் நடமாட்டத்தின் ஓசைகளும், பல்வேறு பொருள்கள் விற்போர் கூவல்களும், அதை வாங்க வந்த மக்களின் பேச்சுக்களும்... ஆக எல்லாமாகச் சேர்ந்து மாமல்லை சுறுசுறுப்புள்ள துறைமுகம் என்று தெரிந்தது. பல்வேறு நவமணிகளை முத்து, இரத்தினம் என்று தரம் பிரித்துக் குவித்து வைத்திருப்பவர்களும், அவ்விதம் குவித்து வைத்த நவமணிகளுக்கு ஈடாகக் கலங்களிலிருந்து வந்தவர்கள் வாசனைத் திரவியங்களைத் தந்து வாங்கிக் கொள்பவர்களும்... இவ்விதம் பலவித வாணிகங்கள் நடந்த அவ்விடத்தில், எந்தவிதக் குழப்பமும் நேராதிருக்கக் குத்தீட்டிகளுடனும் இடையில் வாளுடனும் காவல் புரியும் யவன வீரர்களுமாக பலரின் நடமாட்டத்தினால், மக்கள் நெருக்கடியிருந்த அந்தப் பகல் வேளையில்... அந்நகருக்கு நடுநாயகமாக இருந்த மூன்றடுக்கு உப்பரிகையின் முன்பு நந்திக் கொடி பறந்த தேர் ஒன்று வந்து நின்றது. மாளிகையின் முன் காவல் புரிந்த வீரர்கள், “பல்லவத் சக்கரவர்த்தி வாழ்க! பகைவருக்கு இடியேறு போன்ற சிங்கம் வாழ்க! பூவுலகம் காக்க வந்த புண்ணியரே வாழ்க!” என்று முழங்கத் தேரிலிருந்து இராசசிம்ம பல்லவன், கம்பீரமாக சிறுவன் பல்லவமல்லனுடன் இறங்கினான். தேரிலிருந்து மாளிகை வரை யவன வீரர்கள் உருவிய வாட்களுடன் அணிவகுத்து நிற்க, விஜயவர்மன் மன்னனை வரவேற்றான். வேந்தனைப் பார்க்க வீதியில் கூடிய மக்கள் கூட்டம் அலை மோதியது. வாழ்த்தொலிகள் முழங்கின. இராசசிம்மன், புன்முறுவலுடன் மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்துவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தான். முன் கூடத்தில் நகரப் பிரமுகர் முதலானோர் எழுந்து நின்று மன்னனை வணங்கி நின்றனர். அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, தன் அறைக்குச் சென்றான் அரசன். போடப்பட்டிருந்த சிங்கமுக ஆசனத்தில் அமர்ந்தான். விஜயவர்மன், அருகில் வந்து நின்றான். “பகல் உணவு முடிந்து சிறிது நேரம் கழித்துக் கடற்கரைக் கோவிலையும், மற்றும் ஐந்து ரதங்களையும் பார்க்க விரும்புகின்றேன். அது முடிந்ததும் யவன நாட்டிலிருந்து இறங்கிய புரவிகளைப் பார்வையிட விரும்புகின்றேன். அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்க!” என்றான். விஜயவர்மன், தலையசைத்துவிட்டுச் சென்றான். பகல்வேளை முடிந்து மாலைக் காலம் வந்து கொண்டிருந்த நேரம். நீண்டு, எழுந்து, இறங்கிக் கரையை வேகமாய் வந்து மோதிக் கொண்டிருந்த கடல் அலைகளின் முன்னால், எழில் ஓவியமாக நின்று கொண்டிருந்தது அக்கடற்கரைக் கோவில்.
‘பிணங்கனிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் றெருமானார்க் கிடம் விசும்பில் கணங்களியங் கிடு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே!’ எனத் திருமங்கையாழ்வாரால் சிறப்பித்துப் பாடிய ஜலசயனம், தலசயனம் என அழைக்கப்படும் அக்கோவிலின் முன் நின்றான் இராசசிம்மன். தன்னால் கட்டப்பட்ட கோவில்! அதைக் காண்பதில்தான் மன்னன் முகத்தில் எத்தனைவித மகிழ்ச்சி! அசப்பில் பார்த்தால் சாதாரணக் கோபுர அமைப்பில் உள்ள கோவிலைப் போல் தோன்றினாலும் உற்றுப் பார்த்தால், அவை சிறிது வித்தியாசப்பட்டிருப்பது நன்கு தெரியும். கடாரம், சாவகம், சீனம் முதலிய கோவில்களின் அமைப்போடு பொருந்தி, மாமல்லையில் இருக்கும் மற்ற கோவில்களைப் போல ஒரே கல்லால் அமைக்கப்படாமல், பல்வேறு பெருங்கற்களைக் கொண்டு செதுக்கப்பட்டு ஒன்றாக அமைக்கப்பட்ட அதன் நேர்த்தியை என்னவென்று சொல்வது? சதுர அமைப்பில் வரவரக் குறுகி உச்சியில் ஈட்டி போன்று கலச அமைப்புடனிருந்த அதன் கம்பீரத்தை இராசசிம்மன் கண்கள் சுற்றிச் சுற்றிக் கவனித்தன. கடற்கரை ஓரத்தில் கோவிலை அமைக்கத் தான் எண்ணிய போது, அமைச்சர் உட்படப் பலர், அதற்குச் சிறிது மாறுபாடான கருத்துத் தொனிக்க, ‘கடல் ஓரத்தில் கோவில் அமைத்தால் அலைவாய்க்குத்தான் போகும்!’ என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளாது, இங்குத்தான் அமைக்க வேண்டும் என்று தன்னால் வற்புறுத்திக் கூறப்பட்டதின் நோக்கத்தை இப்போது எல்லோரும் புரிந்து கொண்டு பாராட்டுகின்றார்களே! இராசசிம்மன், குனிந்து சிறுவன் பல்லவமல்லனுக்குக் கோவிலைக் காட்டினான். அளவற்ற மகிழ்ச்சியால் அவன், தன் சிறு கைகளைத் தட்டி, “தாத்தா, கோவில் பார்க்க நன்றாக இருக்கிறது!” என்று துள்ளிக் குதித்தான். “ஆமாம் பல்லவமல்லா! ஆனால் இக்கோவில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது! தெரியுமா உனக்கு?” என்று சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தவாறு கேட்டான் மன்னன். “என்ன காரணம் தாத்தா?” - சிறுவன் கேட்ட கேள்வியே அங்கிருந்த ஒவ்வொருவர் மனத்திலும் அப்போது எழுந்தது. மன்னன், தன் முறுக்கு மீசையைத் தடவிவிட்டுக் கொண்டான் கம்பீரமாக. பக்கத்தில் விஜயவர்மனும், நகரப் பிரமுகர்களும் மன்னன் என்ன சொல்லப் போகின்றான் என்பதைக் கவனிக்க ஆயத்தமாயினர். “மல்லா! அதிகாலை அருணோதயத்தில் கடல் நீரிலிருந்து சிவந்த பந்து போலக் கதிரவன் வெளிப்படும் போது, அதன் கதிர் ஒளிபட்டுப் பொன்னிறமாக இக்கோயில் ஒளிவிடும்! அதே கதிரவன் உச்சிக்கு வரும்போது தகிக்கும் அதன் ஜூவாலையில் அந்தப் பொன்னிறம் வெண்ணிறமாக மாறும் விந்தை இருக்கே! அது சொல்லத் தரமன்று! இன்னுமொரு வேடிக்கை.. அதே கதிரவன் மேற்கு நோக்கி மெல்லச் சாயும் போது, அதனின் நீண்ட சிவந்த கதிர்கள் இவ்விமானத்தின் மீது பட்டு... நன்றாகக் கவனி மல்லா! இப்போது நாம் இந்த நேரத்தில்தான் இங்கே இருக்கிறோம்... கதிரவன் மேற்கு நோக்கி மெல்லச் சாய்ந்து கொண்டிருக்கிறது! அதன் நீண்ட சிவந்த கதிர்கள் கோவில் விமானத்தின் மீது படுகிறது. இப்போது இதன் வெண்ணிற ஒளி மறைந்து வேறொரு நிறம் உண்டாகிக் கொண்டிருக்கிறது... அது என்ன நிறம்? அதுதான் கருமை... அந்தக் கருமையின் முழு அழகும் முற்றிலும் இந்த இடத்தை இருள் சூழும்போதுதான் தெரியும்... அப்படி வெளிப்படும் கருமையின் எழில், இன்னும் சிறிது நேரத்திற்குப் பிறகு இங்கே தோன்றும் நிலவொளியில் மிளிரும் அழகிருக்கே...” மன்னன் உணர்ச்சி வசத்தால் மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்திக் கொண்டான். மன்னன் சொன்னது போலவே, மாலைச் சூரியன் ஒளி அதன்மீது வர்ணஜாலம் புரிந்து கொண்டிருந்தது. அனைவரும் அதைப் பார்த்து வியந்து நின்றனர். மன்னனுக்குத்தான் எத்தனை கலையுணர்வு? நீலத் திரைக்கடல் ஓரத்தில் இக்கோவிலை அமைத்து அழியாப் புகழ் கொண்ட அவன் பெருமைக்குத்தான் அளவேது! “கோவிலுக்குள் நுழையலாமா மல்லா?” சிறுவன் தலையாட்டினான். விண்ணிழி விமானம் உடையதாய்க் கடலை நோக்கி ஒரு கோவிலும், அதன்பின் சிறிய அளவில் மேற்கு நோக்கியபடி ஒரு விமானமும், இவை இரண்டுக்கும் இடையில் சற்றுத் தென்புறத்தில் நீண்ட சதுர வடிவில் ஒரு கோயிலுமாக இம்மூன்றும் சேர்ந்து ஜலசயனம் என்ற பெயருடன் விளங்கிய அக்கோவிலுக்குள் அனைவரும் நுழைந்தனர். அந்தணர், மன்னனுக்குப் பூரண கும்பத்துடன் மரியாதை செய்து வரவேற்க, வெளியே மன்னரை வாழ்த்தி எழும்பிய பேரொலி, கடல் அலையை மிஞ்சி விண்ணேத் தொட்டது. கிழக்கு நோக்கிய கோவிலில் பட்டை தீட்டப்பட்ட தாரலிங்கம் இருந்தது. அதன் பின்னால் பின்புறச் சுவரில் சோமாஸ் கந்த மூர்த்தியின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. கருவறையின் முன்னே இடைகழி இருக்க, அதன் ஒரு சுவரில் திருமால் தேவியுடன் காட்சி தந்தார். மற்றொரு சுவரில் நான்முகன் தன் தேவியுடன் கம்பீரமாக இருந்தார். வாயிலில் இரு காவலர் தமக்கே உரிய மிடுக்குடன் சிலையாக நின்று கொண்டிருந்தனர். மன்னன் உட்பட அனைவரும் சிவனை தரிசித்துவிட்டு, அதன் சிற்பத் திறனை வியந்து திருமால் அனத்தசயனியாகப் படுத்து உறங்கும் காட்சி காண நீண்ட சதுர வடிவில் இருந்த கோயிலுக்குள் புகுந்தனர். சுமார் எட்டடி நீளத்தில் துயிலும் அரங்கன் முகத்தில்தான் என்ன அமைதி! வெளியே புயலெனச் சீறும் கடல் அலைகளின் பேரொலி... அதைப் பற்றிக் கவலைப்படாமல் மால்வண்ணன் படுத்துறங்கும் அந்த நிலை... ஆகா! நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்று இருந்தது! மன்னனுடன் வந்த மாமல்லை நகரத்தலைவன், இதைச் சுவைபட விவரிக்க இராசசிம்மன் அதைக் கேட்டுச் சப்தமின்றிச் சிரிக்கின்றான். அனைவரும் வெளியே வந்தனர். மேற்கு நோக்கியுள்ள கோயிலில் நுழைந்தனர். அங்கேயும் இலிங்கம்தான் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தது. இராசசிம்மனுக்குத்தான் சைவமும் வைணமும் ஒன்று என்பதில் எவ்வளவு அக்கறை. முதலில் கடலை நோக்கியுள்ள கோவிலில் சிவன் தாரலிங்கமாகக் காட்சி தருகின்றார். அதைப் போன்று மேற்கு நோக்கியிருந்த கோவிலிலும் இலிங்கம்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டுக்கும் நடுவில் உறங்கும் நிலையில் திருமால்... வைணவத்துக்குச் சைவம் பாதுகாப்பு என்பது போல... “அங்கே பார்க்கலாமே!” என்று இராசசிம்மன் சுட்டிக்காட்டிய திசை பக்கம் அனைவரும் திரும்பினர். அங்கே- அமர்ந்த நிலையில் சிம்மம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. அதன் சிற்பத்திறனைக் கண்டு வியந்து அருகே சென்றனர். அதன் வயிற்றில் சதுரமாக ஒரு குகைபோலக் குடையப்பட்டிருந்தது. அதில் கொற்றவை, பல கைகளையுடைய தேவியாகப் பாய்ந்து வரும் நிலையில் செதுக்கப்பட்டிருந்தாள். சிம்மத்தின் உக்கிரத்தை அதன் முகத்தில் சில கோடுகளை வரைந்தே காட்டியிருந்தான் சிற்பி! காலடியில் குள்ளக்கணம் ஒன்றும், இயற்கையாகப் படுத்திருக்கும் கலைமான் ஒன்றும் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லோரும் அதைப் பார்த்து வியந்து நிற்க, மன்னன், விஜயவர்மன் பக்கம் திரும்பினான். குறிப்பினால் அதை உணர்ந்த அவன், தன்னருகில் நின்ற வீரனிடம் எதையோ சொல்ல, அவன் தலையாட்டிவிட்டு வெளியே வேகமாகச் சென்றான். “புறப்படலாமா மல்லா!” “எங்கே தாத்தா?” ‘என்ன சொல்லப் போகின்றார்?’ என்று அனைவரும் மன்னனைக் கவனித்தனர். இராசசிம்மன் சிரித்துவிட்டு, “புறப்படும் இடம்... இரகசியமாகவே இருக்கட்டும்! அப்போதுதான் அதில் புதுமையிருக்கும்!” என்று சிறுவனுடன் முன்னே நடந்தான். கோயில் வாயிற்புறத்தில் இரதம் தயாராக நின்றிருந்தது. இராசசிம்மன், பல்லவமல்லனுடன் ஏறிக் கொண்டதும், இரதம் புறப்பட்டது. கடல் அலைகள், மன்னன் வரவு கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தவை போன்று கரையை மிக வேகத்துடன் வந்து மோதின. கடற்காற்று இதமாக வீசியது. சாரதி சாட்டையைச் சொடுக்கினான். குதிரைகள் காற்றைக் கிழித்துச் சிவ்வென்று பறந்தன. விஜயவர்மனும், நகரப் பிரமுகர்களும் இரதத்தைப் பின் தொடர்ந்து குதிரையை வேகமாகச் செலுத்தினர். |