திருத்தக்கதேவர்

அருளிய

சீவக சிந்தாமணி

... தொடர்ச்சி - 2 ...

மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101

வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102

செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103

கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104

வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105

அகநகர்த் தோற்றம்

செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்
பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் 106

பரத்தையர் சேரியின் தோற்றம்

துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச்
செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும்
உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே 107

குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே 108

தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே 109

அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப்
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே 110

தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப்
பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே 111

கடை வீதிகள்

இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்
பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன். 112

மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக்
கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. 113

பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்
மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. 114

விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே. 115

மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப்
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே. 116

மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச்
செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன். 117

தெருக்களின் தோற்றம்

முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால். 118

குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால். 119

பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர்
நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால். 120

மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால். 121

வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால். 122

வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123

வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம். 124

தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்

பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க்
கோவை நித்தில மாடக் குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே. 125

திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய
உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே. 126

இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே. 127

செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ 128

வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி தோறு இது செல்வத்து இயற்கையே. 129

கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே. 130

நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே. 131

பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே. 132

எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. 133

குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும்
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134

தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே. 135

அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே. 136

முல்லை அம் குழலார் முலைச் செல்வமும்
மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே. 137

முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே. 138

திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால்
அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே. 139

தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே. 140

அரண்மனையின் சிறப்பு

வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். 141

நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. 142

இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. 143

முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. 144

சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. 145

வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. 146

கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழையம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. 147

மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. 148

தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. 149

முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. 150

வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. 151

கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. 152

கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. 153

பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. 154

கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 155

ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. 156

சச்சந்தன் வரலாறு

நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான். 157

வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. 158

கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இவ் வையமே. 159

தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
திருமகன் திரு மா நில மன்னனே. 160

ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். 161

விசயையின் தோற்றம்

செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். 162

உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே. 163

எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. 164

குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. 165

வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. 166

சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. 167

மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. 168

ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. 169

மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே. 170

தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே. 171

அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. 172

மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. 173

வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. 174

பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. 175

ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே. 176

பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. 177

அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே. 178

என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. 179

சச்சந்தன் விசயையை மணத்தல்

இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான். 180

மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான். 181

வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. 182

அரு மணி மரகதத்து அங் கண் நாறிய
எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. 183

கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள். 184

இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. 185

முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. 186

மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. 187

சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்

பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. 188

காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். 189

தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 190

பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான். 191

பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். 192

துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 193

துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே. 194

இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே. 195

படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. 196

கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே. 197

மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஔ஢ நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. 198

குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. 199

சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்

களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். 200



சீவக சிந்தாமணி : 1 2 3 4 5