நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

7. யார் இந்த மூவர்?

     காவிரிப்பூம்பட்டினத்துக் கதகதப்பிலேயே ஒரு நாழிகையை நிமிஷமெனக் கடந்துவிட்ட திதியன், உச்சிப் பொழுது பசியைத் தணித்துக் கொள்வதற்காகச் சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் புரவியை மெதுவாகக் கடத்தி வரலானான். வண்ணப் பறவைகளின் எண்ணக் கீறலைத் தவிர வேறொன்றையும் அவனது விழிகள் காணவில்லை.

     ‘பாழும் வயிறே! உன்னோடு ஒருகணம் ஒழுங்காக வாழ்வது அரிது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

     உலகத்தில் வாழும் எந்த ஒரு ஜீவனால்தான் இரை தேடாமல் இருக்க முடிகிறது? பசி தணிந்தால்தானே பற்றுக்கும் பாசத்துக்கும் வழி ஏற்படுகிறது. முன்னோர் சொல்லி வைத்தது வீணாகப் போய்விடுமா, என்ன? ‘பசி வந்திடில் பத்தும் பறந்து போகும்!’ என்ற வாக்கு பொய்யல்லவே!

     புரவியிலிருந்து தொப்பென்று குதித்த திதியன், ஒரு கையால் அதன் கடிவாளத்தை அழுத்தமாகப் பிடித்து இழுத்த வண்ணம் மெதுவாக நடந்து வரலானான். அப்போது எங்கிருந்தோ கேட்ட மனிதக் குரல், அவனுக்குள்ளிருந்த சோர்வை அப்புறப்படுத்தியதென்றே சொல்ல வேண்டும். சத்தம் கேட்கும் பக்கமாகவே நடந்து வந்தவன், வேறு நாட்டு மனிதர் என்பதை அவர்கள் பேசிவரும் மொழியைக் கேட்டு யூகித்துக் கொண்ட மறுவிநாடியே ‘விர்’ரென்று திரும்பிய திதியன், அங்கிருந்த ஆலமரத்தினடியில் குதிரையைக் கட்டிப் போட்டுவிட்டு அவர்களுக்கு எதிரிலல்ல, மறைவில் நின்று அவர்கள் பேச்சை உன்னிப்போடு கேட்கலானான்.

     “என்ன செய்வது? நாய் வேடம் போட்டுவிட்ட பிறகு குரைக்க மாட்டேனென்று சொல்ல முடியுமா?” என்றான், ஒல்லியான தேகமும் குதிரை முகமும் கொண்ட ஒருவன்.

     “உண்மைதான்! எந்த நேரத்தில் எந்தத் திசையை நோக்கிப் போக வேண்டுமென்று உத்தரவு பிறக்கிறதோ?” என்றான், கொஞ்சம் கட்டையான தேகமும் குட்டையான தோற்றமும் உள்ள மற்றொருவன். இருவர் இடையிலும் உடைவாள் தொங்கிக் கொண்டிருந்தது.

     இப்போது அவர்கள் பேச்சை மட்டுமல்ல, நடை- உடை- பாவனை அத்தனையையுமே திதியன் கவனிக்கலானான். அதன் பிறகு அவன் எடுத்த முடிவின் முழுமையாக, ‘வடுகர்’ என்பது ஒளிவிட்டது. வடுகர் மொழியைச் சரளமாகப் பேசும் திறனை முன்னமேயே பெற்றிருந்ததால் தெம்போடு வெளியில் வந்தவன் அவர்களை எதிர் நோக்கிப் போகலானான்.

     திதியனைக் கண்ட இருவரும், அதுவரையிலும் பேசிக் கொண்டிருந்த அந்தரங்கப் பேச்சிலிருந்து விடுபட்டு, “யார் நீ?” என்று முடுக்கோடு கேட்டனர்.

     இருவர் தொனியிலும் இருந்த அதட்டலைக் கேட்டு முதலில் கோபப்பட்ட திதியன், மறுகணமே தன்னைத்தான் உணர்ந்த வேகத்தில் மூண்டெழுந்த உத்வேகத்தை அமுக்கி விட்டுக் கொண்டு, அவர்கள் மொழியிலேயே, “நான் யாத்ரீகன்! கங்கையில் நீராடப் போய்க் கொண்டிருக்கிறேன்!” என்று ஒரு யோகியைப் போல் சொன்னான்.

     முன்னவன் அவனை மேலும் கீழும் பார்த்தான். பின்னவன், “ஓகோ...! அப்படியா! ஆமாம்.. இப்போது எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறாய்?” என்று ஒரு போக்காகக் கேட்டான்.

     திதியன் தயங்கவில்லை; தடுமாறவில்லை. கொஞ்சம் தைரியத்தோடு, “கபாடபுரத்திலிருந்து வருகிறேன்!” என்றான்.

     “என்ன, என்ன! கபாடபுரமா? அது தென்கோடியில் அல்லவா இருக்கிறது!”

     “ஆமாம்!”

     “அப்படியென்றால் உனக்குத் தமிழ் கூடத் தெரியுமா?”

     “அனைத்தும் தெரிந்தவன்தானே யாத்ரீகனாக இருக்க முடியும்?”

     “அது சரி! யாத்ரீகன் என்பதற்குரிய அடையாளம் கொஞ்சம் கூட இல்லையே!” என்று பின்னவன் இடைமறித்துச் சொன்னதும் திதியனின் மனம் மருட்சி பெற்றது. உடனே வெகுளித்தனமான சிரிப்பை வலிய உண்டாக்கிக் கொண்டு, “ஏன், காவியும் கமண்டலமும் திருநீற்றுச் சின்னமும் இருந்தால்தான் உங்களுக்கு யாத்ரீகனாகப்படுமோ?” என்று குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.

     “உண்மையான யாத்ரீகர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பது எங்கள் கருத்து!” - முன்னவனின் அழுத்தமான குரல்.

     “மனத்தூய்மை உள்ளவனுக்கு அடையாளச் சின்னம் எதுவும் தேவையில்லை. பொய்யை மெய்யாக்கும் போலித் துறவி நானல்ல. இதை நெஞ்சில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” - இருவரையும் ஒரு சேரப் பார்த்து முரட்டுத்தனமாகச் சொன்னான்.

     சிவப்பேறிப் போன திதியனின் முகத்தைக் கவனித்த பின்னவன் தன் சுருதியைக் குறைத்துக் கொண்டு “இப்போது எங்களை அணுகி வந்ததற்கு என்ன காரணம்?” என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு வினவினான்.

     “இந்த நேரத்தில் ஒருவரை அணுகி வரும் யாத்ரீகன் எதை எதிர்பார்ப்பான்? அவன் குடும்பத்துக்குத் தேவையானதையா கேட்கப் போகிறான்? ஒரு பிடி சோறு! அவ்வளவுதான்!” என்று சாதாரணமாகக் கேட்டான்.

     இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே சந்தேகத்திலிருந்து பூரணமாக விடுபட்ட முன்னவன், “அப்படியென்றால் எங்களோடு வருகிறாயா?” என்று பரிவுடன் வினவினான்.

     “ஜீவனுக்கு ஜீவனாக விளங்கும் அமுதத்துக்காக எத்தனை காத தூரமாக இருந்தாலும் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்.” - நமட்டுச் சிரிப்புடன் கூறிக் கொண்டே அக்கம்பக்கத்துச் சூழ்நிலையை அளவெடுக்கலானான்.

     திதியன் பேச்சை நம்பி விட்ட பின்னவனும் இரக்கம் தோய்ந்த அனுதாபக் குரலில், “உனக்கென்று ஒருவர் கூட இல்லையா?” என்று கேட்ட வண்ணம் திரும்பி நடக்கலானான்.

     “ஏன், இதோ... இருவர் இருக்கிறீர்களே!” என்றதுமே முன்னவன் கேட்டான்:

     “நாங்களெல்லாம் சதமாகிவிட முடியுமா? ஒரு நாளைக்கோ அல்லது பத்து நாட்களுக்கோ ஆதரிப்போம். ஆனால் காலம் முழுவதிலும் ஆதரிக்க முடியுமா?”

     “வாய்ச்சொல் கூடவா ஆதரிக்காது?”

     “அது உன் வயிற்றுப் பசியைத் தணித்து விடாதே? அதற்காகச் சொல்கிறேன்!”

     இவ்விதமாக இருவர் மனமும் மகிழ்ச்சி கொள்ளும்படியான கேள்வியைத் தொடராக்கி, போகும் வழியையும், அதன் சூழ்நிலையையும் மனக்கண்ணில் இருத்திக் கொண்டே வந்த திதியன், “அதோ, தெரிகிறதே, அங்கேதான் நாம் போகிறோம்!” என்று முன்னவன் சொன்னதும் அவன் சுட்டிக்காட்டிய பக்கமாக விழிகளைச் செலுத்தினான்.

     வடமேற்குத் திசையில், அதாவது, ஒரு கல் தூரத்தில் இருந்த சின்னஞ்சிறு கிராமத்தைப் பார்த்தான். “இங்குதான் உங்கள் இருக்கையா?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

     “இன்றைய சூழ்நிலையில் அப்படித்தான் சொல்ல வேண்டும். நாங்கள் இருவருமே இந்நாட்டின் எல்லைக் காவலர்கள். எங்களுடைய இருப்பிடம் அடிக்கடி மாறும்!” - இப்படிப் பதிலிறுத்தான் பின்னவன்.

     “காரணம்?”

     “ஊராள் வேந்தனின் உடும்புப் பிடியில் உயிர் வாழ்வதுதான். உன்னைப் போல் தனியாக இருந்தால் எந்த ஒரு கவலையும் இல்லை. சோறு கிடைக்கும் இடத்தையே சொர்க்கமாக எண்ணி, அங்கேயே விருப்பம் போல் இருந்து விடலாம். ஊம்!” என்று மனச் சலிப்போடு வார்த்தைகளை இறைத்தான் முன்னவன்.

     இருவர் பேச்சுகளிலும் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறதென்பதை முழுமையாக உணர்ந்து கொண்ட திதியன், “நான் யாத்ரீகன்! நீங்கள் எதையுமே என்னிடம் தாராளமாகச் சொல்லலாம். மனம் விட்டுச் சொல்லும் போது தான் துன்பம் குறைந்து இன்பம் ஏற்பட முடியும்!” என்று சொன்னான்.

     “எந்தக் குறையைச் சொல்வது? ஒன்றா - இரண்டா, ஒரே வரியில் சொல்லி முடிக்க!” என்று முன்னவன் சொன்னதைத் தொடர்ந்த பின்னவன், “அதெல்லாம் உனக்கெதற்கு? பசியைப் போக்கிக் கொண்டு உன் பாதையை நாடிச் செல்!” என்று சொன்னதோடு தன் கூட்டாளியை ஓர விழியால் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தான்.

     அவன் பார்வை காட்டும் பயமுறுத்தலைக் கண்டும் காணாதவன் போல், “என்னவோ, என் மீது இரக்கப்பட்டு அழைத்துச் செல்வதை எண்ணி, உங்கள் குறைகளைக் கேட்டு ஏதேனும் பரிகாரம் காண முடிந்தால் காணலாம் என்ற நப்பாசையால்தான் அப்படிக் கேட்டேன். சொல்வது தவறென்று தெரிந்தால் சொல்லவே வேண்டாம். ஒரு பிடி சோறு போட்டு அனுப்பித்து விட்டால் போதுமானது!” என்று சொல்வதற்கும் கிராமத்துக்குள் காலடி எடுத்து வைப்பதற்கும் சரியாய் இருந்தது.

     நாற்பது பேர்களை மையமாகக் கொண்ட அந்தக் குக்கிராமத்துக்குள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த குடிசைகளிலிருந்து வெளிப்பட்ட அனைவரையும் கண்ட மாத்திரத்தில் திதியனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இமைகள் படபடக்க, இருதயம் துடிதுடிக்க, கருவிழிகளால் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்தான். இது கிராமமில்லை; வடுகரின் துணைக் கோட்டம் என்பது தெரியவே, மேலும் திகிலுக்கு அடிமையானான்.

     ‘ஐயோ! கரையான் புற்றென்று நம்பி வந்தால் கருநாகமல்லவா உள்ளிருந்து வெளியில் வருகிறது. சோறு போடுவதாக அழைத்து வந்தவர் சொர்க்கத்துக்கு அல்லவா வழிகாட்டப் பார்க்கின்றனர். நம்பி மோசம் போனோமே!’ என்று பயத்தால் உருவான எண்ணங்களின் பிடியில் சிக்குண்டு சிதறிய திதியன், ஒரு குடிலின் வாசலுக்குள் சென்று திரும்பிய பின்னவன், “உள்ளே வா!” என்று அழைக்க முன்னவன் துணையோடு அடியெடுத்து வைத்தான்.

     இப்போது அவன் இழந்த நம்பிக்கையைப் பெற்றுவிட்டானென்றே சொல்ல வேண்டும். பதினாறு வயது கூட நிரம்பப் பெறாத வேல்விழிக் கன்னி ஒருத்தி செப்புச் சிலை போல் நின்றிருப்பதைக் கண்ணுற்றதும் தைரியமாகப் பெருமூச்சு விடலானான்.

     கை குவித்து வணங்கி வரவேற்ற குமரியைக் கண்டவன், தன் வணக்கத்தையும் பயபக்தியோடு தெரிவித்துக் கொண்டான். அழைத்து வந்த இருவர் போட்ட கட்டளைப்படி இயங்க ஆரம்பித்த அணங்கு, மூவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தாள்.

     வாய்மொழிக்கு வழியில்லை. எல்லாமே விழியசைவில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. திதியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இறைவன் மீது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. ஊமையாகப் படைத்து உலகில் உலவவிட்ட கடவுளை மனத்தால் சபித்துக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தான். தனக்கு இரண்டு பக்கமும் அமர்ந்து கொண்டு தன்னைப் போல் உணவருந்திக் கொண்டிருந்த இருவரையும் அடிக்கொரு தடவை விழிகளால் கவனித்துக் கொண்டிருந்தான். இட்டடி நோகாமல், எடுத்த அடி கொப்புளிக்காமல், வட்டில் சுமந்த மருங்கும் அசையா வண்ணம் அமுதம் படைக்கும் அவள் அழகை வெகுவாக இரசித்தான்.

     ‘பூத்த புதுமலரா? பொன்வண்டு ஒன்றும் தீண்டப் பெறாத புத்தம் புது மகரந்தத்தூளின் மறு மணமா? ஏன் படைத்தான் இவளை? நந்தினியைக் காண்பதற்கு முன்பு இவளை ஏன் என் கண்களுக்கு முன்னே அந்தக் கடவுள் கொண்டு வந்து காட்டியிருக்கக் கூடாது? இசைக் கூடம் இதுவாக இருந்தால் இவளை அசையும் பொருளாக்கி யார்தான் இரசிக்காமல் இருப்பர்! எல்லாம் சரி! இவர்களிடத்தில் இவள் எப்படிச் சிக்கி இருப்பாள்? ஒருவேளை... திருடிக் கொண்டு வரப்பட்ட தேமொழியா? இருக்காது! இருவரில் ஒருவருக்கு இவள் எந்த வகையிலோ வேண்டியவளாகத்தான் இருக்க வேண்டும். சீச்சீ! அப்படி இருக்க முடியாது; உருவ பேதம் நிறைந்த இவர்களுக்கா... இவள் சம்பந்தத்துக்குரியவளாக இருக்க முடியும்? நிச்சயமாக இருக்க முடியாது. ஊமையாகப் பிறந்து விட்ட பாவத்துக்காக இவளை இவள் பெற்றோர் இருவரில் ஒருவருக்கு மணமுடித்து விட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் இருக்கும் அகோர விகாரத்துக்கு இந்த மாணிக்கம் மகுடமாக அமைந்திருக்க முடியாது’ என்று மனம் எழுப்பிக் காட்டிய விதமெல்லாம் அவளை உருவகப்படுத்திப் பார்த்த காரணத்தால் அவனால் சரியாகக் கூட உணவருந்த முடியவில்லை.

     இதைத் தெளிவாகக் கவனித்துக் கொண்டிருந்த பின்னவன், “என்ன! யாத்ரீகருக்கு அறுசுவை உணவு பிடிக்கவில்லையோ?” என்று சற்று நகைப்போடு குத்தலாகக் கேட்டான்.

     அதற்கு அவன், “நான் என்றைக்குமே கிடைக்கக் கூடிய கஞ்சியைத்தான் அதிகமாக நேசிப்பது வழக்கம். ஒருநாள் கூத்துக்கு மீசை அடித்துக் கொள்வது என் பழக்கமல்ல!” என்று சுருக்கென்று படும்படியாகச் சொன்னான்.

     இதனால் பின்னவன் முகம் மட்டுமல்ல; முன்னவன் முகம்கூடக் கறுத்துச் சிறுத்துவிட்டது. அப்போது இருவருமே அவனை எரித்து விடுவது போல் பார்ப்பதைப் பார்த்த பாவையின் மனத்தில் வெறுமை நிழல் காட்டியது.

     பின்னவன் தன் பக்கமாகத் திரும்பி நிமிர்ந்து பார்த்த வேகத்தில் ஏதோ சமிக்ஞை செய்தான். அவளும் பதிலுக்கு ஏதோ ஒன்றைச் சைகை ரூபத்தில் உணர்த்தினாள். இருவர் சேஷ்டைகளையும் தற்செயலாக நிமிர்ந்த திதியன் பார்த்து விட்டான். ஆனால் அவன் புரிந்து கொண்டதை அவர்கள் பார்க்கவில்லை யென்றே கூற வேண்டும். சட்டென்று எழுந்து கொண்ட இருவரைப் போலவே அவனும் அங்கிருந்து எழுந்து கொண்டான்.

     மனக்குழப்பம் மிகுந்தது. ஏதோ ஒன்று தனக்கு நிகழவிருக்கிறதென்ற எண்ணத்துக்கு வந்தான். இருவரையும் பார்த்து, “மிக்க நன்றி! இந்தப் புண்ணியம் வீண் போகாது. வரட்டுமா?” என்றான்.

     உடனே முன்னவன், “இந்த வெயில் நேரத்தில் போகத் தேவையில்லை. இரவு ஒரு பொழுதும் எங்களுடன் தங்கியிருந்துவிட்டு நாளைய விடியற்காலையில் பயணம் தொடங்கலாம்!” என்று பின்னவனைப் பார்த்தவாறு சொன்னான்.

     அவன் சொன்னதைத் தொடர்ந்த பின்னவனும், “ஆமாம்.. இங்கிருந்து ஓர் ஐந்து காத தூரம் போவதற்குள் பொழுது சாய்ந்துவிடும். அதன் பிறகு என்ன செய்வாய்? அதுவும் அடர்ந்த காட்டில் தன்னந் தனியாக இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்? பேசாமல் இந்த ஒரு பொழுது இருந்துவிட்டு நாளை காலையில் போகலாம்” என்றான்.

     இருவர் கருத்தையும் மறுத்து என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். ஏதோ ஒருவித வாஞ்சை இருப்பது போல் அவன் பேச்சுக்குத் தடை சொல்லவே வேறு வழியின்றி அவர்கள் விருப்பத்துக்குச் சம்மதித்தான்.

     வீட்டுக்கு வெளியே மரங்களின் நிழலில் மூவரும் உட்கார்ந்தனர். தென்திசையைப் பற்றியும் கபாடபுரத்துக்குள்ள மகிமையைப் பற்றியும் அரைநாழிகை வரையிலும் அவர்களது எண்ணத்துக்குத் தகுந்த மாதிரி சொல்லிக் கொண்டே ஓர் ஓரமாகச் சாய்ந்த திதியன், தன்னையும் மீறி வந்த உறக்கத்தால் சந்தேகத்தை மறந்து குறட்டை விடலானான். அவன் தூங்கி விட்டதைக் கண்ட இருவரும் காதோடு காதாகப் பேசிக் கொள்ளலானார்கள்.

     “அவ்வளவுதான். இன்றிரவே இவனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்!” என்றான் பின்னவன்.

     “சேச்சே! நீ நினைப்பது போல் அவன் தென்திசைக்குரியவனல்ல. அவன் பேசிய பேச்சைப் பார்த்தால் தெரியவில்லை. அர்த்தமில்லாமல் ஒருவனைக் கொல்வதால் நமக்கு வரப் போவது என்ன? இன்றிரவு இருந்து விட்டுப் போகட்டும்!” என்றான் முன்னவன்.

     “ஏமாறுகிறவன் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவனுக்கு யோகம்தான் என்பது உண்மையாகி விட்டது. நீ இவனை யாத்ரீகனென்று நம்பிவிட்டாயா?”

     “என்னைப் பொறுத்த வரையிலும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

     “உன் நினைப்பை நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கு! இவனை என்னால் யாத்ரீகனாக துளியளவும் நம்ப முடியாது. நம்முடைய மொழியில் சரளமாகப் பேசுவதை வைத்துக் கொண்டு நீ நம்புகிறாய். பாலும் சுண்ணாம்பும் பார்ப்பதற்கு ஒன்றாகத்தான் தெரியும். இவன் பாலல்ல; அசல் சுண்ணாம்பு. உக்கூம்.”

     “அப்படியென்றால்...?”

     “வழக்கம் போல்தான்... சரி, சரி! எழுந்திரு!” என்று பின்னவன் எழுந்திருக்க, அவனைத் தொடந்தாற் போல் பெருமூச்செறிந்தபடி எழுந்த முன்னவன் வாசலில் வந்து நின்ற வனிதையைப் பார்த்து, “ஊம்! வழக்கம் போலவே இன்றிரவும் நீ அலங்கரித்துக் கொள்ள வேண்டும். முதல் படுக்கை, ஒரே படுக்கையாக ஆகிவிட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்துப் பின்னவனோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

     அவர்கள் தன் கண்களை விட்டு மறையும் வரையிலும் வழியையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த பாவை சட்டென்று பார்வையை இறக்கி, புரண்டு படுக்கும் திதியனைப் பார்த்தாள்.

     “ஆகா! என்ன அழகான தோற்றம்! இந்த இளமைப் பருவத்திலா துறவுக் கோலம்? இந்தக் கொடியவர்களிடத்திலா இவர் சிக்க வேண்டும்? இவரையும் அழித்து விடும்படியாகக் கட்டளை போட்டுவிட்டுப் போகிறார்களே, பாவிகள். இவர் செய்த குற்றம்தான் என்ன? இவர்கள் கண்களுக்குப் பட்டதுதான் குற்றமா? அதற்காக ஆவியைப் போக்குவதா? என்ன அநியாயம்! நல்லவர் கெட்டவர் யாரென்று அறியும் ஆற்றலில்லாதவர்களிடத்தில் அதிகாரம் கிடைத்து விட்டதே! சந்தேகம் வந்ததும் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதானா?” என்று சொல்லிக் கொண்டே தன் பார்வையை மேலுக்குயர்த்தி, ஒவ்வொரு குடிலுக்கும் எதிரே எரியீட்டிகளோடு நின்றிருக்கும் வடுக வீரர்களைக் கவனிக்கலானாள்.

     அப்போது திடுக்கென விழித்துக் கொண்ட திதியன், தனக்கு எதிரில் யாரையோ பார்த்தபடி நின்றிருக்கும் தையலை ஆராய்ந்த விழிகளால் பக்கத்தில் படுத்துக் கிடந்த தன்னை அழைத்து வந்தவர்களைத் தேடலானான்.

     அவனைத் தவிர அவனுக்கு அருகாமையில் வேறு யார் இருக்கிறார்கள்? அவள் திரும்பிப் பார்க்கும் விதத்தில் ஒரு கனைப்பு கனைத்தான்.

     உடனே உடல் சிலிர்க்க விழிகளைக் கீழிறக்கிய பாவை, தன் நெஞ்சார்ந்த இரக்கத்தை அவன் முன்னே காண்பிக்கலானாள்.

     மயக்கும் விழிகளுக்கு அடிமைப்பட்ட மறுகணமே தெளிவுக்கு வந்த திதியன், “என்னை அழைத்து வந்தவர்கள் எங்கே?” என்று அவளை ஏறெடுத்துப் பார்த்துச் சைகையின் மூலம் வினவினான். அப்போது தன்னையும் மீறி வந்த சிரிப்பை அடக்கிவிட்டுக் கொண்டு அவன் காட்டிய சைகையின் மூலமே அவனுக்கு விடையிறுத்தாள்.

     நெருக்கமாக அவளைத் தவிர வேறு யாருமில்லை என்ற திட சித்தத்துக்கு வந்த திதியன், “நீ ஊமையா?” என்று பயமும் பரிதாபமும் இழைந்த குரலில் கேட்டான்.

     அவன் கேட்டதை ஆமோதிப்பது போல் மென்முறுவலுடன் தலையசைத்தாள்.

     “நீ இந்தக் கொடியவர்களிடம் எப்படிச் சிக்கினாய்?” இது அவனுடைய இரண்டாவது கணை. இதற்கு அவள் பதிலாகக் கலங்கி விட்ட கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டாள்.

     “வேண்டாம்! நீ பதில் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நான் தப்பித்துச் செல்வதற்கு ஓர் உபாயம் சொன்னாலே போதுமானது” என்றதும், அவளுக்கு அவர்கள் சொல்லிச் சென்றது ஞாபகத்துக்கு வந்தது.

     இமைகளை உயர்த்தி, கருநாவல் நிறக் கண்களை அவனுக்கு நேராக நிறுத்திப் பார்த்தாள்.

     அவள் பார்வையிலிருக்கும் கொடூரத்தைக் கண்டு துணுக்குற்ற திதியன், “ஏன் அப்படிப் பார்க்கிறாய்? அவர்கள் உன்னிடத்தில் பிரத்யேகமாக ஏதேனும் சொல்லி விட்டுப் போனார்களா என்ன?” என்றதும் இப்படியும் அப்படியுமாகத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து உள்ளே போய்விட்டாள்.

     திதியன் சிந்திக்கலானான். குறுக்குப் பாதையை விட்டுவிட்டு நேர்ப்பாதையை நோக்கி வந்தால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தை எண்ணி முகவாய்க் கட்டையைத் தடவி விடலானான். முதல் கோணல் என்பதால் முற்றிலும் கோணலாகி விடுமா என்ன? ஆனாலும் அவன் மனத்தில் என்னென்னவோ நடுக்கம் தலைவிரித்தாடியது.

     அப்போது, “இங்கு கொஞ்சம் வருகிறீர்களா?” என்று வந்த அழைப்புக் குரலைக் கேட்டுத் திகைத்துப் போனான். ‘இது குரலா அல்லது குயிலா! சேச்சே! குயிலுக்கு ஏது இத்துணை கவர்ச்சிக் குரல்!’ என்ற மலைப்போடு சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தனக்கு நேரே இருக்கும் குடிலைக் கவனித்தான்.

     இப்போது, “உங்களைத்தான்!” என்றவள் வேறு யாருமல்ல; திதியனால் ஊமையாகக் கருதப்பட்டிருந்த ஊர்வசிதான்!

     காந்தக்கல் ஈர்ப்புக்கு இரையாகிக் குடிலுக்குள் நுழைந்தவன், அங்கு சன்னமாகப் பூத்திருந்த விளக்கொளியின் மூலமாக அவள் வதனம் காட்டும் வசீகரத்தைப் பருகலானான்.

     “எதற்காக உங்களை அழைத்தேன் தெரியுமா?” என்று முரட்டுத்தனமான ஒரு தொனியில் அதட்டலுடன் வினவினாள்.

     அவன் கொஞ்சமும் தயங்காமல், “குரல் கேட்டு இரசிப்பதற்காக இருக்கலாம்” என்றான்.

     “இல்லை... உன் குரல்வளையைப் பிடித்து உயிர்க் கொலை செய்வதற்காக!”

     இப்படி அவள் சொன்னதுமே தன்னையும் மீறி வந்த சிரிப்பைச் சிந்திவிட்டு, “உன் கையால் உயிர்க் கொலையா? அச்சடித்த பதுமை ஆவி பெற்றுப் பேச ஆரம்பித்தால் அதனுடைய உள்ளாசை எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. செப்புச் சிலையே, செய்! பூங்கரமும் பூநாகமும் ஒன்றென்று புவியோர் சொல்வதற்கு ஆதாரம் ஒன்று வேண்டாமா? அதற்காகவாவது நீ செய்” என்று அவன் சொல்லச் சொல்ல அவளது இதய ஓடையிலிருந்து சுத்தமுள்ள சுனை நீர் பெருக்கெடுக்கத் துவங்கியது.

     நீரைக் கண்டதும் நினைப்பைத் தளர்த்திய திதியன், “ஏன் இந்தக் கண்ணீர்? எய்தவர் யாரென்பது எனக்குத் தெரியும். இதற்காகவே உன்னைக் கொண்டு வந்து இங்கு வைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரியும். அஞ்சத் தேவையில்லை. வஞ்சி நீ! அவர்களை வஞ்சிக்கத் தேவையில்லை. கொஞ்சிக் குலவி என் உயிரைக் கொத்தாமல் நெஞ்சினிக்க முன்னெச்சரிக்கை செய்தவளே! உன் துணிவைப் பாராட்டுகிறேன். உணவைக் கொடுத்து உயிரைப் பறிக்கும் உத்தமர்கள் வாழட்டும். ஊம்...” என்று கொஞ்சமும் கலங்காமல்- கோபத்துக்குள்ளாகாமல் துணிவோடு சொல்லிவிட்டுத் தரையைப் பார்த்தான்.

     அவள் தன் முந்தானையின் முனையில் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே சொன்னாள்.

     “என்னைப் பார்த்தால் கொலைகாரியாகத் தெரிகிறதா?”

     “இல்லை பெண்ணே. நிச்சயம் இல்லை. பஞ்சினும் மென்மையான உன் நெஞ்சின் மீது எந்தவொரு குறைவுமில்லை. என்னை இங்கு அழைத்து வந்தவர் கட்டளைப்படி ஆடும் கட்டழகி நீ என்பதை நான் உணர்வேன். ஆனால் என்னை நீ சாகடிப்பதற்கு முன்பு, எனக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு சந்தேகத்தைப் போக்கி விடுவாயா?” - உருக்கத்தோடு கேட்டான்.

     அதற்கு அவள், “உங்களைச் சாகடிக்கும் நெஞ்சம் எனக்கில்லை; சந்தேகத்தைச் சொல்லுங்கள்!” என்று கம்மலான குரலில் கேட்டாள்.

     “வேறொன்றுமில்லை. சந்தேகப்பட்டவரையெல்லாம் தீர்த்துக் கட்டுவதுதான் இந்த இடத்தின் வேலையா?”

     “இடத்தின் வேலையல்ல; இருவர் இதயத்தின் தொழில்!”

     “அப்படியானால் என்னைப் போல் சிக்கியவர் எத்தனை பேர்? சொல்ல முடியுமா?”

     அவள் நிதானமாக நிமிர்ந்து அவனது கண்களை ஆராய்ந்தாள்.

     அவளது பார்வை உணர்த்தும் தயக்கத்தைக் கண்ட திதியன், “ஏன், சொல்லக் கூடாத இரகசியமா?” என்று குறுநகையோடு வினவினான்.

     அவள் தனக்குள்ளிருக்கும் திகிலை மறந்து களுக்கென்று நகைத்து விட்டுக் கேட்டாள்.

     “உண்மையிலேயே யாத்ரீகரா... நீங்கள்?”

     திதியன் திடுக்கிட்டான்.

     ‘நாம் யார் என்பது இவளுக்குத் தெரிந்து விட்டிருக்குமா?’ என்று தன் மனத்தைக் கேட்டுக் கொண்ட அதே கணத்தில் வலிய தைரியத்தை வருவித்துக் கொண்டு, “ஏன்... துறவிக் கோலத்தில் உலவும் துரோகி என்று நினைக்கிறாயா?” என்று திருப்பிக் கேட்டான்.

     “நான் நினைக்கவில்லை. ஆனால் உங்களை அழைத்து வந்தவர்கள் அப்படி எண்ணித்தான் உங்களை இன்றிரவு தீர்த்துக் கட்டிவிடும்படி என்னிடம் சொல்லிவிட்டுப் போயுள்ளார்கள்!”

     “இரவென்ன பெண்ணே! இப்போதே என் உயிரை நான் தருவதற்குத் தயார். ஆனால் நீயும் என்னைத் துரோகியென்று நினைக்கத் துணிந்து விட்டாயா?”

     அவள் தலையிறக்கத்தோடு சொன்னாள்: “இல்லை!”

     “அது போதும்... இப்போதே நீ என்னைக் கொன்றுவிடு! இல்லையென்றால் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் கோட்டத்துக்கே கூட என்னால் தீங்கு நேரலாம்!”

     இந்த வார்த்தைகளை மெள்ளமாக அல்ல; கொஞ்சம் உரத்த குரலில் உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லும் போதே பதைபதைத்துப் போன அன்னவள், “சூ! உரக்கக் கத்திப் பேசாதீர்கள். யாருடைய செவியிலாவது கேட்டு விடப் போகிறது. சோழ நாட்டு எல்லையிலிருந்தோ அல்லது தென் திசையிலிருந்தோ யார் வந்தாலும் அவர்களைத் தீர்த்து விடுவதற்கென்றே ‘கிராமம்’ அமைப்பில் இந்தக் கொலைக் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கொலைக் காரியம் என் கையாலே நடக்க வேண்டுமென்று நெருப்பு நெஞ்சம் பெற்றவர்கள் விரும்புகிறார்கள்” என்றதுமே இடைமறித்தான் அவன்.

     “அப்படியானால் நீயும் அவர்களுக்கு விரோதிதானா?”

     “ஒரு விதத்தில் அப்படித்தான்!”

     “நான் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இப்படி ஒரு நடிப்பா?”

     அதைக் கேட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு, “நான் நடிக்கப் பிறந்தவளல்ல; நாடாளப் பிறந்தவள். நாசக்காரர்களால் இங்கு வந்து இருட்டறையில் இருப்பவள்!”

     திதியனின் புருவங்கள் நெற்றியைத் தொட்டு விட்டுக் கீழிறங்கின.

     “நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!”

     “ஆமாம்! இப்போது நான் புரிந்து கொள்ள முடியாத புதிர்தான். போகட்டும்... இன்றிரவு வரையிலும் இங்கு இருங்கள். முதல் ஜாமத்துக்குப் பிறகு இங்கிருந்து நீங்கள் போக வழி செய்கிறேன்!”

     “அது சரி; எனக்காக இவ்வளவு பரிந்து பேசுகின்ற நீ யாரென்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கனிவுடன் வினவினான்.

     “ஆணிப் பொன் முத்துக்கு அச்சாரம் பதிக்கின்ற பாழிக்குச் சொந்தக்காரி. என் பெயர் அங்கயற்கண்ணி!” உள்ளார்ந்த குரலில் அவன் ஒருவனுக்கு மட்டுமே கேட்கும் தொனியில் சொன்னாள்.

     இதைக் கேட்டதுமே, “அப்படியா! பாழிக் கோமானின் பாசறையில் வளர்ந்த பாவையா?” என்று அவசர அவசரமாகக் கேட்டான்.

     “ஆமாம்!” என்றாள் அவள்.

     “எப்படி இவர்களிடத்தில் சிக்குண்டாய்?”

     “சொல்வதற்கு மறுப்பில்லை; ஆனால் போன பாவிகள் திரும்பி வந்தாலும் வந்துவிடக் கூடும். ஒன்றை மட்டும் இப்போது சொல்கிறேன். மௌரியருக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் கோசரால் கொள்ளை கொள்ளப்பட்டு இந்தக் கூடாரத்துக்கு வந்திருப்பவள் நான்.”

     இப்படி அவள் சொன்னதுமே பேரதிர்ச்சிக்கு அடிமைப்பட்டவன் போல் அப்படியே அசையாமல் நின்றான்.

     “ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் சொன்னதில் நம்பிக்கை இல்லையா?” என்றாள் அவள்.

     “ஒன்றுமில்லை. தமிழரைக் கொண்டே தமிழரைச் சாகடிக்கும் திட்டத்தை இங்கிருப்பவருக்குத் தீட்டிக் கொடுத்தவன் யாராக இருப்பானென்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

     “அஞ்சத் தேவையில்லை; ஆராய்ச்சிக்கும் இது இடமில்லை. இதுவரையில் யாரும் சிக்கவில்லை. அவர்கள் உண்டாக்கி இருக்கும் பலிபீடத்துக்குக் கிடைத்திருக்கும் முதல் மனிதர் நீங்கள்தான்” என்று அவள் மருட்சி நிறைந்த குரலில் சொன்னதும், தான் யாரென்பதையும் தான் மேற்கொண்டிருக்கும் பொறுப்பு என்னவென்பதையும் சுருக்கமாகச் சொன்னான்.

     அனைத்தையும் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த அங்கயற்கண்ணி, “அப்படியானால் எனக்கொரு உதவி செய்வீர்களா?” என்று நெஞ்சுருக வினவினாள்.

     “உதவி மட்டுமல்ல, இங்கிருந்து உன்னை விடுவிக்கக் கூடச் சித்தமாயுள்ளேன்.”

     “அது இப்போது வேண்டாம். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் முறியடிக்க வேண்டும். அதை என்னால் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் பாடலிபுரத்துக்குச் சென்று திரும்பி வரும் போது என்னைப் பற்றிய செய்தியைப் பாழிக்குத் தெரிவித்து விட்டால் போதுமானது. இப்போது நானும் உங்களுடன் வந்துவிட்டால் எல்லாமே பாழாகிப் போகும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்!”

     “நீ பெண்!”

     “ஆனால் நிறை காக்கும் திண்மை எனக்குண்டு.”

     “என்னை விடுவிப்பதின் மூலம் அந்த நிறைக்குள்ள ஆயுள் முடிந்துவிட்டால்?”

     “இது வீண் பிரமை! ஓர் உயிரையல்ல; சோழவள நாட்டுப் படைத்தலைவரைக் காப்பாற்றி விட்டோமென்ற உற்சாகத்தில் என்னை மட்டுமல்ல; ஏமாற்றுக்காரர்களின் பிடியில் சிக்கும் அத்தனை பேர்களையும் கூடக் காப்பாற்றி விடுவேன்!”

     இப்போது அவனுக்குள் எழுந்த சந்தேகத்தை வாய்விட்டு கேட்டுவிட்டான்.

     “அந்த அளவுக்கு உன்னை நம்புகிறார்களா?”

     “ஒரு பெண் நினைத்தால் யாரையுமே - எதையுமே நம்பும்படிச் செய்து விட முடியும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாதே!”

     “அப்படியென்றால்...?”

     “விவரித்துச் சொல்லும் அளவுக்கு இது நல்ல தருமணல்ல. மீண்டும் உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்குமானால் அப்போது விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது பழைய இடத்துக்குப் போய் விடுங்கள். இனி நான் நடிப்பேன். நிஜமென்று நம்பிவிட வேண்டாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இங்கிருந்து போகும் வரையிலும் உணர்ச்சி வசப்பட்டுவிட வேண்டாம். தெரிகிறதா?” - செவ்விதழ்களை மூடிய வண்ணம் குறுஞ்சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

     “ஆகட்டும்!” என்று பூரண விருப்பம் இல்லாத தொனியில் உறுதியளித்து விட்டுப் பழைய இடத்துக்கு வந்தவன், அவளோடு மனம்விட்டுப் பேசுவதற்கு முன்பு, தான் செய்திருந்த கற்பனையை மீண்டும் வலிய வருவித்துக் கொண்டு பார்க்கலானான்.

     சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ வரும் காலடி ஓசையைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிய திதியன், தன்னை அழைத்து வந்தவர் திரும்பி வருவதைப் பார்த்ததும் பதறிப் போனான். காரணம், அவர்களுக்குப் பின்னால் அவன் ஏறிவந்த புரவி வந்து கொண்டிருந்ததுதான்!