உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முன்னுரை புத்தகங்களின் சக்தியைப் பற்றிப் பெரியோர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். புத்தகங்கள் அலமாரிக்கு அலங்காரம் என்றும் கரங்களுக்குப் பூஷணம் என்றும் கூறியிருக்கிறார்கள். அனுபவ வைத்திய முறையில், புத்தகங்கள் உறக்கம் வராமைக்குச் சிறந்த மருந்து என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலருக்குக் காப்பி அல்லது தேயிலைப் பானம் அருந்தினால் தூக்கம் போய்விடும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் தூக்கம் வந்து விடும். புத்தகத்தின் மகிமையைப் பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்! புத்தகங்களைச் சம்பாதிப்பதற்குச் சாதாரணமாக மூன்று வழிகள் உண்டு என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. யாசகம் வாங்குதல், கடன் வாங்குதல், திருடுதல் ஆகியவை அந்த மூன்று வழிகளாகும். விலைக்கு வாங்குதல் என்னும் நாலாவது வழி ஒன்றும் இருக்கிறது. இவற்றில் நாலாவது வழியைக் கடைப் பிடிக்கும்படியான அவசியம் ரயில் பிரயாணத்தின் போது நம்மில் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. ரயில் பிரயாணத்தில் பலருக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. மந்திரி காட்கில் போன்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் ரயில் பிரயாணத்தின் போது நன்றாகத் தூங்குவது மட்டுமின்றித் திருட்டுக் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு ரயிலில் தூக்கம் வருவது கிடையாது. ரயில் ஆடி அசைந்து குலுக்கிப் போடுகிற போட்டில் வருகிற தூக்கமும் விரைந்து ஓடிப் போகிறது. ஆகையால் பொழுது போக்குகிறதற்கு ஏதேனும் புத்தகம் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உண்டாகிறது. இவ்வாறு புத்தகப் படிப்பின் வளர்ச்சிக்கு ரயில்வேக்கள் மிக்க உதவி செய்கின்றன. இதற்காகவே பெரிய ரயில்வே நிலையங்களில் புத்தகக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். புத்தகம் சம்பாதிக்கும் முறைகளில் முதல் மூன்று முறைகளும் ரயில் பிரயாணத்தின் போது அவ்வளவாக சௌகரியப்படுவதில்லை. நாலாவது முறையைத்தான் கடைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. ஒரு சமயம் ரயிலில் பிரயாணம் செய்ய நேரிட்டபோது எனக்கும் அத்தகைய அவசியம் ஏற்பட்டது. "தூக்கந்தான் வருவதில்லை! ஏதேனும் ஒரு புத்தகமாவது படித்து வைக்கலாம்!" என்று எண்ணி, திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கச் சென்றேன். கடையில் இருந்த புத்தகங்களைக் கண்ணோட்டம் இட்ட பிறகு, பளபளவென்று மூவர்ண அட்டை போட்டதாக ஒரு புத்தகத்தைக் கண்டு பிடித்து வாங்கினேன். அது வோட்ஹவுஸ் என்னும் பிரபல ஆங்கில நாவலாசிரியர் எழுதிய புத்தகம். ஆசிரியர் வோட்ஹவுஸ் நகைச்சுவைக்குப் பெயர் போனவர். ஆங்கில மக்களின் நடை உடை பாவனைகளையும் பேச்சுக்களையும் வைத்துக்கொண்டு, குலுங்கச் சிரிக்கும்படியான புத்தகங்களை எழுதி விடுவார். சிற்சில பாத்திரங்களை வைத்துக் கொண்டே அடுத்தடுத்துக் கதைகள் எழுதுவார். "சிரிப்பு வந்தால் வரட்டும்; அல்லது ஒருவேளை தூக்கம் வந்தால் வரட்டும்" என்று எண்ணிக்கொண்டு, ஐந்தே முக்கால் ரூபாய் துணிந்து எடுத்துக் கொடுத்து, முந்நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு போய் ரயிலில் என் இடத்தில் அமர்ந்தேன். அந்தப் புத்தகம் அது வரையில் இருபத்தேழு லட்சத்து முப்பதினாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக மேலட்டையிலேயே தெரிவித்திருந்தார்கள். விலைக்கு வாங்கிப் படித்தவர்கள் அத்தனை பேர் எனில், மற்ற மூன்று வழிகளில் படித்தவர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்? ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!-அவர்களுடைய அதிர்ஷ்டத்தை வியந்து கொண்டே புத்தகத்தைப் பிரித்துப் படிக்கலானேன். படிக்க ஆரம்பித்ததுமே ஓர் ஐயம் தோன்றியது. ஒரு பாரா படித்ததும் சந்தேகம் அதிகமாயிற்று. ஒரு பக்கத்தை முடித்து இரண்டாம் பக்கத்தைத் தொடங்கியதும் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. "அட சட்! இந்தக் கதையை முன்னொரு தடவை படித்துத் தொலைத்திருக்கிறோமே? இதையா மறுபடியும் விலை கொடுத்து வாங்கினோம்? ஐந்தேமுக்கால் ரூபாய் தண்டம்!" என்று சொல்லிக்கொண்டு புத்தகத்தைக் கீழே போட்டேன். பாவம்! புத்தகம் என்ன செய்யும்? புத்தகத்தைப் படித்து நான் சிரிப்பதற்குப் பதிலாக, அது என்னைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது மட்டுமன்று; என்னுடன் அது பேசவும் செய்தது. "அப்பனே! என்னை இப்படித் தொப்பென்று கீழே போட்டாயே! நீயும் புத்தகம் எழுதுகிறவனாயிற்றே! உன் புத்தகத்தை ஏமாந்து வாங்குகிறவர்களும் இப்படித்தானே வீசி எறிவார்கள்?" என்று சொல்லியது. இந்த எண்ணமானது கொஞ்ச நஞ்சம் வரக்கூடிய தூக்கத்தையும் கெடுத்துவிட்டது. பொழுதை எப்படிப் போக்குவது என்று யோசித்தேன். பெட்டியைத் திறந்து அதிலிருந்து துணிமணிகளை அப்புறப்படுத்திச் சோதித்தேன். ரஸிகமணி டி.கே.சி. அவர்களின் கம்ப ராமாயணப் பதிப்பு பெட்டியின் அடியில் இருந்தது. அதை எடுத்துக் கம்பர் பாடல்களைப் படிக்கத் தொடங்கினேன். பொழுது போவதே தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கம்பர் எழுதிய புத்தகம். நானும் நூறு தடவைக்குமேல் கேட்டும் படித்துமிருப்பேன். ஆயினும் கம்பர் பாடல் பழசாகத் தோன்றவில்லை. புத்தகத்தைக் கீழே விட்டெறியவும் தோன்றவில்லை. படிக்கப் படிக்கப் புதுமையாக இருந்தது. பழைய காலத்து மகாமேதைகள் எழுதிய சிரஞ்சீவிக் காவியங்களுக்கும் இந்த நாளைய ஆசிரியர்கள் எழுதும் அன்றலர்ந்து வாடிப் போகும் நூல்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிய வந்தது. கம்பரைப் போற்றுவதற்காகக் கூடிய மகாநாடு ஒன்றில் மேற்கூறிய சம்பவத்தைப் பற்றிச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்த நண்பர்களில் ஒருவர் விழா முடிந்த பிறகு என்னிடம் தனியாக வந்து, "என்ன ஐயா! எங்களுக்கெல்லாம் அசட்டுப் பட்டம் கட்டிவிட்டீரே?" என்றார். "அடாடா! நான் ஒன்றும் அப்படிச் செய்ததாக நினைவில்லையே? பட்டம் கட்டும் வேலையெல்லாம் சர்வகலாசாலைகளைச் சேர்ந்தது அல்லவா?" என்றேன். "அதற்குச் சொல்லவில்லை. நீர் எழுதிய புத்தகங்களை நாங்கள் எவ்வளவோ ஆசையோடு வாங்கி வாசிக்கிறோம். பத்திரமாய் வைத்துப் பாதுகாக்கிறோம். சில புத்தகங்களை மூன்று நாலு தடவை கூடப் படித்திருக்கிறோம். அப்படி இருக்க ஒரு தடவை படித்துவிட்டு எறிய வேண்டிய புத்தகங்களுடன், சேர்த்து விட்டீரே!" என்றார். "ஏதோ அவையடக்கமாகச் சொன்னேன். அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். யார் கண்டது, வள்ளுவரும் கம்பரும் தங்கள் நூல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் படிக்கப்படும் என்று எண்ணிக்கொண்டா எழுதினார்கள்? இல்லையே! ஷேக்ஸ்பியர் அவசர அவசரமாகப் புது நாடகம் ஏதேனும், நடிப்பதற்கு வேண்டுமே என்று எண்ணிக்கொண்டு எழுதித் தள்ளினார். அவை உலகமுள்ளளவும் போற்றக் கூடிய சிரஞ்சீவி நூல்களாக விளங்குகின்றன. அடுத்தாற் போல், பெர்னாட்ஷாவைப் பாருங்கள். 'ஷேக்ஸ்பியரைக் காட்டிலும் நான் கொஞ்சம் அதிகம்!' என்று பெர்னாட்ஷா சொல்லிக் கொண்டார். அவர் இறந்த போன பிறகு அவருடைய வீட்டை வாங்கி ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிக்குப் பொது ஜன ஆதரவு கிட்டாமல் கைவிடப்பட்டது. ஆகையால், ஆசிரியர் உயிரோடு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவர்களுடைய நூல்களை பற்றி எதுவும் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது!" என்றேன். "இருந்தாலும் உம்முடைய புத்தகங்களில் ஏதேனும் பிற்காலத்தில் நிலைத்திருக்கலாம் என்று கருதுகிறீரா? ஐம்பது வருஷம் நூறு வருஷமாவது உயிரோடிருக்கக் கூடிய நூல் என்று நீர் எழுதிய நூல்களில் எதையாவது சொல்ல முடியுமா?" என்று கேட்டார். "இப்போது எப்படி உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்; நூறு வருஷங்கள் கழித்துக் கேளுங்கள் சொல்கிறேன்!" என்றேன். நண்பருடைய கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் மழுப்பி விட்டேன். ஆனால் அவருடைய கேள்வி என் மனதில் கிடந்து உழன்று கொண்டே இருந்தது. ஏதாவது புதிய கதை எழுதி வரும்போது, "இது எத்தனை நாளைக்கு உயிரோடிருக்கும்? எத்தனை தடவை படிப்பதற்குத் தகுதியுள்ளதாகயிருக்கும்?" என்ற எண்ணம் தோன்றிவிடும். பிறகு எழுதுவதற்கே ஓடாது. இம்மாதிரி உள்ளக் குழப்பம் நண்பர் கேள்வி கேட்ட நாளிலிருந்து சில நாளைக்கு முன்பு வரை எனக்கு இருந்து வந்தது. "காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பது பழமொழி. காக்கை அவ்வளவு அசட்டுத்தனம் உள்ள பறவை என்று எனக்குத் தோன்றவில்லை. தன்னுடைய அழகிய கரிய குஞ்சைக் காட்டிலும் காக்கை பொன்னுக்கு அதிக மதிப்புத் தரக்கூடிய பட்சி என்று நான் எண்ணவில்லை. மனிதன் தான் அப்படியெல்லாம் தவறான மதிப்பு அளிக்கக் கூடியவன்! தான் பெற்ற குழந்தையைக் காட்டிலும் தங்கத்தைப் பெரிதாக மதிப்பவன் மனிதன் தான்! 'தங்கக் கட்டியே!' என்று குழந்தையைக் கொஞ்சி மகிழும் பெற்றோர்களை மனிதவர்க்கத்திலேதான் பார்க்கலாம். அப்படிப்பட்ட மனிதனும் தங்கத்துக்கு அடுத்தபடியாகவேனும் தன் குழந்தையை அருமையாகக் கருதுகிறான். இதிலிருந்து, அவரவர்களுடைய சிருஷ்டி அவரவர்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றுவது இயல்பு என்று ஏற்படுகிறது. புத்தகங்களைச் சிருஷ்டி செய்யும் ஆசிரியர்கள் விஷயத்தில் இது எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்ல முடியாது. அவரவர்கள் எழுதுவது அவ்வப்போது அவரவர்களுக்கு உயர்வாகத்தான் தோன்றக் கூடும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு தாங்கள் எழுதிய நூல்களைப் படித்துப் பார்த்தால் அதே மாதிரி தோன்றுமா? எல்லோரையும் போல் நூலாசிரியர்களும் வளர்ச்சிபெற்று வருகிறவர்கள். உடல் வளர்ச்சி நின்று போன பிறகும் உள்ளமும் அறிவும் வளர்ந்து விசாலித்து வருவதுண்டு. ஆகையால் ஆசிரியன் ஒருவன் தான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய நூலை எடுத்துப் படித்துப் பார்த்தால், அதில் உள்ள குறைகள் பல அவனுக்குத் தோன்றாமற் போகாது. "அடாடா! இவற்றையெல்லாம் நாமா எழுதினோம்; இப்படியெல்லாம் நாமா எழுதினோம்?" என்று ஆசிரியரின் உள்ளம் வேதனை அடைதல் இயல்பேயாகும். எனக்கும் இத்தகைய அநுபவங்கள் ஏற்பட்டதுண்டு. பின்னர், "அந்தக் காலத்து நிலைமை அப்படி; அதனால் இவ்விதம் கதைப் போக்கு அமைந்திருக்கிறது. இன்றைக்கு எழுதினால் வேறு விதமாக எழுதியிருக்கலாம்!" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லித் தைரியப்படுத்திக் கொள்வேன். "இந்தப் புத்தகம் இன்னொரு பதிப்பு வெளிவராமல் இத்துடன் நின்று விட்டால் நன்றாயிருக்கும்" என்று சில சமயம் எண்ணுவதும் உண்டு. ஏற்கெனவே இத்தகைய போராட்டம் குடி கொண்டிருந்த உள்ளத்தில் நண்பர் கேட்ட கேள்வி அடிக்கடி தோன்றிச் சங்கடப்படுத்திக் கொண்டு வந்தது. "அலை ஓசை" என்ற இந்தப் புத்தகத்தின் மூலமாக மேற்கூறிய சங்கடம் நிவர்த்தியாயிற்று. முதலில் இந்தக் கதை "கல்கி" பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகி வந்தது. பத்திரிகையில் கதை முடிந்த பிறகு இதைப் புத்தக வடிவில் கொண்டு வருவது உசிதமாயிருக்குமா என்று போராட்டம் மனதிற்குள் நிகழ்ந்தது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு தடவை அடியிலிருந்து படித்துப் பார்த்தேன். நண்பரின் கேள்விக்கு விடை கிடைத்தது. நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால், அது "அலை ஓசை" தான் என்ற எண்ணம் படிக்கும்போதே உள்ளத்தில் தானாக உதயமாயிற்று. புத்தகம் பதிப்பிக்கப்பட்டபோது மீண்டும் அச்சுப் பிழை பார்ப்பதற்காகப் படிக்கும்படி நேர்ந்தது. முன்னால் தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. அலை ஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும் தாரிணியும் சூரியாவும் சௌந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு "அலை ஓசை"யை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்றே என்னால் எண்ண முடியவில்லை. நம்மைப்போலப் பிறந்து வளர்ந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்களாகவே தோன்றினார்கள். பாவம்! சீதா மட்டும் அன்னை கஸ்தூரிபாவைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். மற்றவர்கள் இன்னமும் ஜீவியவந்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் எப்போது எங்கே காணப் போகிறேனோ, தெரியவில்லை. ஆம்; இந்தக் கதையைக் கதாபாத்திரங்களேதான் எழுதியிருக்கிறார்கள். ஆசிரியன் செய்திருப்பதெல்லாம் பதினெட்டு வருஷத்து இந்திய தேசீய இயக்கத்தின் வரலாற்றை இந்தக் கதைக்குப் பின்னணியாக அமைத்துக் கொடுத்திருப்பதுதான். 1930-ம் ஆண்டிலிருந்து 1947-ம் ஆண்டுவரையில் நமது தாய்த்திருநாட்டின் சரித்திரத்தில் பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. காந்தி மகாத்மாவினுடைய ஆத்மசக்தி கோடானு கோடி மக்களின் உள்ளங்களில் ஆட்சி புரிந்தது. மக்களின் வெளி வாழ்க்கையிலும் உள்ளப் போக்கிலும் எத்தனை எத்தனையோ புரட்சிகள் நடந்தன. அவையெல்லாம் "அலை ஓசை" க்குப் பின்னணி சங்கீதமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை நேயர்கள் இந்நூலில் காண்பார்கள். கோடானு கோடி மக்களின் கனவு நிறைவேறிப் பாரதநாடு சுதந்திரம் அடையும் காலம் நெருங்கியபோது, காந்திமகானின் ஆத்மசக்திக்கு எதிராக நாசகார சக்திகள் கிளம்பிக் கர்ண கொடூரமான கூச்சலுடன் கோர பயங்கரத் தாண்டவமாடின. ஆயினும் இந்த நாசகார சக்திகளையெல்லாம் மகாத்மாவின் ஆத்மசக்தி முறியடித்து வெற்றிச் சங்கம் முழங்கியது. அந்த அற்புத வரலாற்றையும் இந்தக் கதைக்குப் பின்னணியாக அமைக்க முயன்றிருக்கிறேன். இதற்காகவே அக்காலத்தில் புதுடில்லி, பானிபத், கர்னால், குருஷேத்திரம் முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்கலுக்கு வந்திருந்த பஞ்சாப் அகதிகளின் நிலையை நேரில் பார்த்தேன். அதன் பயனாக எத்தனையோ இரவுகள் தூக்கமின்றிக் கழிக்க வேண்டியதாயிற்று. "உலகத்தில் ஏன் தீமைகளும் துன்பங்களும் நிகழுகின்றன? உலகிலே பிறந்த சிலர் எப்போதும் சுகமாக இருந்து காலங்கழித்து விட்டுப் போவதேன்? மற்றும் பலர் துன்பத்திலேயே உழன்று கிடந்துவிட்டு இன்பம் என்பதையே அறியாமல் உயிரை விடுவதேன்? கடவுள் இத்தகைய பட்சபாதம் ஏன் காட்டுகிறார்? இவ்வளவு கொடூரமான துன்பங்களை மக்களுக்கு ஏன் அளிக்கிறார்?" என்னும் கேள்விகள் பகுத்தறிவு சிறிதேனுமுடைய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் சில சமயம் தோன்றாமலிருக்க முடியாது. இந்தக் கேள்விகள் வெகுவாக என் உள்ளத்தையும் பல சமயங்களில் அலைத்ததுண்டு. லலிதாவும் சீதாவும் தாரிணியும் சூரியாவும் மேற்கூறிய கேள்விகளுக்கு இந்நூலில் பின்வருமாறு விடை அளித்திருக்கிறார்கள்:- "அன்னை ஒருத்திக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் சுகமாயிருக்கின்றன. ஒரு குழந்தை மட்டும் நோய்ப்பட்டு மெலிந்து போயிருக்கிறது. அதன் ஜீரணசக்தி குன்றியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கு முடியாமல் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாயிருக்கிறது. தாயார் மற்ற மூன்று குழந்தைகளுக்கும் நல்ல வளமான உணவு கொடுக்கிறார். சோறும் கறிவகைகளும் பட்சணங்களும் பாலும் பழமும் அக்குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள். மெலிந்த நோயாளிக் குழந்தைக்கு அத்தகைய நல்ல உணவு கொடுக்காமல் வெறும் கஞ்சி கொடுக்கிறாள். நோயாளிக் குழந்தை என்ன நினைக்கிறது? 'பார் நம்முடைய தாயாருக்குத்தான் எத்தனை பட்சபாதம்? நான் மெலிந்தவன்; எனக்கு நல்ல போஷாக்கு வேண்டும்; ஆயினும் எனக்கு வெறும் கஞ்சியைக் கொடுக்கிறாள். என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்னை நல்ல புஷ்டியான உணவைக் கொடுக்கிறாள்! இது என்ன அநியாயம்? இது என்ன பட்சபாதம்!' என்று எண்ணமிடுகிறது. குழந்தை சிற்றறிவு படைத்தது. அதனால் அதற்குத் தன் தாயின் செயல் அர்த்தமாகவில்லை. தன்பேரில் உள்ள அன்பினாலேதான் அன்னை அவ்விதம் தனக்குப் பத்தியமாகக் கஞ்சி கொடுக்கிறாள் என்பதை அக்குழந்தை அறிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் தன் தாயார் மற்ற மூன்று குழந்தைகளையும் விடத் தன்னைப் பற்றியே ஓயாக் கவலை கொண்டிருக்கிறாள் என்பதை அக்குழந்தை அறியவில்லை. கடவுளைப் பற்றிப் புகார் கூறும் மாந்தர்கள் அந்தக் குழந்தையின் நிலையில் உள்ளவர்களே! கடவுளின் கருணையையோ அக்கருணையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல்களையோ அறிந்து கொள்ளும் சக்தி நம்முடைய சிற்றறிவுக்குக் கிடையாது. ஆகையினாலேயே குறைப்படுகிறோம்; குற்றம் கூறுகிறோம். அது காரணமாகவே நம் துன்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். நோய்ப்பட்ட குழந்தைக்குத் தன் அன்னையிடம் பூரண நம்பிக்கையிருந்தால், அது மேற்சொன்னபடியெல்லாம் எண்ணி மனம் வெம்பவேண்டியதில்லை. குழந்தையின் உடல் நோய்ப்பட்டிருந்தாலும் அதன் மனமாவது நிம்மதியாயிருக்கும். அது போலவே கடவுளுடைய செயல்களின் காரண காரியங்களை அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய அறிவு நமக்கில்லாவிட்டால் பாதகம் இல்லை. கடவுளிடம் நம்பிக்கையிருந்தால் போதும், அந்த நம்பிக்கையானது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்திருக்கும் போதும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிய தைரியத்தை அளிக்கிறது. மன நிம்மதியைக் காட்டிலும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேண்டிப் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது?..." மேலே எடுத்துக் காட்டியிருக்கும் பகுதியை நான் எழுதியதாகவே கருதக்கூடவில்லை. இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்க்கை அநுபவங்களைக் கொண்டு முடிவுகட்டிக் கூறும் தத்துவமாகவே எண்ண வேண்டியிருக்கிறது. இந்த "அலை ஓசை" என்னும் நூலை மிக்க பணிவுடனும் பெருமிதத்துடனும் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்குப் பயபக்தியுடன் இயற்றி வந்திருக்கும் பணிகளுக்குள்ளே இதுவே தலைசிறந்தது என்று நம்பித் தமிழ்நாட்டு ரஸிகப் பெருமக்களுக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்கிறேன். சமர்ப்பித்த பொருளைக் காட்டிலும் அதைச் சமர்ப்பிக்கத் தூண்டிய ஆர்வத்தையே பெரிதாகக் கொண்டு, தமிழ்ப் பெருமக்கள் "அலை ஓசை"யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். ரா.கிருஷ்ணமூர்த்தி
அடையாறு, காந்தி நகர் ஆசிரியர், "கல்கி" 12-2-53 |