முதல் பாகம் : பூகம்பம்

11. “என்னைக் கேட்டால்...”

     ராகவன் சொன்னதற்குப் பதிலாக எதுவும் சொல்வதற்கு அங்கிருந்தவர்களில் யாருக்கும் நா எழவில்லை. அவனும் பதிலுக்குக் காத்திராமல் வீட்டின் பின்கட்டை நோக்கி விடுவிடு என்று நடந்து சென்றான்.

     அவன் மறைந்த பிறகு காமாட்சி அம்மாள் கிட்டாவய்யரைப் பார்த்து, "நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். ராகவனை வழிக்குக் கொண்டு வருவதற்கு நான் ஆயிற்று. எல்லாவற்றுக்கும் நீங்கள் பம்பாய்க்குப் போய்விட்டுச் சீக்கிரம் திரும்பி வந்து சேருங்கள்!" என்றாள்.

     ராகவன், 'நான் போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன்!' என்று சொன்னது கிட்டாவய்யருக்கு மிக்க சந்தோஷம் அளித்தது. பெண்ணை மாப்பிள்ளைக்குக் காட்டுவதற்காகப் பட்டணம் அழைத்துக்கொண்டு வரும் காரியம் அவருக்குப் பிடிக்கவேயில்லை. அது நம்முடைய கௌரவத்துக்குக் குறைவு என்று கருதினார். அதோடு தம் அருமைப் புதல்வியை அம்மாதிரி சந்தைக்கு அழைத்துக் கொண்டு போவது போல அழைத்துப் போய், யாரோ முன்பின் தெரியாத பையன் அவளைப் பார்த்து, 'வேண்டும்' 'வேண்டாம்' என்று சொல்ல இடங் கொடுக்கும் விஷயம் அவர் மனதுக்குப் பெரிதும் கஷ்டம் தந்திருந்தது. ஆகவே இப்போது ராகவன் 'நானே இவர்கள், ஊருக்குப் போய் பெண்ணைப் பார்க்கிறேன்' என்று சொன்னதை நினைத்துக் களிப்படைந்தார்.

     காமாட்சி அம்மாள் கூறியதற்குப் பதிலாக உற்சாகமான குரலில் "ஆகட்டும்; பம்பாய்க்குப் போய்விட்டுக் கூடிய சீக்கிரம் திரும்பி விடுகிறேன். சௌகரியப்பட்டால் மாப்பிள்ளை என் பின்னோடேயே வரலாம்; நானே அழைத்துப் போகிறேன்!" என்றார்.

     "அதற்குள்ளாகவே மாப்பிள்ளை உறவு கொண்டாட ஆரம்பித்து விட்டாயா, கிட்டா? ஓஹோஹோ!" என்றார் சுப்பய்யர்.

     "அதற்கென்ன? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் அவ்விதமே நடந்து விடுகிறது. இவர் என்னைக் கூப்பிட்ட சமயம் நான் பூஜை அறையில் படங்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். இவர் 'காமாட்சி' என்று என்னைக் கூப்பிட்ட போது ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துக்குச் சாத்தியிருந்த பூமாலையிலேயிருந்து ஒரு செண்பகப் புஷ்பம் உதிர்ந்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன்" என்றாள் காமாட்சி அம்மாள்.

     "அப்படியானால், இந்தக் கல்யாணம் நடந்த மாதிரியேதான்! சுப்பய்யரே, இவ்வளவு நாளாக ராகவனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்று எத்தனைப்பேர் இந்த வீட்டைத் தேடி வந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கும். அவ்வளவு பேரையும் தட்டிக் கழித்து வந்தவள் இந்த மகராஜிதான். எப்போது இவளுடைய வாயினாலேயே 'இந்தக் கலியாணம் நடக்கும்' என்று சொல்லிவிட்டாளோ, அப்போது கட்டாயம் கலியாணம் நடந்தே தீரும்" என்றார் சாஸ்திரிகள்.

     "எல்லாம் ஒரு நல்லதற்காகத்தான் இருக்கும்! பரஸ்பரம் இவ்வளவு நல்ல சம்பந்தம் வாய்க்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறபோது, வேறு இடத்தில் கலியாணம் எப்படி நிச்சயமாகும்? கிட்டா கூடத்தான் போன வருஷமெல்லாம் நூறு வரன் பார்த்தான். ஒன்றும் மனதுக்குத் திருப்திகரமாயில்லை என்று தள்ளிவிட்டான். இந்த வீட்டுக்குள் கால் வைத்ததும் எப்படியோ கிட்டாவின் மனதுக்குப் பிடித்துவிட்டது. தங்களிடம் ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும், சாஸ்திரிகளே! நம்ப அம்மாளிடத்திலும் அப்படியே ஒரு தெய்வீகம் இருக்கிறது."

     "ஓய் சுப்பய்யரே! பலே பேர்வழியாயிருக்கிறீரே! இப்படியெல்லாம் முகஸ்துதி செய்து என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று உத்தேசம்? அம்மாளிடம் ஏதாவது இன்ஷியூரன்ஸுக்கு அடி போட்டிருக்கிறீரோ?" என்று சாஸ்திரிகள் ஆரம்பித்ததும் சுப்பய்யர் பயந்து போனார்.

     பேச்சின் நடுவில் குறுக்கிட்டு, "தயவு செய்து மன்னிக்க வேண்டும், எனக்கு ஆபீஸுக்கு நேரமாகி விட்டது. இப்போது நாங்கள் போய் வருகிறோம்; இனிமேலேதான் அடிக்கடி சந்திக்க வேண்டியதாய் இருக்குமே?" என்று சொல்லிக் கொண்டே சுப்பய்யர் எழுந்ததும், கிட்டாவய்யரும் எழுந்தார்.

     அவர்களை வீட்டு வாசல் வரையில் கொண்டு போய் விடுவதற்காகச் சாஸ்திரிகளும் எழுந்தார்.

     அந்தச் சமயத்தில் காந்திக் குல்லா தரித்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் நாலு பேர் திடுதிடுவென்று வீட்டுக்கு உள்ளே நுழைந்து வந்தார்கள்.

     "யார் நீங்கள்?" என்று சாஸ்திரிகள் திடுக்கிட்டுக் கேட்டார்.

     "ஸார்! பீஹார் பூகம்ப நிதிக்காகப் பணம் வசூலிக்கிறோம். தங்களால் இயன்றதைக் கொடுக்க வேண்டும்" என்று அந்தத் தொண்டர்களிலே ஒருவர் கூறினார்.

     சாஸ்திரிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "பீஹாராவது பூகம்பமாவது? அதெல்லாம் இங்கு ஒன்றும் கொடுப்பதற்கில்லை!" என்று கண்டிப்பாகக் கூறினார்.

     "அப்படிக் கண்டிப்பாகச் சொல்லக் கூடாது! லட்சக்கணக்கான ஜனங்கள் வீடு இழந்து சொத்து இழந்து...."

     "உயிரையே இழந்து தவிக்கிறார்கள்! எல்லாம் தெரியும். அப்பா! என்னை நிரட்சரகுட்சி என்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ பூகம்பத்துக்கு மறுநாளே நான் பாபு ராஜேந்திர பிரஸாதுக்குத் தந்தி மணியார்டரில் என்னுடைய நன்கொடையை அனுப்பிவிட்டேன்! நீங்கள் போய் வேறு யாராவது நாலு பேரைப் பாருங்கள்! வீண் பொழுது போக்க வேண்டாம்!" என்றார் சாஸ்திரிகள்.

     "நாலு பேரைப் பார்ப்பதற்கு நீங்கள் சொல்ல வேண்டுமாக்கும்?" முணுமுணுத்துக் கொண்டே தொண்டர்கள் சென்றார்கள்.

     "பார்த்தீர்கள் அல்லவா; ஒரு நிமிஷம் கதவைத் திறந்து வைத்தால் போதும்! பூகம்பம், எரிமலை, புயற் காற்று, காங்கிரஸ் கான்பரன்ஸு என்று சொல்லிக் கொண்டு யாராவது யாசகம் கேட்க வந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கே உற்சவம், இங்கே பஜனை என்று கையில் சந்தாப் புத்தகத்துடன் வந்து விடுகிறார்கள். கொடுத்துக் கொடுத்து எனக்கும் சலித்துப் போய்விட்டது. மேலும் நான் என்ன பண்ணையாரா? ஜமீன்தாரா? நன்செய் நிலம் பொன்னாக விளைகிறதா! ஏதோ வெள்ளைக்கார கவர்ன்மெண்டின் புண்ணியத்திலே மாதம் பிறந்ததும் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புண்ணியவான்கள் சுயராஜ்யம் சம்பாதித்து விட்டால், நம்ப பென்ஷன் வாயிலே மண் விழுந்தாலும் விழுந்துவிடும்! கராச்சி காங்கிரஸிலே மாதம் ஐந்நூறு ரூபாய்க்கு மேலே யாருக்கும் சம்பளமே கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறார்களாம்! தெரியுமோ, இல்லையோ? அப்படியே நாம் இந்தத் தொண்டர்களிடம் ஏதாவது பணம் கொடுக்கிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள், கொடுத்த பணம் பீஹார் நிதிக்கு நேரே போய்ச் சேருகிறதென்று நிச்சயம் உண்டா? என்னைக் கேட்டால் பூகம்பம் போன்ற விஷயங்களில் மனிதன் தலையிடவே கூடாது என்று சொல்வேன். பகவானே பார்த்துச் செய்திருக்கிற காரியத்தில் சுண்டைக்காய் மனுஷன் தலையிட்டு என்ன செய்துவிட முடியும் ஸார்....?"

     இவ்விதம் பேசிக்கொண்டே பத்மலோசன சாஸ்திரிகள் கிட்டாவய்யரையும் சுப்பய்யரையும் அழைத்துக் கொண்டு வாசற்பக்கம் போனார். அவர்கள் வீட்டை விட்டு இறங்கிய உடனே கதவைச் சாத்திப் பலமாகத் தாளிட்டு விட்டுத் திரும்பினார்.