உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : பூகம்பம் 12. கராச்சியில் நடந்தது 'தேவி ஸதன'த்தின் பின்கட்டில் ஒரு புறத்தில் சமையல் அறையும் அதற்கு எதிர்ப்புறத்தில் காமாட்சி அம்மாளின் பூஜை அறையும் இரண்டுக்கும் மத்தியில் விசாலமான கூடமும் இருந்தன. கூடத்தின் நடுவில் ஊஞ்சல் போட்டிருந்தது. ராகவன் பின்கட்டுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து தாயாரின் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் கீழே தரையைத் தொட்டதும், லேசாக ஊஞ்சல் ஆடியது. ஊஞ்சலுடன் அவனுடைய உள்ளமும் ஊசலாடியது. கடலில் மூழ்கிச் சாகப் போகிறவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு நிமிஷத்தில் வெள்ளித்திரையில் தோன்றுவது போல் மனக்கண் முன்னால் தோன்றி மறையும் என்று சொல்வார்கள். அம்மாதிரி இச்சமயம் ராகவனுடைய மனக்கண் முன்னால் சிற்சில சம்பவங்கள் அதிக வேகமாகத் தோன்றின. காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் மின்னல் வெளிச்சத்தில் தோன்றி மறையும் காட்சிகளைப்போல் அச்சம்பவங்கள் தோன்றி மறைந்தன. புதுடில்லியில் பொக்கிஷ இலாகாவின் தலைமை உத்தியோகஸ்தரைப் பார்த்துவிட்டு ராகவன் ஊருக்குத் திரும்ப எண்ணியபோது கராச்சி வழியாகப் போவது என்று தீர்மானித்தான். கராச்சியில் அந்த வருஷம் காங்கிரஸ் மகாசபை கூடியது. அனேகமாக இந்திய இளைஞர்கள் எல்லாரையும் போல் ராகவன் கலாசாலை மாணாக்கனாயிருந்தபோது தேசீய சுதந்திரத்தில் ஆவேசம் கொண்டிருந்தவன், அதோடு சமூக சீர்த்திருத்தப் பற்றும் கொண்டிருந்தான். இந்திய தேசத்திலிருந்து சாதி - சமய வேற்றுமைகளையெல்லாம் ஒழித்தால்தான் இந்தியாவுக்குக் கதி மோட்சம் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகையால், புது டெல்லிக்குப் போன காரியம் ஆன பிறகு கராச்சிக்குச் சென்று காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பார்வையாளனாக ஆஜராகி நடவடிக்கைகளைக் கவனித்தான். அப்படிக் கவனித்ததினால் அவனுக்கு நம் தேசீயத் தலைவர்களைப் பற்றிய விஷயத்தில் மதிப்பு அதிகமாகவில்லை. "உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது? அமெரிக்க நாட்டில் போர்டு மோட்டார் தொழிற்சாலையில் நிமிஷத்துக்கு முன்னூறு மோட்டார்கள் உற்பத்தியாகின்றன! இப்பேர்ப்பட்ட இயந்திர யுகத்தில் இவர்கள் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே! மணிக்கு 300கஜம் நூல் நூற்பதாமே! கடவுளே! இப்படிப்பட்ட தலைவர்களால் இந்தியா எந்தக் காலத்தில் முன்னேறப்போகிறது?" என்று எண்ணி அலுப்படைந்தான். பிறகு இயந்திர யுகத்திற்கு அறிகுறியாக அந்த நாளில் கருதப்பட்ட ஆகாச விமானம் பார்க்கச் சென்றான். அப்போது கராச்சியில் புதிதாக ஆகாச விமானக் கூடம் கட்டியிருந்தார்கள். வாடகை விமானங்கள் வந்திருந்தன. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஆகாச விமானத்தில் ஐந்து நிமிஷ பிரயாணம் செய்யலாம். விமானம் ஆகாசத்தில் இரண்டாயிரம் அடி உயரம் விர்ரென்று ஏறிக் கராச்சி நகரைச் சுற்றி ஒரு தடவை வட்டமிட்டுவிட்டு மறுபடி கீழே வந்து இறங்கும். விமான கூடத்துக்குப் போனபோது ராகவன் விமானத்தில் ஏறுவது என்னும் நிச்சயத்தோடு போகவில்லை. ஏதோ பார்க்கலாம் என்று போனான். அங்கே போன பிறகு கட்டாயம் ஏறியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஆகாச விமானம் ஏறுவதையும் இறங்குவதையும் வேடிக்கை பார்ப்பதற்காக ஜனங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் ராகவனுக்குப் பக்கத்தில் மூன்று வடநாட்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிலே ஒரு ஸ்திரீ கொஞ்சம் வயதானவள். மற்ற இருவரும் இளம் பெண்கள். ஒருத்தி கட்டையாயும் குட்டையாயும் மாநிறமாயும் இருந்தாள். அவளை இலட்சணமானவள் என்று சொல்ல முடியாது. இன்னொரு பெண்....? ஆகா....? அவளை வர்ணிப்பது சாத்தியமில்லை. கார்த்திகை மாதத்துப் பூரண சந்திரனுடைய சந்தன நிறக் கிரணங்கள் ஒரு மந்திரவாதியினுடைய மந்திரத்தினால் பெண் உருக்கொண்டது போலத் தோன்றினாள். பனிக் காலத்துக் காலை நேரத்தில் புல் நுனியில் நிற்கும் முத்துப் பனித்துளிகள் காலைச் சூரிய கிரணங்களினால் ஒளி பெற்றுத் திகழ்வதுபோல் அவளுடைய கண் விழிகள் பிரகாசித்தன. பாலகோபாலன் அன்னை யசோதையிடம் வெண்ணெய் கேட்பதற்காகத் தவழ்ந்து செல்லும்போது அவனுடைய அறையில் கட்டியிருந்த கிண்கிணிகள் ஒலிப்பது போல் அந்தப் பெண்ணின் குரல் ஒலித்தது. அத்தகைய போதை தரும் இன்பக் குரலில் அப்பெண், "நீங்கள் மதராஸ்காரரா?" என்று ஆங்கில பாஷையில் கேட்ட போது, ராகவன் மிக ரஸித்த ஷெல்லி - கீட்ஸ் கவிதைகளைக் காட்டிலும் இனிமை வாய்ந்த கவிதையாக அந்த வார்த்தைகள் அவன் செவியில் தொனித்தன. தன்னைத்தான் அப்பெண் கேட்கிறாள் என்பதை ராகவன் உணர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. அதற்கு அவன் பதில் சொல்லியப் பிறகு, "நீங்கள் விமானத்தில் ஏறிப் பார்க்கப் போகிறீர்களா?" என்று அப்பெண் கேட்டாள். "ஆம்; அதற்காகத்தான் வந்திருக்கிறேன்!" என்று ராகவன் பளிச்சென்று பதில் சொல்லி, "நீங்களும் விமானம் ஏறுவதற்காக வந்தீர்களா?" என்று கேட்டான் "நீங்கள் முதலில் ஏறிப் போய்விட்டு வந்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண். அவள் பக்கத்திலே இருந்த இன்னொரு பெண் அவள் காதில் ஏதோ முணுமுணுக்கவே இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். அவ்விதம் கலந்தெழுந்த சிரிப்பில் ராகவனுடன் பேசிய பெண்ணின் சிரிப்பொலி மட்டும் தனிப்படப் பிரிந்து ராகவன் காதில் விழுந்து அவனைப் பரவசப்படுத்தியது. அந்த இரு பெண்களுக்குமிடையே தோற்றத்திலும், மேனி நிறத்திலும், குரலிலும் எத்தனை வித்தியாசம் என்று ராகவன் எண்ணி எண்ணி வியந்தான். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து இருவரில் அழகியின் பெயர் தாரிணி என்றும், இன்னொருத்தியின் பெயர் நிருபமா என்றும் தெரிந்து கொண்டான். மற்றும் அவர்கள் கராச்சி காங்கிரஸில் ஸ்திரீ தொண்டர் படையில் சேர்ந்து சேவை செய்வதற்கு வந்தவர்கள் என்றும், காங்கிரஸ் கூட்டம் முடிந்த பிறகு தன்னைப் போலவே அவர்களும் ஊர் சுற்றிப் பார்க்கிறார்கள் என்றும் அறிந்தான். ராகவன் ஆகாச விமானத்தில் ஏறி வானத்தில் வட்டமிட்ட போதெல்லாம் அவனுடைய நினைவு மட்டும் பூமியிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. சரியாகச் சொல்வதாயிருந்தால், கீழே பூமியில் நின்ற தாரிணியைச் சுற்றிச் சுற்றி அவன் மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். விமானம் இறங்கியதும் ராகவனுடைய கண்கள் அந்த மூன்று பெண்களும் நின்ற இடத்தைத் தேடின. ஒரு கணம் அவர்கள் அங்குக் காணப்படாதிருக்கவே அவனுக்கு உலகமே இருண்டுவிட்டதாகத் தோன்றியது. சற்றுத் தூரத்தில் இன்னொரு இடத்தில் அவர்கள் நிற்பதைப் பார்த்தவுடனே உலகில் மறுபடியும் சூரியன் பிரகாசித்தது. ராகவன் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றான். தாரிணி ஆவல் ததும்பிய முகத்துடனே அவனைப் பார்த்து, "எப்படி இருந்தது?" என்று கேட்டாள். ராகவன் தன்னுடைய மனது பூமியிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்னும் உண்மையைச் சொல்லாமல் வானப் பிரயாணத்தின் சுகங்களைப் பற்றி, 'அற்புதரசம்' தோன்ற வர்ணித்தான். "நீங்களும் ஏறப்போகிறீர்கள் அல்லவா?" என்று கேட்டான். தாரிணி ஏமாற்றம் தொனித்த குரலில், "இல்லை; இவர்கள் இருவரும் பயப்படுகிறார்கள்! என்னையும் போகக் கூடாது என்கிறார்கள்!" என்றாள். "பயப்பட வேண்டிய அவசியமே இல்லை; ஸீட்டுகள் அதிகம் உள்ள விமானமாயிருந்தால் நானே உங்களை அழைத்துப் போவேன். ஆனால் இந்த விமானத்தில் ஒரே ஸீட்டுதான் இருக்கிறது. விமானியைத் தவிர ஒருவர்தான் ஏறலாம்!" என்று ராகவனும் ஏமாற்றமான குரலில் கூறினான். "சரி இனிமேலாவது நாம் போகலாமல்லவா?" என்று மற்றொரு பெண் கேட்க, தாரிணி ராகவனைப் பார்த்து, "நாங்கள் போகவேண்டும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள். சற்றுத் தூரத்திலுள்ள டாக்ஸி காரில் அவர்கள் ஏறும்போது, தான் நின்ற திசையைத் தாரிணி பார்த்ததாக ராகவனுக்குப் பிரமை உண்டாயிற்று. பிரமை என்று ஏன் கருத வேண்டும்? உண்மையாகவே இருக்கலாமல்லவா? ஆகாச விமானம் ஏறிய அநுபவத்துக்குப் பிறகு ராகவன் கப்பல் பிரயாண அநுபவத்தையும் பெறுவதற்கு விரும்பினான். கராச்சி காங்கிரஸுக்கு வந்திருந்தவர்களிலே பலர் கடல் மார்க்கமாகப் பம்பாய்க்குச் சென்றார்கள். ராகவனும் ஸிந்தியா கம்பெனிக்குச் சொந்தமான கப்பல் ஒன்றிற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறினான். அந்தக் கப்பல் கடலோரமாக மட்டும் ஓட்டுவதற்குரிய சிறிய கப்பல். அதிக மூட்டை முடிச்சுக்கள் பெட்டி படுக்கைகள் உணவுக் கூடைகள் ஆகியவற்றுடன் கசகசவென்று ஜனங்கள் நெருங்கி நிறைந்திருந்தார்கள். அந்த வடக்கத்தி ஜனங்களின் அழுக்குத் துணிகளையும் ஆபாச வழக்கங்களையும் 'ஆஓ' என்ற கூச்சல்களையும் ராகவன் பார்த்துவிட்டு, 'கடவுளே! இதில் எப்படி முப்பத்தெட்டு மணி நேரம் பொழுது போக்குவது?' என்பதாக எரிச்சல் அடைந்தான். ஆனால் கப்பல், புறப்படும் சமயத்தில் அவசரமாகப் படகில் வந்து ஏணியில் ஏறிக் கப்பலில் இறங்கிய மூன்று ஸ்திரீகளைக் கண்டதும் ராகவனுடைய மனோபாவம் அடியோடு மாறிவிட்டது. அந்த ஆபாசமான அழுக்கு நிறைந்த பழைய ஓட்டைக் கப்பல் தட்சணமே கந்தர்வ பூமியாக மாறிவிட்டது. ராகவனைக் கப்பலில் பார்த்ததும் தாரிணிக்கும் ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டதென்று அவளுடைய முகபாவத்திலிருந்து தெரிய வந்தது. அந்த ஆச்சரியத்திலே சந்தோஷம் கலந்திருந்தது என்பது ராகவனுடைய பார்வைக்குத் தெரியாமல் போகவில்லை. ராகவன் வடநாட்டுக்கு யாத்திரை வந்தது அதுதான் முதல் தடவை. தாரிணியோ பம்பாய் வாசி. எனவே வடநாட்டைப் பற்றியும், வடநாட்டின் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் தாரிணியிடம் ராகவன் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. தாரிணியும் சென்னை மாகாணத்தைப் பற்றிப் பல விஷயங்கள் ராகவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாள். ஆகவே இருவருக்கும் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. ஆனால் பேசுவதற்கு விஷயங்கள் அவர்களுக்கு அவ்வளவு அவசியமாகத் தேவையில்லைதான்! அருகில் இருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமென்ற மனோ நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் கப்பலில் எல்லாப் பக்கங்களிலேயும் நெருங்கியிருந்த மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதிருக்கும் பொருட்டு அவர்கள் ஏதோ போலப் பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது. இத்தகைய சம்பாஷணைப் பாசாங்குகளின் போது தாரிணிக்குத் தமிழ்ப் பேசத் தெரியும் என்பதை அறிந்து ராகவன் அளவற்ற வியப்பும் களிப்பும் அடைந்தான். கப்பலில் தாரிணியையும் அவளுடைய தோழியையும் போல் இன்னும் சில தேச சேவிகைகளும் இருந்தார்கள். தாரிணியின் அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே அவள் பக்கத்தில் இருந்தாள் போலத் தோன்றிய நிருபமாவுக்குத் தேக சௌந்தரியம் இல்லாவிட்டாலும் இனிமையான குரல் இருந்தது. அவளுடைய தலைமையில் மற்ற தேச சேவிகைகளும் சேர்ந்து ஹிந்தி தேசிய கீதங்களைப் பாடினார்கள். அப்போது மிகப் பிரபலமாயிருந்த, "ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா!" என்ற தேசியக் கொடி கீதத்தைப் பாடினார்கள். பிரபல உருது கவியான ஸர் முகம்மது இக்பால் பாடிய, "ஸாரே ஜஹா(ன்ஸே) அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்னும் தேசிய கீதத்தையும் பாடினார்கள். இந்த கீதங்கள் எல்லாம் தெய்வ லோகத்தில் கந்தர்வ கன்னிகைகள் பாடும் கீதங்களாகவே ராகவனுக்குத் தோன்றின. இரண்டாவது கீதத்தின் பொருளைத் தாரிணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். முதல் அடியின் பொருள், "உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் நம்முடைய ஹிந்துஸ்தானம் சிறந்தது" என்று அறிந்ததும் "சந்தேகம் என்ன? உன்னைப் போன்ற பெண்கள் இந்த நாட்டில் பிறந்திருக்கும் போது உலகில் வேறு எந்தத் தேசம் இந்தியாவுக்கு இணையாக முடியும்?" என்று சொன்னான். அதைக் கேட்டுத் தாரிணி கன்னங்கள் குழியப் புன்னகை செய்த தோற்றம் ராகவன் மனக்கண் முன்னால் இன்றைக்கும் அழியா வர்ணத்தில் தீட்டிய அஜந்தா சித்திரத்தைப் போல் நின்றது. இவையெல்லாம் நடந்து இப்போது ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகின்றன. இதற்கிடையில் தாரிணிக்கும் ராகவனுக்கும் அடிக்கடி கடிதம் போய் வந்து கொண்டிருந்தது. அவை காளிதாசனும் கம்பரும் தாகூரும் பாரதியும் பெருமைப்படும்படியான கவிதை உணர்ச்சி ததும்பிய கடிதங்கள். கடிதங்கள் எழுதுவதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. ராகவன் ஒருமுறை பம்பாய்க்குப் போயிருந்தான். தாரிணி அவனை எலிபெண்டாத் தீவுக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்குள்ள குகைச் சிற்ப அற்புதங்களையெல்லாம் காட்டினாள். பிறகு தாரிணி டில்லிக்குப் போனாள். புது டில்லியில் உத்தியோகம் பார்த்த ராகவன் டில்லி மாநகரின் பழைய கோட்டை கொத்தளங்கள், பிரம்மாண்டமான மசூதிகள், மொகலாய மன்னர்களின் ஒப்பற்ற அழகு வாய்ந்த பளிங்குக்கல் அரண்மனைகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாரிணியை அழைத்துப் போய்க் காட்டினான். அப்போதெல்லாம் அவர்கள் கேவலம் இந்த மண்ணுலகின் கடினமான கட்டாந்தரையில் காலால் நடக்கவில்லை. கற்பனை உலகத்தில் ஆனந்த சாகரத்தின் அலைகளின் மேலாக மிதந்து கொண்டே சென்றார்கள். அப்புறம் ஆக்ராவில் உள்ள உலக அற்புதங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குப் போவது பற்றி இருவரும் யோசித்தார்கள். அதைச் சில காலம் தள்ளிப் போடலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். யார் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்ற பயத்துக்கு இடமில்லாமல் இருவரும் சதிபதிகளாய்க் கைக்கோத்துகொண்டு போய் ஷாஜஹானின் ஒப்பற்ற காதற் கனவைப் பார்த்துவர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். சுருங்கச் சொன்னால், இந்த மூன்று வருஷ காலமும் ராகவனுடைய வாழ்க்கையில் கிருத யுகமாக இருந்தது. ஒருபுறம் அவன் உத்யோக ஏணியில் படிப்படியாக ஏறிக்கொண்டிருந்தான். அவனுடைய இலாகாத் தலைவரான பெரிய துரை அவனைத் தம்முடன் சீமைக்கு அழைத்து போவதாகச் சொல்லியிருந்தார். மற்றொரு புறத்தில் ராகவன் காதல் மயமான கற்பனைக் கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவன் எந்தப் பக்கம் பார்த்தாலும் தங்க ரேகைகள் படர்ந்திருக்கக் கண்டான். இடைவிடாமல் அவனுடைய செவிகளில் தேவலோகத்து மதுர வீணாகானம் பாய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தான். பழைய டில்லி நகரத்தின் குப்பையும் கூளமும் துர்நாற்றமும் நிறைந்த குறுகிய வீதிகளில் அவன் நடந்தபோது கூட மொகலாய மன்னர்கள் உபயோகித்த ஒப்பற்ற அத்தரின் வாசனையையும் அந்த மன்னர்களின் அந்தப்புர நாரீமணிகள் குளித்த பன்னீரின் நறுமணத்தையும் கற்பனை உணர்ச்சியால் முகர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆகா! அந்த இன்பத்துக்கெல்லாம் இப்போது முடிவு வந்து விட்டதே? எப்படி வந்தது? எதனால் வந்தது? நம்பவே முடியவில்லையே? வந்திருந்தவர்கள் விடை பெற்றுச் சென்ற பிறகு காமாட்சி அம்மாள் பின் கட்டுக்கு வந்தாள். கவலை தோய்ந்த முகத்துடன் ராகவன் ஊஞ்சலில் உட்கார்ந்து இலேசாக ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஊஞ்சலுக்கு எதிரே சுவர் ஓரமாகக் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். தன்னுடைய வருகையை எதிர்பார்த்துத் தன் மகன் அங்கே காத்துக் கொண்டிருக்கிறான் என்பது காமாட்சி அம்மாளின் உள் மனதுக்கு முன்னமே தெரிந்திருந்தது. |