முதல் பாகம் : பூகம்பம்

13. வானம் இடிந்தது

     ராகவன் பேசத் தொடங்குவதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. பேசத் தொடங்கிய போதும் அவன் கேட்க விரும்பியதை உடனே கேட்க முடியவில்லை, பேச்சை வேறுவிதமாக ஆரம்பித்தான்.

     "அம்மா! அங்கே யார்? இன்னும் யாராவது வந்திருக்கிறார்களா? புதிய குரல் ஏதோ கேட்டதே?" என்றான்.

     "ஆமாண்டா, அப்பா! பீஹாரிலே பூகம்பம் என்று சொல்லி உண்டிப் பெட்டியுடனே நாலு காந்தி குல்லாக்காரர்கள் வந்தார்கள். உன்னுடைய அப்பாவின் சமாசாரம் தெரியாதா? ஒன்றும் கிடையாது என்று சொல்லி விரட்டி அடித்து விட்டார்!"

     இதைக் கேட்டதும் ராகவனுடைய முகம் சுருங்கியதைக் காமாட்சி அம்மாள் கவனித்தாள். ஆனால், அதன் காரணத்தை அவள் நன்கு உணர முடியவில்லை.

     சற்று நேரம் ராகவன் முகத்தைத் தொங்கப் போட்ட வண்ணம் இருந்தான். காமாட்சி அம்மாளும் அவனிடம் பேச்சுக் கொடுக்கப் பயந்து கொண்டு சும்மா இருந்தாள். ராகவன் இன்னும் ஏதோ முக்கியமான விஷயம் தன்னைக் கேட்கப் போகிறான் என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக்குத் தெரிந்திருந்தது.

     திடீரென்று அவன் தலையைத் தூக்கித் தாயாரை ஏறிட்டுப் பார்த்து "அம்மா! அப்பாவும் நீயுமாகச் சேர்ந்து என் வாழ்க்கையைக் கெடுத்துவிட உத்தேசித்திருக்கிறீர்களா? நான் சந்தோஷமாயிருப்பதில் உங்கள் இருவருக்கும் இஷ்டமில்லையா? அப்பாவின் சுயநலம் உன்னையும் பிடித்துக் கொண்டு விட்டதா?" என்று ஆத்திரம் நிறைந்த குரலில் கேட்டான்.

     இந்த மாதிரி கேள்வியைத்தான் காமாட்சி அம்மாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால், அவள் கொஞ்சமும் பரபரப்பு அடையாமல் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

     "ராகவா! உன் அப்பா சமாசாரத்தை என்னிடம் கேட்காதே! என்னைப் பொறுத்த வரையில் கேள், சொல்கிறேன். உன்னைப் பெற்ற நாளிலிருந்து இன்று வரையில் இந்த இருபத்து நாலு வருஷமாக, உன்னுடைய சந்தோஷத்தைத் தவிர எனக்கு வேறு எண்ணமே கிடையாது! உன்னுடைய சந்தோஷத்துக்காக என்னை என்ன செய்ய வேண்டும் என்கிறாயோ, அதைச் சொல்! கிணற்றில் விழச் சொன்னால் விழுந்து விடுகிறேன்; விஷத்தைக் குடிக்கச் சொல்கிறாயா, குடித்து விடுகிறேன். ஆனால், உன்னுடைய சந்தோஷத்தைக் காட்டிலும் என்னுடைய சுய நன்மையைப் பெரியதாகக் கருதுகிறேன் என்று மட்டும் சொல்லாதேடா அப்பா!" என்று கூறிவிட்டுக் கண்களில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.

     மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராகவனைப் பார்த்துக் காமாட்சி அம்மாள் மறுபடியும், "எதனால் அப்படிக் கேட்டாய், ராகவா? என்ன காரணத்தினால் என்னைச் சுயநலக்காரி என்று சொல்கிறாய்?" என்றாள்.

     "எனக்குப் பிடிக்காத பெண்ணை என் தலையில் கட்டிவிடப் பார்க்கிறாயே, அதற்குப் பெயர் என்ன....?" என்று ராகவன் பொருமினான்.

     "ராகவா! நீ எவ்வளவோ தெரிந்தவன்; படிப்பிலே இணையில்லையென்று இந்திய தேசமெங்கும் பேர் வாங்கியவன். அப்படியிருந்தும் என் பேரில் தவறான பழியைப் போடுகிறாயே? உனக்குப் பிடிக்காத பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளும்படி நான் சொல்வேனா? எப்போதாவது சொன்னதுண்டா? உன் அப்பா எது வேணுமானாலும் சொல்வார். வீடு கட்டிய கடன் பாக்கியை அடைப்பதற்கு உனக்கு வரும் வரதட்சணையை அவர் நம்பியிருக்கிறார். அவர் பணத்தாசை பிடித்தவர். ஆனால் நான் எப்போதாவது பணத்தைப் பெரிதாய் நினைத்ததுண்டா? ராகவா வாசலில் வருகிற பிச்சைக்காரப் பெண்ணை உனக்குப் பிடித்திருந்து அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று நீ சொன்னால், அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். செல்வச் சீமானுடைய பெண்ணைக் காட்டிலும் அவளை அதிக அன்போடு வரவேற்பேன். உனக்குப் பிடிக்காத பெண்ணை ஒரு நாளும் கலியாணம் செய்து கொள்ளும்படி சொல்ல மாட்டேன். உன் அப்பா சொல்கிறார் என்று நீ சம்மதித்தால்கூட நான் சம்மதிக்க மாட்டேன்!" என்று காமாட்சி அம்மாள் கூறியபோது அவளுடைய கண்களிலிருந்து மீண்டும் கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

     "இந்த மாதிரி நீ கண்ணீர்விட ஆரம்பித்தால் நான் உன்னோட பேசவே தயாராயில்லை. எங்கேயாவது போய்த் தொலைகிறேன் சமுத்திரத்திலே விழுந்து சாகிறேன். இல்லாவிட்டால் ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்கிறேன்...."

     "வேண்டாமடா ராகவா! வேண்டாம்! இப்படியெல்லாம் சொல்லாதே! நான் இனிமேல் கண்ணீர் விடவில்லை. நீ கேட்க வேண்டியதைக் கேள்; செய்ய வேண்டியதைச் செய்!" என்று கூறிக் காமாட்சி அம்மாள் மீண்டும் நன்றாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

     "நான் சந்தோஷமாயிருப்பதுதான் உன்னுடைய விருப்பம் என்றால், தாரிணியை ஏன் அப்படி விரட்டி அடித்தாய்?" என்று ராகவன் மிக்க எரிச்சலுடன் கேட்டான்.

     "ஐயையோ! இதென்ன வீண் பழி! நானா அந்தப் பெண்ணை விரட்டி அடித்தேன்? உண்மையாகச் சொல், ராகவா! நான் விரட்டி அடித்தால் அவள் போய்விடக் கூடிய பெண்ணா....?"

     "அவள் ஏன் அவ்வளவு அவசரமாகப் போகவேண்டும்? நான் வெளியே போய்த் திரும்புவதற்குள்ளே அவள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பறந்தோடிப் பம்பாய் மெயில் ஏறிவிட்டாளே? அப்படி அவள் மிரண்டு ஓடும்படி ஏதோ நீ சொல்லித்தானே இருக்க வேண்டும்?"

     "ராகவா! ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாகச் சொல்லுகிறேன், அவளை ஒரு வார்த்தைகூட நான் தப்பாகச் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவள் நீ வருகிற வரையில் இருந்து உன்னிடம் புகார் சொல்லியிருக்க மாட்டாளா? அவள் என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? பயந்தவளா? உன் பேரில் அவளுக்கு உண்மையில் அன்பு இருந்தால் அப்படி நான் சொன்னதற்காகப் போய் விடுவாளா? யோசித்துப் பார்?"

     ராகவன் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்த பிறகு, "பின்னே என்னதான் இங்கே உண்மையில் நடந்தது, நான் இல்லாதபோது; நீ என்ன சொன்னாய்? அவள் என்ன சொன்னாள்?"

     "ஐயையோ! அவள் சொன்னதையெல்லாம் சொல்வதற்கு என் நாக்குச் கூசும். அவள் என்னவோ நினைத்துக்கொண்டு வந்தாளாம். வந்து பார்த்த பின் ரொம்ப ஏமாற்றமாய்ப் போய் விட்டதாம். நானும் உன் அப்பாவும் ரொம்பக் கர்நாடகமாம்? எங்களைப் பற்றி அவள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் உன்னைச் சுத்த அசடு என்று சொன்னாள், ராகவா! முதல் கிளாசிலிருந்து எம்.ஏ. வரை பரீட்சைக்குப் பரீட்சை மெடலும் பரிசும் வாங்கிய உன்னை 'அசடு' என்று சொன்னாள் ராகவா! அதுதான் எனக்குப் பொறுக்கவில்லை. புடவை கட்டிக் கொண்ட பெண் யாரைப் பார்த்தாலும் நீ பின்னோடு பல்லைக் காட்டிக் கொண்டு போகிறாயாம்! உனக்கு நல்ல புத்தி சொல்லி அடக்கி வைக்கும்படி சொல்லிவிட்டுப் போவதற்காக மதராஸுக்கு வந்தாளாம். இன்னும் என்னவெல்லாமோ கர்ண கடூரமாகச் சொன்னாள். என்னால் பொறுக்கவே முடியவில்லை!" என்று சொல்லிக் கண்களைப் புடவைத் தலைப்பினால் மூடிக் கொண்டு காமாட்சி அம்மாள் விம்மினாள்.

     ராகவனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் கோபம் அம்மாவின் பேரில் வந்ததா என்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை.

     தாரிணியின் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு விஷயம் ராகவனுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது.

     "அழுகையை நிறுத்து அம்மா! இன்னும் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்! தாரிணியின் கால்களை எதற்காகவாவது நீ தொட்டதுண்டா? தொட்டு அவளை ஏதாவது கேட்டுக் கொண்டாயா?" என்றான் ராகவன்.

     "ஓகோ! அதை அவள் உனக்கு எழுதியிருக்கிறாளா? என்னமெல்லாம் பொய், புனை சுருட்டுச் சேர்த்து எழுதியிருக்கிறாளோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடந்ததை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். அவள் உன்னைப் பற்றி அலட்சியமாய் பேசிய பிறகு எனக்குக் கொஞ்சம் பயமாய்ப் போய்விட்டது. அதனால் நான் அவளிடம், "பெண்ணே! என் பிள்ளைக்கு இந்தப் பக்கத்தில் ஆயிரம் பேர் இருபதினாயிரம், முப்பதினாயிரம் பணத்துடன் பெண்ணைக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், ராகவனுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது, எப்படியாவது அவன் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்பதுதான் என் பிரார்த்தனை. சாதி, குலம் நடவடிக்கையெல்லாம் வித்தியாசமாயிருந்தாலும் ஏதோ எங்கள் பாஷையாவது நீ பேசுகிறாயே, அதுவரையில் சந்தோஷந்தான். ஒரே ஒரு பிரார்த்தனை உனக்குச் செய்து கொள்கிறேன். என்னையும் என் குழந்தையையும் பிரித்து விடாதே! அவன் ஒருவனுக்காகத்தான் இந்த உயிரை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் நன்றாயிருக்க வேண்டுமென்றுதான் அல்லும் பகலும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன். அவனும் நீயும் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் என்னையும் உங்களோடு அழைத்துக் கொண்டு போ! உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்து கொண்டிருப்பதுதான் எனக்கு இந்த வாழ்க்கையில் இனிமேல் சந்தோஷம்! இந்த ஒரு வரத்தை எனக்குக் கொடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!' என்று சொல்லி அவளுடைய காலைத் தொட்டேன். உடனே, 'டாம்! நான்ஸென்ஸ்!' என்றெல்லாம் உன் அப்பா திட்டுவது போல் என்னைத் திட்டினாள். அதோடு, 'உங்களுக்கு வயதாச்சே புத்தி எங்கே போச்சு! நானோ சாதி, மதம் ஒன்றும் இல்லாதவள். கர்நாடக வைதிகமாகிய உங்களுக்கும் எனக்கும் எப்படிச் சரிக்கட்டி வரும்? உங்கள் பிள்ளைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லித் திருத்துங்கள்!' என்று சொல்லிவிட்டு விடு விடு என்று போய்விட்டாள். அப்பா, ராகவா! நான் சொல்வதை நம்புவது உனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும். அவள் ஏன் அப்படி அவசரப்பட்டுக்கொண்டு போனாள் என்று எனக்கே புரியவில்லை. அவள் இங்கே இருந்தபோது யாரோ ஒருவன் வந்து கதவைத் தட்டி, 'தாரிணி அம்மாள் இங்கே இருக்கிறாளா?' என்று கேட்டான். இவள் அவசரமாய் எழுந்து போய் ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். கடிதத்தைப் படித்ததும் அவள் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 'நான் போய் வருகிறேன். உங்கள் பிள்ளையைக் கெடுத்துவிடுவேன் என்று பயப்படவேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் நடந்து வாசலில் நின்ற காரில் ஏறிக்கொண்டு போய்விட்டாள். போகும் அவசரத்தில் அவளுக்கு வந்த கடிதத்தைக்கூடக் கீழே போட்டுவிட்டுப் போய்விட்டாள். அதை நான் எடுத்து வைத்திருக்கிறேன்; நீ வேணுமானாலும் அதைப் பார்!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி அம்மாள் எழுந்து போய் அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். ராகவன் அந்தக் கடிதத்தை வாங்கிக் கைகள் நடு நடுங்க நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளப் படித்துப் பார்த்தான். அதில் சுருக்கமாக நாலைந்து வரிகள்தான் எழுதியிருந்தன.

     "என் கண்ணே! என்னுடைய காரியம் நான் நினைத்ததைக் காட்டிலும் சீக்கிரம் ஆகிவிட்டது. இன்று மாலை மெயிலில் அவசியம் பம்பாய் புறப்படவேண்டும். உடனே ஹோட்டலுக்கு வர முடியாவிட்டால், ரயில்வேஸ்டேஷனில் வந்து சேர்ந்து கொள். உனக்கும் டிக்கட் வாங்கி விடுகிறேன். மிஸ்டர் ராகவன் காதல் தமாஷ் எப்படி இருக்கிறது? ராகவனுக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது போதும். இன்னும் அவனுக்குத் தண்டம் வைக்காதே; ஏதாவது விபரீதத்தில் முடியப் போகிறது!"

     இதைப் படித்து வருகையில் ராகவனுடைய கண்கள் சிவந்து நெருப்புப் பொறி பறந்தது. அவனுடைய நெஞ்சில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கியது; கொல்லன் துருத்தியில் வரும் காற்றைப்போல் அவனுடைய மூச்சு கொதித்துக் கொண்டு வந்தது.

     கடிதத்தைப் படித்து முடித்ததும் ஆகாசம், பூமி, திக்குத் திகாந்தம் எல்லாம் தாறுமாறாக வெடித்தன. பட்டப் பகலில் இருள் கவிந்தது. வானத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் பொலபொலவென்று உதிர்ந்து ராகவன் தலைமீது விழுந்தன.

     இத்தகைய உணர்ச்சிகளுக்கெல்லாம் உள்ளான ராகவன் சற்று நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டுத் திடீரென்று எழுந்தான். அம்மாவின் முன்னிலையில் தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

     "என்னைப்போல் மூடன் யாரும் இல்லை. தாரிணி சொன்னது சரிதான். அவளுடைய காலைப் பிடிக்கும்படியான நிலையில் உன்னை வைத்தேன் அல்லவா? இந்த க்ஷணம் முதல் நீதான் எனக்குத் தெய்வம். நீ என்ன சொல்லுகிறாயோ அதைக் கேட்கிறேன். நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்கிறாயோ, அவளையே கலியாணம் செய்து கொள்கிறேன்!" என்றான்.

     இவ்விதம் சொல்லிவிட்டுக் கையில் உள்ள கடிதத்துடன் விடு விடு என்று நடந்து மச்சுக்குப் போனான். அங்கே மேஜை மேலே இருந்த தாரிணியின் கடிதத்தையும் தாரிணிக்குத் தான் எழுத ஆரம்பித்திருந்த கடிதத்தையும் சேர்த்துச் சுக்குச் சுக்காகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டான்.

     காமாட்சி அம்மாள் பூஜை அறைக்குள்ளே சென்று ஸ்ரீ ராம பட்டாபிஷேக படத்துக்கு முன்னால் பயபக்தியுடன் நமஸ்காரம் செய்து எழுந்தாள். இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டாள்.