முதல் பாகம் : பூகம்பம்

15. ராஜத்தின் ரகசியம்

     சீதா அப்பால் சென்றதும், ராஜம், "அண்ணா! பிற்பாடு எப்படி இருக்குமோ என்னமோ? அவகாசம் கிடைக்குமோ? கிடைக்காதோ? நான் சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிடவேண்டும். அதற்கு முன்னால் ஒரு காரியம் இருக்கிறது! பெட்டி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா? அதைக் கொஞ்சம் கொண்டு வா!" என்றாள். அவளுடைய பரபரப்பின் காரணத்தைச் சிறிதும் அறியாத கிட்டாவய்யர், "பெட்டி கொண்டு வந்திருக்கிறேன். ராஜம்! தாழ்வாரத்தில் இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன இப்போது அவசரம்? மெதுவாய்க் கொண்டு வந்தால் போச்சு. பெட்டி நல்ல கனம்; அதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியாது!"என்றார்.

     "அதற்காகச் சொல்லவில்லை, அண்ணா! வேறு காரணம் இருக்கிறது. பெட்டியை உள்ளே கொண்டு வா! அப்படியே வாசலில் எட்டிப் பார்த்து இவர் டாக்டரோடு காரில் ஏறிக் கொள்கிறாரா என்று கவனித்து வா! அநேகமாக மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போவார்!" என்றாள் ராஜம்.

     "நீ எதற்காக இவ்வளவு அதிகமாய்ப் பேசவேண்டும்? நான் அடுத்த ரயிலுக்குப் போகிறதாக உத்தேசமில்லை! மெதுவாகப் பேசிக் கொள்ளலாமே!" என்று கிட்டாவய்யர் சொல்லுவதற்குள்ளே, ராஜம்மாள், "அண்ணா! உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், கொஞ்சம் நான் சொல்லுகிறபடி செய்! ரொம்ப முக்கியமான விஷயம், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் பிறகு என் மனது நிம்மதியடையும். சொல்லி முடிகிறவரையில் பெரிய பாரமாயிருக்கும். சீக்கிரமே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா!" என்றாள். இதற்குமேல் அவளோடு விவகாரம் செய்வதில் பயனில்லையென்று கிட்டாவய்யர் அறைக்கு வெளியே சென்று தாழ்வாரத்தின் ஓரமாக எட்டிப் பார்த்தார். ராஜம் எதிர்பார்த்தபடியே துரைசாமி காரில் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டார். தாழ்வாரத்தில் வைத்திருந்த பெட்டியை அறைக்குள் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.

     "அண்ணா! கொஞ்சம் கதவைச் சாத்து! சீக்கிரம் பெட்டியை இங்கே என் பக்கத்தில் கொண்டு வா!" என்றாள்.

     கிட்டாவய்யர் அப்படியே செய்தார்; செய்துவிட்டு, ராஜம்மாள் செய்த காரியத்தை வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தார்.

     ராஜம் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தலைமாட்டில் வைத்திருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை அவசரமாக எடுத்தாள். தலையணை உறையைக் கழற்றிவிட்டு ஒரு பக்கத்தில் போட்டிருந்த தையலை அவசர அவசரமாகப் பிரித்தாள். தலையணைப் பஞ்சுக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள். முதலில் இரண்டு கத்தை ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தன. பிறகு மிக அழகிய வேலைப்பாடு அமைந்த ரத்தின மாலை ஒன்று வெளிவந்தது. மாலையில் தொங்கிய பதக்கத்தில் வைரங்கள் ஜொலித்தன. வைரங்களுக்கு மத்தியில் பொன்னிறக் கோமேதகம் ஒன்று கண்ணைக் கவர்ந்தது.

     "அண்ணா! அண்ணா! இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டையும் இந்த ரத்தின மாலையையும் உன் பெட்டிக்குள்ளே பத்திரமாக வை! சீக்கிரம் வை!" என்றாள்.

     கிட்டாவய்யர் தயங்கினார், அவர் உள்ளத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்கள் உதித்தன. "ராஜம்! இது என்ன?" என்றார்.

     "இது ஒன்றையும் நான் திருடிவிடவில்லை, அண்ணா! முதலில் உன் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வை! பிறகு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்; சொல்லித்தான் ஆகவேண்டும்!"

     கிட்டாவய்யர் ஏதோ விசித்திரமான கனவு காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின மாலையையும் எடுத்துப் பெட்டிக்குள்ளே வைத்தார். பெட்டியைப் பூட்டிவிட்டுத் தலை நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தார்.

     ராஜம் மறுபடியும் ஒரு தடவை புன்னகை புரிய முயன்றாள். அந்த முயற்சியின் பலன் கிட்டாவய்யருக்கு விபரீதமாகப் பட்டது. "ராஜம்! உடம்புக்கு ஏதாவது செய்கிறதா? மறுபடியும் டாக்டரைக் கூப்பிடச் சொல்லட்டுமா?" என்று ஆதுரமாய்க் கேட்டார்.

     "வேண்டாம்! வேண்டாம்! டாக்டர் வந்து என்னத்தைச் செய்து விடுவார், பாவம்! அவர்தான் உன்னிடம் சொல்லி விட்டாரே? இனிமேல் மனோ தைரியந்தான் எனக்கு மருந்து! கதவைத் திறந்துவிட்டு வா; எல்லாம் சொல்லுகிறேன்!" என்று ராஜம் கூறிப் பழையபடி தலையணையில் சாய்ந்து கொண்டாள். இத்தனை நேரம் உட்கார்ந்தபடி பேசிய காரணத்தினால் அவளுக்கு மூச்சு வாங்கிற்று.

     கிட்டாவய்யர் படுக்கையின் அருகில் வந்து உட்கார்ந்து கவலையுடன் அவளைப் பார்த்தார்.

     "அண்ணா! நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லாமல் சாகமாட்டேன். சொல்லாமல் செத்தால், என் நெஞ்சு வேகாது!...."

     "ராஜம்! இப்படியெல்லாம் பேசாமல் இருக்க மாட்டாயா? நீ சும்மா இருந்தாலே போதும்! நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை!" என்றார் கிட்டாவய்யர்.

     ராஜம் சற்று நேரம் சும்மா இருந்தாள். மூச்சு வாங்கியது நின்றது. சிறிது களைப்பு நீங்கியது.

     "நீ ஒன்றும் கேட்க மாட்டாய்! ஆனால் நான் சொல்லித் தீர வேண்டும். இப்போது கொடுத்தேனே, இந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் சீதாவின் கலியாணத்திற்காகக் கொடுத்திருக்கிறேன். ரத்தின மாலையும் கலியாணத்தின்போது அவளுக்குப் போடுவதற்காகத்தான். அண்ணா! நீயே சொன்னாய், - இருபது வருஷமாக உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லையென்று. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேண்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப் பக்கத்திலேயே நல்ல வரனாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். ஆகட்டும் என்று வாயைத் திறந்து சொல்லு. சொன்னால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். டாக்டர் சொன்னது போல் ஒரு வேளை உடம்பு குணமானாலும் ஆகும்!" என்றாள்.

     "ராஜம்! இப்படி நீ என்னைக் கேட்க வேண்டுமா? சீதாவை அப்படி நிராதரவாய் விட்டுவிடுவேனா? லலிதாவைப் போல் சீதாவும் என்னுடைய பெண் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் நம்ம பக்கத்திலேயே வரன் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறேன். நீயும்கூட இருந்து பார்த்துச் சந்தோஷப்படப் போகிறாய். ஆனால், சீதாவின் கலியாணத்துக்காக நீ உன் அகத்துக்காரருக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்துக் கொடுக்க வேண்டுமா? கிராமாந்தரத்து ஸ்திரீகள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டுச் சாமான்களை விற்றும் செட்டுப் பிடித்தும் நாட்டுப்புறத்து ஸ்திரீகள் பணம் சேர்த்து வைப்பதுண்டு. அந்த மாதிரி நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மனுஷருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார்? உன்னைப்பற்றி என்ன என்று எண்ணுவார்? என்னைப்பற்றித் தான் என்ன நினைப்பார். எனக்குப் பிடிக்கவே இல்லை!"

     "கொஞ்சம் இரு அண்ணா! நீ பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகாதே! அப்படியெல்லாம் நான் தப்புக் காரியம் பண்ணமாட்டேன். அவருடைய பணத்திலிருந்து காலணா நான் எடுத்தது கிடையாது. நம்ம வீட்டில் நீங்கள் எனக்குச் செய்து போட்ட நகைகளையும் ஆரம்பத்தில் இவர் எனக்குப் பண்ணிப் போட்ட நகைகளையும் விற்று அவருக்குக் கஷ்டம் வந்தபோது கொடுத்திருக்கிறேன். வீட்டுச் செலவுப் பணத்திலிருந்து எப்படிப் பணம் மிச்சம் பிடிக்க முடியும்? இந்தப் பம்பாய் பட்டணத்தில் குடித்தனம் பண்ணிப் பார்த்தால் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். இந்தப் பணமும் ரத்தின மாலையும் சீதாவின் கலியாணத்துக்கு என்றே தெய்வத்தின் கிருபையால் கிடைத்தவை. கேட்டால் உனக்குக் கதை மாதிரி இருக்கும். நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து எனக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்றுதான் உனக்குத் தெரியுமே! தமிழிலே வெளியான அவ்வளவு கதைப் புத்தகங்களும் நான் படித்திருக்கிறேன். ஹிந்தி பாஷையிலும் அநேக கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாளும் இந்த மூன்று அறையிலேயே அடைந்து கிடக்கும் நான் வேறு என்னத்தைதான் செய்வது? எப்படிப் பொழுது போக்குவது? நான் படித்திருக்கும் ஆயிரம் கதைகளில் நடந்த அதிசயங்களைக் காட்டிலும் அதிசயமான சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் உண்மையாகவே நடந்தது. அதை உனக்குச் சொல்லப் போகிறேன். வேறு யாருக்கும் இது தெரியாது. சீதாவுக்குக் கூடத் தெரியாது...."

     இந்தச் சமயத்தில் கையில் காப்பியுடன் வந்தாள் சீதா, அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வரலாமோ, கூடாதோ என்று அவள் தயங்கியதாகக் காணப்பட்டது.

     "வா! அம்மா!" என்று தாயார் ஈனக் குரலில் கூறியதும் தைரியமடைந்து உள்ளே வந்தாள்.

     கிட்டாவய்யர் அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டு, "நீ கொஞ்சம் சாப்பிடுகிறாயா?" என்று ராஜத்தைப் பார்த்துக் கேட்டார்.

     "கொஞ்சம் கொடு! இத்தனை நாளும் நான் உயிரை வைத்துக் கொண்டிருப்பது டாக்டர் கொடுத்த மருந்தினால் அல்ல; இந்தக் காப்பியினாலேதான்!" என்றாள் ராஜம்.

     பின்னர் சீதாவைப் பார்த்து, "குழந்தாய்! வாசலில் அப்பா வந்துவிட்டாரா என்று பார்! ஒரு வேளை சாப்பிடக்கூட மருந்து இல்லை, அப்பா மருந்து வாங்கிக்கொண்டு வந்த உடனே ஓடி வந்து சொல்லு!" என்றாள். அந்தக் குறிப்பைச் சீதா அறிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறி மச்சுப்படிகளின் வழியாகக் கீழே சென்றாள்.

     ராஜம் கிட்டாவய்யரைப் பார்த்து, "அண்ணா! இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை இவரிடம், அதாவது சீதாவின் அப்பாவிடம், நீ ஒருநாளும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொல்லக்கூடாது; வீட்டிலே மன்னியிடம் கூடச் சொல்லப்படாது. சொல்லுவதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொடு; வேண்டாம், சத்தியம் வேண்டாம். நீ சொன்ன சொல்லை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். யாரிடமும் சொல்லாதிருப்பாயல்லவா?" என்று சொல்லி நிறுத்தினாள்.

     "சொல்லவில்லை! சொல்லவில்லை. நீயே என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் நல்லது. பேசினால் உனக்கு இரைக்கிறது! இப்படி உனக்கு தொந்தரவு கொடுப்பதற்குத்தானா நான் பம்பாய்க்கு வந்தேன்?"

     "எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை; கேள்!" என்றாள் இராஜம்.

     "எனக்கு இந்தத் தடவை உடம்புக்கு வந்து இருபது நாளாயிற்று, நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் படுத்துக்கொண்ட அன்றைக்கு வெள்ளிக்கிழமை, சாயங்காலம் அம்பிகையின் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணினேன். சியாமளா தண்டகம் ஸ்தோத்திரம் சொன்னேன். 'அம்மா! தாயே பராசக்தி! நீதான் என் குழந்தை சீதாவைக் காப்பாற்ற வேண்டும். நல்ல இடத்தில் குழந்தைக்குக் கலியாணம் ஆகக் கிருபை செய்யவேண்டும்' என்று வேண்டிக் கொண்டேன். உடம்பு ஏதோ மாதிரி இருந்தது; படபடவென்று வந்தது. தலை சுழலுவது போலத் தோன்றியது. உடனே இந்த அறைக்கு வந்து இதே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சீதா அவளுடைய சிநேகிதியைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்தாள். இவர் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. உனக்குப் போன தடவையே சொல்லியிருக்கிறேனே! சில நாளைக்கு இவர் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்; சில நாளைக்கு வரவே மாட்டார். இன்றைக்கு வருகிறாரோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணைச் சுற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. அது தூக்கமா அல்லது மயக்கமா என்று எனக்குத் தெரியாது. கண்கள் மூடிக் கொண்டன. அப்புறம் கொஞ்ச நேரம் ஒன்றுமே தெரியவில்லை.

     "இப்படி ஒரு மணிநேரம் போயிருக்க வேண்டும் என்று பிற்பாடு கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மயக்கம் தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது வெறுமனே சாத்தியிருந்த என் அறைக் கதவு திறந்தது. அந்தச் சத்தம் கேட்டுத்தான் என் மயக்கம் கலைந்திருக்க வேண்டும்.

     "கதவைத் திறப்பது சீதாவா அல்லது சீதாவின் அப்பாவா என்று எண்ணினேன். அதற்குள் கதவு நன்றாய்த் திறந்தது. சீதாவும் இல்லை, அவள் அப்பாவும் இல்லையென்று தெரிந்தது. ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள், கிட்டத்தட்ட என் வயதுதான் இருக்கும். வடக்கத்தியாள் போலத்தான் இருந்தாள். தலையில் முக்காடு போட்டிருந்தாள். கையில் ஒரு சின்னத் தோல் பெட்டி வைத்திருந்தாள். என் சமீபமாக வந்து, 'ராஜம்மாள் என்கிறது நீ தானா?' என்று கேட்டாள். ஹிந்தி பாஷையில் தான். இருபது வருஷமாக இந்த ஊரில் இருந்ததினால் எனக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். ஆயினும் வந்திருப்பவள் யாரோ என்னமோ என்ற தயக்கத்தினால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.

     "உடனே அவள் கொஞ்சம் பதட்டமான குரலில், 'இதோ பார், அம்மா! ஒரு முக்கியமான காரியமாக நான் வந்திருக்கிறேன். வீண் பொழுது போக்க நேரம் இல்லை. ராஜம்பேட்டை ராஜம்மாள் என்கிறது நீதானா? துரைசாமி ஐயரின் சம்சாரம்?' என்றாள். 'ஆமாம்' என்று ஈனஸ்வரத்தில் சொன்னேன். 'அதை எப்படி நான் நம்புகிறது' என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ நாலு புறமும் பார்த்தாள். சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள் அவள் கண்ணில் பட்டன. சமீபத்தில் சென்று பார்த்தாள். அண்ணா! உனக்கு இங்கிருந்தே தெரிகிறதல்லவா? அந்தப் படங்களில் ஒன்று எனக்குக் கலியாணம் ஆன புதிதில் நானும் அவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். இன்னொன்று மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் அவரும் சீதாவும் எடுத்துக் கொண்டது. இரண்டாவது படத்தை உற்று பார்த்துவிட்டு, 'இதில் இருக்கிற பெண் யார்? உன் மகளா?' என்று 'அந்த ஸ்திரீ கேட்டாள், ஆமாம்' என்று சொன்னேன். இன்னும் சற்றுப் படத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சடார் என்று திரும்பி என் அருகில் வந்தாள். என் முகத்தை உற்றுப் பார்த்து, 'ஆமாம், நீ ராஜம்மாள்தான்!' என்றாள். அப்போது அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் ஜொலித்த களையையும் அவளுடைய கண்களின் காந்த சக்தியையும் என்னால் சொல்லி முடியாது. 'இவ்வளவு அழகான ஸ்திரீயும் உலகத்தில் உண்டா?' என்று எண்ணி நான் திகைத்துப் போனேன். அந்த ஸ்திரீ தன்னுடைய கைப் பெட்டியை அதோ இருக்கிற அந்த மேஜை மேலே வைத்து விட்டுச் சடசடவென்று நடந்து போய்க் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு வந்தபோது என் மனத்தில் பீதி உண்டாயிற்று. எழுந்து ஓடிப் போகலாமென்று தோன்றியது. அதற்கும் துணிச்சல் ஏற்படவில்லை. கை காலை அசைக்கவே முடியவில்லை. மந்திரத்தினால் கட்டுண்ட சர்ப்பம் என்பார்களே, அம்மாதிரி இருந்தேன். அந்த ஸ்திரீ கதவைத் தள்ளிட்டு வந்து என் பக்கமாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று மேஜை மேலிருந்த தோல் பெட்டியைத் திறந்தாள். எதை எதையோ எடுத்து மேஜைமேல் பரப்பினாள். எடுத்து வைத்ததில் சிலவற்றை மறுபடியும் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள். மற்றவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு அருகில் வந்தாள்.

     'ராஜம்மா! உனக்கு நான் இப்போது சொல்லப்போவது ஆச்சரியத்தை உண்டாக்கலாம் ஆனால், ஆச்சரியம் ஒன்றும் இல்லை. விஷயம் என்னவென்று பிற்பாடு சொல்லுகிறேன். முதலில் இந்த ரூபாயையும் ரத்தினமாலையையும் வாங்கிக் கொள். ரூபாய் இரண்டாயிரம் இருக்கிறது. ரத்தின ஹாரம் ரொம்ப மதிப்புள்ளது. பணம், ஹாரம் இரண்டும் என்னுடைய மகளின் ஸ்ரீதனத்துக்காகக் கொடுக்கிறேன். ஒன்றும் யோசிக்காதே! வாங்கிக்கொள்!' என்றாள். ஒரே சமயத்தில் என்னை அதிசயம், ஆனந்தம், பயம் எல்லாம் பிடுங்கித் தின்றன. குழந்தை சீதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் வருகிறதே என்று சந்தோஷமாயிருந்தது. இவள் யார், இவள் எதற்காகக் கொடுக்கிறாள் என்று ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அவளுடைய பேச்சைத் தட்ட எனக்கு மனோதிடம் இல்லை. கையிலே வைத்துக்கொண்டே, 'இந்தா! பிடி!' என்று இரண்டு தடவை சொன்ன பிறகு இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டேன். 'பத்திரமாய் வை!' என்றாள். 'ஆகட்டும்; அப்புறம் பெட்டியில் வைக்கிறேன்' என்று சொல்லிவிட்டுத் தலையணையின் கீழே ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின ஹாரத்தையும் தள்ளினேன்.

     பிறகு அவள், 'ராஜம்மா! இம்மாதிரி நான் பணமும் ஹாரமும் கொண்டு வந்து கொடுத்தது உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். இவள் யார் முன்பின் தெரியாதவள் இம்மாதிரி கொடுப்பதற்கு என்று நீ நினைக்கலாம். உனக்கு என்னைத் தெரியாதுதான். ஆனால் உன்னை ரொம்ப நாளாக எனக்குத் தெரியும். வெகு காலத்துக்கு முன்னால் உனக்கு நான் ஒரு கெடுதல் பண்ணினேன்; வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ தெய்வாதீனமாக அப்படி நேர்ந்துவிட்டது. அதற்குப் பரிகாரமாகத்தான் இந்தப் பணத்தையும் ஹாரத்தையும் கொடுத்திருக்கிறேன். இவற்றை நீ பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து கலியாணத்தின் போது உன் மகளுக்குக் கொடுக்க வேண்டும்! ஆனால், இப்படி நான் கொடுத்தேன் என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொன்னாலும் உன் புருஷனிடம் சொல்லவே கூடாது, தெரிகிறதா?" என்றாள். நான் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமித்துப் போயிருந்தேன். 'என்ன பேசாமலிருக்கிறாய், ராஜம்மா! நான் சொன்னதெல்லாம் தெரிந்ததா?' என்று சிறிது கடுமையான குரலில் கேட்டாள். 'தெரிந்தது' என்று முணுமுணுத்தேன். 'நான் சொன்னபடி செய்வாயா?' என்றாள். நான் சும்மாயிருந்தேன். உடனே அந்த ஸ்திரீயின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது; பத்திரகாளியாக மாறினாள். கண்கள் நெருப்புத் தணலைப்போல் ஆயின. கைப்பெட்டிக்குள்ளேயே கையை விட்டு எதையோ எடுத்தாள்; எடுத்த வஸ்து பளபளவென்று ஜொலித்தது. அது என்னவென்று நினைக்கிறாய், அண்ணா!" என்று ராஜம் கேட்டு நிறுத்தினாள்.

     ராஜம் சொல்லி வந்த கதையைப்பற்றி இன்னது நினைப்பதென்று தெரியாமல் கிட்டாவய்யர் ஸ்தம்பித்துப் போயிருந்தார். ராஜம் சரியான ஞாபகத்துடன் பேசுகிறாளா என்று அடிக்கடி அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் ரத்தின ஹாரமும் சற்று முன் தாம் வாங்கிப் பெட்டியில் வைத்தது என்னவோ உண்மை. ஆகையால் கதையும் ஒருவேளை நிஜமாக இருக்கலாமல்லவா?

     "எனக்கு எப்படி அம்மா, தெரியும்? தெரிய வேண்டிய அவசியமும் இல்லை; நீ பேச்சை நிறுத்தினால் போதும். ராஜம்! டாக்டர் சொல்லிவிட்டுப் போனது நினைவில்லையா?"

     "ஆகா! டாக்டர் இருக்கட்டும் டாக்டர்! இன்னும் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது; அதையும் கேட்டு விடு! அந்த ஸ்திரீ தோல் பெட்டியிலிருந்து எடுத்தது வேறு ஒன்றுமில்லை. கூர்மையாக வளைந்திருந்த ஒரு சின்னக் கத்தி. அதை எடுத்து அவள் என்னுடைய கண் முன்னால் காட்டினாள். 'பார்த்தாயா, ராஜம்மா நன்றாகப் பார்த்துக்கொள். நான் நல்லவர்களுக்கு நல்லவள்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவள். நான் சொன்னபடி எல்லாம் நீ செய்ய வேண்டும். உன் அகத்துக்காரரிடம் ஒரு வார்த்தை கூட நான் வந்தது பற்றிச் சொல்லக் கூடாது. சொன்னதாகத் தெரிந்ததோ; ஒரு நாளைக்கு இந்தக் கத்தியால் உன்னை ஒரே குத்தாகக் குத்திக் குடலைக் கிழித்து விடுவேன்! ஜாக்கிரதை" என்றாள், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்று பிரகாசித்த அந்தக் கத்தியைப் பயங்கரத்துடன் பார்த்த வண்ணம் இருந்தேன். 'பயப்படாதே, ராஜம்! பயப்படாதே! நான் சொன்னபடி செய்தால் உனக்கு ஒன்றும் வராது!' என்று அந்த ஸ்திரீ சொல்லிக் கொண்டிருக்கையில் யாரோ மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. அவள் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். 'யார் உன் புருஷனா?' என்று மெல்லிய குரலில் கேட்டாள். 'இல்லை, மகள்!' என்று சொன்னேன். அவளுடைய கலவரம் நீங்கிற்று. சீதா அறைக் கதவின் அருகில் வந்து கதவைத் தட்டினாள். 'அம்மா! காரியமாயிருக்கிறாயா? கதவைத் திற!' என்றாள். நான் படுத்திருந்தபடியே, 'சீதா! படத்துக்குப் பக்கத்தில் விளக்கு எரிகிறதா பார்! இன்று வெள்ளிக்கிழமை அல்லவா? முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக்கொண்டு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லு!' என்றேன். 'சரி, அம்மா' என்று சீதா சமையலறைக்குள் போனாள்.

     "அந்த ஸ்திரீ அவசர அவசரமாகத் தோல் பெட்டியைப் பூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 'ராஜம்மா! ஜாக்கிரதை! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்!' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். கதவைத் திறந்து கொண்டு வெளித் தாழ்வாரம் சென்று அங்கிருந்து அவள் மச்சுப்படி இறங்கும் சத்தமும் கேட்டது. இவ்வளவும் ஒருவேளை கனவில் காண்கிறோமோ என்று தோன்றியது. தலையணையின் அடியில் கையை விட்டுப் பார்த்தேன். நோட்டுக் கத்தையும் ரத்ன ஹாரமும் இருந்தன. கனவு காணவில்லை, உண்மையாக நடந்தவைதான் என்று நம்பிக்கை பெற்றேன். இதற்குள் சீதா அறைக்குள் வந்தாள். 'அம்மா! யாராவது வந்திருந்தாளா என்ன? சத்தம் ஏதோ கேட்டதே! - ஏன் அம்மா இந்த நேரத்தில் படுத்திருக்கிறாய்?' என்று கேட்டுக் கொண்டே வந்தவள், இந்த மேஜையைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். பிரமிப்புக்குக் காரணம் மேஜையின்மேல் பளபளவென்று ஜொலித்த கத்திதான்! போகிற அவசரத்தில் அந்த ஸ்திரீ அதை எடுத்துப் போக மறந்து விட்டாள். நானும் கவனியாமல் இருந்துவிட்டேன். 'அம்மா! இது ஏதம்மா கத்தி, இதன் பிடி வெகு விசித்திரமாயிருக்கிறதே?' என்று கத்தியை எடுக்கப்போனாள் சீதா. எனக்கு ஒரே திகிலாய்ப் போய்விட்டது. 'வேண்டாம் சீதா வேண்டாம்! அந்தக் கத்தியைத் தொடாதே!' என்றேன். என்னுடைய குரலின் படபடப்பைக் கவனித்த சீதா கத்தியைத் தொடாமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள். இதற்குள் மறுபடியும் மாடிப்படி ஏறும் சத்தம் தடதடவென்று கேட்டது. கத்தியை மறைத்து வைக்கலாமா, அறைக் கதவைத் தாளிடச் சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அந்த ஸ்திரீ புயற்காற்றுப் புகுவதைப்போல் அறைக்குள் புகுந்தாள். நேரே மேஜையருகில் வந்து கத்தியை லபக்கென்று எடுத்துத் தோல் பெட்டியில் வைத்துக் கொண்டாள். பிறகு சீதாவின் முகத்தையும் என் முகத்தையும் இரண்டு மூன்று தடவை மாறி மாறிப் பார்த்தாள். 'ராஜம்மா இந்தப் பெண் உன் குமாரியா?' என்று கேட்டாள். 'ஆமாம்' என்று சொன்னேன். உடனே சீதாவை அவள் கட்டிக்கொண்டு உச்சி முகந்து கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தாள்! 'கடவுள் உன்னை நன்றாக வைக்கட்டும். ஆண் பிள்ளைகளின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்!' என்றாள். பிறகு என்னைப் பார்த்து 'ராஜம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்! ஜாக்கிரதை!' என்று சொல்லிவிட்டு மறுபடியும் அறையை விட்டுச் சென்றாள். அவள் காலடிச் சத்தம் மறைந்ததும் சீதா என் அருகில் வந்து, 'இது யாரம்மா இந்தப் பைத்தியம்!' என்று கேட்டாள். 'அப்படிச் சொல்லாதே, சீதா! இவள் பைத்தியமில்லை, ரொம்ப நல்ல மனுஷி. இவளுக்கும் எனக்கும் வெகு நாளைய சிநேகிதம்' என்றேன். 'சிநேகிதம் என்றால் நான் பார்த்ததே கிடையாதே!' என்றாள் சீதா. 'நீ பிறப்பதற்கு முன்னால் இவளும் நானும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். அப்புறம் பரேலுக்கு இவள் குடி போய் விட்டாள். அதிகமாக இந்தப் பக்கம் வர முடிவதில்லை' என்றேன். பொய்தான் சொன்னேன், என்னவோ அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது..."

     இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், தம் மனதிற்குள், "இது மட்டுந்தானா பொய்! இத்தனை நேரம் இவள் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்தான்! பாவம்! சீதாவுக்காகக் கணவனுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்து விட்டு இந்தக் கதையைக் கற்பனை செய்திருக்கிறாள்," என்று எண்ணிக் கொண்டார்.