உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : பூகம்பம் 21. சீதாவின் காதலன் மறுநாள் ராஜம்பேட்டை அக்கிரகாரத்தில் பெரிதும் பரபரப்புக் குடிகொண்டிருந்தது; சாயங்காலந்தான் மதராசிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த போதிலும் அன்று காலையிலிருந்தே யாருக்கும் வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. பாதிப் பேருக்கு மேல் அவரவர்கள் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் வேலையாயிருந்தவர்கள் ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை வாசலுக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். ஊரிலேயே இப்படி இருந்ததென்றால் கிட்டாவய்யர் வீடு எப்படி இருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? காலையில் காப்பி சாப்பிடுவதற்கே சீமாச்சுவய்யர் வந்து விட்டார். "என்ன ஓய்? என்ன ஓய்?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு சாயங்காலம் வரப்போகிறவர்களை வரவேற்பதற்கான காரியங்களைச் சுறுசுறுப்பாகக் கவனித்தார். இன்னும் பலர் ஒரு வேலையும் இல்லாமல் கிட்டாவய்யர் வீட்டுக்கு வருவதும் போவதுமாயிருந்தார்கள். "இன்று சாயங்காலந்தானே வருகிறார்கள்?" என்ற கேள்விக்கு ஆயிரந்தடவைக்கு மேல் கிட்டாவய்யர் 'ஜவாப்' சொல்லித் தீரவேண்டியதாயிருந்தது. சரஸ்வதி அம்மாள் காலை நாலரை மணிக்கே எழுந்து பரபரப்பாக எல்லாக் காரியங்களையும் கவனிக்கத் தொடங்கினாள். பலபலவென்று பொழுது விடிவதற்குள்ளே வீடு மெழுகி வாசல் பெருக்கிக் கோலமும் போட்டாகிவிட்டது. அப்புறம் உக்கிராண அறையிலிருந்து சமையலறைக்குப் போவதும், தரையில் இருந்த சாமானைப் பரணியில் தூக்கிப் போடுவதும், பரணியில் இருந்த சாமானைத் தரையில் இறக்கி வைப்பதும், அங்கங்கே உள்ளவர்களை ஏதாவது அதிகாரம் பண்ணுவதுமாயிருந்தாள். "இன்றைக்கே இந்தப் பாடாயிருக்கிறதே; நாளைக்குக் கலியாணம் என்று வந்தால் எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ?" என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொண்டாள். அபயாம்பாளையும் ராஜம்மாளையும் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் வந்தது பற்றிச் சரஸ்வதி அம்மாள் தன் திருப்தியைத் தெரிவித்தாள். "ஏதோ சிரமத்தைப் பார்க்காமல் நேற்றே புறப்பட்டு வந்துவிட்டீர்களே! என்னுடைய பாரம் பாதி குறைந்தது. இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு நீங்கள் வந்திராவிட்டாலும் பாதகமில்லை! ஆனாலும் வந்தது தான் சந்தோஷமாயிருக்கிறது. இதற்குத்தான் நமக்கு என்று நாலு மனுஷாள் வேணும் என்கிறது. நான் ஒண்டிக்காரி என்னத்தையென்று கவனிப்பேன்? எங்க அம்மாவினாலும் ஓடியாடி முன்னேயெல்லாம் போல் இப்போது காரியம் செய்ய முடிகிறதில்லை. நீங்கள் வந்து தான் காரியம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவே நடக்காது என்று சொல்கிறேனா? அது ஒன்றும் கிடையாது. ஆனாலும் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்ததுதான் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறது!" என்று மிகப் பெரிய தமிழ்ப் புலவர்களைப் போல் இரு பொருள் வைத்துப் பேசுவாள். உடனடியாகத் தன் தாயாரிடம் போய், "கேட்டாயா அம்மா! குறுக்கே நெடுக்கே வீட்டிலே எங்க போனாலும் இரண்டு நாத்தனார்மார்களும் நிற்கிறார்கள். ஒரு காரியமும் செய்ய முடிகிறதில்லை. அந்தப் பெண் சீதா, ஒரு நிமிஷம்கூட விடமாட்டேன் என்று லலிதாவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள்! இவர்கள் இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு வரவில்லையென்றால் யார் குறைபடப் போகிறார்கள்? தலைக்கு மேலே எனக்கு இருக்கிற வேலையில் இவர்களை வேறே நான் விசாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் பொல்லாப்பு வந்து சேரும். ஏதோ ஒத்தாசைக்கு நீயாவது வந்து சேர்ந்தாயே, அதைச் சொல்லு! இல்லாவிட்டால் நான் தவித்துப் போயிருப்பேன்!" என்று மற்றவர்களுக்குக் காதில் விழுந்தும் விழாமலும் இருக்கும்படி கூறுவாள். சரஸ்வதி அம்மாள் சொன்னபடியே லலிதாவும் சீதாவும் இணைபிரியாமல் ஒருவரையொருவர் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் சாயங்காலம் சீதா வண்டியிலிருந்து இறங்கியவுடன் லலிதா அவளை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்றாள். அப்புறம் ஒருவரையொருவர் ஒரு நிமிஷமும் பிரியவில்லை. இராத்திரி இருவரும் படுத்துக் கொண்டது கூட ஒரே பாயில் ஒரே தலையணையை வைத்துக் கொண்டுதான். இதெல்லாம் உதவாது என்று லலிதாவின் தாயார் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை. அன்றைக்குப் பொழுது விடிந்து எழுந்ததிலிருந்து இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசிய வண்ணம் இருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு என்னதான் விஷயம் இருக்கும் என்று மற்றவர்களுக்கெல்லாம் வியப்பாயிருந்தது. சீதா - லலிதா இவர்களின் நடத்தையைக் காட்டிலும் அதிகமான வியப்புக்கு உரியதாயிருந்தது சூரியாவின் நடவடிக்கை தான். முன் தடவையெல்லாம் அவன் ஊருக்கு வந்தால் வீட்டுக்குள் அதிகம் தங்கவே மாட்டான். கையோடு ஏதேனும் புத்தகம் கொண்டு வந்திருப்பான். எங்கேயாவது மூலையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். "ரொம்பப் படிக்காதேடா, அப்பா! கண்ணுக்குச் சூடு!" என்று அவனுடைய தாயார் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டான். அம்மா ஏதாவது கேட்டால் அதற்கு அவன் பதில் சொல்வதே அபூர்வம். பெண் பிள்ளைகள் அதிகமாகப் புழங்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் அவன் வருவதே கிடையாது. அப்படிப்பட்டவன் இந்தத் தடவை வீட்டு வாசலுக்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டிருந்தான். அடிக்கடி சீதாவும் லலிதாவும் இருக்கும் இடத்துக்கு வருவான். "ஏது? இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஒரு நிமிஷங்கூட விட்டுப் பிரிய மாட்டீர்கள் போலிருக்கிறதே! நாளைக்குக் கலியாணம் ஆகிப் புக்ககம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?" என்பான். பெரும்பாலும் லலிதாதான் பதில் செல்லுவாள். "நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம். உனக்கென்ன அதைப் பற்றி?" என்பாள். சில சமயம், "பெண்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? போய் உன் காரியத்தைப் பார்!" என்பாள். "என் காரியம் வேறு ஒன்றுமில்லையே! உன்னை விசாரித்துக் கொள்வதுதான் எனக்கு இப்போது வேலை! தங்கைக்குக் கலியாணம் என்றால் தமையன் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? உலகம் சிரிக்காதா?" என்பான் சூர்யா. "ஆமாம்; நீ ரொம்ப இங்கு வந்து வெட்டி முறித்து விடுகிறாயாக்கும்? போடா போ!" என்பாள் லலிதா. "அவனை ஏண்டி விரட்டியடிக்கிறாய்? ஏதோ உன்பேரில் உள்ள பிரியத்தினால் தானே வருகிறான்?" என்பாள் சீதா. இந்தச் சமயத்தில் லலிதாவின் சின்னத் தம்பி சுண்டுப் பயல் குறுக்கிடுவான். "ஏன் பொய் சொல்லுகிறாய், அண்ணா! நீ லலிதாவைக் கவனித்துக் கொள்வதற்காகவா இப்படி வளைய வந்து கொண்டிருக்கிறாய்? பம்பாய் அத்தங்காளைப் பார்ப்பதற்குத்தானே வீட்டுக்குள் சுற்றுகிறாய்? எனக்குத் தெரியாது என்று நினைத்தாயோ?" என்று குட்டை உடைத்து விடுவான். "சீ! கழுதை சும்மாயிரு!" என்பான் சூரியா. "நான் கழுதையென்றால் நீ கழுதையின் அண்ணாதானே!" என்பான் சுண்டுப் பயல். விவகாரம் முற்றிச் சூரியா சுண்டுவின் சிண்டைப் பிடிக்க ஓடுவான். ஆனால் மறு நிமிடம் திரும்பி வந்து விடுவான். சூரியாவின் தொந்தரவிலிருந்து தப்புவதற்காகவே லலிதாவும் சீதாவும் அன்று மத்தியானம் சாப்பாடு முடிந்தவுடனே குளத்தங்கரை 'பங்களா'வுக்குச் சென்றார்கள். சீதா பம்பாயிலிருந்து வந்ததும் ராஜம்பேட்டையில் ஒரு வாரம் இருந்தாள். அந்த ஒரு வாரம் சீதாவும் லலிதாவும் அடிக்கடி குளத்தங்கரைப் பங்களாவுக்குப் போவார்கள். பிறருடைய தொந்தரவு இல்லாமல் தங்களுடைய மனோரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பகலெல்லாம் பேசினாலும் பேச்சு முடியாது. சூரியன் அஸ்தமித்த பிறகுகூட வீட்டுக்குத் திரும்பமாட்டார்கள். பங்களாவுக்கு எதிரில் இருந்த குளத்தங்கரைப் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு பேச்சைத் தொடங்குவார்கள். அந்த இளம் பெண்கள் அப்படி என்னதான் முடிவில்லாத அந்தரங்கம் பேசுவார்களோ என்று வானமாதேவி தன்னுடைய லட்சக்கணக்கான நட்சத்திரக் கண்களில் அதிசயம் ததும்பப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அத்தகைய மோகன முன்னிரவு வேளையில் சீதாவைப் பார்த்து லலிதா, "அத்தங்கா! நான் எத்தனை தடவை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாயே? நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்? எப்போது உனக்குக் கலியாணம்!" என்று கேட்டாள். சீதா ஆகாயத்தை நோக்கியவண்ணம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அவள் லலிதாவைப் பார்த்துச் சொன்னாள். "என் கலியாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்றால் நீ கேட்கவில்லை. பதில் சொன்னால்தான் விடுவாய் போலிருக்கிறது. நல்லது; என்னுடைய அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் கேள். அம்மா சொன்னாலும் சரி, அப்பா சொன்னாலும் சரி, அவர்கள் இஷ்டப்படி நான் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிக்க மாட்டேன். எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே 'சரி' என்று சொல்லி விடுவேனா? ஒருநாளும் மாட்டேன், லலிதா! உனக்கு லைலா - மஜ்னூன் கதை சொன்னேனல்லவா? அது ஞாபகமிருக்கிறதா? மஜ்னூனை லைலா என்ன கேட்டாள்? 'இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும்' என்று கேட்டாள். மஜ்னூனும் 'கொண்டு வருகிறேன்' என்று போனான். ஆனால் நான் அவ்வளவு அற்பமான பொருளைக் கேட்கமாட்டேன். என்னை மணந்து கொள்கிறேன் என்று வருகிறவனுக்கு இராத்திரி வேளையில் நட்சத்திர மயமான ஆகாசத்தைக் காட்டுவேன். எனக்குப் பிடித்த பன்னிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, 'அந்த நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்பேன். அவன் போய் இன்னொருவன் வருகிறான் என்று வைத்துக்கொள். அவனைப் பார்த்து, 'முள் இல்லாத ரோஜாச் செடியிலிருந்து மல்லிகைப்பூ மணமுள்ள செண்பக மலர் எடுத்து மாலை கட்டிக்கொண்டு வர உன்னால் முடியுமா? கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்று சொல்வேன். அவன் போய் இன்னொருவன் வந்தால், 'வான வில்லின் வர்ணங்களையும் தோகை மயிலின் சாயலையும் கலந்து ஒரு அற்புதமான வர்ணச் சித்திரம் எழுதிக் கொண்டு வா! கொண்டு வந்தால் உன்னை நான் மணந்து கொள்வேன்!' என்பேன்....." சீதா அடுத்தபடி என்ன சொல்லலாம் என்று ஒரு கணம் யோசித்தபோது லலிதா, "அத்தங்கா! இது என்ன பேச்சு? இப்படியெல்லாம் நீ கேட்டால் யாரால் கொண்டுவரமுடியும்? உன்னைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். உனக்குக் கலியாணமே ஆகாது!" என்று சொன்னாள். "அப்படியா நினைத்தாய் லலிதா!" ஒரு நாளும் இல்லை. மூடர்கள் எல்லாரும் நான் கேட்டதைக் கொடுக்க முடியாது என்று போய் விடுவார்கள். கடைசியாகப் புத்தியுள்ளவன் ஒருவன் வருவான். வந்து அவன், 'இதோ பார்! நீ கேட்டதையெல்லாம் கொண்டு வந்து விடுவேன். ஆனால் உனக்கு நான் வேணுமா? அல்லது வெறும் நட்சத்திரமும் பூவும் காற்றும் வேண்டுமா? என்னையே உனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்திருக்கிறேனே? அவையெல்லாம் எதற்கு?' என்று கேட்பான். மறுவார்த்தை பேசாமல் அவனைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதிப்பேன்." "அம்மம்மா! அவ்வளவு பொல்லாத மோசக்காரியா நீ?" "இதில் மோசம் என்ன வந்தது, லலிதா? பின்னே என்னவென்று நினைத்தாய்? மஜ்னூன் இந்தியா தேசத்துக் கிளியுடன் திரும்பி வந்தபோது லைலாவைக் காணாமல் பைத்தியம் பிடித்து ஊர் ஊராய் அலைந்தான். என்னை உண்மையில் காதலிப்பவனை அந்த மாதிரி நான் பைத்தியமாக அடிக்க வேண்டும் என்கிறாயா?" சீதாவின் தர்க்கம் லலிதாவின் மூளையில் ஏறவில்லை. எனவே, அவள், "சரி! நீ இஷ்டப்படி செய், அம்மா! உன்னோடு பேசி என்னால் ஜயிக்க முடியுமா?" என்றாள். ஆனால் இன்றைக்கு லலிதாவும் சீதாவும் குளத்தங்கரைப் பங்களாவுக்குச் சென்று தனிமையை அடைந்த பிறகும் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாகத் தொடங்கவில்லை. இரண்டு பேருடைய மனத்திலும் ஏதோ ஒரு தடங்கல் இருந்து தாராளமாகப் பேச முடியாமல் தடை செய்தது. "லலிதா! இன்றைக்கு நாம் இங்கு வந்தது சரியல்ல. இதற்குள் மாமி நம்மைத் தேட ஆரம்பித்திருப்பாள். நான்தான் இங்கு உன்னை அழைத்து வந்துவிட்டேன் என்று என்னைத் திட்டினாலும் திட்டுவாள்!" என்று சீதா ஆரம்பித்தாள். "உன்னை எதற்காகத் திட்ட வேண்டும்? வேணுமானால் அம்மா என்னைத் திட்டட்டும்; நான் அதற்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன்!" என்றாள் லலிதா. "சாப்பிட்ட உடனே உனக்குத் தலை வாரிப் பின்னவேண்டும் என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள். தாழம்பூ வைத்துப் பின்னுவதற்கு ஒரு மணி நேரமாவது ஆகுமல்லவா? அவர்களோ சாயங்காலம் ஐந்து மணிக்கே வந்துவிடப் போகிறார்களாம்! நாம் இங்கே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்றாள் சீதா. "அதென்னமோ, அம்மா! இந்த ஏற்பாடெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. என்னைவிட நீ ஒரு வயது மூத்தவள் அல்லவா? உன் கலியாணத்தை முடிவு செய்து விட்டல்லவா என் கலியாணத்தைப் பற்றிப் பேசவேண்டும்? அப்பாகூட இப்படிச் செய்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எனக்கு என்ன இவ்வளவு அவசரம் கலியாணத்துக்கு? இன்றைக்குத்தான் பாரேன்! இவ்வளவு தடபுடலும் ஆர்ப்பாட்டமும் எதற்காக என்று எனக்குத் தெரியவேயில்லை. இதைப்பற்றிச் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மா சண்டைக்கு வரப் போகிறாளே என்று பயமாயிருக்கிறது...." இந்தச் சமயத்தில், "யாருக்கு என்ன பயம்? நான் ஒருவன் இருக்கிறபோது யாரும் பயப்பட வேண்டியதில்லை" என்று சொல்லிக்கொண்டே பங்களாவுக்குள் பிரவேசித்தான் சூரியா. |