உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : பூகம்பம் 23. இது என்ன ஓசை? சரஸ்வதி அம்மாளும் சீதாவும் லலிதாவை வீட்டுக்கு வரும்படி சொல்லியனுப்பியது உண்மைதான். அவள் வந்ததும் அலங்காரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில், சீதா மிகவும் உற்சாகம் காட்டினாள். சட்டாம்பிள்ளை உத்தியோகம் பார்த்தாள் என்று சொல்லலாம். இந்த மாதிரி தலை பின்னிச் சடை போட வேண்டும். இப்படி முன் வகிடு எடுக்க வேண்டும், இப்படி முன்னால் இரண்டு சுருட்டை மயிரைத் தொங்கவிட வேண்டும், இந்த வர்ணப் புடவைக்கு இந்த நிற ரவிக்கைப் போட்டுக் கொள்ள வேண்டும், அதே நிறத்தில் தலையில் பூவும் கையில் வளையல்களும் இருக்க வேண்டும் - என்றெல்லாம் வாயினால் பிரசங்கம் செய்து கொண்ட சீதா கையினால் காரியமும் செய்துகொண்டிருந்தாள். லலிதாவை அலங்காரம் செய்யும் விஷயத்தில் சீதா காட்டிய தீவிர உற்சாகத்தைக் கண்டு சரஸ்வதி அம்மாளின் கடின இதயம்கூட அவள் விஷயத்தில் சிறிது இளகிவிட்டது. 'அடுத்தாற்போல் சீதாவுக்கும் ஒரு வரனைப் பார்த்து நிச்சயம் செய்துவிட வேண்டும். ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணமும் வைத்துக் கொண்டாலும் நல்லதுதான். ஆனால் சாஸ்திரப்படி செய்யலாம் என்கிறார்களோ, என்னமோ? செய்யலாம் என்று சொன்னால் ரொம்ப நல்லது செலவோடு செலவாய்ப் போய்விடும். ஆனால் அதற்காக முகூர்த்தத்தை ரொம்ப நாள் தள்ளிப் போடக் கூடாது. சித்திரை மாதத்திலாவது கலியாணத்தை நடத்தி விட்டால்தான் எல்லா விஷயங்களுக்கும் சௌகரியமாயிருக்கும்!" என்று மற்றவர்கள் காதிலும் விழும்படியாகச் சரஸ்வதி அம்மாள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். "ஏன் அம்மா! என் கலியாணம் நிச்சயமாகிவிட்ட மாதிரியே பேசுகிறாயே?" என்றாள் லலிதா. "அதிலே கூடச் சந்தேகமா என்ன?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அதுதான் மாமி, நானும் சொல்லுகிறேன்! மதராஸிலிருந்து வருகிறவர்கள் வெறுமனே ஜம்பத்துக்காக வருவார்களா? அல்லது நம்ம லலிதாவைப் பார்த்துவிட்டு யாராவது 'பிடிக்கவில்லை' என்றுதான் சொல்வார்களா? அப்படிச் சொல்கிறவர்களுக்குத் தலையில் கொம்பா முளைத்திருக்கும்? லலிதா மாதிரி பெண் கிடைப்பதற்குப் பூர்வ ஜன்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டாமா!" என்று சீதா கூறியதும் சரஸ்வதி அம்மாளைப் பூரிக்கச் செய்தது. "வருகிறவர்கள் சொல்கிறது இருக்கட்டும். நான் 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டால்?" என்றாள் லலிதா. "அசடே! பேசாமலிரு, யார் காதிலாவது விழப் போகிறது! சூரியா பேத்துகிறதைக் கேட்டுக் கொண்டு ஏதாவது உளறாதே!" என்று சரஸ்வதி அம்மாள் கோபமாய்ச் சொன்னாள். "நானும் அதுதான் இவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், மாமி! பார்க்கிறதுக்கு முன்னாலேயே 'பிடிக்காமலிருக்கும்' என்று எதற்காக நினைத்துக்கொள்ள வேண்டும்! மாமாவோ நேரில் பார்த்துவிட்டு வந்து 'மாப்பிள்ளை மன்மதன் மாதிரி இருக்கிறார்!' என்று சொல்லுகிறார். மன்மதனைவிட அழகாய் எங்கே போய் மாப்பிள்ளை பிடிக்கிறது. மாமி! இந்த விஷயத்திலே மட்டும் லலிதா கொஞ்சம் அசட்டு பிசட்டு என்று பேசிக்கொண்டிருக்கிறாள்; அது எனக்குப் பிடிக்கவே இல்லை. இவள் அண்ணாவின் துர்போதனைதான் காரணம் போலிருக்கிறது!" என்றாள் சீதா. "கேட்டாயா, லலிதா உன் அத்தங்காள் சொல்கிறதைக் கேட்டுக்கொள். சூரியா ஏதாவது உளறினால் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதே! அவனுக்கு இந்த விஷயமெல்லாம் என்ன தெரியும். யாரோ அவனுக்குத் தூபம் போட்டுவிட்டிருக்கிறார்கள்! சீதாதான் நல்லமாதிரி யோசனை சொல்கிறாள். அவளுடைய புத்திமதியைக் கேட்டுக்கொள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். லலிதாவை அலங்காரம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம் பம்பாய் ராஜம்மாள் சூரியாவைக் கூப்பிட்டு அனுப்பி "அப்பா! நான் பிறந்து வளர்ந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. குளத்தங்கரையில் அண்ணா பங்களாக் கட்டியிருக்கிறானாமே! அங்கே போய்ச் சற்று நேரம் காற்று வாங்கிவிட்டு வரலாமா?" என்றாள். "ஆகட்டும் அத்தை, போகலாம்" என்றான் சூரியா. இருவரும் பங்களாவை அடைந்தார்கள். ராஜம்மாள் பங்களாவின் திறந்த ஜன்னல் வழியாக நெடு நேரம் குளத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "எனக்குக் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு ரொம்பப் பிரியம். வினாத் தெரிந்த நாளிலிருந்து கலியாணம் ஆகும்வரையில் ஒரு நாள்கூட இந்தக் குளத்தில் குளிக்காமல் இருந்தது கிடையாது. பம்பாய்க்குப் போனதிலிருந்து "குழாய் ஜலந்தான் 'கங்கை காவேரி' என்று ஆகிவிட்டது" என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட்டாள். "அத்தை! உங்களுக்கு நீந்தத் தெரியுமாமே? அது உண்மையா? பெரிய அத்தை சொன்னாள்" என்றான் சூரிய நாராயணன். "உண்மைதான் சூரியா! அப்பா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் யரோ ஒரு ஸ்திரீ காவேரி வெள்ளத்தில் போய்விட்டாள், என்று செய்தி வந்தது. அதுமுதல் 'பெண்களுக்கும் கட்டாயம் நீந்தத் தெரியவேண்டும்' என்று சொல்லி அப்பா, அதாவது உன் தாத்தா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். இந்தக் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய்விடுவேன். சில சமயம் காவேரியில்கூட நீந்தியிருக்கிறேன். புண்ணிய காலங்களிலும் பண்டிகை தினங்களிலும் வண்டி கட்டிக்கொண்டு எல்லோரும் காவேரிக்குக் குளிக்கப் போவோம். அப்பா, அண்ணா, அக்கா எல்லோருமாகப் போவோம். நான்தான் வீட்டுக்குக் கடைக்குட்டிப் பெண். எல்லாருக்கும் என் பேரில் ஆசை அதிகம்...." ராஜம்மாள் கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அந்தப் பழங்கதையெல்லாம் இப்போது எதற்கு? என்னமோ உளறினேன். இருக்கட்டும், சூரியா! நீ இந்த வருஷம் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் படிக்கிறாயாமே? அப்படித்தானா?" என்றாள். ராஜம்மாளின் கண்ணில் கண்ணீர் ததும்புவதைப் பார்த்துச் சூரியாவும் பேச்சை மாற்ற விரும்பினான். "ஆமாம், அத்தை! முன்னேயெல்லாம் மெட்ரிகுலேஷன் என்பார்கள். இப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று அதற்குப் பெயர். எங்க அம்மாவுக்குப் பத்தாவது என்று சொன்னால்தான் தெரியும்!" என்றான். "ஆமாம், சூரியா! நீ ஒரு வக்கீல் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாயாம். அந்த வக்கீலுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானாம்; பி.ஏ. படிக்கிறானாமே - வாஸ்தவந்தானா?" என்று ராஜம்மாள் கேட்டாள். "வாஸ்தவந்தான் அத்தை! அதற்கு என்ன இப்போது?" என்று சூரியா கேட்டபோதே அவன் மனத்தில் அந்தக் கேள்விக்குப் பதிலும் உதித்தது? வக்கீலின் பிள்ளைக்குச் சீதாவைக் கொடுக்கலாம் என்பதற்குத்தான் அத்தை அவனைப் பற்றிக் கேட்கிறாள் என்று தெரிந்துவிட்டது. அந்த எண்ணம் ஊசியால் குத்துவது போல் சுரீர் என்ற வேதனையை அவனுக்கு உண்டாக்கியது. "சூரியா! உன் அத்திம்பேர் ஒரு மாதிரி மனுஷர் என்று கேட்டிருப்பாய். எனக்கோ உடம்பு சரியாகவே இல்லை. இந்தப் பெண் சீதாவுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமென்று கவலையாயிருக்கிறது. அண்ணாவிடம் சொல்லித்தான் இருக்கிறேன். ஆனால் அவனுக்கு எத்தனையோ ஜோலி. யாராவது நல்ல வரனாகத் தெரிந்தால் பார்த்துச் சொல், சூரியா! அதற்காகத்தான் முக்கியமாக உன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னேன்." "அத்தை! இது என்ன பிரமாதம்? சீதாவின் சமர்த்துக்கும் அழகுக்கும் வரன்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே வேண்டாம்!" என்று சூரியா கூறினான். அதே சமயத்தில் தன்னுடைய மனத்திற்குள் "நான் ஒருவன் இருக்கிறேனே? வேறு வரனைத் தேடுவானேன்?" என்று சொல்லிக்கொண்டான். இதை வெளிப்படையாக அத்தையிடம் சொல்லிவிடலாமா என்றுகூட மனத்தில் நினைத்தான். ஆனால் சங்கோசம் குறுக்கிட்டது. "சீதா சமர்த்து என்று உனக்குத் தோன்றுகிறதா, சூரியா! எதிலிருந்து அவ்வாறு சொல்கிறாய்? வயது பதினாறு பிறந்திருக்கிறது; இன்னும் விளையாட்டுத்தனம் கொஞ்சம்கூடப் போகவில்லை. ஓடையில் விழுந்ததும் 'ஓகோ' என்று கூச்சல் போட்டாளே, பார்த்தாயல்லவா?" என்றாள் ராஜம்மாள். "அதனால் என்ன அத்தை, சிறு பிராயத்தில் பெண்கள் அப்படிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால்தானே நன்றாயிருக்கிறது? அழுமூஞ்சியாயிருந்தால் யாருக்குப் பிடிக்கும்? பம்பாய்க்குப் போய் வந்த பிறகு லலிதாவின் சுபாவம்கூட மாறியிருக்கிறது. அதற்கு முன்னாலெல்லாம் அம்மாவுடன் சண்டை பிடிப்பதும் அழுவதுமாகவே இருப்பாள்; கலகலப்பாகவே இருக்கமாட்டாள். இந்த ஒரு வருஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறாள்" என்றான் சூரியா. "இந்த அசட்டுப் பெண் உன் தங்கையையும் தன்னைப் போல் ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும்படி செய்து விட்டாளாக்கும்." "அடிக்கடி சீதாவை 'அசடு அசடு' என்று சொல்கிறீர்களே அத்தை! அவள் முகத்திலே சமர்த்து என்று எழுதி ஒட்டியிருக்கிறதே! எதுவரையில் படித்திருக்கிறாள்?" "படிக்கிறதிலே சீதா சமர்த்துத்தான் சூரியா. பள்ளிக்கூடத்தில் எப்போதும் முதல் மார்க்குத்தான். ஒரு தடவை காதால் கேட்ட பாட்டை அப்படியே பாடி விடுவாள். இந்தப் பக்கங்களில் எட்டாவது என்று சொல்லுகிறார்களே அதுவரையில் படித்திருக்கிறாள். இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். கதை சொல்லச் சொன்னால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகந் தெரியாத பெண்ணாயிருக்கிறாள். யாரிடமும் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணத்தோடு சேர்த்துச் சீதாவுக்கும் நடத்திவிட்டால் என் மனத்துக்கு நிம்மதியாயிருக்கும். மேற்படி சம்பாஷணையின் நடுவில் சூரியாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது அத்தைக்குச் சீதாவைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் போலிருக்கிறது; அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வரனைப் பற்றிய பேச்சை எடுத்திருக்கிறாள் என்று நினைத்தான். ஆனாலும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று எண்ணினான். அத்தை அந்த விஷயத்தைப் பற்றிப் பட்டவர்த்தனமாகக் கேட்ட பிறகு கொஞ்சம் 'பிகு' பண்ணிக் கொண்டு அரை மனதாகத் தன்னுடைய சம்மதத்தைத் தெரியப்படுத்துவது என்று தீர்மானித்தான். எனவே, சிறிது அலட்சிய பாவத்துடன், "இங்கே என்ன அப்படி ஒசத்தியான வரன் கிடைத்துவிடப் போகிறது. அத்தை! பம்பாயில் இல்லாத வரனா? அங்கேயே பார்க்கக் கூடாதா?" என்றான். "பம்பாயில் வரன் இருக்கலாம், சூரியா! ஆனால் சீதாவை இந்தப் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம், நம்முடைய குடும்பத்தில் நான் ஒருத்தி பம்பாயில் வாழ்க்கைப் பட்டது போதும் என்று இருக்கிறது. மறுபடியும் நீ தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போனதும் அந்த வக்கீலாத்துப் பையனின் ஜாதகம் வாங்கி அனுப்புகிறாயா, சூரியா? அந்தப் பையன் பெயர் என்ன?" "அவன் பெயர் பட்டாபிராமன், அத்தை! பையன் கெட்டிக்காரன்தான்; பி.ஏ. படிக்கிறான். ஆனால் சொத்து அதிகம் கிடையாது. ஒரு வீடு இருக்கிறது; அதன் பேரில் கடன். இந்த இலட்சணத்துக்கு ஏராளமான வரதட்சணை வர வேண்டும் என்று அவன் அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பட்டாபியைவிடச் சிலாக்கியமான வரன்கள் இருக்கின்றன; நான் பார்த்துச் சொல்கிறேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்" என்றான் சூரியா. "எவ்வளவோ பெரிய வரன்கள் இருக்கலாம்! ஆனால் நமக்குச் சரியாக வரவேண்டாமா, சூரியா? இந்த நாளில் பிள்ளைகளைப் பெற்றவர்கள் எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டுதான் வரதட்சணை கேட்கிறார்கள். நாளைக்கு உனக்குத்தான் கலியாணப் பேச்சு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அண்ணாவும் மன்னியும் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைந்து வரதட்சணை வாங்குவார்களா?..." வரதட்சணை வாங்குவதைப் பற்றி ஒரு பெரிய கண்டனப் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று சூரியா எண்ணினான். கலியாண விஷயத்தில் தன்னுடைய தீர்மானமான கொள்கையை வெளியிடவும் உத்தேசித்தான். ஆனால் அதற்குள் அத்தையின் முகபாவம் மாறுவதைக் கவனித்தான். ராஜம்மாளின் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது. "சூரியா! இது என்ன ஓசை!" என்று கேட்டாள். ஓசையா? என்ன ஓசை? எனக்கு ஓசை ஒன்றும் கேட்கவில்லையே?" என்றான் சூரியா. "கவனித்துக் கேள், சூரியா! சமுத்திரத்தில் அலை ஓசை மாதிரிச் சத்தம் கேட்கவில்லையா?" சூரியாவின் காதிலும் அப்போது அந்த ஓசை கேட்டது. பங்களாவுக்கு வெளியில் எட்டிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத் தோப்பு காணப்பட்டது. இளவேனிற் காலத்தின் இனிய தென்றல் அந்தத் தோப்பில் பிரவேசித்து நெருங்கிய சவுக்கு மரக்கிளைகளின் வழியாக நுழைந்து சென்றபோது உண்டான சத்தந்தான் அப்படிச் சமுத்திரத்தின் அலை ஓசை போன்ற பிரமையை உண்டாக்கியது! இதைத் தெரிந்து கொண்ட சூரியா, "அத்தை! அலையும் இல்லை; ஓசையும் இல்லை! அதோ அந்தச் சவுக்குத் தோப்பின் கிளைகள் காற்றில் அசைவதுதான் அலை ஓசை போன்ற சத்தத்தை உண்டாக்குகிறது." அது உண்மையென்று தெரிந்து கொண்ட பிற்பாடு ராஜம்மாளின் முகம் சிறிது தெளிவடைந்தது. "இருந்தாலும் அத்தை! நீ என்னத்திற்காக அவ்வளவு பயங்கரமடைந்தாய்? அலை ஓசையாயிருந்தால்தான் என்ன?" என்று சூரியா கேட்டான். "என் மனது இப்போது ரொம்பவும் கலங்கிப் போயிருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்!" என்றாள் ராஜம்மாள். சற்றுத் தூரத்திலிருந்து 'பாம்' 'பாம்' என்று மோட்டார்க் கொம்பின் சத்தம் கேட்டது. |