உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : பூகம்பம் 28. நிச்சயதார்த்தம் கிட்டாவய்யரின் அதட்டலுக்குச் சிறிது பயன் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளே கூச்சல் கொஞ்சம் அடங்கியது. பிறகு விஷயம் இன்னது என்பதும் வெளியாயிற்று. சீமாச்சுவய்யரின் மனைவி அன்னம்மாளின் காதில் மதராஸிலிருந்து வந்திருந்தவர் பேசிக்கொண்டிருந்து அரை குறையாக விழுந்தது. அதிலிருந்து மாப்பிள்ளைப் பையன் லலிதாவைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படவில்லையென்றும், சீதாவைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்றும் தெரிந்தன. பையனுடைய தாயாரும் தகப்பனாரும் முதலில் அவனுடைய மனத்தை மாற்றப் பார்த்தார்கள். பையன் பிடிவாதமாயிருந்தபடியால் கடைசியில் அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தைக் கிட்டாவய்யரிடம் எப்படிப் பிரஸ்தாபம் செய்வது என்று அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். இன்ஷுரன்ஸ் சுப்பய்யரிடம் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதே விஷயத்தைச் சொல்லி 'உண்டு இல்லை' என்று நிச்சயப்படுத்திக் கொண்டு போகிறதா அல்லது ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டுப் போய் விவரமாகக் கடிதத்தில் எழுதுவதா என்பதைப் பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கேட்டவுடன் சாதுவான கிட்டாவய்யருக்குக் கூட ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஆத்திரத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் சீமாச்சுவய்யரைப் பார்த்து, "என்ன ஓய்! நான் அப்போதே சொன்னேனே, பார்த்தீரா! மதராஸ்காரன்களுடைய யோக்கியதை தெரிந்ததா?" என்றார். "தெரியாமல் என்ன ஓய்? நானுந்தான் அப்போதே சொன்னேனே? ஆனாலும் இந்தப் பிரம்மஹத்தி சொல்கிறதை வைத்துக்கொண்டு ஒன்றும் நாம் தீர்மானித்து விடக்கூடாது. இந்தச் சோழன் பிரம்மஹத்திக்கு ஏதாவது கலகம் பண்ணி வைப்பதே தொழில். அவர்கள் வேறு சொல்லியிருப்பார்கள்! இவளுடைய செவிட்டுக் காதில் வேறு ஒன்று விழுந்திருக்கும்; எல்லாவற்றுக்கும் நான் போய் விஷயம் இன்னதென்று ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். ஏ சோழன் பிரம்மஹத்தி! இப்படி வந்து தொலை! இருக்கிற பிராப்தங்கள் போதாது என்று நீ ஒருத்தி வந்து சேர்ந்தாயே? ஏ எழரை நாட்டுச் சனியனே! வருகிறாயா? இல்லையா?" என்று இம்மாதிரி சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை அருமையாக அழைக்க, அம்மாளும், "என்னை எதற்காக இப்படிப் பிடுங்கி எடுக்கிறீர்கள்?" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டாள். இருவரும் வீதியில் போகும் போதுகூட, சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை வாழ்த்திய குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சீமாச்சு அய்யர் மேற்கண்டவாறு தமது மனைவியைத் திட்டியதானது அங்கேயிருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் ஓரளவு மனத் தெளிவை உண்டாக்கியது. "இந்தப் பிராமணர் எதற்காக அன்னம்மாளை இப்படி வைகிறார்? அவள் என்ன செய்வாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "பின்னே, யார்தான் என்ன செய்வார்கள்? எந்தக் காரியமும் பிராப்தம் போலத் தானே நடக்கும்?" என்றார் கிட்டாவய்யர். "இவர்கள் வேண்டாம் என்றால் லலிதாவுக்குக் கல்யாணம் ஆகாமல் போய் விடுமோ? எனக்கு மட்டும் உத்தரவு கொடுங்கள், நாளைக்கே ஆயிரம் வரன் கொண்டு வருகிறேன்!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "போதும்; போதும்! இனிமேல் இந்த வருஷம் என் பெண்ணுக்குக் கலியாணம் என்கிற பேச்சே வேண்டாம். முதலிலே, வந்தவர்கள் எல்லோரும் ஊருக்குப் போகட்டும்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். இந்தச் சமயத்தில் ராஜம்மாள், "அண்ணா! குற்றம் என் பேரில். நான் துரதிர்ஷ்டக்காரி, எங்கே போனாலும் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது!" என்றாள். "ஏதாவது உளறாதே! உன்னை யார் இப்போது என்ன சொன்னார்கள்?" என்றார் கிட்டாவய்யர். "அந்தப் பெண் உள்ளே விசித்து விசித்து அழுது கொண்டிருக்கிறது! சீதா என்ன செய்வாள்? வந்திருந்தவர்களின் முன்னால் வரமாட்டேன் என்றுதான் அவள் சொன்னாள். லலிதாதான் 'நீ வராவிட்டால் நானும் போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள். மன்னியாவது தடுத்தாளா? அதுவும் இல்லை!" என்றாள் பெரியம்மாள் அபயாம்பாள். "நான் ஒரு அசடு, என் பெண் பெரிய அசடு - என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே! நீங்கள் எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இருந்தீர்களே? சொல்கிறதுதானே?" என்று சரஸ்வதி அம்மாள் சீறினாள். "போதும் வாக்கு வாதம்! நிறுத்துங்கள்! அழுகிற குழந்தையைப் போய் யாராவது சமாதானம் செய்யுங்கள்!" என்றார் கிட்டாவய்யர். "அழுகை என்ன அழுகை! எதற்காக அழ வேண்டும்? செய்கிறதையும் செய்துவிட்டு ஜாலம்வேற!" என்றாள் சரஸ்வதி அம்மாள். உள்ளே, சீதாவைச் சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்த லலிதாவின் காதில் இதெல்லாம் விழுந்தது. அம்மா சொன்ன கடைசி வார்த்தையைக் கேட்டதும் லலிதா ஆங்காரத்துடன் வெளியில் வந்தாள். "அப்பா! நான் சொல்கிறதைத் தயவு செய்து கேளுங்கள். இன்றைக்கு வந்த பிள்ளையை நான் ஒருநாளும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை வெட்டிப் போட்டாலும் மாட்டேன். முன்னாலிருந்தே எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஒருவரும் கேட்கவில்லை. அம்மா அனாவசியாமாகச் சீதாவைக் கோபித்துக் கொள்கிறாள். இது தெய்வத்துக்கே பொறுக்காது. சீதா முகத்தை அலம்பிக் கொள்ளக் கூட மாட்டேன் என்றாள்; என்னுடன் வருவதற்கும் அவள் இஷ்டப்படவில்லை. நான்தான் வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்தேன். அப்படியிருக்க அவளைக் கோபித்துக்கொண்டு என்ன பயன்? இப்படியெல்லாம் நீங்கள் அநியாயமாய்ச் சீதாவின் பேரில் பழி சொல்லுவதாயிருந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்; இல்லாவிட்டால் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்!" என்று லலிதா ஆத்திரமும் அழுகையுமாய்ப் பேசினாள். இவ்விதம் லலிதா தன் தோழிக்காகப் பரிந்து பேசியது எல்லாருடைய மனத்தையும் இளகச் செய்தது. ஆனால் சரஸ்வதியின் கோபத்தை மட்டும் அதிகப்படுத்தியது. "போ, இப்போதே போய்க் கிணற்றில் விழு! எனக்குப் பெண்ணே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்!" என்று சொன்னாள். "அடாடாடா! இதெல்லாம் என்ன பேச்சு? இப்போது ஒன்றும் தீர்மானமாகி விடவில்லையே? சீமாச்சுதான் போயிருக்கிறானே? விஷயத்தைக் தெரிந்து கொண்டு அவன் வரட்டுமே?" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "சீமா மாமா என்னத்தை வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வரட்டும்! அந்தப் பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் நான் பண்ணிக் கொள்ளப் போவதில்லை. சத்தியமாய்ப் பண்ணிக் கொள்ளப் போவதில்லை!" என்று லலிதா சபதம் செய்தாள். "லலிதா! இதென்ன நீ கூட இப்படி எல்லாம் பேசுகிறாயே?" என்றார் கிட்டாவய்யர். "அவள் சுயமாகவா பேசுகிறாள்? சொல்லிக் கொடுத்தல்லவா பேசுகிறாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மன்னி! என்னைப்பற்றிச் சொல்கிறாயா? நான் ஒரு பாவமும் அறியேனே! லலிதாவுடன் நான் அரை நிமிஷம் பேசக் கூட இல்லையே!" என்றாள் ராஜம்மாள். "நான் உங்களையொன்றும் சொல்லவில்லை. என் பிள்ளையைத்தான் சொல்கிறேன். சூரியாவின் துர்போதனை தான் இப்படி லலிதாவைப் பைத்தியமாக அடித்துவிட்டது. அவனுடைய புத்தியையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள்....!" இத்தனை நேரம் சும்மா கேட்டுக் கொண்டு நின்ற சூரியா இப்போது சம்பாஷணையில் தலையிட்டான். "என்னுடைய புத்தி சரியாகத்தான் இருக்கிறது. இந்த முட்டாள்தனமெல்லாம் வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன்; யாரும் கேட்கவில்லை. அம்மா! உங்கள் காலத்தில் நீங்கள் எல்லாரும் கலியாணம் பண்ணிக்கொண்டு திண்டாடுகிறது போதும். எங்களை எங்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள். லலிதாவுக்குப் பிடித்திருந்தால் கலியாணம் பண்ணிக் கொள்வாள். இல்லாவிட்டால் பிரம்மதேவன் வந்து சொன்னாலும் பண்ணிக்கொள்ள மாட்டாள். லலிதாவுக்குச் சொன்னது தான் சீதாவுக்கும்! மதராஸிலிருந்து வந்திருக்கும் மகா பிரகஸ்பதியைச் சீதாவுக்கும் பிடிக்காவிட்டால், பிடிக்கவில்லை என்று தைரியமாய்ச் சொல்லி விடட்டும். இதற்காக அவள் விம்மி அழ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" என்று சொன்னான் சூரியா. சூரியாவின் உள்ளம் அப்போது உண்மையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மதராஸிலிருந்து பெண் பார்க்க வந்த மகா பிரகஸ்பதியை அவனுக்கு ஏற்கெனவே பிடிக்கவில்லை. அந்தப் பிரகஸ்பதி லலிதாவுக்குப் பதிலாகச் சீதாவை மணந்து கொள்ள விரும்புகிறான் என்ற செய்தி கேட்டதும் அந்தக் கொந்தளிப்பு தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஜுவாலை விட்டுப் பொங்கியது. காமரா உள்ளின் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சீதா இன்னமும் விம்மிக் கொண்டிருந்தாள். லலிதா அவளுக்கு ஆறுதல் கூறிச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் கபடமற்ற லலிதாவிற்குச் சீதாவின் மனோநிலை என்ன தெரியும்? உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தை மறைத்துக் கொள்வதற்காகவே சீதா விம்மினாள். அவளுடைய மனக் கண் முன்னால் உலகமே ஒரு ஆனந்த நந்தவனமாகத் தோன்றியது. அந்த நந்தவனத்திலிருந்த மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தமிட்டன; சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது. இத்தகைய ஆனந்த நந்தவனத்தில் சீதாவின் உள்ளம் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எங்கேயோ கடல் பொங்கி மலைபோல் அலைகள் கிளம்பி மோதி விழும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் சீமாச்சுவய்யர் கிட்டாவய்யருக்கு ஆள் விட்டு அனுப்பினார்; கிட்டாவய்யர் போனார். அவரிடம் சப் ஜட்ஜ் சாஸ்திரியாரும் அவருடைய சக தர்மினியும் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். "உங்கள் குமாரிக்கு ஒரு குறையும் இல்லை. கிளி மாதிரிதான் இருக்கிறாள். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களின் போக்கே தனியாயிருக்கிறது. 'முதலிலே சீதாவைப் பார்த்தேன்; பார்த்தவுடனே அவளைப் பிடித்துவிட்டது. கலியாணம் பண்ணிக்கொண்டால் அவளைத்தான் பண்ணிக் கொள்வேன்' என்று பிள்ளையாண்டான் சொல்லுகிறான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்; கேட்கவில்லை. உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் நாளைக்கே நிச்சயதார்த்தம் செய்து விடலாம். பெண்ணுக்காவது பெண்ணின் தாயாருக்காவது பிடிக்காவிட்டால் அதையும் சொல்லி விடுங்கள்; இதில் வலுக்கட்டாயம் ஒன்றுமில்லை" என்றார்கள். கிட்டாவய்யர் திகைத்துப் போனார். ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. "அதற்கென்ன? பெண்ணின் தாயாரைக் கேட்டுவிட்டுச் சொல்லுகிறேன்" என்று புறப்பட்டார். புறப்பட்டவர் நேரே வீட்டுக்கு வரவில்லை. சீமாச்சுவய்யரையும் சுப்பய்யரையும் குளத்தங்கரைப் பங்களாவுக்கு அழைத்துப் போய் யோசனை செய்தார். அவர்கள் இருவரும், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! உங்கள் பெண்ணுக்கு என்ன? நூறு வரன் பார்த்துச் சொல்கிறோம். அந்த பம்பாய் பெண்ணுக்கு வரன் கிடைப்பதுதான் கஷ்டம். பணம் காசு இல்லாமல் பண்ணிக் கொள்கிறேன் என்கிறார்கள். வேண்டாம் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? அதனால் யாருக்கு என்ன லாபம்? நாளைக்கே 'பாக்கு வெற்றிலையைப் பிடி!' என்று நிச்சயதார்த்தம் செய்து விடுவதுதான் சரி!" என்றார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த ஆத்திரம் தணிந்து விட்டபடியால் கிட்டாவய்யருக்கு அதுதான் நியாயம் என்று தோன்றியது. ஆனால் இதைத் தம்முடைய பாரியாளிடம் எப்படி சொல்லிச் சரிக்கட்டுவது என்று யோசித்துக்கொண்டு இரவு ஒரு மணிக்கு வீடு திரும்பினார். அதற்கு வழி அவருடைய புதல்வன் சூரியா சொல்லிக் கொடுத்தான். தூக்கம் பிடியாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவுக்கு அதற்குள் மனம் தெளிவடைந்திருந்தது. யார் கண்டது? ஒருவேளை கடவுளுடைய விருப்பம் இவ்விதமிருக்கலாம். டில்லியில் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் பார்க்கும் சௌந்திரராகவன் தன்னைக் காட்டிலும் சீதாவுக்கு தக்க வரன் என்பதில் சந்தேகம் என்ன? அத்தங்காளின் அதிர்ஷ்டம் இந்த விதமாக அவனைக் கொண்டு விட்டிருக்கிறதோ என்னமோ? சீதாவின் வாழ்க்கை இன்பத்திற்குக் குறுக்கே நிற்கத் தனக்கு என்ன உரிமை? அன்றிரவு தாமோதரம் பிள்ளை வீட்டு மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவனுடைய நண்பன் பட்டாபிராமன் சொன்னது சூரியாவுக்கு நினைவுக்கு வந்தது. "செடியில் உள்ள புஷ்பத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தே நான் சந்தோஷப்படுவேன். அதைப் பறித்துக் கசக்கி முகர வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாது" என்று பட்டாபி சொன்னான் அல்லவா! அடடா! எவ்வளவு தாராளமான உள்ளம் அவனுக்கு! அந்தக் கொள்கையைத் தானும் ஏன் பின்பற்றக்கூடாது? கிட்டாவய்யர் இரவு ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்ததும் சூரியா, "அப்பா! அவர்கள் என்ன சொன்னார்கள்? என்ன முடிவு ஆயிற்று!" என்று கேட்டான். "இன்னும் நீ தூங்கவில்லையா, சூரியா? உங்களிடம்தான் யோசனை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அன்னம்மாள் சொன்னது உண்மைதான். 'சீதாவைத்தான் கலியாணம் பண்ணிக் கொள்வேன்' என்று அந்தப் பையன் சொல்கிறான். அவனுடைய அப்பா அம்மாவும் அதற்குச் சம்மதித்து விட்டார்கள். பணங்காசு சீர்வகையறா ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உன் தமையன் கங்காதரனைக் காட்டிலும் உன்னுடைய யோசனையைத்தான் நான் மதிக்கிறேன். அவனுக்குப் படித்துப் பரீட்சை பாஸ் செய்யத் தெரியுமே தவிர உலக விவகாரம் தெரியாது. நீ அப்படியில்லை? நாலும் தெரிந்தவன், உன் அபிப்பிராயத்தைச் சொல்!" என்றார். "அப்பா! இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டபடியால் இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். நம்முடைய வக்கீல் ஆத்மநாத ஐயரின் பிள்ளை பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கலியாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போன வருஷம் நீங்கள் எல்லோரும் தேவப்பட்டணத்திற்கு வந்து வக்கீல் வீட்டில் சில நாள் இருந்தீர்கள் அல்லவா? அப்போது பட்டாபி லலிதாவைப் பார்த்திருக்கிறான். லலிதாவை அவனுக்குப் பிடித்திருக்கிறது. வேறு வரன் பார்ப்பது பற்றி அவனுக்கு வருத்தம். அவன் மட்டும் என்ன, வக்கீல் ஐயர்வாளுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம்தான். 'நாங்கள் எல்லாம் உங்க அப்பாவுக்கு இலட்சியமா? பெரிய இடமாய்ப் பார்ப்பார்! தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளிர்ச்சி!' என்று ஜாடைமாடையாகச் சொன்னார்!" என்றான் சூரியா. "வாஸ்தவந்தான்! வக்கீல் ஆத்மநாதய்யரின் பிள்ளை நல்ல வரன்; எனக்கு அது ஞாபகம் இல்லாமற் போகவில்லை. ஆனால் உன் அம்மா 'இன்னும் பெரிய இடமாகப் பார்க்க வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். எனக்கென்னமோ பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கொடுப்பதற்குப் பூரண சம்மதம். அதைப் பற்றி யோசித்து முடிவு செய்வோம். சீதா விஷயம் என்ன சொல்கிறாய்?" என்று கிட்டாவய்யர் கேட்டார். "சீதா விஷயம் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவளுக்கும் அத்தைக்கும் சம்மதமாயிருந்தால் சரிதான். பணங்காசு அதிகம் செலவில்லாமல் இவ்வளவு நல்ல இடம் கிடைத்தால் சந்தோஷப்பட வேண்டியதுதானே? அதனால் நமக்கும் நல்ல பெயர் ஏற்படும்!" என்றான் சூரியா. "அப்படியானால், சூரியா, நீதான் உன் அம்மாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அவள் பத்ரகாளி அவதாரம் எடுத்திருக்கிறாள். நான் சொன்னால் தங்கையின் பெண்ணுக்குப் பரிந்துகொண்டு சொல்லுகிறேன் என்று நினைத்து இன்னும் அதிக ஆத்திரப்படுவாள்!" "அதற்கென்ன அப்பா! கட்டாயம் நான் அம்மாவைச் சரிக்கட்டிவிடுகிறேன்" என்றான் சூரியா. சூரியா ஏற்றுக்கொண்ட காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆயினும் கடைசியில் வெற்றி பெற்றான். முக்கியமாக மதராஸ் பையனுக்கு லலிதாவைக் கொடுத்தால் அவன் டில்லி எங்கே, லாகூர் எங்கே என்று தூர தேசங்களுக்குப் போய்க் கொண்டிருக்க நேரிடும் என்றும், வக்கீல் பிள்ளைக்குக் கொடுத்தால் பக்கத்தில் இருப்பாள் என்றும் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்றும் சூரியா கூறியது சரஸ்வதி அம்மாளின் மனசை மாற்றிவிட்டது. மறுநாள் சாயங்காலம் எல்லாருடைய சம்மதத்தின் பேரில் மதராஸ் பத்மாபுரம் மாஜி சப் ஜட்ஜ் பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வன் சிரஞ்சீவி சௌந்தரராகவனுக்குப் பம்பாய்த் துரைசாமி ஐயர் குமாரி சீதாவைப் பாணிக்கிரணம் செய்து கொடுப்பதாய் நிச்சயதார்த்தம் ஆயிற்று. பம்பாய்த் துரைசாமி ஐயர் இதற்கு ஆட்சேபம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று ராஜம்மாள் சம்பந்திகளுக்கு உறுதி கூறியதின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்த வைபவத்தில் லலிதாதான் எல்லாரிலும் அதிகக் குதூகலமாக இருந்தாள். ராகவனை 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு அவனிடம் பேசக்கூட ஆரம்பித்து விட்டாள். சீதாவின் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி நாம் தற்போது ஒன்றும் சொல்லாமல் நேயர்களின் கற்பனா சக்திக்கே விட்டுவிடுகிறோம். |