முதல் பாகம் : பூகம்பம்

31. மதகடிச் சண்டை

     ராஜம்பேட்டைத் தபால் சாவடியின் சுவரில் மாட்டியிருந்த காலெண்டர் ஏப்ரல் மாதம் 1 தேதி என்று காட்டியது.

     ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான்.

     "பாலகிருஷ்ணா! இது என்ன தொல்லை? தலையைக் காணோம் அப்பா!" என்றார் பங்காரு நாயுடு.

     "அதுதான் இருக்கே, ஸார்" என்றான் பாலகிருஷ்ணன்.

     "இருக்கா? எங்கே இருக்கு?"

     "கழுத்துக்கு மேலே தொட்டுப்பாருங்க ஸார்!"

     "இந்தத் தலையைச் சொல்லவில்லை, தம்பி! இது போனாலும் பரவாயில்லையே? தபால் தலையையல்லவா காணவில்லை?"

     "எத்தனை தலை, என்னென்ன தலை காணவில்லை?"

     "இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்!"

     "இவ்வளவுதானே? மசால்வடைக் கணக்கில் எழுதிவிடுங்க!"

     "உன் யோசனையைக் கேட்டால் உருப்பட்டால் போலத் தான். இருக்கட்டும்! இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய்?"

     "பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்!"

     "ஒரு கலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா? மொத்தம் ஆயிரம் கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம்!"

     "இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்!"

     "பின்னே நடக்காமல்? எல்லாம் நிச்சயம் ஆகிக் கடுதாசி கூட அச்சிட்டு அனுப்பிவிட்டார்களே!"

     "கடுதாசி அச்சிட்டால் சரியாப் போச்சா? நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்."

     "நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய்?"

     "சும்மாதான் கேட்டுவச்சேன்!"

     "இதுதான் உனக்கு ஜோலி போலிருக்கிறது. அதனாலே தான் மூன்றுநாள் கடிதங்களை டெலிவரி செய்யாமல் வைத்திருக்கிறாய். பட்டாமணியம் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிடு, அப்பா! ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்."

     "பிரமாத முக்கிய விஷயம்! அது கிடக்கட்டும், ஸார்! இரண்டு நாள் முன்னே பின்னே கொண்டு போய்க் கொடுத்தால் தலையா போய்விடும்?"

     "தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி! கிட்டாவய்யர் நல்ல மனுஷர்! நமக்குக்கூடக் கலியாணத்துக்குக் கடிதாசி வைத்திருக்கிறார். ஒருவேளை கலியாணச் சாப்பாடு பலமாகக் கிடைக்கும் நீ வரப்போகிறாய் அல்லவா?"

     "நான் வரமாட்டேன். நம்மைத் தனியாக வைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள்? இந்தப் பாப்பராச் சாதியே இப்படித்தான்."

     "பிராமணத் துவேஷம் பேசாதே தம்பி! சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும், க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்..."

     "நிறுத்துங்கள், ஸார்! இந்தப் பழங்கதையெல்லாம் யாருக்கு வேணும்? எல்லாம் பிராமணர்களே எழுதி வச்ச கட்டுக்கதை தானே! இந்தக் காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள்!"

     "அப்படியானால் சாஸ்திரமெல்லாம் பொய்யா? சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்!- என்று வசனம் சொல்கிறதே!"

     "வெள்ளைக்காரன் கூடத்தான் கிரகணத்தைக் கண்டுபிடித்துச் சொல்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தும் சாஸ்திரங்களைத் தீயிலே போட்டுக் கொளுத்த வேண்டும்!"

     "நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப் போகிறாயோ?"

     "சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் போகிறேன்; காங்கிரஸ் கூட்டங்களுக்கும் போகிறேன்."

     "அப்படி என்றால் நீ உருப்பட்டாற்போலத்தான், போனால் போகட்டும். பட்டாமணியார் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அந்தப் பம்பாய் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் கூடக் கடிதங்கள் இருக்கின்றன."

     "அந்தப் பம்பாய்ப் பெண் இருக்கிறதே! அது சுத்த அரட்டைக்கல்லி! நான் முந்தாநாள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து, டா, டூ போட்டுப் பேசிற்று. 'இந்தா, அம்மா! டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம்!' என்று சொல்லி விட்டேன்."

     "கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த்தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன் கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்!"

     "எட்டு நூறு சம்பளக்காரனாயிருந்தால் என்ன? எட்டாயிரம் சம்பளக்காரனாயிருந்தால் என்ன? யாராயிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்! டியூடி என்றால் டியூடி! சிநேகம் என்றால் சிநேகம்! அப்படி அந்தப் பம்பாய் பெண்ணுக்குக் கலியாணம் நடக்கிறது என்பதும் நிச்சயமில்லை; நின்னு போனாலும் போய்விடும்."

     "அப்படி உன் வாயாலே நீ எதற்காகச் சொல்கிறாய்!"

     "பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க?"

     இவ்விதம் சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் தபால் பையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

     பாலகிருஷ்ணன் வெளியே போய்ச் சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியநாராயணன் தபால் சாவடிக்கு வந்தான். போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடுவைப் பார்த்து, "எங்கள் வீட்டுக்கு ஏதாவது கடிதம் இருக்கிறதா, ஸார்?" என்று கேட்டான்.

     "ஓ! இருக்கிறதே! உனக்கு, அப்பாவுக்கு, பம்பாயிலிருந்து வந்திருக்கிற அம்மாவுக்கு, அந்த அம்மாளின் பெண்ணுக்கு - எல்லாருக்கும் இருக்கிறது. பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எதிரே அவனைப் பார்க்கவில்லையா?"

     "பார்க்கவில்லையே? எதிரே காணவில்லையே?" என்று சொல்லிக்கொண்டே சூரியா வெளியேறினான்.

     அப்போது சூர்யா வெகு உற்சாகமான மனோநிலையில் இருந்தான். அவன் இஷ்டப்படியே எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தன. அவனுடைய முயற்சியினால் லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இதில் இரு தரப்பாருக்கும் வெகு சந்தோஷம். சீதாவின் கலியாணத்தைத் தனியாக எங்கேயாவது ஒரு கோயிலில் நடத்தி விடலாமென்று பம்பாய் அத்தை சொன்னாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதிப்பார்கள் போலிருந்தது. சூரியா அது கூடாது என்று வற்புறுத்தி இரண்டு கலியாணமும் ஒரே பந்தலில் நடத்தவேண்டுமென்று திட்டம் செய்தான்.

     இதனாலெல்லாம் உற்சாகம் கொண்ட சூரியா கலியாண ஏற்பாடுகளில் மிகவும் சிரத்தை கொண்டு அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தானே பல காரியங்களைச் செய்து வந்தான். நல்ல வேளையாக எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையும் முடிந்து விட்டது. முகூர்த்தத் தேதிக்குப் பத்து நாள் முன்னதாகவே சூரியா கிராமத்துக்கு வருவது சாத்தியமாயிற்று.

     மாப்பிள்ளை அழைப்புக்கு 'டிரஸ்' வாங்குவது சம்பந்தமாகச் சூரியா பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதற்குப் பட்டாபியின் பதிலை எதிர்பார்த்து இன்று தபால் சாவடிக்கு வந்தவன் ஏமாற்றமடைந்தான். திரும்பிப் போகும் போது சாலையில் இருபுறமும் பார்த்துக்கொண்டு போனான். பாலகிருஷ்ணன் எங்கேயாவது சாலை ஓரத்தில் மரத்தின் மறைவில் உட்கார்ந்து சுருட்டுக் குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?

     அவன் எதிர்பார்த்தது சரியாயிற்று. சாலைத் திருப்பம் ஒன்றில் வாய்க்கால் மதகடியில் பாலகிருஷ்ணன் உட்கார்ந்து ஒரு கடிதத்தைக் கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான்.

     எவ்வளவு கவனமாக என்றால், சூரியா அவனுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து நின்றதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

     சூரியாவுக்கு அப்போது ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. ஆகையால் 'பாலகிருஷ்ணா' என்று கூப்பிடப் போனவன் அடக்கிக்கொண்டு கீழே பாலகிருஷ்ணன் பக்கத்தில் கிடந்த கடிதத்தின் உறையை உற்றுப் பார்த்தான். அதில் பம்பாய் அத்தையின் விலாசம் எழுதியிருந்தது.

     சூரியாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "அடே இடியட்! என்னடா செய்கிறாய்?" என்று கர்ஜித்தான்.

     பாலகிருஷ்ணன் திடுக்கிட்டுத் திரும்பி, "என்னடா என்னை 'இடியட்' என்கிறாய்? நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்!" என்றான்.

     சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. "என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்?" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையை வைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும் குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள்.

     மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன.

     "ஐயோ! இது என்ன? சூரியாவும் தபால்கார பாலகிருஷ்ணனும் சண்டை போடுகிறார்களே!" என்று லலிதா கூவினாள்.

     "ஆமாண்டி! இது என்ன வெட்கக்கேடு?" என்றாள் சீதா.

     ராஜம்மாள் மிக்க வருத்தத்துடன், "சூரியா! சூரியா! இது என்ன நடுரோட்டில் நின்று சண்டை? நிறுத்து!" என்று கூவினாள்.

     ராஜம்மாளின் குரல் கேட்டதும் இருவரும் சண்டையை நிறுத்தி வெட்கிப் போய் நின்றார்கள்.

     "சூரியா! வா, வண்டியில் ஏறிக்கொள்ளு! வீட்டுக்குப் போகலாம்!" என்றான் பாலகிருஷ்ணன்.

     "அத்தை! இது விளையாட்டுச் சண்டை! நீங்கள் போங்கள்! நான் இதோ பின்னோடு வருகிறேன்" என்றான்.

     "நிச்சயந்தானா?- பாலகிருஷ்ணா! சூரியா சொல்கிறது உண்மையா?" என்று அத்தை கேட்டாள்.

     "ஆமாம், அம்மா! நாங்கள் சும்மாத்தான் சண்டை போட்டோ ம்!" என்றான் பாலகிருஷ்ணன்.

     வண்டி மேலே நகர்ந்தது.

     சீதா லலிதாவைப் பார்த்து, "நீ இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாயே, லலிதா! உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனை அசடாயிருக்கிறான்?" என்றாள்.

     "அப்படிச் சொல்லாதே, சீதா! சூரியா ஒன்றும் அசடு இல்லை. ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்; அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்" என்றாள் ராஜம்மாள்.

     வண்டிக்காரனும் சேர்ந்து, "ஆமாம், அம்மா! நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்ச நாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார்!" என்றான்.

     வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, "பாலகிருஷ்ணா! உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே? பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா? அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா!" என்றான்.

     "தப்புத்தான்; ஒப்புக் கொள்கிறேன் ஆனால் நல்ல எண்ணத்துடனேதான் செய்தேன். இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உனக்கும் அது தெரியும்!" என்று சொல்லிப் பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான்.

     சூரியா அந்தக் கடிதத்தில் முதல் நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது.

     "இந்த மாதிரிக் கடிதம் இது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான்.

     "நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்று எழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப் பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்ன? உனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்துவிடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடி! தெரியுமா?"

     "நான் உன்மேல் கை வைத்தது தப்பு என்றுதான் முன்னேயே சொன்னேனே! இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம் நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு. நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்!" என்றான் சூரியா.

     "அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்!" என்றான் பாலகிருஷ்ணன்.