முதல் பாகம் : பூகம்பம்

6. மந்திராலோசனை

     கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து எழுந்த போது கீழே விழுந்த கடிதத்தை எடுத்து நின்ற வாக்கிலேயே அதைப் பிரித்துப் படித்தார். பாதி படிக்கும் போதே, "சீச்சீ! இங்கிலீஷ் படித்தவர்களுக்குப் புத்தியே இருப்பதில்லை. அதிலும் மதராஸில் குடியேறிவிட்டால், அவர்களுக்கு தலைகால் புரிகிறதில்லை சுத்த கர்வம் பிடித்தவர்கள்!" என்றார்.

     சரஸ்வதி அம்மாளுக்கு, "நீங்கள் இங்கிலீஷ் படிக்காவிட்டால் படித்தவர்களை எதற்காகத் திட்டுகிறீர்கள்?" என்று சொல்லத் தோன்றியது. ஆனாலும் 'மதராஸ்' என்றதும் அவளுடைய நினைவு வேறு பக்கம் திரும்பியது. கடிதத்தின் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவலினால் நாவை அடக்கிக் கொண்டாள். கிட்டாவய்யர் கடிதத்தை முழுதும் படித்தபிறகு, "கடிதம் யார் எழுதியிருக்கிறார்கள்? என்ன எழுதியிருக்கிறது?" என்று கேட்டாள்.

     கிட்டாவய்யருக்குத் தன் மனைவி பேரில் ஏற்பட்டிருந்த அற்ப கோபம் இதற்குள் மாறி மதராஸ்காரர்களின்மீது திரும்பியிருந்தது. ஆகையால் சரஸ்வதி அம்மாளின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.

     "பழைய மாம்பலத்தில் இருக்கிறானே, ஒரு பிரகஸ்பதி, அவன் எழுதியிருக்கிறான். அவனுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்!"

     "ஓகோ! உங்கள் சின்ன மாமா எழுதியிருக்கிறாரா? என்ன எழுதியிருக்கிறார்?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். அவளுடைய குரலில் பரபரப்பு அதிகமாயிருந்தது.

     கிட்டாவய்யர், "பட்டணத்தில் பத்மாபுரத்தில் ஒரு நல்ல வரன் இருக்கிறது என்று சீமாச்சு சொன்னான் அல்லவா? அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி சொல்லியிருந்தேன். பிள்ளையின் தாய் தகப்பனாரைப் போய்ப் பார்த்தானாம். அவர்கள் பெண்ணை மதராஸுக்கு அழைத்துக் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்கிறார்களாம்! மதராஸ்காரர்களுக்கே தலையில் மூளை இராது போலிருக்கிறது. சந்தைக்கு மாட்டைக் கொண்டு போவது போல் பெண்ணை அழைத்துக் கொண்டு போக வேண்டுமாம்! அப்படியாவது அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்களா? பெண்ணையும் கொடுத்துத் தட்சணையாகப் பணம் கொடுக்க வேண்டுமாம்! அவர்கள்தான் அப்படிப் புத்தியில்லாமல் சொன்னார்கள் என்றால், இவனுக்கு எங்கே புத்தி போயிற்று? 'லலிதாவை இங்கே ஒரு தடவை அழைத்துக் கொண்டு வருவது நலம்' என்று எழுதியிருக்கிறான்! நலமாம் நலம்! நலத்தை ரொம்பக் கண்டுவிட்டான் இவன்!" என்று கிட்டாவய்யர் சரமாரியாகப் பொழிந்தார்.

     "இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது. கோபம், பாவம், சண்டாளம் என்று நீங்களே அடிக்கடி சொல்வீர்களே? உங்கள் சின்ன மாமா யோசிக்காமல் எழுதக் கூடியவர் அல்ல. அப்படிக் குழந்தையை அழைத்துக்கொண்டு போனால் அவர்கள் வீட்டுக்கா நேராகப் போகப் போகிறோம்? உங்கள் சின்ன மாமா வீட்டில்தானே போய் இறங்குவோம்? அங்கே வந்து பார்க்கச் சொன்னாலும் போயிற்று! இதற்காக நீங்கள் இவ்வளவு கோபித்துக் கொள்வானேன்?" என்று சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாந்த உபதேசம் செய்தாள்.

     லலிதாவுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்பதில் சரஸ்வதி அம்மாளுக்கு இருந்த ஆர்வம் சில சமயம் அவளை ரௌத்ராகாரம் கொள்ளச் செய்தது; வேறு சில சமயம் அபாரமான சாந்த குணத்தை மேற்கொள்ளும்படியும் செய்தது.

     "அதெல்லாம் முடியாத காரியம், கண்ட முட்டாள் பயல்களுக்கு முன்னால் நம்ம லலிதாவை அழைத்துக் கொண்டு காட்டுவதா? அப்படி என்ன இப்போது வந்துவிட்டது? இவன் இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர். ஒரு பையன் வந்து பெண்ணைப் பார்ப்பது, அப்புறம் பெண் வேண்டும், வேண்டாம் என்று சொல்வது - இதுவே ஆபாசமான காரியம். பெண்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவது ரசாபாசமான விஷயம்!..."

     சரஸ்வதி அம்மாள் குறுக்கிட்டு, "இப்போது என்ன குடி முழுகிவிட்டது? எதற்காகக் கோபித்துக் கொள்கிறீர்கள்? எல்லாவற்றுக்கும் கோடி வீட்டுக்காரரை யோசித்துக்கொண்டு தீர்மானம் செய்தால் போகிறது!" என்றாள்.

     கோடி வீட்டுக்காரர் என்று சரஸ்வதி அம்மாள் குறிப்பட்டது சீமாச்சுவய்யரைத்தான். அவரைக் குறிப்பிட்டவுடனே கிட்டாவய்யரின் கோபம் அடங்கிவிடும் என்று அந்த அம்மாள் நன்கறிந்திருந்தாள். அவள் நினைத்தபடியே ஆயிற்று. கிட்டாவய்யர் அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு வெளிக் கிளம்பினார்.

     மேலக்கோடி வீட்டுத் திண்ணையில் ஏற்கனவே மூன்று பேர் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். சீமாச்சுவய்யர் என்கிற சீனிவாச அய்யர் கையில் சீட்டுக் கட்டுடன் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவய்யரும், அப்பாத்துரை சாஸ்திரிகளும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தலைக்கு ஒரு ஏட்டைப் பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

     கிட்டாவய்யர் வந்ததும் சாஸ்திரிகள் பத்திரிகையிலிருந்து தலையைத் தூக்கி, "ஐயர்வாள்! தெரியுமா சமாசாரம்? பீஹாரிலே பெரிய பூகம்பமாமே?" என்றார்.

     பஞ்சுவய்யர், "அது என்ன அவருக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்? பூகம்பத்தை உண்டாக்கினதே அவர்தானே! லலிதா தபால் ஆபிஸுக்குப் போனால் பூகம்பா வந்துவிடும் என்று இவர் சம்சாரத்திடம் சொல்லிக் கொண்டேயிருந்தாராம். அடுத்த நிமிஷம் சீமாச்சு 'பீகாரிலே பூகம்பம்' என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றானாம். முனிபுங்கவரின் வாக்கு அந்த க்ஷணமே பலிதமாகி விட்டது!" என்றார்.

     "ஒரு காலத்திலே பிராமணனுடைய வாக்குப் பலித்துக் கொண்டுதான் இருந்தது! இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது. நானும்தான் கேட்கிறேன், அந்தப் பெண் குழந்தை தபாலாபீசுக்குப் போகாவிட்டால் என்ன முழுகிப் போகும்? தபாலாபீசுக்குப் போக அய்யர் வீட்டில் ஆள் இல்லையா? தேள் இல்லையா?" என்றார் சாஸ்திரிகள்.

     சீமாச்சு ஐயர் குறுக்கிட்டு, "ஆள் இல்லாவிட்டாலும் தேள் நிறைய இருக்கிறது! சட்! சும்மா இருங்காணும்! லலிதா தபாலாபீசுக்குப் போனதினால் என்ன முழுகிப் போய்விட்டது? அதைத்தான் சொல்லுமே? உலகம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது என்று உமக்குத் தெரியுமா?" என்றார்.

     "நீங்கள் இப்படி முன்னேற்றம், பின்னேற்றம் என்று பேசப்போகத்தான் ஊரிலே பூகம்பம் வருகிறது!" என்றார் சாஸ்திரிகள்.

     "நாம் இங்கே பேசுகிறதற்காகப் பூகம்பம் பீஹாரிலே வருவானேன்?" என்று கேட்டார் பஞ்சுவய்யர்.

     "அந்தப் பூகம்பம் இங்கே வருவதற்கு எத்தனை நேரம் ஆகும்? பகவான் கிருபை செய்தால் அடுத்த நிமிஷம் இங்கேயே வந்து விடுகிறது!"

     "பூகம்பம் வருகிறதோ, இல்லையோ, மகாத்மா நம்முடைய மாகாணத்துக்கு வரப்போகிறாராம்!" என்று சொல்லிப் பஞ்சுவய்யர் பத்திரிகையில் போட்டிருந்த கொட்டை எழுத்துத் தலைப்பைக் காட்டினார்.

     "எதற்காக வருகிறாராம் தெரியுமா? கோயில்களையெல்லாம் பதிதர்களுக்குத் திறந்துவிடுவதற்காக வருகிறாராம்! பூகம்பம் ஏன் வராது என்று கேட்கிறேன். பூகம்பம் மட்டும்தானா வரும்? பூகம்பம், புயற்காற்று, பெருமழை, பிரளயம், மகாப் பிரளயம் எல்லாந்தான் வரும், வந்து உலகமே அழிந்து போகும்!"

     "ஓய்! சாஸ்திரிகளே! பஞ்சாதி சொல்கிற வாயினால் இப்படித் துர்வாக்குச் சொல்லி வைக்காதீர்! தப்பித் தவறிப் பலித்து வைக்கப் போகிறது!" என்றார் பஞ்சுவய்யர்.

     "அந்தப் பயம் நமக்கு வேண்டாம். அப்பாதுரை சாஸ்திரிகள் வாக்குப் பலிக்கிறதாயிருந்தால் இந்த ஊர் இப்படியா இருக்கும்? 'தீர்க்க சுமங்கலிபவா' என்று இந்த மகான் எத்தனை பேருக்கு ஆசீர்வாதம் பண்ணியிருக்கிறார்! அவருடைய ஆசீர்வாதம் பெற்றவர்கள் எல்லாரும் சுமங்கலிகளாயிருக்கிறார்களா? இந்த ஊரில் மாஜி சுமங்கலிகள்தானே அதிகமாகியிருக்கிறார்கள்!" என்று சீமாச்சுவய்யர் சற்றுக் கிருக்காகப் பேசினார்.

     "இந்த வீண் வம்பு கிடக்கட்டும், சீமாச்சு! நான் உன்னிடம் ஒரு யோசனை கேட்பதற்காக வந்தேன்!" என்றார் கிட்டாவய்யர்.

     "முன்னமே சொல்லியிருக்கக்கூடாதோ? வா, உள்ளே போகலாம்" என்று சீமாச்சு சொல்ல இருவரும் உள்ளே கூடத்துக்குச் சென்றார்கள்.

     பம்பாயிலிருந்தும் மதராஸிலிருந்தும் வந்திருந்த கடிதங்களைப் பற்றிக் கிட்டாவய்யர் விவரமாகச் சொல்லி, "உன்னுடைய யோசனை என்ன?" என்று கேட்டார்.

     சீமாச்சுவய்யர் தம்முடைய அபிப்பிராயத்தைக் கூறினார்.