இரண்டாம் பாகம் : புயல்

12. சரித்திர நிபுணர்

     "ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு: இன்று தாஜ்மகாலில் என்னால் தங்களுக்கு நேர்ந்த இன்னலைக் குறித்து வருந்துகிறேன். தங்கள் நெற்றியில் காயப்படுத்தி இரத்தம் வருவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அணுவளவும் இருந்ததில்லை. அத்தகைய சந்தேகம் தாங்களும் கொண்டிருக்க மாட்டீர்கள். பேசும்போது உணர்ச்சி வேகத்தினால் தூண்டப்பட்டுக் கையிலிருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தேன். அது சுக்கு நூறாயிற்று. இதைப் பற்றி நான் வருந்தவில்லை. அசல் தாஜ்மகாலும் ஏதேனும் ஒரு காரணத்தினால் இம்மாதிரி நொறுங்கிப் போயிருந்தாலும் அதற்காக நான் சிறிதும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ ஒரு மௌடீகக் கிழவனுடைய கையில் இந்தப் பெரிய தேசம் ஒரு காலத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வயோதிகத்தினால் அறிவு மங்கி வந்த நாளில், அந்த அரசன் காதல் என்னும் மூடப்பிரமை காரணமாக ஒரு பெரிய பொம்மை செய்தான். செத்துப்போன தன்னுடைய காதலியின் ஆத்ம திருப்திக்காக என்றெண்ணிக் கோடி கோடி ரூபாய்ச் செலவிட்டு அந்தப் பொம்மையைச் செய்தான். இதைத் தான் 'தாஜ்மகால்' என்னும் உலக மகா அதிசயங்களில் ஒன்று என்பதாக அறிவற்ற சிந்தனா சக்தியில்லாத, மனித மந்தைகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன; வியந்து கொக்கரிக்கின்றன! இது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்.

     ஆனால் எப்போதோ இருந்து இறந்துபோன கிழவன் ஷாஜஹான் தாஜ்மகால் கட்டியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பேரில் எனக்குக் கோபம் கிடையாது. கோபம் காரணமாக வேண்டுமென்று அந்தப் பொம்மைத் தாஜ்மகாலை நான் எறியவில்லை. அதன் துகள் தங்கள் நெற்றியில் பட்டுக் காயமாகும் என்றாவது, இரத்தம் வரும் என்றாவது கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படி எதிர்பாராமல் நேர்ந்த காரியத்திற்காக மறுபடியும் தங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்.

     ஆனால் இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் இன்னொரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். தங்களைக் காயப்படுத்த விரும்பவில்லையென்று சொன்னேனல்லவா? ஆனால் தங்களுடைய நெற்றியில் ஒரு சிறு காயம் பட்டுவிட்டதற்காக அப்படித் தங்களைச் சூழ்ந்து கொண்டு, 'ஆ ஹு' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே, அவர்களை எல்லாம் தலையில் இரண்டு குட்டுக் குட்டிக் கன்னத்திலும் இரண்டு அறை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது! என் கையில் பிரம்பு இருந்தால் தலைக்கு நாலு அடி முதுகில் கொடுத்து இழுத்து அப்பால் விட்டிருப்பேன்.

     அறிவற்ற நிர்மூடர்கள்! ஒரு சின்ன விஷயத்துக்கு எத்தனை கூச்சல்? எத்தனை குழப்பம்? எவ்வளவு ஆர்ப்பாட்டம்?

     பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்குள்ளே இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ மகத்தான கஷ்டங்களைச் சகித்தாக வேண்டும்; லட்சக்கணக்கான ஜனங்கள் உயிரைப் பலி கொடுத்தாக வேண்டும்; கண்ணைத் திறந்து கொண்டு நெருப்பிலே குதித்தாக வேண்டும். சுதந்திரமடைந்திருக்கும் வெளி நாடுகளைப் பாருங்கள்! நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர் புரிந்து எத்தனை பேர் கையிழந்தும், காலிழந்தும் கண்ணிழந்தும் அங்கஹீனர்களாக வாழ் நாள் முழுவதும் காலம் கழிக்கிறார்கள். முகமெல்லாம் பயங்கரமான காயங்களின் அடையாளங்களுடன் எத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள்? இந்த நாட்டில் நாமோ ஒரு நெற்றிக் காயத்திற்காக ஒரு துளி ரத்தம் வந்துவிட்டதற்காக இவ்வளவு தடபுடல் படுத்துகிறோம்! இப்படிப்பட்ட கோழைகளையும் பயங்கொள்ளிகளையும் 'ஹிஸ்டீரியா' நோயாளிகளையும் வைத்துக்கொண்டு இந்தப் பாரத தேசம் எப்படித்தான் சுதந்திரம் அடையப் போகிறதோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

     இந்த வீர பூமியில் நம்முடைய முன்னோர்கள் இப்படியெல்லாம் இருக்கவில்லை. வீர இராஜபுத்திர நாட்டுக்கு நாளை நீங்கள் போவீர்கள். அங்கே எத்தகைய வீர புருஷர்களும் வீர வனிதைகளும் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்! 'கோட்டை விழுந்து விட்டது; எதிரிகள் உள்ளே புகுந்து விட்டார்கள்!' என்று கேட்டதும், தயாராக வளர்த்து வைத்திருந்த பெருந்தீயில் நூற்றுக் கணக்கான நாரீமணிகள் விழுந்து உயிரை விட்ட நாடல்லவா இது! ராணா டங்கிராமசிங் என்று ஒரு மகாவீரன் இருந்தான். அவனுடைய தேகத்தில் போர்க்களத்திலே பெற்ற தொண்ணூற்றாறு காயங்களின் வடுக்கள் இருந்தனவாம்! முத்துக்களும் ரத்தினங்களும் பதித்த ஆபரணங்களைக் காட்டிலும் அந்தக் காயங்களின் வடுக்களையே சிறந்த பூஷணமாக அந்த மகா வீரன் கருதினானாம். அப்படிப்பட்ட வீரர்கள் வாழ்ந்த தேசத்தில் இன்றைக்கு ஒரு சிறு காயம் நம்மையெல்லாம் நிலை கலங்கச் செய்துவிடுகிறது. பெண்களை மட்டுமல்ல; புருஷர்களைக்கூட 'ஹிஸ்டீரியா' வுக்கு உள்ளாக்கி விடுகிறது!

     இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்; எங்கள் நாட்டுக் கவி 'நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாரதியார் பாடல் சீதாவுக்குத் தெரியும்; பாடச் சொல்லிக் கேளுங்கள்.

இங்ஙனம்,
சூரியா.

     இந்தக் கடிதத்தை ஆக்ராவிலிருந்து ரஜினிப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வைத்துத் தாரிணி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு தடவை படித்து இரண்டாந் தடவையும் படித்து விட்டு அந்தக் கடிதத்தைத் தன்னுடைய கைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள்.

     இதைப் பார்த்த ராகவன், "கடிதத்தை இவ்வளவு பத்திரமாய் வைத்துப் பூட்டுகிறீர்களே? அது என்ன காதல் கடிதமா?" என்று கேட்டான்.

     "பிதற்றல்!" என்றாள் தாரிணி; ராகவனுடைய கேள்வியைப் பற்றி மேற்கண்ட அபிப்பிராயத்தை அவள் தெரிவித்தாள். ஆனால் ராகவன் அதைத் தெரிந்து கொள்ளாததுபோல், "பிதற்றலைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவானேன்!" என்றான்.

     அன்று காலையில் தாரிணியும் அவள் தோழியும் வந்து ரயில் ஏறியபோது எற்கெனவே வண்டியில் ராகவனும் சீதாவும் மட்டும் ஏறியிருப்பதைக் கவனித்தார்கள். தாரிணியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது "சூரியா எங்கே?" என்றாள்.

     "அவன் வரவில்லை டில்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன்.

     "நேற்றிரவுச் சம்பவத்துக்காக அவரைச் சண்டை பிடித்துத் துரத்தி விட்டீர்களா, என்ன!" என்று தாரிணி கேட்டாள்.

     "நாங்கள் ஒன்றும் சண்டை பிடிக்கவில்லை. அவனுக்கே அவமானமாயிருந்தது போலிருக்கிறது. பிடிவாதமாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன்.

     சீதா தன்னுடைய அம்மாஞ்சியின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டி, "அவனுக்கு ஏதோ அவசர ஜோலியாம். ஆக்ராவுக்கு மட்டும் வருவதாகத்தான் முன்னே சொல்லியிருந்தான். உங்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் கூட கொடுத்திருக்கிறான்?" என்று கூறினாள். பிறகு தன் கணவனைப் பார்த்து, "கடிதத்தை அவரிடம் கொடுங்களேன்!" என்றாள்.

     "வண்டி புறப்படட்டும்; இப்போது என்ன அவசரம் அந்தக் கடிதத்திற்கு?" என்றான் ராகவன்.

     தாரிணி, "மன்னிப்பாவது, கடிதமாவது? ஒரு சின்ன விஷயத்துக்காக நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரைச் சண்டை பிடித்துத் துரத்திவிட்டீர்கள். எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றாள்.

     இது சீதாவுக்குத் திருப்தியாயிருந்தது, ஆனால் ராகவன் கோபமாக, "சின்ன விஷயமா அது! நெற்றியில் பட்டதுபோல் கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இருந்தாலும், மனிதராய்ப் பிறந்தவர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது?" என்றான்.

     அவனுடைய அபிப்பிராயத்தை நிருபமா ஆதரித்து, "ஆமாம்; அந்தப் பையன் சுத்தப் பட்டிக்காடாகத்தான் நடந்து கொண்டான்!" என்றாள்.

     "பட்டணங்களில் உள்ளவர்கள் ரொம்ப நாகரிகமாக நடந்து கொள்வதாக உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. பட்டணங்களில் வசிப்பவர்கள் எப்படிச் சில சமயம் புலி கரடிகளாகவும், பேய் பிசாசுகளாகவும் மாறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!" என்றாள் தாரிணி.

     வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம், "அந்தக் கடிதம் எங்கே?" என்று தாரிணி கேட்டாள்.

     "ஏது? ஏது? அதைப் பார்க்காவிட்டால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படாது போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான்.

     "அது என்ன காதல் கடிதமா?" என்று ராகவன் கேலியாகப் பேசியபோது, அவர்கள் எல்லாருக்கும் கடிதத்தை முழுவதும் படித்துக் காட்டிவிட வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றியது. மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அந்தக் கடிதத்தில் அடங்கியுள்ள விஷயங்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மேலும் ஏதாவது பரிகாசமாகப் பேசுவார்கள். இவ்விதம் எண்ணிச் சீதாவைப் பார்த்து, "நீங்கள் மறுபடியும் உங்கள் அம்மாஞ்சியைப் பார்க்கும் போது, 'இவ்வளவு நீளமான மன்னிப்புக் கடிதத்துக்கு அவசியமே இல்லை' என்று நான் சொன்னதாக அவரிடம் தெரியப்படுத்துங்கள்! என்றாள்.

     ஆயிரம் ஆண்டுகளாக வீர புருஷர்களின் இரத்தமும் தீர மாதரசிகளின் கண்ணீரும் சிந்திப் புனிதமான இராஜபுத்திர நாட்டுக்குள் அவர்கள் ஏறியிருந்த ரயில் வண்டி பிரவேசித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வறண்ட பூமி; அல்லது மொட்டைப் பாறைகள்; ஆங்காங்கே இடிந்த கோட்டைச் சுவர்கள்; சிதைந்த மண்டபங்கள்; பாழடைந்த மசூதிகள்; பசுமை என்பதையே பார்க்க முடியவில்லை. அடர்த்தியான காடுகள் இல்லை; பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற நெல் வயல்கள் இல்லை; பொன்னிறம் கொண்ட கோதுமைப் பயிர்களும் இல்லை; சிற்சில இடங்களில் தானாக மண்டிய முட்புதர்கள் மட்டும் காணப்பட்டன.

     "நாம் போகிற வழி நெடுகிலும் இப்படித்தான் இருக்குமா?" என்று சீதா கேட்டாள்.

     "இல்லை; ரஜினிபூர் சேர்ந்துவிட்டால் வேறு விதமாயிருக்கும். ஆனால் அங்கே போய்ச் சேருகிற வரையில் இந்த லட்சணந்தான். 'சுதந்திரம், சுதந்திரம்' என்று அடித்துக் கொள்ளுகிறார்களே; இராஜபுத்திர வீரர்கள் அந்த நாளில் சுதந்திரத்துக்காகப் போரிட்டதன் பலன்தான் இது! இராஜஸ்தானத்தில் பெரும் பகுதி பாலைவனமாகப் போய்விட்டது!" என்று ராகவன் சொன்னான்.

     "இராஜபுத்திரர்கள் சுதந்திரத்துக்காகப் போரிட்டதனால் இராஜஸ்தானம் பாலைவனமாகவில்லை. ஒருவருக்கொருவர் சகோதரச் சண்டையிட்டதினால் இப்படியாயிற்று. அண்ணன் சுதந்திரத்துக்காகச் சண்டை போட்டால் தம்பி எதிராளியோடு சேர்ந்து கொண்டான். எத்தனை ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு அடிமையாகி ஏவல் செய்து வாழ்ந்தார்கள்! இந்திய தேசம் நாசம் அடைந்தது சகோதரச் சண்டையினால்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், இவற்றை எல்லாம் சரித்திரத்தில் படித்திருந்தும் நமக்குப் புத்தி வந்தபாடில்லை. இன்னமும் சகோதரச் சண்டைகள் போட்டுக் கொண்டுதானிருக்கிறோம்" என்றாள் தாரிணி.

     "அம்மணி! நீங்கள் என்ன பெரிய சரித்திர நிபுணரைப் போல் பேசுகிறீர்களே!" என்று ராகவன் பரிகாசக் குரலில் கேட்டான்.

     "என்ன சொன்னீர்கள்?" என்று சொல்லிவிட்டு நிருபமா இடியிடி என்று சிரித்தாள்.

     அவளுடைய சிரிப்பின் காரணம் என்னவென்று விளங்காமல் ராகவன் திகைத்தான்.

     "எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்றான்.

     "என்ன சொன்னீர்கள்? 'பெரிய சரித்திர நிபுணரைப் போல்' என்றா? 'போல்' என்று சொன்னதற்காகத்தான் சிரித்தேன்" என்றாள் நிருபமா.

     "அப்படிப் 'போல்' என்ற வார்த்தையில் நகைச்சுவை என்ன இருக்கிறது? எனக்கு விளங்கவில்லையே?"

     "உங்களுக்கு விஷயம் தெரியாதென்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தாரிணியைப் பழைய தேச சேவிகை தாரிணி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. பீஹார் பூகம்பத்துக்குப் பிறகு அவள் காலேஜில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று இப்போது யூனிவர்சிடி உதவிச் சம்பளம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள். இது உங்களுக்குத் தெரியுமென்று எண்ணியிருந்தேன். பின்னே எதற்காக என்னையும் இழுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைகிறாள் என்று நினைத்தீர்கள்? தற்போது இராஜஸ்தானத்துச் சரித்திரத்தில் விசேஷ ஆராய்ச்சி நடைபெறுகிறது!"

     நிருபமா இவ்விதம் சொன்னதும் ராகவனுடைய உள்ளம் ஒரே ஒரு நிமிஷத்தில் என்னவெல்லாமோ கற்பனை செய்யத் தொடங்கியது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். ஆஹா! படிப்பின் மேல் உள்ள ஆசையினால் அல்லவா இவள் கலியாணத்தை வெறுத்திருக்கிறாள்? இந்த உண்மையை நம்மிடம் முன்னமேயே தெரிவித்திருக்கக் கூடாதா? தெரிவித்திருந்தால் இவளுடைய படிப்புக்கு நாம் குறுக்கே நின்றிருப்போமா? என்று அவன் மனம் எண்ணமிட்டது.

     தாரிணி பி.ஏ. பட்டம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள் என்னும் செய்தியைச் சொல்லிவிட்டு நிருபமா படுத்துத் தூங்கிப் போனாள். தாரிணியிடம் அவளுடைய காலேஜ் வாழ்க்கையைப் பற்றி ராகவன் பல கேள்விகள் கேட்டான். அவளோ பாரா முகத்துடன் ஏனோதானோவென்று பதில் சொல்லி வந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் ராகவனும் தூங்கிவிட்டான்.

     பிறகு தாரிணி சீதாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "உங்கள் அம்மாஞ்சி சூரியாவைப் பற்றிச் சொல்லுங்கள், அவர் எப்போதுமே இப்படித்தான் படபடப்பாயிருப்பாரா? என்று கேட்டாள்.

     முந்தைய சம்பாஷைணையின் போதெல்லாம் சீதாவுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் வளர்ந்து வந்தது. முதல் நாள் தாரிணியைச் சந்தித்தது முதல், நிருபமா - தாரிணி சம்பாஷணைகளைக் கேட்டதிலிருந்தும் தன்னுடைய சொந்த ஊகத்தினாலும் அவள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தாள். ராகவனும் தாரிணியும் பழைய சிநேகிதர்கள் என்பது நிச்சயம். பத்மாபுரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசிய வம்புப் பேச்சுகளில் ஏதோ உண்மை இருக்கத்தான் வேண்டும். ராகவனுக்குத் தாரிணியின் மேல் இன்னும் அபிமானம் இருந்தது என்பதும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. தான் இருக்கும்போது இதையெல்லாம் அவர்கள் காட்டிக் கொள்ளாததை நினைத்து நெஞ்சம் கொதித்தது. சீச்சீ! என்ன வெட்கங்கெட்ட ஸ்திரீ இவள்! நம்மை எதற்காக இப்படித் தொடர்ந்து வருகிறாள்? வேறு எங்கேயாவது போய்த் தொலைவதுதானே? சூரியாவும் நிருபமாவின் கணவனும் இந்தக் கோஷ்டியில் சேர்ந்து கூட்டமாக இருந்தபோது ஒரு மாதிரி கலகலப்பாக இருந்தது. இப்போது அவர்களும் இல்லை; அதனால் கலகலப்பும் இல்லை. இந்த மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால், இந்தப் பிரயாணத்துக்கு வரவில்லையென்றே சொல்லியிருக்கலாம். இப்பொழுதுதான் என்ன 'அவள் வந்தால் நான் வரவில்லை; அவளையே அழைத்துக்கொண்டு போங்கள். நான் டில்லிக்குத் திரும்பிப் போகிறேன்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான்... இவ்விதம் எண்ணி எண்ணிப் பலமுறை பேசுவதற்குச் சீதாவின் உதடுகள் துடித்தன. ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அப்படிச் சொன்னால் அதன் பலன் என்ன ஆகுமோ என்று உள்ளத்தின் ஒரு பகுதி அஞ்சியது.

     இத்தகைய மனோ நிலையில் சீதா இருந்த போது தாரிணி அவளிடம் நெருங்கி உட்கார்ந்து, "சூரியாவைப் பற்றி சொல்லுங்கள்" என்றதும் சீதாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "சூரியாவைப்பற்றி இப்போது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது? என்னைப் போல் அவனும் ஓர் அசடு; அனாதை!" என்றாள்.

     "சகோதரி! ஏன் இவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்? என் நெற்றியில் காயப்படுத்தி விட்டதற்காகச் சூரியா ரொம்பவும் மனம் நொந்து எழுதியிருக்கிறார், உத்தம குணம் படைத்தவர். ஆனால் கொஞ்சம் படபடப்புக்காரர் என்று தோன்றுகிறது. காயம் சரியாய்ப் போய் விட்டது. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று உன்னிடம் சொல்லியனுப்ப விரும்பினேன். உனக்கு அவரைப் பற்றிப் பேச இஷ்டமில்லையென்றால் வேண்டாம்!" என்றாள் தாரிணி.

     இதைக் கேட்டதும் சீதாவின் மனம் மாறிவிட்டது. "இல்லை, இல்லை எனக்கு வெறுப்பு ஒன்றுமே இல்லை. சூரியா உத்தமமான பிள்ளைதான், அவ்வளவு ஒன்றும் படபடப்பாக அவன் பேசுவதும் கிடையாது. என் மாமா குடும்பத்திலேயே சூரியாதான் நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவன். நேற்று அவன் படபடப்பாகப் பேசியதும் தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்து உடைத்ததும் எனக்கே ஆச்சரியமாயிருந்தது. பாவம்! அவனுக்கு என்ன மனக் கஷ்டமோ? மொத்தத்தில் அதிர்ஷ்டக்கட்டை; இல்லாவிட்டால் இப்படி வந்து திண்டாடுவானேன்? படித்துப் பாஸ் செய்து எவ்வளவோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம்!" என்றாள்.

     "அதிர்ஷ்டக்கட்டை என்று எதனால் சொல்கிறாய்?" என்று தாரிணி கேட்க, சீதா கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியாவின் கதையைச் சொன்னாள். அவனுடைய தகப்பனார், தமையன், அம்மா, தங்கை ஆகியவர்களைப் பற்றி சொன்னாள். தமையனோடும் ஊராரோடும் அவனுக்கு நேர்ந்த தகராறுகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னாள். ஆனால் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, கலியாணம் இவற்றைக் குறித்து மட்டும் எதுவும் சொல்லவில்லை.