உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் : புயல் 13. ரஜினிபூர் ஏரி ரஜினிபூர் சமஸ்தானத்தின் திவான் ஸர்.கே.கே. ஆதிவராகாச்சாரியாருக்குப் புத்தி கூர்மையுள்ள வாலிபர்களிடம் பொதுவாக அபிமானம் உண்டு. சௌந்தரராகவன் இங்கிலாந்துக்குப் பிரயாணம் செய்தபோது கப்பலில் அவரைச் சந்தித்துப் பழக்கம் செய்து கொண்டான். ராகவனுடைய புத்தி கூர்மையும் சாதுர்யமான சம்பாஷணையும் திவான் ஆதிவராகாச்சாரியாரின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு புது டில்லி செகரட்டேரியட்டில் உத்தியோகம் பார்ப்பவர்களில் எத்தனை பேரைத் தெரிந்திருக்கிறதோ அவ்வளவுக்குப் புருஷார்த்தம் கைகூடுவது எளிதாகும் என்ற நம்பிக்கையும் ஸர் ஆதிவராகாச்சாரியாருக்கு இருந்தது. அவருக்குச் சந்தான பாக்கியத்தைப் பகவான் பரிபூரணமாக அளித்திருந்தார். பெரிய உத்தியோக பதவிகளை வகிக்கத் தகுந்தவர்களாக அவருக்குப் புதல்வர்களும் மாப்பிள்ளைகளும் பலர் இருந்தார்கள். இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததும் ரஜினிபூருக்கு ஒரு தடவை வரவேண்டும் என்றும், வரும்போது மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்றும் ஆதிவராகாச்சாரியார் சௌந்தரராகவனிடம் சொல்லியிருந்தார். அந்த அழைப்புக்கு இணங்க இப்போது சௌந்தரராகவன் சீதாவுடன் திவான் மாளிகைக்குச் சென்றான். தாரிணியும் அவளுடைய தோழியும் வேறு ஜாகைக்குச் சென்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் திவான் ஆதிவராகாச்சாரியார் முக்கியமான ராஜாங்கக் காரியமாக வெளியூருக்குப் போயிருந்தார். எனினும் ராகவனுடைய தந்தியைப் பார்த்து விட்டு அவனையும் அவனுடைய மனைவியையும் கவனித்துக் கொள்ளும்படியாகத் தம்முடைய புதல்விகளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவர்கள் அவ்விதமே ராகவனையும் சீதாவையும் வரவேற்றார்கள். ஆதிவராகாச்சாரியின் புதல்விகளான பாமா, தாமா இருவரும் இங்கிலாந்து சென்று திரும்பியவர்கள், ஆங்கில நாகரிகத்தில் முழுகியவர்கள். ஒருத்தி ஒல்லியாயும் உயரமாயும் இருந்தாள். இன்னொருத்தி குட்டையாயும் பருமனாயுமிருந்தாள். இரண்டு பேரும் தலை மயிரை 'பாப்' செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொண்டு தான் வெளியில் புறப்படுவார்கள். எப்பொழுதும் இங்கிலீஷில்தான் பேசுவார்கள். அதுவும், ஆங்கில நாவலாசிரியர் வோட் ஹவுஸின் கதாபாத்திரங்கள் பேசுகிற இங்கிலீஷ் நடையைக் கையாண்டு பேசுவார்கள். பியானோ வாத்தியத்தில் இங்கிலீஷ் சங்கீதம் வாசிக்கவும், "பால் ரூம் டான்ஸ்" ஆடவும் கற்றுக் கொண்டு திறமையும் பெற்றிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு சீதா ரொம்பவும் விழித்தாள். அவர்கள் சீதாவிடம் முதலில் இங்கிலீஷில் ஏதாவது கேட்பார்கள். சீதா ஒன்றும் புரியாமல் திகைப்பதைக் கண்டு தட்டுத் தடுமாறித் தமிழில் அதையே சொல்வார்கள். அவர்கள் இங்கிலீஷ்காரிகளைப்போல் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்துப் பேசியபடியால் சீதாவுக்குத் தெரிந்திருந்த கொஞ்சம் நஞ்சம் இங்கிலீஷும் அங்கே பயன்படவில்லை. ஆகையால் குளத்துத் தண்ணீரிலிருந்து எடுத்துக் கொதிக்கின்ற சட்டுவத்தில் போடப்பட்ட மீனைப் போல் சீதா அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு தத்தளித்தாள். சீதாவுடன் பழகினதைக் காட்டிலும் ராகவனுடன் அவர்கள் சரளமாகப் பேசிப் பழகினார்கள். ராகவனும் அவர்களுடன் உற்சாகமாகப் பேசினான். அவன் அப்போது வீசிய நகைச்சுவைத் துணுக்குகளையும் ஹாஸ்ய சிலேடைகளையும் கேட்டு அவர்கள் இடி இடி என்று சிரித்தார்கள். இதெல்லாம் சீதாவுக்கு ஓரளவு அருவருப்பாயிருந்தாலும் அவளுக்குக் கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் அவ்வளவு அழகாயில்லை என்பதுதான் இதற்குக் காரணமோ அல்லது அவர்கள் விஷயத்தில் ராகவனுக்குக் கொஞ்சமும் மதிப்புக் கிடையாது என்பது சீதாவின் உள்மனதுக்குத் தெரிந்ததோ, நாம் சொல்ல முடியாது. இடையிடையே சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ராகவன் சீதாவிடம் தனியாக அந்தப் பெண்களின் அவலட்சணத்தைப் பற்றியும் குரங்கு சேஷ்டைகளைப் பற்றியும் சொல்லி வந்தான். "ஆனாலும் இவர்களிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிரம்ப இருக்கிறது. புது டில்லியில் சமூக வாழ்க்கை நடத்துவதற்குச் சிற்சில நடை உடை பாவனைகள் அவசியம்!" என்று ஒரு தடவை ராகவன் சொன்னான். "இவர்களிடம் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமாம்? உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொள்ளவா?" என்று சொல்லி விட்டுச் சீதா சிரித்தாள். "ஆமாம்; அதுகூடத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதில் பிசகு என்ன இருக்கிறது? நம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா? அதனால் உதடு சிவப்பதில்லையா? கதாநாயகிகளின் உதடுகளைப் பவழத்துக்கும் கோவைப் பழத்துக்கும் மாதுளை மொட்டுக்கும் ஒப்பிட்டுக் கவிகள் வர்ணித்தால் மட்டும் 'ஆஹா' என்று பிரமாதப்படுத்துகிறோமே?" என்றான் ராகவன். "அதெல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்" என்றாள் சீதா. "இயற்கையாவது, மண்ணாங்கட்டியாவது? இயற்கையாக இருந்தால் ஆப்பிரிக்கா தேசத்துக் காட்டுமிராண்டிகளைப் போல் இருக்க வேண்டியதுதான். வகிடு எடுத்துத் தலை வாரிக் கொள்வதும், நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வதும், கைக்கு மருதாணி இட்டுக் கொள்வதும் இயற்கையா? காதிலும் மூக்கிலும் தொளையிட்டு நகை போட்டுக் கொள்வதுதான் இயற்கையா? எல்லாவித அழகும் அலங்காரமும் செயற்கையில் சேர்ந்ததுதான்!" என்று ராகவன் அடித்துப் பேசியபோது சீதாவினால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக "அலங்காரத்துக்கும் ஒரு அளவு வேண்டும். தாரிணியைப் பாருங்கள்; அவளும் இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்றவள்தானே? அவள் 'லிப்-ஸ்டிக்' தடவிக் கொள்கிறாளா?" என்று சொல்லி வைத்தாள். "சில பேருக்குப் பிறவியிலேயே அழகு உண்டு; அவர்கள் ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாவிட்டாலும் நன்றாயிருப்பார்கள். அந்த மாதிரி எல்லாரும் இருக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்!" என்று சொன்னான் சௌந்தரராகவன். சீதாவுக்குத் தாரிணியின் பேச்சை எதற்காக எடுத்தோம் என்று இருந்தது. இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் தலைநகரங்களுக்குள்ளே ரஜினிபூர் மிக அழகான ஒரு பட்டணம். மறுநாள் முழுவதும் ராகவனும் சீதாவும் அந்தப் பட்டணத்தைச் சுற்றிப் பார்ப்பதில் கழித்தார்கள். ரஜினிபூர் ராஜாவின் பழைய அரண்மனை, புதிய அரண்மனை, வஸந்தோத்ஸவம் கொண்டாடும் பளிங்கு மாளிகை, நந்தவனங்கள், பிராணிக் காட்சிச் சாலைகள், பட்டணத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த பழைய கோட்டை, கொத்தளங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் களித்தார்கள். ஆனால் ஒரு இடத்திலாவது அதிக நேரம் அவர்கள் நிற்கவில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் ராகவன் நெருப்பில் காலை வைத்து விட்டவன்போல் அவசரப்பட்டான். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் சீதாவும் ராகவனுடைய அவசரத்திற்கேற்ப அங்கங்கே பார்க்க வேண்டியதைச் சட்டென்று பார்த்து விட்டுக் கிளம்பினாள். திவானுடைய பங்களாவுக்குச் சாயங்காலம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, "அவர்கள் இரண்டு பேரையும் இன்றைக்கெல்லாம் காணவேயில்லையே?" என்றாள் சீதா. இப்படிச் சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று உதடுகளைக் கடித்துக் கொண்டாள். "அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு டெலிபோன் பண்ணுவதாகச் சொன்னார்கள்; பண்ணவில்லை!" என்றான் ராகவன். இவ்விதம் சொல்லி இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் ராகவன் திவானுடைய டிரைவரிடம், "டஹரோ!" என்று கத்தினான். யாரும் தன்னை இவ்விதம் அதட்டிப் பேசி அறியாத அந்த மோட்டார் டிரைவர் சடக்கென்று பிரேக்கைப் போட்டு வண்டியை நிறுத்தியபோது, சீதாவைத் தூக்கிப் போட்டுவிட்டது. விஷயம் என்னவென்று பார்த்ததில், பக்கத்தில் ஒரு வீட்டுக்கு அருகில் டங்கா வண்டியிலிருந்து தாரிணியும் நிருபமாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ராகவன் தாரிணியைப் பார்த்து, "இதென்ன நீங்கள் இப்படி ஏமாற்றிவிட்டீர்கள்?" என்று கடுமையான குரலில் கேட்டான். "ஏமாற்றுவது என்ன? உங்களுடன் ஊர் சுற்றப் போனால் ஒன்றுமே பார்க்க முடியாது. விவாதம் செய்வதற்குத்தான் சரியாயிருக்கும். அதனால்தான் நாங்கள் இருவரும் தனியாகப் போய் வந்தோம்" என்றாள் தாரிணி. "நாளைக்கும் இப்படிச் செய்வதாகத்தான் உத்தேசமா?" என்று ராகவன் கேட்டான். "நாளைக்கு ஏரிக்குப் போவதாயிருந்தால் நாங்களும் வருகிறோம். இங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு போக முடியுமா?" என்றாள் தாரிணி. "பேஷாக முடியும் ஆனால் இன்று மாதிரி ஏமாற்றி விடாதீர்கள்; எனக்கு ரொம்பக் கோபம் வரும்!" என்றான். ராகவன் அன்றைக்கெல்லாம் ஏன் அவ்வளவு பரபரப்பாக இருந்தான் என்னும் விஷயம் சீதாவுக்கு இப்போது நன்கு விளங்கியது. அன்றிரவு அவள் சேர்ந்தாற்போல் அரை மணிக்கு மேல் தூங்கவில்லை. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்த போது தலையை ஒரே கனமாய்க் கனத்தது. இரண்டு பொட்டுக்களிலும் சம்மட்டியால் அடிப்பதுபோல் வலித்துக் கொண்டிருந்தது. "நான் இன்றைக்கு ஏரி பார்க்க வரவில்லை. டில்லிக்கே திரும்பிப் போய் விட்டாலும் நல்லதுதான்!" என்று ராகவனிடம் சொன்னாள். |