இரண்டாம் பாகம் : புயல்

7. லலிதாவின் கடிதம்

     "என் உயிருக்குயிரான தோழி சீதாவுக்கு லலிதா எழுதிக் கொண்டது. நீ டில்லிக்குப் போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதத்தைப் பெற்று அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை தூரம் போன பிறகும் நீ என்னை மறந்து விடாமல் கடிதம் எழுதியிருக்கிறபடியால் நீதான் என்னுடைய உண்மையான பிராண சிநேகிதி என்பதில் சந்தேகம் என்ன? நாம் இரண்டு பேரும் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய சிநேகம் இப்படியே இருந்து வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

     புதிய இடத்தில் புதுக் குடித்தனம் போட்டதில் உனக்கு வேலை அதிகமாயிருக்கும். ஆகையினால் தான் அவ்வளவு கொஞ்சமாக எழுதிவிட்டாய் என்று நினைக்கிறேன்! வார்த்தைகளை எண்ணிப் பார்த்தேன், மொத்தம் முப்பத்தாறு வார்த்தைகள் இருந்தன. இவ்வளவு கொஞ்சமாக நீ இதற்கு முன் எப்போதும் எழுதியதில்லை. புதுக் குடித்தனம் போடும் வேலையெல்லாம் தீர்ந்ததும் நீ எப்போதும் போல் விவரமாகக் கடிதம் எழுத வேண்டும். ஏழெட்டுப் பக்கத்துக்கு குறையக் கூடாது.

     நான் ராஜம்பேட்டையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுவது உனக்கு ஒருவேளை அதிக ஆச்சரியமாயிருக்கும்; ஒருவேளை ஆச்சரியமாயிராது. ஆனால் நீ கொஞ்சமாவது ஆச்சரியப்படுவாய் என்று நம்புகிறேன். நான் இங்கே எதற்காக வந்தேன் என்று தெரிந்தால் கட்டாயம் ஆச்சரியப்பட்டே தீர்வாய்.

     சீதா! நான் சொல்லாமலே காரணத்தைக் கண்டுபிடி, பார்க்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரு 'க்ளூ' கொடுக்கிறேன். என்னுடைய கை ஒவ்வொன்றிலும் இப்போது அரை மணங்கு பளுவுள்ள வளையல்கள் ஏறியிருக்கின்றன. முழங்கை வரையில் வளையல் மயந்தான்!

     இப்போது காரணம் தெரிகிறதா, சீதா! எனக்கு வளைகாப்புக் கல்யாணம் நடந்து நாலு நாள் ஆகிறது. வளைகாப்புக்காகத் தான் இந்த ஊருக்கு வந்தேன். அடுத்த மாதம் சீமந்தம் வைத்திருக்கிறது. அதற்குள் தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போக வேண்டும். சீமந்தக் கலியாணம் புக்ககத்தில்தான் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?

     என் அம்மா இப்போதுதான் உண்மையான சந்தோஷம் அடைந்திருக்கிறாள். நடுவிலே ரொம்பவும் என்னைத் திட்டிக் கொண்டும் குறைபட்டுக் கொண்டும் இருந்தாள். 'உடன் எடுத்த பெண்கள் எல்லாரும் கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் இருக்கிறார்கள்; நீ இப்படி மரமாயிருக்கிறாயே, ஜடமே!' என்று ஓயாமல் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தாள். 'குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுளுடைய செயல் அல்லவா?' என்று நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மாவின் மனது சமாதானம் அடையவில்லை. இப்போதுதான் அவளுடைய மனக் குறை தீர்ந்து சந்தோஷமாயிருக்கிறாள்; என்னைத் திட்டாமலும் இருக்கிறாள். திட்டுவதற்குப் பதிலாக 'இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே? பிரசவத்துக்கு இங்கே அனுப்புவார்களோ, அனுப்ப மாட்டார்களோ, தெரியவில்லையே! அம்பிகே! பராசக்தி!' என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். ஓயாத புலம்பலாயிருந்தாலும் சந்தோஷமான புலம்பல் தான்.

     சீதா! உனக்கு வளைகாப்பு, சீமந்தம் நடைபெறவில்லை என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. உன் அகத்துக்காரர் சீமந்தத்துக்காகச் சீமையிலிருந்து வர முடியாது என்று சொல்லி விட்டதாக எழுதியிருந்தாயல்லவா? உன் அகத்துக்காரர் அவ்விதம் எழுதியது ஒரு விதத்தில் நன்மையாக முடிந்தது. அதுவரையில் என் அம்மாவின் மனதில் உன் பேரில் கொஞ்சம் கோபம் இருக்கத்தான் இருந்தது. என்னைப் பார்ப்பதற்கு என்று வந்தவர் உன்னைக் கலியாணம் செய்து கொண்டது பற்றித்தான் கோபம். ஆனால் உனக்குச் சீமந்தம் நடக்கவில்லை என்ற செய்தியை அறிந்ததும் அம்மாவுக்கு உன் பேரில் இருந்த கோபம் மாறிவிட்டது. 'அந்தப் பெண் சீதா இங்கே நல்ல வேளையாக இருந்தாளோ, அப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வாய்க்காமல் பிழைத்தேனோ!' என்று உற்சாகத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

     ஆனால் என் அம்மாவைப் போல் நானும் நினைப்பதாக நீ எண்ணிக் கொள்ளாதே! ஒருநாளும் இல்லை. 'வளைகாப்பு நடக்காவிட்டால் என்ன, சீமந்தமும் நடக்காவிட்டால்தான் என்ன? உன் கணவர் உன்னிடம் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு ஏது, இணை ஏது? புருஷனுடைய அன்பும் ஆதரவும் முக்கியமா? வளைகாப்பும் சீமந்தமும் முக்கியமா? சாஸ்திரம் என்பார்கள்; சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திரமாவது, மண்ணாங்கட்டியாவது? வெள்ளைக்காரர்களும், கிறிஸ்தவர்களும் சீமந்தமா பண்ணிக் கொள்கிறார்கள்! அவர்களுடைய குழந்தைகள் நன்றாயில்லையா?' என்று சூரியா ஒரு சமயம் சொன்னான். அவன் சொன்னதை நானும் ஆமோதித்தேன். என்னுடைய அபிப்பிராயத்தில், கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை.

     இவ்விதம் நான் எழுதியதிலிருந்து என் கணவர் பேரில் நான் புகார் கூறுவதாக எண்ணாதே! இவர் என்னிடம் வைத்திருக்கும் ஆசைக்கும் அன்புக்கும் அளவே கிடையாது.

     ஆனாலும் ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என் குறையை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? என் ஆருயிர்த் தோழி! இத்தனை நாள் சொல்லாததை, எழுதாததை இன்று தெரியப்படுத்துகிறேன். எவ்வளவோ இவர் என் பேரில் ஆசையுள்ளவராயிருந்தும் பல விஷயங்களில் அம்மாவுக்குப் பிள்ளையாயிருக்கிறார்! அம்மா இட்ட கோட்டை இவர் தாண்டுகிறதில்லை. மற்ற காரியங்களில் அம்மாவிடம் பக்தியோடு இருக்கட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாலி கட்டிய மனைவி விஷயத்திலே கூடவா அப்படி இருக்கிறது? அம்மா உத்தரவு கொடுத்தால் தான் என்னை எங்கேயாவது அழைத்துப் போவார். இதைப் பற்றி நான் எப்போதாவது குறை தெரிவித்துக் கொண்டால், 'உன்னிடம் எனக்குள்ள அந்தரங்க அன்பு உனக்குத் தெரியாதா? அம்மா இஷ்டப்படி நடக்காவிட்டால் வீட்டில் வீண் கலகம் ஏற்படும். பொறுத்தார் பூமி ஆள்வார்!' என்று உபதேசம் செய்கிறார்.

     என் மாமியாரின் குணத்தைப்பற்றி முன்னமே குறிப்பாக எழுதியிருக்கிறேன், சீதா! கலியாணத்தின் போது எவ்வளவு பரம சாதுவாயிருந்தாள்! அப்புறம் சீக்கிரத்தில் தன்னுடைய சொரூபத்தைக் காட்டி விட்டாள். கலியாணத்தின்போது சீர் வகையறா சரியாகச் செய்யவில்லையென்று இரண்டு வருஷம் சாந்திக் கலியாணம் பண்ணாமலே வைத்திருந்தாள். அப்பா சரணாகதி என்று அவள் காலில் விழுந்து அவள் இஷ்டப்படியெல்லாம் சீர் செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான் சம்மதம் கொடுத்தாள். சாந்திக் கலியாணத்தின் போது அவளுடைய இஷ்டப்படியெல்லாம் சீர் செய்த பிறகாவது சந்தோஷம் அடைந்தாளா? அதுவும் இல்லை. இத்தனை நாள் ஒருவரிடமும் சொல்லாததை உன்னிடம் இப்போது சொல்கிறேன் சீதா! என் மாமியார் ரொம்பப் பொல்லாதவள், ராட்சஸியேதான்! என்னை அவள் படுத்திவைக்கிற பாட்டுக்கு அளவேயில்லை. ஓயாமல் ஒழியாமல் என் மேல் புகார் செய்து கொண்டிருப்பதே அவளுக்கு வேலை. நான் எது செய்தாலும் அவளுக்குப் பிசகாகப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்று கேட்கிறாள். 'சுயபுத்தி வேண்டாமா? எதுவும் ஒருவர் சொல்லித் தான் செய்ய வேண்டுமா?' என்கிறாள். நானாக ஏதாவது செய்து விட்டாலோ, 'உன்னை யார் செய்யச் சொன்னது? நான் ஒருத்தி இருக்கிறேனே கேட்கக் கூடாதா?' என்கிறாள். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுகிறாள், வேண்டாம் என்கிற நாட்டுப்பெண் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ஒன்றும் படாமலிருந்தாலும் குற்றம் என்பதாக இருக்கிறது. என்னுடைய நாத்தனார் ஒருத்தியைக் கொடுத்திருக்கிற இடத்தில் அவள் அவ்வளவாகச் சுகப்படவில்லையாம்; அவளை ரொம்பக் கஷ்டப்படுத்துகிறாளாம். அதற்கு நான் என்னடி செய்வேன்? அந்தக் கோபத்தை எல்லாம் என் பேரில் காட்டுகிறாள் என் மாமியார்! நன்றாயிருக்கிறதல்லவா?

     இவர் இருக்கிறாரே, இவரைப்பற்றி என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. என் பேரில் ரொம்ப ஆசையாகத்தானிருக்கிறார். ஆனால் ஆசை மட்டும் இருந்து என்ன பிரயோசனம். 'அம்மாவுக்கு இது பிடிக்காது; அம்மாவுக்கு அது வருத்தம் தரும்' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, ஏதடா, இவளும் ஒரு மனுஷிதானே என்று நினைத்துப் பார்ப்பதேயில்லை! தாயார் தகப்பனாரை விட்டு, அண்ணன் தம்பிகளை விட்டு, பிறந்த ஊரையும் வீட்டையும் தெரிந்த மனுஷாள் எல்லாரையும் விட்டுத் தம்மையே கதியென்று நம்பி வந்தவளாயிற்றே என்று ஒரு தடவையாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை. தேவபட்டணத்தில் இத்தனை நாள் இருந்தேனே? ஒரு நாளைக்கு என்னை இவர் ஒரு சினிமா பார்க்க அழைத்துப் போனதில்லை. ஒருநாள் சாயங்காலம் என்னை இந்த ஊர் நந்தவனத்துக்கு அழைத்துப் போனதில்லை. பழைய காலத்து மனுஷர்களாயிருந்தால் கோயில் குளம் தேர் திருநாளுக்காவது அழைத்துப் போவார்களே? அதுவும் இல்லை. கொஞ்சம் நாளைக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த ஊருக்கு வந்திருந்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஊரெல்லாம் திரண்டு போனார்கள். நானும் வருகிறேன் என்று ஆனமட்டும் சொன்னேன். 'அம்மா கோபித்துக் கொள்வாள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எதற்கு எடுத்தாலும் 'அம்மா, அம்மா, அம்மா' தான்! எனக்கு ஒரு நாள் கோபமாயிருந்தது. 'எத்தனை நாள் இப்படி என்னை ஜெயிலில் வைத்திருக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டு விட்டேன். வழக்கம் போல் புன்சிரிப்புச் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் நாள் பொறுத்துக் கொண்டிரு. நாம் தனிக் குடித்தனம் போய் விடுவோம்; அப்புறம் நீ வைத்ததுதான் சட்டம். இரண்டு பேரும் கைகோத்துக் கொண்டு தினம் தினம் தெருவில் ஊர்கோலம் போவோம்' என்று சொன்னார். உண்மையாகத்தான் சொன்னாரா பரிகாசத்துக்குச் சொன்னாரா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயம் தெரியவில்லை. இவர் தனிக் குடித்தனம் போவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகவில்லை. ஒவ்வொரு சமயம் இவருக்கு என்னத்துக்கு இந்த வக்கீல் வேலை என்று தோன்றுகிறது. எங்கேயாவது தூர தேசத்தில், பம்பாய் - கல்கத்தா - டில்லியில், ஏதாவது ஒரு உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளக்கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல சமயம் பார்த்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறதோ?

     சீதா! நீ பாக்கியசாலி! எல்லா விஷயத்திலும் என்னுடைய நிலைமைக்கு நேர்மாறாயிருக்கிறது உன்னுடைய நிலைமை. உன் மாமனாரும் மாமியாரும் உன்னைத் தாங்குகிறார்கள். தரையில் உன் கால் படக்கூடாது என்று அவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள். கணவரோ இந்தியாவின் தலைநகரத்தில் உத்தியோகம் பார்க்கிறார். கலியாணம் ஆன உடனேயே டில்லிக்கு அழைத்துப் போனாரே! இப்போது கேட்க வேண்டுமா! எல்லா இடங்களுக்கும் உன்னை அழைத்துப் போவார். தினம் தினம் சினிமாவுக்குப் போவீர்கள். ஏதோ நீயாவது இப்படிச் சந்தோஷமாயிருக்கக் கொடுத்து வைத்திருக்கிறாயே என்பதை எண்ணித்தான் இப்போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

     இந்த ராஜம்பேட்டைக்கு வந்தது முதல் எனக்கு உன்னுடைய ஞாபகமே வந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் தபால் ரன்னர் 'ஜிங் ஜிங்' என்று மணி அடித்துக் கொண்டு வருகிற சத்தத்தைக் கேட்டதும், பம்பாயிலிருந்து உன் கடிதத்தை எதிர்பார்த்து நான் தபாலாபீஸுக்கு ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது. குளத்தங்கரைக்குப் போனால், படிக்கட்டுகளில் உட்கார்ந்து நாம் மனோராஜ்யம் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீ சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வருகிறது. லைலா மஜ்னூன், அனார்க்கலி, ரோமியோ ஜுலியட், சகுந்தலை, சம்யுக்தை முதலியவர்கள் எதிரில் வந்து நிற்கிறார்கள், அடியே! காதல் காதல் என்று சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்டா? அல்லது கதைகளிலே மட்டுந்தானா? இத்தனை நாளும் இந்தியாவின் சக்ரவர்த்தியாயிருந்த எட்டாவது எட்வர்ட் ராஜா யாரோ ஒரு பெண்ணின் காதலுக்காக ராஜ்யத்தைத் துறந்து விட்டாராமே? இது உண்மையா, சீதா! இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லையே?

     நேற்று அம்மாவும் நானும் சுண்டுவும் வண்டி கட்டிக் கொண்டு காவேரிக்குக் குளிப்பதற்குப் போயிருந்தோம். போகும் போதும் வரும்போதும் உன்னுடைய நினைவாகவே இருந்தது. வழியில் மதகடியில் தபால்கார பாலகிருஷ்ணனுடன் சூரியா குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த காட்சி அப்படியே எதிரில் நடப்பது போல் இருந்தது.

     சீதா! சூரியா உங்களுடன் டில்லிக்கு வந்ததையும், வழியில் உங்களுக்கு ஒத்தாசையாக இருந்ததையும் உன் கடிதத்திலிருந்து அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஒருவேளை டில்லியிலேயே சூரியா தங்கிவிடலாம் என்று அவன் சொன்னதாக எழுதியிருக்கிறாய். ஏனென்றால், நீ அவனைக் கவனித்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

     சூரியா, ஏன் திடீரென்று படிப்பை விட்டுவிட்டான்? ஏன் இப்படி உலகத்தையே வெறுத்தவன் போலப் பேசுகிறான் என்று கேட்டிருந்தாய். அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்தபோது தான் தெரிந்தது.

     என் மூத்த தமையன் கங்காதரன் இருக்கிறானே, அவனை உனக்கு அதிகமாகத் தெரியாது. ஒரே ஒரு தடவை நம்முடைய கலியாணத்தின் போது மட்டுந்தான் நீ பார்த்திருக்கிறாய். கங்காதரனை எனக்கு எப்போதுமே பிடிக்காது; முரட்டுக் குணம். அவனால் நம்முடைய கலியாணத்தின்போது ஒரு பெரிய சங்கடம் நேர்வதற்கு இருந்ததாம். குடியானத் தெரு ஆள் ஒருவனை, சொன்ன உடனே ஏதோ ஒரு வேலையைச் செய்யவில்லை என்பதற்காகக் கங்காதரன் அடித்து விட்டானாம். குடியானத் தெரு ஆட்கள் கட்டுப்பாடு பண்ண ஆரம்பித்து விட்டார்களாம். இதைத் தெரிந்துகொண்டு சூரியா குடியானத் தெருவுக்குப் போய் அண்ணாவுக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டானாம். இதன் பேரில் குடியான ஆட்கள் சமாதானம் அடைந்தார்களாம்.

     அடுத்த கோடை லீவுக்கு இரண்டு பேரும் ஊருக்கு வந்திருந்த போது கங்காதரன் சூரியாவைச் சண்டைப் பிடித்தானாம் - 'எனக்காக உன்னை யாரடா மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னது?' என்று. சூரியா ஏதோ பதில் சொன்னானாம். அதற்குப் பதிலாக அண்ணா அவனை அடித்தானாம். சூரியா அடியைப் பொருத்துக் கொண்டு பொறுமையாயிருந்தானாம்.

     இப்படிச் சூரியா இருந்தும் கங்காதரனுடைய கோபம் தீரவில்லை. மனஸ்தாபம் முற்றிக் கொண்டிருந்தது. போன வருஷம் சூரியா இங்கே வந்திருந்தபோது ஏதோ மனைக்கட்டுத் தகராறில் சூரியா குடியானவர்கள் கட்சி பேசினானாம். மறுபடியும் கங்காதரன் சூரியாவை அடித்துவிட்டானாம். அக்கிரகாரத்தில் எல்லாரும் கங்காதரன் கட்சியாம். இதனால் சூரியா மனக்கசப்பு அடைந்து 'உங்கள் சொத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குப் பங்கு வேண்டாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டானாம். குடும்பத்துப் பணம் வேண்டாம் என்பதற்காகவே படிப்பையும் விட்டு விட்டானாம். இந்த விவரமெல்லாம் இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்த போதுதான் எனக்கு நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில், அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சூரியாவைப் பற்றிப் பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில சமயம் 'உன்னால் தான் வந்தது' 'உன்னால் தான் வந்தது' என்று சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்.

     "சீதா! எனக்குச் சூரியாவைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாயிருக்கிறது. சூரியா ரொம்ப நல்ல பிள்ளையடி! என்னிடம் அவனுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா! என்னிடம் மட்டும் என்ன? உன்னிடத்தில் கூட அவனுக்கு எவ்வளவு அபிமானம் உண்டு. டில்லியில் இருக்கும் வரையில் அவனை நீ கவனித்துக்கொள். வேளா வேளைக்குச் சாப்பிடச் சொல். சூரியாவை மட்டும் நீ கொஞ்சம் கவனித்துக் கொண்டால் என் அம்மா கூட உன் பேரில் ரொம்ப சந்தோஷப்படுவாள்?

     இந்தக் கடிதம் ரொம்ப ரொம்ப நீளமாய்ப் போய் விட்டது. இதை நான் மூன்று நாளாய் எழுதி இன்றைக்கு முடிக்கிறேன். என் மனத்திற்குள் வெகு நாளாய் வைத்திருந்ததை எல்லாம் கொட்டிவிட்டேன். புக்ககத்தில் இருக்கும்போது இவ்வளவு நீளம் கடிதம் எழுத எனக்கு அவகாசம் ஏது? மேலும் அங்கே இருக்கும்போது இதையெல்லாம் கடிதத்தில் எழுதவும் முடியாது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கும்.

     ஏதாவது நான் அசட்டுத்தனமாக எழுதியிருந்தாலும் மன்னித்துக்கொள். இந்த உலகத்தில் என்னுடைய அருமைத் தோழி நீ ஒருத்தித்தான். என் மனதில் உள்ள குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? சீக்கிரம் விவரமாகப் பதில் எழுது.

இப்படிக்கு,
சதா உன் நினைவாகவேயிருக்கும்
அன்பார்ந்த சிநேகிதி,
லலிதா.