உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் : புயல் 8. சீதாவின் பதில் லலிதாவின் கடிதம் சீதாவின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. லலிதாவின் புக்கக வாழ்க்கையைக் குறித்து அநுதாபம் ஏற்பட்டது. அதே சமயத்தில் லலிதாவின் நிலையுடன் தன்னுடைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவளுடைய அந்தரங்கத்தில் ஒருவித மகிழ்ச்சியும் உண்டாயிற்று. "என்னதான் இருந்தாலும் இவள் இவ்வளவு குறை சொல்லிப் புலம்பக் கூடாது!" என்று ஒரு பக்கத்தில் தோன்றியது. உடனே, "பாவம்! வேறு யாரிடத்தில் சொல்லிக் கொள்வாள்? அவள் அம்மாவோ பெரும் பைத்தியம்!" என்ற எண்ணமும் தோன்றியது. "அம்மம்மா! எத்தனை நீளம் கடிதம் எழுதுகிறாள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை ஒன்பது வார்த்தைகளில் சொல்கிறாளே?" என்று அலுத்துக்கொண்டாள். கடைசியாக ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்த பிறகு பின்வரும் பதிலை எழுதினாள். "என் பிரியமுள்ள தோழி லலிதாவுக்கு; உன்னுடைய கடிதம் கிடைத்தது. அதைப் படித்தபோது கொஞ்சம் வருத்தம் உண்டாயிற்று. உன் பேரில் கோபமாயும் இருந்தது. இவ்வளவு விஷயங்களையும் உன் மனதிற்குள் இத்தனை நாளும் மூடி வைத்துக் கொண்டிருந்தாயல்லவா? இதுதானா உண்மையான சிநேகிதத்துக்கு இலட்சணம்? போனது போகட்டும்; இனிமேல் இன்பமோ, துன்பமோ, சுகமோ, துக்கமோ, எதுவாயிருந்தாலும் உடனுக்குடனே எனக்கு நீ விஸ்தாரமாகக் கடிதம் எழுதி விட வேண்டும். ஒருவருக்கொருவர் சிநேகிதமாயிருப்பது பின் எதற்காக? சுக துக்கங்களைப் பகிர்ந்து அனுபவிப்பதற்குத் தானல்லவா? காதல் என்பது கதைகளிலே மட்டும் அல்ல; இந்த உலகத்திலும் உண்டு என்பது நிச்சயம். அதற்கு என்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அடியே! லலிதா! உண்மையில் நான் பாக்கியசாலிதானடி; ஆனால் இந்தப் பாக்கியம் ஒருவிதத்தில் உன்னால் தான் எனக்குக் கிடைத்தது என்பதை ஒருநாளும் மறக்க மாட்டேன். எனக்குப் பதிலாக இன்றைக்கு நீ இங்கே இந்த அழகான புது டில்லி பங்களாவில் இருந்திருக்கலாம் என்பதை நினைக்கும் போது என்னமோ பண்ணுகிறது. உனக்கு எப்படி நான் நன்றி செலுத்துவேன்! என்னுடைய சமாசாரம் இருக்கட்டும், உன்னுடைய புக்ககத்து வாழ்க்கையைப் பற்றி நீ எழுதியிருப்பதைப் படித்து வருத்தம் அடைந்தேன். உலகம் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கும்போது - நாகரிகம் இவ்வளவாகப் பரவியிருக்கும் காலத்தில் உன் புக்ககத்து மனிதர்களைப் போன்றவர்களும் இருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! உன்னைச் சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பதுபோல் அல்லவா வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது? அதை நினைத்தால் எனக்கு அசாத்தியக் கோபம் வருகிறதடி. ஆனால் ஒரு விஷயம். உன் கணவன் பட்டாபிராமன் உன்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போகாததினாலேயே அவனுக்கு உன்பேரில் அபிமானம் இல்லை என்று நினைத்து விடாதே! இது பட்டிக்காட்டுப் பெண்கள் பேசுகிற பேச்சு. புருஷர்களுக்கு எத்தனையோ சௌகரிய அசௌகரியங்கள் இருக்கும். அதையெல்லாம் கவனித்து நாம்தான் நல்ல மாதிரி நடந்து கொள்ளவேண்டும். நம்முடைய புருஷன் வேறொரு பெண்ணிடம் பேசிவிட்டால் அதனால் குடி முழுகிப் போய்விட்டது என்று நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது; நாகரிகமே தெரியாத படிப்பற்ற ஸ்திரீகள்தான் அப்படியெல்லாம் சந்தேகப்படுவார்கள். உன் மாமியாரைப்பற்றி நீ எழுதியிருப்பதையும் நான் முழுதும் ஒப்புக்கொண்டு விட முடியாது. எல்லாம் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்தது. பிறந்தகத்தை விட்டுப் புக்ககத்துக்குப் போனால் அப்புறம் பிறந்தகத்துப் பாசமே இருக்கக்கூடாது. மாமனார் மாமியார்தான் தாயார் தகப்பனார் என்று எண்ணி நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய 'ஓர்ப்படி' மாமியாரிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாது என்று நினைத்துத் தான் பிறந்த வீட்டுக்குப் புருஷனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டாள். ஆனால் நான் எப்படியிருக்கிறேன், பார்! என் மாமியார் என்னிடம் வைத்திருக்கும் அபிமானத்துக்கு அளவே கிடையாது. 'பெற்ற பெண் கூட இவ்வளவு பிரியமாயிருக்க மாட்டாள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நீயும் உன் தாயார் தகப்பனாரை அடியோடு மறந்துவிட்டு மாமியாரும் மாமனாருந்தான் பெற்ற தாயும் தகப்பனும் என்று நினைத்து நடந்து கொள்ளு, அப்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள், பார்! சூரியா காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து விட்டான். லலிதா! மிகவும் சந்தோஷமான ஒரு செய்தி. என் அகத்துக்காரருக்குச் சூரியாவை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் அன்னியோன்னிய சிநேகிதர்களாகி விட்டார்கள். ஓயாமல் காங்கிரஸைப்பற்றியும் இங்கிலீஷ் சர்க்காரைப்பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேச ஆரம்பித்து விட்டால் பேச்சின் சுவாரஸ்யத்தில் சாப்பாட்டைக் கூட மறந்து விடுகிறார்கள். சில சமயம் நான் ஒருத்தி இருப்பதைக் கூட மறந்து விடுகிறார்களடி! எப்படியிருக்கிறது வேடிக்கை! சென்ற ஞாயிற்றுக்கிழமை எல்லாருமாக இந்த டில்லியிலுள்ள குதுப்மினார் கோட்டை, ஜந்தர் மந்தர் முதலிய இடங்களுக்குப் போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். சூரியாவும் எங்களுடன் வந்ததுதான் மிகவும் சந்தோஷமாயிருந்தது. நாளைய இரவு நாங்கள் ஆக்ராவுக்குப் புறப்படப் போகிறோம். சூரியாவும் எங்களுடன் வருகிறான் ஆனால் என் மாமியார் வரவில்லை. குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். உலகத்தில் ஒன்பது மகா அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மகால் ஆக்ராவில்தான் இருக்கிறது. நீ சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறாய் அல்லவா? ஷாஜஹான் சக்கரவர்த்தி தன்னுடைய பட்டத்து ராணி மும்தாஜின் ஞாபகார்த்தமாகக் கட்டிய அற்புதக் கட்டிடம் தாஜ்மஹால், முக்கியமாக, அதைப் பார்த்துவிட்டு வரத்தான் நாங்கள் போகிறோம். ஆக்ராவிலிருந்து ஓர் இரவு ரயில் பிரயாணம் செய்தால் ரஜினிபூர் என்று ஒரு ஊர் இருக்கிறதாம். அது ஒரு சுதேச ராஜாவின் ஊராம். அங்கே ஒரு விஸ்தாரமான ஏரியும் ஏரியின் நடுவில் ஒரு அழகான நீராழி மண்டபமும் உண்டாம். ஏரிக்கரை ஓரத்தில் ஆயிரம் பதினாயிரக்கணக்கில் வெள்ளை வெளேர் என்ற நிறமுடைய கொக்குகள் வந்து மந்தை மந்தையாக உட்கார்ந்து விட்டு, அவ்வளவும் சேர்ந்தாற்போல் பறந்து போகுமாம். அதைப் போன்ற அழகான காட்சி உலகத்திலேயே கிடையாதாம். ஆக்ராவிலிருந்து அங்கேயும் போய் வரலாமென்று இவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் சூரியா ஆக்ராவிலிருந்து திரும்பி வந்துவிட வேண்டுமென்றும் ஏதோ ஒரு கூட்டம் தனக்கு இருக்கிறதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். "கூட்டமும் ஆச்சு! மண்ணாங்கட்டியும் ஆச்சு!" என்று இவர் நேற்றைக்கு சூரியாவுடன் சண்டை பிடித்தார். சூரியாவை நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன், லலிதா! அவனைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். சூரியா நம்மிருவருக்கும் செய்திருக்கிற உதவிக்கு நான் அவனுக்கு எவ்வளவு செய்தாலும் தகும். நல்ல சமயம் பார்த்து இவரிடம் சொல்லி அவனுக்கு ஒரு உத்தியோகம் பண்ணி வைக்கச் செய்யலாமென்று எண்ணியிருக்கிறேன். என்னுடைய மாமியாருடைய தங்கை பெண் ஒருத்திக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சூரியாவுக்குப் பண்ணிக் கொள்ளலாம் என்று மாமியார் சொல்கிறார். அந்த மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். சூரியா இங்கேயே குடியும் குடித்தனமுமாய்த் தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அப்போது நீ கூடச் சில சமயம் இங்கே வந்து விட்டுப் போவாய் அல்லவா? பம்பாயில் உன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய நினைவு எனக்கு வருகிறது. டில்லியிலும் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் உன்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டுவது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் தெரியுமா? இதோ இவர், 'வெளியில் உலாவப் போவதற்கு நேரமாகி விட்டது' என்று அவசரப்படுத்துகிறார். ஆகையால் இந்தக் கடிதத்தை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். ஆக்ராவிலிருந்து திரும்பி வந்த பிறகு மறுபடியும் விவரமான கடிதம் எழுதுகிறேன். இப்படிக்கு,
உன் பிரிய சிநேகிதி, சீதா. குறிப்பு: நான் டில்லிக்கு வந்த அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. அதைப்பற்றி என்னமோ ஏதோ என்று எனக்கு ரொம்பவும் கவலையாயிருந்தது. ஆனால் கவலைக்குச் சிறிதும் இடம் இல்லையென்று இப்போது நிச்சயமாகிவிட்டது. என்னுடைய அசட்டுத்தனமான சந்தேகத்தைப் பற்றி மறுமுறை நாம் நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன். அதைக் கேட்டால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் - சீதா." |