உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 10 செம்பா மிகவும் கெட்டிக்காரப் பெண். அந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவுசெய்து கொண்டாள். வட கொரியர்களின் அறுபது டன் டாங்கிகளைக் கண்டு அமெரிக்கர்கள் செய்த காரியத்தையே அவளும் செய்யத் தீர்மானித்தாள். இச் சமயம் அவசரமாகப் பின் வாங்குவதுதான் முறை. வேறு வழியில்லை! செங்கோடன் காதில், "ஜாக்கிரதை நான் சொன்னதையெல்லாம் நினைவு வைத்துக்கொள்...." என்று சொல்லி விட்டுப் பின்புறம் திரும்பிச் சென்று வைக்கோற் கட்டின் பின்னால் மறைந்தாள். வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரனுடைய கவனத்தை நாயின் குரைப்புச் சத்தம் செங்கோடன் நின்ற பக்கம் திருப்பியது. சற்றுத் தூரத்துக்கு அப்பால் ஒரு பெண் உருவத்தின் நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது. போலீஸ்காரன் தலைப்பாகையைக் கையில் எடுத்துத் தலையைச் சொறிந்து கொண்டான். தொண்டையை ஒரு தடவை பலமாகக் கனைத்தான். "சீ ராஸ்கல்! சும்மா இரு! உன் நாய்க் குணத்தைக் காட்டுகிறாயா? திருடனைக் கண்டால் பயந்து ஓடுவாய்! நம்ம ராஜா செங்கோடக் கவுண்டரைப் பார்த்துவிட்டுக் குரைக்கிறாயே" என்றான். நாயும் அவன் சொன்னதைத் தெரிந்து கொண்டது போல் குரைப்பதை நிறுத்தியது. போலீஸ்காரன் செங்கோடனை நெருங்கிக் கொண்டே, "நம்முடைய போலீஸ் டிபார்ட்மென்டிலும் நீ செய்கிற மாதிரிதான் வேலை செய்கிறார்கள். உன்னை எஸ்.பி.யாகவோ, டி.எஸ்.பி.யாகவோ போடவேண்டும்!" என்று முணு முணுத்தான். தன்னுடைய சாமர்த்தியத்தைப் போலீஸ் இலாக்கா சரியாகத் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை அவனுடைய மனத்தில் நீண்ட காலமாகக் குடி கொண்டிருந்தது. செங்கோடன் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். போலீஸ்காரன் அவன் அருகில் வந்ததும், "யார் அது? செங்கோடக் கவுண்டன் போல் இருக்கிறதே!" என்றான். சில நாளாகவே செங்கோடனுக்குப் பழைய சங்கோசம், பயம் எல்லாம் நீங்கிப் புதிய தைரியம் பிறந்திருந்தது. "உங்களைப் பார்த்தால் போலீஸ்காரர்போல் இருக்கிறதே?" என்றான். "அடே அப்பா! கெட்டிக்காரனாயிருக்கிறாயே? நான் போலீஸ்காரன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்?" "அது என்ன கஷ்டம்? உங்கள் உடுப்பைப் பார்த்தால் தெரிந்து போகிறது?" "உடுப்பைப் பார்த்து நம்பிவிடக்கூடாது, அப்பனே! இந்தக் காலத்தில் திருடன்கூடப் போலீஸ்காரன் உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறான்!" "திருடனா? திருடன் இங்கு எதற்காக வருகிறான்?" "ஏதாவது அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகிறதற்குத்தான்." "இங்கே சுருட்டுவதற்கு ஒன்றுமில்லையே! கிழிந்த கோரைப்பாய் ஒன்றுதான் இருக்கிறது!" "என்ன, தம்பி, இப்படி ஒரே புளுகாய்ப் புளுகுகிறாய்? நீ நிறையப் பணம் சேர்த்து எங்கேயோ புதைத்து வைத்து இருக்கிறாய் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார்களே?" செங்கோடன் திடுக்கிட்டுப் போனான். இதே மாதிரி வேறு யாரோ தன்னைக் கேட்டார்களே, சமீபத்தில்; யார் கேட்டார்கள்? அதற்குத் தான் சொன்ன பதில் என்ன?- இதை நினைத்து நினைத்துப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் ஞாபகத்துக்கு வரவில்லை. "என்ன கவுண்டரே! ஏன் விழித்துக்கொண்டு நிற்கிறீர்? ஊரார் சொல்லுவது உண்மைதான்போல் இருக்கிறது. எத்தனை ரூபாய் புதைத்து வைத்திருக்கிறீர்?" "அதெல்லாம் சுத்தப் பொய்! ஊராருக்கு என்ன? வாயில் வந்ததைச் சொல்லுவார்கள். ஏழைக் குடியானவனிடம் அவ்வளவு ரூபாய் ஏது? புதைத்து வைப்பதற்கு? யாரோ கதை கட்டிவிட்டிருக்கிறார்கள்!" இப்படிச் செங்கோடன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய மனத்துக்குள், 'இந்தப் போலீஸ்காரருடன் வந்திருக்கும் நாயைப்போல் ஒரு நல்ல சாதி நாய் வளர்க்க வேண்டும்' என்ற எண்ணம் உதயமாயிற்று. "அது கிடக்கட்டும். தம்பி! ஊரார் என்ன சொன்னால் எனக்கு என்ன? அப்படியே உன்னிடம் நிறையப் பணம் இருந்தால் எனக்கு ஒரு தம்படி கொடுக்கப் போகிறாயா?" என்றான் போலீஸ்காரன். "அப்படிச் சொல்லாதீங்க, ஐயா! என்னிடம் பணம் இருந்தால், ஒரு தம்படி என்ன, இரண்டு தம்படிகூடக் கொடுப்பேன், கையில் இல்லாத தோஷந்தான்!" "கையிலே இல்லை; பூமியிலே இருக்கிறது! அப்படித்தானே?" "இது என்னடா வம்பு! நான் பணம் புதைத்து வைக்கவில்லை என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீங்க போலிருக்கே?" "அதைச் சொல்லவில்லை, அப்பா! நீ பயிர் செய்கிறாயே, இந்த வளமான பூமியிலே பாடுபட்டால் பணம் இருக்கிறது என்று சொன்னேன்." "அப்படிச் சொன்னீர்களா? அது கொஞ்சம் நிஜந்தான். ஆனால் இந்தப் பூமியிலிருந்து பணத்தை எடுப்பதற்குள்ளே வாய்ப் பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது. சுத்த வறண்ட பூமி!" "என்ன அப்படிச் சொல்கிறாய்? உன் காட்டில் சோளப்பயிர் கருகருவென்று வளர்ந்திருக்கிறதே! ஆறு அடி உயர ஆள் புகுந்தால் கூடத் தெரியாது! அவ்வளவு உயரம்...!" "ஐயோ! சாமி; கண்ணைப் போடுறீங்களே?" "கண்ணைப் போடவில்லை! ஆனால் இந்த மூக்கை ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கவேணும்! வெங்காயக் குழம்பின் வாசனை ஜம் என்று வருகிறது!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் இரண்டு மூன்று தடவை பலமாக மூச்சை இழுத்து வாசனை பிடித்தான். "இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்" என்றான் செங்கோடன். "இன்றைக்கு எனக்கு வேறு இடத்தில் சாப்பாடு. குடிசைக்குள்ளே வேறு யாராவது உண்டா? நீதான் சமைத்துக்கொள்கிறாயா?" "என்னைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லை. நான் ஏகாங்கி." "அப்படி இருக்கக்கூடாது. சீக்கிரத்தில் யாராவது ஒரு பெண்ணைக் கட்டிப் போடவேண்டும். நான் வரும் போது இங்கே உன்னோடு நின்று யாரோ பேசிக்கொண்டு இருக்கவில்லை? அவசரமாய்ச் சோளக்கொல்லையில் புகுந்து போகவில்லை?" "என்னங்க, கதையாயிருக்கிறது! இங்கே ஒருத்தரும் இல்லையே!" "யாரோ சேலை கட்டிய பெண்பிள்ளை மாதிரி தோன்றியதே!" "உங்களுக்கு ஏதோ சித்தப் பிரமை. இங்கே பெண் பிள்ளை யாரும் இல்லை." "ஆமாம், இருந்தாலும் இருக்கலாம். கொஞ்ச நாளாக எனக்கு எங்கே பார்த்தாலும் செம்பவளவல்லி நிற்கிறதாகவே பிரமை உண்டாகிறது. கொப்பனாம்பட்டி சிவராமக் கவுண்டர் மகள் செம்பா இல்லை? அவளை நான் கலியாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன். அப்புறம் பார்; 374-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் பண்ணிச் சாப்பிட மாட்டாரா?" அந்தப் போலீஸ்காரனை அங்கேயே கழுத்தை முறித்துக் கொன்று போட்டுவிடலாமா என்று செங்கோடனுக்கு ஆத்திரம் வந்தது. செம்பாவின் மனசை அவன் நன்றாய் அறிந்து கொண்டிருந்தபடியால் பொறுமையைக் கடைப்பிடித்தான். "அதெல்லாம் இருக்கட்டும், போலீஸ் ஐயா! எதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு இங்கே வந்தீங்க? அதைச் சொல்லுங்க?" என்றான். "அடாடா! மறந்தே போய்விட்டேனே! உன்னோடு பேசுகிற சுவாரஸ்யத்திலே வந்த காரியம் மறந்து விட்டது" என்று சொல்லிவிட்டுச் சட்டைப் பையிலிருந்து எடுத்த தபாலைக் கொடுத்தான் போலீஸ்காரன். "இது ஏது தபால்? எனக்கு யார் தபால் போட்டு இருப்பார்கள்? அதிசயமாய் இருக்கிறதே!" என்றான் செங்கோடன். "கூடார சினிமாவிலே உன் கன்னத்திலே அறைந்தாளே, ஒரு பெண்பிள்ளை-குமாரி பங்கஜா-அவள் கொடுத்தாள். சாலையில் பொய்மான் கரடு சமீபமாய் நின்றாள். நான் கொப்பனாம்பட்டி போகிறேன் என்றேன். 'இதை ராஜா செங்கோடக் கவுண்டரிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்றாள். பாவம்! ஒரு பெண்பிள்ளை கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது மாட்டேன் என்று எப்படிச் சொல்கிறது? 'சரி' என்று வாங்கிக் கொண்டு வந்தேன். நான் போகட்டுமா?" "கொஞ்சம் இருங்க; இந்தக் கடுதாசை வாசித்துக் காட்டிவிட்டுப் போங்க!" "என்ன தம்பி, உனக்குப் படிக்கத் தெரியாதா?" "தெரியாமல் என்ன? மூன்றாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். அச்சு எழுத்துப் படிக்கத் தெரியும். கூட்டு எழுத்தாயிருந்தால் படிக்கிறது சிரமம். ஒருவேளை அந்த அம்மா இங்கிலீஸிலே எழுதியிருந்தாலும் எழுதியிருப்பாங்க. எனக்கு இங்கிலீஸ் தெரியாது." இப்படிச் சொல்லிக் கொண்டே செங்கோடன் குடிசை அருகில் சென்று வாசற்படிக்குப் பக்கத்தில் வைத்திருந்த ஹரிக்கன் லாந்தரை எடுத்துப் பெரிதாகத் தூண்டிவிட்டுக் கடிதத்தை வாசித்தான். எழுத்துப் புரியும்படியாகவே எழுதியிருந்தது. ஆகையால் எழுத்துக் கூட்டி இரைந்து வாசித்தான்: "என் இதயத்தைக் கொள்ளை கொண்ட ராஜா செங்கோடக் கவுண்டர் அவர்களுக்கு, நான் பெரிய சங்கடத்திலும் அபாயத்திலும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நாளைச் சாயங்காலம் கட்டாயம் வந்து என்னைச் சந்திக்கவும். நீங்கள் நாளைச் சாயங்காலம் வரத் தவறினால் அப்புறம் என்னை உயிரோடு காண முடியாது. இப்படிக்கு, குமாரி பங்கஜா," இதைப் படித்தபோது செங்கோடனுக்கு வியர்த்து விறுவிறுத்தது. படித்து முடித்துவிட்டுப் போலீஸ்காரனுடைய முகத்தைப் பார்த்தான். போலீஸ்காரன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, "பார்த்தாயா அதிர்ஷ்டம் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறது!" என்றான். "எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது? நீங்க ஒரு தடவை படித்து காட்டுங்க!" "விளங்காமல் என்ன இருக்கிறது? அதுதான் வெட்ட வெளிச்சமாய் எழுதியிருக்கிறதே!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் ஒரு தடவை படித்துக் காட்டினான். "நீங்களே ஒரு யோசனை சொல்லுங்க. இது நிஜமாயிருக்குமா? நான் போக வேணுமா?" "போய்த்தான் பாரேன், என்ன நடக்கிறது என்று? உன்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்?" "சரி உங்கள் யோசனைப்படியே செய்கிறேன். ஆனால் உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்." "என்னை நீ இரண்டு வேண்டுமானாலும் கேட்கலாம்." "ஒன்றுதான், அதற்கு மேலே இல்லை. இராத்திரி கொப்பனாம்பட்டி கவுண்டர் வீட்டில் சாப்பிடப் போறீங்க அல்லவா? அங்கே என்னையும் இந்தக் குமாரி பங்கஜாவையும் பற்றி ஏதாவது கன்னாபின்னாவென்று பேசி வைக்காதீங்க! பேசினால் காரியம் கெட்டுப் போய்விடும்." "அது என்ன? அப்படி என்ன காரியம் கெட்டுப்போய்விடும்?" "உங்களிடம் சொல்லுகிறதற்கு என்ன? அந்த வீட்டுப் பெண் செம்பாவை நான் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்!..." "என்ன? என்ன? ஒரே போடாய்ப் போடுகிறாயே!" "நான் போட்டாலே ஒரே போடாய்த்தான் போடுகிறது; இரண்டு மூன்று போடுகிறதில்லை. செம்பாவுக்கும் எனக்கும் குறுக்கே யார் வந்தாலும், அவன் தசகண்ட இராவணனாயிருந்தாலும் சரி. ஒன்று அவன் சாக வேணும்; அல்லது என் உயிர் போக வேணும். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்!" "என் இஷ்டமும் இல்லை; உன் இஷ்டமும் இல்லை! அந்தப் பெண் இஷ்டப்பட்டு யாரை..." "அதைப்பற்றிச் சந்தேகம் வேண்டாம்! செம்பாவுக்கு என்னைக் கட்டிக்கொள்ளத்தான் இஷ்டம். நீங்களே கேட்டுக் கொள்ளலாம்!" "கவுண்டரே! இதை முன்னமே சொல்லித் தொலைக்கிறதுதானே? சொல்லியிருந்தால் நான் அந்தப் பெண் பேச்சையே எடுத்திருக்க மாட்டேனே! செம்பாவின் தகப்பனார் சொன்னார், மகளுக்கு இந்த வருஷம் அவசியம் கலியாணம் செய்துவிட வேண்டும் என்று. உனக்கு அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லையென்றும் தெரிவித்தார். நீயே கலியாணம் செய்து கொள்கிறதாயிருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! இன்றைக்கு இராத்திரியே பெரிய கவுண்டரிடம் சொல்லி விடுகிறேன்." "போலீஸ்கார ஐயா! நீங்க ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தால் அதுவே பெரிய உபகாரமாயிருக்கும். நாளைக் காலையில் நானே எல்லாம் சொல்லிக் கொள்வேன்" என்றான் செங்கோடன். போலீஸ்காரன் போன பிறகு குடிசைக்குள்ளே போய் லாந்தரை நன்றாய்த் தூண்டிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஓர் அடுப்பில் குழம்பு கொதித்து அடங்கியிருந்தது. இன்னும் ஓர் அடுப்பில் பழைய சாம்பல் குவிந்திருந்தது. அந்த அடுப்பை உற்றுப் பார்த்துவிட்டு, "எப்படிப்பட்ட, சித்திரகுப்தனாயிருந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நாம் பயப்படுவது அநாவசியம்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இராத்திரி பாயில் படுத்த பிறகு, செங்கோடனுடைய மனத்தில் பலவிதமான எண்ணங்கள் அலைமோதிக் குமுறின. அவற்றின் மத்தியில், ஏதோ ஒரு முக்கியமான விஷயம் மறந்துபோய்விட்டது. அதை எப்படியாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணிப் பெரும் பிரயத்தனம் செய்தான். எவ்வளவோ முயன்றும் அது ஞாபகத்துக்கு வராமலே தூங்கிப் போனான். |