உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 12 அன்று சாயங்காலம் செங்கோடன் சின்னமநாயக்கன்பட்டிக்குப் போனான். அங்கே எஸ்ராஜ், பங்காரு முதலியவர்கள் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது. பிறகு சினிமாக் கூடாரத்துக்குப் போனான். அவர்களைக் காணவில்லை. "மானேஜர் எங்கே?" என்று கேட்டான். யாரோ ஒருவரைக் காட்டினார்கள். அவர் எஸ்ராஜும் அல்ல; பங்காருசாமியும் அல்ல. விசாரித்ததில் பழைய மானேஜர் 'டிஸ்மிஸ்' ஆகிப் புது மானேஜர் வந்துவிட்டார் என்று தெரியவந்தது! பொய்மான் கரடுக்கு வந்தான். போலீஸ்காரன் நிற்கக் கண்டான். "அதுதான் சரி, தம்பி! கடிதத்தில் கண்டபடி வந்து விட்டாயே?" என்றான் போலீஸ்காரன். "வந்தேன். வந்து என்ன பிரயோஜனம்? ஆசாமிகளைக் காணோமே!" "எந்த ஆசாமிகளைத் தேடுகிறாய்! உனக்குக் கடிதம் எழுதியவள் இந்தப் பொய்மான் கரடுக்குப் பின்புறம் காத்துக் கொண்டிருக்கிறாள்!..." "ரொம்ப தூரம் பார்த்து வைத்திருக்கீங்களே? ஆனால் அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் எங்கே?" என்று கேட்டுவிட்டு, சினிமாக் கூடாரத்தில் தான் விசாரித்துத் தெரிந்து கொண்டதைச் சொன்னான். "அந்த ஆட்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். டிமிக்கி கொடுத்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது! அது போனால் போகட்டும். நீ இந்த மலைக்குப் பின்னால் போய் அந்தப் பெண்ணின் கதையைக் கேள்!" "ஆகட்டும்; நீங்களும் பக்கத்திலே எங்கேயாவது இருங்கள்!" "பயமாயிருக்கிறதா, தம்பி!" "பயம் ஒன்றுமில்லை; பக்கத்தில் சாட்சிக்கு யாராவது இருக்கட்டுமே என்று பார்க்கிறேன்!" இப்படிச் சொல்லிவிட்டுச் செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்புறமாகப் போனான். அங்கே ஒரு தனியான இடத்தில் மொட்டைப் பாறை ஒன்றின் மீது குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்தாள். அசோகவனத்துச் சீதையைப் போலவும் காட்டில் தனியாக விடப்பட்ட தமயந்தி போலவும் அவள் சோகமே உருவம் எடுத்தவளாய்த் தோன்றினாள். "இது என்ன? இங்கே தனியாக வந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறாய்? உன்னைப் பார்த்தால், லோகிதாசனை பறிகொடுத்த சந்திரமதி மாதிரி இருக்கிறதே?" என்றான் செங்கோடன். அப்போதுதான் செங்கோடன் வந்ததைத் தெரிந்து கொண்டவள்போல் குமாரி பங்கஜா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக்கொண்டு விசித்து விசித்து அழுதாள். செங்கோடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவளைச் சமாதனப்படுத்த முயன்றான். பாவம்! அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவனுக்குச் சோகத்தில் ஆழ்ந்த கதாநாயகியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது என்னமாய்த் தெரியும்? தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றான். பிறகு, இப்பேர்ப்பட்ட நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்று செம்பா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. அந்தப்படி செய்வதற்கு எண்ணி அந்தப் பெண்ணின் மேவாய்க் கட்டையைத் தொட்டான். உடனே குமாரி பங்கஜா இரண்டாவது தடவையாகப் 'பளீர்' என்று செங்கோடன் கன்னத்தில் அறைந்தாள் பாவம்! செங்கோடன் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டான். சற்றுப் பொறுத்து, "சரி, அப்படி என்றால் நான் போகட்டுமா? ஏதோ ஆபத்து என்று கடுதாசி எழுதினாயே என்று வந்தேன்!" என்று எழுந்திருக்க முயன்றான். உடனே குமாரி பங்கஜா அவனுடைய கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். "என்னை நீயும் கைவிட்டு விட்டால் நான் இந்தப் பாறையிலிருந்து விழுந்து சாக வேண்டியதுதான்!" என்று சொல்லிவிட்டு அவனுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டு விம்மினாள். செங்கோடன் கஷ்டப்பட்டுத் தன்னுடைய கைகளையும் தோளையும் விடுவித்துக் கொண்டான். அந்தப் பெண் பூசிக்கொண்டிருந்த 'ஸெண்டு' அவனுடைய மூக்கைத் துளைத்துத் தலைவலியை உண்டு பண்ணிற்று! "அப்படியானால், உனக்கு என்ன கஷ்டம் என்று சொல்! என்னால் முடிந்த உதவி செய்கிறேன். அந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் எங்கே?" என்று கேட்டான். "அவர்கள் பேச்சையே எடுக்காதே! துரோகிகள்! பாதகர்கள்! சண்டாளர்கள்! என்னை ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்து என் நகைகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பணத்தையும் பறித்துக்கொண்டு..." "ஐயோ! இது என்ன அநியாயம்! உன் சொந்தத் தமையனோ அப்படிச் செய்துவிட்டான்?" "உன்னிடம் நிஜத்தைச் சொல்வதற்கென்ன! அவன் என்னுடைய தமையன் அல்ல; அவன் எனக்கு எந்தவித உறவும் இல்லை." "இன்னொருவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றானே?" "அதுவும் பொய்!" "பின் ஏன் அவர்களுடன் வந்தாய்?" "என்னை சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள், பாவிகள்! அவர்கள் நாசமாய்ப் போகவேணும்!" "வீணாக அலட்டி என்ன பிரயோஜனம்? அவர்கள் இப்போது எங்கே சொல்? செம்மையாகத் தீட்டிவிடுகிறேன். ஒரு பெண்பிள்ளையை இப்படியா மோசம் செய்வது? அவர்கள் இப்போது எங்கே?" என்று மறுபடியும் கேட்டான். "யாருக்குத் தெரியும்? இத்தனை நேரம் ரெயில் ஏறி இருப்பார்கள்! கையிலே ரெயில் சார்ஜுக்குக் கூடப் பணம் இல்லாமல் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நீதான் என்னைக் காப்பாற்ற வேணும். உன்னைத் தான் நம்பி இருக்கிறேன்." "எதற்காக இப்படி உன்னை விட்டுவிட்டு அவர்கள் போனார்கள்? ஏதாவது சண்டை வந்துவிட்டதா என்ன?" "அதையும் சொல்லிவிடுகிறேன். உன்னை ஏமாற்றி உன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் கூடாது என்றேன். அதனால்..." "என்னிடம் இருக்கும் பணமா? என்னிடம் பணம் ஏது?" "நீ பணம் சேர்த்துப் புதைத்து வைத்திருக்கிறாய் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். நீ கூடக் கஞ்சா மயக்கத்திலே இரண்டொரு தடவை சொல்லிவிட்டாய்...!" செங்கோடன் ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளப் பார்த்தான் அல்லவா? அது இப்போது பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. கஞ்சா மயக்கத்தில் அந்தத் திருட்டுப் பயல்களிடம் சொல்லக் கூடாத இரகசியத்தைச் சொல்லிவிட்டதாக நினைவு வந்தது. உடனே செங்கோடன் அளவில்லாத பரபரப்பு அடைந்து எழுந்து நின்றான். "எங்கே போகிறாய்?" என்று சொல்லி அவன் கையைப் பற்றிக் குமாரி பங்கஜா இழுத்து உட்காரவைக்க முயன்றாள். "வெறுமனே இங்கே உட்கார்ந்திருந்து என்ன லாபம்? அந்தத் திருட்டுப் பயல்களை உடனே கண்டுபிடிக்க வேண்டாமா? இந்தக் காட்டுக்கு அந்தப் புறத்தில் போலீஸ்காரர் இருக்கிறார். வா, போய்ச் சொல்லலாம்!" "ஐயோ! போலீஸ்காரா? எனக்குப் பயமாயிருக்கிறதே!" "பயம் என்ன? நீ நேற்று அவரிடந்தானே எனக்குக் கடுதாசி கொடுத்து அனுப்பினாய்?" "ஆமாம்; வேறு யாரும் இல்லாதபடியால் அவரிடம் கொடுத்து அனுப்பினேன். கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் அவருக்குத் தெரிந்து போச்சோ?" "தெரியாமல் எப்படி இருக்கும்? அவர்தான் கடிதத்தைப் படித்தார்!" "ஐயையோ! அதனாலேதான் அவர் இங்கே வட்டமிடுகிறார்போல் இருக்கிறது! கவுண்டரே! எனக்குப் பயமாய் இருக்கிறது. அந்தப் போலீஸ்காரப் பாவி என்மேல் மோகம் கொண்டிருக்கிறான்!" "அப்படியிருந்தால், அவனையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். வா, போகலாம்!" என்று சொல்லிச் செங்கோடன் மளமளவென்று மலைமீது தாவி ஏறினான். குமாரி பங்கஜாவும் மூச்சு வாங்க, அவனைத் தொடர்ந்து ஏறினான். இருவரும் பொய்மான் கரடின் உச்சியை அடைந்தார்கள். நிலவின் வெளிச்சம் குமாரி பங்கஜாவின் முகத்தில் விழுந்தது. செங்கோடன் அசப்பில் அவள் முகத்தைப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. அவள் அழவும் இல்லை, கண்ணீர் விடவும் இல்லை! அவ்வளவும் பாசாங்கு! வேஷம்! நடிப்பு! செங்கோடன் அந்தப் பாறையின் உச்சியிலிருந்து சாலையைப் பார்த்தான். சாலையில் ஜன நடமாட்டமே இல்லை. போலீஸ்காரரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்! அடாடா! சாட்சி இல்லாமல் போய் விட்டதே! செங்கோடனுடைய பார்வை மேலும் கிழக்கு நோக்கிச் சென்றது. அவனுடைய கேணியும் குடிசையும் இருந்த இடத்துக்குச் சென்று நின்றது, ஆகா! அது என்ன? அவனுடைய குடிசைக்குள்ளே என்ன வெளிச்சம்? எப்படி வந்தது? யாராவது...! உடனே அவன் ஒரு நிச்சயத்துக்கு வந்தான். "இதோ பார்! என்னுடைய குடிசையில் ஏதோ வெளிச்சமாய் இருக்கிறது. நெருப்புப் பிடித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. நான் உடனே போய்ப் பார்க்கவேணும். நாளைக்கு மறுபடி வருகிறேன். மற்ற விஷயங்கள்..." என்று அவன் சொல்வதற்குள் குமாரி பங்கஜா, "ஐயோ! என்னை நீயும் விட்டு விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன?" என்று கூச்சலிட்டு, அவனுடைய சட்டைத் துணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். செங்கோடன் கையை ஓங்கினான்! பளீர் பளீர் என்று அவளுடைய ஒரு கன்னத்தில் இரண்டு அறை அறைந்தான். சுளீர் சுளீர் என்று இன்னொரு கன்னத்தில் இன்னும் இரண்டு அறை கொடுத்தான்! "இதோ பார்; நான் போவதைத் தடுத்தாயோ உன்னை நானே இந்தப் பாறையிலிருந்து தள்ளிக் கொன்று விடுவேன்!" என்றான். குமாரி பங்கஜா விம்மிக்கொண்டே, "உன்னை நான் தடுக்கவில்லை. ஆனால் நீ என்னைக் கொன்றாலும் சரி, உன்னோடு நானும் வருவேன். எனக்கு வேறு நாதியில்லை!" என்றாள். செங்கோடன் முன்னால் விரைந்தோட, குமாரி பங்கஜாவும் இரைக்க இரைக்க அவனோடு ஓடினாள். |