உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 6 'நெருப்பு' என்ற சத்தத்தைக் கேட்டு மூளை குழம்பி நின்ற செங்கோடனுக்குச் சட்டென்று தான் செய்ய வேண்டியது இன்னதென்று புலப்பட்டுவிட்டது. சினிமாப் பார்த்தவர்கள் எல்லாரும் கூடாரத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள் அல்லவா? செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா? அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம்? கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது! அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன? தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், "ஐயோ! ஐயோ! என்னை விடு" என்றூ அலறினாள். "நான் தான் ராஜா செங்கோடக் கவுண்டன். பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே, சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் செங்கோடன் குமாரி பங்கஜாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு கூடாரத்திலிருந்து வெளிப் பக்கம் நோக்கி ஓடினான். குமாரி பங்கஜா கால்களை உதைத்துக் கொண்டாள். கைகளினால் அவனுடைய மார்பைக் குத்தித் தள்ளினாள், கீழே குதிக்க முயன்றாள். ஒன்றும் பலிக்கவில்லை; செங்கோடக் கவுண்டனுடைய இரும்புக் கைகளின் பிடியிலிருந்து அவள் தப்ப முடியவில்லை. கூடாரத்துக்கு வெளியில் அவளைக்கொண்டு வந்ததும் செங்கோடன் தானாகவே அவளைக் கீழே இறக்கிவிட்டான். "பயப்படாதே! நான் இருக்கும்போது பயம் என்ன?" என்றான். அதற்குப் பதிலாக குமாரி பங்கஜா அவனது வலது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள். மிக்க பலசாலியான செங்கோடனுக்கு அந்த அடியினால் கன்னத்தை வலிக்கவில்லை; ஆனால் நெஞ்சில் கொஞ்சம் வலித்தது. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்றான். திடீரென்று கூடாரத்துக்கு வெளியே விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின. தன் எதிரில் நின்றதும், தன் கன்னத்தில் அறைந்ததும் குமாரி பங்கஜா தான் என்பதைச் செங்கோடன் இன்னொரு தடவை நல்ல வெளிச்சத்தில் பார்த்துச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அதைப்பற்றி அவளைக் கேட்க வேண்டும் என்று மனம் விரும்பியது. "உன் உயிரைக் காப்பாற்றினேன். உன்னுடைய பூப்போன்ற மேனியில் நெருப்புக் காயம் படாமல் தப்புவித்தேன். அதற்கு நீ எனக்கு கொடுத்த பரிசு கன்னத்தில் அறைதானோ?" என்று கேட்க அவன் விரும்பினான். ஆனால் நாவில் வார்த்தை ஒன்றும் வரவில்லை. பங்கஜாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தவன் போல நின்றான். அப்போது தான் குமாரி பங்கஜா அவனை உற்றுப் பார்த்தாள். "ஓகோ! நீயா? நீதானா இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணினாய்? இப்படிப் பண்ணலாமா?" என்றாள். செங்கோடன் அதற்குப் பதில் சொல்வதற்குள் "பங்கஜா! பங்கஜா!" என்ற குரல் கேட்டது. "இதோ இருக்கிறேன், அண்ணா!" திடுதிடுவென்று ஏழெட்டுப் பேர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஏதேதோ பேசிக் கொண்டார்கள். "இந்தத் தடியன்தானா கலாட்டா ஆரம்பித்தது?" "ஆமாம்; இவனேதான்!" "குறவனைப்போல் விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்!" "படம் ஆரம்பித்ததிலிருந்து இவன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன்." "ஏண்டா, தடியா! படம் பார்க்க வந்தாயா? கலாட்டா பண்ண வந்தாயா?" "போலீஸ் கான்ஸ்டேபிள்! இங்கே சீக்கிரம் வாருங்கள்! இந்த ரௌடியை அரெஸ்ட் செய்யுங்கள்!" "பங்கஜம்! இன்று சாயங்காலம் உன்னிடம் கயவாளித்தனமாகப் பேசினான் என்று சொன்னாயே. அந்த மனிதன் இவன்தானே?" இப்படியெல்லாம் அவனைச் சுற்றி யார் யாரோ, என்னென்னவோ பேசிக்கொண்டது செங்கோடனுடைய காதில் விழுந்தது. ஆனால் அவனுடைய மனத்திலே ஒன்றும் பதியவில்லை; அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவும் இல்லை. தன்னைப் பற்றியா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள்? தான் செய்த குற்றம் என்ன? ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா? இதென்னடா வம்பாயிருக்கிறதே? பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே? அப்போது குமாரி பங்கஜா யாரோ ஒருவனுடைய கையைப் பிடித்துகொண்டு, "ஸார், இப்படிக் கொஞ்சம் தனியே வாருங்கள்! ஒரு விஷயம்" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார்?-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள்? அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள்? போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன? தன்னைப்பற்றி அந்த மனிதனிடம் ஏதோ சொல்லப் போகிறாள் போலிருக்கிறது. நல்லது சொல்லப் போகிறாளோ, அல்லது கெட்டது சொல்லப் போகிறாளோ? இதற்குள் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் செங்கோடனுடைய மார்பு பதைபதைத்தது. நெஞ்சு தொண்டைக்கு வந்தது. உடம்பு வியர்த்தது. சிவப்புத் தலைப்பாகை ஆசாமிகள் இருக்குமிடத்துச் சமீபத்திலேயே செங்கோடன் போவது கிடையாது. ஆகா! போலீஸ்காரர்கள் பொல்லாதவர்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள். செங்கோடனுக்கோ பணம் என்றால் உயிர். ஆகையால் எங்கேயாவது அவன் போகும் சாலையிலே போலீஸ்காரன் நின்றால், செங்கோடன் சாலையை விட்டு இறங்கித் தூரமாக விலகிப்போய் ஒரு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் மறுபடியும் சாலையில் ஏறுவான். இப்போது ஒரு போலீஸ்காரன் தலையில் சிவப்புத் தொப்பியும் குண்டாந்தடியுமாகச் செங்கோடனை நெருங்கி வந்து கொண்டிருந்தான். தப்பித்துக்கொண்டு ஓடலாமென்று பார்த்தால் சுற்றிலும் ஜனக்கூட்டமாயிருந்தது. ஆனால் எதற்காக அவன் ஓடவேண்டும்? அவன் செய்த குற்றந்தான் என்ன? அதைத்தான் தெரிந்து கொள்ளலாமே? அந்தப் போலீஸ்காரனுடைய ஒரு கையில் குண்டாந்தடி இருந்தது. இன்னொரு கையில் ஒரு ஹரிக்கன் லாந்தர் இருந்தது. அது செங்கோடனுடைய ஹரிக்கன் லாந்தர். டிக்கட் வாங்கிய இடத்தில் அவன் விட்டுவிட்டு வந்த லாந்தர். 'அது எப்படி இந்தப் போலீஸ்காரன் கைக்கு வந்தது? ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; நமக்கு ஏதோ ஆபத்து அதன்மூலம் வரப்போகிறது!" போலீஸ்காரன், "விலகுங்கள்! விலகுங்கள், ஐயா!" என்று மற்றவர்களை அதட்டி விலக்கிக்கொண்டே செங்கோடனின் அருகில் வந்தான். "ஏண்டாப்பா! என்ன கலாட்டா பண்ணுகிறாய்?" என்று அவன் செங்கோடனைப் பார்த்துக் கேட்டான். செங்கோடனுக்கு வார்த்தை சொல்லும் சக்தி வந்தது. ஒரு முரட்டு தைரியமும் பிறந்தது. "என்னைக் கேட்கிறீர்களா? நான் ஒரு கலாட்டாவும் பண்ணவில்லை. கலாட்டா என்றால் கறுப்பா, சிவப்பா என்றே எனக்குத் தெரியாது!" "பின்னே எதற்காக இங்கே இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது?" "எல்லாரும் சினிமாப் பார்க்க வந்தவர்கள் போலத் தோன்றுகிறது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்!" "வெகு கில்லாடித்தனமாய்ப் பேசுகிறாயே? ஒண்ணாம் நம்பர் ரௌடி போல் இருக்கிறதே!" என்றான் போலீஸ் கான்ஸ்டேபிள். பக்கத்தில் நின்றவர்கள் தலைக்கு ஒன்று சொல்லத் தொடங்கினார்கள். "இந்தத் திருட்டுப் பயலை விடாதீர்கள், ஸார்!" "இருட்டிலே இவன் ஒரு பெண்பிள்ளையின் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான்!" "கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தானா? அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா?" "முழிக்கிற முழியைப் பார்த்தால் தெரியவில்லையா, எது வேணுமானாலும் செய்யக்கூடியவன் என்று!" "நீங்கள் எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கலாட்டாவே பெரிய கலாட்டாவாயிருக்கிறது!" என்றான் போலீஸ்காரன். இதற்குள் குமாரி பங்கஜா சற்று முன் கையைப் பிடித்து அழைத்துப் போன மனிதர் திரும்பி வந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் பங்கஜாவும் வந்து தனியாக நின்றாள். "இதோ சினிமா மானேஜர் வந்துவிட்டார்! அவரையே கேளுங்கள்!" என்றான் கூட்டத்தில் ஒருவன். சினிமா மானேஜர் வந்து போலீஸ்காரன் காதில் ஏதோ சொன்னார். அவன் உடனே, "நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள்! படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள்!" என்றான். "நெருப்பு அணைந்துவிட்டதா, ஸார்! சேதம் ஒன்றும் இல்லையே?" என்று ஒருவன் கேட்டான். "அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஹரிக்கன் லாந்தரில் எண்ணெய் ஆகிப்போய் விட்டது. அணையும்போது திரி 'குப்'பென்று எரிந்தது. அதைப் பார்த்துவிட்டுத்தான் யாரோ 'நெருப்பு' 'நெருப்பு' என்று கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணிவிட்டார்கள். உள்ளே போங்கள்! படம் ஆரம்பமாகப் போகிறது." உண்மையாகவே படம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாகக் 'கிணுகிணு'வென்று மணி அடித்தது. எல்லோரும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள். செங்கோடன், போலீஸ்காரன், சினிமா மானேஜர், குமாரி பங்கஜா இவர்கள் மட்டும் பாக்கி இருந்தார்கள். "அடே! உன் பெயர் என்ன?" என்று போலீஸ்காரன் அதட்டிக் கேட்டான். "என் பெயர் செங்கோடக் கவுண்டன். எதற்காகக் கேட்கிறீர்கள்?" "சொல்லுகிறேன், அவசரப்படாதே! இந்த லாந்தர் யாருடையது?" "என்னுடையதுதானுங்க!" "இதை நீ எங்கே வைத்துவிட்டு வந்தாய்?" "டிக்கட் வாங்குகிற இடத்திலே விட்டுவிட்டு வந்தேன். ஏனுங்க? இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா?" "இந்த ஓட்டை லாந்தரை எவன் களவாடப் போகிறான்?" "உங்களுக்கு இந்த ஊர் சமாசாரம் தெரியாதுங்க. நீங்கள் இந்த ஊருக்குப் புதிதுபோல் இருக்கிறது. இந்த ஊரிலே ஒட்டை லாந்தரையும் திருடுவாங்க! உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க!" "அடே, அதிகப் பிரசங்கி! வாயை மூடுகிறாயா இல்லையா?" என்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரன் தன் கையிலிருந்த தடியை ஓங்கினான். செங்கோடனுடைய கோபம் எல்லை கடந்தது. அடுத்த நிமிஷம் அவனுக்கும் போலீஸ் ஜவானுக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிருக்கும். நல்லவேளையாக குமாரி பங்கஜா அச்சமயம் குறுக்கிட்டாள். "கான்ஸ்டேபிள் ஸார்! அவர் மேலே ஏன் கோபித்து கொள்ளுகிறீங்க! அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே?" என்றாள். "இவ்வளவு பெரிய இடத்திலேயிருந்து சிபாரிசு வந்த பிறகு நான் என்ன செய்கிறது?" என்றான் போலீஸ்காரன். சினிமா மேனேஜர், "ஆமாம், கான்ஸ்டேபிள்! இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள்! இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள்!" என்றார். "விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது நல்லது" என்றாள் பங்கஜா. "அவசியம் சொல்ல வேண்டியதுதான். அப்பனே! இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும்!" என்றார் சினிமா மானேஜர். "இந்தா அப்பா! உன் லாந்தரை வாங்கிக் கொள். வேற எங்கேயும் வைக்காமல் உன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பாக்கி சினிமாவையும் பார்த்து விட்டுப் போ!" என்றான் போலீஸ்காரன். செங்கோடன் கைநீட்டி லாந்தரை வாங்கிக் கொண்டான். சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் திசையை நோக்கி விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். "அவர் ஏன் போகிறார்? பாக்கி சினிமா பார்க்கவில்லையா?" என்று குமாரி பங்கஜா கேட்டது செங்கோடன் காதில் விழுந்தது. வெட்கத்தினாலும் கோபத்தினாலும் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த செங்கோடன் குமாரி பங்கஜாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்தான். "கவுண்டர் கோபித்துக்கொண்டு போகிறார்போல் இருக்கிறது!" என்றான் போலீஸ் சேவகன். கான்ஸ்டேபிளின் சிரிப்புடன் இன்னும் இருவரின் சிரிப்புச் சத்தமும் கலந்து கேட்டது. செங்கோடன் மனத்தில் மிக்க கோபத்துடனேதான் போனான். ஆனால் அந்தக் கோபமெல்லாம் செம்பவளவல்லியின் பேரில் பாய்ந்தது. "சும்மா இருந்தவனைக் கிளப்பிவிட்டுக் 'கட்டாயம் போய் இந்த அழகான சினிமாவைப் பார்த்துவிட்டு வா' என்று சொன்னாள் அல்லவா? அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா? இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா? பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!" என்று செங்கோடன் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். |