உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு ஐம்பதாம் அத்தியாயம் - தலைவன் தாள் அன்று மாலை ஆயனரிடம் சிவகாமி தனியாக வந்து, "அப்பா நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா? அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றாள். ஆயனருக்கு அகம் நிறைந்த மகிழ்ச்சியினால் மூச்சு நின்று விடும் போலிருந்தது. சிவகாமியை உற்று நோக்கி அவளுடைய முக மலர்ச்சியையும் பார்த்து விட்டு, "அதற்கென்ன, குழந்தாய்! கூடிய விரைவில் உனக்குத் தக்க நாயகனைத் தீர்மானித்து, மணம் செய்து வைக்கிறேன்!" என்றார். "அப்பா! எனக்கு நாயகனைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தைத் தங்களுக்கு நான் வைக்கவில்லை. ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!" என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார். அச்சமயம் திருநாவுக்கரசர் பெருமான் அருகில் உள்ள ஒரு சிவஸ்தலத்திலேதான் இருக்கிறார் என்று அறிந்து அவரிடம் சென்று ஆயனர் யோசனை கேட்டார். வாகீசர் எல்லாவற்றையும் கேட்ட பின்னர், "ஆயனரே! உமது குமாரியின் விஷயத்தில் என் மனத்தில் தோன்றியது உண்மையாய்ப் போய் விட்டது. மானிடப் பெண் யாரும் அடைந்திருக்க முடியாத துன்பங்களை அவள் அடைந்து விட்டாள். இனி அவளுக்கு அத்தனை துன்பங்களுக்கும் இணையான பேரின்பம் காத்திருக்கிறது. உம்முடைய குமாரிக்குச் சிவகாமி என்று பெயர் இட்டீர் அல்லவா? அதற்கேற்ப அவள் சிவபெருமானிடமே காதல் கொண்டு விட்டாள். அவளுடைய விருப்பத்துக்கு இடையூறு செய்யாமல் நிறைவேற்றி வையுங்கள். அதுதான் சிவகாமிக்கு நீர் செய்யக்கூடிய பேருதவி!" என்று அருளினார். திங்கள் மூன்று சென்ற பிறகு, வாதாபி வெற்றியின் கோலாகலக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு முடிந்த பிறகு, ஒரு நல்ல நாளில் ஏகாம்பரநாதரின் சந்நிதிக்கு ஆயனரும், சிவகாமியும் இன்னும் சிலரும் வந்து சேர்ந்தார்கள். கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, "முன்னம் அவனுடைய நாமம்
கேட்டாள்
என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப
அபிநயம் பிடித்தாள். சிவகாமி ஆடத் தொடங்கியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச்
சந்நிதியில் ஜனங்கள் சேரத் தொடங்கினார்கள். நடனத்தைப் பார்த்தவர்கள்
அனைவரும் மெய்மறந்து பரவசமடைந்து பக்தி வெள்ளத்தில் மிதந்தார்கள். மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்" அச்சமயம் யாரும் எதிர்பாரா வண்ணமாக, மாமல்ல சக்கரவர்த்தியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். முன்னொரு தடவை இதே பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த போது சிவகாமி மாமல்லரின் வரவை அறிந்து அவருடைய நினைவாகவே அபிநயம் செய்ததுண்டு. இப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை. அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும் ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும் அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை; வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை. மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம் தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும் அவருக்கு நினைவு வந்தன. சத்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, "தலைப்பட்டாள் நங்கை தலைவன்
தாளே"
என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த
இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. |