உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் : கோடை 10. எடு அபராதம்! சம்பு சாஸ்திரி விட்டு வாசலில் பந்தல்கால் முகூர்த்தம் ஆனதிலிருந்து ஊரில் கல்யாணக் களை ஏற்பட்டுவிட்டது. அக்கிரகாரத்தில் சரிபாதியை அடைத்துப் பந்தல் போட்டார்கள். வாழை மரங்களும், திரைச் சீலைகளும் கொண்டு வந்து கட்டினார்கள். ஊரில் உள்ள பசங்களுக்கெல்லாம் கல்யாணப் பந்தல்தான் நிரந்தர வாசஸ்தலமாயிற்று. அவர்கள் சதா பந்தல் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டும், குதித்துக் கொண்டும், கொம்மாளம் போட்டுக் கொண்டும் இருந்தார்கள். அந்தக் கடுங்கோடையில், அவர்கள் விளையாடுவதற்கு இவ்வளவு குளிர்ந்த இடம் வேறு எங்கே கிடைக்கும்? சம்பு சாஸ்திரி எதிர்பார்த்தபடியே, ஊரிலுள்ளவர்கள் அந்தச் சமயத்தில் விட்டுக் கொடுக்காமல் அவருக்கு ஒத்தாசை செய்ய முன் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்தை ஏற்றுக்கொண்டு செய்தார்கள். அவரவர்களும் தங்கள் சொந்தக் காரியத்தையும் கொஞ்சம் சேர்த்துப் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கல்யாணச் சாமான் ஜாப்தா போடும் போது சாமாவய்யர் பன்னிரண்டு சீட்டுக் கட்டுப் போட வேண்டுமென்று வற்புறுத்தி அப்படியே வரவழைத்துக் கொண்டார். சீனிவாசய்யர் ஒன்பது கட்டுச் சிவபுரி புகையிலை கட்டாயம் வேண்டும் என்று சொன்னார். ஷோக் சுந்தரமய்யர், சந்தனம், ஸெண்டு, ஊதுவத்தி வகையரா மட்டும் ஐம்பது ரூபாய்க்குத் திட்டம் போட்டார். இந்த மாதிரியே கல்யாணம் சிறப்பாக நடக்க வேண்டியதற்கு யோசனைகளை ஒவ்வொருவரும் சொன்னார்கள். உக்கிராணச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரப்போன பஞ்சாப கேசய்யர், தம் வீட்டுக்கு ஒரு வருஷத்துக்கு வேண்டிய மளிகைச் சாமான்களையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் என்று ராமய்யா வாத்தியார் சத்தியம் பண்ணத் தயாராயிருந்தார். சமையலுக்குக் குண்டுக் கிருஷ்ணனை அமர்த்தி அவன் ஒன்பது ஆட்களுடன் வருவதற்கு ஏற்பாடு செய்தார்கள். உள்ளூர்க் கோவில் மேளக்காரனுடன், திருநாகேசுரம் தங்க நாயனத்துக்கும் அச்சாரம் கொடுக்கப்பட்டது. இரண்டு நாள் கதாகாலட்சேபத்துக்குச் சம்புசாஸ்திரியே ஏற்பாடு செய்துவிட்டார். கல்யாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன்பிருந்தே சமையற்காரர்கள் வந்து சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் அக்கிரகாரத்தில் பாட்டியம்மாள்களையும் வியாதிக்காரர்களையும் தவிர, பாக்கி எல்லாருக்கும் கல்யாண வீட்டில்தான் சாப்பாடு. பஜனை சம்பு சாஸ்திரி என்றால் சுற்று வட்டாரத்தில் வெகு தூரத்துக்குத் தெரிந்திருந்தது. அவருக்கு ஒரே பெண்; அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் என்றதும், வைதிகர்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். எனவே, கல்யாணத்துக்கு முதல் நாள், பந்துக்களும், சிநேகிதர்களும், வைதிகர்களும், கதை கச்சேரி கேட்கலாமென்று வந்தவர்களும், கல்யாணச் சாப்பாட்டை உத்தேசித்தே வந்தவர்களுமாக, ஊர் ஜே ஜே என்று ஆகிவிட்டது. கடைசியாக, சம்பந்திகளும் வந்து சேர்ந்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அவர்கள் அவ்வளவு பேர் இல்லை. ரயிலடிக்குப் பத்து வண்டிகள் அனுப்பியிருந்தும், ஆறு வண்டிக்குத்தான் ஜனங்கள் வந்தார்கள். மாப்பிள்ளையை அழைப்பதற்குமுன், ஊரின் கீழ்க் கோடியிலிருந்த சிவன் கோவிலில் அவர்கள் சற்று நேரம் தங்க ஏற்பாடாகியிருந்தது. அங்கே ஊராரும் வரவழைக்கப்பட்டனர். சம்பந்திகளுக்கும் ஊராருக்கும் அங்கே பரிச்சயம் ஏற்பட்டது. பிறகு, 'ஜான்வாஸ' ஊர்வலம் ஆரம்பமாயிற்று. அதற்காக வந்திருந்த கோச் வண்டியில், மாப்பிள்ளை ஸ்ரீதரன் ஜம்மென்று உட்கார்ந்திருந்தான். விலையுயர்ந்த ட்வீட் துணியில் தைத்த கால்சட்டையும் மேல்சட்டையும், காலரும் நெக்டையும் தரித்து, கிராப் செய்த தலையை அழகாக வாரி விட்டுக் கொண்டு நெற்றியில் சின்னஞ்சிறு சாந்துப் பொட்டுடன் அவன் அலட்சியமாகக் கோச் வண்டியில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்த நெடுங்கரைவாசிகள், 'இந்தச் சம்பு சாஸ்திரி பெண்ணுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளையா!' என்று மனத்திற்குள் அசூயைப் பட்டார்கள். ஆனால் வெளியில் "மாப்பிள்ளை அவ்வளவு ஆசாரமாயிருக்கமாட்டான் போலே இருக்கு. போகப் போகத் தெரியணும்!" என்றும், "தலையை ஏன் இப்படி விகாரம் பண்ணிண்டிருக்கான்? அழகாகக் கட்டுக் குடுமி வச்சிண்டிருக்கப் படாதோ?" என்றும், "சம்பு சாஸ்திரியின் கர்நாடகத்துக்கும் இந்தப் பிள்ளையின் டவுன் நாகரிகத்துக்கும் எங்கே சரிப்பட்டு வரப்போகிறது?" என்றும் பலவாறு பேசிக்கொண்டார்கள். ஊர்வலம் முடிந்ததும் சாப்பிடக் கூப்பிடுவதை எதிர் பார்த்து எல்லாரும் திண்ணையிலும் பந்தலிலுமாக உட்கார்ந்திருந்தார்கள். "இலை அப்போதே போட்டாச்சே; ஏன் தாமசம்?" என்று ஒரு கேள்வி எழுந்தது. "சம்பந்திகளைக் கூப்பிடப் போயிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் வரவில்லை" என்று ஒருவர் சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் 'கசு முசு' 'கசு முசு' என்று காதோடு காதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். "மாப்பிள்ளைப் பிள்ளையாண்டானுக்குப் பெண் பிடிக்கவில்லையாம். கல்யாணம் வேண்டாம். ஊருக்குப் போகணும்கிறானாம்" என்று ஒரு வதந்தி பரவிற்று. "அவன் இன்னும் பெண்ணையே பார்க்கவில்லையே?" என்று சிலர் கேட்டார்கள். "பெண்ணின் அப்பாவைப் பார்த்ததுமே பையனுக்குப் போரும்னு ஆயிட்டதாம்!" என்று ஒரு ஹாஸ்யப் பிரியர் சொன்னார். "சீச்சீ! அதெல்லாம் இல்லேடா! ஊர்கோலத்துக்கு மோட்டார் வைக்கலேன்னுதான் பையனுக்குக் கோபமாம். சுத்த கர்நாடகமா, கோச் வண்டியில் உட்கார்ந்து ஊர்கோலம் வந்தது அவனுக்குப் பிடிக்கலையாம்!" என்றார் இன்னொருவர். இப்படி எல்லாரும் தலைக்கு ஒரு விதமாகப் பேசிக் கொண்டிருக்கையில் தீக்ஷிதர் அவசர அவசரமாகச் சம்பு சாஸ்திரி வீட்டுக்கு வந்து அவரைச் சம்பந்திகளின் ஜாகைக்கு அழைத்துக்கொண்டு போனார். சம்பந்தி - ஜாகையில் கூடத்திலே ராஜாராமய்யர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். தங்கம்மாள் பக்கத்தில் நின்றாள். சாஸ்திரியைக் கண்டதும், தங்கம்மாள் பக்கத்தில் நின்றவர்களை, "நீங்கள்ளாம் போங்கோ!" என்று அதட்டவே, எல்லாரும் விலகிப் போனார்கள். "என்னங்கணும், இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டீரே!" என்றாள் தங்கம்மாள். இந்தப் பேச்சு, சாஸ்திரியின் தலையில் பெரிய கல்லைப் போலவே விழுந்தது. அவர் பிரமித்துப் போய், "என்ன? என்ன?" என்று கேட்டார். "என்னவா? உம்ம தங்கை சமாசாரத்தை எங்ககிட்டச் சொல்லாமயே இருந்துட்டீரே? இவாளுக்கு எங்கேடா தெரியப்போறது, ஏமாத்தி விடலாம்னுதானே இருந்தேள்?" என்றாள். சாஸ்திரிக்கு ஒருவாறு இது ஆறுதல் அளித்தது. அதே சமயத்தில் துயரமும் பொங்கிக் கொண்டு வந்தது. "அம்மா! இந்தக் கல்யாண சமயத்திலே அவள் பேச்சை ஏன் எடுக்கறயள்! அவளுக்கு நான் ஸ்நானம் பண்ணி எத்தனையோ வருஷம் ஆச்சே! அவளுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையே!" என்றார். அவருடைய கண்களிலிருந்து அப்போது கண்ணீர் பெருகி வழிந்தது. "இருந்தாலும், இப்படிக் குடும்பத்திலே ஒரு குத்தம் இருக்குன்னு எங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டாமோ? இப்படிப்பட்ட இடத்திலே வந்து சம்பந்தம் பண்ணிக்கணும்னு எங்களுக்கு என்னங்கணும் வந்திருக்கு?...ஏன்னா! நீங்க பாட்டுக்குப் பேசாமலிருக்கயளே?" என்று தங்கம்மாள் ராஜாராமய்யரைப் பார்த்துக் கேட்டாள். "என்னை என்னத்தைச் சொல்லச் சொல்றே? விஷயந்தான் தெரிஞ்சிருக்கே. உனக்கு ஒரு காரணத்தினாலே பிடிக்கலை. பையனுக்கு இன்னொரு காரணத்தினாலே பிடிக்கலை. அப்புறம் என்ன கல்யாணம் வேண்டியிருக்கு? அவர் கிட்டச் சொல்லிவிட்டு, பேசாமே கிளம்பிப் போக வேண்டியதுதான்" என்றார் ராஜாராமய்யர். சம்பு சாஸ்திரிக்கு இடி விழுந்தது போல் இருந்தது. "ஐயர்வாள்! என்ன இப்படிச் சொல்றயளே! எனக்கு ஒண்ணும் புரியலையே?" என்றார். இப்போது தீக்ஷிதர் குறுக்கிட்டு, "ஆமாங்கணும்; உமக்கு ஒண்ணும் புரியாது. அப்பவே, நான் ஊர்க்கோலத்துக்கு மோட்டார் கார் வரவழையும்னு சொன்னேனோ, இல்லையோ? மாப்பிள்ளைப் பையனுக்கு அதுதான் கோபமாம்!" என்றார். "அவன் ஏற்கனவே பட்டிக்காட்டுப் பெண் வேண்டாம்னு சொல்லிண்டிருந்தான். அதுக்குத் தகுந்தாப்பலே, இந்த ஊரானா, மகா பட்டிக்காடாக இருக்கு. நீரானா, ஓர் ஓட்டைக் கோச் வண்டியைக் கொண்டு வந்து ஊர்கோலத்துக்கு நிறுத்தியிருக்கீர்" என்றாள் தங்கம்மாள். "இந்தச் சின்னக் காரியத்துக்காகக் கோவிச்சுக்கலாமா? மோட்டார் காருக்குத்தான் சொல்லியனுப்பிச்சேன்; சமயத்திலே கிடைக்கலை; நாலாம் நாள் ஊர்கோலத்துக்கு எப்படியாவது மோட்டார் வண்டி கொண்டு வந்துடறேன்..." "நாலாம் நாள் ஊர்கோலத்துக்கு நீர் என்னங்கணும் ஏற்பாடு செய்யறது? அது அவாளைச் சேர்ந்ததுன்ன?" என்றார் தீக்ஷிதர். "இனிமேல் எல்லாம் அவாளைச் சேர்ந்ததுதான். எனக்கு மனுஷ்யாள் கிடையாது. அவாள்தான் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுண்டு செய்யணும்." "அதுக்கென்ன, பேஷாய்ச் செய்யறேன். நாளைக்குத் தாலி கழுத்திலே ஏறிடுத்துன்னா, அப்புறம் நீங்க வேறே, நாங்க வேறேயில்லை. அதுவரையிலே தனித் தனிதானே? என்ன இருந்தாலும், நீர் உம்ம தங்கை சமாசாரத்தை மறைச்சு வச்சதுக்கு இப்ப ஒரு வழி பண்ணித்தான் ஆகணும்" என்றால் தங்கம்மாள். "அப்படி ஒண்ணும் நான் வேணும்னு மறைச்சு வைக்கலை, அம்மா! சந்தர்ப்பம் ஏற்படலை, சொல்லலை; அவ்வளவுதான். இப்ப நீங்க என்ன சொல்றயளோ, அந்தப்படி கேக்கறேன்" என்றார் சாஸ்திரி. "அப்படின்னா, நான் முதல்லே கேட்டபடி ரூபாயைக் கொடுத்துடும். முழுசா, ஐயாயிரம் ரூபாயாயிருக்கட்டும். பாக்கி ஆயிரம் ரூபாயையும் இப்பவே அனுப்பிச்சுடும். நான் போய், பிள்ளையாண்டானை அப்பா ஐயான்னு கெஞ்சி, தாவாக் கட்டையைப் பிடிச்சுச் சமாதான் பண்ணியாகணும்" என்றாள் தங்கம்மாள். சாஸ்திரி மனதுக்குள், 'அடாடா! இது என்ன பணத்தாசை! அதுவும் இந்த மாதிரி சந்தர்ப்பத்திலா?' என்று எண்ணிக்கொண்டார். ஆனால், வெளிப்படையாக, "அதற்கு என்ன, அம்மா! அப்படியே செய்துவிட்டால் போகிறது! இதோ ஆயிரம் ரூபாயும் அனுப்பிவிடுகிறேன். அதற்காகக் காரியம் தவக்கமாக வேண்டாம். ஊரார் எல்லாரும் சாப்பிடக் காத்துண்டிருக்கா. உங்க மனுஷ்யாளையும் உடனே வரச் சொல்லுங்கோ!" என்று சொல்லிவிட்டுப் போனார். |