மூன்றாம் பாகம் : பனி

36. சாவடிக் குப்பம்

     நல்லானின் மச்சான், சம்பு சாஸ்திரியைப் பார்த்த அன்று இரவு வெகு உற்சாகமாகச் சாவடிக் குப்பத்தில் தன் வீட்டுக்குப் போனான். அந்தச் செய்தியை நல்லானுக்குச் சொன்னால் அவன் ரொம்பவும் சந்தோஷமடைவானென்று அவனுக்குத் தெரியும்.

     "இன்னிக்கு நான் ஒத்தரைப் பார்த்தேன்! அது யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்றான் நல்லானிடம்.

     "நீ யாரைப் பார்த்தா என்ன, பாக்காட்டி என்ன? எனக்குச் சாஸ்திரி ஐயாவைப் பார்க்காமே ஒரு நிமிஷம் ஒரு யுகமாயிருக்கு. நெடுங்கரைக்கு ஒரு நடை போய் அவங்களைப் பார்த்துட்டு வந்தாத்தான் என் மனசு சமாதானம் ஆகும். இல்லாட்டி, நான் செத்துப் போனேன்னா என் நெஞ்சு கூட வேவாது" என்றான்.

     "அப்படியானா, நெடுங்கரைக்குப் போயிட்டு வர்ற பணத்தை எங்கிட்டக் கொடு" என்றான் சின்னசாமி.

     "என்னத்திற்காக உங்கிட்டக் கொடுக்கிறது?"

     "கொடுத்தேன்னா, சாஸ்திரி ஐயாவை நான் இவ்விடத்துக்கே வரப் பண்றேன்."

     "என்னடா ஒளற்றே!" என்று நல்லான் கேட்டான்.

     "நான் ஒண்ணும் ஒளறலை. சாஸ்திரி ஐயா இப்போது நெடுங்கரையில் இல்லை. இந்த ஊரிலேதான் இருக்காரு. இன்னிக்கு அவரைத்தான் பார்த்தேன்" என்றான்.

     நல்லான் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். "அடே இந்த வெஷயத்திலே மட்டும் எங்கிட்ட விளையாடாதே! நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு!" என்றான்.

     சின்னசாமி விவரமாகச் சொன்னான். அவன் எதிர் பார்த்தபடியே நல்லானுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. கடைசியில் "போவட்டும்; இந்த மட்டும் ஐயாவைப் பார்த்துப் பேசறத்துக்கு ஒனக்குத் தோணித்தே; அது நல்ல காரியந்தான். ஐயா எவ்விடத்திலே இறங்கியிருகாருன்னு கேட்டுண்டாயா?" என்றான்.

     "அது கேக்க மறந்துட்டேன்; ஆனா, ஐயாவைத்தான் நான் சாவடிக் குப்பத்துக்குக் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்கேனே?"

     "அட போடா, முட்டாள்! நீ சொன்னதுக்காக ஐயா வந்துடுவாங்களா? அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக? என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு?" என்றான் நல்லான்.

     ஆகவே, முடிவில் சின்னசாமிக்கு அவன் சாஸ்திரியாரைப் பார்த்து வந்ததன் பலனாக வசவுதான் கிடைத்தது. நல்லானுடன் அவனுடைய மனைவியும் சேர்ந்து கொண்டு தன் தம்பியைத் திட்டினாள். "மறந்துட்டேன், மறந்துட்டேங்கறயே வெக்கமில்லாமே? சோறு திங்க மறப்பயா?" என்று அவள் கேட்டாள்.

     பிறகு இரண்டு நாள் நல்லானும் அவன் மச்சானுமாகச் சேர்ந்து, அந்தப் பக்கத்திலுள்ள பிராம்மணாள் ஹோட்டலில் எல்லாம் போய், "நெடுங்கரை சம்பு சாஸ்திரியார் இருக்காரா?" என்று கேட்டார்கள். "நெடுங்கரையையும் காணும், சம்பு சாஸ்திரியையும் காணும்" என்ற பதில் தான் வந்தது.

     நல்லானுக்கு இதே கவலையாய்ப் போயிற்று. "கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் போச்சே, இந்த முட்டாளாலே! எங்கே தங்கியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கேக்காமே வந்துட்டானே?" என்று ஒரு நாளைக்கு முப்பது தடவை அவன் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலையில் அவன் எழுந்திருந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, 'சாஸ்திரி ஐயாவை ஒருவேளை இந்த ஜன்மத்திலே காண முடியாமலேயே போய்விடுமோ?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது பின்பனிக் காலமாகையால், பொழுது விடிந்திருந்தும் பனி பெய்து கொண்டிருந்தது.

     திடீரென்று அவனுக்குப் பின்னால், "அப்பா! நெடுங்கரை நல்லான் என்பவன் வீடு இங்கே எங்கிருக்கு?" என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் அவனுக்குத் தெரியாமல் போய்விடுமா? திடுக்கிட்டு எழுந்திருந்து திரும்பிப் பார்த்தான். சாஸ்திரி ஐயாதான்!

     "சாமி! சாமி! இந்த ஏழையைத் தேடிக்கிட்டு வந்தீங்களா?" என்று நாத் தழுதழுக்கக் கூறினான்.

     அப்போது அவனுடைய பார்வை சாஸ்திரியின் கைகளில் ஏந்தியிருந்த பொருளின் மேல் விழுந்தது. அது ஒரு சின்னஞ்சிறு குழந்தை!

     "இது என்னங்க? கொழந்தை ஏதுங்க?"

     "நல்லான்! இந்த உலகத்தைத் துறந்து சந்நியாசியாகலாம் என்றிருந்தேன். அப்போது பகவான் இந்தக் குழந்தையைக் கொடுத்தார். எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால் உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன், அப்பா!" என்றார் சாஸ்திரியார்.

     "அப்படிச் சொல்லாதீங்க, சாமி! உங்களுக்கா போக்கிடமில்லை? நான் பூர்வ ஜென்மத்திலே செய்த பாக்கியம், நீங்க வந்தீங்க" என்று நல்லான் சொல்லி, "நிக்காதீங்க, உக்காந்து எல்லாம் வெவரமாய்ச் சொல்லுங்க" என்றான்.

     சாஸ்திரியார் மடியில் குழந்தையுடன் அந்தக் குடிசையின் திண்ணையில் உட்கார்ந்தார். எல்லாம் விவரமாய்ச் சொன்னார். சாவித்திரியும் நல்லானும் ஊரை விட்டுப் போனபிறகு நெடுங்கரை வாழ்க்கை தமக்குப் பிடிக்காமற் போனதும், இந்தச் சமயத்தில் பெரியம்மா, பட்டணத்துக்குப் போய்ப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும்படி யோசனை சொன்னதும், அதை ஒரு சந்தர்ப்பமாக வைத்துக்கொண்டு தான் கிளம்பிவந்ததும், பட்டணத்தில் அநேக வீடுகளில் பாட்டு வாத்தியார் வேலைக்காக அலைந்ததும், எங்கும் வேலை கிடைக்காததும், கடைசியில் உலக வாழ்க்கையை விட்டுச் சந்நியாசியாகலாமென்று தீர்மானித்ததும், அந்தத் தீர்மானத்துக்குப் பிறகு இவ்விடம் போகிறோம் என்ற உத்தேசமில்லாமல் கால்போன வழியில் நடந்து சென்றதும், நடந்ததனால் களைப்பு அடைந்து ஓரிடத்தில் உட்கார்ந்ததும், உட்கார்ந்த இடத்தில் தூக்கம் வந்து படுத்துத் தூங்கியதும் - எல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில், "அப்பா! தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டபோது பக்கத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது. யாராவது அக்கம் பக்கத்தில் இருப்பார்களோ என்று பார்த்தேன். சுற்றுமுற்றும் தேடினேன். சத்தம் போட்டும் பார்த்தேன். ஒருவரும் ஏனென்றும் கேட்கவில்லை. 'சரி, நாம் உலகத்தைத் துறப்பது பராசக்திக்கு விருப்பமில்லை, ஆகையால்தான் இந்தப் பந்தத்தை நமக்கு அளித்திருக்கிறாள்' என்று தீர்மானித்துக் கொண்டேன். உன் மைத்துனன் 'சாவடிக் குப்பம்' என்று சொல்லியிருந்தது ஞாபகத்தில் இருந்தது. விசாரித்துக் கொண்டு வந்து சேர்ந்தேன். நல்லான்! உன் மச்சான் என்னை உன் வீட்டுக்கு வரும்படி அழைத்தபோது, 'கேவலம் நல்லானிடம் போயா ஒத்தாசை கேட்பது?' என்று எண்ணினேன். அப்படி நான் கர்வப்பட்டது பிசகு என்று பகவான் புத்தி கற்பித்துவிட்டார்" என்றார்.

     நல்லான், "சாமி! அப்படிச் சொல்லவே சொல்லாதீங்க. சாவடிக் குப்பம் கொடுத்து வச்சுதுங்க, நீங்க வர்றதுக்கு. அதனாலே வந்தீங்க. இங்கே உங்களுக்குத் தனியா ஒரு குடிசை போட்டுத் தர்றோமுங்க. அதிலே நீங்களும் குழந்தையுமா இருந்துகிட்டு, எங்களுக்கெல்லாம் கதை புராணம் சொல்லிக் கடைத்தேற்றுங்க!" என்றான்.

     அன்று மத்தியானத்துக்குள் சாஸ்திரியாருக்காக ஒரு தனிக் குடிசை போட்டாயிற்று. நல்லான் மனைவி வந்து குடிசையில் குழந்தைக்காக ஒரு தூளி போட்டுக் கொடுத்தாள். நல்லான், குழந்தைக்குப் பாலுக்காக ஓர் ஆடு கொண்டு வந்து கட்டினான்.

     சாயங்காலம் புதுக் குடிசையின் வாசலில் சாஸ்திரியும் நல்லானும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கொஞ்ச தூரத்தில் ஏதோ கலாட்டா நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு பேர் கும்பலாக நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். காதால் கேட்க முடியாத துர்ப்பாஷையில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

     "சாமி! இந்த ஜனங்கள் எல்லாம் உங்களாலேதான் சீர்திருந்தணும்" என்று நல்லான் சொன்னான்.

     சாஸ்திரி சுற்று முற்றும் பார்த்தார். தெருவெல்லாம் ஒரே குப்பையும் அசிங்கமுமாயிருந்தது. அந்தக் குப்பைக்கும் அசிங்கத்துக்குமிடையில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பரட்டைத் தலையும் அழுக்கு உடம்பும், கந்தல் துணியும் பார்க்க முடியாதபடி இருந்தன. நாலு பக்கத்திலிருந்தும் துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது.

     இத்தனைக்கும், சாவடிக் குப்பம் இருந்த இடம் அழகும் வசதியும் பொருந்தியது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து நிழல் தந்துகொண்டிருந்தன. தெரு விஸ்தாரமாக இருந்தது. பட்டணத்தின் எல்லைக்கு வெளியே சற்றுத் தூரத்தில் இருந்தபடியால், இவ்வளவு விஸ்தாரமாக அவர்கள் குடிசை கட்டிக்கொள்ளுவது சாத்தியமாயிற்று. இவ்வளவு சௌகரியமான இடத்தைத்தான், நாளெல்லாம் மற்றவர்களுடைய பங்களாக்களைச் சுத்தமாக்கி அழகுபடுத்திவிட்டு வந்த அதே ஏழை ஜனங்கள் அவ்வளவு ஆபாசமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

     சாஸ்திரி இதையெல்லாம் பார்த்தார். இந்தச் சாவடிக் குப்பத்து ஜனங்களுக்குச் சேவை செய்வதற்காகவே, பகவான் ஒரு குழந்தையைக் கொடுத்துத் தம்மை மறுபடியும் சம்சாரியாக்கி அவ்விடம் அனுப்பியிருப்பதாக அவர் மனத்தில் தோன்றிற்று. இது தனக்குப் புனர்ஜன்மம் என்றும், இனிமேல் பழைய வாழ்க்கைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்றும் தீர்மானித்துக் கொண்டார்.

     அன்றிரவு, சம்பு சாஸ்திரி தமது புதுக் குடிசையில் பஜனை செய்ய ஆரம்பித்தார். நல்லானும் அவர் மனைவியும் மைத்துனனுந்தான் முதலில் பஜனைக்கு வந்தார்கள். நாளடைவில் சாவடிக் குப்பத்து ஜனங்கள் ஒவ்வொருவராகப் பஜனைக்கு வர ஆரம்பித்தார்கள்.

     ஆறு வருஷ காலத்தில் சாவடிக் குப்பம் அடையாளமே தெரியாதபடி மாறுதல் அடைந்தது. குப்பத்து ஜனங்களின் வாழ்க்கை முறையும் அடியோடு மாறிற்று.

     இந்தக் காலத்தில், பராசக்தி சம்பு சாஸ்திரிக்கு அளித்த குழந்தை சாருவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள்.