உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஆரண்ய காண்டம் 13. சவரி பிறப்பு நீங்கு படலம் மதங்கன் தவச் சாலையின் சிறப்பு கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன, உண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ் சோலை-ஞாலம் எண்ணிய இன்பம் அன்றி, துன்பங்கள் இல்லை ஆன, புண்ணியம் புரிந்தோர் வைகும்-துறக்கமே போன்றது அன்றே! 1 சவரியின் விருந்தோம்பல் அன்னது ஆம் இருக்கை நண்ணி, ஆண்டுநின்ற, அளவு இல் காலம், தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாட்கு இன்னுரை அருளி, 'தீது இன்று இருந்தனைபோலும்' என்றான் - முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான். 2 ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணன், 'மாண்டது என் மாயப் பாசம்; வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம்; போயது பிறவி' என்பாள், வேண்டிய கொணர்ந்து நல்க, விருந்துசெய்து இருந்த வேலை. 3 'ஈசனும், கமலத்தோனும், இமையவர் யாரும், எந்தை! வாசவன்தானும், ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி, "ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது; இராமற்கு ஆய பூசனை விரும்பி, எம்பால் போதுதி" என்று, போனார். 4 'இருந்தனென், எந்தை! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட, இன்றுதான் என் புண்ணியம் பூத்தது' என்ன, அருந்தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி, 'எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மானை! வாழி' என்றார். 5 இரலைக் குன்றம் செல்லும் வழி கூறல் அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை, வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி, வெய்ய துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத் துளக்கு இல் குன்றம் நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள். 6 வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆகக் காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம் கேட்டனன் என்ப மன்னோ-கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான். 7 சவரி வீடு எய்த, இராம இலக்குவர் பம்பைப் பொய்கை புகல் பின், அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே, தன் உடல் துறந்து, தான் அத் தனிமையின் இனிது சார்ந்தாள்; அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி, பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, புகன்ற மா நெறியில் போனார். 8 தண் நறுங் கானும், குன்றும், நதிகளும், தவிரப் போனார்; மண்ணிடை வைகல்தோறும், வரம்பு இலா மாக்கள் ஆட, கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே, புண்ணியம் உருகிற்றன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார். 9 |