உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
யுத்த காண்டம் 33. வானரர் களம் காண் படலம் சுக்கிரீவனை மூலப் படையின் அழிவு காண இராமன் ஏவல் ஆய பின், கவியின் வேந்தும், அளப்ப அருந் தானையோடும், மேயினன், இராமன் பாதம் விதி முறை வணங்கி; வீந்த தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும் திகைப்பும் உற்றார், ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர், நாணம் உற்றார். 1 'மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் நீண்டு உள அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது?' என்னத் தூண் திரண்டனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல, 'காண்டி நீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை' என்றான். 2 தொழுதனர் தலைவர் எல்லாம்; தோன்றிய காதல் தூண்ட, 'எழுக' என விரைவின் சென்றார், இராவணற்கு இளவலோடும்; கழுகொடு பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள் மற்றும், குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர், துணுக்கம் கொண்டார். 3 களம் கண்ட வானரர்கள் அடைந்த நிலை ஏங்கினார்; நடுக்கமுற்றார்; இரைத்து இரைத்து, உள்ளம் ஏற, வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் வெம்ப, ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, உவகை ஊன்ற, ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார்? 4 வானரர் வேண்ட, போர்க்களக் காட்சியை வீடணன் கூறுதல் ஆயிரம் பருவம் கண்டும், காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்; மேயின துறைகள்தோறும் விம்மினார் நிற்பது அல்லால், பாய் திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன,- 'நீ இருந்து உரைத்தி' என்றார்; வீடணன் நெறியின் சொல்வான்: 5 'காகப் பந்தர்ச் செங் களம் எங்கும், செறி கால ஓகத்து அம்பின் பொன்றின வேனும், உடல் ஒன்றி, மேகச் சங்கம் தொக்கன, வீழும் வெளி இன்றி, நாகக் குன்றின் நின்றன காண்மின் - நமரங்காள்! 6 'வென்றிச் செங் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ, ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க, பொன்றி, சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர். 7 'அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளிக் களியில் பட்டார் வாள் முகம், மின்னும் கரை இல்லாப் புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த நளினக் காடே ஒப்பன காண்மின் - நமரங்காள்! 8 'ஒழுகிப் பாயும் மும் மத வேழம் உயிரோடும் எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற; பழகிற்கில்லாப் பல் திரை தூங்கும் படர் வேலை முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்! 9 'பூ வாய் வாளிச் செல் எறி காலைப் பரி பொன்ற, கோ ஆர் விண்வாய் வெண் கொடி திண் பாயொடு கூட, மா வாய் திண் தேர் மண்டுதலால், நீர் மறி வேலை நாவாய் மானச் செல்வன காண்மின் - நமரங்காள்! 10 'கடக் கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள் தொடக்காநிற்கும் பேய், இலயத்தின் தொழில் பண்ணி, மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான், நடக் கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் - நமரங்காள்! 11 'மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் குழுவின் கொண்டார் நாடி துடிக்கப் பொறி கூடித் தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவைதம்மை நழுவித் தள்ளிப் போவன காண்மின் - நமரங்காள்! 12 'பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றிப் புகர் வேழம், பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற, தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர். 13 'நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும், பாமத் தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள், தூமத்தோடும் வெங் கனல் இன்னும் சுடர்கின்ற ஓமக் குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர். 14 'மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக் கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்; மன்னும் மா நீர்த் தாமரை மானும் வதனத்த; அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர். 15 'ஒளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு, ஆளின் முற்றாச் செம் புனல் வெள்ளத்தவை காணீர்; கோளின் முற்றாச் செக்கரின் மேகக் குழுவின்கண் நாளின் முற்றா வெண் பிறை போலும்-நமரங்காள்! 16 'கொடியும் வில்லும், கோலொடு வேலும், குவி தேரும், துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியின் கட்டு ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். 17 'சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா, மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கி, "சிகரம் அன்ன! யானைகொல்?" என்னச் சில நாணி, நகரம் நோக்கிச் செல்வன காண்மின் - நமரங்காள்! 18 'விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மேன் மேல், மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மடிவுற்றார், எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லாக் கண்ணில் தீயார், விம்மி உளைக்கும் படி காணீர். 19 'அச்சின் திண் தேர், ஆனையின், மாமேல், அகல் வானில் மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் முட்ட, உச்சிச் சென்றான் ஆயினும், வெய்யோன், உதயத்தின் குச்சிச் சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர். 20 'கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப்படு காலை, "ஆறோ!" என்ன, விண் படர் செஞ் சோரியது ஆகி, வேறாய் நின்ற வெண் மதி செங் கேழ் நிறம் விம்மி, மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர். 21 'வான் நனைய, மண் நனைய, வளர்ந்து எழுந்த பெருங் குருதி மகர வேலை- தான் நனைய, உற்று எழுமாறு, அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி, மீன் அனைய நறும் போதும், விரை அரும்பும், சிறை வண்டும், நிறம் வேறு எய்தி, கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்மின்! காண்மின்! 22 'வரை பொருத மத யானைத் துணை மருப்பும், கிளர் முத்தும், மணியும், வாரி, திரை பொருது புறம் குவிப்பத் திறம் கொள் பணை மரம் உருட்டி, சிறைப் புள் ஆர்ப்ப, நுரைக் கொடியும் வெண் குடையும் சாமரையும் எனச் சுமந்து, பிணத்தின் நோன்மைக் கரை பொருது கடல் மடுக்கும் கடுங் குருதிப் பேர் ஆறு காண்மின்! காண்மின்! 23 'கைக் குன்றப் பெருங் கரைய, நிருதர் புயக் கல் செறிந்த, கதலிக் கானம் மொய்க்கின்ற பரித் திரைய, முரண் கரிக் கைக் கோள் மாவ, முளரிக் கானின் நெய்க்கின்ற வாள் முகத்த, விழும் குடரின் பாசடைய, நிணமேல் சேற்ற, உய்க்கின்ற உதிர நிறக் களம் குளங்கள், உலப்பு இறந்த, உவையும் காண்மின்! 24 'நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின், உதிர நீர் நிறைந்த காப்பின், கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின், இன மள்ளர் பரந்த கையில், படுங் கமல மலர் நாறும் முடி பரந்த பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை, தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின்! 25 'வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும், வீரன் வில்லின் ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்ஏறு பல படவும், உலகம் கீண்டு நளில் தீர்த்த நாகபுரம் புக்கு, இழிந்த பகழி வழி நதியின் ஓடி, களிறு ஈர்த்துப் புக மண்டும் கடுங் குருதித் தடஞ் சுழிகள் காண்மின்! காண்மின்! 26 'கைத்தலமும், காத்திரமும், கருங் கழுத்தும், நெடும் புயமும், உரமும், கண்டித்து எய்த்தில போய், திசைகள்தொறும் இரு நிலத்தைக் கிழித்து இழிந்தது என்னின் அல்லால், மைத்த களிற்று இன மாவின், வாள் நிருதர் பெருங் கடலின், மற்று இவ் வாளி தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்மின்! 27 'குமுதம் நாறும் மதத்தன, கூற்றன, சமுதரோடு மடிந்தன, சார்தரும் திமிர மா அன்ன செய்கைய, இத் திறம் அமிர்தின் வந்தன, ஐ-இரு கோடியால். 28 'ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன, ஊறும் மாரியும், ஓங்கு அலை ஓதமும், மாறும் ஆயினும், மா மதமாய் வரும் ஆறு மாறில, ஆறு-இரு கோடியால். 29 'உயிர் வறந்தும், உதிரம் வறந்து தம் மயர் வறந்தும், மதம் மறவாதன, புயலவன் திசைப் போர் மத ஆனையின் இயல் பரம்பரை ஏழ்-இரு கோடியால். 30 'கொடாது நிற்றலின், கொற்ற நெடுந் திசை எடாது நிற்பன, நாட்டம் இமைப்பு இல, வடாது திக்கின் மதவரையின் வழிக் கடாம் முகத்த, முளரிக் கணக்கவால். 31 'வானவர்க்கு இறைவன் திறை தந்தன ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும், தானவர்க்கு இறைவன் திறை தந்தன ஏனை வர்க்கம் கணக்கு இல, இவ் எலாம். 32 'பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள், ஆர்த்து எழுந்தன, ஆயிரம் ஆயிரம் மால் கணப் பரி இங்கு இவை; மாறு இவை; மேற்கின் வேலை வருணனை வென்றவால். 33 'இரு நிதிக் கிழவன் இழந்து ஏகின அரிய அப் பரி ஆயிரம் ஆயிரம்; விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப் பொருது பற்றிய, தாமரை போலுமால்.' 34 என்று, 'காணினும், காட்டினும், ஈது இறைக் குன்று காணினும் கோள் இலது; ஆதலால், நின்று காணுதும்; நேமியினானுழைச் சென்று காண்டும்' என்று ஏகினர், செவ்வியோர். 35 ஆரியன் தொழுது, ஆங்கு அவன் பாங்கரும், போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார், பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும் காரியத்தின் நிலைமை கழறுவாம். 36 மிகைப் பாடல்கள் என்று உரைத்து, 'உயர் வான் பிறப்பு எய்திய வென்றி வெஞ் சின வேழங்கள் தம்மொடும் துன்று வாசித் தொகைகளும் கேண்ம்' எனா, நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான். 25-1 |