உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 8. தாயும் பிள்ளையும் “வயசாயிடிச்சே! எத்தனை சொன்னாலும் தெரிஞ்சுக்க மாட்டேங்கிரியே! நான் என்ன செய்ய?'' என்று வள்ளியம்மை தன் பிள்ளையைக் கோபித்துக்கொண்டாள் ஒரு நாள் பகல் இருபது இருபத்திரண்டு நாழிகை சமயத்துக்கு. அதற்குமுன் அவனை அவள் கோபித்துக் கொள்ளாததற்குக் காரணம் அவன் அதிகாலையிலிருந்து வீட்டிலேயே இல்லாதுதான். அவன் வழக்கம்போல எங்கெல்லாமோ சுற்றித் திரிந்துவிட்டு அப்பொழுதான் சோறு தின்ன வேண்டுமே என்று வீடு திரும்பியிருந்தான். வள்ளியம்மை பின்னும் சொன்னாள்: “காலையிலே கஞ்சி காச்சி வச்சேன். அதைக் குடிக்காமே எங்கேயோ தொலைஞ்சு போனே! பகல் முப்பது நாழியும் ஆனப்புறம் வாரே! சோறாக்கி வச்சா அதைத் தின்னுட்டு எங்கேயாவது தொலையேன்! எங்கேடா ஒரு நாளைப் பார்த்தாப்புலே நீ தொலைஞ்சு போயிடிறே? எங்கே, என்னத்துக்காக? யாருடா அப்படி ஒன்னைக் கூப்பிட்டனுப்பறா?” என்றாள். இந்தமாதிரி வள்ளியம்மை கோபித்துக்கொள்வது மிகவும் சகஜமாகிக்கொண்டிருந்தது; தினசரிக் காரியம் ஆகிக்கொண்டிருந்தது; சோமு அதை அலக்ஷ்யம் செய்யப் பழகிக் கொண்டிருந்தான். பதில் ஏதாவது சொன்னால் அவள் கோபம் அதிகரிக்குமே தவிரக் குறையாது என்று அவனுக்குத் தெரியும். தவிரவும் அவள் கோபித்துக் கொண்டாள் என்று சொல்வது பூராவும் உண்மையாகாது. கோபமும் வருத்தமும் கலந்த ஒரு பாவத்திலே அவள் பேசினாள். தன் பிள்ளை உருப்படவேண்டுமே என்று அவனைக் கடிந்து கொண்டாள். ஆனால் வழக்கமாக இந்தப் பாவம் இரண்டொரு வினாடிகளுக்கெல்லாம் மாறிவிடும். சாதாரண வள்ளியம்மையாகி விடுவாள் அவள் மீண்டும். ஆனால் அவள் அன்று மீண்டும் மீண்டும் இதே விஷயத்தைப்பற்றிப் பேசினாள்; என்னவோ தெரியவில்லை. “வயசோ பத்தாயிடுச்சு! ஆயா இல்லாத கஷ்டமெல்லாம் படுமேன்னு உனக்குத் தோணல்லியே! ஆம்புள்ளையா லச்சணமா ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கவம், ஆயாளுக்கு ஒத்தாசையா ஏதாவது செய்வம்னு ஒனக்கு எண்ணிக்காவது ஒரு நாள் தோணிச்சா? நாம் பண்ண பாவம்!” என்று குறைப்பட்டுக் கொண்டாள் வள்ளியம்மை. தான் செய்வது தவறுதான், பதில் சொல்வதற்கு எதுவும்இல்லை என்று அறிந்தவன்போல் சோமு கை கால் கழுவிக் கொள்ள கிணற்றடிக்குப் போனான். போய்க் கால் நாழிகை நேரம் கழித்து அவன் சோறு தின்ன வீட்டுக்குள் வந்த போதும் வள்ளியம்மை ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். தன்னால் தன் தாயாருக்கு இவ்வளவு துக்கமா என்று எண்ணிச் சோமுவும் வருத்தப்பட்டான். சாப்பிட உட்கார்ந்தான். ஒரு வாழைச் சருகை அலம்பிப் போட்டு அதிலே சோறும் குழம்பும் போட்டாள் வள்ளியம்மை. பிறகு கேட்டாள் “பாக்கி ஒண்ணுந்தான் இல்லை! வேளைக்கு வந்து சோத்தையாவது தின்னுட்டுத் தொலையறதுதானே!” என்று. சோமு பதிலே சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான். “விடிஞ்சத்திலேருந்து இது வரையில் எங்கேடா போனே?” என்று கேட்டாள் வள்ளியம்மை. இதற்குப் பதில் சொல்லாமல் எப்படி இருப்பது? சோமு சொன்னான்: “தெருத்தெருவா அலைஞ்சுக்கிட்டிருந்தேன்!” என்று. இதைச் சொல்லும்போதே இது ஒரு காரியமா என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது. “நல்லாத்திரிஞ்சே! தினம் விடியறத்திலேருந்து இருட்ற வரைக்கும் நல்லாத் திரியறே! வயசு பத்தாவப்போவுது. சந்தி சந்தியாத் திரிஞ்சிக்கிட்டே இருந்தா வவுரு ரொம்பிப் போயிடுமா? உங்கப்பன் இருந்த பவுசு என்ன? உங்க ஆயாள் இருந்த பவுசு என்ன? நீ இன்னமும் இப்படிச் சும்மாத் திரிஞ்சுக்கிட்டிருந்தா... அப்புறம் போற போக்கைச் சொல்லு” என்றாள் வள்ளியம்மை. “இல்லேம்மா... சும்மாக் குந்திக்கிட்டிருந்தா... போது போவனுமில்லே! என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? சொல்லு ஊட்லே ஏதாவது வேலையிருந்தாச் சொல்லு. செஞ்சிட்டுப் போறேன்!” என்றான் சோமு பணிவாக. “தின்னு தின்னு. சோத்தைத் தின்னுப்புட்டு வாசல்லே குந்து. நானும் சோத்தைத் தின்னுப்புட்டு வாரேன்” என்றாள் வள்ளியம்மை. சோமு சோறு தின்று முடிந்ததும் வழக்கம் போல எங்கேயாவது ஓடிவிடப் போகிறானே என்று பயந்த வள்ளியம்மை, “திண்ணையிலே குந்தியிரு. எங்கெயாவது போயிடாதே! நானும் வாரேன் இன்னிக்கு ஐயரு உன்னை இட்டுக்கிட்டு வரச் சொல்லிச்சு!” என்றாள். “எந்த ஐயரு?” என்று கேட்டான் சோமு. “ஐயமாருத்தெரு ராயர் ஐயாதான்” என்றாள் வள்ளியம்மை. ராயர் ஐயாவைப்பற்றி சோமுவுக்குத் தெரியும். அதே வீட்டில்தான் தன் தாயாரும் வேலை செய்துகொண்டிருந்தாள் என்று அவனுக்குத் தெரியும். வள்ளியம்மையைக் கேட்டான் “எதுக்காக இட்டுக்கிட்டு வரச் சொன்னாரு தெரியுமா?” என்று. வள்ளியம்மை சொன்னாள், “இப்படி நீ தினம் தெருத் தெருவாச் சுத்தி அலைஞ்சிட்டுருந்தா கட்டுமாடா நமக்கு? இவ்வளவு நாளும் ஏதோ இம்புட்டுப் புள்ளெதானே தொலையட்டும்னு விட்டிருந்தேன். இன்னிக்கு காலையிலே ஐயா காலிலே விழுந்து எம் புள்ளைக்கு ஏதாவது வழி பண்ணுயான்னு கெஞ்சிக்கிட்டேன். ஏதாவது செய்யறேன்னு சொல்லிச்சு. செய்யறப்பச் செய்யும். ஐயா மனசு வச்சாச் சாத்தனூரிலே நடக்காத காரியம் என்ன? நல்ல பயலாயிருந்தாப் பொழைச்சுக்கலாம் நீ!” என்று. சோமுவுக்கும் இஷ்டந்தான் வேலை செய்ய. தவிரவும் அவன் தாயாருடைய வார்த்தைகளிலே தொனித்த உற்சாகம் அவனுக்கும் திருப்தி அளிப்பதாக இருந்தது. பெரிய ராயர் வீட்டிலே வேலை பார்க்கிறான் என்றால் ஊரிலே மற்றவர்கள்கூடக் கறுப்ப முதலியார் மகன்தானே என்று அவனை அலக்ஷ்யம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். நல்ல காரியந்தான். “வூட்லே வேலைக்கு வச்சுப்பாரா என்னை அந்த ஐயரு?” என்று கேட்டான் சோமு. வள்ளியம்மை கோபித்துக் கொண்டாள். “சும்மாப் போய்த் திண்ணையில் குந்திக் கிடடா! வேலைக்கு வச்சுப்பாரா? அடிப்பாரா? உதைப்பாரா? காசு கொடுப்பாரா இன்னுகிட்டு... சும்மாத் தொணதொணக்கறே! போய்த் திண்ணையிலே குந்து... நானும் சோறு தின்னுப்புட்டு வாரேன்...” என்றாள். சோறு தின்றாகிவிட்டது என்று இலையிலிருந்து எழுந்தான் சோமு. “ஏண்டா! பேச்சுக் கொடுத்து ஏமாத்திப்பிட்டு எழுந்திட்டே! பத்து வயசுப் பய இப்படிச் சோறு தின்னா எப்படீடா உடம்பிலே வலுவிருக்கும்? என்னமா உழைச்சுக் கொண்ணாந்து கொட்டப் போறே! உடம்பிலே வலுவு வேணாமா ஒழைக்க!” என்றாள் வள்ளியம்மை. “யாரு வீட்டு வேலை எல்லாமோ செய்யறத்துக்கு என் உடம்பிலேதானே வலுவு வேணும்! இல்லையா ஆத்தா?” என்று விளையாட்டாகக் கேட்பதுபோலத் தன் வயசை மீறிய அறிவுடன் கேட்டுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்காமல் கை கழுவக் கொல்லைப் புறம் போய்விட்டான் சோமு. “வேறு எதினாச்சும் இருக்கோ இல்லையோ வாய் இருக்கு கொள்ளிடம் போல!” என்று சிறிது பெருமையுடனேயே சொல்லிக் கொண்டு தானும் சோறு தின்ன உட்கார்ந்தாள் வள்ளியம்மை. கொல்லைப்புறம் கையலம்பப் போன சோமு கையலம்பிவிட்டு உடனே திரும்பி வாசலுக்குப் போய்விடவில்லை. சிறிது நேரம் ராயர் வீட்டிலே வேலைக்குப் போவதைப்பற்றி யோசித்துக்கொண்டே நின்றான். பிறகு தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தைச் சுற்றிக் கட்டியிருந்த சற்றே வெளுப்பான வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். அதை வள்ளியம்மைதான் முதல்நாள் தோய்த்து உலர்த்தி யிருந்தாள். ஏற்கனவே சோமு கட்டியிருந்த அழுக்குப் பிடித்த கந்தையைக் கண் மறைவாகக் கிணற்றடியிலே போட்டுவிட்டான். பிறகு சப்தம் செய்யாமல் திருட்டுத்தனம் ஏதோ செய்துவிட்டுப் பதுங்கிப் பதுங்கிப் போகிறவன்போலப் போய்த் திண்ணையிலே சாதுவாக உட்கார்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவன் தாய் சோறு தின்றுவிட்டு அக்கிரகாரத்தில் இருந்த ராயர் வீட்டுக்குப் போவதற்குத் தயாராகி விட்டாள். “நீயும் கூட வாடா எலே!” என்று சொல்லிக் கொண்டே வள்ளியம்மை தன் வீட்டு வாசற்கதவை ஒரு பெரிய துருப்பிடித்த பூட்டைப் போட்டுப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள். வீட்டிலே இரண்டொரு சட்டி பானைகளையும் ஏழெட்டுக் கந்தல் துணிகளையும் தவிர வேறு எதுவும் விலையுயர்ந்த பொருள் கிடையாது. அந்த வீடு ஒன்றுதான் வள்ளியம்மை தனக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஆஸ்தி. வீடு மேட்டுத்தெரு வீடுதான் என்றாலும் ஏதோ சுமாராகச் சுத்தமாக அடக்கமாக இருந்தது. வீட்டைவிட அதற்குப் பின்னாலிருந்த தோட்டத்தின் மதிப்பு அதிகம் என்றே சொல்ல வேண்டும். தோட்டத்தின் விஸ்தீரணமும் அதிகந்தான். அதிலே பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும், இருபது முப்பது வாழைகளும், ஒன்றிரண்டு மா பலா முதலிய மரங்களும், நாலைந்து எலுமிச்ச மரங்களும் இருந்தன. கால்வைக்க இடமில்லாமல் தோட்டத்தில் மற்ற இடங்களிலும் கொத்தமல்லி, கத்திரி, வெண்டை முதலியன பயிர் செய்திருந்தாள் வள்ளியம்மை. அக்கிரகாரத்திலோ, பிள்ளைமார் தெருவிலோ இரண்டொரு வீட்டிற்குக் காய்கறி கொண்டுபோய்க் கொடுத்தால் காலணா அரையணாக் கிடைக்கும். எருமை மாடு வேறு இருந்தது. ஏற்கனவே சொன்னபடி வள்ளியம்மை தன் காதலன் கறுப்பன் போனது முதல் ‘உடையவர்களின்’ வாழ்க்கை வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டாள். அதன் காரணமாகத்தான் அதன் சின்னமாகத்தான் அவள் வீட்டுவாசற் கதவிலே பூட்டு ஏறி இருக்கிறது. துருப்பிடித்த பூட்டுதான்; ஆனால் அதனால் என்ன? கறுப்பன் போய்விட்ட பிறகே அக்கிரகாரத்திலும் பிள்ளைமார் தெருவிலும், உண்மையில் ஊர் முழுவதிலுமே வள்ளியம்மைக்கு நல்லபெயர். அவளுடைய தயிருக்கும் நெய்க்கும் கறிகாய்களுக்கும் நல்ல கிராக்கிதான். எல்லோருடனும் ‘கலகல’ வென்று சுமுகமாகப் பேசுவாள் அவள். ராயர் வீட்டிலேயே அவள் கொண்டு வந்த சாமான்களில் அநேகமாக எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு விடுவார்கள். அவர்கள் வீட்டிலே இரண்டு மூன்று எருமைகளும், நாலைந்து பசுக்களும், ஒரு பெரிய காய்கறித் தோட்டமும் இருந்தன. ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் போதுவதே இல்லை. ஓயாமல் ஒழியாமல் தினம் பத்துப் பதினைந்து விருந்தாளிகள். எவ்வளவு நாட்களானாலும் இருந்து தயங்காமல் கேட்டுப் போட்டுக்கொண்டு சாப்பிடக்கூடிய விருந்தாளிகள், வந்துவிடுவார்கள். ராயர் வீட்டிலே கொடுத்தது போகக் காய்கறி, தயிர், பால், ஏதாவது மிச்சமிருந்தால் வள்ளியம்மை ஒருகரை ஐயர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுப்பாள். அவர்களுக்கும் கண்டு மிஞ்சினால்தான் வேறு யாருக்காவது விற்க முயலுவாள் அவள். ராயர் வீட்டிலே வள்ளியம்மைக்கு மாசம் கால்ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமைகளில் வீடு அலம்புவதற்கும் மெழுகுவதற்கும் என்று மாசத்தில் அரைப்படி அரிசி நொய் கொடுப்பார்கள். இதைத் தவிர மாவு அரைத்தாலும் நெல் குத்தினாலும் வேறு கடினமான வேலை எது செய்தாலும் அதற்கென்று தனியாக அரிசியோ நொய்யோ கூலி கொடுத்து விடுவார்கள். வீட்டிலே வடித்த சோறு மிஞ்சினால் அதை வேலைக்காரிகளுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்து விடுவார்கள். மாசத்தில் பாதி நாட்கள் வள்ளியம்மைக்கும் சோமுவுக்கும் தேவையான சோறு ராயர் வீட்டிலிருந்து கிடைத்துவிடும். வள்ளியம்மைக்குச் செலவு என்ன? ஒன்றுமே இல்லை. அவசியமானால் கூடிய வரையில் செலவு செய்யாமலே இருக்கத்தான் பார்ப்பாள். காய்கறி விற்றது, நெய் தயிர் விற்றது, சம்பளம் வாங்கியது என்று கொஞ்சங் கொஞ்சமாக அவள் மீதம் பிடித்துச் சேர்த்து வைக்க முற்பட்டாள். ஏதோ சொல்பம் மிகவும் சொல்பம் குருவிபோலச் சேர்த்தும் வைத்திருந்தாள். சிவப்புப் பட்டுப் பை ஒன்றில்போட்டு எங்கேயோ, சோமு கண்களில் படாத இடத்தில் பத்திரப்படுத்தி வைத்தாள். சோமு ஆரம்ப காலத்தில், அதாவது பணத்தாசை அவன் மனசிலே தலைவிரித்து ஆட ஆரம்பித்த காலத்தில் அந்தப் பட்டுப் பையை கண்டு பிடித்துவிடுவது என்று வெகுவாக சிரமப்பட்டுப் பார்த்தது உண்டு. ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியாத ரகசியமான இடத்திலே வெகு ஜாக்கிரதையாக ஒளித்து வைத்திருந்தாள் வள்ளியம்மை. அக்கிரகாரத்திலே ராயர் வீட்டிலே வேலை செய்யப்போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வள்ளியம்மை ‘உடையவர்களின்’ நடையுடை பாவனைகளைப் படித்துக் கொண்டுவிட்டாள். கறுப்பன் போவதற்கு முன், காசு என்றால் அவளுக்கு மனிதர்களைப் போலத்தான் ஒரே அலக்ஷ்யந்தான்! ‘உடையவர்களைப்’ போல் ஆகவேண்டும் தன் பிள்ளை சோமு நல்ல ஸ்திதியில் கௌரவமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்பட ஆரம்பித்தது கறுப்பன் போன பிறகுதான். இதெல்லாம் காரணமாகத்தான் மேட்டுத்தெருவில் வள்ளியம்மையின் வீட்டு வாசல் கதவிலே துருப்பிடித்த பூட்டு ஏறியது! வள்ளியம்மையின் இடுப்பிலே செருகியிருந்த சாவி, அவளுக்கும் உடைமைகள் உண்டு என்று உலகுக்கு அறிவிப்பதற்காக ஏற்பட்ட சின்னந்தான்! இந்தமாதிரி ‘உடையவர்களில்’ ஒருத்தியாக வேண்டும் என்கிற எண்ணத்தினால் தூண்டப்பட்டவளாகத்தான் வள்ளியம்மை தன் பிள்ளையும் அவன் வயசுக்கேற்ற வேலை செய்து ஏதாவது சம்பாதித்துக் கொண்டுவந்து அந்தப் பட்டுப் பையில் போடுவதற்குத் தன்னிடம் தரவேண்டும் என்று எண்ணினாள். அன்று காலையில் அவள் ராயர் வீட்டில் அம்மாவிடம் அது விஷயம் பற்றிப் பிரஸ்தாபித்தாள். “பயலுக்கு எட்டு ஒன்பது வயசாயிருக்கு அம்மா. சும்மா திரிஞ்சுக்கிட்டுக் கண்டவங்கிட்டெல்லாம் சண்டை இழுத்துக்கிட்டு வாரான். வயசுக்கு மேலே உடம்பிலே வலுவிருக்கு. சண்டைபோடச் சொல்லுது. சுத்தச் சோம்பேறிப் பயலாக வளந்துட்டா அப்புறம் உருப்படாம போயிடுவான். உங்க வளவுலே ஏதாவது வேலை குடுத்து வச்சுக் கிட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியங்க” என்றாள் வள்ளியம்மை. ராயர் அம்மாள் ராயர் ஐயாவைக் கூப்பிட்டுச் சொன்னாள் “ஏன்னா! நம்ம வள்ளியம்மை பயலை நம்மாத்திலே வேலைக்கு வச்சுக்கலாமா?” என்றாள். “முன்னெல்லாம் அவ தலைப்பைப் புடிச்சுண்டு வருவானே அந்த வாண்டுப் பயல்தானே?” என்று கேட்டார் ராயர். “ஆமாம்” என்றாள் மனைவி. “ரொம்பச் சின்னப் பயல்னா அவன். இல்லையோ? விளையாட்டுப்பய. என்ன வேலை செய்யப் போறான் அவன்?” என்றார் ராயர். ராயர் மனைவி சொன்னாள், “பெரிய வேலைக்காரன்லாம் சமயத்துக்கு ஒத்தனாவது ஆப்படமாட்டான்! இதுமாதிரி சின்னப்பயல்னா சொன்னதைக் கேட்டுண்டு வீட்டோடு கிடப்பான். மீறற சோத்தைப் போட்டால் தின்னுட்டுக் கிடக்கட்டுமே” என்று. வள்ளியம்மையும் கெஞ்சினாள். “வயசு பத்தாக போவுதுங்க! சொன்னதைக் கேட்டுட்டு உங்க வூட்டுப் புள்ளையாக் கெடப்பானுங்க. நானு ஒண்டிக்காரி. இன்னும் எவ்வளவு நாளைக்குப் பாடுபட முடியுமுங்க. ஏதோ அவனை ஒங்ககிட்டே ஒப்புச்சுப்பிட்டேன்னு எனக்கு நிம்மதிங்க...” என்று. “ஒம் புருஷனைப்பத்தி ஊரெல்லாம்...” என்று ஆரம்பித்தார் ராயர். “அது மாதிரி இல்லீங்க எம் பையன்!” என்றாள் வள்ளியம்மை. காலில் விழுந்து கெஞ்சாத குறைதான். “நல்ல பயலாச் சொன்னதைக் கேட்டுண்டு கிடப்பானானால் ஏதாவது செய்யலாம்! எதுக்கும் சாயங்காலம் அழைச்சிட்டு வா! பார்க்கலாம்?” என்றார் ராயர். ராயர் மனைவி, “இன்னிக்குச் சாயங்காலம் ஜல்தியே வந்துடு. மாவு அரைக்கணும்” என்றாள். வள்ளியம்மைக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. இதையெல்லாம் நினைத்துக்கொண்டுதான் வள்ளியம்மை மத்தியான்னம் இரண்டு பருக்கை சாப்பிட்டானதும் தன் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு அக்கிரகாரத்தை நோக்கிக் கிளம்பினாள். பத்தடி நடப்பதற்குள் நாலு தரம் கேட்டுவிட்டான் சோமு. “ஐயர் எதுக்காக அம்மா என்னை அழைச்சிட்டு வரச் சொல்லிச்சு?” என்று. வேலைக்காகத்தான் என்று அவனுக்கும் தெரியும். அவன் ஆயாளும் இரண்டு தடவை பொறுமையாக பதில் சொல்லிவிட்டாள். அப்படியும் சோமுவின் மனசு திருப்தியடையவில்லை. ‘உண்மையில் வேலை கொடுப்பதற்காக இல்லாமல் வேறு எதற்காகவாவது கூப்பிட்டனுப்பியிருந்தால் என்ன பண்ணுவது? தான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்குத் தண்டிப்பதற்காக கூப்பிட்டனுப்பியிருந்தால் என்ன பண்ணுவது? சமீப காலத்தில் என்ன என்ன தவறுதல் செய்தேன் நான்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான் சோமு. அவற்றிற்கெல்லாம் தண்டனையை அநுபவிக்க முடியாமல் தப்பிவிட முடியுமா? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, நாளைக்கும் இல்லா விட்டால் மறுநாள், தண்டனையை அநுபவித்தே தீர வேண்டும். ஆனால் இன்றே அநுபவிக்கத் தயாராக இல்லை சோமு. எந்த மனிதன் தான் தயாராக இருக்கிறான், தன் தண்டனையை ஏற்றுக்கொண்டு அநுபவிக்க? ஆறாவது தடவையாக, “எதுக்காக அம்மா...” என்று சோமு கேட்க ஆரம்பித்த போது வள்ளியம்மை பொறுமை இழந்துவிட்டாள் “சும்மா வாயை மூடிக்கிட்டு வாடா, தானே தெரியுது!” என்றாள். தான் வெளுப்பு வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு வந்தது தன் தாயாருக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்று பயம் சோமுவுக்கு. அவளுக்கு இரண்டடி பின்னாலேயே நடந்து வந்தான். பிள்ளைமார் தெருவிலே வேலியோரமாகக் கிடந்தது ஒரு கிழிந்த கடிதம். அதைக் கையில் எடுத்துப் பார்த்தான் சோமு. அதிலே முத்து முத்தாக அச்சடித்திருந்தது. அது என்ன எழுத்து, தமிழா இங்கிலீஷா என்றுகூடச் சோமுவுக்குத் தெரியாது. “இதிலே என்ன எழுதியிருக்குதுன்னு எனக்குப் படிக்கத் தெரியுமே!” என்று தன் தாயாரிடம் கூறினான் சோமு. “ஊக்கும்! உனக்கு அதுவேறே தெரியுமாக்கும்!” என்றாள் வள்ளியம்மை கேலியாக. தன் தாயாரே தன்னைக் கேலி செய்தது சோமுவுக்குச் சுருக்கென்று தைத்தது உள்ளத்திலே; ""நெசம்மா.... எனக்குப் படிக்கத் தெரியுமே!'' என்றான் பையன். தனக்குப் படிக்கத் தெரியும் உண்மையிலே என்றுதான் அந்த வினாடியிலே சோமு நம்பினான் நம்ப முயன்றான். அவன் குரலில் தொனித்த உண்மையைக் கண்டு ஏமாந்து விட்டாள் வள்ளியம்மை. “நெசம்மா? போனவுடனே எம் புள்ளைக்கு எளுத்து வாசிக்கத் தெரியும்னு ஐயாகிட்டச் சொல்றேன்” என்றாள். இதேதடா வம்பு என்று சோமு பயந்து போனான். அசடு மாதிரி அவன் ஆயாள் ராயரிடம் போய்த் தன் பிள்ளைக்குப் படிக்க வேறு தெரியும் என்று சொல்லிவிட்டாளானால் ஆபத்துத்தான். ஆடு திருடின கள்ளன் மாதிரி விழிக்க வேண்டியதுதான். அந்தக் கிழிசல் காகிதத்தைத் தூக்கி எறிந்துவிட்டுச் சோமு, “எனக்குப் படிக்க வேறே தெரியும் போ! பள்ளிக்கூடத்துக்கு நீ காசு கொடுத்து அனுப்பிச்சது அதிகமாகப் போயிடுச்சு!” என்றான். அவன் மனசிலிருந்த குறை அவன் குரலிலே நன்கு தொனித்தது. “கெட்டிககாரப் புள்ளையா லச்சணமா நீயாச் சம்பாரிச்சு நீயாப் படிக்க கத்துகிட்டா யாரு வாண்டாம்பாங்க!” என்றாள் வள்ளியம்மை. சோமு பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் தன் மனசுக்குள் ஒரு சபதம் செய்துகொண்டான், தானே படிக்கக்கற்றுக் கொண்டு விடுவது என்று. அதற்குள் வேலியோரமாக நின்று தலையைத் தூக்கிச் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த ஓணான் ஒன்று அவன் கண்ணில் பட்டுவிட்டது. குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்தான். அடுத்த வினாடி அந்தக்கல் இம்மி பிசகாமல் ‘டங்’ என்று இடிபோல் அந்த ஓணானின் தலைமேல் விழுந்தது. தன் பிள்ளையைத் திரும்பிப் பார்த்தாள் வள்ளியம்மை. முதல் நாள்தான் தோய்த்து உலர்த்தியிருந்த வெளுப்பு வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறான் அவன் என்பதை அப்போதுதான் கவனித்தாள் “என்னடா? கண்ணாலங் கிண்ணாலம்னு நினைச்சுக்கிட்டுப் புறப்பட்டியோ! வெளுப்பு வேட்டியை எடுத்துக் கட்டிக்கிட்டுக் கிளம்பிட்டியே!” என்றாள் கேலியாக. “இல்லை ஆத்தா!” என்றான் பையன் தயங்கினான் மென்று விழுங்கினான். “அந்த வேட்டி கையலம்பறப்ப ஈரமாயிட்டுது. எடுத்துப் போட்டுட்டு வேறே கட்டிகிட்டேன்” என்றான். “நீ கெட்டு அலையற கேட்டுக்கு வெளுப்பு வேட்டிவேறே கேடா? பவுசுதான்!” என்றாள் வள்ளியம்மை. ஆனால் அவளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அவசரத்தில் “வெளுப்பு வேட்டியை எடுத்துக் கட்டிக்கிட்டுவா” என்று சொல்ல அவள் மறந்து போய்விட்டாள். அவ்வளவு சின்னப்பயல் எவ்வளவு அறிவுடன் சமயத்தில் மறந்துவிடாமல் கெட்டிக்காரத்தனமாக வெளுப்பு வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு கிளம்பியிருந்தான்! ‘கெட்டிக்காரப் பயல்தான்! நல்ல படியாக வளர்ந்து பெரியவனாகி உருப்பட்டு...’ என்று என்னவெல்லாமோ எண்ணத் தொடங்கினாள் வள்ளியம்மை. சோமுப் பயலுக்குத் தன் தாயார் “கண்ணாலம் கிண்ணாலம்னு நினைச்சுக்கிட்டயோ?” என்று கேட்டபோது வெட்கம் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று இருந்தது. தன் வெட்கத்தை மறைப்பதற்காக அவன் குனிந்து இன்னொரு கல்லை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு எதைக் குறிபார்த்து அடிக்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். “கை எல்லாம் அழுக்குப் பண்ணிக்காதேடா!” என்று அதட்டினாள் வள்ளியம்மை. கல்லைக் கீழே போட்டுவிட்டு ஆயாளை நெருங்கி அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் சோமு. பிள்ளைமார் தெருவிலே தாயும் மகனும் நடந்து போகையில் யாரோ ஒருவர், “அங்கே பாருடா! கறுப்ப முதலியின் பொண்சாதியும் மகனும் போறாங்கடா அக்கிரகாரத்துக்கு!” என்று சொன்னது சோமுவின் காதுகளிலும் விழுந்தது. வள்ளியம்மையின் காதுகளிலும் விழுந்தது. சற்றே நடையைத் துரிதப்படுத்தினாள் வள்ளியம்மை. அவளுடைய நடை வேகம் அவள் எதிலிருந்தோ தப்பி ஓட முயலுவது போல் இருந்தது. சோமுப்பயல் ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தான். பிள்ளைமார் தெருவைக் கடந்து சின்ன அக்கிரகார மூலையைத் தாண்டிக் கிழக்குத் திருப்பம் திரும்பிச் சர்வமானிய அக்கிரகாரத்துக்குள் புகுந்தவுடனே வள்ளியம்மை, “ஐயாவைக் கண்டதும் விழுந்து கும்பிடு. பாக்கி எல்லாம் நான் பேசுகிறேன். நீ ஏதாவது அசட்டுப் பிசட்டுன்னு பேசிப்புட்டுக் காரியத்தைக் கெடுத்துடாதே!” என்றாள். மனசு பதைபதைக்க புது உலகிலே புகுந்து திக்குத் திசை தெரியாமல் தடுமாறுகிறவனைப் போல இதயம் ‘படபட’ வென்று அடித்துக் கொள்ள சோமு, தன் தாயைப் பின்பற்றினான். |