உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 9. ரங்க ராவ் வள்ளியம்மை வேலை செய்த வீட்டு யசமானரின் பெயர் ரங்க ராவ். தஞ்சாவூரில் நூறு நூற்றைம்பது வருஷங்கள் அரசாண்ட மராட்டிய அரசர்களுக்கு, அப்பனுக்குப்பின் பிள்ளை, பிள்ளைக்குப்பின் பேரன் என்று மந்திரிகளாக இருந்தவர்களுடைய வம்சத்தில் உதித்தவர். மராட்டி பாஷை பேசும் ராயர். நன்கு படித்தவர். அடி நாளில் ஏதோ சொல்ப சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்தவர். நாளடைவில் அநுபவமும் அறிவும் வளர வளர, சட்ட ஞானமும், சுபாவமாக ஏற்பட்ட சாமர்த்தியமும் உதவி செய்யவே, பதவிக்கு மேல் பதவி என்று தாவிப்பிடித்து உச்சாணிக் கிளையை எட்டிப் ‘பென்ஷன்’ வாங்கிக்கொண்டு ‘ரிடையர்’ ஆகவேண்டிய வயசை எட்டும்போது ஐந்நூறு அறுநூறு என்று சம்பளம் வாங்கியவர். இன்றும் நாலைந்து வருஷங்கள் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்திருந்தாரே யானால் இன்னும் மேல்பதவியை அடைந்திருப்பார்; இன்னும் அதிகச் சம்பளமும் வாங்கியிருப்பார். ஆனால் ஐம்பது வயசு ஆவதற்கு முன்னமேயே அவருக்கு மனசு கசந்துவிட்டது. ஏனோ சேவை செய்வது பிடிக்கவில்லை. உடம்பும் சற்றேறக்குறைய இந்தச் சமயத்தில் சரியாக இல்லாமல் போய் விடவே கிடைத்த சம்பளமும், உத்தியோகமும், பதவியும் போதும் என்று ‘பென்ஷன்’ வாங்கிக்கொண்டு விட்டார். அவருக்கு மாசமாசம் முந்நூறு ரூபாய் ‘பென்ஷன்’ வந்து கொண்டிருந்தது. ரங்க ராவ் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக, சிவந்த மேனியும், ‘பாந்தமான’ பருமனும், களையுள்ள முகமுமாக நன்றாக இருப்பார். அவர் தலையில் இருந்த பிடிமயிர் நரையும் பழுப்புமாகச் சோளக் கொண்டைக் குஞ்சம் மாதிரி இருந்தது. காதிலே வைரக் கடுக்கன்களும், கை விரல்களிலே பலவிதமான கல் மோதிரங்களும் அணிந்திருந்தார் அவர். காலையிலே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு நெற்றியிலே கீற்றுச் சந்தனம் இட்டுக் கொள்வார். அந்தச் சந்தனக் கீற்று இரவு வரையில் அழியாமல் ‘பளபள’வென்று நாள் பூராவும் தேஜோமயமாக அவர் நெற்றியிலே இருக்கும். சிவப்புக் கோடுபோட்ட வெண்மையான ‘மல்’ வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டியிருப்பார். மேலே ஆறுமுழ ஜரிகை உத்தரியம் ஒன்று. இதுதான் ரங்க ராவினுடைய தினசரித் தோற்றம். அவர் பூர்விகத்தில் சாத்தனூரைச் சேர்ந்தவரே அல்ல. அதாவது அவரோ அவருடைய முன்னோர்களோ சாத்தனூரில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. ஆனால் சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கும் பொழுது வேலை நிமித்தமாக எப்பொழுதோ ஒருநாள் அவர் சாத்தனூருக்கும் வந்திருந்தார். காவேரிக் கரையும் கோயிலுமாக அந்த ஊர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாகப் பண்டைக் காலத்து ஆசிரமம்போல அமைதியும் குளுமையும் குடி புகுந்திருந்த அந்தச் சர்வமானிய அக்கிரகாரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பென்ஷன்’ வாங்கிக் கொண்டவுடனே சர்வமானிய அக்கிரகாரத்திலே அடுத்தடுத்திருந்த இரண்டு வீடுகளை விலைக்கு வாங்கிக்கொண்டார். இரண்டுக்கும் இடையிலிருந்த சுவரைப் பல இடங்களில் தட்டி விட்டுவிட்டு இரண்டு வீடுகளையும் ஒரே வீடாக்கினார். குடியேறினார். நாளடைவில் சாத்தனூரிலே நிலம் விற்க முன் வந்தவர்களிடமெல்லாம் நிலமும் வாங்கினார். மற்றவர்கள் கொடுத்ததை விடச் சற்று அதிக விலையே கொடுத்து வாங்கினார். சாத்தனூருக்கு அருகில் சர்வமானிய நிலங்களாகவே இரண்டு மூன்று வருஷங்களுக்குள் பத்துப் பன்னிரண்டு வேலி வாங்கி விட்டார். வேறு சில கிராமங்களிலும் அவருக்கு நிலங்கள் இருந்தன. எல்லாமாகச் சேர்ந்து ஐம்பது அறுபது வேலி நிலம் இருந்தது அவருக்கு. அவருக்குக் குடும்பம் என்றிருந்தது அவருடைய மனைவி சோனிபாயும் ஒரே பெண்ணான கங்காபாயுந்தாம். தூரபந்துக்களும் அண்டிப் பிழைப்பவர்களும் தினம் தவறாமல் வீட்டிலே வந்து குவிந்து கொண்டே இருப்பார்கள். வீட்டிலே கலகலப்புக்கும் விருந்தாளிகளுக்கும் குறைவே இல்லை. ரங்க ராவும் அவருடைய தருமபத்தினி சோனிபாயும் மகள் கங்காபாயும் எல்லோரையும் சுமுகமாக வரவேற்று, வேற்றுமை சிறிதும் பாராட்டாமல் அன்புடனும் பிரியத்துடனும் உபசரிப்பார்கள். தந்தை, தாய், மகள் மூவருமே தாராள புத்தியிலும் தரும சிந்தனையிலும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டார்கள். சோனிபாய் அழகிலும் சரி, குணத்திலும் சரி, ஏன், சுருக்கமாகச் சொன்னால் எல்லா விஷயங்களிலுமே ரங்க ராவுக்கு மிகவும் ஏற்றவள்தான். உருண்ட முகமும் மிரண்ட பார்வையும் சிவந்த மேனியும் அடக்கமான உருவமுமாகக் காட்சி அளித்தாள் சோனிபாய். இவர்கள் இருவருக்கும் பிறந்த பெண்ணைப் பற்றிக் கேட்க வேண்டுமா? கங்காவும் அழகிதான். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சோனிபாயின் சகோதரன் பிள்ளை சாம்பமூர்த்தி சம்மதித்தானானால் அவனுக்கே கங்காவைக் கொடுத்துவிடவேண்டும் என்று ரங்க ராவும் சோனிபாயும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். கங்காவுக்கும் சாம்பமூர்த்தியிடம் அபாரப் பிரியந்தான். சாம்ப மூர்த்தியுடன் தாயார் இருந்தாள். சாம்பமூர்த்திக்குத் தகப்பனார் இல்லை; அவர் சிறு வயசிலேயே அவனை விட்டுவிட்டு இறந்து விட்டார். அந்தக் கல்யாண விஷயமாக என்ன நினைத்தார்கள் என்பது தெரிந்ததும் கல்யாணம் நடக்கவேண்டும். கங்காவுக்கு வயசாகிக் கொண்டிருந்தது. ஒன்பது வயது முடிந்து பத்தாவது வயது ஆரம்பம் ஆகிக்கொண்டிருந்தது. ரங்க ராவுடைய வீட்டிலே மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். இரண்டு வேலைக்காரிகள் இருந்தார்கள். நான்கு பசுக்களும், இரண்டு எருமைகளும், இரண்டு ஜோடிக் காளைகளும், ஒரு ஜோடி வெள்ளைக் குதிரைகளும், இரண்டு பெட்டி வண்டிகளும், ஒரு கோச்சு வண்டியும், ஒரு ‘பைசைகிள்’ வண்டியும் இருந்தன. இவை எல்லாம் இருந்ததிலே ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தினமும் வேலை இருந்தது என்பதுதான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். வள்ளியம்மையும் அவளுடைய மகன் சோமசுந்தரமும் ரங்க ராயருடைய வீட்டை அடைந்தபோது அவர் தம் வீட்டுத் திண்ணையில் ஒரு திண்டின்மேல் சாய்ந்துகொண்டு அப்பொழுது தான் வந்திருந்த ஒரு கடிதத்தைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். சாத்தனூரிலே தபாலாபீஸ் ஏற்பட்டிருந்த புதுசு அது. சாத்தனூரிலே தபாலாபீஸ் ஏற்பட்டது ரங்க ராவ் வந்த பிறகு, அவர் முயற்சிகளால்தாம். ‘போஸ்டுமாஸ்டரா’க உள்ளூர்க்காரர் ஒருவரை, அதுவும் சர்வமானிய அக்கிரகாரத்து மனிதர் ஒருவரை, யார்? வேறு யாரும் இல்லை; மாடிப் பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயருடைய மூத்த பிள்ளை நாராயணனைத்தான் நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதி ஏற்பாடு செய்ததெல்லாம் ரங்க ராவ்தாம். மாசம் ஐந்து ரூபாய், சர்க்கார் சம்பளம். உள்ளூரிலேயே வேலை. இதுபற்றிப் புது ‘போஸ்டுமாஸ்டர்’ ரங்க ராவுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியுமா? கும்பகோணத்திலிருந்து தபால் பையுடன் ‘ரன்னர்’ வருவான், நண்பகலில் பன்னிரண்டு மணி, ஒரு மணிக்கு. தபால் பை வந்த ஒரு மணிக்குள்ளாகவே பையை உடைத்து ரங்க ராவுக்கு வந்திருந்த கடிதங்களை எல்லாம், பையில் ரங்க ராவுக்கு வந்திருந்த கடிதங்கள்தாம் அதிகம் இருக்கும், பொறுக்கிப் பை கொண்டு வந்த ‘ரன்னரி’டமே கொடுத்து ரங்க ராவுக்கு அனுப்பி விடுவார் புதுப் ‘போஸ்டுமாஸ்டர்’. இன்று பை வர ஏதோ கால தாமதமாகி விட்டது போலும். ஆனால் ரங்க ராவுக்கு அபூர்வமாக ஒரே ஒரு தபால் தான் வந்திருந்தது. ‘ரன்னர்’ அந்தத் தபாலைக் கொண்டுவந்து பயபக்தியுடன் அவர் கையில் கொடுத்துவிட்டுப் பணிவாக ஒதுங்கி நின்றான். வழக்கமாகத் தபால்களை எல்லாம் சாவகாசமாகப் பிரித்துப் படித்துவிட்டு ‘ரன்னரு’க்குத் தம் கையில் அகப்பட்ட சில்லறையை எடுத்துக் கொடுத்தனுப்புவார் ரங்க ராவ். சின்ன வெள்ளிப் பணத்துக்குக் குறையாமல் கொடுப்பார். இன்று வரையில் கால் ரூபாய்க்கு அதிகமாக இல்லை, கிடையாது. ‘ரன்னரு’க்குச் சர்க்கார் கொடுத்த சம்பளம் மாசம் இரண்டு ரூபாய் தான். ரங்க ராவுக்குத் தபால் கொண்டுபோய்க் கொடுப்பதன் மூலம் அவனுடைய சம்பளத்துக்கு இரண்டு பங்குக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்று தனக்கு எவ்வளவு கிடைக்குமோ, ஒரே ஒரு தபால்தானே வந்திருந்தது என்று சிந்தித்தவனாக அவன் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு கை கட்டி வாய் புதைத்து நின்றான். கடிதத்தில் இருந்தது நல்ல செய்திதான் என்பது ரங்க ராவினுடைய முக பாவத்திலிருந்தே நன்கு தெரிந்தது. மிகவும் நல்ல செய்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று. கடிதத்தைப் படித்து முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘சோனு! சோனு’ என்று இரண்டு தரம் கூப்பிட்டார். அவர் மனைவி வரவில்லை, மகள் கங்காதான் வந்தாள். “ஏன் அப்பா! அம்மா தூங்கிண்டிருக்கா. எழுப்பிண்டு வரட்டுமா?” என்று கேட்டாள் கங்கா. ரங்க ராவ், “தூங்கட்டும், தூங்கட்டும்! எழுப்ப வேண்டாம். உன்னைப்பற்றிய விஷயந்தான், கங்கா. அடுத்த வாரம் உன் அம்மாஞ்சி இங்கு வருவதாக எழுதியிருக்கான்” என்றார். எதிர்பாராத இந்த ஆனந்தச் செய்தியைக் கேட்ட கங்கா பூரித்து போனாள். அவள் முகம் லேசாகச் சிவக்க, “ஓ!” என்றாள். அவளை அருகில் அழைத்து அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிக்கொண்டே ரங்க ராவ், “சாம்பமூர்த்தியும் அவன் அம்மாவும் எதற்காக வராள் தெரியுமா?” என்று கேட்டார். “எனக்கு எப்படித் தெரியும்?” என்று நாக்குளற, ஏதும் அறியாதவள்போல நாணப் பொய் சொன்னாள் கங்கா. “போக்கிரி, உனக்கா தெரியாது? உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கத்தான் வரான் உன் அம்மாஞ்சி” என்றார் ரங்க ராவ். தலையைக் குனிந்துகொண்டு, கால் கட்டை விரலால் தரையைக் கீறிக்கொண்டே நின்றாள் கங்கா. ஒரு நிமிஷம் கழித்து ரங்க ராவ், “நீபாட்டுக்கு ‘ஜாம் ஜாம்’னு கலியாணத்தைப் பண்ணிண்டு உன் ஆத்துக்காரரோடு போயிடுவே! நானும் அம்மாவுந்தான் ஆத்திலே தனியாக இருக்கணும்! எங்களுக்குத் துணை யாரு அப்பறம்?” என்றார். அவர் குரலிலே உண்மையாகவே வருத்தம் தொனிக்கிறது என்று கண்ட கங்கா அவரை இன்னும் நெருங்கி நின்று, தன் கைகளால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, “இங்கே பாருங்கோ அப்பா! உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு நான் எங்கேயும் போயிடமாட்டேன்” என்றாள். அவளுடைய வார்த்தைகளையும், அப்போதைய முகபாவத்தையும் கண்டு வருத்தம் மாறிச் சிரித்துக்கொண்டே ரங்க ராவ், “இதோ பார் கங்கா, தபால் ‘ரன்னர்’ நின்னுண்டிருக்கான்! நாம்ப சந்தோஷமாயிருக்கச்சே அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டாமா? சாவி இந்தா, பணப்பெட்டியைத் திறந்து உன் கையாலேயே ஒரு ரூபாய் கொண்டுவந்து அவனிடம் கொடு” என்றார். கல்யாணம் என்கிற வார்த்தை காதில் விழுந்ததுமுதலே மனம் குளிர்ந்து நின்றான் ‘ரன்னர்’. சந்தோஷ சமாசாரங் கொண்டு வந்ததற்காகத் தனக்கு ஒரு ரூபாய் கிடைக்கப்போகிறது என்று அறிந்தவுடனே அவனுடைய ஆனந்தம் எல்லை கடந்து விட்டது. ரூபாய் மட்டுந்தான் அவன் ஆனந்தத்திற்குக் காரணம் என்று சொல்வது கூடப் பிசகுதான். யசமான், நல்ல யசமான் நன்றாக இருக்க வேண்டும்; எல்லாக் காரியங்களும் நன்றாக அவர் மனசுப்படி நடக்க வேண்டும் என்று அவன் மனப் பூர்வமாக விரும்பினான். அடுத்த விநாடியே மீண்டும் ரூபாய் ஞாபகம் தலை தூக்கியது. கல்யாணக் கடுதாசி கொண்டு வந்ததற்கு ஒரு ரூபாய் சன்மானம் கிடைக்கும்போது, கல்யாணத்திலே அவனுக்கு ஜோடி வேஷ்டி, அவன் பெண்டாட்டிக்குப் புடைவை ரவிக்கை, அவன் குழந்தைகளுக்குத் துணி மணிகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் என்ன? “யசமான் நல்லா யிருக்கவேணும், நல்லா யிருக்கவேணும்!” என்று வாயார மனதார வாழ்த்திக்கொண்டு ரூபாய் தன் கையில் வந்து சேரும் வரையில் கூடக் காத்திராமல் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தான். அவனையோ அவன் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணியதையோ கவனிக்கவில்லை ரங்க ராவ். அவர் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். இவ்வளவு நேரமும் தன் பிள்ளையைக் கையில் பிடித்துக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமாக நின்று வள்ளியம்மை இதுதான் சரியான சமயம் என்று எப்படியோ அறிந்து கொண்டுவிட்டாள். “ஐயாவை விழுந்து கும்பிடடா!” என்று சோமுவை முன்னே தள்ளினாள். சோமு கீழே விழுந்து சகல அங்கங்களும் தரையில் படும்படியாக நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்திருக்கும் போதுதான் ரங்க ராவ் அவனைப் பார்த்தார். “யாரடா பயலே நீ? என்ன வேணும்?” என்று கேட்டார். பதில் என்ன சொல்வது என்று அறியாமல் பிரமித்துப் போய் நின்றான் சோமு. வள்ளியம்மைதான் சொன்னாள்: “எம்மவனுங்க, இட்டுக்கிட்டு வந்தேனுங்க!” என்று. இதற்குள் உள்ளே போயிருந்த கங்கா கையில் ரூபாயுடன் வெளியே வந்தாள். சாவியைத் தன் தகப்பனாரிடம் கொடுத்தாள். ரூபாயை ‘ரன்னரி’டம் கொடுத்தாள். “நீ நல்லாருக்கணும் அம்மா! மவராசியாப் பத்தும் பெத்துக்கிட்டுச் சுகம்மா இருக்க வோணும் அம்மா” என்று வாழ்த்திவிட்டு ராயருக்கு மீண்டும் ஒரு தரம் கும்பிடு போட்டுவிட்டுத் தபால் ‘ரன்னர்’ அங்கிருந்து கிளம்பினான். அவன் போன பிறகுதான் சோமுவைப் பார்த்தாள் கங்கா. வள்ளியம்மையையும் பார்த்தாள். “யாரடி வள்ளி அது? உம் மகனா?” என்று கேட்டாள். “ஆமாம் அம்மா. ஒங்க காலடியிலே கிடந்து சீவிக்கக் கத்துக்கட்டும்னு அழைச்சிட்டு வந்துட்டேன். இனிமே ஒங்க பொறுப்புங்க'' என்றாள் வள்ளியம்மை. கங்காபாய் சோமுவைப் பார்த்தாள். ரங்க ராயர், “பயல் என்னவோ அதிஷ்டக்காரப் பயல்தான். அவன் வருகிறபோது நமக்கும் நல்ல செய்தி வந்திருக்கு” என்றார். பிறகு ஒரு விநாடி கழித்துச் சோமுவைப் பார்த்து, “உனக்கு என்னடா வேணும், பயலே! கேளு பார்க்கலாம்!” என்றார். இதுதான் கேட்பார், இதுதான் பதில் சொல்வது என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தவன் போலச் சோமு தயங்காமல் கொள்ளாமல் பதில் அளித்தான். “சாயவேட்டி ஒண்ணு வேணுங்க எனக்கு” என்றான். தன் பையனுடைய தைரியத்தையும் அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சாயவேஷ்டி என்று கேட்டதையும்பற்றித் திகைத்துப் போனாள் வள்ளியம்மை. “அறியாப் பயல்...” என்று ஏதோ சொல்லி அவன் தைரியத்தை மழுப்ப யத்தனித்தாள். ஆனால் ரங்க ராவ் சிரித்தார், “நான்கூட என் சிறு வயசிலே சாயவேஷ்டி, சாயவேஷ்டி என்றுதான் ஜபம் பண்ணிக்கொண்டிருப்பேன். சாயவேட்டியினுடைய மகத்துவம் சின்ன வயசிலேதான் தெரியும்!” என்றார். பிறகு ஒரு விநாடி கழித்து, “சாயவேஷ்டிதானேடா வேணும் உனக்கு? வாங்கித் தறேன். சரிகைச் சீர் போட்ட சாயவேஷ்டி வாங்கித் தறேன்” என்றார். வள்ளியம்மை தயக்கத்துடன், “சாய வேட்டிக்கென்னாங்க? ஏதோ அவனை உங்க வூட்லே வேலைக்கு வச்சுக்கிட்டா என் மவன் பொழைச்சுப் போவான்...” என்றாள். ரங்க ராவுக்கு இன்னும் ஒரு வேலைக்காரன் வைத்து கொள்வதுதானா பிரமாதம்? அவர் வீட்டிலே வேலைக்குப் பஞ்சமில்லை, வேலைக்காரர்களுக்கும் பஞ்சமில்லை. “சரி, நம்மிடத்திலேயே வேலை செய்யட்டும்!” என்று சொல்லி விட்டார் ரங்க ராயர். மாசம் அரை ரூபாய் சம்பளம் தினம் இரண்டு வேளையும் சாப்பாடு. விசேஷத்துக்கு விசேஷம் வேட்டி துணிமணிகள், வேறு நல்ல காரியம் எது நடந்தாலும் ஏதாவது கை நிறைய, மனம் நிறையக் கிடைக்கும். வள்ளியம்மைக்குப் பரம திருப்தி, இனித் தன் பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்று மனம் குளிர்ந்தாள். சோமுவுக்கும் திருப்திதான்; சந்தோஷந்தான்! |