உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இடைவேளை - முப்பது வருஷங்கள்
1 முப்பது வருஷங்கள்! முப்பது வருஷங்கள் என்றால் சற்றேறக்குறைய பதினாயிரம் நாட்கள்! பதினாயிரம் நாட்களில் ஆறு லக்ஷம் நாழிகைகள் அடங்கியுள்ளன. ஆறு லக்ஷம் நாழிகைகளில் அறுபது கோடி வினாடிகள். ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு விநாடியுமே முக்கியமானதுதான் அற்புதமானதுதான் முடிவற்றதுதான்! இந்த ஆறு கோடி வினாடிகளின் சரித்திரத்தை அப்படியே எழுதுவதென்பது நடக்காத காரியம் முடியாத காரியம்! இந்தியனுடைய சராசரி வயசு முப்பதுக்குள்தான் என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். மனிதர்களிலே அல்பாயுசாக மாண்டு விடுகிறவர்கள் எவ்வளவோ பேர். பூர்ண ஆயுசுடன் வாழுகிறவர்களுக்குக்கூட முப்பது வருஷங்கள் என்றால் பெரிய விஷயம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் உலக சரித்திரத்திலே எடுத்துக்கொண்டால் முப்பது வருஷங்கள் என்பதை மிகவும் சொல்ப காலம் என்று தான் சொல்லவேண்டும். உலகமும், உலகிலே மனிதனும் உற்பத்தியாகி எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. எவ்வளவு வருஷங்கள் ஆயின என்று திட்டமாகச் சொல்ல முடியாது. ஹிந்துக்கள் ஒன்று சொல்வார்கள், கிறிஸ்தவர்கள் ஒன்று சொல்வார்கள், அடையார் தியாஸபிக்காரர்கள் ஒன்று சொல்வார்கள். ஆனால் மனித உள்ளம் சமையத் தொடங்கி அது ஆதியில் மனித உடலிலோ, புழுவின் உடலிலோ, மிருகத்தின் உடலிலோ, தேவ உடலிலோ சமையத் தொடங்கிக் கல்ப கோடிகள் பல ஆகிவிட்டன. கல்ப கோடி வருஷங்களை எண்ணிப்பார்க்கும்போது முப்பது வருஷங்கள் மிகவும் அல்பமானவைதாம். ஆனால், “நான் பிறந்த அதே வினாடியில் பிறந்ததுதான் இவ்வுலகமும்” என்று சொல்கிறவன்தான் மனிதன். அப்படிப் பட்டவனுக்கு முப்பது வருஷங்கள் மிகவும் முக்கியமான காலமாகத் தோன்றுவதிலே ஆச்சரியமே இல்லை. 2 நாளுக்கு நாள், நாழிகைக்கு நாழிகை, விநாடிக்கு விநாடி, உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நூற்றுக் கணக்கான வருஷங்கள் நிலைத்து நின்ற ஒரு சாம்ராஜ்யம் முப்பது வருஷங்களில், முப்பதே நாட்களில் அழிந்துவிடலாம். ஒவ்வோர் இரவும் வானத்திலிருந்து எவ்வளவோ நக்ஷத்திரங்கள் உதிருகின்றன. அவற்றில் ஒன்று வந்து மோதினால் போதும் ஒரே விநாடியில் உலகமே அஸ்தமித்துவிடும். சாதாரண ஜனங்கள் வினாடிக்குப் பத்துப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் பத்து பேரோ, பதினொரு பேரோ பிறந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கைத் தேவி கோபித்துக்கொண்டால் கடல் பொங்கினால், பூகம்பம் வந்தால், வானம் குமுறினால், எரிமலை கக்கினால் ஒரு வினாடியிலே நகரங்கள் அழிந்து விடுகின்றன. நாகரிகங்கள் புகைந்துவிடுகின்றன. மனிதர்கள் மாயமாக மறைந்துவிடுகிறார்கள்! ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில் பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலைமுறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம். ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து, வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள். 3 சோமுவினுடைய பதினோராவது வயதிலிருந்து நாற்பத்தோராவது வயது வரையில் ஒரு முப்பது வருஷங்கள் கழிந்தன. முப்பது வருஷங்களில் உலகத்திலே என்ன என்ன நடக்க முடியும் என்பதற்கு இந்த முப்பது வருஷங்களைவிடச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும்? இந்த முப்பது வருஷங்களிலே விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் எவ்வளவோ அற்புதமான, புதுமையான, பல விஷயங்களை அறிந்து கண்டுபிடித்தார்கள். சமுதாய வழிகளைத் திருத்தி அமைக்கப் பாடுபட்டார்கள் பலர். மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும் லக்ஷ்யத்தையும் தெளிவு செய்ய முயன்றார்கள் சிலர். எவ்வளவோ காவியங்கள், புத்தம் புதிய காவியங்கள் தோன்றின. எத்தனையோ லக்ஷ்யங்கள் தோன்றி மறைந்தன. மகாயுத்தம் ஒன்று நடந்து ஓய்ந்தது. சில்லறை யுத்தங்கள் எவ்வளவோ நடந்தன. தனி மனிதனுக்கும் தனி மனிதனுக்கும், கோஷ்டிக்கும் கோஷ்டிக்கும், தேசத்துக்கும் தேசத்துக்கும், நாகரிகத்துக்கும் நாகரிகத்துக்கும், லக்ஷ்யத்துக்கும் லக்ஷ்யத்துக்கும், ஆசைக்கும் ஆசைக்கும் எவ்வளவோ சில்லறை யுத்தங்கள் நடந்து ஓய்ந்தன. ஒரு சாம்ராஜ்யம் நிலைத்தது. ஒரு சாம்ராஜ்யம் அழிந்தொழிந்தது. ஒரு புது சாம்ராஜ்யம் முளைத்தது. எவ்வளவோ மன்னர்கள் இறந்தார்கள். போனவர்கள் போகப் புது மன்னர்கள் முடிசூடினார்கள். வீரர்கள் தோன்றினார்கள். வெற்றி பெறாத வீரர்கள் வீரமுரசு கொட்டினார்கள். மகான்கள் எவ்வளவு பேர். ஊருக்கு ஒரு மகான், தேசத்திற்கு ஒரு மகான் என்று முளைத்தார்கள். எவ்வளவோ கவிகள் எதிர்காலத்தை வரவேற்றுப் பாடினார்கள். 4 இந்த முப்பது வருஷங்களில் கடவுள், மற்றெல்லா வருஷங்களிலும் இருந்தது போலவே எதிலும் பட்டுக் கொள்ளாமல் தாம் இருந்தார். மனிதனுடைய ஆத்மா எப்பொழுதும் போலத்தான் இருந்தது. அன்பும் வெறுப்பும், பொய்யும் மெய்யும், ஒளியும் நிழலும் மனிதனுடைய ஆத்மாவிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே சலிக்காமல் தாண்டவமாடின. 5 தனி மனிதனுடைய ஆசைகளும் லக்ஷ்யங்களும் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வளைய வளைய வந்துகொண்டிருந்தன. பெண், மண், பொன் என்கிற ஆசைகள் எப்போதும் போலவே இந்த முப்பது வருஷங்களிலும் மனிதர்களின் உள்ளங்களிலே ஆட்சி செலுத்தின. காலத்துக்கேற்ற ஆசைகள் சில. ரெயில் பிரயாணம் செய்துபார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் ஆசைப்பட்டவர்கள் எவ்வளவோ பேர்! ரெயிலைப் பற்றிக் கேள்விப் படாமலே இருந்து விட்டவர்கள் எவ்வளவோ பேர்! சோமு சிறுவனாக இருந்தபோது ஏதாவது வண்டியில் கொஞ்ச தூரமாவது சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். ரங்க ராவ் வீட்டில் வேலைக்கு அமர்ந்தபின் இந்த ஆசை பூர்த்தியாகி விட்டதால் மறைந்து போய்விட்டது. ஆனால் மறைந்த ஓர் ஆசையின் இடத்திலே ஆயிரம் ஆசைகள் தழைத்தன. 6 சந்நியாசம் பூண்டவன்கூட ஆசைகளை எல்லாம் துறந்து விட்டவன் என்று சொல்ல முடியாது. மோக்ஷம் என்கிற ஆசை அவனை உந்துகிறது. கடவுள் என்று கோயிலில் போய்க் குடியேறி இருக்கிறானே அவன் கூட ஆசைகளை வென்றுவிட்டான் என்று சொல்ல முடியாது. அவனுக்கும் பக்தர்களுடைய பக்தி ரசம் தேவையாகத் தான் இருக்கிறது. 7 ஒரு விதத்தில் ஆசைப்படாதவனை அதிருஷ்டசாலி என்று சொல்லலாம். ஆசைப்படாதவனுக்கு ஏமாற்றம் என்பதே இராது. ஒரு விதத்தில் பார்க்கப்போனால் ஆசைகள் அற்றவனை ஜடம் என்று சொல்ல வேண்டும். உயிரற்ற வஸ்து என்றுதான் சொல்லவேண்டும். உயிர் வாழ்வது என்பதற்கு அர்த்தம் என்ன? ஆசைப்படுவது என்பதுதான் அர்த்தம். மனிதனுடைய ஆசைகளால்தாம் வாழ்க்கை என்பது வினாடிக்குப் பின் வினாடி என்று சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்று ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஓரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் பைத்தியக்காரத்தனம். 8 சோமு பைத்தியக்காரன் அல்ல; மதியீனனும் அல்ல. அவன் உள்ளத்திலே ஆசைகள் பொங்கின. அவன் உடலிலே உழைப்பதற்குத் தேவையான சக்தி இருந்தது. 9 எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அதைச் சமயம் வாய்த்தபோது ரங்க ராவிடம் கூடச் சொன்னான் சோமு. கங்காபாயின் கல்யாணச் சந்தடி எல்லாம் அடங்கிய பிறகு ரங்க ராவ் சாத்தனூர் மிடில் ஸ்கூல் தலைமை உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயரிடம் சொல்லிச் சோமுவுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தர ஏற்பாடு செய்தார். பள்ளிக்கூடத்து நிழலிலே தங்கி அகாரணமாகத் தன் பிரம்பால் அடிபட்டான் அந்தப் பையன் என்று சுப்பிரமணிய ஐயருக்கு ஞாபகம் இருந்தது போலும். அவர் இந்த ஒரு மாணவனை மட்டும் பிரம்பால் தொட்டதுகூட இல்லை. பிரம்பெடுக்க அவசியமே இல்லை. பையன் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். ஒரு தரம் சொன்னால் போதும், மனசிலே இருத்திக் கொண்டான். தினம் மாலையில் சுப்பிரமணிய ஐயர் வீட்டுக்குப் போய் இரண்டு நாழிகை நேரம் படிப்பான், எழுதுவான், கணக்குப்போடுவான். இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே ஆரம்பக் கணக்குகளை எல்லாம் சுலபமாகப் போடப் பழகிவிட்டான். தமிழைத் தடுமாறாமல் வாசிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். ஆங்கிலம் அவ்வளவாக ஏறவில்லை. நாலு வருஷங்களுக்குள்ளாகப் ‘படித்தது போதும்; அதற்குமேல் தேவையில்லை’ என்று சொல்லுகிற அளவுக்குப் படித்துவிட்டான். 10 ஐந்து ரூபாய் பணம் சேர்த்துக் கும்பகோணம் கடைவீதியை விலைக்கு வாங்கிவிடவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான் ஆரம்ப காலத்தில். நாளடைவில் ஐந்து ரூபாய் போதாது என்கிற விஷயம் அவனுக்குத் தெரியவந்தது. அதற்காக அந்த ஆசையை விட்டுவிடுவதாக இல்லை அவன். ஐம்பதோ, ஐந்நூறோ, ஐந்து லக்ஷமோ, கும்பகோணத்துக் கடைத் தெருவையே விலைக்கு வாங்கிவிடுவது என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். ஒரு சமயம் மூன்று தம்பிடிகள் சேர்த்துக்கூட வைத்தான். இளவயசில் உண்டிப்பெட்டி ஒன்று வாங்கி அதிலே பணம்போட ஆரம்பித்தான். ஒரு முப்பது வருஷங்களில் அந்த உண்டிப்பெட்டி எவ்வளவோ தரம் நிறைந்து நிறைந்து காலியும் ஆயிற்று. உண்டிப் பெட்டியிலே வெள்ளிக் காசு தவிர வேறு எதுவும் போடுவதில்லை என்று தீர்மானித்த காலமும் ஒன்று வந்தது. இந்த முப்பது வருஷங்கள் மட்டுமல்ல அதற்கப்பாலும் பல வருஷங்கள் அந்த உண்டிப் பெட்டிக்கு அவசியம் ஏற்பட்டு மறைந்த பிறகுங்கூடத் தன் சிறு வயசின் ஆசைகளின் சின்னமாக அதை வைத்திருந்தான் சோமு. 11 மனிதர்களுடைய நட்பு, மதிப்பு என்கிற விஷயங்களிலே சோமுவை மிகவும் அதிருஷ்டசாலி என்றுதான் கூறவேண்டும். பிச்சாண்டியைப் பிடித்துக் கொடுத்தவன் என்கிற ஞாபகம் வெகு நாட்கள் வரையில் சாத்தனூரிலே இருந்தது. ஆனால் அது கூட மறைந்து விட்டது காலக்கிரமத்தில். ரங்க ராவ் வீட்டு வேலைக்காரன், மிகவும் நம்பகமானவன் என்கிற மதிப்பு ரங்க ராவ் இருந்தவரையில் நீடித்தது. ரங்க ராவோ அவனை வேலைக்காரனாக நடத்தவில்லை; நண்பனைப் போலத்தான் நடத்தினார். மிடில் ஸ்கூல் தலைமை உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயருடைய பிள்ளை கிருஷ்ணசாமியும் சோமுவும் ஒரே வயதினர். இணை பிரியாத தோழர்கள் ஆயினர். தன் நிலைமைக்கு அதிகமாகவே மதிப்பையும் பிறருடைய நட்பையும் பெற்ற சோமுவை அதிருஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். 12 கங்காபாயினுடைய கல்யாணத்திற்குப் பிறகு ரங்க ராவின் காரியம் எதுவுமே சரிவர நடக்கவில்லை. கொஞ்சங் கொஞ்சமாக அவருடைய குடும்பம், தரம் இறங்கிக் கொண்டிருந்தது. ஏழை உறவினர்கள் பலர் பிள்ளைக்குப் படிப்பு வேண்டும் என்றும், பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்றும், இரண்டுக்கும் பணம் தேவை என்றும் கையை ஏந்திக்கொண்டு வந்து ரங்க ராவிடம் நின்றார்கள். ஒன்றும் தராமல் விட்டு விடுகிற சுபாவம் இல்லை ரங்க ராவுக்கு. வருகிற விருந்தாளிகளை வராதே என்று சொல்ல முடியுமா? தானதருமங்கள் வழக்கம்போல நடந்தே தீர வேண்டுமல்லவா? கங்காவினுடைய கல்யாணத்திற்கென்று கடன் வாங்கின இடங்களுக்கெல்லாம் தவணை தவறாமல் வட்டி செலுத்தியாக வேண்டாமா? எதிலென்று செலவை மட்டுப்படுத்த முடியும்? எப்பொழுதும் போலச் செலவு ஆகிக்கொண்டுதான் இருந்தது. 13 இருந்த தொல்லைகளெல்லாம் போதா என்று தாயாதி ஒருவன் ரங்க ராவ் சுயமாகச் சம்பாதித்து வாங்கியிருந்த நிலங்கள் கூடப் பிதுரார்ஜிதமானவை தாம், அவற்றை இவர் தகப்பனார் உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அப்போது தான் மைனராக இருந்ததால் விஷயம் தெரியவில்லை. ரங்க ராவுக்கு உள்ள ஆஸ்திகளில் சரிபாதி தன்னுடையவை என்று வழக்குத் தொடர்ந்தான். கும்பகோணம் கோர்ட்டிலே வழக்கு இரண்டு வருஷங்கள் நடந்தது. ஏதோ சந்தர்ப்ப, ஜாதக விசேஷத்தால் ரங்க ராவ் தோற்றுவிட்டார். மேல் கோர்ட்டில், தஞ்சைக் கோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்; ஜயித்தார். ஆனால் தாயாதி ஹைக்கோர்ட்டில் அப்பீல் கொடுத்தான். ஜயிக்காமல் விடுவதில்லை என்று வீம்புடன் கட்சியாடினார் ரங்க ராவ். கேஸ் ரங்க ராவ் பக்கந்தான் தீர்ப்பாயிற்று. ஆனால் முடிவு காண்பதற்குள் ரங்க ராவினுடைய ஏராளமான ஆஸ்திகளில் பாதிக்கு மேல் கரைந்துவிட்டன. ரங்க ராவுக்கோ, அவருடைய தாயாதிக்கோ இந்த விவகாரத்தால் லாபம் சிறிதும் இல்லை. ஆனால் சோமுவுக்கு ஏராளமான லாபம். தஞ்சைக்கும், பிறகு சென்னைக்கும் பல தடவைகள் ரங்க ராவுடன் ரெயிலேறிப் போய் வந்தான் அவன். புது அநுபவங்கள் ஏராளமாக ஏற்பட்டன. உலக அறிவு விசாலித்துக் கொண்டிருந்தது அவனுக்கு. 14 வழக்கு ஹைக்கோர்ட்டில் விசாரணையில் இருந்தபோது சோனிபாய் இறந்துவிட்டாள். ரங்க ராவுக்கு வலதுகை ஒடிந்து விட்டதுபோல இருந்தது. அவள் பாக்கியசாலிதான் சுமங்கலியாகக் கணவன் மடியிலே தலைவைத்தபடியே உயிர் துறந்தாள். ஒன்றன்பின் ஒன்றாகத் துன்பங்கள் ரங்க ராவைத் தொடர்ந்து பீடிப்பதை எண்ணி மனம் நொந்தான் சோமு. ஆனால் இந்தமாதிரி விஷயங்களில் அவன் செய்யக்கூடியது என்ன? 15 கிட்டத்தட்ட அதே சமயத்தில், கொள்ளைக்காரர்கள் சாத்தனூருக்கு வந்த இரவில் கும்பகோணத்துக்குச் சோமுவைச் சுமந்து சென்ற அந்த வெள்ளைக் குதிரையும் செத்து வைத்தது. நல்ல கோடையில் வெப்பம் தாங்காமல் ‘படக்’கென்று கீழே விழுந்து உயிர் துறந்தது அது. அதனிடம் சோமு அளவற்ற பிரியம் வைத்திருந்தான். அவன் வாழ்க்கை உயர்வதற்கே ஆதாரமான ஒரு காரியத்தைச் செய்வதற்கு உதவியது அந்தக் குதிரைதானே! குதிரை இறந்துவிட்டதைச் சாக்காக வைத்துக்கொண்டு ரங்க ராவ் கோச்சு வண்டியையும் மற்றக் குதிரையையும் விற்று விட்டார். “பெட்டி வண்டி இருக்கிறதே, போதுமே!” என்று சமாதானம் சொன்னார். 16 வீட்டிலே வேலைக்காரர்களும் முன்புபோல் அதிகமில்லை. சோமுவைத் தவிர இன்னும் ஒரே ஓர் ஆள்தான் இருந்தான் எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்வதற்கு. “நான் ஒண்டி ஆசாமிதான்! எதற்காக ஏகப்பட்ட வேலைக் காரர்கள்?” என்றார் ரங்க ராவ். மாறிவிட்ட நிலைமையில் வந்த பேச்சு இது. சமையல்காரன் சமைத்தான். சாப்பிடுவதற்கென்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்த விருந்தாளிகளுக்குக் குறைவில்லை. வீடு ‘ஜே ஜே’ என்றுதான் இருந்தது. ஆனால் ரங்கராவுக்கு வாழ்க்கையிலே பழைய பிடிப்போ, உற்சாகமோ இல்லை. அவர் மனம் உடைந்துவிட்டது. சோனிபாய் இறந்த இரண்டாவது வருஷம் அவரும் இறந்துவிட்டார். 17 சோமு விரும்பியபடி அவனுக்குச் சாத்தனூர்க் கடைத் தெருவிலே ஒரு சிறிய கடை ஏற்பாடு செய்து தந்துவிட்டுப் போகவேண்டும் என்றுதான் அவர் எண்ணியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அந்த உத்தேசத்தை அவர் கூடுமானவரையில் தள்ளிப் போட்டுவிட்டார். சோமுவைத் தம் வீட்டைவிட்டு வெளியேற அநுமதிக்கவே அவருக்குக் கடைசிக் காலத்தில் விருப்பமில்லாது போய் விட்டது. சோமு எதிரில் இல்லாவிட்டால், அவருக்கு எதுவுமே ஓடாது. சதா, “சோமு, சோமு” என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். பெற்ற பிள்ளை என்பார்களே, அதைப்போல இருந்தான் சோமு அவருக்கு. 18 அவர் இறப்பதற்கு ஒருவாரம் முந்தித்தான் அகஸ்மாத்தாகக் கங்காபாய் தன் கணவனுடன் சாத்தனூர் வந்திருந்தாள். சாம்பமூர்த்தி ராயருக்கு அப்போது போலீசில் உத்தியோகம் ஆகியிருந்தது. அவருக்கு லீவில்லை என்று மறுநாளே கிளம்பி விட்டார். ஆனால் தன் தகப்பனார் மனமொடிந்து உடம்பு மிகவும் பலஹீனமாக இருப்பதை எண்ணிப் பின் தங்கினாள் கங்காபாய். ரங்க ராவ் இறந்துவிட்ட செய்தி கேட்டுச் சாத்தனூர் வந்த சாம்பமூர்த்தி ராவ், வேலைக்குத் திரும்பிப்போக மனம் இல்லாமல், ‘இருந்த ஆஸ்தி போதும், அதைச் சரிவரக் கவனித்துக்கொண்டால் சௌகரியமாக வாழலாம்' என்று தீர்மானித்து வேலையை ராஜீநாமாச் செய்துவிட்டுச் சாத்தனூரிலேயே தங்கி விட்டார். ரங்க ராவின் கணக்குப்படி ஆஸ்திகள் குறைந்துவிட்டனவே தவிர ஊராரின் கணக்குப்படி சாம்பமூர்த்தி ராயருக்குச் சற்று அதிகமாகவே ஆஸ்தி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சீரும் சிறப்புமாகக் குடித்தனம் செய்யப் போதிய ஆஸ்தி இருந்தது. 19 சற்றேறக்குறைய இதே சமயத்தில் தான் இருக்கும் வள்ளியம்மைக்கும் உடம்புக்கு வந்துவிட்டது. உள்ளூர்ப் பரிகாரியின் மாத்திரைகளுக்கும், சூரணங்களுக்கும், கஷாயங்களுக்கும் அவள் உடம்பு தேறவில்லை. சாம்பமூர்த்தி ராயரும் கங்காபாயும் கும்பகோணத்து டாக்டரை வரவழைத்து வைத்தியம் செய்தால் சரியாகப்போய் விடலாமோ என்று எண்ணினார்கள். கும்பகோணத்து டாக்டர் வந்தார். ஏதோ ரத்தத்திலே சர்க்கரை ஜாஸ்தியாக இருக்கிறது என்றும், ஜுரம் தணியாது என்றும், கடைசியில் பிரக்ஞை இழந்து இறந்தே விடுவாள் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மருந்தும் என்னவோ கொடுத்துவிட்டுப் போனார். இருக்கிற வரையில் சரியாகப் பார்த்துக் கொள்வதுதான் சிலாக்கியம் என்றும் சொல்லிவிட்டுப் போனார். நாற்பத்தேழு நாட்கள் படுத்த படுக்கையாகவே கிடந்து விட்டு வள்ளியம்மை யாருடனும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உயிர் துறந்தாள். அப்பொழுது அவளுக்கு வயசு நாற்பதுக்குள்தான் இருக்கும். சாம்பமூர்த்தி ராயரின் செலவிலே அவளுடைய கடைசிக் காரியங்கள் எல்லாம் ஒழுங்காகச் சற்று ஆடம்பரமாகவே நடந்தன. மேட்டுத் தெருவிலே வசித்தவர்கள் வேறு யாருக்கும் அதற்குமுன் அந்தமாதிரிக் கொட்டும் முழக்கும் மேளமும் ஆர்ப்பாட்டமும் நடந்ததில்லை என்று சொல்லிக் கொண்டார்கள் ஜனங்கள். 20 வள்ளியம்மை படுத்த படுக்கையாக விழுந்த இருபத்தோராவது நாளிலிருந்து அவள் பிரக்ஞையில்லாதிருந்தாள். அவள் நன்றாக இருந்தபோதும், படுக்கையில் விழுந்து விட்டபோதும், பிரக்ஞை இழந்து விட்டபோதும், உதவி செய்வதற்கு அவளுடைய சிநேகிதி ஒருத்தி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். மேட்டுத் தெருவிலே பக்கத்து வீட்டுக்காரி; பாப்பாத்தி அம்மாள் என்று பெயர். பாப்பாத்தி அம்மாளுக்கு வயசு இருபத்திரண்டு இருபத்து மூன்று இருக்கும். சோமுவைவிட மூன்று நான்கு வயசு பெரியவள். ஒரு குழந்தை பெற்றெடுத்தவள் அவள். கணவன் குடிகாரன். மேட்டுத் தெருவிலே யார்தான் குடிகாரன் இல்லை? கூலிக்கு வண்டியோட்டிப் பிழைத்து வந்தான். பாப்பாத்தி அம்மாள் நல்ல நிறமும், கட்டுமஸ்தான தேகமும், ‘கரு கரு’வென்ற கண்களும், சுருண்டு சுருண்டு அடர்ந்திருந்த தலைமையிரும் உடையவள். பார்க்க அழகாயிருப்பாள். எப்போதும் யாருடனும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள். வள்ளியம்மை படுத்த படுக்கையாகக் கிடந்தபோது அடிக்கடி சோமுவுடன் அவன் வீட்டிலே தனியாக இருக்கும் பாக்கியம் கிடைத்தது பாப்பாத்திக்கு. சின்னப் பையன் என்று அதுவரையில் சோமுவைப்பற்றி எண்ணியிருந்த பாப்பாத்தி புதுக் கண்களுடன் அவனைப் பார்க்கத் தொடங்கினாள். அவன் தன்னைப் பார்த்த பார்வையிலிருந்து அவன் விஷயம் அறியாதவன், ‘கன்னி’ கழியாதவன் என்பதை அறிந்துகொண்டாள். அதைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டாள். சோமு திடமான சரீரமும் வலுவும் உள்ளவன். வசீகரமான தோற்றமும் பெற்றிருந்தான். சாப்பாட்டுக்குச் சிறிதும் கவலையின்றிச் சாப்பிட்டு, நாள் பூராவும் ஓடியாடி வேலை செய்து, வாலிபக் கட்டும் மெருகும் பெற்றிருந்தான். இருபதாவது வயசை எட்டிக் கொண்டிருந்தான். நல்ல வயசு, நல்ல தோற்றம், பணங்காசும் சற்றுத் தாராளமாகவே கிடைத்துக் கொண்டிருந்தது. பாப்பாத்தியம்மாள் அவனை அடையத் திட்டம் போட்டாள். சாமர்த்தியசாலியான பெண்ணால் செய்து முடிக்க முடியாத காரியம் என்ன? 21 பெண் இன்பத்தை முதல் முதலாகச் சோமு அந்தப் பாப்பாத்தியிடம் நுகர ஆரம்பித்தான். இது ஆரம்பமானது வள்ளியம்மைக்குப் பிரக்ஞை தப்பியதற்கு மறுநாளுக்கு மறுநாள். அதற்குப்பிறகு பாப்பாத்திக்கும் சோமுவுக்கும் தொடர்பு, பிணைப்பு, நாளுக்குநாள், நாழிகைக்கு நாழிகை பலப்பட்டது. வள்ளியம்மை போனபின் தடை எதுவுமே இல்லை. மேட்டுத் தெருவிலே மிகவும் சகஜமான காரியங்கள்தாம் இவையெல்லாம். மேட்டுத் தெருவிலே பிறந்து மேட்டுத்தெருக் குணதிசயங்களுக்கு ஏதோ ஓரளவு விலக்காக இருந்தான் என்பதனால் மேட்டுத்தெருக் குணங்கள் சிறிதும் இல்லாது போய்விடும் என்று சொல்லிவிட முடியுமா என்ன? சோமு பல விஷயங்களில் மேட்டுத்தெருக்காரனாகவே கடைசிவரையில் இருந்தான். 22 இதுவரையில் லேசாகக் கல்பனையில் மட்டுமே பெண்ணாசை கொண்டு கல்பனைக் கடலில் நீந்திக்கொண்டிருந்த சோமு உண்மைக் கடலின் கரைகளை எட்டிவிட்டான். பணத்தாசையைப் போலப் பெண்ணாசையும் அவன் வாழ்க்கையிலே இனி இடைவிடாமல் ஆட்சிசெலுத்த இருந்தது. 23 வெளிப்படையாக அவ்வளவாகத் தெரியவில்லையே தவிர சோமுவின் மனசிலே பெண்ணாசை பாப்பாத்தியம்மாள் மூலம் தோன்றி உரம் பெற்றுக் கொண்டிருந்தது. ஸ்திரீ என்று புடவை கட்டிக்கொண்டு எவள் எதிர்ப்பட்டாலும் அவளை நிர்வாணமாகக் கற்பனை செய்து பார்க்கும் சக்தியை மனசிலே போற்றி வளர்த்துக் கொண்டிருந்தான் சோமு. இரவு பகல் சிந்தனை இதுதான். இந்த விஷயத்திலே எவ்வளவு தூரம் அவனுக்குத் துணிவு இருந்தது என்பதை ஒரு சிறிது உதாரணத்தால் புரியும்படி சொல்லலாம். அவனுடைய பழைய யசமானனின் பெண்ணும், புது யசமானனின் மனைவியுமான கங்காபாயைப் பற்றிக்கூட அவன் இந்த மாதிரிக் கல்பனை செய்யத் துணிவு கொண்டான். பழைய சோமு எங்கே? புதிய இந்தச் சோமு எங்கே? ஆனால் அவன் அதிருஷ்டம் எப்படியோ இந்தக் கல்பனையையும் சிந்தனைகளையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக நடித்துக்கொண்டிருந்தான். அதற்குத் தேவையான தெம்பும் சக்தியும் இருந்தன அவனுக்கு. தேவைக்கு, நடைமுறையில், பாப்பாத்தி இருந்தாள். நாளடைவிலே பாப்பாத்தியைப் போலவே இன்னும் நாலைந்து பேரும் சோமுவுக்குச் சிநேகிதமானார்கள். 24 இந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்டுத் தானோ என்னவோ, சாம்பமூர்த்தி ராயர் தம் பொறுப்பை உணர்ந்து, சோமு எப்படி யானாலும் தம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட முற்பட்டார். குடியானத் தெருவிலிருந்து ஒரு முதலியார்ப் பெண்ணைப் பரிசம் பேசிக் கல்யாணம் செய்வித்தார். அந்தப் பெண்ணின் தாயாரும் வள்ளியம்மையைப்போல இளம் பருவத்தில் பல புருஷர்களுடன் கூடி வாழ்ந்தவள் என்பதால் குடியானத் தெரு முதலியார்ப் பையன்கள் யாரும் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இல்லை. பெண் என்னவோ நல்ல பெண் தான். பார்ப்பதற்கும் சுமாராக இருந்தாள். பதினேழு வயசு நடந்துகொண்டிருந்தது. பரிசப்பணம் எல்லாம் தாமே கொடுத்து இருநூறு ரூபாய் வரையில் செலவு செய்து சோமுவுக்கு அவனுடைய இருபத்து நாலாவது வயசிலே கல்யாணம் செய்து வைத்தார் சாம்பமூர்த்தி ராயர். மேட்டுத் தெருவிலே, கறுப்பமுதலியும் வள்ளியம்மையும் குடித்தனம் நடத்திய அதே வீட்டில், சோமு முதலியும் அவன் மனைவி மீனாச்சியும் குடித்தனம் நடத்தத் தொடங்கினார்கள். 25 குடித்தனம் என்னவோ சரியாகத்தான் நடந்தது. ஆனால் மனைவி என்று ஒருத்தி, மீனாச்சி என்கிற பெயருடன் வீட்டுக்கு வந்துவிட்ட காரணத்துக்காகச் சோமு பாப்பாத்தியையும் அவளைப் போன்றவர்களையும் தேடிப் போவதை நிறுத்தி விடவில்லை. அவர்களிடைய இருந்த சிநேகிதம் அவன் கல்யாணத்துக்குப் பிறகு பலப்பட்டதே தவிரக் குறையவில்லை. பாவம்! மீனாச்சி என்ன செய்வாள்! சகித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வழியறியாமல் தவித்தாள். ஒரு நாள் தன்னையும் மதிக்காமல் பாப்பாத்தியை வீட்டுக்கு அழைத்து வந்து இரவு பூராவும் அவளுடன் குலாவுவதைக் கண்டபின் மீனாச்சிக்கு ஆத்திரம் பொங்கி வழிந்தது. மறுநாள் நேரே கங்காபாயிடம் போய் அவள் காலில் விழுந்து அழுதாள். விஷயத்தைச் சொன்னாள். கங்காபாய்தான் என்ன செய்வாள்? “ஐயாவைவிட்டுச் சொல்லச் சொல்றேன் போ!” என்றாள். ஐயா சொன்னதன் பலன் மீனாச்சிக்கு அன்று திட்டுகளும் வசவுகளும் அடிகளும் உதைகளும் ஏராளமாகக் கிடைத்தன. அவ்வளவுதான்! சோமு தன் வழியே போய்க் கொண்டிருந்தான். யாரும் குறுக்கிடுவதை அவன் விரும்பவில்லை பொறுப்பதாகவும் இல்லை. 26 போதாக்குறைக்குக் குடிக்கவும் தொடங்கிவிட்டான். அது எப்பொழுது யாரால் எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. பாப்பாத்தியின் மூலமாகத்தான் குடிப்பழக்கம் ஏற்பட்டது தன் கணவனுக்கு என்று மீனாச்சி குற்றஞ்சாட்டியது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் சோமுவைக் குடிப்பழக்கம் பற்றிக்கொண்டது. குடி வெறியிலே மீனாச்சியைக் காரணமில்லாமலே போட்டு அடித்து உதைத்து ஹிம்சிப்பதும் தினசரிக் காரியம் ஆகிக் கொண்டிருந்தது. பாப்பாத்தியையோ அவளைப்போன்ற வேறு ஒருத்தியையோ வீட்டுக்கு அழைத்து வருவது தினசரிக் காரியம் ஆகிக் கொண்டிருந்தது. பாவம்! மீனாச்சி என்ன செய்வாள்? அழுதாள்! ஓயாமல் அழுதாள். மேட்டுத் தெருவுக்கு ஏற்காத பெண் அவள். நடப்பதை எல்லாம் ஒன்றுவிடாமல் கங்காபாயிடம் போய்ச் சொல்லி ‘அழுஅழு’ என்று அழுதாள். ‘மனிதன் இப்படி மாறுவானா? அன்றிருந்த சோமு எப்படி, இன்றிருக்கும் சோமு எப்படி?’ என்று எண்ணித் துயருற்ற கங்காபாயும் மனங் கலங்கினாள். 27 சோமுவைக் கல்யாணம் செய்துகொண்டு ஒன்பது வருஷங்கள் ஆனபிறகு ஒரு நாள் மீனாச்சி ஒரு பிள்ளையைப் பெற்று வைத்துவிட்டு, ஒன்பது வருஷங்கள் அழுத சிரமமும், பிள்ளை பெற்ற சிரமமும் தாங்காமல் இறந்துவிட்டாள். சற்றேறக்குறைய அதே சமயம் இரண்டொரு மாசங்களுக்கு முன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு விதவையாகி இருந்த பாப்பாத்தியம்மாளைத் தன் இளங் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு என்கிற சாக்கில், சோமு தன் வீட்டிலேயே சேர்த்துக் கொண்டுவிட்டான். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் சோமுவும் பாப்பாத்தியும் கணவனும் மனைவியும் போலவே வாழத் தொடங்கிவிட்டார்கள். பாப்பாத்திக்குக் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. கட்டிய கணவன் மூலம் பெற்ற குழந்தையும் இரண்டு வருஷங்கள் வாழ்ந்து விட்டு இறந்துவிட்டது. மீனாச்சி விட்டுப்போன பிள்ளைத் தன் குழந்தையைப் போலவே கண்ணுக்குக் கண்ணாக சீராட்டிப் பாராட்டிச் செல்வமாகப் பார்த்து வந்தாள் பாப்பாத்தி. 28 குடிப்பதிலும், பெண்கள் விஷயத்திலும் சாத்தனூரிலே சோமுவின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சாம்பமூர்த்தி ராயர் வீட்டிலே அவனுக்குப் போதிய வேலை இல்லை. அவன் வேலை செய்ய வராமல் இருப்பதே நல்லது என்று கூடச் சொல்லத் தலைப்பட்டு விட்டார்கள். இருபது வருஷங்களுக்குமுன், “சோமு சோமு” என்று ஊரெல்லாம் புகழ்ந்தது. “பிச்சாண்டியைப் பிடித்துக் கொடுத்தவன்; ரங்க ராவ் குடும்பத்தின் அந்தரங்க வேலைக்காரப்பையன்” என்றார்கள். இப்பொழுதோ எல்லோரும் அவனைப்பற்றிக் கேலி செய்தார்கள். “தெரியாதா? கறுப்ப முதலி மகன் பின்னே எப்படி இருப்பான்?” என்று ஏளனம் செய்தார்கள். 29 கங்காபாய்க்குக்கூட அவனிடம் அநுதாபம் இல்லாமல் போய்விட்டது. ஒருநாள் அவள் தன் கணவனிடம், “இனிமேல் அவனை நம்ப வீட்டுக்குள்ளே விடறதே சரியில்லை என்றுதான் தோன்றது” என்றாள். “ஏன்?” என்றார் சாம்பமூர்த்தி ராவ். “நேற்றுச் சாயங்காலம் அவன் குடித்துவிட்டு என்னைப் பார்த்த பார்வை இப்பொழுது நினைத்துப் பார்த்தால்கூட எனக்குப் பயமாக இருக்கிறது. அவனை இனிமேல் வீட்டிலே வைத்துக் கொள்வது சரியில்லை. நமக்கும் ஆபத்து, நம் குழந்தை குட்டிகளுக்கும் ஆபத்துத்தான்” என்றாள் கங்காபாய். இருபது வருஷங்களில் அவள் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகி இருந்தாள். மூத்த பிள்ளைக்கு வயசு பதினாறு பதினேழு இருக்கும்; இளைய பிள்ளைக்குப் பன்னிரண்டு; பெண்ணுக்கு வயசு ஏழு. இந்தக் குழந்தைகளின் தாய் என்கிற பொறுப்பை உணர்ந்து பேசினாள் கங்கா. “நானும் அவனுடைய போக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றாகத்தான் இல்லை. ஆனால் என்ன செய்யலாம் கண்டித்துப் பிரயோசனம் இல்லையே!” என்றார் சாம்பமூர்த்தி ராவ். அவர் எப்பொழுதுமே சாது. தவிரவும் அவரால் எதையுமே அழுத்தமாகச் சொல்ல முடியாது. சோமுவிடம் அவருக்கு ஏராளமான அனாவசியமான அநுதாபம் இருந்தது. கங்காபாய், “சாத்தனூர்க் கடைத்தெருவிலே ஒரு கடைவைத்துத் தரவேண்டும் என்று எங்கப்பாவை அவன் வெகு நாளைக்கு முன் கேட்டுக் கொண்டிருந்தான். பலசரக்குக் கடை ஒன்று வைத்துத் தர எவ்வளவு செலவாகும்?” என்று விசாரித்தாள். “ஆயிரம் ரூபாய் போட்டால் போதும்; நல்ல கடையாக வைத்துத் தந்துவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார் சாம்பமூர்த்தி ராவ். “அவன் எங்கப்பாவுக்குச் செய்திருப்பதற்கு ஆயிர ரூபாய் ஒரு பிரமாதம் இல்லை. கொஞ்சம் கூடப்போனாலும் பாதகமில்லை. அவனுக்கு என்று ஒரு கடை ஏற்பாடு செய்து கொடுத்து விடுங்கள். கருத்தாகக் கடையைப் பார்த்து நடத்திக்கொண்டு பிழைத்தால் பிழைக்கட்டும். இல்லையானால் எப்படியாவது போகட்டும். நமக்கும் அவனுக்கும் இனிச் சம்பந்தம் இல்லை என்று இருந்துவிடலாம்” என்று சொன்னாள் கங்காபாய். “நீ சொல்றது சரி. நம்மேல் எதுவும் பிசகில்லை என்று ஆகிவிடும்” என்றார் சாம்பமூர்த்தி ராவ். சோமுவுக்கு ஒரு கடை ஏற்பாடு செய்துதர முனைந்தார் சாம்பமூர்த்தி ராவ். 30 சாம்பமூர்த்தி ராவ் ஒரு லக்ஷ்யவாதி. அவர் எந்தக் காரியத்தையுமே, யார் காரியத்தையுமே கருதத்தாகச் செய்வார். எடுத்துக்கொண்ட காரியத்தில் தயங்கமாட்டார். பணம், காசு என்கிற லக்ஷ்யமே கிடையாது அவருக்கு. வெள்ளை மனசு. சோமுவுக்குக் கடை வைத்துத் தருகிற காரியத்திலே முழு மனசுடன் ஈடுபட்டார். வாடகைக்கு இடம் கிடைத்தால் போதாது என்று விலை கொடுத்தே கடைத் தெருவில் நல்ல கடை ஒன்று வாங்கிக் கொடுத்தார். ஆயிரம் ஆயிரத்திருநூறு ரூபாய்வரையில் முதல் போட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தார். முதலில் கொஞ்ச நாள் போட்டுப் புரட்ட என்று இருநூறு ரூபாய் கையில் பணம் கொடுத்தார். சுபயோக சுபமுகூர்த்தத்திலே சோமசுந்தர முதலியாருடைய மளிகைக் கடை, சாத்தனூர்க் கடைத் தெருவிலே திறக்கப்பட்டது. முதல் நாள் பூராவும் சாம்பமூர்த்தி ராயரே சோமுவுடன் இருந்து என்ன என்ன காரியங்களை எப்படி எப்படி நடத்தவேண்டும் என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். 31 தனக்கென்று ஒரு கடை ஏற்பாடாகப்போகிறது என்று அறிந்த நாள் முதலே சோமு புதுமனிதன் ஆகிவிட்டான். கடை ஆரம்பிப்பதற்குப் பத்து நாட்கள் முன்னதாகவே கள்ளுக்கடைப் பக்கம் போவதை அவன் நிறுத்தி விட்டான். ஆனால் பாப்பாத்தி அம்மாள் மட்டும் அவன் வீட்டிலேயே தான் தங்கியிருந்தாள். அவள் தன் பிரியத்தைச் சோமுவிடம் வைத்து விட்டாள். அவனை விட்டுப் பிரிவதாக இல்லை அவள். அவளை அடித்து விரட்டுவது சாத்தியமில்லை என்று அறிந்தவன் போலச் சோமுவும் ஒரு தரம் முயன்றபின் சும்மா இருந்துவிட்டான். ஒரு கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற ஆசை அடி நாட்களிலேயே சோமுவுக்கு ஏற்பட்டது தான். எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு அந்த ஆசை, கனவு, லக்ஷ்யம் பலித்திருந்தது. கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்வதைத் தவிர வாழ்க்கையிலே வேறு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன என்பதையே அவன் மறந்துவிட்டான். அப்படி மறப்பது அவனுக்குச் சாத்தியமாக இருந்தது என்பதுதான் விசேஷம். குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டான். பாப்பாத்தியைத் தவிர வேறு பெண்களுடன் பழகுவதையும் எப்படியோ நிறுத்திவிட்டான். பெண்களைப்பற்றிக் கனவுகள் காண்பதைக்கூட நிறுத்தி விட்டான்! வியாபாரமும், வியாபாரத்தின் மூலம் சம்பாதிப்பது என்பதும் அவன் லக்ஷ்யங்களாயின. தினத்தில் அறுபது நாழிகை நேரமும் இதேதான் சிந்தனை அவனுக்கு. அதிருஷ்டசாலிதான் சோமு. வேலையிலே இவ்வளவு ஈடுபாடுள்ளவன் முன்னுக்கு வராமல் இருக்க முடியுமா? 32 மீண்டும் சாத்தனூர் வாசிகள் சோமுவைப் பற்றி மதிப்புடன் பேசத் தொடங்கினார்கள். “சோமு சாதாரண ஆசாமி இல்லையப்பா!” என்றார்கள் சிலர். “மேட்டுத்தெருப் பயலிடம் புதுமையான எதையும் காணாவிட்டால் ரங்க ராவ் அவனை அங்கீகரித்துச் செய்ததை எல்லாம் செய்திருப்பாரா?” என்றார்கள் சிலர். “சாம்பமூர்த்தி ராவ் எதற்காக இந்த ஆளுக்குப் பணம் கொடுத்து எல்லாம் செய்கிறார்?” என்று புதுத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் சந்தேகத்துடன், விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு கேட்டார்கள். ஆனால் சாம்பமூர்த்தி ராவ் தம்முடைய ஆப்த நண்பரான ஒருகரை சீனிவாசையரிடம், “என்னவோ தெரியவில்லை; நம்ப சோமுவின் வாழ்க்கையைப் பாருங்கள். நல்ல பையன்; நடுவில் கொஞ்சநாள் கெட்டலைந்தான்; மீண்டும் எப்படியோ சரிப்பட்டுவிட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒருகரை ஐயர், “கடவுளின் வழிகள் அனந்தம். மனிதனுக்குப் புரியாதவை பார்க்கலாம்” என்றார். இந்த வேதாந்தத்துக்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது சோமுவின் வாழ்க்கை. 33 கடையிலே அப்படி ஒன்றும் பிரமாதமாக ‘ஓஹோஹோ’ என்று லாபம் வந்துவிடவில்லை. ஆனால் எல்லாம் திருப்திகரமாகவே நடந்துவந்தன. தினசரி கிடைக்கிற லாபத்திலே ஒரு பங்கு எடுத்துத் தனியாக மீதம் பிடித்து வைப்பது என்று மீதம் பிடித்தான். தபாலாபீஸ் ஸேவிங்ஸ் பாங்கில் பணம் கட்டிவந்தான். நாணயமாக வியாபாரிகளிடம் நடந்துகொள்ளவும் வாங்க வருகிறவர்களிடம் மரியாதையாகப் பேசவும் பழகிக்கொண்டான். வியாபார தந்திரங்கள் பூராவும் சுலபத்திலேயே அவனுக்குப் படிந்தன. எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டதைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்தினான். இரண்டோர் ஆங்கில போதினிகளையும், பாட புஸ்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு தானாகப்படிக்கத் தொடங்கினான். மேட்டுத் தெருவிலிருந்த தன் வீட்டைச் செப்பனிட்டு, போனது வந்ததெல்லாம் சரிபார்த்துப் புதுக்கினான் சோமு. 34 கடை வைத்த நாலைந்து வருஷங்களுக்குள்ளாகவே செட்டும் கட்டுமாக வியாபாரம் செய்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கண்டுவிட்டான் சோமு. ஒரு நாள் அவன் சாம்பமூர்த்தி ராயரிடம் போய்க் கடைக்காக அவர் போட்ட முதல் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட முயன்றான். அவர் திருப்பி வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். “உன் செல்வம் நன்றாக விருத்தியடைந்து மேலும் மேலும் செழிக்க வேண்டும்” என்று ஆசீர்வதித்து அனுப்பினார். கங்காபாய்க்கும் அவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பும்போது சோமுவின் கண்களில் நீர் துளித்திருந்தது. அவர்களுடைய கண்களிலும் நீர் துளித்திருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. 35 அதற்குள் சோமுவினுடைய பையன் நடராஜனுக்கு வயசு ஐந்து நிறைந்துவிட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேளம் முதலியன கொட்டி, பையனுக்குப் புது வேட்டி உடுத்தி, வாத்தியார் ஐயாவுக்கும் சோமன் ஜோடி கொடுத்து, பள்ளிப் பையன்களுக்கெல்லாம் பொறி கடலை கை நிறையக் கொடுத்து, அவனைப் பள்ளிக் கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தான். நடராஜன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த சமயத்திலே சுப்பிரமணிய ஐயருடைய மாடிப் பள்ளிக்கூடம் மறைந்து விட்டது. சுப்பிரமணிய ஐயர் இறந்துவிட்டார். அவருடன் பள்ளிக்கூடமும் போய்விட்டது. இப்பொழுது நடராஜன் சேர்ந்த பள்ளிக்கூடம் போர்டு மிடில் ஸ்கூல். அதற்கென்று தனிக்கட்டிடம் ஊரின் மேலண்டைக் கோடியில் இருந்தது. தன் பையனுடன் முதல்நாள் சோமுவும் பள்ளிக்கூடம் போனான். அந்தப் பள்ளிக்கூடத்திலே இருநூறு பேர் வாசித்துக் கொண்டிருந்தார்கள். ஏழு உபாத்தியாயர்கள், மாசம் முதல் தேதி முதல் தேதி சம்பளம் வாங்கிக்கொண்டு பையன்களைப் படிப்பிப்பதற்கென்று ஏற்பட்டிருந்தார்கள். பையன்களில் சிலரைத் தனியாகக் கூப்பிட்டு அவர்களுடன் பேசினான் சோமு. பிறகு உபாத்தியாயர்களுடன் அவர்களுக்குச் சரி சமானமாக உட்கார்ந்து கொண்டு ஆங்கிலமும் தமிழும் கலந்த ஒரு மணிப் பிரவாளத்திலே பேசினான். சுப்பிரமணிய ஐயரையும் அவருடைய மாடிப் பள்ளிக்கூடத்தையும் பற்றிச் சிலாகித்துப் பேசினான். ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கார்த்வெயிட் ரீடர்களைப் போன்ற சிறந்த சாதனம் வேறு இல்லை என்று உபாத்தியாயர்களுக்கு உபதேசம் செய்தான். ஆனால் அந்த உபாத்தியாயர்களில் பலருக்குக் கார்த்வெயிட் ரீடர்களைப் பற்றி எதுவும் தெரியாது. அப்படி ஒன்று இருந்தது என்று கூடத் தெரியாது. மாடிப் பள்ளிக்கூடத்து நிழலில் தங்கி ஒரு நாள் சுப்பிரமணிய ஐயரிடம் அகாரணமாகத் தான் பிரம்படி பட நேர்ந்ததை ஹாஸ்யம் ததும்பச் சொன்னான் சோமு. மிடில் ஸ்கூல் தலைமை உபாத்தியாயரும் மற்ற உபாத்தியாயர்களுங்கூடச் சிரித்தார்கள். ஆனால் அவர்கள் மனசுக்குள்ளே சோமுவைப் பற்றி நல்லபிப்பிராயம் இல்லை. ‘காலிப்பயல்! ஏதோ சோமன் ஜோடி வாங்கிக் கொடுத்துவிட்டால் அவன் சொல்கிற கதைகளை எல்லாம் நான் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான்’ என்று எண்ணினார் தலைமை உபாத்தியாயர். ‘ராயர் வீட்டு வேலைக்காரனாக இருந்த பயல் கையிலே ரெண்டு காசு சேர்ந்தவுடனே அட்டகாசம் பண்ணி ஆரம்பித்து விடுகிறானே!’ என்று எண்ணினார்கள் மற்றவர்கள். சோமு போன பிறகு அவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் முதல் உதவி உபாத்தியாயர் சொன்னதுபோல, “மளிகைக் கடைக்காரனுடன் சண்டைபோட்டுக் கொள்ளுவானேன்? எப்பவாவது சமயத்தில், கையில் பணமில்லாத போது சாமான்கள் கேட்டால் கொடுப்பான். அதைக் கெடுத்துக் கொள்வானேன்?” என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். தவிரவும் சாத்தனுரிலே சோமுவினுடையதுதான் பெரிய மளிகைக்கடை. |