உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் 4. சர்மாவின் மரணம் மதுராம்பாளுக்கு மனசு என்னவோ திக்கென்றது. முன்னறைக்குள் எட்டிப் பார்த்தாள். அண்ணா படுக்கையில் உட்காராமல் தனியாக ஒரு பெட்ஷீட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு, அதன்மேல் காலை மடக்கிக் கொண்டு யோகாசனத்தில் வீற்றிருப்பவர் போல உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவள் பயம் அதிகரித்தது. தன் கணவனை எழுப்பி அழைத்து வர உள்ளே பாய்ந்து ஓடினாள். இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு அப்புறம், “ஏன் அண்ணா? கூப்பிட்டாயாமே!” என்று கேட்டுக் கொண்டு பாதி மூடிய கண்களுடன் முன்னறைக்குள் வந்தார் வெங்கடராமையர். அவருக்குத் தூக்கம்; அப்படி அகாலத்தில் கூப்பிட்டது பற்றிக் கோபம் வேறு. தவிரவும் அப்பாவை எழுப்புகிற சாக்கில் ராஜம் அவர்மேல் விழுந்து புரண்டு ஏகப்பட்ட சப்தம் செய்து தொல்லை கொடுத்து விட்டாள். இருந்தாலும் அவர் மனைவி வந்து, “அண்ணா கூப்பிடறார். எனக்கு மனசு என்னவோ பண்ணுகிறது” என்று சொன்னதும் எழுந்து அவசரமாகவே வந்தார். அகாலத்தில் காரணம் எதுவும் இல்லாமல் அப்படிக் கூப்பிடமாட்டார் அண்ணா என்று அவருக்குத் தெரியும். “மணி தூங்கறானா? அவனையும் எழுப்பிக் கூட அழைச்சிண்டு வாயேன்!” என்று கிருஷ்ணஸ்வாமி சர்மா சொல்லி வாய்மூடுமுன் தூங்கி வழிந்து கொண்டிருந்த மணியையும் மதுராம்பாள் பளிச்சென்று அங்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். அவள் உள்ளம் என்னவோ, ஏதோ என்று பதைத்தது போக இப்பொழுது நிச்சயப்பட்டுவிட்டது. அவள் பின்னறையில் பதுங்கி விடாமல் முன்னறையிலேயே நின்றாள். அண்ணா விஷயமே இப்படித்தான். யாரிடமும் எதையும் வாய்விட்டுச் சொல்லாமல் கடைசி நிமிஷம் வரையில் காத்திருந்து சிரமப்படுவார். எல்லாவற்றையும் - நல்லதோ கெடுதலோ - எல்லாவற்றையும், மனசிலேயே அடக்கி அமுக்கி வைத்துக் கொள்வதென்பது அவருக்கு வெகுநாளைப் பழக்கமாகிவிட்டது. ஆனால், யாரிடம் அவர் எதைச் சொல்வது? அவர் மனுஷ்யரென்று யார் இருந்தார்கள்? உடன் பிறந்த தம்பி இருந்தாரே தவிர, அவரால் அண்ணாவுக்கு ஒருவித லாபமும் இல்லை. தம்பி ஆபீசில் வேலை பார்த்த நேரம் தவிர, பாக்கி நேரம் எல்லாம் சினிமா, கூத்து, நாடகம், நண்பர்கள் என்று போயிவிடுவார். அது என்ன அரட்டைக் கச்சேரியோ யார் கண்டார்கள்? தினம் நண்பர்களுடன் பேசுவதற்கு அப்படி என்னதான் விஷயம் இருக்குமோ! பாதி நாள் இரவில் வீடு திரும்புவதே சந்தேகம். டவுனிலே நண்பர்கள் அறையிலே தங்கினாலும் தங்கிவிடுவார். இப்படிப்பட்ட தம்பியால் அண்ணாவுக்கு என்ன பிரயோசனம்? அவர் இன்று வீட்டில் தங்கியிருந்தது கூட ஏதோ தெய்வாதீனந்தான். அண்ணாவையோ, மனைவியையோ, குழந்தையையோ கவனிக்கக் கூட அவருக்குப் பொழுது இல்லை. மதுராம்பாளாக அண்ணாவுக்கென்று ஏதாவது கவனித்துச் செய்தால்தான் உண்டு. பேதைப் பெண்; அப்படி அவள் என்ன செய்து விட முடியும்? அண்ணாவின் மனைவி இறந்து எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. முத்தண்ணாவும் தாயாரும் ஆயிரத்து இருநூறு மைல்களுக்கு அப்பால் எங்கேயோ குக்கிராமத்தில் இருந்தார்கள். அவசரம் என்று தந்தி அடித்தால் கூட, வந்து சேர மூன்று நாள் பிடிக்கும்! அவருக்குத் தங்கை ஒருத்தி - விதவை, வாழ்க்கையிலே வேறு எவ்விதமான பந்தமும் இல்லாதவள் 0 இருந்தாள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு எங்கேயோ தனியாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் வந்து இருக்கலாம். இந்த அண்ணாவிடம் அவளுக்கு அலாதியான பிரியமும் உண்டு. ஆனால், அவள் ஒரு வக்கிரம். நல்லது எதுவுமே செய்வதென்பது அவள் உடம்புக்கு ஒத்து வராது. முத்தண்ணாவின் பிள்ளை சிவராமனும், தங்கையின் பெண் பவானியுமே அண்ணாவுக்கு மிகவும் ஆப்தமானவர்கள். அவர்கள் எப்போதாவது கல்கத்தா வந்துவிட்டால், கிளப்புக்கும் கடைக்கும் போவதை மறந்து விட்டு அவர்களுடன் சளசளவென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார். இந்த அண்ணாவுக்கு இப்படியும் பேசத் தெரியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். சிவராமன் விஷயத்திலே மதுராம்பாளுக்கும் நல்ல அபிப்பிராயந்தான். ஆனால், பவானி ஒரு விதத்தில் அம்மாவுக்குப் பெண் என்று தான் சொல்ல வேண்டும். சிவராமனுக்கும் பவானிக்கும் அடுத்தபடியாக அண்ணாவுக்கு வேண்டியவர்கள் இந்தக் குழந்தைகள் தாம்: ராஜமும் மணியும்தான். “என்னன்னு கேளுடா மணி” என்று தன் பிள்ளையைத் தூண்டினாள் மதுராம்பாள். “ஒன்றும் இல்லை” என்று மென்று விழுங்கினார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. இரண்டு நிமிஷ நேரம் மௌனமாக இருந்தார். “என்ன அண்ணா? உடம்பு ஏதாவது சௌகரியமில்லையா? ஏதாவது பண்ணுகிறதா என்ன?” என்று பதைக்கப் பதைக்கக் கேட்டார் வேங்கடராமையர். “உடம்புக்கு எதுவுமில்லை. ஆனால்...” “டாக்டரை வேணுமானால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்களேன்” என்றாள் மதுராம்பாள். “டாக்டர் வேண்டாம். இந்தச் சந்தர்ப்பத்தில் இப்போது நம்மிடையே யாரும் அந்நியம் வரவேண்டாம்” என்றார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. “என்ன சந்தர்ப்பம் அப்படி? என்ன அண்ணா, நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியல்லையே?” என்று பதறிய குரலில் சொல்லிக் கொண்டே வேங்கடராமையர் அண்ணாவுக்கு அருகில் உட்கார்ந்து அவர் கையைப் பிடித்துப் பார்த்தார். கை சூடாக இல்லை; ஜில்லென்றுதான் இருந்தது. நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தார். நெற்றியிலே கை வைக்க முடியாதபடி ஒரே உஷ்ணமாக இருந்தது. “டாக்டருக்கு போன் பண்ணிவிட்டு வர்றேன்” என்று சொல்லி எழுந்தார் வேங்கடராமையர். “வேண்டாம்; இப்பொழுது யாரும் வேண்டாம். நான் சொல்றத்தைக் கேளு. வெங்குட்டு, நான் சொல்றேன்னு நெனச்சுக்காதே. இதெல்லாம் சொல்றத்துக்கு எனக்கு இனிமே வேறே சந்தர்ப்பம் கிடைக்காது. சொல்றேன்; சித்தே கேளு” என்றார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. “இப்படி என்னிக்குமில்லாமே பேசறயே; எனக்குக் கஷ்டமாக இருக்கே! என்ன அண்ணா இது?” என்று அழுகையின் ஆரம்பத்தால் தழுதழுக்கும் குரலில் சொன்னார் வேங்கடராமையர். மதுராம்பாளும் தன்னையும் அறியாமலே கண்ணீர் பெருக்கினாள். கண்ணீர் ஏன் வந்தது, எப்போது வந்தது என்று அவளுக்கே தெரியாது. குழந்தைகள் இரண்டும், “பெரியப்பா, பெரியப்பா” என்று துக்கத்தால் தடித்த குரலில் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு கூப்பிட்டன. என்றுமில்லாமல் பதில் சொல்லாமலும் வாரி அணைத்துக் கொள்ளாமலும் இருந்த பெரியப்பாவின் போக்கு, புது மாதிரியாக அன்று இருந்ததால் குழந்தைகளும் ஏமாந்து திகைப்புற்றன. இதே சமயத்தில் சிதம்பரத்தில் சிவராமன் தன் சிற்றப்பாவையும் அவருடன் வைத்தியநாதனின் மேளக் கச்சேரி கேட்டதையும் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். சுவாமிமலையில் இதே சமயத்தில் சானுப்பாட்டி ஏற்றி வைத்த குத்துவிளக்கு அணைந்து முகம் புகையத் தொடங்கியது! சென்னையில் பெண்கள் ஹாஸ்டலில் ஓர் அறையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பவானி விழித்துக் கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அவள் ‘ரூம்பேட்’, “என்னடி பவானி?” என்று கேட்டவுடன் தூக்கம் பூராவும் கலைந்தது. “என்னவோ தெரியவில்லை, தூக்கம் வரவில்லை. எழுந்து படிக்கப் போகிறேன்” என்று சொல்லி எழுந்தாள். கல்கத்தாவிலே மாதா கோவில் மணி நாலு அடித்தது. கிருஷ்ணஸ்வாமி சர்மா மேலும் சொன்னார்: “இதோ பார் வெங்குட்டு, நீ இனிமேல் முத்தண்ணா மனசு கோணும்படியாக எதுவும் செய்யாதே - நடந்து கொள்ளாதே. உன்னைப் பற்றி முத்தண்ணாவுக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை என்று எனக்குத் தெரியும். முத்தண்ணா உன்னுடைய நன்மையையே நாடுகிறார். தன்னலம் கொஞ்சமும் இல்லாதவர் என்று உனக்குத் தெரியும். தெரிந்திருந்தும் அவர் மனது கோணாதபடி நடந்து கொள்ள உன்னால் முடியவில்லை. இனி எது செய்வதானாலும் அவர் சொல்கிறபடியே கேட்டுச் செய். அதுதான் உனக்கு நல்லது. அவர் சொல்படி கேட்பதனால் உனக்கு நஷ்டமும் வராது, கஷ்டமும் வராது.” வேங்கடராமையருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டார். மதுராம்பாள் விசும்பி விசும்பி அழவே தொடங்கி விட்டாள். தாயார் அழுவதைக் கண்டு குழந்தைகளும் அழத் தொடங்கின. மதுராம்பாளைப் பார்த்துக் கொண்டே கிருஷ்ணஸ்வாமி சர்மா குழந்தைகளை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, “அழாதே! எதற்கு அழறே?” என்றார். பிறகு, “வெங்குட்டு, நீ மணியைச் சிவராமனிடம் ஒப்பித்துவிடு. படிப்பு முதலிய எல்லா விதத்திலுமே அவன் சரியாகப் பார்த்துக் கொள்வான். நான் இருந்தால் எப்படிப் பார்த்துக் கொள்வேனோ அப்படிப் பார்த்துக் கொள்வான். அதுதான் நல்லது. சிவராமனின் மனைவி சிறிசு. அவளையும் சிவராமனையும் கொஞ்சநாள் கொண்டுவந்து வைத்துக் கொள். உன் மனைவியிடம் இருந்தால் சிவராமனின் மனைவி கெட்டிக்காரியாகி விடுவாள். தவிரவும் அவளுக்குச் சொந்த மாமியார் இல்லை. அக்காவோ கட்டுப்பெட்டி.” வேங்கடராமையர் கண்களில் ஜலம் தேங்க, “அண்ணா! அண்ணா!” என்று கதறினார். மதுராம்பாளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிற்று. அவளுக்கு எப்பொழுதுமே தன் மைத்துனன் ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. அவளால் அழக் கூட முடியவில்லை. பேசவும் வாய் வரவில்லை அவளுக்கு. மாரிலே தாங்க முடியாத ஒரு பெரிய பாரத்தைத் தூக்கி வைத்தது போல் இருந்தது. மணியும் ராஜமும் பெரியப்பாவுக்கு இரு புறத்திலும் நெருங்க உட்கார்ந்து கொண்டு நடப்பது இன்னதென்று அறியமாட்டாமல் தங்கள் பெற்றோரின் முகத்தையும் பெரியப்பாவின் முகத்தையும் ஆச்சரியத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே ஆச்சரியமே உருவாக உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று மணிக்கு ஞானோதயம் ஆயிற்று. “எங்கே பெரியப்பா போகப் போறே நீ!” என்று கேட்டான். ராஜத்துக்கும் உடனே புரிந்து விட்டது. “நானும் வர்றேன் பெரியப்பா. அந்தப் பெரிய பெரியப்பா கிட்டத்தானே, நானும் வர்றேன்” என்றான். சென்ற வருஷம் ஜோக்காக ரெயிலில் அந்தப் பெரிய பெரியப்பாகிட்டே சுவாமிமலைக்குப் போய்விட்டு வந்த ஞாபகம் அவளுக்கு. பெரியப்பா மீண்டும் சுவாமிமலைக்குத்தான் போகப் போகிறார். தானும் மணியும் உடன் போகலாம் என்று சந்தோஷத்துடன் நினைத்தாள். கிருஷ்ணஸ்வாமி சர்மா புன்சிரிப்புடன் இரு குழந்தைகளையும் நெருக்கி அணைத்துக் கொண்டார். முதுகைத் தடவிக் கொடுத்தார். மறுபடியும் பேச ஆரம்பித்தார். “எனக்கு இப்போது ஒரே ஒரு குறைதான் வெங்குட்டு. முத்தண்ணா இந்தச் சமயம் இங்கே இல்லாதது தான் என் குறை. ஆனால், அவர் இங்கிருந்தால் ரொம்பவும் கஷ்டப்படுவார். ஆகவே, அவர் இல்லாததும் நல்லதே. அக்காவும் கஷ்டப்படுவாள். என்ன பண்ணுவது? கஷ்டப்படப் பிறந்தவள் அவள். என்னாலேயே அவள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். நடு வயசிலே வளர்ந்த ஒரு பிள்ளையை இழந்து கஷ்டப்பட்டாள். கிழ வயசில் என்னையும் இழந்து கஷ்டந்தான் படுவாள். விதி; வேறு என்னதான் சொல்வது? பவானியும் சிவராமனும் இங்கிருந்தால் எனக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். ஆனால், அவர்கள் மட்டும் இங்கிருந்தால் என்னால் சுலபமாக, நிஷ்காம்யமாக உயிர் விட முடியாது. வாழ்க்கையிலே எனக்குள்ள பற்றுதல் சமீப காலத்தில் அதிகரித்திருப்பதற்குக் காரணம் சிவராமனும் பவானியுமே.” மறுபடியும் ஒரு நிமிஷம் அங்கே மௌனம் நிலவியது. மதுராம்பாளின் விம்மல்களையும் பெருமூச்சுகளையும் தவிர, அங்கே வேறு எவ்விதச் சப்தமும் இல்லை. மறுபடியும் கிருஷ்ணஸ்வாமி சர்மா பேசத் தொடங்கினார். “நீ உன் குடும்பத்தை இன்னும் கருத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். சொல்லலாமா, வேண்டாமா என்று இவ்வளவு நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொல்லலாம்; அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று சொல்லுகிறேன். உனக்கு வாய்த்திருப்பவள் ஸ்திரீயல்ல - அவளைப் பெண்களின் தெய்வம் என்று சொல்ல வேண்டும். அவள் மனசும் முகமும் கோணாமல் வைத்துக் கொள்ள வேண்டியது உன் கடமை. அதை அறிந்து கொள்ளாமலே நீ இன்னமும் இருப்பது தவறு. அக்காடி... ஹும்... சிரமமாக இருக்கு. எனக்கு இன்னொரு டம்ளர் ஜலம் கொண்டு வந்து தாயேன்... லக்ஷ்மி, ஹும்” என்றார். சுவர் ஓரமாக நகர்ந்து சுவரிலே சாய்ந்து கொண்டார். வேங்கடராமையர் தடுமாறிக் குழம்பிய குரலில், “அண்ணா! நான் போய் டாக்டரை அழைச்சிண்டு வர்றேனே அண்ணா?” என்றார். “டாக்டர் வந்து என்னடா பண்ணுவார் வெங்கிட்டு. டாக்டர் வரத்துக்குள்ளே எல்லாம் முடிந்துவிடும். எனக்குத் தெரியாதா? கவலைப்படாதே. ஹும்... மனிதன் என்று பிறந்துவிட்டால் இறக்கத்தானே வேண்டும்!... எனக்காக நீங்கள் யாரும் அழுது மனசைப் புண்படுத்திக் கொள்ளவேண்டாம். சிவராமனே வந்து கருமங்களை எல்லாம் செய்யட்டும். அது வரையில் என் சவத்தை...” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ஜலம் கொண்டு வர உள்ளே போயிருந்த மதுராம்பாள் வருவதைக் கண்டு அத்துடன் நிறுத்தி விட்டார். பாதியில் நிறுத்தப்பட்ட அந்த வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, வேங்கடராமையர் அப்படியே செய்கிறேன் என்கிற பாவனையில் தலையை அசைத்தார். மதுராம்பாள் கொண்டுவந்த ஜலத்தைக் கையில் வாங்கிக் கொண்டு, அவளையே உற்றுப் பார்த்தார் கிருஷ்ணஸ்வாமி சர்மா ஒரு விநாடி. அந்தப் பார்வை அவள் அதுவரையில் அவருக்குச் செய்தது எல்லாவற்றிற்கும் நன்றி அறிவிப்பது போலவும், கடைசியாகப் போய்வருகிறேன் என்று விடைபெற்றுக் கொள்வது போலவும் இருந்தது. ஜலத்தைக் குடித்துவிட்டு, “சிரமமாயிருக்கு படுத்துக்கறேன் சித்தே!” என்று விரித்திருந்த துப்பட்டியில் தெற்கே தலைவைத்துப் படுத்தார், கிருஷ்ணஸ்வாமி சர்மா. தன் தம்பியின் மனசில் இருந்ததை அறிந்தவர் போல, “புரோகிதருக்குக் கூட இப்போ சொல்லியனுப்ப வேண்டாம். எல்லாம் சிவராமன் வந்த பிறகே ஆகட்டும்” என்றார். மணியும் ராஜமும் அவருடைய இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “பெரியப்பா! பெரியப்பா!” என்று அழுகையும் ஏக்கமும் கலந்த குரலில் நிமிஷத்திற்கு ஒரு தரம் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். நடந்து கொண்டிருந்த விஷயம் என்ன என்று அறிந்து கொள்ளப் போதிய வயசாகவில்லை; தவிரவும் அவர்கள் அதற்கு முன் சாவைச் சந்தித்து அறியாதவர்கள். ஆனால், அவர்களுடைய குழந்தை உள்ளங்களிலே ஓர் ஏக்கம் வந்து குடியேறிவிட்டது. “அண்ணா! ஒருவேளை... டாக்டர் வந்து...” என்று ஆரம்பித்தார் வேங்கடராமையர். “யமன் காத்துக் கொண்டிருக்கும் போது டாக்டர் வந்து என்னடா பண்ணுவான்? டாக்டரும் வேண்டாம், புரோகிதனும் வேண்டாம். என் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் நானே செய்துவிட்டேன். பிராயச்சித்தத்துக்குப் புரோகிதன் உதவி எனக்குத் தேவையில்லை” என்றார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. “இருந்தாலும் டாக்டர்...” “போடா, பொம்மனாட்டியாட்டமா!” என்று கேலி செய்து நகைத்தார் சர்மா. மதுராம்பாள் அழுது அழுது சிவந்த கண்களுடன் அண்ணாவையே பார்த்துக் கொண்டு நின்றாள். டாக்டர் வந்து பிரயோசனம் இல்லை என்று அண்ணா சொன்னால் பிரயோசனம் நிச்சயமாக இராதுதான். இருந்தாலும் மனுஷ்ய உள்ளம் ஆசையை அடக்கப் பழகுவதில்லையே! வேங்கடராமையர் எப்போதுமே அப்பாவி. என்ன செய்வது என்று அறியாமல் கைவிரல்களை ஒவ்வொன்றாக வளைத்து நிமிர்த்திச் சொடுக்கிக் கொண்டு நின்றார். அந்த மௌனத்திலே சர்மாவினுடைய மூச்சுகள், பெருமூச்சுகள், பயங்கரமாகச் சப்தித்தன. அவருடைய கண்கள் படபடவென்று கிடுகிடென்று மூடி மூடித் திறந்தன. “வெங்குட்டு வெங்குட்டு... எங்கே இருக்கே? இப்படிக் கிட்ட வா... வா...” என்றார். சர்மா. அவர் குரல் மெல்லியதாக மிகவும் பலஹீனமாக ஒலித்தது. அவர் பார்வை எப்படியோ ஒரே விநாடியில் குன்றிவிட்டது. அவர் முகத்திலே எவ்விதமான சலனமும் காணவில்லை. “அண்ணா, அண்ணா, இதோ இருக்கேனே, அண்ணா, அண்ணா” என்று கூப்பிட்டுக் கொண்டே அண்ணா அருகில் நகர்ந்தார் வேங்கடராமையர். “அண்ணா!” என்று அலறிக் கொண்டே மதுராம்பாள் அருகில் வந்தாள். ஆனால், அவர்களுடைய குரல் கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் காதில் விழவே இல்லை. அவர் காதுகளில் மறுக்க முடியாத ஓர் அழைப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. வேறு ஓர் ஒலியும் இனி அவர் காதில் விழாது. சர்மா இன்னும் பிரக்ஞை இழக்காமல் கண்களைத் திறந்து பார்க்க முயன்றார்; முடியவில்லை. ஆனால், ஒரு தரம் திறந்த பின் அவை திறந்தபடியே நின்றன. அவற்றில் ஒளியில்லை, காட்சியில்லை. மணியையும் ராஜத்தையும் அணைத்துக் கொண்டு தடவிக் கொடுக்கப் பார்த்தார். கைகள் நகர மறுத்தன. வெகு சிரமப்பட்டு அவர், மணியை அணைக்கத் தூக்கி வலது கை தொப்பென்று துப்பட்டிமேல் விழுந்தது. சாதாரணமாக லேசாக வலித்திருக்கும் அப்படி விழுந்தால். ஆனால், அப்பொழுது வலி தோன்றவில்லை. வேங்கடராமையர் தம் கைகளால் அந்தக் கையைப் பிடித்துக் கொண்டார். “அக்காடியோ!” என்றார் சர்மா மிகவும் ஹீனமான ஸ்வரத்தில். அவர் உதடுகள் அசைந்தன. ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று வேங்கடராமையரும் மதுராம்பாளும் அவர் உதடுகளண்டை காதை வைத்துக் கேட்க முயன்றார்கள். “போறேன், போறேன் வெங்கிட்டு, போறேன்... இதோ வந்துட்டேன்... சிவராமன்... ராஜம்... அண்ணா!” என்று மெல்லிய குரல் அவர் முச்சுடன் வெளிவந்தது. ஒரு தரம் வேகமாகத் தலை ஆடியது. மீண்டும் சிறிது நேரம் நிச்சலமாக இருந்தது. மீண்டும் உதடுகள் அசைந்தன. மதுராம்பாளும் வேங்கடராமையரும் அவர் என்ன சொல்லுகிறார் என்று மீண்டும் கவனித்தார்கள். “என் உயில்... உயில்...” என்று சர்மா சொன்னது அவர்கள் காதில் விழுந்தது. உயில் எழுதி வைத்திருப்பதாகவோ அல்லது உயில் எழுத விரும்புவதாகவோ அவர் சொன்னார். அவர் காதண்டை வாயை வைத்து, “உயில் எழுத வேண்டுமா? வக்கீலை அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார் வேங்கடராமையர். “அ...க்...கா...டி...யோ!” என்று பெருமூச்சுடன் கலந்த பதில்தான் கிடைத்தது. அதற்குமேல் கிருஷ்ணஸ்வாமி சர்மா ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. அவருடைய பேச்சும் மூச்சும் நின்றுவிட்டன. “பெரியப்பா என்னோடே பேச மாட்டேங்கிறாளே!” என்று உரக்க அழ ஆரம்பித்தாள் ராஜம். அவளை அணைத்துக் கொண்டு, “அண்ணா! அண்ணா!” என்று அலறினாள் மதுராம்பாள். |