முதல் பாகம்

5. காலேஜ் பெண்

     சென்னையில் பெண்களுக்கென்று ஏற்பட்ட கல்லூரியை ஒட்டிய ஹாஸ்டலின் மாடி ஹாலில் உள்ள கடிகாரம் ‘டங், டங், டங், டங்’ என்று மணி நாலு அடித்தது. கொல்லன் பட்டறைச் சம்மட்டி அடிகள் போல இந்த நாலு ‘டங்’குகளும் இரவின் அமைதியைக் கெடுத்துக் கொண்டு எழுந்து அலைமோதி ஓய்ந்தன. கடிகாரம் ‘டிங் டாக்’ என்று பின்னர் பேச ஆரம்பித்தது. அடிமேல் அடியாக அடித்து ஒலித்தது.

     ஹாலுக்குப் பக்கத்து அறையில் துயின்றூ கொண்டிருந்த இரண்டு பெண்மணிகளை இந்தச் சப்தம் விழித்துக் கொள்ளச் செய்தது. இரண்டு பேரும் ‘உம் உம்’ என்று முனகிக் கொண்டே புரண்டு புரண்டு படுத்தார்கள். லேடீஸ் ஹாஸ்டல் கட்டில்கள் அவர்களுடைய முனகல்களுக்கு இசைவாக முணுமுணுத்தன.

     இருவரில் ஒருத்தி சற்று அதிகமாகவே புரண்டு படுத்தாள்; சற்று அதிகமாகவே முனகினாள். “ஏண்டி பவானி... பவானி! என்னடி அது!” என்று மற்றவள் கேட்டாள்.

     “ஒன்றும் இல்லை... உம்...” என்று பவானி பதில் அளித்தாள். சற்று நேரம் கழித்து இன்னும் இரண்டு தரம் புரண்டு புரண்டு படுத்த பின், “என்னவோ தூக்கம் கலைந்து விட்டது. படுக்கையில் தூக்கமில்லாமல் படுத்துக் கிடப்பதை விட எழுந்து ஏதாவது படிக்கலாமா என்று தோன்றுகிறது” என்றாள். எழுந்து ‘ஸ்விட்சை’ப் போட்டு விளக்கை ஏற்றினாள்.

     “படிக்கவா போறே நீ?” என்று கேலியாகக் கேட்டுச் சிரித்து விட்டு இழுத்து முகத்தையும் போர்த்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள் பவானியின் சிநேகிதி.

     விளக்கடியில் ஈஸிசேரில் சாய்ந்தபடியே பவானி கையை நீட்டி மேஜை மேல் கிடந்த புஸ்தகங்களில் அகப்பட்டதைக் கையில் எடுத்தாள். அகப்பட்டது ‘அல்ஜீப்ரா’. அது தானாகவே திறந்த இடத்தில் படிக்க உத்தேசித்தாள் பவானி. திறந்த இடம், ‘பைனோமியல் தீரம்’- அது என்னவோ நதி தீரம் என்று எண்ணி விடுகிறவர்களும் நம்மிடையே உண்டு, என்பதற்காக அதைக் கொக்கிகளுக்குள் போட்டிருக்கிறது.

     காலையில் நாலு மணிக்கு எழுந்து ‘பைனோமியல் தீரம்’ என்கிற பகுதியைப் படித்து விட முடியும் என்று உட்கார்ந்த தீரப் பெண்மணிதான் சிவராமனின் அத்தை மகள் பவானி. கல்யாணமான ஒரு வருஷத்திற்குள் கணவனை இழந்து விட்டு வேறு வழியில்லாமல் படிப்பில் ஈடுபட்டவள். பி.ஏ. வகுப்பில் சென்னை ஸ்திரீகள் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறவள். அவளுடைய முக்கிய பாடம் பௌதிகம். இரண்டாம் பாடம் கணக்கு. அந்தக் கணக்கிலே உள்ள பல பகுதிகளிலே ஒன்று ‘அல்ஜீப்ரா’. அந்த ‘அல்ஜீப்ரா’விலே ஓர் அத்தியாயம், ‘பைனோமியல் தீரம்’ என்பது. பள்ளியில் ஏழெட்டு வருஷங்களும், கல்லூரியில் நாலு வருஷங்களும் படித்து, பி.ஏ. பட்டம் பெற்ற பின் இந்தப் பவானி என்ன செய்யப் போகிறாள்? யார் கண்டது? அவளுக்கே தெரியாது!

     அல்ஜீப்ராவிலே, பைனோமியல் தீரத்திலே, அத்தியாயத்தின் தலைப்பைத் தவிர வேறு எதையும் படிக்கவில்லை பவானி. புஸ்தகத்தைப் பிரித்துக் கையில் வைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

     சாதாரணமாக காலேஜ் பெண்களின் சிந்தனைகளுக்கும் பிற பெண்களின் சிந்தனைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்க வேண்டிய நியாயம் இல்லைதான். இருந்தாலும் இன்று தமிழ்ப் பெண்களின் காலேஜ் பெண்கள் என்கிற ரகம் பல விதங்களில் தனி ரகமாகவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பழைய லக்ஷ்யங்களை எல்லாம் இழந்து விட்டவர்கள் அவர்கள். புது லக்ஷ்யங்கள் இன்னும் தோன்றியபாடில்லை. படிப்பு என்பது ரத்தம் செத்த லக்ஷ்யமே தவிர வேறு அல்ல. கணவன், குடும்ப வாழ்க்கை என்கிற லக்ஷ்யங்கள், படிக்கும் போது, கேலிக்கு மட்டுமே ஏற்றவை என்று அவர்கள் அங்கீகரித்து விடுகிறார்கள். பாடங்களைப் பற்றி உத்ஸாகமற்ற பேச்சும், ‘லவ்’ என்கிற உலகத்திலேயே இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி மேலுக்கு உத்ஸாகம் ததும்பும் பேச்சுந்தான் அவர்கள் கண்டதெல்லாம். வேறு எந்த விஷயத்திலும் அவர்கள் மனம் செலுத்துவதில்லை.

     சாதாரண காலேஜ் பெண்களுக்குப் பவானியை ஒரு விதத்தில் விலக்கு என்று தான் சொல்ல வேண்டும். அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனைகளை அலை மோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலிலே எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன. அவளுடைய விவாக நினைவும், கணவன் இறந்த நினைவும் ஒரு சிற்றாறு. அவளுடைய அம்மான்சேய் சிவராமனும் அவளுடைய லக்ஷ்யங்களும் சிந்தனைகளும் ஒரு சிற்றாறு. சின்ன மாமா கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் அவர் வாழ்க்கையும் பேச்சும் உத்ஸாகமும் பணமும் வியாபாரமும் ஒரு சிற்றாறு. அக்கா சானுப்பாட்டி ஒரு பெரிய கிளை நதி - அவளையும் சிற்றாறு என்று சொல்லி விடக் கூடாது? பள்ளியிலும் பின்பு கல்லூரியிலும் அவள் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வோர் உபாத்தியாயரும் ஒரு சிற்றாறு. சில சமயங்களில் அவை தெளிவில்லாமல் கலங்கி ஓடிய சிற்றாறுகள் தாம். எனினும் தனித் தனி ஆறு தான். எவ்வளவு குறுகியதாயினும் தனி ஆறுதான்! ஒவ்வொரு நாளும் புதுப் புது அளிபவங்களாக அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தன. புதுப் புது உணர்ச்சிகள் பிறந்து கொண்டிருந்தன. இந்த அல்ஜீப்ராவும் பைனோமியல் தீரமுங்கூடப் புது அளிபவங்கள் தாம்; புது உணர்ச்சிகள் தாம்; புதுச் சக்திகள் தாம்.

     ஆனால், இருபதாவது வயது தாண்டிக் கொண்டிருந்த யுவதிக்கு, அழகிக்கு, அல்ஜீப்ராவும் பைனோமியல் தீரமும், காலேஜ் வாழ்க்கையும் போதுமா? அவள் ஆத்மா, அவள் உள்ளம், அவள் இருதயம் இவை, எட்டாத எதை எல்லாமோ எண்ணி எண்ணித் தவித்துக் கொண்டிருந்தன! அதிலே அதிசயப்பட ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

     ஈஸிசேரில் சாய்ந்து கிடந்த பவானிக்கு, ‘பைனோமியல் தீரம்’ இந்தச் சந்தர்ப்பத்தில் ஓடவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. என்றாவது ஒருநாள் ஓடிற்று என்றால்தான் உலகறிந்தவர்கள், பெண் உள்ளம் அறிந்தவர்கள் ஆச்சரியப்பட வேண்டும். அன்று அதிகாலையில் விழித்தெழுந்த பவானியின் சிந்தனைகள் வழக்கத்தை விட அதி மந்த கதியில் சென்று கொண்டிருந்தன. சிந்தனைகள் மந்த கதியில் சென்றன என்பது மட்டும் அல்ல. சிந்தனைகள் சாவு என்கிற தத்துவத்தைப் பின்பற்றித் தொடர்ந்தன.

     சாவு என்கிற தத்துவம் வெறும் தத்துவமாக இருக்கிற வரையில் அழகாகவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதை விடச் சிறந்த தத்துவம் மனித வாழ்விலே இல்லை என்பது நிச்சயமே! பிறந்ததெல்லாம் இறக்கத்தானே வேண்டும் என்று தத்துவமாகப் பகுத்தறிவை உபயோகித்து மறுக்க முடியாத ஓர் உண்மையை அழகாகச் சொல்லும்போது நன்றாகவே தான் இருக்கிறது. ஆனால், நெருங்கிய ஒரு நண்பனையோ பந்துவையோ சாவு தொட்டு விடும் போது இந்த அழகான தத்துவம் எவ்வளவு கோரமான அளிபவமாக மாறிவிடுகிறது?

     மனித உள்ளத்துக்கு மறதி என்ற ஒரு விதி ஏற்பட்டிருப்பது சாவு என்கிற இந்த அளிபவத்தின் கொடுமையை, கொடூரத்தை, வெப்பத்தைத் தணிப்பதற்கே தான் போலும்! ஆனால் ஞாபகங்கள்... ஞாபகங்கள் நித்தியமானவை. குழந்தைப் பருவத்திலே சாவின் நிழல் ஒருவனை எட்டித் தொட்டு விடுமானால், அந்த ஞாபகம் ஒருவன் செத்து மண்ணாகும் வரையில் மறைவதே இல்லை. மறதி என்கிற விதி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் உபயோகப்படுவதே இல்லை.

     சாவைப் பற்றிய சிந்தனைகள், எண்ணங்கள், பவானியின் மனசிலே நிறைந்து அலைமோதின.

     அவளுடைய பிரக்ஞை மலர்ந்து விரியத் தொடங்கும் காலத்திலே ஏற்பட்டது அவளுடைய முதல் சாவு அளிபவம். அப்போது அவளுக்கு வயசு ஐந்து அல்லது ஆறுதான் இருக்கும். ஆனால், அவள் தகப்பனாரின் சாவைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் பாதி நேரில் பார்த்ததும், பாதி பின்பு பலர் சொல்லிக் கேட்டதுமாகக் கலந்து அவள் மனசிலே வேரூன்றி விட்டன. ஆயுள் உள்ளவரையில் அவளால் அந்த அளிபவத்தை மறக்க இயலாது. எட்டு மாசங்கள் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையாகக் கிடந்து விட்டு மரித்தார் அவள் தகப்பனார். எட்டு மாசங்களில் இரண்டு மூன்று தடவைகளில்தான் பவானி ஆஸ்பத்திரிக்குச் சென்று தன் தகப்பனாரைப் பார்த்தாள். கடைசித் தடவையாகப் பார்த்தது அவர் இறந்த பின். எப்பொழுது அன்பு ததும்பத் தன்னை அழைத்து, அணைத்து உச்சிமோந்து விளையாடும் அந்த உடல், அசைவற்றுக் கிடந்ததைக் கண்டு பயந்து விட்டாள் குழந்தை பவானி. குழந்தைப் பருவம் தாண்டிப் பெரியவளான பிறகு கூட அந்தத் தோற்றம் பல தடவைகளில் கனவுகளில் அவள் கண்முன் தத்ரூபமாக வந்ததுண்டு.

     அதற்கு மறுவருஷமோ, அதற்கும் மறு வருஷமோ அவளுடைய அக்கா சாவித்திரியின் கணவன் இறந்தான். அந்தச் சாவையும் உடனிருந்து பார்த்தாள் பவானி.

     அதற்குப் பிறகு, குடும்பத்திலே தூர பந்துக்களும் நெருங்கிய பந்துக்களுமாகப் பலர் இறந்தார்கள். ஒன்றும் பவானியின் ஞாபகத்தில் தெளிவாக இல்லை. அவர்கள் சாவெல்லாம் பவானியின் கண்முன் நேர்ப் பார்வையில் நிகழாதவை. ஆகவே, அவை அவளை அவ்வளவாக தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

     இப்படி நிகழ்ந்தவற்றிலே முக்கியமானது அவளுடைய கணவனின் சாவுதான். கல்யாண ஞாபகம் எதுவும் அவளை அதிகமாகப் பாதிக்கவில்லை. ஏதோ நடந்தது, யாரோ ஒருவனுக்குத் தன் உடலும் உள்ளமும் சொந்தமாகி விட்டன என்று மட்டும் அவள் அறிந்திருந்தாள். அந்தக் கல்யாணச் சடங்கின் முழு அர்த்தமும் அவள் மனசில் பதியுமுன் அவள் கணவன் சென்னையில் ஒரு கோர விபத்தில் மாட்டிக் கொண்டு இறந்து விட்டான். அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது, என்ன நினைப்பது அந்தச் சாவைப் பற்றி என்று ஒன்றுமே பவானிக்கு இன்னமும் தெரியவில்லை. அதைப் பற்றி நினைக்காமலே இருப்பதுதான் நல்லது என்று அவள் எண்ணியதில் பிசகு எதுவும் இருந்ததாக அவளுக்கே தெரியவில்லை. யாரோ ஒருவன் - ஏழு மாசங்கள் அவள் கணவன் என்று இருந்தவன் - வாழ்ந்ததும் இறந்ததும் அவளை வெறும் கனவுகளாகவே தொட்டன. கனவையும் விட லேசாகவே தொட்டன.

     சென்னைக்கு வந்த புதிதில் ஒரு நாள் கல்லூரி மாணவர்கல் பலருடன் பவானியும் அவள் கணவன் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட இடத்தைத் தாண்டி நடந்து போக வேண்டியிருந்தது. அந்த இடத்தைப் பற்றிப் பத்திரிகையில் படித்ததும் பின்பு பலர் சொல்லக் கேட்டதும் அவளுக்கு ஞாபகம் இருந்தன. அந்த இடத்திலே கண்ணை ஒட்டிக் காலை வைக்கும் போது அவள் உடலையும் மனசையும் என்னவோ செய்தது; தலை சுற்றிற்று. கீழே விழுந்து விடுகிற மாதிரி தடுமாறினாள். “என்னடி இது!” என்று மற்ற மாணவிகள் கேட்டதற்கு ஏதோ ஒரு விதமாகப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டாள். அதற்குப் பிறகு, அவள் அந்தப் பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டு விட்டாள்!

     ஆனால், அவளுக்குக் கல்யாணமானதும் கணவன் இறந்ததும் கல்லூரியில் அவளுக்கு மிகவும் நெருங்கிய தோழிகளுக்குங் கூடத் தெரியாது. தெரிய வேண்டியது அவசியம் இல்லை என்றே பவானி நினைத்தாள். அவர்களும் அம்மாதிரியான பல ரகசியங்களை உடையவர்களாகவே இருப்பார்கள் என்கிற நினைவு அவளுக்கு ஏற்படும் போது, தன்னையும் அறியாமலே கண்ணீர் விடுவாள். இந்தக் கண்ணீர் - பிறர் துயரத்துக்காக அவள் விட்ட கண்ணீர் - அவள் துயரத்தை ஓரளவு துடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

     அவளுடைய மாமா பிள்ளை சிவராமனும், சின்னமாமா கிருஷ்ணஸ்வாமி சர்மாவுந்தான் அவள் உருக்குலையக் கூடாது, அவள் வாழ்வும் குலையக் கூடாது என்று அவளைப் பள்ளியில் சேர்த்தார்கள். சிவராமன் அவளுக்கு வெகு சிரமப்பட்டு ஆங்கிலமும் கணக்கும் சொல்லித் தந்தான். அப்படியும் எஸ்.எஸ்.எல்.சி. பரீக்ஷையில் முதல் தடவையில் அவள் தேறிவிடவில்லை. இரண்டாவது முறை பரீக்ஷைக்குப் போய்த் தேறினாள். ‘இன்டர்’ படிக்கும் போது, அவளுக்குப் படிப்பில் சிந்தனையும் கருத்தும் ஏற்பட்டு விட்டன. இன்டர் முதல் முறையிலே முதல் வகுப்பிலே நல்ல மார்க்குகளுடன் தேறினாள். பி.ஏ. வகுப்பு மாணவிகளில் அவளுக்கு நல்ல பெயர் - படிப்பிலும் சரி, நடத்தையிலும் சரி.

     கணவன் இறந்து இரண்டொரு வருஷங்களுக்குப் பிறகு பவானி வேறு ஒரு சாவுச் சமயத்தில் கூட இருந்தாள். அவளுடைய சின்னமாமா கிருஷ்ணஸ்வாமி சர்மா மனைவி தஞ்சை ஆஸ்பத்திரியில் பிரசவித்த போதும், அதற்குப் பின்னர் அவளுக்கு ஜன்னி வந்த போதும், கூடமாட இருந்து, எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டிய பொறுப்பு, பவானியின் தலை மேல் விழுந்தது. சானுப்பாட்டி உடனிருந்தாள். ஆனால், பவானியைப் போல எதையும் ஓடியாடிச் செய்ய அவளுக்குப் போதிய தெம்பில்லை. ஆகவே, வேளைக்கு வேளை ஆஸ்பத்திரி செல்வதும், இரவுகளில் ஆஸ்பத்திரியில் தங்குவதும் மற்றப்படி அம்மாமிக்குச் சுசுரூஷை செய்வதும் எல்லாம் சிறுமி பவானியின் பொறுப்பாகி விட்டன. எவ்வளவோ ஆசையுடன், சிரமத்தைச் சிறிதும் பாராட்டாமல் தன் வயசுக்கு மீறிய அறிவுடன் தான் எல்லாம் செய்தாள் பவானி. அந்தச் சாவு பவானிக்குக் கடவுள் இழைத்த அநீதி என்றே சொல்ல வேண்டும். சானுப் பாட்டியைத் தவிர, வீட்டிலே பவானிக்குத் துணை, கோவையில் கல்லூரியில் படித்து விட்டு லீவுக்குத் தஞ்சை திரும்பியிருந்த சிவராமன் தான். ஆஸ்பத்திரியில் அம்மாமி உயிர் நீத்த பின் அவள் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

     பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அது பவானியின் மடியிலே உயிர் நீத்தது. கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் மனைவியையும் குழந்தையையும் அப்படிக் கவர்ந்து கொண்டு செல்லும்படியாக அவர் - சர்மா, தன் சின்னம்மா - அப்படி என்ன தவறு செய்தார் என்று பவானி எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் அவளுக்குப் புரியவே இல்லை.

     சின்ன மாமி இறந்ததைப் பற்றி எண்ணியவுடன் பவானிக்கு வேறு ஒரு ஞாபகம் வந்தது. அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் சிவராமன் ஒரு கதை எழுந்தியிருந்தான். சொந்த விஷயம், நேரில் கண்ட விஷயம் என்பதனால் மட்டுமன்றி இலக்கிய பூர்வமாகவும் அந்தச் சிறுகதை மிகவும் சிறந்த கதையாகப் பவானிக்குத் தோன்றியது. அம்மாஞ்சி, தன் அம்மாஞ்சி, இப்படி எல்லாம் கதைகள் எழுதிகிறான் என்பது பற்றி மிகவும் பெருமையாக இருந்தது பவானிக்கு. அந்தக் கதையைப் பாராட்டிச் சிவராமனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று பவானி நினைத்தாள். அந்தக் கதையைப் படித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் தான் கடிதம் எழுதிய பாடில்லையே என்று ஞாபகம் வந்தது பவானிக்கு. ஆனால், சிவராமன் வேலையை விட்டு வந்த பிறகு சிதம்பரம் போகப் போகிறான் என்று பெரிய மாமா எழுதியிருந்தார். அவன் சிதம்பரத்தில் இருந்தானோ, சுவாமி மலையில்தான் இருந்தானோ நிச்சயமாகத் தெரிந்த பிறகு எழுதலாம் என்று எண்ணினாள் பவானி.

     அவன் சிதம்பரத்திலிருந்தால் அவனுக்குத் தான் கடிதம் எழுதுவதை அவன் வேட்டகத்தாரும் மனைவியும் தப்பாக எண்ணலாம். ஆகவே, கடிதம் எழுதாமல் இருந்ததே, இருப்பதே நல்லது; நேரில் பார்த்தால் சொல்லி விடுவதுதான் சரி என்று நினைத்தாள் பவானி. சிவராமனின் மனைவி ராஜம் நல்ல பெண் தான். அழகிதான். எழுதப் படிக்கத் தெரிந்தவள் தான். ஆனால், சிவராமனின் கதைகளை ரசிக்க, ரசித்துப் பாராட்ட அவளுக்கு அறிவு போதாது. அந்த ஒரு விஷயத்தில் சிவராமனைத் துரதிருஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். அறிந்த மனைவியாக வந்திருந்தால் சிவராமனின் துரதிருஷ்டம் வேறு எந்த ரூபத்தில் அவனைப் பாதித்திருக்குமோ, யார் சொல்ல முடியும்?

     ஓர் ஆழ்ந்த நீண்ட பெருமூச்செறிந்தாள் பவானி.

     சில நிமிஷ நேரமாகப் பவானியையே கவனித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த அவன் தோழி லக்ஷ்மி “என்ன, இன்றைக்குப் பெருமூச்சு மயமாக இருக்கு? காலைப் போதிலே ‘லவர்’ ஞாபகம் வந்து விட்டதோ?” என்றாள்.

     “யார் எனக்கு லவர்? உன் ‘லவர்’தான் சீதாராமன். அவனைப் பற்றி எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டு தூங்கமாட்டாமல் படுத்துக் கிடக்கிறாய் நீ; படுக்கை நொந்ததடி என்று! என்னைக் கேலி வேறு செய்ய வாயா உனக்கு?” என்றாள் பவானி.

     “நீ பெருமூச்செறிந்து விட்டு என்னைச் சொல்ல வந்து விட்டாயே! கெட்டிக்காரியடி நீ!” என்றாள் லக்ஷ்மி.

     “என்னவோ அம்மா எனக்கு இன்னம் லவர் என்று ஒருவனும் ஏற்படவில்லை.”

     “ஏற்படவில்லையே! ஏற்படாமல் எத்தனை காலம் இருக்குமோ என்று எண்ணித்தான் பெருமூச்சு விட்டாயோ அதைத்தான் சொல்லேன்?”

     இதை முழுவதும் கவனியாமலே மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள் பவானி.

     லக்ஷ்மி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, “நேற்றுக் கடிதம் வந்ததே, அது உன் காதலனிடமிருந்து வராமல் வேறு யாரிடமிருந்து வந்ததாம்?” என்று கேட்டாள்.

     பவானி இதற்குப் பதில் சொல்லவில்லை. “உம்” என்று உறுமிவிட்டுத் தன் சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தாள்.

     “காதலனிடமிருந்து வராவிட்டால் என்னிடங்கூட காட்டாமல் ரகசியமாகத் திரும்பத் திரும்பப் படித்துவிட்டுப் பெட்டியில் அப்படிப் பத்திரப்படுத்தி வைத்திருப்பாயா நீ?” என்றாள் லக்ஷ்மி.

     இதுகாறும் பவானியின் உள்ளத்திலே பெரிய கல்லாக, பாரமாக அழுத்திக் கொண்டிருந்த ஓர் ஏக்கத்தின் காரணம் சட்டென்று லக்ஷ்மியின் வார்த்தைகளால் பவானிக்கு விளங்கிற்று. அந்தக் கடிதம் - முதல் நாள் வந்த அந்தக் கடிதத்தின் மர்மமான செய்திதான், அவள் உள்ளக் கிளர்ச்சிக்குக் காரணம் என்று அந்த விநாடியில் அவளுக்குத் தோன்றியது.

     “அடி அசடே! அது என் மாமா எழுதிய கடிதமடி!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய்ப் பவானி, தன் பெட்டியைத் திறந்து அதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து வந்து மீண்டும் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு, மறுபடியும் ஒரு தரம் அதைப் படிக்கத் தொடங்கினாள்.

     ஆனால், அவளைப் படிக்க விடாமல் குறுக்கிட்டாள் லக்ஷ்மி. “மாமாவும் ஆச்சு! மருமானும் ஆச்சு! மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிறவா இல்லையோ?” என்றாள்.

     பவானி சிரித்துக் கொண்டே, “என் சின்ன மாமாவுக்கு வயது ஐம்பத்தைந்து” என்றாள்.

     “அப்படியானால் உனக்கு ஏற்றவராக ஒரு பிள்ளையைப் பெற்று வைத்திருப்பாள் உன் மாமி.”

     “அவருக்குப் பிள்ளையும் கிடையாது குட்டியும் கிடையாது. பாவம்! பெண்டாட்டியை அவர் இழந்து வருஷக் கணக்காக ஆய்விட்டது” என்றாள் பவானி.

     “பிள்ளை ஸ்தானத்திலே யாராவது ஒருவனை...”

     “நான் தான் அவருக்குப் பெண் மாதிரி! என் மூத்த மாமா பிள்ளை சிவராமன் தான் அவருக்குப் பிள்ளை மாதிரி.”

     “மாப்பிள்ளை மாதிரியில்லையா?” என்றாள் லக்ஷ்மி. உடனே எழுந்து வந்து, புடைவையைச் சரிப்படுத்திக் கொண்டு பவானியின் ஈஸிசேரண்டை நின்றாள். பவானியின் தலை மயிரைக் கையால் கோதி விட்டாள். குனிந்து பார்த்துச் சிரித்தாள். “ரகசியம் வெளியாகி விட்டதே! சிவராமன் தானே உன் சாய்ஸ்?” என்றாள்.

     “நான் அவனைத் தேர்ந்து கொள்வதற்கு முன்பே ஒரு பெண் அவனைத் தேர்ந்தெடுத்துக் கட்டிக் கொண்டு விட்டாள். அப்படி நான் சொல்வது கூடத் தவறு. அவனாக அவளைத் தேர்ந்தெடுத்தான் என்று சொல்வதுதான் பொருந்தும். அவள் அழகி; உன்னை விடக் கூட அழகி என்றால் பார்த்துக் கொள்ளேன்” என்றாள் பவானி.

     அவளையும் அறியாமலே பவானியின் குரலில் ஒரு சோகம் புகுந்து விட்டது. இதைக் கவனித்த லக்ஷ்மி இவ்விஷயம் பற்றி அதிகமாக விளையாடக் கூடாது என்று அறிந்து கொண்டவள் போலப் பேச்சை மாற்றினாள். “சின்ன மாமா அப்படி என்ன உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்? திருப்பித் திருப்பி நேற்றும் படித்தாய், இன்றும் படிக்கிறாயே ரகசியமாக? ஏதாவது முக்கியமான விஷயமா? என்னிடம் சொல்லக் கூடாத விஷயமானால் சொல்ல வேண்டாம்” என்றாள்.

     “அப்படி ஒன்றும் ரகசியமில்லை. நீதான் பாரேன் கடிதத்தை இந்தா” என்று கடிதத்தை எடுத்து லக்ஷ்மியிடம் கொடுத்தாள்.

     ஒரே ஒரு நீலக் கடிதத்தில் நடுவில் மணிமணியாகத் தமிழிலே ஏழெட்டு வரிகள் எழுதியிருந்தன.

     “சௌ. பவானிக்கு,

     ஆசீர்வாதம், நாளைத் தபாலில் உனக்கு ஒரு கடிதம் கிடைக்கும். அதை ஒரு விதத்தில் என் உயில் என்று சொல்லுவேன்; அது உன் கையில் கிடைத்துச் சரியாக ஒரு வருஷம் கழித்துப் பிரித்துப் பார். அதற்குள் அவசரப்பட்டுப் பிரித்து விடாதே. உனக்கு அனுப்பலாமா, சிவராமனுக்கு அனுப்பலாமா அதை என்று யோசித்தேன். எனக்கு மிகவும் வேண்டியவர்களான, நெருங்கியவர்களான உங்கள் இருவரையும் பற்றிய விஷயந்தான் அது. சிவராமனுக்கு அனுப்புவதை விட உனக்கு அனுப்புவதே நல்லது என்று எண்ணி அனுப்புகிறேன். நீ அதைப் பிரிக்கும் போது சிவராமனும் உடன் இருந்தால் நல்லது. இது விஷயத்தை அவனிடங் கூட இந்த வருஷ காலம் முடியும் வரையில் சொல்ல வேண்டாம்.

     மணி, ராஜம் சௌக்கியம். வேறு விசேஷம் இல்லை.

     -கிருஷ்ணஸ்வாமி சர்மா.”

     கடிதத்தைப் படித்து விட்டு உறையில் போட்டுப் பவானியின் கையில் கொடுத்தாள் லக்ஷ்மி. “புதுமாதிரியான புதிராக இருக்கிறதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றாள்.

     “இதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்!” என்றாள் பவானி.

     கடிதத்தை மீண்டும் பெட்டிக்குள் வைத்துவிட்டு பவானி தன் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள். கை கோத்தபடியே இருவரும் வெளியே ‘பால்கனி’க் கதவைத் திறந்து கொண்டு போனார்கள்.

     சந்திர ஒளி வெளியிட்டுக் கொண்டிருந்தது. எதிரே கடல் அலைகள் வெள்ளியாகவும் தங்கமாகவும் எழுந்து எழுந்து ஓய்ந்து கொண்டிருந்தன. கடலின் பேரிரைச்சல் மனித வாழ்க்கைக்குப் பின்னணி கீதமாக இசைந்து கொண்டிருந்தது. அந்த இசை சோகமானதா, ஆனந்தமானதா என்று யார்தான் சொல்ல முடியும்!

     கிழக்கு வெளுக்கத் தொடங்கி விட்டது.



சர்மாவின் உயில் : அட்டவணை 1-1 1-2 1-3 1-4 1-5