பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

12. அன்புக்கு மதிப்பூட்டும் பண்பாளர் நந்தமிழர்

     “நாளை காலையில் உங்கள் துதிவழிபாடுகள் முடிந்ததும் எங்கள் அரண்மனைக்கு வந்து செல்ல இயலுமா?” என்று பேரரசி விநாயமுடன் கேட்டதும் இவ்வேண்டுகோளுக்கே காத்திருந்ததைப் போல “வருகிறேன், நிச்சயமாக வருகிறேன்!” என்று சற்றுப் பரபரப்புடனேயே பதில் அளித்தார் ராஜகுரு. மன்னன் ஏன் இவருக்கு இந்தப் பரபரப்பு! என்று வியப்புறுவதைப் போல அவரை உற்றுப் பார்த்தார். அவர் மனதில் ஏதேதோ குழப்பங்கள்! குறிப்பாக மும்முடிக்கும் அந்த அந்நிய நாட்டு இளைஞனுக்கும் நடக்கவிருக்கும் வாட்போர்; எங்கிருந்தோ வந்திருக்கும் இளைஞன் தனக்கு அவன் மெய்க்காவலன் என்னும் விந்தை! சாவகன் அவனைக் கண்டதும் அடைந்துள்ள சினம்... இப்படியாக ஒன்று மாறி ஒன்று எழுந்த சிந்தனைகள் குழப்பங்களாகவே சுழன்றனவாதலால் தாயின் கேள்வியைப் பற்றியும் பரபரப்புற்றார் போலும்.

     இன்று குலோத்துங்கன் சிறந்த ராஜதந்திரமும், போர் திறமையும், உறுதியும் படைத்திருந்தவனாயினும், முன்பு சோழநாட்டுத் தலைமைக்கு மிகவும் இன்றியமையாத யுத்திகளைத் தனது தந்தையான ராஜேந்திரரைப் போன்று போதிய அளவு பெற்றிருக்கவில்லையென்பது பேரரசியின் எண்ணம். கடல் கடந்த நாடுகளிலும் சரி, உள்நாட்டிலும் சரி, சோழனிடம் மக்களிலும், பெருங்குடி தலைவர்களிலும் பெரும்பான்மையினருக்கு நம் தந்தையும் ஆதரவாக நின்று ஆவணசெய்யும் ஆற்றலும் அன்பும் இருந்தது உண்மைதான். எனினும் ஒரு சிலர், மனதில் பகைமையுணர்ச்சி கொண்டிருந்தனர் என்பதும் உண்மையே.

     இதனைக் குலோத்துங்கன் அறியாதவனில்லை. எனினும் இவற்றையெல்லாம் பெரிதெனப் பொருட்படுத்தினால் தன்னுடைய நிலைக்கு ஏதோ பெரிய எதிர்ப்பு உள்நாட்டில் உருவாகி இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டியதாகி விடும் என்று கருதி அலட்சியமாகவே இருப்பதாகவும் பேரரசி கருதினாள். இக்கருத்தின் அடிப்படையில்தான் எதையும் திட்டமிட்டாள் அம்மூதாட்டி. எனினும் பேரரசிக்குக் கவலை அவசியமில்லை. காரணம் காடவர்கோனும், கோவரையரும், நரலோகவீரனும், கருணாகரனும் பொறுப்பு மிக்க உறுதியும் எச்சரிக்கையும் கொண்டிராவிட்டால் சோழநாட்டின் தற்போதைய நிலை எத்தகையதாயிருக்கக்கூடும் என்று அவசியமில்லாமலே ஊகித்துப் பார்ப்பதற்கும் அஞ்சித் தவித்தார் அரசியார்!

     குலோத்துங்கருக்குப் பிறகு இந்த நாடாளும் உரிமையும் முறைமையும் கொண்டவனான மும்முடியிடமோ இதற்குத் தகுதி இருக்கிறதா என்ற ஐயப்பாடு பெருந் தலைவர்களிடையே எழுந்துவிட்டதையும் பேரரசி கண்டு வருந்தியதுண்டு. எனினும் இதே போன்றுதான் ஒரு காலத்தில் குலோத்துங்கனும் இருந்தான் என்னும் நினைவும் எழுவதுண்டு உடனடியாக!

     அம்மங்காதேவிக்கு இவன் ஒரே மகன் ஆதலால் ‘செல்லம்’ கொடுத்து வளர்த்துவிட்டாள் என்ற அவப்பெயர் கூட உண்டு அவளுக்கு! தாயார் வழிப்பாட்டனாரான ராஜேந்திரன் கீழ்நாடுகளின் இணையற்ற மாமன்னர் என்று அகிலமனைத்தும் பாராட்டுவதைக் காணக் கொடுத்துக் கேட்டு வந்த குலேத்துங்கனுக்கு அவ்வப்போது ஏன் தானும் அத்தகைய பெருமையை எய்தக் கூடாது? என்று விருப்பங் கொண்டதில் விந்தையில்லை. ஆனால் இந்த விருப்பத்தை நிறைவேற்ற எம்முயற்சியும் அவன் மேற்கொள்ளாமல் ஊர் சுற்றித் திரிந்தது கண்டு வருந்தியவர் அம்மங்காதேவி மட்டுமில்லை. அவர்தம் அருமைத் தந்தை ராஜேந்திர சோழ மன்னரும்தான்!

     சாளுக்கிய சோமேஸ்வரன் வேங்கியைப் பல முறையும் சோழர்களிடமிருந்து கைப்பற்ற ராஜேந்திரனின் இறுதி நாட்களில் முயன்ற கலையில் மனவேதனையும் பிராய முதிர்ச்சியால் கஷ்டங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. சோழமன்னர் ராஜேந்திரர் அம்மங்காதேவியிடம் அவளுடைய அருமைப் புதல்வனை குலோத்துக்கனைப் பற்றி அவனுடைய அலட்சிய சுபாவம், உறுதியின்மை, முரடர்கள் சகவாசம் ஊர் சுற்றும் தனம் ஆகியவை பற்றி வெகுவாக நொந்து கொண்டதுண்டு. தாய், மகனிடம் இவற்றைக் கூறி மனம் குடையும் போது ‘பார்க்கலாம் பொறுத்து! ஒரு காலம் வரும். நானும் எத்தகையவன் என்பதைச் சோழ நாட்டார் அறிந்து மதிக்க!’ என்று ஏதோ காலம் கருதிக் காத்திருக்கும் ஒரு ராணுவ சதுரனைப் போன்று கூறிவிடுவான்!

     ஆனால், மாமன்னர் ராஜேந்திரரும், குலோத்துங்கனின் குறைகளைப் பற்றி மட்டும் எவ்விதமாகக் கருதாது அவரிடம் என்ன நிறைவினைத் திறமையினைக் கண்டு எவ்வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறியவோ என்னவோ கடல் கடந்த நாடுகளில் உள்ள நிலையைச் சமாளிக்கும் மிகப் பெரிதான பொறுப்பான வேலையில் உதவியாயிருக்கும்படி அயல் நாடுகளுக்குக் கடல்நாடுடையார் பொறுப்பில் அனுப்பத் தீர்மானித்தார். பேரரசர் தீர்மானித்ததை அதாவது கடல்நாடுடையார் துணையில் தமது மகன் இருப்பதை அம்மங்காதேவி விருப்பத்துடன் வரவேற்று மகிழ்ந்தது கண்டு மனம் நிறைவு பெற்றார். ராஜேந்திரர் என்றால், வியந்து வெறுத்தது குலோத்துங்கன்தான்!

     தாம் காலமெல்லாம் காத்திருந்த, தமது திறமையையும் சக்தியையும் காட்டுவதற்குக் கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கெடுத்துவிடத் தவிக்கிறாளே தமது அன்னை என்று கூட நினைத்துப் பொறுமினார். ஒரு சர்வசாதாரணக் குடிமகனான கடல்நாடுடையார் தலைமையில் அரசகுலத்தானான தான் சேவை செய்வதா?

     கடல்நாடுடையார் தமது பதினாறாம் பிராயத்திலிருந்தே கடலோடிப் பயிற்சி பெற்றவர் மட்டும் அல்ல. தேர்ந்த அரசியல் சதுரர் என்றும் அந்நாளில் மதிக்கப் பெற்றவர். ராஜேந்திரர் தமது அந்திம காலத்தில், கடல் கடந்த நாடுகளின் நிலையைச் சமாளிக்கும் பொறுப்பினை மிக்க இளைஞரான கோவரையர் கையில் ஒப்படைத்தது பற்றிச் சோழ நாடே திகைத்தது. பெருந் தலைகர்வத்தினை பிரும்மாதிராயரின் உடன்கூட்டத்து அமைச்சரவை அச்சமுற்றது. கொடும்பாளூரார், காடவர், முத்தரையர், வேட்டரையர் போன்ற அரசகுல உறவு முறையினர் பலரும், பஞ்சநதி வாணரும், கோவரையரும் சோழமன்னர் பேராதரவைப் பெற்றவர்களாகத் தலைமைப் பொறுப்பேற்ற பெரும் தலைகளாக வளர்ந்து வருவதைக் கண்டு வேதனையுற்றனர். ஆனால் கடல்நாடுடையாரின் திறமையை நேரில் பலமுறையும் கண்டு தெளிந்த பின்னரே ராஜேந்திரர் கோவரையர் இளைஞரானலும் பொறுப்புக்கேற்ற நிதானமும் உறுதியும் பெற்றவர் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் ஒப்படைத்தார்; அவர்தம் நம்பிக்கை வீண் போகவில்லை!

     தமது பத்தொன்பதாவது வயதில் முதலாம் ராஜேந்திர மாமன்னரின் மெய்க்காவலராகப் பணியாற்றத் துவங்கியவர் வீரராஜேந்திரர் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரும் பதவிகளில் ஒன்றான கடல் கடந்த நாடுகளின் பேரமைச்சராகப் பதினாறு ஆண்டுகளில் பொறுப்பேற்றுவிட்டார். தம்மைவிட ஏதோ ஏழெட்டு வயது கூடப் பெற்றவர், பலமுறை கடல் கடந்த நாடுகளைப் பார்த்தவர், மாமன்னரின் மதிப்புக்கு உகந்தவர் என்ற ஏதோ சில சாதாரணத் தகுதிகளைக் கொண்டவர்தானே இவர்? வேறு எந்த விதத்தில் இவர் என்னைவிடச் சிறந்தவர்? என்று குலோத்துங்கர் தமது இளவட்டமான நோக்கத்திலிருந்ததில் வியப்பேது?

     சோழநாட்டின் பொற்கால நிலைக்கு மேலும் மெருகேற்றும் வழிகண்டு மகோன்னத வடிவமைந்த ராஜேந்திர சோழ மாமன்னர் தமது முதிய பிராயத்தில் மரணத்தைத் தழுவிய காலையில் இவருக்குப் பிராயம் இருபத்தைந்துகூட ஆகவில்லை. எனவே இளங்காளைப் பருவத்தினரான இவர் துடிப்பாகவும் பரபரப்பாகவும் இருந்ததில் அதிசயம் என்ன; தவிர சோழர்களைப் போல எதையும் நிதானித்துத் தெளிந்த பிறகு திடமாகச் செயலாற்றும் பரம்பரையில்லையே கீழைச் சாளுக்கியருடையது? எனவே சோழநாட்டுடன் தாய்வழி உறவே கொண்டவனுக்குத் தந்தை வழிப் பதற்றமும் வேகமும் குறைய வேண்டுமாயின் நிதானமுள்ள வீரர் நட்பும், காலக்கிரமும், பிராய முதிர்ச்சியும் அனுபவமும் தேவையல்லவா?

     “கடல்நாடுடையார் அப்படியென்ன அரசகுலத்தவரா?” என்று முரண்டு பிடித்தவனிடம் அம்மங்காதேவி “இரண்டே இரண்டு கலங்களுடன் ஏழு கடல்களை வெற்றியுடன் வலம் வந்தவர்!” என்றாள் சட்டென்று. குலோத்துங்கனும் பதற்றமுடன் பதிலளித்தான்!

     “சந்தர்ப்பம் இருந்தால் சாதாரணமானவராலும் முடியுமே!”

     “சீனத்துச் சென்சூ, சாவகத்துச் சாமந்தன், மலையூர் ஜோகா, கடாரத்துக் காவா ஆகிய பெருங் கடற்கொள்ளையர்களை ஒரே சமயத்தில் எதிர்க்க ஒரு சாதாரண வீரரால் முடியுமா?”

     “இவர் எங்கே எதிர்த்தார்? ஏதோ தந்திரங்களைப் புரிந்து அவர்களுக்குள்ளேயே பகையையல்லவா மூட்டிவிட்டார்!”

     “அதுதான் அரசியல் சாகசம் என்பது!”

     “வீரமும் தீரமும் இதில் எங்கே இருக்கிறது?”

     “நிச்சயம் இருக்கிறது! நேரே போய் எதிரிகளுடன் மோதுவதுதான் வீரம் என்றால் அது முட்டாள்தனத்தின் சிகரம்! நம்மையே நாம் அழித்துக் கொள்ள வழி செய்வதாகும்!”

     “இந்தச் சோழநாட்டார் வீரத்தைக் காட்டிலும் எப்போதுமே சாகசத்துக்குத்தான் மதிப்புத் தருகின்றனர்!”

     “ஆமாம். வீரத்தின் விளைவுதான் சாகசம். தீரத்தின் முதிர்ச்சிதான் ராஜதந்திரம். இது இரண்டும் கூடினால் சாதாரண வீரன்கூட மாபெரும் வீரனாகச் சாதனை புரிய முடியும்!”

     “நீங்களே ஒரு தேர்ந்த ராஜதந்திரி மாதிரிப் பேசுகிறீர்களே.”

     “எனது பாட்டனார், ராஜ ராஜ திருபுவனச் சக்கரவர்த்திகள், தந்தை ராஜேந்திர மாமன்னர் இருவர் மடியிலும் தவழ்ந்த காலத்தை நான் மறந்துவிட முடியுமா? எனது ஏழாம் பிராயத்தில்தான் தமது ஒரே மகனான எனது தந்தையைக் கடல் கடந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார் பாட்டனார். அப்போது அவர் சொன்னவை அத்தனையும் எனக்கு இப்போது முழுமையாக நினைவுக்கு வரவில்லையென்றாலும் இரண்டொன்று இன்னும் நினைவில் இருக்கிறது.

     ‘நீ கடல் கடந்து செல்ல வேண்டிய பொறுப்பை ஏதோ வீரச் செயல்களுக்கான வாய்ப்பாகக் கருதிக் களிப்புக் கொள்ளாது ஒரு புனித யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும். பகைமையுணர்ச்சியை மனதில் நீடித்து நிலைக்கவிடாமல் பகையைக் காட்டுவோரை வென்ற பிறகு மதிப்புடன் நட்புக் காட்ட வேண்டும். மூர்க்கத்தன்மை கொண்டவர்களை அடக்கி நேர்வழி திருப்ப வேண்டுமேயன்றி அவர்களே வெற்றிகண்ட வேகத்தினால் அழித்துவிடப் பரபரப்புக் கொள்ளலாகாது. சோழரின் மதிப்புக்குத் தவறான செய்கையால் ஊறு நேரக் கூடாது. எவ்வகையாலும் சாம்ராஜ்யப் பெருமைக்குச் சீர்கேடு ஏற்படக் கூடாது. அங்குள்ள மக்கள் சோழர்களின் பெருமையை, திறமையை, தகுதியை மதித்து மனப்பூர்வமாகப் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சி எதுவும் என் செவியில் புகக்கூடாது!’”

     தாய், மகனிடம் இந்த முன்னாள் அறிவிப்பை நினைவூட்டிய போது குலோத்துங்கன் தனது தாய்க்குத்தான் எவ்வளவு நினைவுச் சக்தி என்று அதிசயித்தாலும், “மாமன்னர் ராஜேந்திரர் கடல்கடந்து சென்ற போது தனது தலைமையை விட்டுக் கொடுக்கவில்லையே!” என்று இடித்துக் காட்டத் தவறவில்லை.

     தனது மகன் பிடிவாத குணத்துக்கும் முரட்டுப் பேச்சுக்கும் பொறுப்பு தானே என்பதறிந்த அம்மங்காதேவிக்கு அவனிடம் கோபம் உண்டாவதற்குப் பதில் தன்னிடம் தானே அதைத் திருப்பினாள்.

     “நான் மிதமிஞ்சிக் கொடுத்த செல்லத்தால் நீ இப்படியாகி விட்டாய். என் தந்தை அடிக்கடி நம் குழந்தைகளை வளர்க்கும் அருமை அறிந்தவர். தனது பாட்டி திரைலோக்கிய மாதேவியார் ஒருவர்தான் என்பார். ஏதோ அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் உயர்வும் மதிப்பும் ஏற்பட்டு உள்ளத்தில் ஆணவமும் உண்டாகி விடுகிறது. இதனால் வளரும் குழந்தைகள் ஏதோ மக்கள் வேறு தாம் வேறு என்ற நிலை மனதில் ஊன்றிவிடுகிறது. எனவே இதுதான் அரசாளும் தகுதியைக் குறைத்துவிடுகிறது என்பார். அது உன் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.”

     தாயின் இந்த மனக்குமுறலைக் குலோத்துங்கன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியாயினும் தாய் மனம் தவிப்பதை ஒரு நொடியும் விரும்பாதவனே அவ்வரசகுலச் செம்மல். “அம்மா, நீங்கள் வருந்தும்படியான ஒரு நிலை என்னால் ஏற்பட வேண்டாம். நான் கடல்நாடுடையர் அல்ல, எவரானாலும் சரி, அவர்கள் பொறுப்பில் எங்கும் செல்லத் தயாராயிருக்கிறேன். எனக்குச் சந்தர்ப்பம் வேண்டும். அப்படிக் கிடைத்தால்தான் நான் எனது திறமையைச் சோழ மாமன்னரிடம் காட்ட முடியும். எனவே நான் அட்டியின்றிச் செல்லுகிறேன்” என்று மேலும் வார்த்தையாடாமல் ஒப்புக்கொண்டது கண்டு அன்னை மனம் மகிழ்ந்தது.

     ஆயினும் அடுத்த எட்டாம் நாளில் குலோத்துங்கன் மனமும் மகிழத்தான் செய்தது. கடல்நாடுடையார் தமது ஒரு சிறு பேச்சால் குலோத்துங்கனை முற்றிலும் மாறச் செய்துவிட்டார்!

     ராஜேந்திரர் தமது பொறுப்பில் இளவரசனை அனுப்புகிறார் என்ற செய்தியை அவர் அப்படியொன்றும் குதூகலத்துடன் ஏற்றுவிடவில்லை! ஒரு இளவரசன், அதுவும் சாளுக்கிய இரத்தக் கலப்புள்ளவன், தனக்கு அடங்கி, கட்டுப்பாடாக நடந்து கொள்வான் என்பதை எதிர்பார்த்து ஏமாறத் தயாராக இல்லை அவர்! எனினும் எப்படித் தனது பொறுப்பினை வெற்றிகரமாக்குவது என்பதற்கு அவர் ஒரு வழி கண்டுபிடித்தார்!

     குலோத்துங்கன், அம்மங்காதேவியின் செல்வமகன் என்ற உரிமையில் அவன் வளரும் வகைபற்றி நன்கறிந்திருந்த அவர் ராஜேந்திரரிடம் விண்ணப்பித்துக் கொண்ட முறையே ஒரு மாற்று மருந்தாயிருந்தது!

     “தனித் தலைமையொன்றின் கீழ்தான் நமது கலிங்கர் கடல்களில் நகர வேண்டுமென்பதில்லை. கூட்டுப் பொறுப்பிலும் நகரும். அப்பொறுப்புக் கூட்டுக்கு மதிப்பு நிமித்தம் இளவரசர் தலைமையேற்க ஆலோசனையைக் கூறுவார் கோவரையர்! அதை ஏற்றுத் தலைமை உத்திரவிடுவார் குலோத்துங்கன் என்று மாற்றிவிடும்படி மன்னரை வேண்டியதும் அவர் முதலில் மறுத்தாலும், பிற்பாடு அவர்தம் கோரிக்கையின் உட்கருத்தை நன்கு உணர்ந்து கொண்டதும் தடை கூறாது ஒப்பினார்.

     “நான் கடல் கடந்த நாடுகளின் தொடர்புக்காகத் தங்கள் உதவியாளராகப் பணியாற்றுவேனேயன்றி மாறான நோக்கத்தில் கருத்தில்லை” என்று மாமன்னர் எதிரில், அம்மங்காதேவியின் முன்னிலையில், அமைச்சரவை, உடன் கூட்டத்தார் சூழலில் அவர் அறிவித்தகாலை ‘இவரைப் போய் நாம் அரசகுலத்தவரல்லாதவர் என்று குற்றஞ்சாட்டி குமுறினோமே!’ என்றும் வருந்தினார் குலோத்துங்கன். இதன் பின்னர் நடந்ததென்ன?

     அடுத்த ஆறு மாதங்களில் அரசிளங்குமரன் குலோத்துங்கன் இவர்தம் பொறுப்பில் அல்ல, இவர்தம் ஆணையையே தமது ஆணையாகக் கருதலானார்!

     ஏழு கடல்களிலும் சோழர்தம் பெரும் கடற்கலங்கள் கம்பீரமாகப் பவனிவந்தன. கீழ்த் திசையில் சென்ற கடற் படைக்கு சாவகம்வரை எதிர்ப்பேயில்லை. சோழப் பேரரசின் மேலாணையை மதித்து அடங்கி நிற்க ஏறக்குறைய எல்லா நாடுகளுமே இரண்டொன்றைத் தவிர ஒப்புக்கொண்டுவிட்டன. எனினும் சாவகம், ஸ்ரீவிஜயம், திங்கம், சம்பா ஆகிய நாடுகள் தங்களிடையே முட்டிக்கொண்டிருந்ததால் சோழ இளவரசன் யாரை, எப்படி நம்முடன் சேர்த்து அணைத்துக் கொள்வது என்பது அறியாது அவர்களிடையே முதலில் ஒரு நிம்மதிச் சூழ்நிலை ஏற்பட்டால்தானே எதுவும் இயலும் என்ற குழப்பநிலையுடன் கடல்நாடுடையார் ஆலோசனைப்படி தான் அடுத்த முடிவு என்ற உறுதியுடன் செயல்பட்டான்.

     ஆயினும் பல ஆண்டுகளாக ஹிந்து சமயத்தினராக வாழ்ந்து வரும் சம்பாவின் மீது சமீபகாலம் வரை ஹிந்துக்களாக இருந்து பௌத்தர்களாக மாறிவிட்டவர்கள் அதாவது சாவக ஸ்ரீவிஜயத்தினர் எங்கே தமது புது மாறுதலுக்கு எதிராகச் சம்பா எழுமோ என்ற பீதியுடன் அதன்மீது ஆத்திரமும் பகைமையும் காட்டுகின்றனர் என்ற உண்மையைக் கோவரையர் சில தினங்களிலேயே அறிந்து கொண்டுவிட்டார்! எனவே, சம்பாவின் மன்னரும் அவர்தம் பரிவாரங்களும், குடிமக்களும் ஆங்காங்கு சிதறிக்கிடந்த பல்வேறு தீவுகளில் பதுங்கி, மூர்க்கமான வெறியுணர்ச்சியுடன் தம்மைத் தாக்கும் மாபெரும் சாவகப் படைகளைப் பதின்மூன்று ஆண்டுகளாக எதிர்த்து நிற்கும் சுதந்திர உணர்ச்சிக்கு மதிப்புத்தந்தாலும், போர்மூலம் இதற்குத் தீர்வு காணுதல் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்!

     ஆனால், போர் என்றதுமே தமது வீரதீரத்தினைக் காட்ட தக்க தருணம் வந்துவிட்டது என்று துள்ளிக்குதித்த குலோத்துங்கன், கோவரையர் முடிவுகண்டு கொதித்தெழுந்தார்!

     “சின்னஞ்சிறு சம்பாவின் வீரத்தினைக் கண்டு நாம் களிப்புடன் மதித்து மாற்றானை விரட்டி வெற்றி காண உதவி செய்யாமற் போனால் சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைக்கும் வலிமைக்கும் இழுக்காகிவிடாதா?” என்று எக்காளமிட்டார். எனினும் கடல்நாடுடையார் மனம் மாறிவிடவில்லை. தருணம் பார்த்துத் தருக்கி நிற்பது வீரன் வேலைதான். எனினும் கீழை நாடுகளில் வெறும் வீரத்தினை மட்டும் கொண்டு எதையும் சாதித்துவிடுவதென்பது இயலாது. இடத்துக்கேற்ப, சூழ்நிலைக்கொப்ப கத்தியால் மட்டுமின்றி புத்தியாலும் சாதிக்க வேண்டுவன இருப்பதாகக் கருதிச் செயலாற்றிய அவர் வெகு நிதானத்துடன் குலோத்துங்கன் மனநிலையை மாற்றினார். நிரம்பவும் பாடுபட்டுத்தான் மாற்ற முடிந்தது என்றாலும் இளவரசன் மனம் முற்றிலும் மாறிவிட்டது. எனவே சம்பா நாட்டுக்கு எவ்வகையில் உதவ முடியும் என்பது பற்றி ஆராயச் சில மர்மமான திட்டங்களைச் செயல்படுத்த இருவரும் முடிவு செய்தனர்!

     மூன்று ‘கலங்களுடன்’ ஒரே சமயத்தில் முப்பது கலங்களுடன் சம்பாவைச் சுற்றி வளைத்துச்சாடும் சாவகத்துக் கடற்படையுடன் பகைமையுணர்வு காட்டிப் போரிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று புரிந்து கொள்ள வீரவேகப் பரபரப்பு, துடிதுடிப்புள்ள இளவரசருக்கு எத்தனை காலம் பிடித்தது!

     சம்பாவின் முடிமன்னரான யத்திராவர்மரும் சரி, சாவகத்துப் பெருமன்னரும் சரி, சோழ வல்லரசின் நண்பர்களே. ஸ்ரீவிஜய மன்னரோ சோழர்களுக்கு மிக நெருங்கியவர். அவர்கள் தம் மேலாதிக்கத்தைக்கூட ஒரு வகையில் ஏற்றவர். எனவே சாவகம், சம்பா, சாபம், மலையூர் முதலிய சிறு நாடுகள் சோழர்கள் மேலாதிக்கத்தை மட்டுமின்றி ஆபத்தில் அவர்கள் உதவியை நாடிப்பெறும் உரிமையையும் பெற்றவையாகும்.

     எனவே இந்த உரிமையின் அடிப்படையில் வளர்ந்திருந்த உறவு முறையுடனும்தான் சம்பாவின் மன்னர் தமது தூதுவர்கள் மூலம் சோழ அரசை நாடி உதவி அவசரம் என்று வேண்டியிருந்தார்.

     மாமன்னர் ராஜேந்திரர் கடல் நாடுகளில் திக்விஜயம் செய்த காலம் வேறு, இளவரசர் குலோத்துங்கர் கடல்நாடுகளில் பயணம் செய்யும் காலம் வேறு.

     எனவே, முந்தைய முறை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றது அல்ல. மாற்று முறையினின்று முற்றிலும் புதிதாக, தருணத்துக் கேற்றதாக இருக்க வேண்டும் என்ற கோவரையர் முடிவைக் காலச் சூழ்நிலைக் கேற்ப இளவரசர் ஏற்க வேண்டியதாயிற்று. இப்படி ஏற்றுக் கொண்டதனால் சம்பா-சாவகப் போரில் ஒரு முடிவைக் காணத் தேவைப்பட்டவை பெரிய கடற்படையல்ல, பல நூறுவீரர்கள் அல்லது ஆயுதங்கள் அல்ல. யுக்தி புத்தி இரண்டுமே போதியதாயிருந்தது! இதெல்லாம் வெகுகாலத்துக்கு முன்பு நடந்தவை!

     பிற்காலத்தில் தமது தாயிடம் கடல்நாடுடையாரின் திறமை பற்றி, அரசியல் ஞானம் பற்றிக் குலோத்துங்கன் வெகுவாகப் புகழ்ந்து பேசி அவரைத் தமது ஆசான் என்றும் வழிகாட்டியென்றும், உயிருக்குயிரான தோழனென்றும் உரிமை பாராட்டிப் பேசிய போதெல்லாம் வெகுகாலத்துக்கு முன்பு அன்று அங்கு நடந்தவை பற்றியெல்லாம் நினைவு வரும். இவ்விருவரும் சோழநாட்டிலிருந்து புறப்பட்ட போதிருந்த நிலையும், பிற்பாடு ஏழாண்டுகள் கடல்நாடுகளில் சுற்றித் திரும்பிய பிறகு இருந்த நிலையும் அரசிக்கு அவ்வப்போது நினைவுக்கு வரும்.

     எத்தனை எத்தனையோ திட்டங்கள், பெரிய பெரிய ஆராய்ச்சிகள், ஆலோசனைகளுக்குப் பிறகு மன்னர் மேற்கொள்ளத் துவங்கும் போது ஒரு நொடியில் அதுமாறிவிடும் கோவரையர் ஒரு வார்த்தையில்!

     அமைச்சரவை, உடன்கூட்டம், சேனைத்தலைவர்கள் சோழத்தலைவர் பேரவை ஆகியோர் கூடிச் செய்கின்ற முடிவுகள்கூட சில சமயங்களில் கடல்நாடுடையார் தலையீட்டால் மாற்றப்படுவதுமுண்டு! எனினும் இதனால் மன்னர்தம் ஆலோசகர்கள் பதற்றமடைந்து கோபங் கொள்ளுவதில்லை. ஏனெனில் அவர் யோசனை நியாயமாகவும் பயன் அளிப்பதாகவும் சந்தர்ப்பச் சூழ்நிலைக் கேற்றதாகவுமே இருக்கும்!

     எனவேதான் கடல்நாடுடையாருக்கு ஆரம்ப காலத்தில் எதிராயிருந்தவர்கள் எல்லாம் பிற்காலத்தில் மிக்க நட்பும் மதிப்பும் கொண்டவர்களாய் மாறிவிட்டார்கள் போலும்!

     குலோத்துங்கன் இளவரசனாயிருந்த காலத்தில் கோவரையருக்கு ஆதரவாக இருக்கத் தயங்கினது மாறிப் பின்னாளில் அவருக்குப் பூரண ஆதரவு தருவது மன்னர்தாம் என்ற முடிவை நாடு முழுமையும் நம்பமுற்பட்டது!

     ஏன்? இப்போதுகூடத்தான் நேற்றைக்கு மன்னர் ஒரே நொடியில் கடல்நாடுடையார் வார்த்தையேற்று அந்த அந்நியச் சிறுவனை அந்தரங்கக்காப்பாளனாக ஏற்கவில்லையா?

     பேரரசி இதையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பரிசீலனை செய்து முடிவில் தனக்குத் தெரிந்தவை தவிர தெரியாதவை பல தன் மகனைப் பற்றி இருப்பதாகக் கற்பனையும் செய்தாள்.

     சாவக நாட்டிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதியான ஸ்ரீராஜ வித்யாதர சாமந்தன் ஏதோ ஒருவகையில் எப்படியோ தன்னுடைய மகனுக்கு எதிரான ஒரு அணியில் இணைந்திருப்பதாகக்கூட அந்த மூதாட்டி நம்பியதில் வியப்பில்லை.

     ஆனால் ராஜகுரு புனிதமானவர். உண்மைக்குப் புறம்பான, நியாயத்துக்கு மாற்றான எதையும் மனதில் கொள்ளாதவர். அப்படிப்பட்டவர் தலைமையில் இங்கு பணியாற்ற வந்துள்ளவன் எப்படித் தனது மகனுக்குப் பகை பாராட்ட முடியும்!

     அரசியின் மனதில் ஆயிரமாயிரம் சிந்தனைகள்.

     முன்னர் கலிங்கப் போர் நடந்த போது மனதில் எழுந்த கிலேசம் மீண்டும் இப்போது எழுந்துவிட்டது.

     எனவேதான், நேரிலேயே வந்து ராஜகுருவை தனது மாளிகைக்கு வந்து போகும்படி கோரிக்கை விடுத்தாள். அவரும் அவ்வழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டார்.

     ஆயினும், குலோத்துங்கருக்கு இதுபற்றி ஏனோ சற்றே குழப்பமுண்டாயிற்று. என்றாலும் அன்னை வார்த்தைக்கு எதிர் வார்த்தையில்லை என்ற நிலை வலுப்பெற்று அவர்தம் கோரிக்கைக்கு எதிர் நிற்கவில்லை. ஆனால் அவருக்கு வியப்பூட்டியதெல்லாம் தன்னுடைய மெய்க்காப்பாளர்களில் ஒருவனாக இருக்கத் திடீர்த் தகுதி பெற்ற அந்நிய இளைஞன் ராஜகுரு தமது அன்னையுடன் அளவளாவுவது நல்லதொரு நிகழ்ச்சி. தன்னுடைய முந்தைய வேண்டுகோளை மேலும் தெளிவுபடுத்துவதைப் போல பேரரசி “எங்கள் மாளிகையில் நாளைக் காலையில் ஒரு பெருந் திருப்பணி நடைபெறுகிறது. அத்திருப்பணியில் எங்கள் நாட்டுப் பெரிய சமயகுரவர் இருவருடன் தெய்வப்பணியால் பலரும் கலந்து கொள்ளுகின்றனர். எங்கள் முந்நாளைய மகாசேனாதிபதியும் தற்போது திருவாடுதுறைக் கோயிலைப் புதுப்பித்து வருபவருமான சங்கர அம்பலக் கோயில் கொண்ட சேதிராயரும் தேவாரப் பாவாணர் பலர்கூட வருகின்றனர். நீங்களும் அவ்வமயம் அங்கு எழுந்தருளி ஆசி தர வேண்டியே நேரில் அழைக்க நான் வந்திருக்கிறேன்” என்று விளக்கமாக ராஜகுருவிடம் வேண்டியதும் அவர் மிக்க மகிழ்ச்சியுடன், “நிச்சயமாக வருகிறோம் தேவி. நிச்சயமாக வந்து கலந்து கொள்ளுகிறோம். உங்கள் அழைப்பை ஏற்காமலிருக்க முடியுமா? அல்லது எங்கள் பழைய நண்பரான சங்கர அம்பலத்தாரைத்தான் காணாதிருக்க முடியுமா? சூளாமணி வர்ம விஹாரத்தைச் சமைத்த கைங்கரியத்தில் அவர் அல்லவா தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்! அவரில்லையேல் நாங்கள் இத்தனை பெரிய பௌத்த விஹாரத்தையோ சமயப்பள்ளியையோ இந்நாட்டில் உருவாக்கியிருக்க முடியாதே தேவி! அவர் உடல் நலமாக, திடமாக இருக்கும் செய்தியை கேட்கவே என் உள்ளத்தில் உவகை நிறைகிறது!”

     “ஆம் சுவாமி. அவர் நலமாகத்தான் இருக்கிறார். ஆனால் திடமாக என்று சொல்ல இயலாது. ஏனெனில் அவர் இப்போது தொண்ணூற்றாறு பிராயத்திலிருக்கிறார்!”

     “அப்படியா? அறிவாலும், அன்பாலும் வீரத்தாலும் உறுதியாலும் பழுத்த பழமாயிற்றே அந்தப் பெருந்தகை! தாயே! நீங்கள் எனக்கு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது கேட்கக் கேட்க இதயத்தில் நிறைவு பெறுகின்றது. எங்கள் மன்னர் சார்பில் அவருக்கு எனது நன்றியையும் அறிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். உங்களுடன் நான் நிம்மதியாக அளவளாவி ஏறக் குறைய இருபதாண்டுகள் ஓடிவிட்டன அல்லவா? தங்களுக்குச் சிரமமில்லாமலிருப்பின் நாளை மதியம் தாங்களுடனும், மாமன்னர் ராஜகேசரியுடனும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்” என்று புத்தமித்திரர் புளகத்துடன் புகன்று மன்னரையும் அவர்தம் பின்னால் நிற்கும் இளைஞனையும் மாறி மாறிப் பார்த்தார்!

     “தாங்கள் அரண்மனை வந்து எங்களுடன் தங்கியிருக்கும் தருணத்தை ஆவலுடன் எதிரிபார்க்கிறோம்!” என்று மன்னர் பதில் அளித்ததும் பேரரசிக்குச் சற்றே நிம்மதியேற்பட்டது முகத்தில் தெரிந்தது.

     “நீங்கள் மாளிகைக்கு விஜயம் செய்து பேரரசியுடன் அளவளாவுவது அவருக்கு நிம்மதி மட்டும் அல்ல. சற்றுத் தெளிவும் உண்டாக்கித் தெம்பும் உண்டாக்கும் என்று நம்புகிறோம்!” என்று வீரபாலன் என்ற அந்த இளைஞன் குறுக்கிட்டுப் பேசியதும் மன்னர் ஒரு நொடி திடுக்கிட்டார். பிறகு உள்ளூரக் கோபமும் ஏற்பட்டது! என்றும் தன் அன்னை இவ்வார்த்தைகளைக் கேட்டு “ஆமாம் இளைஞனே, நான் மனதில் நினைத்ததையே நீயும் சொல்லியிருக்கிறாய்!” என்று பாராட்டி மகிழ்ச்சிக் களையைத் தமது முகத்தில் வருவித்துக் கொண்டதைக் கண்ட மன்னர் வாய் திறக்கவில்லை.

     எனினும் சாமந்தனுக்கு இச்சொற்களைக் கேட்டதும் ஏற்பட்ட ஆத்திரம், எப்படியாவது மன்னன் மாளிகைக்கு புத்தமித்திரர் போகாமல் தடுத்துவிட வேண்டியதுதான் என்ற பிடிவாத முடிவைக் கொள்ளச் செய்துவிட்டது!

     முடிவு செய்துவிட்டால் போதுமா? அதை நிறைவேற்றுவதற்கான சக்தி வேண்டாமா?