பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

13. மர்மம் வளருகிறது- எனினும் தெளிவும் தெரிகிறது!

     அரண்மனையிலும் ஆலயத்திலும், மன்னர் குலத்திடையே மட்டும் ஊடாடிக் கொண்டிருந்த உயர்வட்டத்துச் செய்திகள் மதிலுக்கு வெளியும் ஊர்ந்து நகர மாந்தரிடையே நாட்டு மக்களிடையே பரவ அதிக காலம் ஆகவில்லை! சோழ சாம்ராஜ்யத் தலைமைக்கு மீண்டும் ஒரு பெருஞ் சோதனை வந்திருக்கிறது என்ற செய்தி மக்களிடையே எப்படியோ காட்டுத் தீ போலப் பரவிவிட்டதால் நகரங்கள் மட்டுமல்ல பட்டிதொட்டிகள்கூட பரபரத்தெழுந்தன! இளவட்டங்கள் பெரியவர்கள் முன்பெல்லாம் என்னென்னவோ சாதனைகள் புரிந்ததாக மட்டும் பேசிக் கொள்ளுகிறார்களே, அதன் உண்மை பொய்யை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு இப்போது கிடைக்குமோ என்று சிந்திக்கலாயினர்.

     கலிங்க வெற்றியைப் பற்றியும், கருணாகரத் தொண்டைமானின் அபார வீரத்தலைமை பற்றியும் கவிஞர் பாடிக் களித்ததையெல்லாம் ஏதோவொரு கற்பனைக் காவியம் என்று நினைத்த புதிய மரபினர் மீண்டும் கலிங்கத்துடன் போர் துவங்கலாம் என்ற செய்தியால் பழைய பரம்பரையின் வீரத்துக்கு எள்ளளவும் தாழ்ந்ததில்லை எமது வீரம் என்று காட்டுவதற்கான தருணத்தை இந்தப் புதிய செய்தி விளைவிக்கலாம் என்று நம்பி மகிழ்ந்தவரும் உண்டு.

     எனினும் புதியதொரு போரினை விரும்பாதவரும் நாட்டின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தனராதலால் வேல்முனையில் காணும் வெற்றியைக் காட்டிலும் ராஜதந்திர முனையில் காணும் வெற்றியே நலம் என்று கருத்தில் அரசியல் தலைமையாரும் அமைச்சரவை உறுப்பினரும் அரசருக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்ற செய்தியும் பரவ, எது எப்படியாகும், எப்படி முடிவுறும் என்ற சிந்தனையும் வளர்ந்திருந்தது.

     இவை ஒருபுறமிருக்க நாளை மறுதினம் நகரத்தில் அதாவது நகரில் கடல்நாடுடையாரின் மாளிகைப் பக்கத் திடலில் நடைபெறவிருக்கும் வாட்போர் பற்றிய பேச்சுத்தான் மக்கள் மனத்தை வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது!

     சோழ வீரர்கள் எங்குத் திரும்பினாலும் இந்தக் குறிப்பிட்ட ‘வாட்போர்’ பற்றியே பேசினார்கள். ‘எவனோ அந்நியன் ஒருவன், அவன் என்னதான் பரிசில் போட்டியில் வென்று பரிசிலைப் பெற்றவனாயிருக்கட்டுமே! எப்படி இளவரசரையே எதிர்த்துப் போரிடத் துணிந்தான்?’ என்று பேசினர். ‘இளவரசர் மும்முடியிடம் இதுவரை வாட்போரில் ஈடுகொடுத்து நின்றவர்கள் எவருமில்லை. இவனுடைய விதி அவர்தம் வாள்முனையில்தான் இருக்கிறது!’ என்று கனிவுடன் நினைத்தவர்களும் இல்லாமலில்லை. ‘அரசர் குடும்பமே அறியுமாமே இதை!’ என்று பெருந்தலைவர் குடும்பத்தினர் மாளிகைகளிலும் வம்பு நடக்காமலில்லை. கடற்கரை விழாவில் கலந்து கொண்ட காரிகையர் பலரும் தங்கள் பேச்சுக்களில் அந்நிய வீரன் அவனுடைய வெற்றி ஆகியவைகளைப் பற்றி அளவளாவி முடிவில் அவன் சார்பில் அனுதாபமும், காத்துக் கொண்டனர்.

     ஆனால், இப்படி அனுதாபமும் காட்ட வழியில்லாமல் எப்படியெல்லாம் நடக்குமோ என்ற குழப்பத்தில் மனதில் ஆறுதல் கொள்ள வழியில்லாமல் தவித்தவர்களும் உண்டு.

     வன்மகன் என்றுதான் மும்முடியைச் சோழனின் மனைவி கருதினாள். எனவே அவனுக்கு எந்த ஊறு நேரிட்டாலும் அவளைப் பாதிக்காமலிருக்குமா? எனினும் ஏன் அவளுக்கு அந்த அந்நியனிடம் வெறுப்பும் வேகமும் எழவில்லை!

     தனது கணவன் மாவீரன்தான். அதுவும் வாட்போரில் நாளதுவரை தோல்வியே காணாதவன். என்றாலும் அவன் பொருதும் அந்நிய வீரன் அப்படியொன்றும் அலட்சியமாகக் கணிக்கப்பட வேண்டியவனில்லையே! என்று மும்முடியின் மனைவி நினைத்துத் தவித்ததில் வியப்பில்லை.

     அவன் யாராயிருந்தால் என்ன? மும்முடியிடம் முட்டிக் கொண்டு மரணத்தைத் தழுவ விரும்புவதில் நியாயமில்லை. எவ்வளவு எச்சரிக்கை செய்தும் புரியாத்தனமாகத் துள்ளுகிறானே இந்த அந்நிய இளைஞன்! யாராவது புத்தி கூறுவார்களா! கூறக்கூடிய உரிமை கடல்நாடுடையாருக்கு என்று பார்த்தால் அவரும் அவன் போக்கில் நிற்கிறாரே! என்று உள்ளங் குமைந்தாள் சோழகுல வல்லி!

     ஆயினும், மும்முடியிடம் எச்சரிக்கை செய்யவும் இரண்டொருவர் முயலாமலில்லை. நரலோகவீரன் தனது வேளக்காரப்படையின் திறமைக்கு ஒரு சவாலாக வந்திருக்கும் அந்நியன் இப்போது அரசர்தம் மெய்க்காவலனாகவும் அமைந்தான் என்ற செய்தி கேட்ட நாள் முதல் ஆத்திரத்தாலும் ஏமாற்றத்தாலும் கனன்று வந்தான். மணவில் காலிங்கராயன் சோழர்தம் சேவையில் தமது வாழ்நாள் முழுமையும் செலவழித்த பரம்பரையினன்தான். சோழ நாட்டின் பாதுகாப்புக்கு எனத் தம்மைக் காணிக்கை கொடுத்தவர்கள், இரு தூங்காத கண்கள் என்று கருணாகரனையும் நரலோகவீரனையும் சோழ மாமன்னரே பாராட்டி இவர்களிடம் நாட்டுப் பாதுகாப்பினைப் பூரணமாக ஒப்படைத்திருப்பதும் உண்மைதான். எனினும் அரசியல் சதுரர்கள் புரியும் சில மர்மப்பணிகள், தந்திரங்கள் எல்லாம் எப்போதும் கடமை காவல் என்று கருத்தாக இருக்கும் நரலோகவீரனிடம் நெருங்காமலிருந்ததில் வியப்பில்லை.

     குறிப்பாக அவனுக்குக் கடல்நாடுடையார் யோசனையும் போக்கும், நடைமுறைகளும் புரிவதில்லை. எதிலுமே பதட்டமோ, வேகமோ, ஆவேசமோ காட்டாத அவரையும், அவர்தம் மூத்தவர் பஞ்சநதிவாணர் இருவரும் ஏன் இப்படி ஜடமாயிருக்கிறார்கள் என்றுகூடச் சில சமயம் நினைப்பதுண்டு.

     எவனோ ஒரு அந்நியனுக்கு இவர் யாருக்கும் தெரியாமல் அடைக்கலம் தருவதாம். பிறகு பரிசில் பெறச் செய்வதாம். அதற்குப் பிறகு ஒற்றன் என்றறிந்த பின்பும் அவனை அரசர் தம் அந்தரங்கக் காவலில் இணைப்பதாம். இதெல்லாம் என்ன? மன்னர் இவர்தம் பேச்சில் மயங்கிவிட்டார் என்பதைத்தானேயன்றி, பூரணமாக நம்பிக்கை கொண்டல்ல! என்ற முடிவுக்கு வந்த நரலோகவீரன் மும்முடியைக் கண்ட போது நிகழ்ந்த ஆலோசனைகள் சரிதான்! இந்த அந்நியன் பிழைத்து வாழ்வதாவது! என்றுதான் நினைக்கச் செய்தது.

     “நான் நம்புகிறேன் அந்தச் சாவகரின் வார்த்தைகளை. ஆனால் என் தந்தை நம்பவில்லை. நீங்கள் எப்படி நரலோக வீரரே?” என்று மும்முடி சட்டென்று கேட்டதும் ஒருநொடி அயர்ந்துவிட்டான் காலிங்கராயன். அவன் தயக்கத்தை எதிர்பார்த்தவன் போல், “எனக்குத் தெரியும், நீங்களும் அவரைப் போல உண்மையைப் புரிந்து கொள்ளாமல் குழம்புவீர்கள் என்று. ஆயினும் ஒன்றுமட்டும் மறுக்க முடியாது உங்களால். அவன் மன்னனின் மெய்க்காவலனாக மாறியிருப்பது அவருக்கு ஆபத்து எதுவும் வராமல் தடுப்பதற்கு அல்ல என்பது உறுதி. நீங்கள் இது பற்றிக் கருதுவது என்னவோ?”

     “எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது. என்னைக் கேளாமல் நாளதுவரை எந்த ஒரு மெய்க்காவலனையும் அரசர் நியமித்ததில்லை!”

     “அதெப்படிச் செய்வார்? கோவரையரின் தேன் சொட்டும் பேச்சு, பாட்டியின் அசட்டு யோசனை, அந்தக் கொடிய பயலின் நயமான குள்ளநரித்தனம்... அரசர் ஏமாந்துவிட்டார் நரலோகரே!”

     “இருக்கலாம். கடல்நாடுடையார் வார்த்தைக்கு மன்னர் அதிகமாகவே மதிப்பளித்துவிடுவார்!”

     “நான் ஏமாறத் தயாராக இல்லை. நீங்களும் கூடாது. நாளை இந்த நாட்டு மக்கள் நம்மைத்தான் ஏசுவார்கள்! இவர்கள் பக்கத்திலிருந்து மாமன்னருக்கு ஆபத்து உண்டாக்கும் ஒரு கயவனை அருகே விட்டுவைத்தார்கள் என்று தூற்றுவார்கள். இந்தக் கொடுமைக்கு நாம் காரணமாக இருக்க முடியுமா?”

     “ஐயோ! இதென்ன பேச்சு? மன்னருக்கு ஆபத்து என்ற பேச்சு எழுந்த பிறகும் நாம் வாளாயிருக்க முடியுமா?”

     மும்முடி இப்போதுதான் வாய்விட்டுச் சிரித்தான்! “நல்லது காலிங்கரே. நமக்குச் சாவகர் சொன்னதனைத்தும் தெரியும். இந்தப் பயல் வேற்று நாட்டிலிருந்து இங்கு நுழைந்திருப்பதே ஏதோ ஒரு மிகக் கெட்ட நோக்கத்துடன்தான் என்பதை நம்மிடம் அன்பு கொண்டுள்ள அவர் நன்கறிந்து கொண்டுள்ளார். அவனைக் கண்காணிக்கும் அவர் தம் மெய்க்காவலர்கள் இருவரும் ஒற்றர்கள் ஒழிப்புப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் புலனாகிவிட்டது. இல்லையா?”

     “அதெப்படியாயினும் அரசர்தம் அந்தரங்க ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் வந்தது நியாயமில்லையே!”

     “நியாயமில்லாமலிருக்கலாம். ஆனால் நம்மிடையே ஒரு எதிரி வந்திருப்பதைக் குறிப்பிடத்தானே வந்தார்கள்?”

     “எதிரியானவன் நம்மிடை அப்போது நுழையவில்லை. ஆனால் இவர்கள் வந்திருக்கிறார்கள். இன்னார் எதிரி என்று ஓலையைத் தர வேறு சமயம் இல்லையா?”

     “இதுபற்றி நானே கேட்டேன். கடல்நாடுடையார் அவனுக்கு ஆதரவு தருகிறார். அவரோ கூட்டத்தில் கலந்து பேசுகிறார். பிறகு அவனைச் சந்தித்து கூட்டத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறும் முன்பு அவன் கைது செய்யப்பட வேண்டும் என்பது தமது கருத்து என்று சாவகர் கருதித்தான் அப்படிச் செய்தாராம்.”

     “இருக்கலாம். ஆனால் கடல்நாடுடையார் பற்றி நாம் வேறு வகையில் பேசுவதற்கில்லை. பேசுவதையும் அனுமதிப்பதற்கில்லை.”

     “இது மன்னரின் நினைவு. என்னுடைய நினைவு அப்படியில்லை.”

     மீண்டும் அதிர்ந்து போனார் காலிங்கராய நரலோக வீரன்! மும்முடி எப்பவுமே அவசரக்காரன். இவனுடன் பேசுவதே சில சமயங்களில் பெரும் ஆபத்தான பிரச்சினைகளை யுண்டாக்கி விடும் என்று முன்பொருமுறை கருணாகரர் எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது. தவிர கடல்நாடுடையார் போன்ற பழம் பெரும் வீரர்களைத் தவறான முறையில் பேசுவது முற்றிலும் நியாயமற்றது என்ற எண்ணமும் தலையெடுத்ததால் தன்னடக்கத்துடன் மும்முடியிடம் பேசினார்.

     “இளவரசே, பதற்றப்பட்டு எந்த முடிவையும் செய்யலாகாது. சாவகன் எத்தகையவன் என்பதை நம்மைவிட அதிகமாக அறிந்தவர் கடல்நாடுடையார்தான். இரண்டாவதாக இந்த அந்நிய இளைஞனை இவ்வளவு வெறுப்புடன் சாவகன் நடத்துவதே அவர் அவனுக்கு ஆதரவாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். தவிர மன்னர்தம் மெய்க்காவலனாக அவன் இருக்கும் உரிமை பற்றி வாதாடும் திராணி நமக்கில்லை. எனவே நீங்கள்...”

     மும்முடி இப்போது உண்மையிலேயே பதறிப் பேசினான். “நரலோக வீரரே, நீங்களும் மற்றவர்களைப் போலத்தான் என்னைப் பைத்தியக்காரன், முன்கோபி என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஊகிப்பது தவறாகாது” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசும் போது சாய்மான நிலையில் அமர்ந்திருந்த நரலோக வீரன் சட்டென்று பதறி எழுந்து அடக்கமாக நின்றதைக் கண்டு புரியாதவனாய் ஒருவேளை தனக்குத்தானே அந்தக் திடீர் மரியாதை என்று நினைத்து “அப்படியானால் அந்தப் பயலைப் பொறுத்தவரை என் ஊகம் சரியானதுதானே?” என்று சற்றுக் களிப்புக் குரலிலேயே கேட்டான்.

     “சரியல்ல. தவறு முழுத் தவறு!”

     ஆத்திரத்துடன் துள்ளி எழுந்தான் மும்முடி. நரலோக வீரர் மீது பாய்பவனைப் போலப் பதறியெழுந்தவன் தோள் மீது அழுத்தப்பட்ட கரங்கள் வலிமையும் உரமும் கொண்டவையாயிருந்தன!

     “நீ எப்போதாவது எதையாவது சரியாக ஊகித்ததுண்டா?” என்று கரகரத்த குரலில் வந்த கேள்வி மாமன்னரிடமிருந்துதான் என்பதையும் புரிந்து நிதானித்துக் கொள்ள சில நொடிகள் பிடித்தன அவனுக்கு.

     சோழ மாமன்னன் மும்முடியையும் நரலோக வீரனையும் ஏறிட்டுப் பார்த்த பார்வைதான் எவ்வளவு தூரம் ஊடுருவிச் சென்றது? நரலோக வீரர் குழைந்து போனார்.

     “மரைவீரர் கோட்ட மாவீரர் மும்முடியின் ஊகத்தைத் தெரிந்து கொள்ளவா இங்கு வந்தார்!” என்று அவர் ஏளனமாகக் கேட்டதும் குமைந்து போயிருந்தவர் இன்னும் குன்றிக் குனிந்து நின்றார். மன்னர் இந்த வேளையில் அங்கு வருவார். வந்து தன்னிடம் இப்படிக் கேட்பார் என்று எப்படி அவர் எதிர்பார்க்க முடியும்? தவிர இளவரசன் மும்முடியிடம் போய் தமது மனநிலையை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றது எவ்வளவு மதியீனமான செயல் என்பதையும் நினைத்து நொடித்துப் போய்விட்டார் அவர்.

     “வேங்கியில் ஏதோ ஆபத்து, எதிரிகளின் ஒற்றர்கள் நடமாட்டம் பெருகிவிட்டது என்று இங்கே பதறி வந்தாய். ஆனால் கொல்லத்திலே துள்ளிப் பாய்கிறான். நேற்றுவரை நமக்கு அடங்கிக் கிடந்தவன். ‘ஆ ஊ’ என்று ஆர்ப்பரிக்கும் வீரசிங்கமே நாளை யாரை அனுப்பப் போகிறேன் தெரியுமா?” என்று மன்னர் திடீரென்று கேட்டதும் மும்முடி திகில் அடைந்துவிட்டான். கொல்லத் தலைவன் என்று அவனைக் கூறுவதைக் காட்டிலும் கொல்லுவோர் தலைவன் என்று அழைப்பதுதான் சரி. ஒருமுறை அவனிடம் எக்கச்சக்கமாகச் சிக்கிவிட்டான் மும்முடி. காடவர்கோனும், முத்தரையரும் எப்படியோ இவனைத் தப்புவித்தனர். நேருக்கு நேர் கொல்லத் தலைவன் தன்னிடம் சிக்கியவர்களைச் செய்யும் சித்திரவதைகளைப் பார்த்திருக்கிறான் இவன். தவிர சேரநாட்டுக் காடுகளில் அவர்கள் எப்படியெல்லாம் மறைந்திருக்கிறார்கள், எப்படிப் போரிடுகிறார்கள் என்பதைக்கூட எவராலும் அறிய இயலாது. ஒரு ஒழுங்கோ முறையோ இல்லாத விபரீதமான வகைகளில் விந்தை விந்தையான போர்களைத் தொடுப்பதில் - ஒரு வகையில் கொள்ளையடிப்பது, தீ வைப்பது, கொலை செய்து தலைகளைக் குவிப்பது எல்லாமே கொல்லத் தலைவனுக்குப் பிடித்த போர் முறைகள்- பேர் பெற்ற அவன் மீண்டும் கிளர்ந்தெழுந்தான் என்றால் தந்திரம், சாகசம் எல்லாம் எள்ளளவும் தெரியாத தான் போய் அவனிடம் சண்டை செய்வதா அல்லது சமாதியாவதா என்ற சஞ்சலமும் எழாமலில்லை.

     “ஏன் வாய் திறக்காமலிருக்கிறாய் மும்முடி? வாள் எடுத்துப் போராட அந்தக் கொல்லத்தான் எதிர் வரமாட்டானே என்றா? பயப்படாதே! நான், உன்னை அனுப்பவில்லை. நரலோகவீரர் போகிறார்! என்ன? மரைவிற்கோட்டத்தாரே நான் கூறுவது சரிதானே?” என்று மீண்டும் அதே குரலில் மன்னர் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்த நரலோகவீரர் “நிச்சயமாகச் சரியான உத்தரவுதான். இப்பொழுதே அதை மேற்கொள்ளுகிறேன்!” என்று ஒரு உண்மையான நாட்டுத் தொண்டர் என்ற முறையில் தயங்காது உறுதி கூறினார்.

     மன்னர் ஒரு நொடி திகைத்துவிட்டு “உண்மையாகவே நீங்கள் போக விரும்புகிறீர்களா?” என்று கேட்டதும் அவர் சுதாரிப்புடன் “நான் சோழநாட்டின் தொண்டன், தங்கள் ஊழியன், உத்திரவை மாற்றாமல் அனுமதியுங்கள். கருணாகரத் தொண்டைமானுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பினைப் போன்றது இது. நான் மறுப்பதில் நியாயமில்லை.”

     மன்னர் மும்முடியையும் காலிங்கராயனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுச் சற்று நேரம் யோசனையிலாழ்ந்தார்.

     பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல எழுந்து நின்றார். கம்பீரமான தோற்றமும் களையான முகமும் கொண்ட சோழ மாமன்னர் ஏதோ ஒரு பெருஞ் சேனையை நடத்திச் செல்லும் மாவீரனைப் போல நரலோக வீரனைப் பார்த்த பார்வையில் நான் முதிய பிராயமெய்தி விட்டதால் தளர்வுற்றிருப்பதாக உங்களில் சிலர் நினைப்பது சரியா என்று கேட்கும் பாவனை இருந்தது. நான் சொல்லுவதை மாற்றின்றி மறுப்பின்றிச் செய்வதுதான் எனக்குகந்தது என்று தெளிவாக்குவதாகவும் இருந்தது. அவர்தம் விழிகளில் ஊடுருவும் பார்வைக்கு முன்னே முத்தரையர், கோவரையர் ஏன் பழுவேட்டரையர்கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்பது பொதுவிதியாக இருக்க நரலோக வீரர் மட்டும் விதிவிலக்கா?

     “உங்களை நான் அனுப்ப முடிவு செய்ததற்குரிய முக்கியத்துவத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். கொல்லத் தலைவன் பதுங்கிப் புரியும் போரில் வல்லவன். மறைந்து தாக்குவதில் தனித் திறமை பெற்றவன். வாள், வேல், வில் எல்லாம் நமக்கு ஆயுதங்களாக இருக்கலாம். அவனுக்கோ மாய மந்திர தந்திரங்கள்தான் போர்க்கருவிகள். இருபதாண்டுகளாக இந்நாட்டு ஒற்றர் படைக்குத் தளபதியாக இருந்து நீங்கள் பெற்றுள்ள அனுபவம் ஓரளவுக்கு வெற்றிக்கு உதவலாம். இது தவிர சோழர்களுக்கான போர்கள் பலவற்றில் நீங்கள் புரிந்துள்ள சாதனைகள் காரணமாக நமக்குப் பெரும் வெற்றியை நீங்கள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”

     மன்னர் இப்படிச் சொல்லிவிட்டு சட்டென நிறுத்தியதும் நரலோக வீரன் “உங்கள் நம்பிக்கை வீண்போகாது” என்று உறுதி கூறி வணங்கியதும் அவர் தலையசைத்து விடை கொடுக்க அவர் அங்கிருந்து பரபரவென்று வெளியேறிவிட்டார். தானும் புறப்பட இதுதான் தருணம் என்று மும்முடியும் யத்தனித்ததும் “நீ என்னுடன் வா மும்முடி!” என்று மன்னர் உத்திரவிட்டு முன்னே நடக்க அவனும் வேறு வழியின்றி அவரைத் தொடர்ந்தான்.

     “நாளை நடக்கவிருக்கும் வாட்போர் பற்றி ஏதாவது முடிவு செய்திருக்கிறாயா?” என்று மன்னர் கேட்டதும் ஒருநொடி திடுக்கிட்டுப் போன மும்முடி “முடிவு என்றால்... அதுதான் ஏற்கெனவே முடிவாகிவிட்டதே!” என்று வேகமாகப் பேசினான். மன்னர் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “நீ செய்த முடிவு இருக்கட்டும். அவனுடன் நீ வாட்போர் செய்து வெற்றிகாண முடியுமாவென்று சிந்தித்தாயா? என்று கேட்டேன்” என்றார்.

     வாய்விட்டுச் சிரித்துவிட்டான் மும்முடி. வாள்முனையில் விளையாட்டு என்றால் தன்னை மிஞ்சி இந்தத்தரணியில் எவனுமில்லை என்று உலகம் அறிந்த பின்னும் இந்தத் தந்தை இப்படியொரு சந்தேகப்பட்டால் இது அவமதிப்பு இல்லையா? இந்த அவமதிப்பு தனக்கு மட்டுமா? அரச குடும்பத்துக்கல்லவா? இப்பொழுது நிதானம் விலகிவிட்டது அவனிடமிருந்து!

     “அப்பா! நீங்கள் இப்படிச் சந்தேகிப்பது நமது தன்மானத்துக்கு இழுக்காகும்!”

     “தன்மானம் என்பது உயிர்போன பின்னர் ஏது?”

     “தன்மானத்துக்காக உயிரை இழப்பதுதான் வீரம் என்பது தங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்?”

     “அப்படியானால் உயிரை இழப்பது என்று முடிவு செய்துவிட்டாயா?”

     மன்னர் மீண்டும் இத்தகைய ஏளனக் கேள்வி போடுவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே வார்த்தைகள் விஷச்சரங்களாகப் புறப்பட்டுவிட்டது அவனிடமிருந்து. தந்தை, சோழ மாமன்னர், தான் இளவரசன் என்ற நிலையெல்லாம் பறந்துவிட்டது.

     “அப்பா, உங்கள் பேச்சைக் கேட்டு நீங்களே வெட்கித் துடித்திருக்க வேண்டும். உங்கள் மகனைப் பார்த்துக் கேட்கிறீர்களே இப்படி? இது கேவலமானதில்லையா? மும்முடியின் வாள் முனையால் உருண்ட சிரங்கள் கூட நீங்கள் இப்படிப் பேசுவதைப் பொறுக்காது. எவனோ ஒரு அவலப் பயல், அந்நியத் துரோகி, ஒற்றன் அவன்; ஏதோ பெரிய தீரன் சூரன் என்று அந்தக் கோவரையன் கூறிவிட்டான் என்பதற்காக அந்த வீணனை மெய்க்காவலனாக...”

     “மும்முடி மூடு வாயை!” சட்டென்று வாய் மூடிவிட்டான், இந்த அதட்டலினால்! அடக்கிவிட்ட அதட்டல் வார்த்தைகளைப் பேசியவர் தன் தந்தையல்ல என்பதைத் தெரிந்து கொண்ட அவன் குரல் தன் தாயினுடையதுதான் என்பதை அறிய அதிக நேரமாகவில்லை.

     “யாரிடம், என்ன பேசுகிறோம் என்பது கூடவா தெரியவில்லை?”

     மீண்டும் தாயிடமிருந்துதான் இந்த வேக வார்த்தைகள் வந்தன. மவுனம் சாதித்துவிட்டாலும் மனம் வெம்பித் தவித்தது.

     “பதட்டத்தால் பணிவையிழந்து கோபத்தால் மதியையும் இழந்துவிடும் நீ என் வயிற்றில் பிறந்ததே பாவம்!”

     “அன்னையே! மன்னித்துவிடுங்கள்! அன்புத் தந்தையை அவமதிக்கும் நோக்கமில்லை எனக்கு. ஆனால்...”

     மன்னர் குறுகிட்டார் இப்போது!

     “தேவி! நீ மகனுக்கு இரங்குவதோ அன்பு காட்டி புத்தி கூறுவதோ நிரந்தரப் பலனைத் தராது. முடிவென்ன என்று கேட்டேன். இப்படிக் கேட்டதற்கு நீங்களே நாண வேண்டும் என்றான். மீண்டும் சொல்லுகிறேன் மும்முடி. நீ என் மகன் என்பதும் இந்த நாட்டின் இளவரசன் என்பதும் வெவ்வேறு நிலைகள். இந்த நாட்டு இளவரசன் நாளை, வாட்போரில் வெல்லாமற் போனால் நஷ்டம் யாருக்கு? இந்த நாட்டு மக்களின் பார்வையில் நமக்கு, இந்தச் சோழநாட்டுக்கு, வளமுறையாகப் பெருகி வரும் வீரபரம்பரைக்குத் தோல்வி என்றால்... அந்த இளைஞன் நீ நினைப்பது போல் வீணன் இல்லை, அநாதையும் இல்லை. ஒற்றனா இல்லையா என்பதும் இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் அவன் உண்மையான வீரன். வாட்போரிலும் வல்லவன் என்று நம்ப இடமிருக்கிறது.”

     “அதெப்படி? அப்படியே இருந்தாலும் என்னவிட அவன் தேர்ந்தவன் என்பது...”

     “உன்னுடைய இந்த இறுமாப்பு ஒன்றே போதும் உன்னுடைய வீழ்ச்சிக்கு!”

     தாய் இப்படிக் கூறியதும் பதறிப்போன மும்முடியைக் கையமர்த்திய மன்னர் “தேவி, வீழ்ச்சி என்ற வார்த்தையே வேண்டாம். ஏன் தான் இப்போதெல்லாம் இப்படிப் பேசத் தோன்றுகிறதோ தெரியவில்லை!”

     “மும்முடி தங்களையே அவமதிக்கும் போது இப்படிப் பேசாமல் இருப்பது எப்படி?”

     “இல்லை! தேவி இல்லை. மும்முடி எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறான். நானும் இப்படித்தான் இருந்தவன். என்னை ஆளாக்கியவர் அன்னை, அரசாளத் தகுதியாக்கியவர் பேரரசரான சோழ மாமன்னர். ஆனால் என்ன வாழப் பயிற்றியவர் கடல்நாடுடையார். அதை அறியாத இவன் அவரைக் கூடக் கேவலமாகப் பேசிவிட்டான்...”

     மன்னர் மார்பகம் விம்மி விம்மி எழுந்தது. ஒரு நொடி தள்ளாடி நின்றவர் சட்டென்று மகனுடைய தோளைப் பிடித்துக் கொண்டார். அவனோ திகைப்பால் குழம்பி பிரமையுடன் பார்த்தான் அவரை. கனிவும், கண்ணீரும் நிறைந்த கண்கள் மாமன்னருடையதாகிவிட்டன!

     “மகனே! நீ கடல்நாடுடையாரைப் பற்றிச் சற்று முன் கூறிய வார்த்தைகள் என்னை மட்டும் அல்ல, இந்த சாம்ராஜ்யத்தையே அழித்துவிடும் விஷசரங்கள்! என் மகனாகப் பிறந்த உன்னுடைய வாய் இத்தகைய வார்த்தைகளை உச்சரித்ததென்றால்.. நானும் அதற்குக் காரணம். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் பேசினேன்! ஆனால் அதற்காக நான் அனுபவித்தவை... சொல்லத்திறமில்லை.”

     “மகனே கேள்! இன்று சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை ஏழு கடல்களையும் தாண்டி திக்கெட்டும் பரவியிருக்கிறதென்றால் அந்தப் பெருமை என்னால் உண்டானதல்ல. அவரால் உண்டானது. நமது வணிகர்கள் கடல் கடந்து கனகம் குவித்துத் தருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை அவரைச் சேர்ந்தது. சீனம் சாவகம்; சிங்களம், சுமத்திரா எல்லாம் நம்மிடம் மதிப்புக் காட்டுகின்றன வென்றால் அனைத்தும் அவரைச் சார்ந்தது.

     “சாவகன் பகைமை கொண்டு எதிர்க்கிறான் ஒரு சிறுவனை என்றால், அதே இளைஞனை அவர் ஆதரிக்கிறார் என்றால் அது பெரியதொரு அரசியல் தந்திரம். இது புரியவில்லை உனக்கு! தவிர எனக்கு அவன் அந்தரங்கக் காவலன் என்றால் ஒரு நொடியில் அவன் என்னுடைய பார்வையிலிருந்து தப்புவது இயலாது என்பதற்குத்தானே அன்றி எனக்கு அவன் காவல் அல்ல. எனக்குத் தற்காத்துக் கொள்ள வழி தெரியாமலா நான் இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறேன்! இதைப் புரிந்து கொள் நீ முதலில்!”

     மன்னர் மேலே பேசாமல் ஒரு நொடி தயங்கிப் பெருமூச்செறிந்து நின்றார். மகனோ வாய் பேச வராது தனது பதற்றம், முன்கோபம், கடல்நாடுடையாரைக் கண்டபடி பேசிவிட்டோமே என்ற மனக்குமைச்சலுடன் மவுனமாகவே இருந்தான்.

     சோழமாதேவிதான் இந்த நெருக்கடிச் சூழ்நிலையில் தெளிவு காண முயன்றாள்.

     “பேரமைச்சர் வந்து அன்னையாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்! அதை அறிவிக்கவே வந்தேன்!” என்று அறிவித்தாள்.

     சட்டென்று மன்னர் புறப்பட்டுவிட்டார். ஆனால் போகும் போது “மும்முடி, மனிதன் உணர்ச்சி வசப்படும் போது செயலிழந்துவிடுகிறான். கோபப்படும் போது வலுவிழந்துவிடுகிறான். ஆணவம் கொள்ளும் போது அழிவைத் தேடிக் கொள்ளுகிறான். இது சாதாரணமாகத் தெரிந்ததுதான். நாளை நீ அவனுடன் வாள் போரிடும் போது உன் மீது படும் ஒவ்வொரு காயமும் எங்கள் இதயத்தில் விழும் குத்துக்கள் என்பதை மறவாமல் இந்தச் சாதாரண உண்மைகளையும் மறக்காமலிருந்தால் ஏதோ ஒருவகையில் ஒப்பேற முடியும். இதைத் தவிர நான் இப்போது வேறு எதையும் கூறுவதற்கில்லை...” மன்னர் நகர்ந்துவிட்டார். ஆனால் தன்னுடன் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசாது தாயும் அவரைத் தொடர்வது கண்டு அவன் அதிர்ந்து போய் நின்றான் நெடுநேரம்!