ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

12

     ஜெகதேவ வல்லபேந்திரனுக்கு இப்போது உண்மையிலேயே எதுவுமே புரியாத ஒரு குழப்ப நிலை! இந்த ஹரதத்தன் ஏன் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறான்? என்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்த போது அவனுடைய பத்தாயிரம் வீரர்களும் அணி அணியாகத் தொடர்ந்து வருவது கண்டு மேலும் திடுக்கிட்டுப் போய் குழம்பி விட்டான். ஊக சக்தியும் உறுதியான முடிவும் கொள்ளும் யுக்தி புத்தியுள்ள அவனுக்கே இந்த நிலையென்றால் ரணசூரனும் பூரணசந்திரனும் நாம் தூதுவர்களாக இருப்பினும் நம்மை இவர்கள் ஏதோ பழிவாங்கும் சதி நினைவுடன்தான் இங்ஙனம் எங்கோ கொண்டு செல்லுகின்றனர் என்று உறுதியாக எண்ணிவிட்டார்கள். புதிய மதம், புதிய சதி, நேற்று வரையில் ஓடிய க்ஷத்திரிய ரத்தம் இன்று சதிகார மிலேச்சனுடையதாக மாறிவிட்டது. அவ்வளவுதான்...

     ஆனால் பத்தாயிரம் பேரிடமிருந்து தப்பிச் செல்லுதல் என்பதும் சாத்தியமல்ல. எனவே வல்லபனையும் நம்மையும் ஆண்டவன்தான் எப்படியாவது காப்பாற்ற வரவேண்டும்!

     தனது துணைவர்கள் நினைவு இவ்வாறாக இருந்தும், தன் மனதிலே ஏற்பட்டுள்ள குழப்பம் சிறிதும் தெளிய சூசகம் இல்லாவிட்டாலும் ஏனோ ஹரதத்தன் என்னும் அமீர் அரூனைக் கேவலமான சதிகாரனாக ஊகித்திட வல்லபன் மனம் இடந்தரவில்லை! வங்கத்தினர் திசை வழிதான் இவர்கள் போவது என்றாலும் நாம் வந்த வழி வேறு. இவர்கள் நமக்குக் காட்டி அழைத்துச் செல்லும் வழிவேறு. எனவே இது ஒரு மர்மமான செயல்தான். ஆனால் இதற்குச் சதி நோக்கம் காரணமாயிருந்தால் ஏற்கனவே நம்மை இவர்கள் கைது செய்திருக்க முடியும்! அப்படிச் செய்யாமல் இவ்வாறு எங்கோ கொண்டு செல்வானேன்? எனவே, சதி என்பதற்குப் பதில் குழப்பம் என்றுதான் கூற வேண்டும். ஆனால் இப்படிக் குழப்புவதனால் மட்டும் என்ன லாபம்?

     “கஜினி சுல்தான், இனி நாம் பிறர் தலையீடின்றி பேச வேண்டிய கட்டம் வந்திருப்பதாக நினைக்கின்றேன். உங்களுக்கு இதில் மறுப்பில்லையே!” என்று கொஞ்சம் ஏளனமும், ஆனால் நிர்ப்பயமான மிடுக்குமுள்ள குரலில் ஹரதத்தன் கேட்டதும் சுல்தான் நீண்டதொரு பெருமூச்சுவிட்டுக் கொண்டே “அமீர்! நான் உன்னிடம் கொடுத்த வாக்குறுதியிலிருந்து நழுவ விரும்பவில்லை என்பதுதான் இப்போது நான் மறுக்க கூடாத முக்கிய விஷயம். வேறு எதுவுமில்லை. மற்றவை உன் இஷ்டம் போல நடக்கட்டும்” என்று பதில் அளித்ததும் சில நொடிகள் வாய் திறவாமல் குதிரையை நடத்தினான் ஹரதத்தன்.

     பிறகு சட்டென்று வல்லபர் பக்கம் திரும்பி “சோழ சக்கரவர்த்திகளின் மஹாசேனாபதியே, நான் தங்கள் வழி அனுப்பாமல் என் வழியில் கொண்டு வந்தது பற்றி வருந்த வேண்டாம். தங்களைப் பொறுத்தவரை நான் மறந்து போய்க்கூட ஒரு தவறும் செய்யமாட்டேன். ஆனால் எங்கள் சஹமன்னர்கள் நான் வேறு சமயத்தில் சேர்ந்தது நாட்டுக்குத் துரோகம் என்று என்னை இகழ்ந்து ஒதுங்கி விட்டார்கள். ஒரு லட்சியத்துக்காக நான் மேற்கொண்டுள்ள நிலை இது என்பது இதோ இந்த சுல்தான் கஜினிக்குத்தான் தெரியும். நானும் எனது தோழர்களான பத்தாயிரம் பேரும் இன்று முஸ்லீம்களாக மாறினோம் என்றால், அதை இவர்கள் நம்பமாட்டார்கள். தேவையில்லை. ஆனால் நான் இப்படி இருக்க ஒரு பெரிய இடத்திலிருந்து ஆமாம், இந்தப் பிராந்தியத்திலேயே மஹாகுருவாக மதிக்கப் பெறும் சாக்த பீட சர்வோத்தமரின் அனுமதி உண்டு.”

     “பொய்! முழுப் பொய்!” என்று கர்ஜித்தபடி பூரணசந்திரன் ஒரு துள்ளு துள்ளிக் குறுக்கே வர சில நொடிகள் அனைவரும் திடுக்கிட்டுத் திகைக்காமலில்லை.

     “நீ மிலேச்சனான நொடியிலேயே பொய் பேசுவதென்று முடிவு செய்தது உனக்குச் சரியானதாக இருக்கலாம். எங்களுக்கு சரியல்ல. எனவே அந்த மஹாகுருவை தயவு செய்து உன் நாவால் மீண்டும் ஒருமுறை உச்சரியாதே. அப்படி உச்சரிப்பது அவசியமானால் அதற்கு முன்னர் என்னைக் கொன்றுவிடு. இஷ்டமில்லாவிட்டால் ஒரு வாளாவது கொடு; நானே தலையைக் கொய்து கொள்ளுகிறேன்!” என்று வார்த்தைகளை விஷக் கணைகளாகத் தொகுத்துவிட்டான் பூரணசந்திரன்.

     சுல்தான் கஜினி திடீரென்று அவன் கத்திய கத்தலால் சற்று நேரம் பதறிவிட்டு, “அமீர்! ஏன் இந்த வம்பெல்லாம் நமக்கு? தூது வந்தவர்களை வழியனுப்புவது என்றால் நாம் இது வரை வந்தது போதாதா? முதலில் அவர்களை அனுப்பி விடு. பிறகு நம் பிரச்னைகளை நாம் தீர்த்துக் கொள்ளலாம்” என்று அவசரம் அவசரமாகக் கூறியதும் வல்லபன் இதென்ன புதுப்பிரச்சனை என்று திகைத்தான்.

     ஹரதத்தனோ இடி இடியென்று சிரித்துவிட்டு “சுல்தான், நம்முடைய பிரச்னை அவ்வளவு சுளுவில் தீர்ந்து விடக் கூடியதா? ஆனால் நம்முடைய பிரச்னை பற்றிய விவாதம் இப்போது தேவையில்லை. நாம் இருபது கல்கள்தான் வந்திருக்கிறோம். இன்னும் அறுபத்தெட்டு கல் போயாக வேண்டும். உங்களுக்குச் சிரமமாக இருக்குமானால், சய்யீதைக் கூப்பிடுகிறேன். அவன் குதிரையில் நீங்கள் ஏறிக் கொள்ளலாம்” என்றான் ஹரதத்தன்.

     “தேவையில்லை அமீர். இயன்ற வரை நான் என் குதிரை மீதே சவாரி செய்து வருகிறேன். ஆனால் நாம் எங்கே போகிறோம் என்றாவது தெரிந்து கொள்ளலாமா?”

     “நிச்சயமாக உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் சுல்தான் சாஹேப். நாம் காஜுராஹோஜ் செல்லுகிறோம்” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்ததும் “என்ன...?” என்று ஏக காலத்தில் சுல்தான் முதல் ரணசூரன் வரை திடுக்கிட்டுக் கேட்டதும் உள்ளூரச் சிரித்துக் கொண்டான் ஹரதத்தன்.

     ஆனால் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த சுல்தான் கஜினி முகமது, “அந்நாட்டு மன்னன் நம் விரோதி இல்லையா?” என்று கேட்டான் பரபரப்புடன்.

     “அவன் உங்கள் விரோதி என்பது உண்மைதான். ஆனால் உங்களைக் கண்டதும் ஏன் அவன் ஒரு கண்டனாகவோ அல்லது என் போலவோ மாறிவிடக் கூடாது?” என்று கேலிக் குரலில் கேட்டதும், “அமீர், நமக்குள் விளையாடும் சமயம் அல்ல இது. நான் உன்னைப் பூரணமாக நம்பித்தான் உன்னுடன் வந்திருக்கிறேன். இன்று மட்டும் அல்ல, நான் உன்னை என்றுமே நம்பத்தான் செய்வேன். இதை நீயே நன்கு அறிவாய்?” என்றான்.

     “ஆம், இல்லையென்றா நான் சொன்னேன்? நம்பிக்கை வீண் போகாது.”

     “நம்பிக்கைக்கு மாறாக நீ நடப்பாய் என்று நான் கூறவில்லை. ஆனால் நீ போகும் இடம் அதாவது என்னை அழைத்துச் செல்லுமிடம் என் எதிரியின் இருப்பிடம் என்பது உனக்குத் தெரியும்.”

     “அதாவது நம் எதிரி என்று கூறுங்கள்!”

     “ஆம்; ஆனால் அவன் இவர்களை வரவேற்று உபசரித்து அனுப்பி உதவியவனின் நண்பன்!”

     “அது தவறா?”

     “தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் இவர்கள் அவனுடைய நண்பர்கள்; நம்மைப் போல எதிரிகள் அல்ல.”

     “நமக்குப் பத்தாயிரம் வீரர்கள் துணை இருக்கிறது சுல்தான்!”

     “இல்லையென்று கூறவில்லை. அவன் இதைவிடப் பெரும் படையுடன் நம்மை எதிர்நோக்கியிருந்தால்...”

     “மாட்டான். நாம் அங்கு போய்த் திரும்பும் வரை நமக்கு எவராலும் எவ்வித ஆபத்தும் இல்லை.”

     “உன்னை நான் இன்னமும் பூரணமாக நம்புகிறேன்!”

     “பின்னே பேசாமல் வாருங்கள்...!” என்றான் ஹரதத்தன்.

     சுல்தான் சொன்னான், “அமீர், நீ திடீரென்று இவர்களிடம் இந்த முஸ்லீம் மதமாற்றம் ஒரு லட்சியத்துக்காக என்று கூறினாய். உங்கள் முன்னால் குருவின் பெயரையும் இழுத்தாய். அதெல்லாம் எதற்கு? நீ முன்பு முழு மனதுடன் நாங்கள் மாறிவிட்டோம் என்று கூறி எங்கள் இஸ்லாத்தை ஏற்றவன். இப்போது காரணமாக என்றால் யார் எதை நம்புவது? அப்படியே நடிப்புக்காக மாறினாலும் கூட உன்னை இனி உன்னுடைய முந்தைய மதத்தினர் ஏற்கப் போவதில்லை. தெரிந்தும் ஏன் நீ அப்படிக் கூற வேண்டும்?” என்று கேட்டான்.

     ஆனால் பூரணசந்திரனால் மேலும் சும்மாயிருக்க முடியவில்லை. அவர்களுடைய உரையாடலை அவன் விஷமென வெறுத்தவனாய் “இதோ பார் சுல்தான்! தலைக்கு மேல் போனது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? எங்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த நீசன்! போலியானாலும் மதம் மாறியது மாறியதுதான். அதுவும் மிலேச்ச மதம் என்பதும் உண்மைதான். எனவே இவனை நாங்கள் திரும்பவும் ஏற்பதில்லை. இது உறுதி” என்றான் ஆத்திரத்துடன்.

     சுல்தான் அவனை வெறிக்கப் பார்த்தான்.

     “நான் ஹிந்து என்ற முத்திரையைப் பெற விரும்பவில்லை பூரணசந்திரரே! இப்பொழுது எப்படியோ அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் நமது பாரத பூமியில் இனியாவது எஞ்சியுள்ள பல நாடுகள் காக்கப்பட வேண்டும். பல மன்னர்கள் காக்கப்பட வேண்டும். அதற்காக ஒருவன் பலியாவதால் ஒன்றும் மோசமாகிவிடப் போவதில்லை!” என்றான் அலட்சியமாக.

     பூரணசந்திரனுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை.

     ரணசூரனோ தானும் ஏதாவது பேசியாக வேண்டும் என்ற நினைவில் “நீ மட்டும் அல்ல. உன்னுடன் பத்தாயிரம் பேர்களும் மிலேச்சர்களாகி விட்டார்கள். நீங்கள் பின் பற்றிய இந்த நாடகம் மேலும் வளராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?” என்று கேட்டான் வேகமாக.

     ஹரதத்தன் அயர்ந்து விடவில்லை.

     “ரணசூரா! நான் மஹாபரணத்தின் குலசந்திரனில்லை. நீயே சொல். அவன் வழியை மற்ற அரசர்களும் பின்பற்றினால் என்ன ஆகும் என்பதை!” என்று கேலிக் குரலில் கேட்டதும் ரணசூரனுக்கு அளவு கடந்த ஆத்திரம் உண்டாகிவிட்டது.

     “குலசந்திரன் தீக்குளித்தான் என்பது புரட்டர்களின் கூற்று. வேண்டுமென்றே உங்கள் மிலேச்ச மந்திரிகள் கிளப்பி விட்ட அபாண்டம். நயவஞ்சகமாக தீ வைத்துவிட்டு அதில் கூண்டோடு அவனைக் கைலாசம் அனுப்பிவிட்டு புரளி கிளப்பிய புல்லர்கள் பேச்சை யார் நம்புவது? எதிரிகளிடம் போராடிக் கொண்டே செத்தவர்கள் வீரர்கள். ஒரு பீமதேவ், ஒரு ராஜ்யபால், ஒரு ஹரதத்தன் இங்கும் அங்கும் இருக்கலாம். ஆனால் வித்யாதரனை இன்னும் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லை, டில்லியை* நீங்கள் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை! பயத்தினாலும் கோழைத்தனத்தாலும் காட்டிக் கொடுப்பவர்கள்தான் இன்று உங்கள் சுல்தானின் தோழர்கள். இவர்களில் நீயும் ஒருவன் என்பதில் என்ன ஐயம்?” என்று கேட்டதும் வல்லபர் திடுக்கிட்டார்.

     *டில்லி! கஜினி முகமது இந்தியாவின் வடபகுதியில் பல நாடுகளுடன் போர் நடத்தினாலும் டில்லியில் நுழையவே முயற்சிக்கவில்லை என்பதாக ஆல்பரூனியும், உத்பியும் குறிப்பிட்டுள்ளனர்.

     “இது தேவையில்லாத கேள்வி. எதிரியின் தயவில் இருக்கும் போது இம்மாதிரி ரோசத்தைக் கிளப்பும் கேள்வி கேட்பது நியாயமில்லை” என்று பதறினார்.

     ஆனால் சுல்தான் அவருக்கு மேல் பதறினார்.

     “அமீர்! இந்தக் காபீர் உன்னைக் கேவலமாகப் பேசிவிட்டான்! இதை நீ இப்படியே விடலாமா?” என்று சினத்துடன் கேட்டதும் “இல்லை சுல்தான், வெறும் வார்த்தைகள் சாதனையைப் புரிந்துவிடுமா? விட்டுத் தள்ளுங்கள்!” என்று குதிரையை முடுக்கிவிட்டு முன்னேறினான்.

     வல்லபர் மட்டும் இல்லை, ரணசூரனும் திடுக்கிட்டான். இந்நேரம் வாளை வீசியிருக்க வேண்டுமே! ஏன் அப்படிச் செய்யாமல் நகர்ந்து விட்டான் அலட்சியமாக!

     ‘ஒருவேளை இவன் உண்மையான முஸ்லீமாகாமல் நடிக்கத்தான் செய்கிறானோ? சர்வோத்தமர் சாக்தபீடர் தேர்ந்த அரசியல் சாணக்கியரும் அரிய சாதனைக்காக எத்தகைய தந்திரங்களை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்கையுள்ளவர். எனவே இவனுடைய இந்த நடிப்புக்கு அவர் ஆதரவும் ஒருவேளை இருக்குமோ!

     அப்படியானால்... அப்படியானால் எதற்காக?’

     ராஜ்யபாலனிடம் சாக்த பீடத்தாருக்கும் பெரும் அன்பு உண்டு. அவன் கொல்லப்பட்டு விட்டான், ஜெயந்திரன் அந்த வம்சத்தையே திரிலோசன பாலனைத் தவிர மற்றவர்களை அழித்து விடத் தீர்மானித்திருக்கிறான். ராஜ்யபாலனின் இரண்டாம் மனைவியின் மகன் ஒருத்தன் எங்கோ ஓடிவிட்டான். அவனைத் தேடி அலைகிறான். இவன் கோவிந்த சந்திரனுக்கு உறவினன் அவன். அந்த திரிலோகனுக்கும் இந்த ஹரதத்தனுக்கும் சர்வோத்தமருக்கும் ஏதாவது மர்ம ஒப்பந்தம் ஏற்பட்டிருக்குமா? மீண்டும் திரிலோசனனைத் தாக்காதிருக்கவே, இடையிலிருக்கும் பாரன் நாட்டைத் தாண்டிச் செல்லாதிருக்கவே, இப்படி மாறுதல் ஏற்பட்டிருக்குமா?’

     ரணசூரன் மூளை அபாரமாக வேலை செய்தது.

     ஆனால் பூரணசந்திரன் சர்வோத்தமர் என்றாலே அஞ்சி பயபக்தியுடன் பணிபவன். ஆதலால் எந்த மர்மத்தையும் தந்திரத்தையும் அவருடன் இணைக்க அவன் தயாராயில்லை!

     காஜுராஹோ எல்லையை நெருங்கிவிட்டனர். நகரம் இன்னும் ஒரு நாலுகால் தொலைவுதான்! இருள் இன்னும் முழுமையாக அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளவில்லையானாலும் அது தனது பரவும் கடமையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து கொண்டிருந்தது. சுல்தான் கஜினி பயணக் களைப்பால் மிகவும் சோர்ந்துவிட்டான். எனினும் தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்வதில் அமீர் அரூன் ஒரு குறையும் வைக்கமாட்டான் என்று பூரணமாக நம்பியிருந்ததால் அதிகம் கவலைப்படவில்லை.

     ஆனால் திடீரென்று எல்லைக்கு வெளியே ஒரே சமயத்தில் அறுபது வெள்ளைப் புரவிகளில் ஆயுதந்தரித்த காஜுரஹோ வீரர்கள் தோன்றி இவர்களை நோக்கி வேகமாக வந்ததும் சுல்தான் சற்றே மிரண்டு விட்டான்!

     “என் மகனை நான் நம்பும் அளவுக்கு இந்த அமீர் அரூனை ஆண்டவர் ஆணையாக நம்புகிறேன் நான். எனவே இவனுடைய துணையும் ஆதரவும் எனக்குக் கிட்டும் போது வேறு எவருடைய என் மகனுடையதாயிருப்பினும் கூட, உதவியும் ஆதரவும் தேவையில்லை. ஏனென்றால் ஒரே சமயத்தில் இந்துஸ்தானத்தில் இந்த அதிசய நிகழ்ச்சியை அதாவது பத்தாயிரம் வீரர்கள் மதம் மாறுவதை நிகழ்த்தியுள்ளனர். அதற்குக் காரணமான இந்த அமீர் அரூனை நான் இந்த விநாடி முதல் என்னுடையவனாகவே ஏற்று நம்பித்துணையாகக் கொண்டிருக்கிறேன்!” என்று அன்று உறுதி கூறிய வாக்குப்படியே சுல்தான் இன்று வரை நடந்து வருகிறார். ஐம்பதாயிரத்துக்கு மேல் இந்துக்கள் கைதாகியுள்ளனர் இவரிடம். எனினும் அவர்கள் மதம் மாற மறுத்துச் சாகத் தயாராகி விட்டனர்! இரண்டு லட்சம் பேருக்கு மேல் யுத்தத்தில் அக்கிரமமாகக் கொல்லப்பட்டனர். கஜினிக்கே தாங்க முடியவில்லை. எனவேதான் ஹரதத்தனின் அதிசயத்தை அவர் இதய பூர்வமாக வரவேற்று அந்த நொடியிலேயே அவனைப் பூரணமாக நம்பிவிட்டான்.

     ஆனால் இப்போது நடப்பதென்ன? வெள்ளைக் குதிரைகள் வெள்ளை ஆடையணிகள் தரித்தவர்கள்தான் என்றாலும் இந்த வெள்ளையாடை வீரர்கள் ஆயுதங்களுடன் வருவானேன்! என்று கலங்கிய மனநிலையுடன் புதியதோர் குழப்பத்துக்குள்ளாகி விட்டான் கஜினி முகமது.

     ஆனால் வந்த வீரர்கள் உஜ்ஜயினி நாட்டின் குதிரைப் படையில் ஒரு சிறு அணி. பிரதம தளபதி நரஹிரி முன்னே வந்து “சோழ சாம்ராஜ்ய பீடாதிபதியவர்களின் நியாய தூதுவரையும், கஜினி நாட்டின் அதிபர் சுல்தான் முகமது அவர்களையும் எல்லையிலேயே சந்தித்து தக்க மரியாதைகளுடன் அழைத்து வரும்படி எங்கள் மன்னர் மஹாராஜாதிராஜர் வித்யாதரதேவர்* உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு இங்கே பக்கத்தில் உள்ள வனமாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்!” என்று அறிவிக்கவும் கஜினி வியப்புடன் ஹரதத்தனைப் பார்க்க ஹரதத்தனோ வானத்தைப் பார்த்தான்.

     *வித்யாதர தேவன் என்ற மன்னர் கன்னோசி அருகில் உள்ள ஏதோ ஒரு நாட்டு மன்னராக ஒரு சில வரலாற்றாசிரியர்களும், இபுன் ஆஸர் காஜுராஹோ நாட்டின் அரசன் என்றும் கூறுகிறார். நானும் அதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

     வல்லபேந்திரன் தன் துணைவர்களைப் பார்க்க அவர்கள் எதை நம்புவது எதை நம்பாதிருப்பது என்று புரியாமல் விழித்தனர். பிறகு வல்லபரே முடிவு செய்யட்டும் என்று இருவரும் மவுனமாகிவிட்டனர்.

     சோழரின் பிரதம தளபதி இன்னும் சற்று முன்னே வர தனது அமீருடன் தனித்துப் பேசுவதற்காக சுல்தான் கஜினி சிறிது நகர ஹரதத்தனும் தொடர்ந்தான்.

     வல்லபர் ஏன் தன்னை இவ்வளவு நெருங்கி வந்திருக்கிறான் இவன் என்று சிந்திப்பதற்குள் “மஹாசேனாபதி! இதைத் தங்களிடம் சேர்ப்பிக்கும்படி எனக்கு உத்திரவு!” என்று கூறிவிட்டு மிக மரியாதையுடன் கையடக்கமான ஒரு சிறு பேழையை நீட்ட வியப்புடன் அதைத் தயக்கமாகவே வாங்கிய வல்லபர் பரபரப்புடன் திறந்ததும் “ஆ...!” என்று அடுத்த நொடியே வாய்விட்டுக் கத்திவிட்டார்.

     பக்கத்தில் இருந்தவர்கள் பதற எட்ட இருந்த சுல்தான் திரும்பிப் பார்த்தான் சட்டென்று.

     ‘அடேடே! இவ்வளவு அனுபவமிருந்தும் ஒரு நொடி பதறிக் கூச்சல் போட்டுவிட்டோம்’ என்று சுதாரித்துக் கொண்ட வல்லபர் பரபரப்புடன் “நல்லது. மிகமிக நல்லது தளபதி!” என்று ஏதோ வார்த்தைகளைக் கோர்வையில்லாது உளறி வைத்தார் பாவம்.

     வியப்பும் திகைப்பும் சில சமயம் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களைக்கூடத் தன்னிலை இழக்கச் செய்துவிடும் என்பதற்கு அவர் அப்போது உதாரணமாகிவிட்டார்.

     ஆனால் பூரணசந்திரனும் ரணசூரனும், ‘கற்பனையில் கூட உருவாக்க முடியாத நிகழ்ச்சிகள், செயல்களாகப் பரிணமிப்பது என்றால் அதை அதிசயமாகத்தான் கருத முடியுமே தவிர எளிதாகக் கருதிவிட முடியுமா?’ என்று நினைத்தபடி வல்லபர் பின்னே மவுனமாகவே சென்றனர்.

     காஜுராஹோவின் முன்னாள் மன்னன் விஜயமதனன் என்பானின் வழிவந்த இந்த வித்யாதரன் இதுவரை யாரிடமும் தோல்வியடையாதவன் என்ற தனிப் பெருமை அவனுக்குண்டு. சோழனுடன் அவன் சமநிலை சமமாகிவிட்டதாகவும் ஒரு செய்தி. கஜனியோ இந்தப் பகுதிக்கு வர இயலவில்லை. தவிர சோழனுடன் நெருங்கிய நட்புக்கு இவன் பலமுறைகளை ஏற்படுத்திக் கொண்டான். அவற்றில் முக்கியமானது இந்தப் பகுதியிலிருந்து பல சைவ குருமார்களைத் தென்னாட்டுக்கு அனுப்பி உதவியதுதான். எப்படி வங்கத்துக்கு கன்னட நாட்டிலிருந்து திரிலோசன சிவாசாரியார் வந்தாரோ அதுபோலவே! இவனும் சர்வோத்தம சாக்த பீடர் யோசனைப்படி பல அறிஞர்களை தென்னாட்டுக்கு அனுப்பியிருந்தான். சாளுக்கியர்களின் இரு பிரிவினரையும் வென்ற பிறகு கதம்பர்கள் எகிறிய போது சோழப் படைகள் இருபுறத்திலும் போர் செய்ய வெகுவாக அலைய வேண்டியதிருந்தது. அச்சமயம் இவன் ஆட்களாகவும், உணவு, உடைகள் போன்ற பலவகை உதவிகளைச் செய்து சோழ இராஜேந்திரனின் பேரன்புக்குப் பாத்திரமானான்.

     இராஜேந்திரன் இவனுடன் நெருங்கிய நட்புக் கொண்டாடியதும் பூவாளம், ஜயபாலபூர், ஸிலாஸபுரம் ஆகிய நாட்டு மன்னர்களும் சோழனுடன் நல்லதனமாகவே நட்புக் கொண்டு விட்டார்கள். அதுமட்டுமில்லை, உண்மையாகவே பாரதத்தை ஒன்றுபடுத்தி துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கும் பல குட்டி நாடுகளிடையே மோதலின்றி ஒரே தலைமையில் ஒரே சமஷ்டி நாடாக இயங்குவதை இந்த மன்னர்கள் வெகுவாக வரவேற்றனர்.

     இப்படி ஏற்பட்டால்தான் கஜினி போன்ற அன்னிய எதிரிகள் அடிக்கடி படையெடுத்து வந்து குட்டி ராஜ்யங்களை அழிப்பதும் அக்கிரமப் போர் நடத்துவதும் இல்லாமற் போகும். அதுமட்டுமின்றி, குட்டி மன்னர்கள் கொட்டமும் அடங்கி நம்மில் யார் உசத்தி என்ற சண்டைகள் இல்லாமலிருக்கும் என்றும் கருதி சோழனின் நோக்கத்தைப் பூரணமாக ஆதரித்து நின்றனர்.

     காஜுராஹோவின் மன்னனான ராஜவித்யாதரன் அரசியலிலும் போரிலும் எவ்வளவு வல்லவனோ அவ்வளவுக்கு அதிகமாகவே கல்வியிலும் கலை வளமும் பெற்றவன். இசை மேதை. இலக்கிய மேதை, கவிஞன், கருத்தாழமிக்க பேச்சாளன், வீரன், அழகன்! ஆம் அக்காலத்தில் இவனுக்கு ஈடான ஆணழகர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குக் கூட இல்லை!

     கலைஞன் என்பதுடன் கலைகளை அப்பகுதியில் வேறெந்த மன்னனையும்விட அதிகமாக வளர்த்தவன். சிரஞ்சீவிச் சிற்பக்கலை நகரமாக காஜுராஹோ இன்றும் இருப்பதற்கு இவனே மூலகாரணம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் கண்கூடாக அறிகிறோம். இந்தச் சந்தேல ராஜவம்சத்தானான வித்யாதரன் இல்லையேல் காஜுராஹோ என்னும் குடைவரைச் சிற்பபுரியே இல்லை என்று கூறி மீண்டும் நாம் எல்லைக்குச் செல்வோம்.

     எல்லையின் மற்றவர்களைப் போல நாமும் வித்யாதரனின் விருந்தினராகத் தங்க இசைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

     சுல்தான் கஜினி உண்டி முடித்துத் தன் அறையில் நுழைந்ததும் சோர்வு அவனை வெகுவாக ஆட்கொண்டு விட்டதால் புரியாத்தனமாய் இந்த அமீர் அரூனின் வழி வந்துவிட்டோமே என்று கவலைப்பட ஆரம்பித்தவன் சில நொடிகளிலேயே ஆழ்ந்துவிட்டான் நல்ல உறக்கத்தில்.

     ஆனால் வெளியே ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து கொண்ட வல்லபதேவர் தமது தோழர்களிடம், “நண்பர்களே! நாம் எதிர்பாராத இடத்துக்கு எதிர்பாராத விதமாக வந்திருக்கிறோம். என்றாலும் நீங்கள் கவலைப்பட்டது போல் நான் குழம்பியது போல நிலைமை நமக்கு விரோதமானதில்லை; மாறாக நமக்கு மிகவும் ஆதரவானது. நிம்மதியளிப்பது! நாம் இங்கு வேண்டுமென்றே அழைத்து வரப்பெற்றிருக்கிறோம். ஆம்! நாம் என்பதில் இந்தச் சுல்தானும் அடக்கம்தான்!” என்று மெதுவாகக் கூறியதும் ரணசூரன் “நம்மையும் அவனையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே ஆள் அழைத்து வருவதென்றால் நமக்குத் தலைகால் புரியவில்லையே!” என்றான்.

     “அனேகமாக இன்னும் சற்று நேரத்தில் தானாகவே புரியக் கூடியவாறு சூழ்நிலை மாறுதல் உண்டாகும் என்று நினைக்கிறேன்” என்றார் வல்லபர் இலேசாகப் புன்னகைத்துக் கொண்டே.

     பூரணசந்திரன் பட்டவர்த்தனமான பேர் வழி. இந்த மர்மம் மாறுதலெல்லாம் அவருக்கு பிடிப்பதில்லை. சோழன் முன்பு மிதிலையை வென்றார். கோசலத்தை வென்றார். கிழக்கு வங்கத்தையும் வென்றார் என்றதுமே பூரணசந்திரர் என்ன செய்தார் தெரியுமா?

     நேராக கோவிந்த சந்திரனிடம் போய் “நம்மால் அந்தச் சோழருடன் போர் செய்து வெல்ல முடியாது. ஆனானப்பட்ட இந்திரதனும், வஜ்ரஹஸ்தனும் தோற்ற பிறகு நாமெல்லாம் சமாதானமாகப் போய்விடுவதே நல்லது” என்றார்.

     அவன் “நீர் வீரரா? அல்லது ஆண்மையுள்ளவரா?” என்று கேட்டான்.

     ‘நீ எக்கேடு கெட்டுப்போ...’ என நகர்ந்து போய் ரணசூரனிடம் சென்றார்.

     அவனோ தர்மபாலனுடன் சேர்ந்து சோழனுடன் போருக்கே புறப்பட்டு விட்டான்.

     ‘சரி, இனி ஈசன் விட்ட வழி!’ என்று பூரணசந்திரர் தன் இருப்பிடம் சென்று விளக்கமாக ஒரு கடிதம் அனுப்பினார் சோழனுக்கு. பிறகு வம்பு இல்லை!

     கோவிந்த சந்திரன் ஏற்கெனவே இவரை ஏசியதற்காக வருந்தி மன்னிப்பு கேட்க வந்தான் மூன்றாம் நாளே! ஆனால் அதே தினத்தில்தான் சோழரின் நல்லெண்ணத் தூதுவனாக இவரிடம் வந்து சேர்ந்தான் இளைஞன் விஜயன். நடந்தது ஒன்று என்றாலும் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. விஜயன்தான் இவருடைய மகளின் அன்பனாகி, இவருக்கு மருமகனாகி விட்டானே!

     “உமது மகளுக்கும் அந்தக் கன்னடத்தானுக்கும் பிறக்கப் போகும் குழந்தைதான் அதாவது உமது பேரன்தான் சேனர்களின் பூரண சுதந்திர ஆட்சி நடத்தும் வங்கத்தின் முதல் பேரரசனாவான்” என்று எந்த நேரத்தில் ஹரப்பூர் சோதிடன் கூறினானோ அந்த நொடியே ஆசாமி அடியோடு மாறிவிட்டார்.

     பூரணசந்திரர் திடீரென்று இப்போதுள்ள சூழ்நிலையை மறந்து தனது வருங்காலப் பேரன், வங்க நாட்டில் சேனர்கள் ஆட்சி என்றல்லாம் கற்பனைக் கனவில் இருந்த சமயத்தில் இவர்களை நோக்கி ஐந்து குதிரைகள் அதிவேகமாக வந்தன. மூவரும் திகிலுடன் அத்திசை நோக்கினர்.

     நெடுநேரமாக ஹரதத்தனைக் காணாமே என்று நினைத்தவர்கள் ‘யார் இவர்கள்? இந்த நேரத்தில் அதுவும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி அதிவேகமாக வருவது யார்?’ என்று அதிசயிக்கவும் செய்தனர்.

     வந்தவர்களில் முன்னணியில் இருந்தவன் ஹரதத்தன்தான். அடுத்தவர் நெடிது உயர்ந்தவர். ஆனாலும் நெளிந்தவர்தான். அந்தத் தலைப்பாகையே அவரைக் காட்டிக் கொடுத்தது விட்டது.

     “திரிபுவன அரைய பூபதியவர்களே வாரும், வாரும்!” என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டே எழுந்தோடிய வல்லபர் அவனைக் குதிரையிலிருந்து இறங்கும் முன்னரே கைலாகு கொடுத்து இறக்கிவிட்டுப் பிறகு அன்புடன் அணைத்துக் கொண்டார்.

     எப்பொழுதும் சட்டென உணர்ச்சி வசப்படும் ஜெகதேவர், லேசில் உணர்ச்சி வசப்படாதது. மட்டுமல்ல, உணர்ச்சியையே காட்டாதவருமான திரிபுவனரும் சற்று நேரம் தங்களை மறந்து விட்டனர்.

     “இது உண்மையில் பேரதிசயம்!” என்று கூறியபடி அங்கு வேகமாக வந்தார் பூரணசந்திரர்.

     “இல்லை பூரணசந்திரரே! நாம் அதிசயத்தை விரும்பிச் சென்றோம். நடைபெறவில்லை... எப்படி நடக்குமோ அப்படித்தான் நடந்தது; பரவாயில்லை ரணசூரரே. நீங்கள் எங்கள் வல்லபருடன் துணை சென்றது மிகச் சிறந்த ஒரு பணி; நீங்களும் வல்லபரும் பூரணசந்திரரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஒரு பணி வெற்றிகரமாக முடியாது போகாது. அங்கு நடந்தது அரைப் பகுதிதான். மிகுதி அரைப்பகுதி இங்கு காஜுராஹோவில் நடைபெறப் போகிறது. எனவே, கவலை வேண்டாம்” என்றார் பூபதி.

     “பரகேசரி வந்திருக்கிறார் காஜுராஹோவுக்கு...” என்று அவர் கூறி முடிக்கு முன் “என்ன? சோழச் சக்கரவர்த்திகளா? இங்கா...? அப்படியானால் ஹரதத்தன்...?” என்று திகைத்துக் கேட்டான் ரணசூரன்.

     “இந்த நாடகத்தில் நம் ஹரதத்தன் ஏற்றுள்ள பாகம் மிகவும் முக்கியமான ஒன்று. அவன் இல்லையேல் நாடகம் நாம் எதிர்பார்ப்பது போல் நடத்திருக்கவும் செய்யாது. முடிவு பெறவும் முடியாது” என்றார் திரிபுவன பூபதி.

*****

     பாரத நாட்டின் வரலாற்றில் சோழர்களின் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று குறிப்பிட்டவர்கள் நூற்றுக்கு நூறு உண்மையையே கூறியிருக்கிறார்கள். சிறிதளவு கூட மிகைபட கூறியதாகாது. ஆனால் சோழர்களில் இராஜராஜ சோழனும், அவன் மகன் இராஜேந்திர சோழ தேவனும் ஒரு குறுநில எல்லைக்குள் வாழும் மன்னர்களாக இருக்க விரும்பாமல் மாபெரும் சாம்ராஜ்யம் காண விரும்பியதைக் கொண்டுதான் இந்தப் பொற்கால விளக்கம் என்று சிலர் நினைப்பது சரியல்ல. அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யம் சமைப்பதற்கு விரும்பியது உண்மை. ஆனால் தமிழகத்தில் உள்ள மூன்று நான்கு நாடுகளே தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடிக்கடிப் போரிட்டுக் கொள்வதும், மக்கள் சாவதும், பொருள்கள் நாசமாவதும் கண்டு அவர்கள் மனம் ஏன் இப்படிக் குட்டிக்குட்டி நாடுகளாகச் சிதறிக்கிடக்க வேண்டும்? ஒரே குடைக்கீழ் இவை ஒன்றுபட்ட உறுப்புக்களாய் அதே சமயம் தங்கள் பகுதிகளைச் சுதந்திரமாக ஆள வகைசெய்தால் என்ன என்று ஆராய்ந்தனர்.

     தமிழகம் ஒன்றுபட்ட ஒரே தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடாக இருந்தால் சேரர்களும் சரி, பாண்டியர்களும் சரி, கொங்கர்களும் சரி, நாசமுண்டாக்கும் போரை மறந்து வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளும் பணிகளை போர் இடம் விட்டுவிட்டு அமைதியாகத் தங்கள் பகுதிகளில் ஆட்சி செய்யலாமே என்று நினைத்துத்தான் ராஜகேசரி இராஜராஜ சோழ தேவன் அவ்வகையில் செயல்படத் துணிந்தான். ஆனால் சேரர், பாண்டியர்கள் இணங்கவில்லை. எனவே போர் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டான். பரகேசரி இராஜேந்திரன் ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் அனைத்தும் தனது மேலாதிக்கத்திலிருந்ததால் சுற்றுப்புற நாடுகளான கங்கம், கர்நாடகம், வேங்கி, ராஷ்டிரகூடம், மாளவம் ஆகிய நாடுகளைச் சமாதானமாகவே தன் கொள்கையை ஏற்கச் செய்ய முனைந்து பயனில்லாததால் போர் செய்து வென்றார். பிறகு ஏன் பாரதத்தின் இதர பகுதிகளையும் நாம் இம்மாதிரி ஒன்றிணைப்பில் கொண்டு வரலாகாது என்று அவர் எண்ணியதில் விந்தையில்லை.

     ஆகக்கூடி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராஜேந்திர சோழ தேவர் இந்தப் பரந்த பாரத பூமி பலபல சிறு நாடுகளாகச் சிதறிக் கிடப்பதை ஒன்று கூட்டி இணைக்க முயன்றிருக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காகவே திக்விஜயம் செய்தார் என்று நாம் உறுதி கொள்ளுவோமானால் பொற்காலம் சோழர்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே ஏற்பட்டது என்று கூடக் கூறலாம். கங்கைகொண்டான் என்றும், கடாரங்கொண்டான் எனவும் புகழ்பெற்ற அந்தச் சோழன் பாரதம் முழுமையும் கொண்டான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறும் முன்னர் காலமும், நிகழ்ச்சிகளும் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

     திக்விஜயம் செய்து வெற்றி வீரனாக விளங்க முயற்சிப்பது அக்கால அரசர்களின் இயல்புகளில் ஒன்று என வரலாறு கூறுகிறது. கிரேக்க அலெக்சாந்தர் முதல் பலர் இத்தகைய திக்விஜயங்கள் செய்திருப்பதை நாம் படித்திருக்கிறோம். நமது புராண இதிகாசங்களில் இராமாயண காலத்திலும் மகாபாரத காலத்திலும் இது பற்றிப் படித்திருக்கிறோம். ஆயினும் வெறும் புகழ்பெறவும், தங்கள் வலுவை மற்றவருக்குக் காட்டிப் பெருமைபடுத்துவதாகவுமே இந்த திக்விஜயங்கள் என்று கூறப்படுவதன் உட்கருத்தை தீவிரமாக ஆராய வேண்டும். எல்லாமே ஒரே மாதிரியானவையல்ல. பாரதத்தின் மாவீரர்களான அரசர்கள் பலர் திக்விஜயங்களைத் தம் எல்லையிலேதான் நிகழ்த்தினர். உதாரணமாக அக்கால அஸ்வமேத யாத்திரை ஒரு யாகம் என்ற திக்விஜய முறை. இதில் அலங்கரிக்கப்பட்ட அழகான குதிரை முன்னே அனுப்பப்படும்; பின்னே பெரும் படையுடன் மன்னன் வருவான். அந்தக் குதிரையைத் தன் நாட்டில் வரவேற்று, அதைக் கட்டிப் போடாமல் ஆதரித்து அனுப்பியவன் திக்விஜய மன்னனை வரவேற்கிறான். அவனுடைய சிறப்பை மதித்து அவனுடன் ஒத்துழைக்கிறான் என்பது பொருள். பிறகு அவர்களுக்குள் சண்டையில்லை. சமரச சமபாவனையும் நட்பு ஒப்பந்தமும் உறுதியாகிறது.

     ஆனால், இதற்கு மாறாக அவன் அந்தக் குதிரையை மடக்கிக் கட்டிவிட்டால் யுத்தம் செய்ய நேரிடுகிறது. திக்விஜயம் செய்யும் அரசன் வெற்றிபெற வேண்டும்; தோற்றால் திரும்ப வேண்டும். இத்தகைய குதிரையைத் தவிர முன் தூது அனுப்பி எச்சரித்துச் சமரச ஒப்பந்தத்துக்கு முயற்சிப்பவரும் உண்டு.

     இராஜேந்திர சோழன் இந்த இரண்டாம் முறையைத்தான் கையாண்டான். எனவே அவனுக்குத்தான் உலக மாவீரன் என்று மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் பாரதத்தின் சிதறி கிடக்கும் சிறு நாடுகள் இணைப்புள்ள ஒரு பெரும் ஐக்கிய நாடாகவே விளங்க வேண்டும் என்பதே பிரதான லட்சியமாயிருந்தது என்பதில் ஐயமில்லை. அக்கால மக்களின் மனோநிலைக் கேற்ப அவனுடைய அணுகுமுறைகள் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய ஏகாதிபத்தியமொன்றினை நிறுவ அவன் முயற்சித்ததாகக் காணப்படும் மேலாந்த நிலையினை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனரேயன்றி உள்ளார்ந்த நிலையை அதாவது ஒன்றுபட்ட பாரதம் என்ற நோக்கத்தினை உருவாக்கும் லட்சியத்தைப் பற்றி பெரிதாகக் கருதவில்லை என்றே நாம் கருதுகிறோம்.* எனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நாட்டு நிலை, மக்கள் நிலை, இதர பல சூழ்நிலைகளைக் கொண்டு நாம் இன்னும் சற்றுத் தீவிரமாக நடுநிலை மனதுடன் ஆராய்ந்தோமானால் பல புதிய நிலைகள் புலப்படும் என்பதே என் கருத்து. பரகேசரி இராஜேந்திர சோழ தேவன் தனது முயற்சிகள் எதுவாயிருந்தாலும் அதைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் உறுதியாயிருந்தான். அவனுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்தே இப்படித்தான். தந்தைக்கு உதவியாக இருந்து அவன் ஆற்றிய அரசியல் பணிகள், போர்ப் பணிகள் மற்றும் நாடுகளிடையே சமரசப் பணிகள் ஆகிய எல்லாவற்றிலும் மிகத் தெளிவான அணுகுமுறைகளைக் கையாளுவானேயன்றி அரைகுறையாக எதையும் செய்திடமாட்டான்.

*பாரதம் பல நாடுகளாகச் சிதறிக் கிடப்பது மக்களுக்கும் சமுதாயச் சிறப்புக்கும் பயன் தராது என்று முதன் முதலில் கருதியவன் இராஜேந்திர சோழ தேவர்தான் என்ற கருத்தில் நான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். சிலர் அக்பர், வரலாற்றினை எழுதும் போது இது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

     கஜினி முகமது இந்த நாட்டில் பலமுறை படையெடுத்து வந்ததும், ஒவ்வொரு தடவையும் வெற்றிகளைப் பெற்று வெற்றி வீரன் என்று புகழ் பெற்றதும் ஏன்? பிறகு இந்நாட்டில் கோயில்களையும், புனித இடங்களையும் இடித்து அழித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதேன்? மூன்றாவதாக இங்கு எதிர்த்தவர்களை, அதாவது தோற்றவர்களை, விட்டால் போதும் என்று ஓடுபவர்களையெல்லாம், வேறு வழியின்றி சிக்கியவர்களையெல்லாம், கருணை காட்டாது கொன்று குவித்ததோடல்லாமல், சிற்ப வேலைகளில் சேர்ந்தவர்களை யெல்லாம் நிறையக் கைது செய்து தன் நாட்டுக்குக் கொண்டு செல்வானேன்? அவன் நாட்டில் மட்டும் அல்ல அவர்களைப் பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.* இதெல்லாம் எந்தக் கருத்தினை தெளிவுபடுத்துகிறது என்று அதிதீவிரமாக ஆராய்ந்தான் இராஜேந்திரன்.

*கஜினி முகமது பற்றி எழுதிய பேராசிரியர் ஹபீப், வரலாற்று நிபுணர் வின்ஸன்ட் ஸ்மித், ஈஸ்வரி பிரசாத், மஹாஜன் ஆகியோர் இவற்றை யெல்லாம் வெகு விரிவாக ஆராய்ந்துள்ளவர் திரு. முன்ஷி அவர்களின் ‘ஜெய் சோமநாத்’ இது சம்பந்தமாகப் படிக்க வேண்டிய ஒரு ருசிகரமான நூல்.

     “நான் விக்கிரகத்தை உடைப்பவன். காபீர்களின் கடவுள் ஒருவர் உண்டென்றால் அவர்கள் என்னை அடிக்கட்டும்” என்று எக்காளமிட்டுக் கர்ஜித்தானாம் அவன். ஆப்கனிஸ்தானம் கண்டிராத அளவுக்கு இந்நாட்டு நவநிதிகளைக் கொள்ளையிட்டுச் சென்று அவன் குவித்துப் பார்த்த போது, அவனுக்கே பிரமிப்பேற்பட்டு விட்டதாம்.

     நியாயமற்ற அழிவையும் கொள்ளை, கொலையையும் நம் சமயம் ஏற்கவில்லையே என்று அவன் நினைக்கவேயில்லை. ஆல்பரூனி சிறந்த மேதை என்றதும் அழைத்தான். மறுத்தார் அவனுடன் செல்ல. கைது செய்து கொண்டு போய்விட்டான். ஒரு மாமேதையைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்... இதெல்லாம் சரியா தவறா என்று ஆராய்வதை விட ஏன் இப்படி என்று மற்றவர்கள் ஆராய்ந்த முறை வேறு. இராஜேந்திரன் ஆராய்ந்த முறை வேறு. ஒரு மாவீரன்தான் இன்னொரு மாவீரனை எடை போடத் தகுதியும் உரிமையும் உள்ளவன்.

     சின்னஞ்சிறு கஜினி என்றதும் ஒரு குட்டி நாட்டிலிருந்து (அதை ஒரு குக்கிராமம் என்று கூறுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்) புறப்பட்டவன் இந்தியாவில் நுழைந்து காஷ்மீரில் ஜெயபாலனையும் பிறகு வரிசையாகப் பல மன்னர்களையும் வென்று வந்தான் என்றால் அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான். எனவே இவ்வகையில் அவன் சந்தர்ப்பமறிந்த ராஜதந்திரி என்றும் அறிய முடிகிறது. கிராமத்தை மட்டுமல்ல, தானாக கிடைக்காததையும் கொள்ளையடித்தான் என்றால் அவனுக்குப் பொருள்கள் மீதுள்ள பேராசை புரிகிறது. இது ஒரு வீரனுக்கு மதிப்பல்ல. தரந்தாழ்ந்த குணம். கொன்று குவித்தான் என்றால் ஈவு இரக்கமற்றவன் என்பதைக் காட்டுகிறது. விக்கிரஹங்களை உடைத்தான். அவற்றில் பதிந்திருந்த நவரத்தினங்களையும் கோயில்களின் இதர தங்க விக்கிரஹங்களை கவர்ந்தான் என்பது பேராசையைத்தான் காட்டுகிறது. தனது மதத்தில் மூர்க்க நம்பிக்கையையும் பிறமதத்தில் மூர்க்க வெறுப்பையும்தான் இது காட்டுகிறது.

     ஆயினும் இதெல்லாம் பின் விளைவுதானே! முதலில் அவன் இந்நாட்டில் வெற்றி பெறாமலிருந்ததால், வெல்லப்பட்டு விரட்டப்பட்டிருந்தால் நிகழ்ந்திருக்குமா? இங்குள்ள மன்னர்கள் நெல்லிக் காய்களைப் போலச் சிதறி நின்று நமக்கென்ன என்று ஒதுங்கி ஒரு அரசனை அவனிடம் தனித்துச் சிக்கச் செய்துவிட்ட பிறகு ஒருவர்க்கொருவர் உதவ வேண்டும், ஒன்று சேர்ந்து எதிர்த்தால் பலனுண்டு என்ற உறுதி கொள்ளாமல் நமக்கென்ன? என்று கண்ணை மூடிக்கொண்டதனால் உண்டான விளைவுகள்தானே!

     இதற்கு பிறர் மீது பழி கூறுவதேன்? நம்மவரே நமது வீழ்ச்சிக்கு, அழிவுக்கு, கெடுநிலைக்கு காரணமாகிவிட்ட பிறகு அவன் கெட்டவன், மூர்க்கன், பேராசைக்காரன், நாசக்காரன் என்றெல்லாம் கூக்குரல் போடுவது வரட்டுப் புலம்பல்தானேயன்றி பயன் தருவதல்ல.

     எனவே இனியும் இந்த மன்னர்களுக்குள் ஒரு ஐக்கியமேற்படுத்த விரும்பும் மனோநிலை உண்டாகப் போவதில்லை. முயற்சிப்பதும் வீண். ஆகவே இவர்களிடம் போதனை செய்து கால விரயம் செய்வதைவிட பொது எதிரியான அவனிடமே ஒரு வீரனுக்கு வீரன் என்ற முறையில் அணுகினால் என்ன என்றுதான் தூது அனுப்பினான். ஆனால் மூர்க்கத்தனம், வெற்றி மிதப்பு, அலட்சியம் மூன்றும் அளவுக்கு மீறி கஜினி முகமதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால் தூதை அலட்சியம் செய்தான். எனினும் சோழ இராஜேந்திரனும் வேறு வகையில் பிடிவாதக்காரன்தானே! சண்டையில் காட்டும் பிடிவாதத்தை சமாதானத்தில் காட்டுவது தாழ்ந்ததில்லை; சிறப்பே தவிர சிறுமை இல்லை. எனவே இன்னொரு முறை முயற்சிப்போம் என்ற ஆர்வத்தில்தான் இந்தக் காஜுராஹோ சந்திப்பு... ஆம்! அன்றே உலகின் மாவீரர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் தமிழகத்து சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளும், தன்னை விக்ரஹ நிக்ரஹன் என்று பரைசாற்றிக் கொண்ட கஜினி முகமதை சந்திக்கும்படி செய்வதில் வெற்றி கண்டவன், வீரன், ஹரதத்தன்தான். எனவே அவன் பணிதான் மிகவும் சிறப்பானதொன்றாகும்.