உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 13 வாரண நாட்டு ஹரதத்தன்! வடப்பாரதத்தில் உள்ள எத்தனையோ குட்டி நாடுகளில் இந்த வாரணம் (பாரன் - புலர்ந்த வஹர்) என்பதும் ஒரு சிறு நாடுதான். இதன் அரசனே ஹரதத்தன். கஜினி முகமது படைகளுடன் வருகிறான் தன் நாடு நோக்கி என்றதுமே நடுநடுங்கிப் போய் தனது பத்தாயிரம் வீரர்களுடன் அந்தக் கணமே இஸ்லாமியனானான்* என்று கூறப்பட்டது. வடநாடே இது கேட்டுத் திடுக்கிட்டது. மிகத் தந்திரசாலியும், தீரமும், பிடிவாத குணமும் உள்ளவன் எப்படி கஜினியை எதிர்த்து நின்று ஒரு சிறு சண்டை கூடப் போடாமல் இப்படி மாறிவிட்டான் என்று அதிசயித்து ‘சே! இவ்வளவுதானா அவன்!’ என்று இதர மன்னர்கள் அதாவது கஜினியிடம் தோற்றவர்கள், ஓடிப்போனவர்கள், ஒதுங்கிப் பதுங்கியவர்கள் யாவரும் கேவலமாக நினைத்து ஏசிப் பேசித் தூற்றினர்.
*‘இந்திய வரலாறு’ என்ற சிறந்த நூல் எழுதிய எலியட் என்னும் ஆங்கில நாட்டு வரலாற்று வல்லுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னாளில் பல வரலாற்றாசிரியர்கள் இக்கூற்றினர்க்கு நேர்மாறான கொள்கையினை விளக்கியுள்ளார். ஆனால் உண்மையில் நடந்ததென்ன? ஹரதத்தன் அப்படியொன்றும் நலிந்து போன கிழவனும் இல்லை, பயங்கொள்ளியும் அல்ல. சந்தேல நாட்டுக காண்டனைப் போல வாய்த்துடுக்கு வீரனும் அல்ல. “ஆ... விட்டேனா பார்!” என்று மிரட்டிவிட்டு “ஐயையோ, நான் இல்லை!” என்று பின்னால் உளறும் பஞ்சையும் இல்லை. எனவே அத்தகையவன் பயந்து நடுநடுங்கிப் போய் முஸ்லீம் ஆகிவிட்டான் என்று வரலாறு கூறுகிறதே! ஒரு தன்மானமுள்ள வீரன் இத்தகைய கேவலமான செய்கையில் ஈடுபடலாமா என்று மற்றவர்கள் விவாதித்துப் பிரலாபித்தனர். ஆனால் நடந்ததென்ன என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும். அப்படி தெரிந்தவர்களில் ஒருவன் காஜூராஹோ வித்யாதரன்; மற்றொருவன் சாந்த் சாந்தராய் என்னும் சார்வா நாட்டதிபன். பயங்கரமான ஒரு போரில் கஜினியிடம் தோல்வி கண்டாலும் அவனிடம் சிக்காமல் தப்பிவிட்டவன். தற்போது வித்யாதரனிடம் தங்கியிருப்பவன். அவனுடைய உற்ற நண்பன். உண்மையான தைரியசாலி. ஆயினும் ஹரதத்தன் ஏன் முஸ்லீம் ஆனான் என்னும் மர்மம்தான் என்ன? நள்ளிரவு... கஜினி யமுனா நதியைத் தாண்டி பாரன் நாடு செல்லும் பாதையில் உள்ள பார்பால பகுதிக்குள் முகாம் போட்டிருந்தான். அப்போது ஹரதத்தன் மட்டும் தன்னந்தனியாக அந்தக் கூடார முகப்புக்கு வந்தான். காவலன் எச்சரித்தான். “நான் சுல்தானைப் பார்க்க வேண்டும்” என்றான். காவலன் தன்னந்தனியாக ஒருவன் வந்திருப்பதால் அதிகம் யோசியாது உள்ளே சென்று அனுமதி நாடினான். கஜினியும் வியப்புடன் “யார் அவன்? சரி, சரி அனுப்பு!” என்றான். உள்ளே நுழைந்தான் ஹரதத்தன். சுல்தான் திடுக்கிட்டான். அந்நேரத்தில் கூட தனது அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவன் “தோன் பாரன் நாட்டு ஹரதத் இல்லையா?” என்றான். முதலில் தன்னை இவன் எப்படி அறிந்தான் என்று திகைத்த ஹரதத்தன் அண்மையில் கஜினியில் கையாளாக மாறியுள்ள திலகத்தேவ் என்பான் கூறியிருப்பான் என்று ஊகித்து, “ஆம்! உங்களைத் தனியே சந்திக்க வந்தேன்!” என்றான். “நாளை உன்னைப் போர்க்களத்தில் அல்லவா சந்திக்க இருந்தேன்!” “தேவையில்லை. நம்மிடையே ஒரு போர் நடந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது நடப்பதும் நடக்காததும் நம் இஷ்டத்தைப் பொறுத்ததுதான்!” என்று அவன் கூறியதும் கஜினி திடுக்கிட்டு அவனைப் பார்த்தான். “நீ என்னதான் சொல்லுகிறாய்?” “நாளை போர் தேவையில்லை. போர் நடத்தி பெறுவதைவிட அதிகமாகவே பெறலாம். போரே நடத்தாமல்!” என்றான் ஏளனமாகச் சிரித்தபடி. சுல்தான் அமைச்சர் வியப்புடன் பார்த்தார் அவனை. “உனக்கென்ன பைத்தியமா? எனக்குப் பொன்னும் பொருளும்தான் ஏராளமாகத் தேவை என்பது உனக்குத் தெரியும் அல்லவா?” “தெரியும். ஆனால் அதைவிட உனக்கு உயர்ந்ததாக உள்ள தேவை எதுவும் இல்லையா?” “இல்லை! நான் மனித உயிர்களை மதிப்பாக நினைப்பவனில்லை. அதுவும் காபீர்களின் உயிர் எனக்கு ஒரு பொருட்டு அல்ல.” “அது தெரியும்! ஆனால் ஒரு முஸ்லீமின் உயிர்...?” என்று அலட்சியமாகக் கேட்டதும் பதறியெழுந்த சுல்தான் அவன் அருகே வந்து “நடுநிசியில் வந்து என்னவெல்லமோ உளறுகிறாய். நாளை நீயும் உன்னுடைய நாடும் அழியப் போகிறது. அதற்கு முன் எதற்கு இந்தப் பிரலாபம்! தேவையில்லாத ஒன்றில்லையா! எனினும் ஒன்று சொல்லுகிறேன். உங்களவர்கள் உயிர் ஒரு லட்சம் போனாலும் சரி, ஒரு முஸ்லீமைக்கூடச் சாகவிடமாட்டேன்.” “நிச்சயமாகவா?” “எல்லாம் வல்ல அல்லா மீது ஆணையாக!” “அப்படியானால் நூறு முஸ்லீம்களுடைய உயிர்களுக்கு?” “ஒரு ஊரையே தருவேன்!” “ஆயிரம் பேர்களுக்கு...?” “ஆண்டவன் சாட்சியாக அவர்களுக்குத் துணையாக இருந்து காப்பேன்! அவர்கள் வாழ்க்கை வளமாக அனைத்தும் செய்வேன்!” என்றான் பரவசத்துடன். “அப்படியா? பத்தாயிரம் முஸ்லீம்களுக்கு...?” என்று கேட்டு முடிவதற்குள் வெகுவாகப் பதறிவிட்ட அமைச்சர். “சுல்தான் சாஹேப்! இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. ஏதேதோ கண்டபடி உளறுகிறான். நம் ஆட்களைக் கொண்டு விரட்டியடியுங்கள்; அல்லது வெட்டிப் போடுங்கள்!” என்று கத்திவிட்டார். “இரண்டும் அவசியமில்லை. நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் சுல்தான். பத்தாயிரம் முஸ்லீம்களுக்கு... நீங்கள் இந்நாட்டில் இதுவரை சாதிக்காத அளவுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால்... என்ன செய்வீர்கள்?” “அந்தப் பத்தாயிரம் பேர்களின் நன்மைக்காக, நல்வாழ்வுக்காக உயிர்காப்பதற்காக இந்த நாட்டையே அழிப்பேன். என்னிடம் உள்ள எல்லாவற்றையும் இழந்து போனாலும் அவர்களைக் காப்பேனேயன்றி அவர்களில் ஒருவர் உயிருக்குக்ப்கூட ஹானி நேர அனுமதிக்கமாட்டேன். என் உயிர் உள்ளவரையில்!” என்று கத்தினான் சுல்தான் கஜினி முகமது. “நல்லது சுல்தான். நீங்கள் இப்போது கூறுவது சத்திய வாக்கியமானால் நாளை விடிந்ததும் என்னிடம் ஒரு மெளல்வியை அனுப்பி வையுங்கள். உங்களுக்குப் பத்தாயிரம் முஸ்லீம்கள் கிடைப்பார்கள்” என்றான் அலட்சியக் குரலில். “ஆ!” என்று பேரொலி எழுப்பியபடி அவனைப் பிடித்து உலுக்கிய சுல்தான் “ஹரதத்! நீ என்னதான் சொல்லுகிறாய்? ஒரே நாளில் இங்கே பத்தாயிரம் முஸ்லீம்களா? என்ன இது... கண்கட்டு வித்தையா? எங்கள் பகுதியிலே இவ்வாறு ஒரு நாளில் நடக்கவில்லையே? உண்மையைச் சொல்... கேலிக்கும் சோதனைக்கும் சந்தர்ப்பமில்லை.” “உண்மையைத்தான் கூறுகிறேன். நாளை பத்தாயிரம் முஸ்லீம்களை உம் எதிரே நீங்கள் யாவரும் காணலாம். இதில் மாறுதல் ஏதும் இல்லை. ஆனால்...” என்று மேலே கூறாமல் தயங்கினான். வெகுவாகப் பதறிவிட்ட சுல்தான் “ஆனால்... என்ன ஹரதத்... தயங்காமல் சொல். ஆனால் என்ன?” என்று அவனைப் பிடித்து மீண்டும் உலுக்கினான். ஹரதத்தன் சற்றே நிதானித்துவிட்டு, “ஆனால் அதற்கு மாறாக நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். “பத்தாயிரம் பேர்களை நீ முஸ்லீம்களாக்கத் தயார் என்றால் நான் உன்னை என் மகனுக்கீடாகவே கருதுவேன். உன்னுடைய நாட்டில் ஒரு துரும்பைக் கூடத் தொடமாட்டேன். ஒரு உயிரைக் கூட பலி வாங்க மாட்டேன். அதுமட்டுமல்ல, என்னையே உன்னை நம்பி உன்னிடம் ஒப்படைக்கவும் தயங்க மாட்டேன்...” என்று முழங்கிப் முடிப்பதற்குள் அமைச்சர் பதறிப்போய், “சுல்தான் சாஹேப்! வீணாக எதற்கு இந்த ஆணை உறுதியெல்லாம். அதுவும்...” என்று அமைச்சன் கலங்கிப் போய் குறுக்கிட்டுச் சொன்னான். “நீ சும்மா இரு கான். இவன் ஒன்றல்ல... ஆயிரம் அல்ல... பத்தாயிரம் பேர்களை முஸ்லீம்களாக்குகிறேன் என்கிறான். இது அதிசயத்திலும் அதிசயமில்லையா? இது வரை நாம் இந்த நாட்டில் எத்தனை முறை படையெடுத்து வந்தோம்.* அப்போதெல்லாம் இம்மாதிரி எவனாவது வந்து சொன்னானா! ஓடிப் போவான் அல்லது தற்கொலை செய்து கொள்வான். இல்லாவிட்டால் கிடைத்ததைக் கொண்டு வந்து உயிருக்கு மன்றாடிக் கெஞ்சி நிற்பான். இவன் அப்படியில்லை. சற்றே யோசித்துப் பாருங்கள். இன்று பத்தாயிரம் பேர்கள் என்றால் நாளை இவர்களின் வமிசவிருத்தி பெருகி... இந்நாட்டில் லட்சமாகிப் பிறகு... கான்! இது உண்மையில் நடந்திட்டால் பெரும் சாதனை! அசாதாரண சாதனை! இதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவனை நாம் நம் அன்பு மகனாகக் கூட ஏற்கலாம். தவறில்லை. நமக்கு மதிப்பும் வலுவும் கூடும். ஹரதத், இது உண்மைதானா?” என்று மீண்டும் நம்பாதவனாகவும், ஏங்கியவன் மாதிரியும் மீண்டும் கேட்டான்.
*கஜினி முகமது இந்தியா மீது பதினேழு முறைகள் படையெடுத்து வந்ததாக நிஜாமுதீனும், கோண்ட் மீரும் குறிப்பிட்டுள்ளனர். “நிச்சயமான உண்மை, சுல்தான்.” “அப்படியானால் நான் கொடுத்த வாக்குறுதியில் இம்மியும் மாறமாட்டேன். ஆண்டவன் மீது ஆணையிட்டு மீண்டும் கூறுகிறேன். நீ மட்டும் சொன்ன மாதிரி செய்துவிட்டால் இந்த முகமது அப்புறம் பரிபூரணமாக உன்னுடையவன்தான். புரிகிறதா? இதோ இந்த அமைச்சர் சாட்சி... யார் அங்கே? ஓ! நீங்கள் மூவருமே வந்துவிட்டீர்களா? நல்லது. மசூத்... இந்த ஹரதத் ஒரு உறுதி கொடுத்திருக்கிறான். அதன்படி நாளைக்குள் அவன் நடத்திவிட்டானானால் அவன் உன்னைப் போல எனக்கு ஒரு அன்பு மகன். நான் அவன் விருப்பப்படி நடக்கும் ஒரு சாதாரண முஸ்லீம். ஆம்! இப்படித்தான்... ஆல்பரூனி... நிஜாமுதீன் நீங்கள் எல்லாம் சாட்சிகள். நல்லது. ஆனால் ஹரதத் நீ சொன்னபடி நடக்காவிட்டால் அப்புறம் என்ன நேரும் என்று நான் வாய்திறந்து கூற வேண்டியதில்லை இந்துஸ்தானத்தைப் பிடித்த மகா மோசமான சைத்தானாக மாறிவிடுவேன் நான். புரிகிறதா?” என்று மிரட்டியும் கேட்டான். “நன்றாகப் புரிகிறது. நாளை உங்கள் மெளல்வியை காலையில் அனுப்பி வையுங்கள். பிறகு மாலைக்குள் உங்கள் பத்தாயிரம் முஸ்லீம்கள் அணிவகுத்து நிற்பர்.” “பஹுத் அச்சா. எல்லாம் ஆண்டவன் கிருபை. நல்லது ஹரதத்.” “நல்லது சுல்தான் நாளை சந்திப்போம்!” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுவிட்டான். மறுநாள் மெளல்வி சென்றார், பாரன் நாட்டுக்குள்... மாலையில் புதிதாக மதம் மாறிய பத்தாயிரம் முஸ்லீம்கள் யமுனை நதிக்கரையில் அணி அணியாக வந்து நின்றதைக் கண்டு... அயர்ந்து போய் ஆனந்தத்துடன் அடக்க முடியாத பெருமிதத்தால் தன்னையே மறந்து விட்டான் சுல்தான் கஜினி முகமது. இது வரை அவன் இந்தியா மீது எத்தனையோ முறைகள் படையெடுத்திருக்கிறான். என்ன என்னவோ கிடைத்தது வெற்றிகளுடன். ஆனால் இது போன்ற அதிசயம் நடைபெற்றதில்லை. ஆண்டவனுடைய கருணையைப் போற்றி அங்கேயே மண்டியிட்டுத் தொழுகை நடத்தினான். “நீ இன்று முதல் என் போன்ற ஒரு அமீர். உன்னுடைய பெயர் இன்று முதல் அமீர் அரூன். ஆம், நீ எல்லாம் வல்ல அல்லாவின் கருணை ஊழியனானாய். நான் உன்னுடையயவனாகி விட்டேன். இனி நமக்குள் வேறுபாடில்லை” என்றான் அன்று. அன்று முதல் நாளிதுவரை இதில் மாற்றம் எதுவும் இல்லை. அமீர் அரூன் இப்போது காஜுராஹோவுக்கு சுல்தானுடன் வந்து சேர முடிந்தது எப்படி என்று இங்கு கூறுவதற்காக இவற்றை கூறினேன். ஆனால் அன்று நாடு முழுமையும்.. அவனைத் துரோகியாகவே நினைத்தது என்பது என்னவோ உண்மை. ரணசூரனும், பூரணசந்திரனும் மட்டும் எப்படி இதற்கு மாறாக இருக்க முடியும்? இப்போது... முன்பு உண்மையில் நடந்தது அறிந்தும்... திகைத்துக் குழம்பினர். அந்த இரவில் அதுவும் காஜுராஹோ எல்லையில் திரிபுவன பூபதி, வல்லபேந்திரன்... எதிரில் முன்பு நிகழ்ந்தவற்றை அறிந்ததும் அவர்கள் தந்திரம் என்றால்... இப்படியா என்றும் நினைக்காமலில்லை. “அந்த மெளலவி வந்தாரே...” “ஆம் வந்தார். முதலில் சடங்குகளைக் கூறினார். பிறகு ‘நீங்கள் உங்கள் தொழுகையை நடத்துங்கள். நாங்கள் எல்லோருமாக பிறகு வருகிறோம்’ என்றோம். அவர் அப்படியே செய்தார். பிறகு நாங்கள் மட்டுமே மாலையில் ‘இஸ்லாமிய உலக’ச் சென்று காட்சியளித்தோம். மெளல்வி தாம் இங்கேயே இருந்து மேலும் பலரை மாற்றப் போவதாக என் மூலம் சுல்தானுக்குச் செய்தியனுப்பினார். ‘பலே பலே!’ என்றார் சுல்தான். இதற்குப் பிறகு... மௌல்வி அங்குமிங்கும் அலைந்து திரிந்து சமயப் பிரசாரம் செய்வதாகச் சுல்தான் தகவல் அறிந்து வந்தார். அதுவும் என் மூலம்தான். பிறகு எங்கோ சென்றார். திரும்பவில்லை பாவம்! சுல்தான் ‘ஐயோ பாவம்! ஆண்டவன் கருணை’ என்றார். அத்துடன் அவர் கதை முடிந்தது. அன்று முதல் இன்று வரை நாங்கள் அப்படியே இருக்கிறோம். எங்கள் நாடு அப்படியே இருக்கிறது. மக்கள் அப்படியே இருக்கிறார்கள். பொருள்கள், பூஸ்திதிகள், கோயில்கள் மற்ற எவையும் நாசமாகவில்லை. எது எப்படியானாலும் நாங்கள் அழிவைத் தடுப்பதில் வெற்றி பெற்றோம். கெட்ட பேர் எடுத்தாலும் நாட்டைக் காப்பாற்றினோம்.” “நீங்கள் இந்த மாதிரி விசித்திரமாக மாறியிருக்கும் போது திரும்பிவிடலாமே நாம் பழைய இடத்துக்கு.” “தேவையில்லை. நாங்கள் ஒரு நோக்கத்துடன் மாறியவர்கள். அந்த நோக்கம் இன்றும் நிறைவேறவில்லையே!” “ஆம்! ஆம்! ஆண்டவனே... உண்மையில் நாட்டுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஹரதத் நாங்களும் உண்மையறியாது மற்றவர்களைப் போல...” என்று ஏதோ வருத்தத்துடன் பூரணசந்திரர் கூறத் துவங்கியதும், “போதும், போதும் பூரணரே... சுல்தான் நெடுநேரம் தனியாக உறங்குகிறார். விழித்தால் என்னைத் தேடுவார். காலையில் சந்திப்போம்” என்று கூறிவிட்டுச் சட்டெனப் புறப்பட்டுப் போய்விட்டான் ஹரதத்தன். பாரத நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் கூட அந்த நாளில் அரசன் இறைவனுக்குச் சமமானவன் என்ற கொள்கை நியாயமோ இல்லையோ, நிலைத்திருந்தது உண்மைதான். மக்களிடையே இத்தகைய கொள்கைக்கு ஆதரவு அதிகமில்லாத சில நாடுகளில் கூட மன்னன் தன் வலுவைக் கொண்டு தன்னைப் பெரியவனாக்கிக் கொண்டுவிடுவான். சுல்தான் முகமது கஜினி மன்னன் இப்படி ஆனவன்தான். சபக்திஜின் முகமது என்னும் பட்டமேறி நீண்ட நாள் ஆள முடியாமல் செய்துவிட்டான். சபக்திஜினுடைய மூத்த மகனான இஸ்மாயில் அரசாளத் தேவையான யுக்தி புத்திகளைப் பெற்றிராத காரணத்தினால் தந்திரமும் குயத்தியான மூளையும், பிடிவாதமும், விடாப்பிடியாக சாதிக்கும் முனைப்பும் உள்ள முகமது கஜனி மன்னராக முடிந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ளனர். ஆயினும் இவ்வளவு இருந்தும் அரசியல் தீர்க்கதரிசனம் பெறாதவருமாயிருந்தால்தான் அவன் கடைசி வரை நல்ல பெயர் எடுக்கவில்லை என்றும் அதே வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரந்த பாரத பூமியில் ஏகப்பட்ட குட்டி ராஜாக்கள். இவர்களிடையே ஏகப்பட்ட பூசல்கள். மக்களோ எது நடந்தாலும் மன்னன் மன்னனாகவே இருக்கட்டும். நாம் அவன் சொன்னபடியே நடப்போம் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர். தந்திரக்காரனான கஜினி இங்கே குவிந்து கிடக்கும் பொருள்களைக் கவர்ந்து செல்வது ஒன்றே குறிக்கோளாய் ஒருமுறையல்ல, பதினேழு முறை படையெடுத்தான் என்று முன்பு கூறினோம். இந்த பதினேழாவது முறையில்தான் நாம் சோழ மன்னனான பரகேசரி இராஜேந்திர சோழ தேவனுடன் இவனைச் சந்திக்கும்படி செய்துள்ளோம். ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததென்று இந்நவீனத்தில் குறிப்பிடுகிறோம். ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|