ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

19

     கஜினி முகமது அந்நேரம் வரை ‘போயும் போயும் எவனோ ஒரு காபீர், அவனுக்கு, அதுவும் இந்துஸ்தானத்தில் தன்னிடம் வரிசையாகத் தோற்று வரும் இதர ராஜாக்களை போல இவனும் ஒருவன். உண்மை இதுவாயிருக்க... உலகின் மாபெரும் இஸ்லாமியப் பெருமன்னர் பாக்தாத் கலிபாவும், எகிப்திய மாமன்னரும் இவனை வெகுவாக மதித்து வந்து வணங்கி மதிப்பும் மரியாதையும் செய்வதென்றால்... இத்தனை மன்னர்கள் நம்மை இன்னமும் மதிக்காதவர்கள், இன்னமும் நம்மிடம் தோல்வி காணாதவர்கள், ஏற்கனவே தோற்றவர்கள், இப்படியாகப் பல ரகத்தினரும் சோழச் சக்கரவர்த்திகள்... ஆமாம் சக்கரவர்த்திகள் என்றால் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா என்று கூறினாரே ஆல்பரூனி... இது உண்மையென்றால் நானும் ஒரு சாதாரண ராஜாதானே. இவனுடைய சக்கரவர்த்திப் பதவியை நானும் ஒப்பிய மாதிரி அல்லவா... ஊஹும்... முடியாது. முடியவே முடியாது.’

     “வாருங்கள் மதிப்புக்குரிய இஸ்லாமிய அறிஞர் பெருமக்களே” என்று சோழன் இராஜேந்திரன் வரவேற்றதும் சற்றே துணுக்குற்றான் கஜினி.

     ‘தன்னை முதலில் வரவேற்காமல்... அறிஞர்களைத் தன்னால் ஆதரிக்கப்படுபவர்களைப் போய் மதித்து அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வரவேற்பு அளிப்பது என்றால் தன்னுடைய மதிப்பு... என்ன ஆவது?’

     “கஜினி நாட்டு அமீரே வருக. இப்படி அமர்க” என்று சோழன் அழைத்ததும் திடுக்கிட்டான்.

     தனக்கு ‘அமீர்’ விருதுடன் அழைப்பு... ஆம், தான் அமீர்தானே. இல்லையென்று கூறுவதற்கில்லை. ஆனால் இந்துஸ்தானமே இன்று தன் பெயர் கேட்டு நடுங்கும் போது, கஜினியின் சுல்தான் இந்துஸ்தானத்தின் பயங்கரன் என்றும், பேரெடுத்துக் கிடுகிடுக்க வைக்கும் போது இந்த உண்மையறியாமல் ஏதோ சர்வசாதாரணமாகத் தன்னை மதித்து ‘ஏ அமீரே...’ என்றுதான் அமீர் அரூனைக் கூப்பிடுவது மாதிரி அழைக்கிறானே இந்தச் சோழன். இவனை அதே மாதிரி நானும் வார்த்தையால் வெட்டுகிறேன் பார்’ என்று எண்ணி ஏதோ சொல்ல வாய் திறந்தவன் காதில் சட்டென்று ஏதோ ‘மவுலானா’ என்ற சொல் காதில் விழுந்ததும் பட்டென்று வாய் மூடி சோழனை வெறிக்கப் பார்த்தான்.

     “மவுலானா பரூக்கி அவர்கள் இப்போது எங்கள் ஊரில்தான் இருக்கிறார் ஃபெரிஷ்டா அவர்களே” என்று சோழன் கூறிய போது அவர் திருநாமம் கேட்டதுமே எழுந்து வணங்கியதைக் கண்டு தானும் அப்படிச் செய்தாக வேண்டி வந்ததே என்று வேண்டா வெறுப்புடன் குமுறும் உள்ளத்துடன் செய்து தொலைத்தான் கஜினி.

     ‘மவுலானாவாவது இவன் ஊருக்காவது வருவதாவது... ஏதோ இந்த எகிப்தியரும் கலிபாவும் வந்துவிட்டால் சத்தியமார்க்கமான இஸ்லாம்மியச் சமயத்தின் இணையற்ற ஞானப் பெருந்தகையும் உலகின் மாமேதையும், திருமறைத்தவச் செல்வருமான மவுலானா பரூக்கியின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியோ, உரிமையோ இல்லாத இவன் திரும்ப திரும்ப உளறுகிறானே அவர் பெயரைச் சொல்லி...’

     “சக்கரவர்த்திகளே! இஸ்லாமிய உலகம் உங்களை வெகுவாகப் பாராட்டுகிறது” என்றார் மேதை ஃபெரிஷ்டா.

     “தமிழ் உலகம் அதை ஏற்கிறது” என்றான் சோழன்.

     ‘என்ன திமிரான பதில்.’ இவ்வாறு நினைத்தவன் காதில் சோழன் மேலும் சொன்னது ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலக் கேட்டது.

     “மவுலானா பரூக்கி எங்கள் சிவாசாரியாருடன் பல சமய உண்மைகளை ஆராய்கிறார். உலகின் ஆதிசமயமான எங்கள் சமயம் பற்றி பல உண்மைகளை அறிவதில் வெகுவாக அக்கரை காட்டுகிறார். சில ஆண்டுகள் எங்கள் ஊரில் தங்கவும் அவர் விரும்பினார். அனுமதித்தோம். வசதிகளுடன் தன் பணியை அவர் செய்து வருகிறார்.”

     ‘அனுமதித்தானா? என்ன திமிர்? யார் யாரை அனுமதிப்பது? உலக மாமேதையின் கால்கள்பட இவன் ஊர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அவர் முகதரிசனம் காண இவன்... சேச்சே! காதில் கேட்கவே தாங்க முடியவில்லையே.’

     “சரி, நம் நண்பர் அமீர் அவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். கஜினி அமீர், நீங்கள் இப்படி அருகில் வரலாம்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து “இந்துஸ்தானத்தில் இதுவரை பதினேழு முறை படையெடுத்து வந்ததால் அடைந்த மனநிம்மதி எந்த அளவு என்று உங்களால் கூற முடியுமா?” என்று கேட்டதும் அவன் ஒரேடியாக விழித்தான்.

     ‘மனநிம்மதியா? அதற்கும் தனது வெற்றிகளுக்கும் என்ன சம்பந்தம்? இந்துஸ்தானத்தை ஏன் இப்படி நடுங்க வைக்கிறாய் என்றுகூடக் கேட்கத் தெரியவில்லையே இவனுக்கு... எப்படி வெற்றிகள் பெற்று மாவீரனாக, பயங்கரனாக, விக்கிரஹ நிக்கிரஹனாக உன்னால் விளங்க முடிகிறது என்றல்லவா கேட்க வேண்டும்.’

     “நான் விக்ரஹ நிக்ரஹன்... எனவே அதற்காகப் போர் செய்வது என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் நிம்மதியாகக் கருதாதவன்” என்று இறுமாப்புடன் பதில் தந்துவிட்டுச் சோழனை உற்றுப் பார்த்தான்.

     சோழன் புன்னகையுடன்... “வெற்றி பெறுவதென்றால் அழிப்பது, இடிப்பது, ஒழிப்பது என்பதுதானா? பேராசை கொள்வது நியாய விரோதம். பிறர் சொத்துக்களை அழிப்பது, கொள்ளையடிப்பது முதலியன ஒழுக்க விரோதம் என்று உமது திருமறை கூறுவதை மறக்கலாமா? பேராசை காரணமாகக் கொள்ளையடிப்பதையும், கொலை புரிவதையும், நாச வேலை செய்வதையும் நீங்கள் மனநிம்மதிக்கான செயல்களாகக் கருதுவது உங்கள் சமயத்துக்கே முழு விரோதமானது என்பதை நீங்கள் அறியவில்லையா?” என்று மிக நிதானமாகவே கேட்டார்.

     ஆனால் சோழன் இப்படிக் கேட்டதும் கஜினியால் தன் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

     “ஒரு காபீர், எனக்கு என்னுடைய சமயத்தைப் பற்றிய போதனை செய்வது சைத்தான் வேதம் ஓதுவது போலவே நாராசமாக இருக்கிறது” என்றான் கஜினி. எவ்வளவு நேரம்தான் அவன் நிதானமாக இருப்பான்.

     “ஐயோ...!” என்று இரைந்து கூறிவிட்டார்கள் அத்தனை பேரும்.

     கஜினியே இந்த ஐயோ சத்தம் கேட்டதும் பதறி எழுந்தான் என்னவோ ஏதோ என்று.

     ஆனால் சோழன் சிறிதளவும் பதறவில்லை. சற்றும் தன் நிதானம் இழக்கவில்லை. கலகலவென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டு “அன்பர்களே, அமீர் ஆத்திரம் தாங்காது தன்வசம் இழந்து பேசுவதை நாம் கருணையுடன் பொறுப்போமே தவிர வெறுத்து ஒதுக்க நினைக்க மாட்டோம். இந்துஸ்தானத்தின் ஒரு சில குட்டி மன்னர்களை வென்று விட்டதால், தன்னை அவர் பெரிதாக மதித்து இறுமாந்து விட்டார் பாவம்! பீம்தேவ் என்னும் ஒரு சிறு நாட்டு மன்னனை விரட்டி வென்று அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, கோயிலை இடித்து, இறைவன் உருவத்தைத் தகர்த்து உடைத்து விட்டதைப் பெருமையாகக் கருதி ஆணவம் கொண்டு விட்டார் பேதை மனிதர். தன்னையறியாது முறை பிறழ்ந்திட்ட அவருக்காக நாம் இரக்கம் காட்டுகிறோம். எனவே பதற வேண்டாம்” என்று சோழன் கூறிவிட்டுச் சில நொடிகள் எதுவும் பேசாது கஜினியையே நோக்கினான். பிறகு சட்டென்று, “ஏ கஜனி நாட்டின் அமீரே, நீர் நினைப்பதைப் போல உம்மை மற்ற எவரும் சிறிதும் மதிக்கவில்லை. உம்முடைய இஸ்லாமியர்களே உம்மை மதிக்கவில்லை...” என்று இராஜேந்திர சோழன் துவங்கிய போது அது சிம்ம கர்ஜனை மாதிரியே இருந்தது.

     “மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய நபிநாயகம் ‘பரசமயிகளை, கடவுள்களை, கடவுள்களின் உருவங்களை வழிபடுவோரைப் புறக்கணித்து விடுங்கள்’ என்றுதான் அதாவது நீங்கள் விலகி ஒதுங்கி விடுங்கள் என்றாரே தவிர, அவர்களை அதாவது பரசமயிகளையெல்லாம் ஓட ஓட விரட்டிக் கொல்லுங்கள். அவர்கள் பரிசுத்தமானதாக கருதும் இடங்களை அழித்திடுங்கள். விக்கிரகங்களை உடைத்தெறியுங்கள். கோபுரங்களைத் தகருங்கள். கொள்ளை அடியுங்கள் என்று ஒரு நாளும் கூறவேயில்லை. உத்தம மார்க்கத்தைப் போதித்த அந்தத் தீர்க்கதரிசி இவ்வாறெல்லாம் சொல்லுவாரா? மனதால் கூட நினைத்திட மாட்டார். கருணையைக் கைவிடாதீர்கள்; அப்பாவிகளை, நிராயுதபாணிகளை, திக்கற்றவர்களை, நம் வம்புக்கு வராதவர்களைப் பழிக்காதீர்கள்; பகைமை பாராட்டாதீர்கள். பொதுச் சொத்துக்களை அழிக்காதீர்கள். திக்கற்றவர்களைக் காத்து உதவுங்கள் என்றுதான் போதித்துள்ளார், அமீர்... முகமது நீ அந்தப் புனித தீர்க்கதரிசியான நபிநாயகத்தின் பெயரைத் தாங்கியவன். நம் வணக்கத்துக்குரிய ‘ஸல்’ அவர்கள் ‘நலமே செய்க’ என்றுதான் கூறினார். தாமே உரிய வழிகாட்டினர். இச்சிறப்பினை நாம் மறந்திடுவதே மாபெருங் குற்றமாகும்” என்று நயமான வார்த்தைகளில் கூறியதும் கஜினி சில நொடிகள் பதில் எதுவும் கூற இயலாது அதிர்ச்சி கண்டவன் போல அதிசயமாகப் பார்த்தான் சோழனை.

     கண்கள் அவனைக் கவனித்தாலும் உள்ளம் ஏனோ நடுங்கியது.

     இந்தச் சூழ்நிலையைக் கைவிட மனமில்லாத மசூத். “தந்தையே! நம் அனைவருடைய வணக்கத்துக்குரிய மவுலானா பரூக்கியின் அன்பு மாணவர் இந்தச் சோழர்” என்று குறுக்கிட்டுக் கூறிவிட்டுக் கஜினியை வெறுப்புடன் பார்த்தான் மசூத்.

     “இளம் சுல்தானே, நான் மவுலானாவிடம் மிகச் சிறிதளவே உங்கள் திருமறைப் பற்றி புனிதமான புதிய மார்க்கம் பற்றி அறிந்துள்ளேனேயன்றி நான் எல்லாம் அறிந்தவன் அல்ல. யாரும் அவ்வாறு அறியவும் முடியாது. நான் அவருடைய முழு நேர மாணவனும் அல்ல. ஆயினும் அவர் அறிவுலக மேதை. இஸ்லாம் உலகின் உத்தமமான, உண்மையான சமயங்களில் ஒன்றாக வளருவதற்கு அவர் போன்ற ஆசான்களே காரணம்.”

     “இல்லை. உலகின் ஒரே சமயம் இஸ்லாம்தான். வேறு சமயமே இல்லை. இருந்தால் அவை யாவும் பொய். காபீர்களின் சூனிய மாயைகள் அவை” என்று மீண்டும் கத்தினான் கஜினி.

     இப்போது ஆல்ரூபனியால் கூடப் பொறுக்க முடியவில்லை.

     “சுல்தான், நிறுத்துங்கள் உங்கள் மமதைப் பேச்சை. சோழ சக்கரவர்த்திகளின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. நீங்கள் உங்களுடைய சமயத்தைப் பெருமையாகக் கருதுதல் முழு நியாயம். ஆனால் பிறரை இகழ்தல் அநியாயம்” என்றார் சினத்துடன்.

     “ஆம் சுல்தான். எவ்வளவோ பொறுமையுடன் சோழச் சக்கரவர்த்திகள் பேசுகிறார். உங்களைத் தம் அருகில் அழைத்துச் சம இருக்கை அளித்து மிக இதமான முறையில் நல்லுரைப் பேசுகிறார். நீங்கள் அதை உதறிப் பேசுதல் அவரை இகழ்தல் இரண்டும் உமக்குப் பெருமை அளிப்பனவல்ல” என்றார் நிஜாமுதீன்.

     “முற்றிலும் நியாயத்தையே கூறுகிறார்கள் இவர்கள். இதற்கு மாறுபடுவது முறையல்ல சுல்தான். நம்மை ஏன் இவ்வாறு மதித்து அன்புடன் அழைத்து அளவளாவுகிறார் சோழர் என்று நிதானித்து அறிந்து தெளிவதற்கு மாறாக ஆத்திரமும் வெறுப்பும் காட்டினால் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுபவர்களாவோம்” என்றார் ஃபெரிஷ்டா.

     கஜினியால் இவர்களைச் சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘இந்தக் காபீரிடம் இவர்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறார்கள். ஏன் அந்தப் மாபெரும் எகிப்திய மன்னன்... அந்த அரபு உலகின் முதல்வனான கலிபா... இவரை மதிக்கிறார்கள்... புரியவில்லையே. எல்லாம் வல்ல அல்லாஹ் ஏன் இந்தச் சோதனை? ஒரு காபீரிடம் நான் பேசியாக வேண்டிய வேதனையை ஏன் உண்டாக்கிவிட்டாய்?’

     “எல்லாம் வல்ல இறைவன் நம்மைச் சோதிக்கும் போதுதான் நாம் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றான் சோழன்.

     திடுக்கிட்டான் கஜினி.

     ‘அடப் பாவி. தன் மனதில் நினைத்ததை அப்படியே ஆரூடம் அறிந்தவன் மாதிரி கூறுகிறானே’ என்றெண்ணி உண்மையில் உள்ளூர நடுங்கவே செய்தான். வாய் பேச இயலாது, விழித்துப் பார்த்தான்.

     “நாம் நல்லவர்களாகி நிதானமும் அடக்கமும் கொண்டவர்களாக இருப்பதையே ஆண்டவன் விரும்புகிறான். எவன் நேர்மை, நிதானம், நாணயம், ஒழுக்கம், உறுதியுள்ளவனோ அவனே நமக்குப் பிரியமானவன் என்று கூறுகிறான் ஆண்டவன்” என்றான் மீண்டும் சோழன்.

     “எங்கள் ஆண்டவன் அருளுரைகள் இவை” என்று இப்போது விநயத்துடன் குறுக்கிட்டான் கஜினி.

     “ஆம் அமீர். ஆனால் இவையனைத்தும் நீர் அடியோடு மறந்தவை” என்றான் சோழன்.

     “இல்லை. நான் மறக்கவில்லை. காபீர்களைச் சூறையாடுவது, கொல்வது, அவர்களின் ஆலயங்களை இடிப்பது, விக்கிரஹங்களை உடைப்பது எல்லாமே நியாயம். இதை எங்கள் நாயகம் அவர்களே...”

     “இல்லை.. அவர் உண்மைக்கு மாறாக எதுவுமே கூறவில்லை. அமீர்” என்று கர்ஜித்தபடி நிமிர்ந்தான் சோழன்.

     பதறி எழுந்தான் கஜினி.

     “நீங்கள் செய்யும் தவறுகளுக்கு அவர் உன்னத உரைகளைக் கொண்டு சப்பைக்கட்டு கட்ட முயலாதீர் அமீர். உம்... உட்காரும் அப்படி. நேர்மை, நாணயம் இவற்றை உதறி, நெறிமுறை, ஒழுக்கத்தை விடுத்த உங்களை ஒரு இஸ்லாமியன் என்று ஒத்துக் கொள்ள முடியாது.”

     “தேவையில்லை. ஒரு காபீர் என்னை ஒப்பாதது. எனக்கு நஷ்டமில்லை. எங்களவர் ஒப்பினால் போதும்.”

     “இல்லை சுல்தான். இன்றும் சரி, நாளையும் சரி, நம் இஸ்லாமியர்களும் ஏற்பதற்கில்லை” என்றார் மாமேதை ஆல்பரூனி.

     “என்ன?” என்று இரைந்து கத்திவிட்டான் கஜினி.

     “கத்திப்பயனில்லை கஜினி சுல்தான். நாங்கள் அன்று முதல் இன்று வரை எத்தனையோ முறை படித்துப் படித்துச் சொன்னோம். நீர் செவி சாய்த்துக் கேட்கவில்லை. வருங்காலம் நிச்சயமாக உங்களை ஏசும். நம்மவரே மிகவும் வெறுப்பர். எந்த வகையிலும் அப்பாவிகளைக் கொல்லுவதை இஸ்லாம் ஏற்கவில்லை. பிற சமயங்களைப் புறக்கணித்து அவர்களை நாம் மதியாது ஒதுங்குவதுதான் நம் நெறிமுறை. மாறாக அவர்களைப் பலாத்காரமாக மாற்ற முயற்சிப்பது, படையெடுத்து அடக்கி ஒடுக்கிப் போரிடுவது எல்லாம் முறையில்லை. அன்று கோயில்கள் பக்கம் நாம் போகவே தேவையில்லை என்றோம். கேட்டீர்களா?”

     “நான் அன்று உங்களுடைய உபதேசத்தைக் கேட்டால் இன்று உலகம் புகழும் விக்கிரஹ நிக்கிரஹனாக இருக்க முடியுமா?”

     “இது புகழ்ச்சி அல்ல. இகழ்ச்சி. கலிபா அவர்கள் மனம் இவற்றால் புண்பட்டு உள்ளது. எகிப்து மன்னர் எவ்வளவோ நொந்து கொள்ளுகிறார்.”

     “அவர்கள் என் வாய் மூலம் உண்மையறிந்தால் மகிழ்ச்சியுறுவார்கள். நான் என் மரணத்துக்கு பிறகு என் சமாதிக்கு விஜயம் செய்பவர்கள் யாவரும் ‘எங்கே அந்த விக்ரஹ நிகரஹன்? சுய சமய சேவாதுரந்தரன்?’ என்று கேட்டு மகிழ வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை. இதை அறிந்தால் அவர்கள் பூரிப்பர்.

     “அப்படியானால் நீர் கொள்ளையடித்த பொருள்களைத் திருப்பி விடுவீர்களா?”

     “முடியவே முடியாது. நான் அவற்றையெல்லாம் குவித்துப் பார்த்து ஆனந்திக்க விரும்புகிறேன். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.”

     “மாட்டார். அதைப் பார்த்து உம்மை விம்மி விம்மி வெடிக்கச் செய்து அழத்தான் செய்வார்” என்றான் சோழன்.

     இதைக் கேட்டதும் துள்ளியெழுந்தான். “இந்த விக்ரஹ நிக்ரஹனை மதிக்காமல் நீங்கள், இந்துஸ்தானத்தில் வெற்றிகளையே குவித்துள்ள என்னை மதியாமல், காபீர்களைக் கொன்று குவித்து அவர்கள் மீது ராஜநடைபோடும் இந்தக் கஜினி முகமதை மதிக்காமல் பேசிடும் உம்மை...”

     “நிறுத்தும் அமீர்... நிறுத்தும். ஏன் இப்படியெல்லாம் உளறுகிறீர்கள்? நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஆயினும் முயற்சி செய்வதில் குறை வைக்கக் கூடாது என்பது ராஜதந்திரம். பரவாயில்லை. இனி நான் உம்மை அழைத்த காரணம் கூறி ஆண்டவனை உமக்கு நற்புத்தி அளிக்கும்படி வேண்டி அனுப்பி வைக்கிறேன். உட்காரும்...” என்று சொன்ன சோழன் ஒரு பெருமூச்சுவிட்ட போது வேண்டா வெறுப்புடன் உட்கார்ந்தான் கஜினி.

     சுற்றிலும் உள்ளவர்களை ஒருமுறை பார்த்தான் சோழன். பிறகு மேலே உச்சி முகட்டைப் பார்த்தான். மீண்டும் ஒரு பெருமூச்சுவிட்டான்... அப்புறம் நிதானமாகவே சொன்னான்.

     “அமீர், ஆண்டவன் படைப்பில் நாம் எல்லாம், அணுக்களிலும் சிறிய அணுக்கள். எனவே அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. இந்துஸ்தானத்தில் முன்பு எத்தனையோ பேர்கள் இறையருளால் எத்தனையோ கோயில்களை நிர்மாணித்தார்கள். இன்று உம் போன்றவர்களால் அவை அழிய வேண்டுமானால் அதற்கும் இறைவன் திருவருளே காரணமாகும். எங்களுடைய சமயம் விதியை வெகுவாக நம்புகிறது. அதாவது இந்த விதியின் பொருள் இறைவன் தீர்ப்பு என்பது புரியாமலே குருட்டு நம்பிக்கை பரவி வந்துள்ளது. இது சரியா தவறா என்றும் ஆராய்ச்சி தேவையில்லை. ஆனால் என் தந்தை தஞ்சையில் ஒரு மாபெரும் கோயிலை உருவாக்கியுள்ளார். நானும் அவ்வாறு ஒன்றினை உருவாக்கத் தீர்மானித்துள்ளேன். இதற்கு இறைவன் துணை நிச்சயம் தேவை. ஆனால் நீர் செத்த பிறகு விக்கிரஹ நிக்கிரஹன் என்று உங்களைப் புகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களே... அது ஒருக்காலும் நிறைவேறாது. ஏனெனில் இன்றே உமது செயல்களை உங்களவர்கள் வெறுக்கிறார்கள்... இதோ பாருங்கள் எமக்கு வந்துள்ள இந்த லிகிதத்தை...” என்று நீண்ட உறையை நீட்டினான் சோழன்.

     பரபரப்புடன் அதை வாங்கிய சுல்தான் அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தான். சில நொடிகள் ஓடின. பிறகு “ஐயோ...!” என்றான் வாய்விட்டு. சோழனை வெறித்து நோக்கினான்.

     “மேலே படியும் அமீர்” என்றான் சோழன்.

     பரபரப்புபுடன் படித்தவன் அப்படியே சோர்ந்து போய்ச் சாய்ந்துவிட்டான். அவனுடைய இறுமாப்பை அந்தக் கடிதம் அந்த அளவுக்கு மட்டந்தட்டிவிட்டது போலும். அல்லது மனம் உருக செய்துவிட்டதோ!

     “இது... இது...” என்று தடுமாறும் குரலில் குழறும் வார்த்தைகளில் கஜினி ஏதோ கேட்க யத்தனித்தாலும் அது இயலவில்லை.

     “இது உண்மையா? என்று நீர் கேட்கக்கூடும். இதோ இதையும் பாருங்கள்” என்று மீண்டும் சோழன் எதையோ நீட்டியதும் அதை வாங்கிய சுல்தான் சில நொடிகளில் “ஆ...!” என்று அலறிவிட்டான்.

     பிறகு “சோழரே... சக்கரவர்த்திகளே! கலிபாவின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழகத்துச் சக்கரவர்த்திகளே... நான்... அறியாத்தனமாக மமதையால் என் நிலை மறந்து தங்களிடம் நடந்து கொண்ட தவறான...” என்று மீண்டும் அச்சத்தாலோ அல்லது அளவு கடந்த கிலேசத்தினாலோ உளற ஆரம்பித்ததும், “அமீர், இத்தகைய பேச்சுக்கள் எல்லாம் இப்போது தேவையில்லை. நான் உம்மை அழைத்த காரணம் இக்கடிதங்கள்தான். எனவே இனி எப்படி நடக்க வேண்டும் என்பதை இதுவரை நடந்ததை மறந்து அல்ல மாற்றி நடப்பதாக உறுதி கொண்டு நம்மிடமிருந்து வெளியேறுங்கள். பிறகு உங்கள் விருப்பம் போல் நடவுங்கள். இறைவன் எப்பவுமே கழிவிரக்கப்படுபவக்கு அருள்புரியத் தயங்குவதில்லை... நல்லது அமீர், இனி நீரும் உமது நண்பர்களும் புறப்படலாம். நம்முடைய இந்தச் சந்திப்பு இத்துடன் முடிந்தது...” என்று கூறி சுல்தானிடம் நீட்டியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஒருமுறை பெருமூச்செறிந்தபடி எழுந்தான் சோழன்.

     “நண்பர்களே, நாம் மீண்டும் சந்திப்போமே. ஏன் என்றால் நான் அரபு நாட்டுக் கலிபா, எகிப்திய மன்னர்களுடைய பிரதிநிதிகளுடன் நாம் பேச வேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது” என்று கூறியதும் மற்றவர்கள் வணங்கிவிட்டு நகர்ந்தார்கள். ஏங்கி நின்றது கஜினி ஒருவன்தான்.

     சோழனிடம் தனது இரு கரங்களையும் நேசத்துடனோ அல்லது வேறு என்ன நோக்கத்துடனோ தெரியவில்லை, நீட்டினான். ஆனால் அவன் கரங்கள் நடுங்கின. அந்த நடுங்கும் கரங்களை நிதானமாகப் பிடித்த சோழன்.

     “அமீர், வரும் காலம் நம்மைப் பற்றி என்ன வேண்டுமாயினும் கூறட்டும். கவலையில்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் போது நேராகச் செயல்பட்டுச் சீராக வாழ்ந்தோமானால் அதுவே நீர் உமது பெரியவர்களை மதிப்பதாகும். எதிர்காலத்துக்கும் சிறப்பு. உமக்கும் நிம்மதி ஊட்டும்” என்றான்.

     “ஆம், சோழச் சக்கரவர்த்திகளே! நாளைய வரலாறு எது கூறினாலும் சரி. இனி நான் ஒரு போதும் இந்துஸ்தானத்துக்குத் திரும்ப மாட்டேன். நீங்கள் அறிஞர்களை வெகுவாக மதிக்கிறீர்கள். நானும் அவர்களை மதிப்பவன்தான். எனவே அங்கு சென்று கஜினியில் ஒரு பெரும் பல்கலைக்கழகம் ஆரம்பித்து எங்கள் சமயமும், மொழி, கலை அனைத்தையும் வருங்கால சமூகம் பயிலுவதற்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்” என்று கூறி முடிப்பதற்குள் “பேஷ்... பேஷ்!” என்றான் சோழன்.

     “நம்முடைய சந்திப்பு இறைவன் திருவருளால் நடந்தது. இதுவரை என் மனப்போக்கினாலேயே மூடப்பட்டிருந்த என் கண்கள் இன்று திறந்தன. நாளைய வரலாறு நமது இந்த மகோன்னதமான சந்திப்பைக் குறிப்பிட்டாலும் சரி, குறிப்பிடாமற் போனாலும் சரி, இந்த நிகழ்ச்சி என் மனதில் நிலைத்து என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்ட அற்புதமாகும்.”

     “ஆண்டவன் திருவருள்படியே யாவும் நடக்கும் அமீர். நமது சந்திப்பு என்பது ஒரு சாதாரண விஷயம். பெரிது படுத்த வேண்டாம். ஆனால் மனம் மாறுவது என்பது நிரம்பப் பெரிய விஷயம். மகிழ்ச்சிக்குரியது. நம்முடைய இந்தச் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கட்டும்.”

     “மகிழ்ச்சியுடன் திரும்புகிறேன் மாமன்னரே. நிச்சயமாக நிம்மதியும் காண முயல்வேன்.”

     “நல்லது கஜினி அமீர் முகமது அவர்களே... நல்லவர்களுக்கு இறையருள் எப்பவும் உண்டு. இதில் ஜாதி, மதம், இனம் ஆகிய பேதங்கள் எதுவும் இல்லை.”

     “ஆம். அறிந்து கொண்டேன். வருகிறேன். சலாம் அலேகும்... அல்லாஹ் உங்களைக் காப்பாராக.”

     “நல்லது அமீர். நம்மைப் படைத்த ஆண்டவர் எப்போதும் நமக்கு நலமே அருள்வார். சென்று வாருங்கள்...”

     கஜினி முகமது அன்று சென்றவன் பிறகு இந்நாட்டுக்குத் திரும்பவில்லை.

*****

     நாம் இங்கு சோழ பரகேசரி சிறிது அமைதியாக இருந்திட விட்டுவிட்டு ராஜமோகினியை முன்புவிட்ட இடத்துக்குச் செல்லுவோம்.

     ராஜமோகினி மீண்டும் கண் விழித்த பொழுது அவள் எதிரே இருந்தது சோழ இளங்கோவரையனில்லை; சக்தி பீடக்குரு மஹான் ஹரி சர்வோத்தமர். மலர மலர விழித்த அவளுடைய கண்கள் அவரையே சிறிது நேரம் உற்று நோக்கின. முதலில் புகை மாதிரி ஒரு திரை... பிறகு அவர் முகம்.

     “நல்ல காலம் மோகினி. அன்னை பராசக்தி அருளால் நீ பிழைத்து விட்டாய். இனி சோழச் சக்கரவர்த்திகளின் எதிரே தைரியமாக நிற்பேன்” என்று குருநாதர் சொன்னதும் அவள் உள்ளூர பதறி விட்டாலும் வாய் திறந்து பேச இயலாது, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். எனினும் அவள் மனம் ஆவலால் அதுவும் திடீர் மயக்கம் ஏற்பட்டதால்... ‘சற்று முன்புதானே அந்த இளங்கோவரையருடன் பேசினேன். அப்பொழுது கூட அவர் சோழர் என்னைப் பற்றி விசாரித்தார் என்று இவர் கூறவில்லையே? அடேடே! என்ன குழப்பம் இது? சற்று முன்பு இங்கு இல்லாத சர்வோத்தமசீலர் எப்படித் திடீரென்று இங்கே வந்து சேர்ந்தார்? ஏன் இவர் வருவதை சிவா முன்பே கூறவில்லை. அந்தச் சோழ வீரர்கூட ஏதோ என் சாதனை, சோழர் கஜினியை சந்திக்கிறார் என்றெல்லாம்... அடேடே! அதுமட்டும் உண்மையாயிருந்துவிட்டால்... சேசே... இளங்கோவரையர் சத்தியம் செய்தாரே! தவிர... சிவாவே அடித்துச் சொன்ன பிறகும் நாம் சந்தேகித்து இப்படிக் குழம்பலாமா? அப்படியானால் சோழச் சக்கரவர்த்திகள் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி விட்டார் என்றால் நான் எவ்வளவு தவறாக அவரைப்பற்றி... சேச்சே! நினைத்து பார்க்கவே வெட்கமாயிருக்கிறதே... இது உண்மையாயிருக்குமானால்... அடேடே! மீண்டும் சந்தேகமா? ஏன் இப்படி இருக்கிறேன் நான்!’

     “மோகினி...” என்னும் கனிவான குரல் கேட்டுக் கண்களைத் திறந்தவள் தன் பக்கத்தில் மூத்த அண்ணன் மனைவி அமர்ந்திருப்பதைக் கண்டு “அண்ணி...” என்று தீனக்குரல் எடுத்து அவள் கரங்களைப் பிடித்துக் கொள்ள முயன்ற போது, அவள் இலேசாக நெற்றியில் கை வைத்து... “மோகா, சற்றே சுரம் விட்டிருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் தூங்கு. சோழ வைத்தியர் இன்னும் ஐந்தாறு நாட்களாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார்” என்று சொன்னதும், “என்னது சோழ வைத்தியரா? என்ன அண்ணி இது...? சற்றுமுன் கூட சிவா என்னுடன் பேசிய போது நீங்கள் வந்திருப்பதைக் கூறவில்லையே...? நீங்கள் எப்படித் திடுதிப்பென்று...?”

     “என்ன இது மோகா, நீ இப்ப சின்னண்ணனுடன் பேசினாயா? அவர் இங்க எப்போது வந்தார்? பத்து தினங்களாயிற்றே அவர் போய்...”

     “பத்து தினங்களா? என்ன அண்ணி இது அதிசயமாயிருக்கிறது? நான் சற்று முன்புதானே அவனுடன்...”

     “சரிதான்... மீண்டும் சுரவேகத்தில் பதினைந்து தினங்களுக்கு முன்பு நீ உளறிய மாதிரி இப்பவும் உளற ஆரம்பித்துவிட்டாயா என்ன?”

     “இல்லை அண்ணி. தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். எனக்கு என்ன உடம்பு? குரு மகான் எப்படி... நீங்கள் எப்படி... இங்கு திடுதிடுப்பென்று...” என்று குழறிக் குழறிக் கேட்டவுடன்,

     “நீ இப்போது குருஜி ஹரிசர்வோத்தமர் ஆசிரமத்தில் இருக்கிறாய். இங்கு உன்னை பதினைந்து நாட்களுக்கு முன்பு கொண்டு வந்தவர்கள் உன் சின்ன அண்ணனும் சோழரின் மெய்க்காவல் படைத்தலைவரான வீரஇளங்கோவைரையரும் ஆவர்...” என்று சொல்லி முடித்ததும் மோகினி பதற்றத்துடன், “அடக்கடவுளே!” என்றாள் சற்று இரைந்த குரலில்.

     அண்ணி ஸ்ரீமதி திடுக்கிட்டுப் போய், “மோகினி, இன்னமும் உன் உடல்நிலை சரியாகவில்லை. சுரம் மீண்டும் வருகிறதோ என்னவோ. ஏற்கனவே சோழ வைத்தியர் நடுங்கிச் சாகிறார். ஒவ்வொரு நாள் தாமதமும் அவரைச் சோதித்துச் சோழரிடம் நடுங்கச் செய்கிறது. நீ என்னவோ... உளறுகிறாய். முதலில் நீ பேசாமல்...”

     “அண்ணி, நிறுத்தப் போகிறாயா இல்லையா?”

     “எதை?”

     “நீ உளறுவதைத்தான்.”

     “நான் உளறுகிறேனா? அடக்கடவுளே...”

     “பார்த்தாயா. சற்றுமுன் நான் கடவுளே என்ற போது நீ நான் உளறுகிறேன் என்றாய். இப்போது அதே கடவுளைக் கூப்பிட்டால்... யார் பைத்தியம் அண்ணி?” என்று சாதாரணத் தொனியில் கேட்டதும் ஸ்ரீமதி அதிர்ந்து விட்டாள்.

     பிறகு மோகினியே பேசினாள். “அண்ணி, நான் இப்போது தெளிவாக இருக்கிறேன். தயவு செய்து என் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். என்னைப் பெற்ற தாய்தான் இல்லை. நீங்கள்தானே எனக்கு அன்று முதல் தாய். எனவே எதையும் மறைக்காமல் கூறுங்கள்.”

     “நான் உன்னிடம் இது வரை எதையாவது மறைத்ததுண்டா மோகா?”

     “நல்லது. இப்போது நான் எங்கு இருக்கிறேன்?”

     “சர்வோத்தம குரு நாதர் ஆசிரமத்தில்.”

     “எப்படி வந்தேன்? எப்பொழுது வந்தேன்?”

     “பதினாறு நாட்களுக்கு முன்னால் நீ இங்கு சோழர் மெய்க்காவலர் இளங்கோவரையராலும், உன் சின்னண்ணன் சிவபாலனாலும் இங்கு நடுநிசியில் கொண்டு வரப்பட்டாய். அன்று முதல் இன்று வரை அதாவது கடந்த பதினைந்து நாட்களாக நீ கண் திறக்க முடியாது விஷ சுரத்தால் பீடிக்கப்பட்டுத் துன்புற்றாய். சோழ மாமன்னன் தமது சொந்த வைத்தியரையே உன்னைக் கவனித்துச் சிகிச்சை செய்ய அனுப்பினார். என்னைச் சுந்தரவனத்திலிருந்து அழைத்துவரச் செய்து உனக்குத் துணையாயிருக்கச் செய்ததும் அவரே... இந்த மாபெரும் நாட்டின் மாபெரும் கஷ்டத்தை இன்று நிவர்த்திக்க அவர் கஜினியை நேரில் சந்தித்துப் பேசி ஒரு நல்ல முடிவு காண்பதில் எவ்வளவு அக்கரை காட்டினாரோ... இல்லை அதைவிடச் சற்று அதிகமாகவே உன்னிடம் கவனம் செலுத்தி சர்வோத்தமரிடம், ‘குரு நாதரே, மோகினி என் அன்பு மகள் மட்டுமில்லை, இந்த நாட்டின் வருங்கால சக்தியும் கூட. இவள்தான் என்னை அந்த கஜினி சந்திப்புக்குத் தூண்டி விட்டவள். பெரிய பெரிய அரசர்கள் சொன்ன போது கூட நான் மனம் மாறவில்லை. ஏன் நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு அவனை எதிர்க்கக் கூடாது என்று அவர்களைக் கேட்டு விரட்டி விட்டேன். ஆனால் இந்த வீரப்பெண்... என்னிடம் வந்து தன் மனதைத் திறந்து காட்டியதும் எனக்குப் பாரத தேவியே உள்ளங்குமுறிப் பேசியதாகத் தோன்றுகிறது தவிர...’”

     “அண்ணி, சிறிது நிறுத்துங்கள் சோழர் உண்மையிலேயே இப்படியெல்லாம் சொன்னாரா?” என்று நம்பிக்கையற்ற குரலில் கேட்டதும் ஸ்ரீமதி சற்றே சினந்து “இதோ பார் மோகா, நான் எப்பவாவது பொய் சொன்னதுண்டா? ஏன் இப்படி என்னையே அவமதித்துப் பேசுகிறாய்? அந்தச் சோழர் உன்னை என்னவோ தன் மகளுக்கு மேலாக... இரவும் பகலும் இங்கே பலமுறை வந்து ‘என்ன ஆச்சு வைத்தியரே... ஏன் இன்னும் தெளியவில்லை என் மகள்’ என்று கர்ஜித்ததும், அந்த வைத்தியர் நடுநடுங்கிச் சித்திரவதைப்படுவதும், நம் குருநாதர் கூட அவரிடம் ‘சோழ சக்கரவர்த்திகளே, இந்தச் சிறுமிக்கு வைத்தியர் இருக்கும் போது நீங்கள் ஓடி ஓடி வருவானேன்? அங்கே எவ்வளவு முக்கியமான இந்தத் தேசமே விமோசனத்தைக் கோரும் மாபெரும் பிரச்னையைச் சிக்கலெடுக்க முயலும் நீங்கள் இந்தச் சின்ன விஷயத்துக்கு...’ என்று சொன்ன போது அந்தச் சக்கரவர்த்திகளுக்குத்தான் என்ன கோபம் வந்தது தெரியுமா?”

     “‘மன்னியுங்கள் குருநாதரே. இருளை நீக்க ஒரு திரி எரியவிட்டுத் தூண்டிவிட்டால் ஒளி எங்கும் பரவிவிடுவது போல என் மனதில் உற்சாகத் திரியை எரியவிட்டு வந்த இவள் திரிலோசனின் குலவிளக்கு மட்டுமல்ல, இந்த வடபாரதத்தின் ஒளிவிளக்கு. எனவே இது அணைந்துவிடக் கூடாது. என்னை ஒரு மாபெரும் கடமையில் ஈடுபடுத்திவிட்டு தன்னை மட்டும்... இல்லை குருநாதரே அவளை நாம் இழந்துவிடக் கூடாது. இதுவரை நான் சந்தித்த வடநாட்டுப் பெண்கள் யாவரினும் இவள் உயர்ந்தவள். அந்தப் பெண்களுள் திலகம் போன்றவள். எனவே இமயத்தின் திலகம் அழிக்கப்படலாமா? எனவே இவள் பிழைத்தேயாக வேண்டும். இவளை நான் ஒரு சோழ தேவியாக்கப் போகிறேன். என்னுடைய வளர்ப்பு மகன் வீரஇளங்கோ இவளை மணந்து இமயத்திலேயே தங்கி இங்கேயும் ஒரு சோழ குலத்தைத் தலையெடுத்துத் தரணியாளச் செய்ய வேண்டும் என்பதே என் முடிவு. எனவேதான் என் சொந்த வைத்தியரை அழைத்து வந்தேன். ஆகவே குருநாதரே, ராஜமோகினி நிச்சயமாகப் பிழைக்க வேண்டும். பிழைப்பாள். ஆயிரம் கஜினிகளைச் சந்திக்கலாம், பேசலாம். வெல்லலாம். விரட்டலாம். ஆனால் மற்றொரு மோகினியை நாம் உண்டாக்கி விட முடியாது. என் நண்பன் திரிலோசனன் கொடுத்து வைத்தவன். நானும்தான். ஆகவே அதை நான் இழக்க விரும்பவில்லை. மற்றவர்களையும் இழந்து விடும்படி அனுமதிக்க மாட்டேன்’ என்று அடித்துச் சொன்னதும் பாவம் நம் குருநாதர் கூடத் திகைத்து விட்டார். ஆனால் நீ தான் இதெல்லாம் பொய் என்று சந்தேகித்து விட்டாய்.. எனவே நான் இத்தனை நேரம்...” என்று மேலும் ஏதோ சொல்ல முயன்ற ஸ்ரீமதி, ராஜ மோகினியின் கண்களிலிருந்து நீர் வடிவதைக் கண்டு, “என்ன இது? நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது? சரி சரி நீ அழ வேண்டாம். உன் பிடிவாதமே சரி, நான் சொன்னதெல்லாம் பொய்தான். மெய்யில்லை. தயவு செய்து சோழச் சக்கரவர்த்திகள் வரும் நேரம் மோகா. நீ ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினாலும் அவர் தன் ரத்தத்தை...”

     “அண்ணி... அண்ணி போதும்... போதும். நான் மகா பாவி... ஆம் மகாபாவி அண்ணி பாவி” என்று அவள் அரற்றியதும் ஸ்ரீமதி திகைப்படைந்தவளாய் “சரிதான், திரும்பவும் விஷசுரம் ஆரம்பமாகி விட்டதா?” என்று பதறினாள்.

     “ஐயையோ! அண்ணி, தயவு செய்து என்னைச் சித்திரவதைப்படுத்தாதே. எனக்குச் சுரமும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. முதலில் நான் சோழச் சக்கரவர்த்திகளைப் பார்த்து அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகுதான் நான்...”

     “நீ என்ன தவறு செய்தாய் மோகா? அவர் உன்னை பாராட்டத் துடிக்கிறார் அங்கே... நீ என்னவென்றால் மன்னிப்பு என்று துடிக்கிறாய். எதுவுமே புரியவில்லை. நானும் பார்க்கிறேன் மோகா, நீ எங்கெல்லாம் தலை நீட்டுகிறாயோ, அங்கெல்லாம் ஏதாவது புரியாத குழப்பம் ஏற்படுகிறதே அன்றி தெளிவு, நிம்மதி என்ற வார்த்தைகளே உன்வரையில் எடுபடுவதில்லையே? அது ஏன்?”

     “இதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் குருநாதரை நான்...” என்று துவங்கியவள் “அதோ அவரே வைத்தியருடன் வந்துவிட்டார்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

     “மஹா ஸ்வாமி... நான் உடனே சோழச் சக்கரவர்த்திகளைச் சந்திக்க வேண்டும்... உடனே” என்று பரபரத்துச் சொன்னதும் குருஜி வைத்தியரைப் பரிதாபமாகப் பார்க்க அவர் உதட்டைப் பிதுக்கிவிட்டு, மோகாவின் கரங்களைத் தொட்டுப் பரீட்சிக்கத் துவங்கினார். அவளோ அவர் பிடிப்பை உதறிவிட்டு “வைத்தியரே, என் உடம்புக்கு எதுவும் இல்லை. முதலில் நான் சக்கரவர்த்திகளை...”

     “அசையாதே பெண்ணே!” என்று வைத்தியர் அதட்டியதும் அவரை வெறிக்கப் பார்த்தவள், “நீங்கள் யார் என்னை அதட்ட... இந்தச் சோழ வர்க்கத்துக்கே மரியாதை தெரியாது போலிருக்கிறது” என்று அவள் கத்தியதும் ஸ்ரீமதி பதறிவிட்டாள்.

     குரு சர்வோத்தமர் இவள் அருகே வந்து, “மோகினி, மீண்டும் ஏன் இப்படி பிதற்றுகிறாய்? நீதான் இப்பொழுது சோழரைப் பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென்கிறாய். திடீரென்று ராஜ வைத்தியரிடம் மரியாதையின்றி கத்துகிறாய் குழந்தாய்...”

     “நான் குழந்தையும் இல்லை, கோட்டானும் இல்லை” என்று கத்திவிட்டாள்.

     ஆனால் அடுத்த நொடியே வைத்தியர் அவள் மூக்கருகே என்னவோ செய்ய, மயங்கிச் சாய்ந்து விட்டாள்.

     “குருநாதரே, இந்தப் பெண் ஒரு சண்டி என்பதில் சந்தேகமேயில்லை. நோக்கம் நல்லதாயிருக்கலாம். ஆனால் தான் என்ற மமதையும், அஹங்காரமும் அந்த நோக்கத்தையே தகர்த்துவிடும் என்பது இந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.”

     ராஜமோகினிக்கு வைத்தியர் என்ன கூறுகிறார் என்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஏழ முடியவில்லை. வாயைத் திறந்து பேச முடியவில்லை. ஏன் முன் போலக் கண்களைத் திறக்கவும் முடியவில்லை. ‘என்ன செய்தார் இந்த வைத்தியர்... ஏன் இப்படி? இனிக்கட்டை போலத்தான் கிடக்க வேண்டுமா...?’

     “சோழச் சக்கரவர்த்திகள் வருகிறார்...” என்று ஒரு அறிவிப்பொலி அவள் காதில் நன்கு விழுந்தது. ஏதோ ஒருவர் வரும் சப்தமும் பரபரப்புடன் எழுந்தது புரிந்தது. பிறகு வைத்தியரிடம் “ஏன் பண்டிதரே, என்ன ஆயிற்று இவளுக்கு? நன்றாகத் தெளிந்து எழுந்து விட்டாள். நீண்ட நேரம் தன் அண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தாள் என்ற தகவல் வந்ததும் புறப்பட்டு வந்தால்... இவள் இப்படிக் கிடக்கிறாளே... ஏன்?”

     “நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் சக்கரவர்த்திகளே. ஆனால் மீண்டும் இந்த நிலையையடைய அவள் நிர்ப்பந்தமாக விரும்பினாள். விருப்பத்தைப் பூர்த்தி செய்தேன்” என்றார் வைத்தியர் பணிவான குரலில்.

     “ஓ...! அப்படியா? மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதையா?”

     “ஆமாம் சக்கரவர்த்திகளே...”

     குரு சர்வோத்தமர் சற்றே குழப்பத்துடன்... “திரிலோசனன் இந்தப் பெண்ணை மிகவும் இடங்கொடுத்து வளர்த்து விட்டான். ஒரே பெண் ஆதலால்...”

     “பரவாயில்லை, குருநாதரே. வைத்தியர் தான் விரும்பும் வரை இவளை இப்படியே வைத்திருப்பார். அவரை இவ்விஷயத்தில் நான் கண்டிக்க முடியாது. சோழர்களை யார் யார் பழித்தாலும் நான் பொறுப்பேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே இவள் இந்த நிலையில் இருந்தால்தான் நலம். இல்லையா வைத்தியரே...?”

     “ஆம் சக்கரவர்த்திகளே..”

     “நல்லது. இளங்கோவரையன் என்னும் அங்குசம் தன் கடமையைச் செய்யத் துவங்கும் வரை தொல்லைதான். பரவாயில்லை. ஸ்ரீமதி, நீ இவளிடம் மனம்விட்டுப் பேசினாயா?”

     “பேசினேன் சக்கரவர்த்திகளே. உங்களிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க விரும்பினாள். கண்ணீர் விட்டு அழுதாள்.”

     “ஓகோ! பிறகு வைத்தியரிடம் முரட்டுத்தனமாகப் பேசுகிறாளாக்கும்...?”

     “ஆம் சக்கரவர்த்திகளே. நீங்கள் சொன்னது மாதிரி வேதாளத்தின் கதைதான்.”

     “அது கிடக்கட்டும் குருநாதரே. ஸ்ரீமதி எங்கள் தமிழகத்தில் கல்வி பயின்றவள். இவளுடைய திருமணம் கூட அங்கே என் முன்னிலையில்தான் நிகழ்ந்தது. எனவே எங்கள் பழக்க வழக்கங்கள் யாவும் அறிந்தவள். எனவேதான் இவளை... மோகினியின் துணைக்கு இங்கு வரவழைத்தேன். தன் தந்தையின் உடல் நலம் மிகவும் நலிந்திருந்தாலும் அதைப் பாராட்டாது மோகினிக்காக ஓடோடி வந்தாள்” என்று சோழர் சொன்னதுமே மோகினியின் காதில் நுழைந்தது.

     அடுத்துச் சோழர், “ஸ்ரீமதி, இவள் நீ சொன்ன மாதிரி ஒரு சின்ன குழந்தைதான்” என்று கூறியதும் அவள் காதில் விழுந்தது.

     “ஆம், சக்கரவர்த்திகளே. எனக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகியும் குழந்தை ஒன்றில்லை என்ற குறையை இவள் மூலமாகத்தான் தீர்த்துக் கொள்ளுகிறோம்.”

     “நல்லது. நாளை இவளுடன் அந்த முரட்டு அரையனும் வந்ததும் உங்கள் மாளிகையிலேயே...” திடீரென்று இங்கு நிறுத்திவிட்டுச் சோழர் வாய்விட்டுச் சிரித்ததும் தான் எழுந்து பேச வேண்டும், விடக்கூடாது என்று மோகினி நினைக்க முடிந்ததே அன்றி அப்படிச் செய்ய இயலவில்லை. இந்தப் பாவி வைத்தியன் என்னை என்ன செய்தான் என்று அவள் மனம் புலம்பியது. பாவம்!

     “சக்கரவர்த்திகளே, எங்கள் மோகினி இப்படியே கிடந்தால்...”

     “வேறு வழியில்லை ஸ்ரீமதி. நான் வைத்தியரை, அவர் சிகிச்சை முறைக்கு எதிராகக் கண்டிக்க இயலாது.”

     “அப்படியானால் நிவாரணம்...?”

     “இளங்கோவரையன் வரட்டும்.”

     “இல்லை சக்கரவர்த்திகளே. இவள் அசட்டுப் பிடிவாதம் காரணமாக அடுத்தபடி விபரீதங்கள்தான் விளையுமே தவிர, நிலைமை தெளியாது” என்று மனம் நொந்து பேசினாள் ஸ்ரீமதி.

     “ஏன் இப்படிப் பேசுகிறாய் ஸ்ரீமதி?”

     “சோழர்கள் என்றாலே இவளுக்கு ஏனோ தெரியவில்லை, வெறுப்பு உண்டாகி விடுகிறது” என்று அவள் கூறியதும்,

     ‘இல்லை... இல்லவேயில்லை. நான் அந்த இளங்கோவரையரை வெறுக்கவில்லை. அவர்தான்.. அவர்தான் என்னை எனக்கு...’ என்றெல்லாம் கதற வேண்டும் போல் இருந்தது மோகினிக்கு. ஆனால் முடியவில்லை. கண்ணீர்தான் வடிக்க முடிந்தது.

     “ஓ...! நீ இந்த வெறுப்பு விஷயத்தால்தான் அப்படிப் பேசுகிறாள் என்று நினைக்கிறாயா?”

     “ஆமாம்” என்று பதில் வந்ததும் சோழர் புன்னகைத்துவிட்டு,

     “இல்லை ஸ்ரீமதி, இப்படிப்பட்ட ஒரு வெறுப்பு, எங்களிடம் உண்டாக வேண்டும் என்பதுதான் எங்கள் முன் ஏற்பாடு. தவிர உன்னுடைய அந்த மைத்துனன் சிவபாலன் கூட இதற்கு ஒரு காரணம். நல்லது. நாம் இது பற்றி இனிக் கவலைப்படத் தேவையில்லை. சரி, ஹரி சர்வோத்தமரே, நாங்கள் எங்கள் நாடு திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இங்கு நாம் வந்த வேலை முடிந்து விட்டதால் இனி ஊர் திரும்புவதுதான் உடனடி வேலை” என்றார் சோழர்.

     “நீங்கள் எடுத்த முயற்சி மகத்தான வெற்றி பெற்றுவிட்டது குறித்து மிகமிக மகிழ்ச்சி சக்கரவர்த்திகளே... கஜினி தன் நாடு திரும்பிவிட்டான் என்பதுடன் இனித் திரும்ப இந்நாட்டில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்துவிட்டான் என்பதுதான் மிகமிக நிம்மதியான அம்சம்.

     “உங்கள் மகாசக்தி அருள் இங்குள்ள உங்கள் மன்னர்களிடத்தில் நன்கு பரவி இனியாவது ஐக்கியமாகச் செயல்படுவோம் என்று முடிவு செய்து கொள்ளட்டும்.”

     ‘அப்படியானால் சோழ சக்கரவர்த்திகள் கஜினியைத் தன் நாடு திரும்பும்படி செய்துவிட்டதா? ஐயோ! அவருக்கு என் மனம் நிறைய, வாய் நிறைய ஒரு நன்றி சொல்லக் கூட முடியாமல் செய்துவிட்டானே இந்த வைத்தியன்.’

     “சக்கரவர்த்திகளே, தங்களைச் சந்திக்கப் பல மன்னர்கள்...” என்று யாரோ சொன்னதும் “நல்லது குருநாதரே, இதோ வருகிறோம்.. ஸ்ரீமதி. நீதான் இனி இவளுக்கு எல்லாம். இளங்கோவரையன் நான் நாடு திரும்பியதும் இங்கு வந்து சேருவான். என் கருத்து, முடிவு இரண்டையும் இவளிடம் நீ உன்னுடைய கணவன், சிவபாலன், மகா குரு மற்றும் முக்கியமானவர்கள் யாவரும் இவளிடம் தெரிவித்து...”

     “இவள் வெறுப்பு காரணமாக ஏடா கூடமாக...”

     “இல்லை ஸ்ரீமதி. இந்தப் பெண் அந்த முரட்டுப் பயலைப் பார்த்த மாத்திரத்திலேயே மயங்கி விட்டாள். இனி அவன்தான் இவளுக்கு எல்லாம். அந்த மக்குப் பயலுக்கும் இவள்தான் எல்லாம்” என்று கூறிவிட்டுச் சிறிதே வாய்விட்டுச் சிரித்து விட்டார்.

     ‘அடப்பாவி மனுஷனே. இதெல்லாம் உமக்கு எப்படித் தெரிந்தது?’ என்று உள்ளூர மகிழ்ச்சியுடன் பொருமினாள் மோகினி.

     “உறுதிபடத் தெரியுமா?” என்று யாரோ கேட்டதும் சோழன் மீண்டும் ஒரு கர்ஜனைச் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்ததும் அதுகாறும் தன்னில் ஊடுவியிருந்த ஒரு சக்தி எங்கோ நகர்ந்து செல்வதாகவே அவளுக்குத் தோன்றியதும் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

     “வைத்தியரே, அதிகம் சோதிக்க வேண்டாம். பாவம்! என்ன இருந்தாலும் பெண்; எனவே சோழர்களான நாம் பேயர்களாக இருந்தாலும் மனம் இரங்கத்தான் வேண்டும். விரைவிலேயே சிகிச்சையை முடித்து விடுங்கள்” என்று சோழன் உத்திரவிட்டதும், மிகவும் அடக்கத்துடன்,

     “உங்கள் விருப்பப்படியே நடைபெறும் சக்கரவர்த்திகளே!” என்று வைத்தியர் அளித்த பதில் அத்தருணம் தன் மனநிலையை பிரதிபலிப்பதாகவே நினைத்தாள் மோகினி.