உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 21 தஞ்சைப் பெருவுடையார் கோயிலை நிர்மாணித்து அழியாப் புகழ் பெற்று இன்று அமரனாகிவிட்ட ராஜகேசரி இராஜராஜ சோழ தேவரான திரிபுவன சக்கரவர்த்திகள்... மாபெருங் கலைவள்ளலும் கூட. அவருடைய ஆலய நிர்மாண வேலை மட்டும் அல்ல பல நிலையிலும் அவர் கலை ஆர்வத்தை ஈடுபடுத்திப் புதுமைகள் கண்டவர். இடைக் காலத்தில் மங்கிப்போயிருந்த நாட்டியம், கூத்து, (நாடகம்) இசை ஆகிய முப்பெருங்கலைகளை வளர்த்துச் செம்மையான முறையில் நிலைத்திடச் செய்வதில் மிகவும் அக்கரை கொண்டார். இராஜராஜ விலாசம் என்னும் அற்புதமான நாடகம், இறைவனிடத்தில் ஒன்றாக ஆலயங்களில் நாட்டியம் நடத்துவதற்கென்று ஆடற்கலை மகளிரை அதாவது தெய்வமகளிராகப் பேரரசன் இராஜராஜன் நியமித்திருந்தான். தஞ்சைக் கோயிலில் அறுநூற்றவருக்கு மேல் அவர்கள் தெய்வத் தொண்டாற்றினர். கூத்துக் கலைஞர்களுக்கென தஞ்சைக்கருகே ஒரு சிற்றூரையே நிர்மாணித்தான். கூத்தரசி அன்னத்தம்மாள் பேரரசன் பெருமதிப்புக்கு ஆளாக நன்மதிப்பு பெற்ற கலையரசியாக நாட்டினரால் மதிக்கப்பட்டடாள். இன்று அவளே தில்லையம்பதி வந்திருக்கிறாள், வெற்றி மகனாகத் திரும்பும் பரகேசரியை வரவேற்க. கலைப்பிராட்டியான அன்னத்தம்மையாரைத் தன் அன்புக்குரிய ‘தாய்’ ஸ்தானத்திலேயே வைத்திருந்தான் சோழ இராஜேந்திரனும். எனவே அவளே வந்திருக்கிறாள் என்றால், பிரம்மமாராயர் ஏன் இது பற்றிக் கூறவில்லை. ஒருவேளை இந்தத் தேவதாசிகளை நெடுங் காலத்துக்கு முன்னரே நாம் அரசு பூர்வமாக ஆதரிப்பதற்கில்லை என்று அன்றைய அன்பில் அநிருத்தர் கொள்கையை கொண்டிருந்த கொள்கையினை இவரும் அன்று கொண்டிருக்கலாம். எனவே வற்புறுத்தல் தேவையில்லை என்றும் நினைத்தான். ஆயினும் அன்னத்தம்மையார் முதுபெரும் மூதாட்டி. செம்பியன் மாதேவிகளே பாராட்டிப் பெருமைப்படுத்தும் பேற்றினைப் பெற்றவள். தன் மீது பேரன்பு கொண்டவள். இறைப்பணியில் தன் வாழ்நாளை முழுதாக ஈடுபடுத்தியவள். எனவே மன்னன் மனம் பரபரத்தது. தில்லையம்பதி எல்லையில் நுழைந்து விட்டான் திரிபுவனச் சக்கரவர்த்தியான பரகேசரி சோழ இராஜேந்திரன். ஏற்கெனவே வீதிகளில் எள் போட்டால் எள் விழாத அளவுக்கு கூடியிருந்த மக்கள் வீதிகளின் இருபுறத்திலும் ஒதுங்கி நிற்க, இடையே நூற்றியெட்டுக் கலசங்களில் கங்கை நீரைத் தாங்கிய யானைகளும், அவற்றிற்குப் பின்னே வடநாட்டு மன்னர்களைத் தாங்கிய யானைகளும், தொடர்ந்து ஆயிரமாயிரம் குதிரை வீரர்களும் பவனி செல்ல, பரகேசரி இராஜேந்திரனைத் தாங்கிய பட்டத்து யானை மிக எடுப்பாகக் கம்பீர நடைபோட்டு வர மக்கள் ஆனந்த ஆரவாரத்துடன் “வாழ்க... வாழ்க” என்று எழுப்பிய வாழ்த்தொலி வானத்தை எட்டிப் பிரதி ஒலி செய்தது. விண்ணைப் பிளந்த வாழ்த்தொலியைத் தொடர்ந்து எங்கும் ஒரே மங்கல வாத்திய முழக்கம்... தங்கள் மாமன்னனின் திக்விஜயம் மகத்தான வெற்றி திக்விஜயமாக முடிந்து, உடல் நலத்துடன், உளநிறைவுடன், படை வலுவுடன், பிற மன்னர்கள் துணையுடன் வெற்றித் திருவுடன் நாடு திரும்பிய நன்னாள் இது. எனவே தங்கள் மட்டற்ற மகிழ்ச்சியைப் பரவச உணர்ச்சியுடன் காட்டிக் கொள்வதில் பேரார்வம் கொண்டதில் வியப்பில்லை. பட்டத்திளவரசன் தனது தாய், பாட்டி, தம்பிகளுடன் தில்லை வந்த அதே நேரத்தில் மக்களின் உற்சாகம் அளவுக்கு மீறி இருப்பதைக் கண்டதும் அமைச்சர்களுடன் கலந்து ‘சரி, மக்களுக்கும் அவர்கள் மகிழ்ச்சி கோலாகலத்துக்கும் இடையே தலையிட வேண்டாம்’ என்று முடிவு செய்தான். பழையாறையிலிருந்து வந்திருந்த வேட்டரையர், செந்தலையிலிருந்து வந்திருந்த முத்தரையர் இருவரையும் அன்பில் அநிருத்தரும், ஆளிர்ப்பிரம்மமாராயரும் கலந்து பேசிச் சக்கரவர்த்திகளின் திக்விஜய வெற்றி விழாவைப் பத்து தினங்களாவது கொண்டாட மக்களை அனுமதிக்க வேண்டும் என்று பட்டத்திளவரசன் இராஜாதிராஜனிடம் கூறியதும் அவன் இவர்கள் யோசனைக்கு மாறு கூற முடியவில்லை. என்றாலும் தந்தை இது பற்றி என்ன கூறுவாரோ என்று சற்றே தயங்கினான். ஆனால் பிரம்மமாராயர் தானே மன்னரைப் பாடலியில் சந்தித்து விளக்கப் போவதாக கூறியதும் இராஜாதிராஜன் நிம்மதி கொண்டான். சோழர்களின் நால்வகைப் படைகளையும் கொள்ளிடத்தின் இக்கரையிலேயே அணிவகுத்து நிற்கும்படியாக சேனாபதிகளிடம் கோரிய போது அவர்களும் மறுக்கவில்லை. எனவே மக்கள் சுதந்திரமாக விழாக் கொண்டாடத் துவங்கி விட்டனர். சோழ நாட்டாரும். தொண்டை நாட்டாரும், இரண்டறக் கலந்து வீதிகளிலும், ஆலயங்களின் சன்னதிகளிலும், நாலா திசை மதில்களிலும், மரங்கள், மாளிகை மீதெல்லாம் மக்கள் எவ்வெவ்வகையில் கூடியிருந்தனர் என்று குறிப்பாக விவரிப்பது இயலாத காரியம். கொள்ளிடக் கரையோரமாக இருந்த சோழ மாளிகையில் அரசகுடும்பத்தினர் ஆவலே உருவாக சக்கரவர்த்திகளை எதிர்பார்த்திருக்க பட்டத்திளவரசர் இராஜாதிராஜன், அவனுடைய இளவல்களான இராஜேந்திரன், வீரஇராஜேந்திர தேவன், இளவரசிகள் பிரானார் அருண்மொழி அம்மங்கைதேவி ஆகியோரும் தில்லைத் தலத்தின் எல்லையிலேயே பேரரசரை வரவேற்பதற்கென்று சென்றனர். திருவீதிகளில் புனித கங்கை நீர்க்குடங்களை ஏற்றி வரும் பெரும் யானைகளின் மீது வடநாட்டு மன்னர்கள் பலர் மிக அழகான தமது தோற்றத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும் அலங்காரங்களைச் செய்து கொண்டு அமர்ந்திருந்த கண்கொள்ளாக் காட்சி கண்டானந்தித்த மக்கள் பேராரவாரம் செய்து வரவேற்றனர். சிதம்பர ஆலயத்துக்குச் சென்று பல திருக்குடங்கள் இறக்கப்பட்டன. அவற்றைத் தில்லை மூவாயிரவரே தங்கள் தலை மீது ஏற்றிக் கொண்டு வீதிகளில் பக்தியுடன் வலமாகச் சென்றது கண்டு பரவசமுற்ற வடநாட்டு அரசர் பலர் தாங்களும் அவ்வாறு செய்ய விழைந்த போது பட்டத்திளவரசர் “இதனை ஒரு சிலர் வடநாட்டு அரசர் தலைகளில் கங்கா நீரைச் சுமந்து வரச் செய்தவர் என்று கூறுவர். பிறகு அதுவே உண்மையாகிவிடும். ஏன்? எழுதவும் செய்வார்கள் சிலர். கவிஞர்கள் உற்சாகம் தாங்காது இவ்வாறு கவி புனைவதை பாராட்டுரை என்று கருதி பாவிசைத்தால் அது நாளைய வரலாறாகிவிடும். அப்புறம் வடநாட்டிலிருந்து பாவம் தென்னாட்டுக்குக் கங்கை நீரைச் சுமந்து வரும் சோழர் கெடுபிடி செய்தார்கள் என்பதாக வரலாற்றாசிரியர்கள் வரைந்துவிடுவர்” என்று கூறி இதைத் தடுக்க எண்ணினான். ஆனால் வடநாட்டு அரசர்களின் உற்சாகம் பக்தி இரண்டும் வரம்பு மீறிவிட்டதால் அவனால் இதைக் தடை செய்ய இயலவில்லை. பக்திப் பரவசமடைவதில் அவர்கள் மட்டும் தென்னாட்டவர்க்கு சளைத்தவர்கள் அல்லவே. பிறகு இளவரசர்களே இத்தகைய கைங்கரியத்தைச் செய்யவும் தயங்கவில்லை. எனவே அவர்கள் தலை திருமுடிகளையும், அபிஷேக தீர்த்தம் அலங்கரித்ததில் அதிசயமில்லை. தில்லையின் திருக்கோயிலருகே வந்துவிட்டார் மாமன்னர். தமிழகத்தின் நூற்றியெட்டு திருத்தலங்களிலிருந்து அரசன் நலம் நாடி அர்ச்சனை, அபிஷேகம் நடத்திய பிரசாதங்களைக் கொணர்ந்த சிவாசாரியார்கள் புடை சூழ அவர்களுக்கு முன்னே ஆவடுதுறை, ஆரூர், மருதூர், துறையூர், வடுவூர், மறையூர், நல்லூர், நீடூர், குழிக்கரை, கோனேரி, மணலி, மறைக்காடு, சிக்கல், மணக்குடி, மயிலாடுதுரை, திருவாலங்காடு, திருப்புறம்பியம், திருச்சேறை, தில்லை ஆகிய கலையூர்களின் நாதஸ்வர மேளங்கள் முழங்கிட சோழர்களின் உறவு கொண்ட மூத்தத் தலைவர்கள், அமைச்சர்கள், சேனாதிபதிகள். ஐம்பெருங்குழு, எண்பேராயம், படையாச்சியர், சைவக் குருமார்கள், வைணவ ஆசாரியர்கள், சமணகுறவர்கள், பௌத்தப் புனிதர்கள் அணிவகுத்து பின்னே வர, மறையவர்கள் வாழ்த்துரை மந்திரங்களை செபித்த வண்ணம் அவர்களைத் தொடர்ந்து வர... இத்தனையும் மீறி எழுந்த மக்களின் ஆரவார வாழ்த்தொலிக்கு இடையே திரிபுவனச் சக்கரவர்த்திகள் தமது பஞ்சக் கல்யாணிக் குதிரையை முன்னே நடத்தி வந்து நின்று அனைவரையும் அமர்ச்சியுடன் பார்த்துச் சிரக்கம்பம் செய்துவிட்டு இறங்கியவர் தம் எதிரே தம்முடைய ராஜகம்பீர மிடுக்கு நடையுடன் வேகமாய் வந்து தம்மை குனிந்து வணங்கும் திருக் குமாரர்களைத் தழுவிக் கொண்டார். நீண்ட காலமாக அடக்கி வைத்திருக்கும் அன்பார்வத்தை மேலும் அடக்குவதற்கியலாமல், ஆரத்தழுவி உச்சி முகந்து ஆறுதல் கொள்ள முயன்றார். மீண்டும் மக்கள் வாழ்த்தொலி... முதலில் முத்தரையர் முன்னே வந்தார். சோழர் குடிக்கு மூத்த குடியினரான அவர்கள் வாழ்நாள் முழுமையும் செலவிட்டு விட்டார் என்றாலும் இன்னும் கூட அந்த தடந்தோன் வீரர் தளர்வு காணவில்லை. மன்னரும் முன்னே வந்து அவர் தோள் மீது கை வைத்து, புன்னகைத்தார். எனினும் இளவரசன் இராஜராஜன் தன் தந்தை முகத்தில் ஏன் இத்தகைய மகத்தான சந்தர்ப்பத்தில் இருக்க வேண்டிய பூரணமான மகிழ்ச்சி களை இல்லை என்பதை ஆராய முற்பட்ட போது “ஆதித்தன்” என்று யாரோ பெயர் ஒன்றைக் கூறியதாகக் காதில் கேட்டதும், ஆம். தந்தை தனது கடைக்குட்டிச் செல்வனைக் காணாத குறையை பிரதிபலிக்காதிருக்க முயன்று தோல்வியுற்றிருக்கிறார் என்பதாக ஊகித்துக் கொண்டு சிறிது விசனமும் அடைந்தான். அடுத்து வேட்டரையர் முன்னே வந்தார். தமது நீண்ட கரங்களை நீட்டி அவர் கரங்களைப் பிடித்த சக்கரவர்த்திகள்... “இங்கு உங்களைக் கண்டதும் எனக்கு உடன் நினைவு வருவதெல்லாம் உமது தோழர்களான உத்தம சோழ மிலாருடையாரும், சோழகரும்தான். அவர்கள் ஏன் இங்கு வரவில்லை?” என்று ஆவலுடன் கேட்டதும் பட்டெனப் பதில் கூறும் வேட்டரையர் சற்றே தயங்கி உத்தம சோழப் பிரம்மராய ராஜராஜ மஹாராயரைப் பார்த்தார். அந்தப் பார்வை ‘ஏன் ஐயா நீர் இவரிடம் இது பற்றிக் கூறவில்லை?’ என்று கேட்டுக் குற்றம் சாட்டுவது போல் இருந்தது. கண்கள்தான் அவ்வாறு பேசினவேயன்றி வாய்திறக்கவில்லை. பிரம்மமாராயர் சாமானியமாகச் சொல்லிவிடுவாரா? அதுவும் இந்நேரத்தில் சொல்லக் கூடிய விஷயம் அல்ல என்று நினைத்துத்தானே அவர் இதுவரை சும்மா இருந்தார் போலும். அன்பில் அநிருத்தர் முன்னே வந்ததும் அரசர் அவர் அருகே சென்றதும் இருவரும் பரஸ்பரம் வணங்கி முடிந்ததும், “மிலாடுடையாரும் சோழகரும் வேங்கி சென்றுள்ளனர். இது பற்றி நாம் சற்று சாவகாசமாக பேசுவது நலம் தரும்” என்றார் சுருக்கமாக. ‘அப்பாடி!’ என்று அனைவரும் பெருமூச்செறிந்து அநிருத்தருக்கு நன்றி செலுத்தினர். “அப்படியா! நல்லது. அப்படியே ஆகட்டும்” என்றார் சோழர். ஆனால் அவர் மனம் என்னென்னவோ எண்ணியது. பிரம்மமாராயர் இதுதான் சந்தர்ப்பம் என்று ஊகித்து “முதலில் கொள்ளிடத்து மாளிகைக்குப் போய் வந்துவிட்டு ஆலயத்துக்கு...” என்று இழுத்ததும், “இல்லை... முதலில் தரிசனம். பிறகுதான் மற்றவை...” என்று அழுத்தமாக பதில் வந்தது சோழரிடமிருந்து. எனவே யாரும் வாய் திறக்கவில்லை. இளவரசன் செய்த சைகையை அறிந்து காவலன் ஒருவன் ஓடினான் கொள்ளிடத்துச் சோழ மாளிகைக்கு. மாமன்னரோ வீதியில் நடந்தே இறைவன் கோயிலை நண்ணிவிட்டார். ஆனால் அங்கே ஆலய வாசலிலேயே தம் அன்னையரே தனக்காக வந்து நிற்பார் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை; ஆர்வமும் ஆதுரமும் அடக்க நிலையை மீறிவிட்டது. “அம்மா...” என்ற பாசக்குரல் ஏனோ தீனக்குரலாக மாறி... அன்னையின் கால்களைத் தொட்டு வணங்க அருமை மகன் குனிந்த போது “மகனே!” என்று பெற்ற பாசக் கனிவுடன் அழைத்த அம்மூதாட்டி மகனைக் குனிந்து வணங்க விடாமல் அணைத்து நிமிர்த்தியதும், “அம்மா. நான்... நான்...” என்று ஏதோ சொல்ல அந்த ஐம்பது வயது மகன் திணறிய போது அந்த எண்பத்தியெட்டு வயது முதாட்டி.. “ஏன் மகனே, உன் உடம்பு இப்படி இளைத்துக் கிடக்கிறது?” என்று பாசத்தின் வழிப்பிறந்த ஏக்கப் பெருமூச்சுடன் கேட்டதும் அரசர் ‘சரிதான் இனி தாய் விடமாட்டாள்’ என்று அஞ்சி சுற்றுமுற்றும் பார்த்தார். எவருமே இல்லை. அம்மாவும் மகனும் அன்பாக அளவளாவும் போது மற்றவர்கள் அங்கே அசடு வழிய நிற்பது அவசியமா? அவர்கள் இங்கிதம் அறியாதவர்களா என்ன? இளவரசன் இராஜாதிராஜன் கூட கோயிலுக்குள் புகுந்து விட்டான். அங்கு முதற் பிரகாரத்தில் அவன் அன்னை ஆவலே உருவாய் நின்றபடி, ‘நீ மட்டுமா வந்தாய்?’ என்று பார்வையாலேயே கேட்ட கேள்வியில் இருந்த ஆதங்கம் அவனுக்குத் தெரியாமலிருக்குமா? “தன் மகனை அவருடைய அம்மாள் பிடித்துக் கொண்டால் நான் என்னம்மா செய்யட்டும்?” என்றான் சிரித்துக் கொண்டே. தன்னுடைய மகனிடம் ஏதோ சொல்ல முயன்றவள் சட்டென “அதோ பார்!” என்றாள் சோழ நாட்டரசி. மாமன்னர் தோளில் சின்னஞ்சிறு செல்லக் குட்டியான அம்மங்கைதேவி ஜம்மென்று அமர்ந்திருந்தாள். அவளுடைய வலக்கரத்தைப் பிடித்தபடி இளவரசி அருண்மொழி ஏதேதோ பேசியபடி நடந்து வந்தாள். அது காறும் தன் கணவரைக் காண்பதில் துடி துடிப்பாயிருந்த பேரரசி இப்போது தலைகுனிந்து விட்டாள். அவர் அவளுக்கு மிக அருகாமையில் அல்லவா வந்துவிட்டார்! “பார்த்தாயா அம்மங்கை, உங்கம்மாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை. நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை; கவனித்தாயா?” என்று கேட்டதும்... “உஷ்... இதென்ன அசட்டுப் பேச்சு” என்று அரசி கிசுகிசுத்ததும், “பார்த்தாயா அம்மங்கை, உங்கம்மாவும் என்னை அசடு என்று...” இதற்குள் கூட்டம் பெருகிவிட்டது. அரசகுல மகளிர் எல்லோருமே விரைவாக வந்துவிட்டனர். ஆலய மணிகள் ஒலிக்கத் துவங்கின. பாவம்! பேரரசிக்கு ஒரு வார்த்தை பேசக்கூட வாய்ப்பில்லை... இப்போது யாரைக் கோபித்துக் கொள்வது என்றே புரியவில்லை அவளுக்கு. ஆனால் அரசர் அர்ச்சகர்களைப் பார்த்ததும், மகளைக் கீழே இறக்கித் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களை வணங்கினார். பிறகு தில்லை மூவாயிரவர் ஒருவர் பின் ஒருவராக வரத் துவங்கியதும், சக்கரவர்த்திகள் கூப்பிய கரங்களைத் தாழவிடாமல் அப்படியே அஞ்சலி செய்த வண்ணம் நின்றார். சைவமும் வைணவமும் தில்லைக் கோயிலில் இணைந்திருப்பது நீண்ட நெடுங்கால உண்மை. கோவிந்தராஜப் பெருமாளும், நடராஜப் பெருமானும் அன்றும் சரி, இன்றும் சரி, என்றுமே ஒன்றாகக் காட்சியளித்து மாறுபாடும் வேறுபாடும் தேவை இல்லை என்பதாகத்தானே நிரூபிக்கின்றனர். பேரரசன் இவ்வாறு எண்ணிக் கொண்டே தீபாராதனையைக் கண்டு வணங்கி ஆலயத்தை மும்முறை வலம் வந்து பிறகு பொற்சபை சென்றான். பட்டத்திளவரசனும் மற்றவரும் புடைசூழ.. அங்கே இராஜராஜன் குருநாதரும், இராஜேந்திரனின் நல்லாசானுமான கருவூர்த் தேவரைக் கண்டதும் விநயமாக வணங்கி நின்றார். “சோழ தேவா... ஆண்டவன் அருளால் அனைத்தும் நலமே!” என்றார். சோழன் மீண்டும் பணிவுடன் அடக்க ஒடுக்கமாக வணங்கினான். “தங்கள் ஆசியும் இறைவன் அருளும் அனைத்தையும் நலமாகவே வைத்து வாழ்விக்கிறது” என்றான் பதிலுக்கு. “உம்மை எதிர்பார்த்து அதோ உங்களது அன்பு அன்னையார் நிற்கிறார்” என்று ஆசான் அறிவித்ததும் துணுக்குற்ற மன்னன் அத்திசை நோக்க, அங்கே சோழ நாட்டுப் பெரும் கலை மூதாட்டி அன்னத்து நாச்சியார் நின்றிருந்தது கண்டு. “ஓ...! அன்னையே நீங்களா? வணக்கம்... வணக்கம்” என்று பரபரப்புடன் கூறியபடி அவளை நோக்கி வேகமாக நடந்தான் மன்னன். “சோழதேவர் நலந்தானே...? உடல் மெலிந்திருக்கிறது. எத்தனையோ நாடுகள், காடுகள், நதிகள், மலைகள், போர், இறுதியில் வெற்றி... என்று ஏகப்பட்ட அலைச்சல்... என்றலும் இனி அவசியமான தேவை, சிறிதுகால ஓய்வு... இல்லையா?” என்று அவள் கேட்டதும், “ஆம் தாயே. சரியாகச் சொன்னீர்கள். நான் கங்கையிலிருந்து கொணர்ந்துள்ள புனித நீரைக் கொண்டு சோழ கங்கப் பேரேரியையும் கங்கைகொண்ட சோழீஸ்வரத்தையும் அமைக்கிறேன். அது நிறைவு பெறும் வரை இங்கிருந்து எங்கும் செல்வதாக இப்போதைக்குத் திட்டமில்லை.” “அப்படியானால் மெத்த மகிழ்ச்சி தேவா! அதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஏனைய பலரும் நீ வெற்றியுடன் திரும்பி வந்ததைப் பேருவகையுடன் கொண்டாடுகிறார்கள். நானும் என் நோக்கில் கொண்டாட விரும்புகிறேன். அதற்கு மறுப்புண்டா?” என்று அவ்வம்மையார் கேட்டதும் பரகேசரி அவளை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு, “சற்றுப் புரியும்படியாகக் கூறுங்கள் தாயே! உங்கள் கோரிக்கைக்கு மறுப்புமுண்டா? எந்த நிலையிலும் உங்கள் கோரிக்கை எதையும் மறுக்கும் மனம் எனக்கு எப்பவுமே வராது என்பது உறுதி.” “நல்லது தேவா. உனக்குச் சிறிது நேரம் கிடைக்குமா? கிடைத்தால் போதும். அதுவே எனது ஆசை. தில்லையம்பதியின் இறைவன் திருமுன் நடக்கும் ஒரு நாட்டியத்தைக் கண்டு களித்தின்புற பொழுதிருக்குமா என்று அறிய விரும்புகிறேன்” என்றாள் அம்மூதாட்டி. “பொழுது இருப்பது, இல்லாதது இரண்டும் உங்கள் கேளிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். தில்லை நாயகர் திருமுன்னே நடனம் என்றால் அதைப் போற்றிப் புரப்பது என் கடமையன்றோ?” “எனது அடைக்கலமாக வந்துள்ள ஒரு சிறு பெண் அழகு, அறிவு, பண்பு மூன்றும் குறைவறப் பெற்றவள். நடனத்தில் தனது அரிய திறனால் என்னையே மிஞ்சியவள். இறைபணிக்கு அவளை நான் அனுப்பும் முன்னர் தில்லையிலும், தஞ்சையிலும், உறையூரிலும் அவளுடைய நடனங்களை நிகழ்த்திட திட்டம். நீயும் வந்துவிட்டாய். அவள் அதிஷ்டக்காரி. ஆண்டவன் திருமுன்னர், உன் ஆதரவில் அவள் நடனம் நடப்பதெனில் நிச்சயமாகவே அவள் அதிஷ்டக்காரிதான்.” “மறுப்பில்லை தாயே...” என்று இராஜேந்திரன் அறிவித்ததும் அன்னத்தம்மையார், “மகனே, தந்தை எவ்வழி தனயனும் அவ்வழி என்பது இந்தச் சோழ குலத்தினருக்குப் பாரம்பரியமாயிருப்பதால்தான் அக்குலம் நலமெல்லாம் பெற்று வளமாக ஆளுகிறது. இறையருள் உங்கள் யாவர்க்கும் என்றுமுண்டு” என்றாள். “உண்மை தாயே” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தான் சோழன். “இந்தக் கலையரசியைப் போலத்தான் நான் சிற்பக் கலயரசரையும் மதித்தேன். என் தந்தைக்கு அடுத்தபடி அவருக்குத்தான் நான் மதிப்பு அளித்தேன். ஆனால் காலம் செய்த கோலம் இன்று அவர் எங்கோ போய்விட்டார். கலையின் வளர்ச்சியை காலம் அழகுபடுத்துவதற்குப் பதில் பிளவு படுத்திவிட்டது. நாளை கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார் கோயிலைச் சமைக்க எனக்கு அவர் போல் ஒருவர் இல்லையென்னும் போது...?” நீண்ட பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டான் மன்னன். ஆனால் கூத்தரசி அன்னத்தம்மையாரும் குமுறி வரும் துக்கத்தை வெளிக்காட்டக் கூடாது என்ற நினைவில் முகத்தை மூடி நகர்ந்தாள். தில்லையம்பதியிலே இராஜேந்திர சோழ தேவன் பத்து திங்கள் தங்க வேண்டிய அவசியம் நேரிட்டது. ஒரு நாள் முழுமையும் வைணவப் பெரியார் நாதமுனியுடன் தங்கிப் பல உண்மைகளை அறிந்தான் மன்னன். மற்றொரு நாள் கொள்ளிடக்கரையிலே அரபு நாட்டுப் பெரியார் மெளலானா பரூக்கி அவர்களுடன் தங்கிப் பல விஷயங்கள் பேசினான். சிவாசாரியருடன் ஒரு நாள், வடநாட்டு மன்னர்களுடன் ஒரு நாள்... பிறகு சமண முனிகளுடன் ஒரு நாள்... இப்படியாக ஆறு ஏழு நாட்கள் ஓடின. ஏழாம் நாள் கூத்தழகி அன்னத்தம்மாளின் மாணவியான மல்லிகையின் நாட்டியம் சிற்றம்பலத்தில் ஆடவல்லான் முன்னே நிகழ்வதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. கூத்துக் கலையரசி அன்னத்தம்மையாருக்கு அக்காலத்தில் சோழ நாட்டுப் பெருந்தலைகளிடையே எல்லையற்ற மதிப்பு. இராஜேந்திரனின் அன்னையாரும் கூட அவ்வம்மையாரிடம் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டவள். எனவே அரசர் முதல் ஆண்டி வரை அந்தக் கலை மூதாட்டிக்குக் கொடுத்த மதிப்புக்கு வரம்பில்லாத காரணத்தால் அவள் வாக்குக்கும் நாட்டில் நல்ல மதிப்பு. எனவே சோழ நாட்டிலிருந்து சேர, பாண்டிய, கங்க, பல்லவ நாட்டுக்குக்கூட இந்தச் செய்தி பரவிவிட்டது. எனவே அங்கிருந்தும் பல அரசகுமாரர்கள், கிழவர்கள், குமரிகள், கிழவிகள் கூடத்தான் தில்லைத்தலம் நோக்கி குதிரைகள், யானைகள், சிவிகைகள் மூலம் சாரி சாரியாக வரலாயினர். தவிர அக்காலத்தில் பகையரசர்கள் கூட இம்மாதிரி ‘கலைவிழா’ என்றால் தங்கள் பகையை மறந்து வந்து கலந்து, விருந்துண்டு மகிழ்ந்து களித்துத் திரும்புவதுண்டு. அவர்களைப் பகைவர்களாகக் கருதாது மதிப்புடன் வரவேற்று உபசரித்து அனுப்புவதுண்டு. அன்றைய தில்லை, தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே அமைந்து ஒரு இணைப்புப் பாலம் போலப் பயன்பட்டது. நாள்தோறும் பக்தர்கள் சோழ நாட்டிலிருந்து தில்லைக்கு வரச் சலிப்பதில்லை. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத் தில்லை, பக்திப் பெருவெளியாகவே சைவப் பெருமக்களுக்குத் தோன்றியதால் அவர்கள் நாடு, எல்லை வேறுபாடு மறந்து தெய்வமே துணையாக வந்து வழிபட்டுச் சென்றனர். எனவே அன்றும் அவ்வாறு அனைத்துப் பக்தர்களும் ஆடவல்லானைக் காண கலையார்வம் மிக்க நல்லோர்களும் நிறைய நிறைய வந்ததில் வியப்பில்லை. நிருத்யசபை அன்று மிகமிகப் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. திக்விஜயம் வெற்றிகரமாக முடித்து வரும் பேரரசன் மனம் களிப்புறவும் கூத்தரசி அன்னத்தம்மையார் அம்பலத்தாடுவானின் திருமுன்னர், அரசன் ஆதரவுடன் நிகழ்த்தும் நடனத்தை மற்றோர் மதித்துச் சிறக்கச் செய்யவும் எல்லோரும் உற்சாகத்துடன் இணைந்து செயல்பட்டனர். எனவே நிகழ்ச்சிநிரல் சிறப்பாகவே தயாரிக்கப்பட்டு அன்று முதன் முதலாக அரங்கமேறும் அரிவை மிக அதிர்ஷ்டகாரி என்று அனைவரும் பாராட்டும் வகையில் துவங்கிவிட்டது அற்புத நடனம். மல்லிகை என்னும் நறுமண மலரின் பெயரைக் கொண்ட அவ்வரிவையின் ஆட்டமும் நிறைமனக் கலையாகவே பரிமளித்து துவக்கமே சிறப்பாக அமைந்தது. நேரம் ஆக ஆக நடனத்தின் சிறப்பும் வெகுவாகக் கூடியதும் ‘சரி, இது சாதாரண ஆட்டம் இல்லை. தெய்வீக மணம் நிறைந்த திருக்கூத்தாகும்.’ மாமன்னர் உள்ளூரப் பெருமிதமுற்று மகிழ்ச்சி கொண்டார் என்று அனனத்தம்மையைப் பாராட்டவும் செய்தார் மனதுள்ளே... முதல் கட்டம் இனிதே முடிந்தது. அடுத்த கட்டம் துவங்க சில விநாடிகள் இடைவெளிவிட்டிருந்த நேரம்... கலைமண்டபத்துக்கு வெளியே ஏதோ ஒரு கசமுச சப்தம் முதலில் சிறிதாக ஒலிக்கத் துவங்கி வளர்ந்து பெரிதாயிற்று. பட்டத்திளவரசன் இராஜாதிராஜன் பேரமைச்சர் பக்கம் அதென்ன வென்று அறியத் திரும்பின. ஆனால் அவர் அங்கு இல்லை. திகைத்தான், பிறகு அவர் பரபரவென்று எங்கிருந்தோ வருவதைக் கண்டான். தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்கே போனார் திடீரென்று? ஏன் இவ்வளவு பரபரப்புடன் வருகிறார் என்று அவள் சற்றே குழம்பும் போது பேரரசி இருந்த பகுதியிலும் கசமுச துவங்கி வளர்ந்தது. இதுகாறும் நாட்டியத்தில் கவனமாயிருப்பது போல ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மன்னர் ஏன் திடீரென்று இங்கு அமைதி கலைந்துள்ளது என்று பிரம்மமாராயரைப் பார்த்துக் கேட்க நினைத்த போது கலை அரங்கத் திரை மீண்டும் தூக்கப் பெற்றுவிட்டதால் அழகி மல்லிகா அரங்கத்தில் உயிரோவியமாக ஒயிலுடன் வந்து மயிலாக ஆடத் துவங்கி விட்டாள். பார்ப்பவர் அனைவரும் நேரம் ஆக ஆகத் தங்களையும் தங்கள் சூழ்நிலையையும் மறந்து பரவசமடைந்தனர். அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் கலையழகும் தெய்வீகமும் கலந்திருந்த அற்புதமான தோற்றம்... “ஆகா! அகா!” என்று வாய்விட்டுக் கூறவும் சிலர் தயங்கவில்லை. அவளுடைய நாட்டியத்தில் தம் மனம் பறிகொடுத்து மெய்மறந்தவர் பலர் அந்நேரத்தில் அனைவருமே என்றாலும் மிகையல்ல. ஆகா...! அற்புதம்...! இது அற்புதத்திலும் அற்புதம்...” என்று அளவுக்கு மீறிய பரவசத்துடன் எங்கிருந்தோ ஒரு குரல்... குழைவும் நயமும் அதே சமயம் சற்றுக் கம்பீரமும் கலந்திருந்த அக்குரலில் மண்டபத்தின் நுழைவாயில் வழியாக சற்று எடுப்பாக வந்ததும், அனைவர் பார்வையும் அந்தப் பகுதி திரும்பின. அரசரும் கூட திரும்பினார். ஏன், பக்கத்தில் ஆடும் அழகியும் கூடத்தான் திரும்பிப் பார்த்தாள் தன் ஆடலை நிறுத்தி. எடுப்பான குரல்... இரைந்த பரவசத்தொனி. அங்கே நின்றவன் ஏதோ உலகின் மாபெரும் அதிசயம் ஒன்றைக் கண்டவனைப் போல வியப்பு, திகைப்பு. பரவசம். விரிந்து மலர்ந்த கண்கள், திறந்த வாய் மூடவும் மறந்த நிலையில் ஓர் அழகன். இருபது வயதுதான் இருக்கும்... ஆம், நிரம்பவும் அழகன்தான்; அதிசயமே உருவாக நின்றிருந்தான். சும்மாவா நின்றான். “அழகே, அழகுத் தெய்வமே... அரங்கத்திலே ஆடும் பாவாய். உன் ஆட்டம் அற்புதமானது. நிறுத்தாதே ஆடு... உம்... ஆடு நிறுத்தாதே. அழகரசியே... ஆடு... ஆடு... அகிலத்தின் அழகனைத்தும் உருவாய்த் திரண்டு ஆடவந்த பெண்மயிலே, ஆடு... ஆடு... அகத்திலே ஊடுருவி உயிர் ஒட்ட உணர்வினை ஈர்த்துப் பிடித்துத் தன் காலடியில் வாழச் செய்திடும் அன்பே, ஆடு ஆடு...” பரவச உணர்வால் தன்னையே மறந்து பேசினான். தொடர்ந்து சிறிது நேரம் ஒரே குழப்பம்... ஏன் இப்படி? “அமைதி... அமைதி... அமைதி...” என்று எழுந்த அவையோரின் எச்சரிக்கைக்கும் மதிப்பில்லை, இந்தக் குழப்பத்திடையே... “ஆம். அமைதி... அம்பரவிம்ப சிதம்பரநாதனின் ஆட்டத்தையே விஞ்சும் உன் ஆட்டத்தால் அமைதி. ஆம் என் இதயத்தில் அமைதி... பம்பரமாகச் சுழன்று சுழன்றாடுபவளே, பேதையென் இதயங் கவர்ந்த தூய மலரே! அழகுப் பெண்மயிலே, அகிலமெல்லாம் அமைதி கண்டிட அருங்கலை நாட்டியத் தேவியே. ஆடு... நீ ஆடு. கலைத்திருவே! திருவின் உருவே! நீ ஆடு... ஆகா!” அதுகாறும் அற்புதமாக ஆடிய அரிவை, இப்போது தன்னை மறந்தாடினாள். அதிவேகமாய் ஆடினாள். ஏதோ பேராவேசம் வந்தவள் போல் ஆடினாள். அவன் என்னென்னவோ கூற அவள் அதிவேகமாகத் தன்னையும் மறந்து ஆட... “நிறுத்து... அபசாரம்... யார் இந்த கோமாளி... யாரங்கே?” மெய்க்காவலர் தலைவன் ஓடோடிச் சென்றான், வாயிற்படியில் நின்று ஏதேதோ பிதற்றியவன் அண்டை வேகமாக. “ஐயோ! அவள்... நடனக் கலையரசி மல்லிகா அதோ தளர்ந்து நைந்து சுருண்டு விழுகிறாளே... பாவிகளே... மலர்க்கொடி அறுந்து விழுவது போல... விழுந்திட்டாளே மங்கை நல்லாள்... ஆடமறந்து... செயலற்று...” “நிறுத்து உன் உளறலை... யார் நீ...? சக்கரவர்த்திகள் வருகைத்தந்து இருப்பதைக் கூட அறியாமல் தெய்வத்தின் திருமுன்னர் நடனம் ஆடும் போது...” என்று காவலன் ஆத்திரத்துடன் அவனைப் பிடித்தாட்டி மேலும் ஏதோ கூற முனைந்த போது “அதெல்லாம் இருக்கட்டும். அதோ அவள் சுருண்டு விழுந்துவிட்டாள்... ஐயோ! திரைச்சீலையால் அவளை மூடிவிட்டு என்னை தவிப்புக்குள்ளாக்கி விட்டீர்களே பாவிகளே!” “பைத்தியக்காரனே. நிறுத்து உன் பிதற்றலை” என்று மேலும் பொறுக்க முயலாது ஆத்திரத்துடன் அவன் மீது பாய்ந்தான் காவலர் தலைவன். “நில் அப்படியே!” என்று ஒரு கர்ஜனை. காவலன் விதிர்விதிர்த்துப் போய் நின்றான். கர்ஜித்த குரல் வந்த திசை நோக்கினான். அங்கே நின்றவன் இளவரசன் ஆதித்தன். இதென்ன கனவா? நினைவா? அல்லது உண்மைதானா? காவலர் தலைவன் சிலையானான். “மகனே!” என்று இரைந்து கத்தவே உள்ளம் துடித்துவிட்டாலும், தாம் மன்னன். எனவே பொறுமையே சிறப்பு என்ற மனக்கட்டுப்பாட்டுடன் பேரரசர் வாயை மிகக் கஷ்டப்பட்டு மூடிக் கொண்டாலும், திடீரென்று அவருடைய இளைய மகன் வந்ததைக் கண்டு ஏற்பட்ட இதயத் துடிப்பு மேலும் அடக்கமாக இருக்க மறுத்தது. “அப்பா!” என்று கன்று அன்புக்குரல் கொடுத்து முன்னே சென்று தந்தையை நெருங்கிய மாத்திரத்திலேயே “மகனே!” என்ற ஆதூரக்குரல் தந்தையிடமிருந்து எழுந்தாலும் அவர் அன்புக் கரங்கள்தான் முதலில் அணைத்து ஆனந்தக் கண்ணீர் விடச் செய்தது. இந்த இணைப்புக் காட்சியிடையே ஒரு திடீர் விரிசல் ஒலி. “அவள் சுருண்டு விழுந்துவிட்டாள்... சோழ குமாரா... அவள் அவள்..” அதற்கு மேல் பேச இயலாது மயங்கி விழுந்துவிட்டான் அவன். அவை அயர்ந்து திகைத்து ஆனந்தமா, பரவசமா, அல்லது கலக்கமா, குழப்பமா என்று புரியாது செயலிழந்து விழித்தது. ஆதித்தன் சுருண்டு விழுந்தவன் அண்டை ஓடினான். “அப்பா! இவன் என்னுடைய, இல்லை இனி நம்முடைய அடைக்கலம்” என்றான் இளவரசன் ஆதித்தன். அவனுடைய திடீர் வரவும், எவனோ அரைபைத்தியக்காரனைத் ‘தன் அடைக்கலம்’ என்று கூறியதும் இதென்ன விந்தை என்று அனைவரும் திகைத்த சமயம், “மகனே... நீ திடீரென்று வந்ததே ஒரு அதிசயம். அதைவிட நீ யாரோ ஒருவனைத் திடீரென்று உன் அடைக்கலம் என்று கூறுவது அதைவிடப் பேரதிசயம். இல்லையா?” என்று மன்னர் சற்றே புன்னகைத்தபடி கேட்டதும் “ஆமாம் அப்பா! எல்லாமே அதிசயம்தான். ஆனால் இவன் என் அடைக்கலம் என்பது உண்மை. இனி இவன் நம் எல்லாருடைய அடைக்கலமும் ஆகும் என்பதும் உண்மை அப்பா.” “இந்தக் பைத்தியக்காரனா?” என்று இளவரசன் கேட்டதும் பட்டத்திளவரசனான இராஜாதிராஜன் “சற்று பொறு தம்பி, தந்தை பேசும் போது நாம் குறுக்கிடுவது அழகல்ல” என்று எச்சரித்தான். ஆனால் மயங்கி விழுந்தவனை ஒருமுறை பார்த்த மாமன்னர் “முதலில் அந்த இளைஞனை மெதுவாக அப்பால் அழைத்துச் சென்று அவன் மயக்கத்தைத் தெளிவியுங்கள். யாரங்கே.. நாட்டியமாடிய நங்கை தெளிந்தாளா என்று பார்த்து வாருங்கள். பிரம்மமாராயரே, மூதாட்டி அன்னத்தம்மையாரை மன்னித்திடச் சொல்லுங்கள். எவனோ ஒருவன்... எப்படியோ ஆதித்தனுக்கு அடைக்கலமாக வந்திருக்கிறான், நம் நடைமுறை அறியாது உளறியிருக்கிறான். நாம் நாட்டியத்தைத் தெய்வீகமாக வழிபடுவது அறியாமல் மானுட இயல்புடன் கண்டு உளறியிருக்கிறான். போகிறான் விடுங்கள். ஆதித்தா, உன் அடைக்கலத்துக்கு இனி ஆபத்தில்லை. இப்படி வா நீ” என்று பாசத்துடன் அவனை அழைத்ததும் அவனும் தயக்கத்துடன் அவர் பக்கத்தில் போய் அமர்ந்தான். பிறகு தந்தையும் மகனும் மட்டுமில்லை, ஏனைய அரச குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றி அமர்ந்து எவ்வளவு நேரம் பேசினர் என்று கூறிட முடியாது. எனினும் சிறிது நேரத்தில் சோழ மாமன்னனும் இளவரசன் ஆதித்தனும் தனித்துப் பேசிட மற்றவர்கள் இணங்கி அப்பால் சென்ற விட்டனர். ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|