ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

22

     ஆட்டக் கலையரசியும் சோழர் தம் பேரன்புக்கும் ஆதரவுக்கும் நெடுங்காலமாகப் பாத்திரமான பெருமாட்டியுமான அன்னத்தம்மையார் மனமொடிந்து போய் விழாத தோஷமாய், கட்டழகி மல்லிகாவின் அருகே அளவிலா சோகத்துடன் அமர்ந்திருந்தாள். நாட்டியம் அரங்கேற்றத் துவங்கிய அன்றே அது நொடிந்து விட்டது. இவள் வாழ்வில் பெரும் சிறப்புத் திருநாளாக அமைய இருந்த இந்த அரங்கேற்ற நாளை, ஆண்டவன் திருமுன்னர் சக்கரவர்த்திகளின் பேராதரவுடன் வைத்துக் கொள்ள அவள் எத்தனை பாடுபட்டாள்? மயங்கிக் கிடப்பவளருகே அமர்ந்திருந்த அவளுக்கு முந்தைய நினைவுகள் யாவும் திரும்பவும் மனதில் தோன்றிக் குழப்பின.

     பட்டத்தரசன் முதலில் இந்த நாட்டிய அரங்கேற்ற விஷயமாக முகம் கொடுத்துப் பேசவே மறுத்துவிட்டான். பேரமைச்சர் அநிருத்தரோ “காலம் மாறிவிட்டது. எனவே நாமும் மாறுவதே நல்லது. சோழர் திரும்பும் போது வேறு பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. பிறிதொரு சமயம் பார்க்கலாமே” என்றார்.

     பிரம்மமாராயரோ “தனக்கு மறுப்பில்லை. ஆனால் அரசர்...” என்று இழுத்தார். என்றாலும் அன்னத்தம்மையார் தனது முயற்சியைக் கைவிடத் தயாராயில்லை. சோழ குல மூதாட்டியான பெரிய பிராட்டியாரிடமே சென்றுவிட்டாள்.

     “மல்லிகையை நான் தெய்வத் தொண்டுக்காக வளர்த்து ஆளாக்கி இன்று கூத்தபிரானின் முன்னே அரங்கேறச் செய்து அவருக்காகவே அவருடனேயே என்றும் அவள் இணைந்திருக்கும் பான்மையில் தயார் செய்திருக்கிறேன். பரகேசரி, பரமன் அருளால் திக்விஜயத்தில் மகத்தான வெற்றி பெற்றுத் திரும்பும் இத்திரு நாளில் தில்லை நகரில் என்னப்பன் ஆடவல்லானைத் தரிசனம் செய்ய இருக்கிறார். அப்போது இவளுடைய ஆடல் அரங்கேற்றம் ஆண்டவன் முன்னிலையில், பேரரசர் ஆதரவில் நடைபெறுமானால் அது மிக மிகப் பொருத்தமானது. என் மனம் நிம்மதியடையும். நானும் இவளை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, எஞ்சியுள்ள வயதில் உலக வாழ்விலிருந்து ஒதுங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். எனவே நீங்களாவது...”

     அன்னத்தம்மையாரின் இந்தக் கோரிக்கை வென்றுவிட்டது. அரங்கேற்றத்துக்கு அனுமதி. அரசர் முன் ஆடுவதற்கு அனுமதி இரண்டும் உடன் கிடைத்துவிட்டது. ‘அதெல்லாம் இவள் அதிர்ஷ்டம்தான். ஆனால்... இன்று எவனோ ஒரு கோமாளி, எங்கிருந்தோ வந்து இவை எல்லாவற்றையும் கெடுத்து விட்டானே’ என்று தவித்துத் தவித்து அம்மூதாட்டி துவண்டு போனதில் வியப்பில்லை. ஆடல்மகள் ஆண்டவனின் அடியாள். அவருக்கு அர்ப்பணிக்கப் படுபவள் என்பதறிந்தும் இந்தத் தறுதலைப் பையன் பால் உணர்ச்சி கொண்டவன் போலப் பிதற்றித் தொலைப்பானேன். பேரரசர் இனி... என்ன செய்வார்? அவையில் அத்தனை இளைஞர்கள் கூடியிருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் அடக்கமாக, மதிப்பாக, பக்தியுடன், சிறிதும் தன் நிலையிழக்காது இருக்கவில்லையா?

     இனி என்ன? இப்போது எவ்வளவு வெறுப்புக் கொண்டு விட்டிருக்கிறாரோ பேரரசர். சே! எவ்வளவு கேவலமான மாறாட்டம். வெறுப்பில்லை என்றாலும் பெரும் ஏமாற்றம். அன்னத்தம்மையின் அரிய மாணவியை, அவள் அரங்கேறிச் சிறப்புறுவதை ஊக்குவித்து அன்னாரின் இறைப்பணித் தொண்டை அரசகுலம் பூரணமாக ஆதரிக்கிறது. இவ்வாறு செய்வது தன் கடமை என்றுதானே மனம் ஒப்பிக் கலந்து கொள்ள வந்தார்.

     யார் இவன்? இப்படி அழையாத இடத்தில் அனுமதி இல்லாது, மாமன்னன் எதிரே இருக்கிறான் என்பதையும் மதியாமல், அவள் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என்பதையும் கவனியாமல், சிறிதும் பண்பில்லாமல், முறைகேடாக மனதில் விகல்ப ஆசை கொண்டவன் போல்... மூதாட்டியின் குழப்பம் இவ்வாறு.

     “மகனே. நீ திரும்பி வந்ததே ஒரு அதிசயம். நான் உன் நினைவாகவே இருந்தேன். நீயோ இன்னமும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கலாமா? எதிலும், எப்பவுமே சிறிதும் கவனப் பிசகாக இராத பிரம்மமாராயரையும் ஏமாற்றிவிட்டு நீ கடலோடிவிட்டாய் என்பதறிந்து நான் முதலில் வருந்தினாலும் எப்படியாவது ஆபத்தில்லாமல் திரும்ப வேண்டுமே என்று தவித்தேன். நாட்கள் மாதங்களாகி, வருடமும் ஓடிவிட்டதும் ஊர் நினைத்தது, உனக்கு ஏதோ ஆபத்து என்று. என்றாலும் பெருவுடையார் திருவருளால் நீ ஆபத்து எதுவும் இல்லாமல்...”

     “ஆமாம் அப்பா. அந்தப் பெருவுடையார் திருவருள்தான் என்னைக் காத்தது. என்றாலும் அது கூடச் சரியில்லை. அந்தத் திருவருளின் உருவில் வந்த உத்தமச் சிற்பி சத்தியசங்கர சிற்பவேளார்தான் காத்தார்” என்று இளவரசன் ஆதித்தன் கூறியதும் சோழர் பதறி எழுந்து “என்ன... என்ன...? சிற்பி சத்திய வேளாரா? என்ன ஆதித்தா நீயும் உளறுகிறாய்? அவர் எங்கே வந்தார்? நீ எங்கே அவரைக் கண்டாய்...? என்ன இதெல்லாம்? நீ கூடவா இப்படி உளரத் துவங்கிவிட்டாய்?” என்று மிகவும் பதறிக் கேட்டார்.

     “நான் எதையும் உளறவில்லை. உண்மையைத்தான் கூறுகிறேன். சத்திய வேளார் அங்கு இல்லையேல் நான் இல்லை அப்பா. இதுதான் உண்மையாக நடந்த நிகழ்ச்சி” என்றான் உணர்ச்சிகரமாக.

     “உளறாதே ஆதித்தா... நீ இப்படியெல்லாம் பிதற்றினால் ஏற்கனவே தவிக்கும் நான்... மகனே, அவர் போய் எத்தனையோ காலமாகிவிட்டது... என்பதறிந்ததும் ஏன் நீ இப்படியெல்லாம் பிதற்றுகிறாய்?”

     “இல்லை அப்பா. நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை. அவர் நம் நாட்டைவிட்டுப் போனார் என்பதும் உண்மை. அவர் சிங்களம் சென்றார். அங்கு கயவாகு மன்னர் இவரை ஆலயம் ஒன்று அமைக்கும்படி வெகுவாக வேண்டினார். முதலில் பார்க்கலாம் பிறகு அவசரப்பட வேண்டாம் என்றார் சிற்பி. ஆனால் அவருடைய அன்பு வற்புறுத்தல் அதிகம் ஆக ஆக இவரும் வேறு வழி இல்லை என்ற நிலையில் தமது இளம் பாலகனுடன் அந்நாட்டைவிட்டே புறப்பட்டு விட்டார். அதுதான் உண்மை. ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல் அடியோடு இவ்வுலகைவிட்டே போய் விடவில்லை. நேற்றுவரை அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை தன் மகனைப் பிரிந்து வாழ விரும்பாமல் இப்போது வேண்டுமானால் அவர் உயிரை விட்டிருக்கலாம். அவ்வளவுதான். ஆனால் இவ்வாறு நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.”

     “உண்மையாகவா? அப்படியானால் நீ ஏன் அவரைக் கையோடு அழைத்து வரவில்லை?” என்று ஆவலுடன் கேட்டு தாபத்துடன் மகன் முகத்தைப் பார்த்தார்.

     “அவர் வரத் தயாராயில்லை.”

     “நான் அவரைப் பார்க்க விரும்புவதறிந்துமா?”

     “ஆம் தந்தையே. இனி தாம் உண்டு. தாம் போய் தனித்து வாழும் அந்தத் தீவு உண்டு என்பதில் உறுதியாயிருக்கிறார்.”

     “அது எந்தத் தீவு ஆதித்தா?”

     “தெரியாது.”

     “அப்படியா? நீ அவரை எப்படி எங்கு சந்தித்தாய் ஆதித்தா?”

     இளவரசன் இந்தக் கேள்வி அரசரிடமிருந்து வந்ததும் இலேசாகச் சிரித்துவிட்டு “அப்பா, அது ஒரு பயங்கரமான கதை” என்று கூறியதும் இராஜேந்திர சோழ தேவர் பதறிவிட்டார்.

*****

     இந்துமாக் கடலின் தெற்குத் திசையில் பல நூறுகாத தூரத்துக்கப்பால் ஒரு சிறு மரக்கலம் அதிவேகமாக ஏதோ ஓடுகிறது என்றால்... அது கடலோடிகள் இயக்குவதால் அல்ல. ஒரு பெருங்காற்றால் அது அப்படி விரட்டப்படுகிறது. அதன் பாய்மரங்கள் சாய்ந்துவிட்டன. ஆம். காற்று வரவரக் கடுமையாகவும், பயங்கரமாகவும் வளர்ந்து சூறாவளியாக உருமாற இன்னும் அதிக நேரமாகாது என்று கப்பல் தலைவன் அறிந்து கொண்டான்.

     “இளவரசே! இனி ஆபத்து ஒன்றைத் தவிர நம்மை வேறு எதுவும் நாடி வராது என்பது நிச்சயம்” என்றான் தலைமை மீகாமன்.

     பரபரப்பும் பதற்றமும் ஏன் சற்றே பயமும்கூட உண்டானாலும் சோழர் மகனாயிற்றே. எனவே பற்களைக் கடித்துக் கொண்டு தன் மனவுறுதியை விடாமல் “நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?” என்று கேட்டான்.

     “குறிப்பாகக் கூற முடியவில்லை. ஆனால் கப்பல் ஓடும் திசையைப் பார்த்தால் மரகதத் தீவு* நோக்கியோ என்னவோ என்று சந்தேகமாகக் கூறலாம்.”

     “நாம் மட்டும் தனியாகப் புறப்பட்டது தவறு என்பது இப்போது உறுதியாகிவிட்டது. உன்னுடைய எச்சரிக்கையைப் புறக்கணித்தமைக்கு வருந்துகிறேன்.”

     *மரகதத் தீவு: இதுவே இன்றைய மெளரீஷியஸ் என்பது வரலாற்றாசிரியர்கள் கண்டுள்ள முடிவு.

     “இப்போது அது பிரச்னையில்லை இளவரசே. நம் கப்பலில் உள்ளவர்கள் முப்பது பேர்தான். இவர்கள் யாவரும் உங்களுக்காக உயிரைவிடத் தயாராயிருப்பவர்கள்தான். ஆயினும் நிலைமை மிக மோசமாகிவிட்டது.”

     “பயனின்றி உயிரைவிடுவது எதற்காக?” என்று இளவரசன் கேட்பதற்குள் ஒரு பேரிடியும் அடுத்துப் பெரு மின்வெட்டும் தொடர்ந்து ஒரு பெருங்காற்றும்... ஊழிக்காலப் பிரளயத்துக்கான முன்னறிவிப்பு மாதிரி... சூறாவளி காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த அழகான சின்னஞ்சிறு மரக்கலம் துரும்பு போல சுற்றிச் சுழன்று அங்குமிங்கும் சாய்ந்து சாய்ந்து தத்தளித்தது. பாய்மரங்கள் ஒன்று கூட உருப்படியில்லாமல் சின்னா பின்னமாகிவிட்டன.

     கப்பல் தலைவன் தவிர மற்றவர்களும் இனி இளவரசனை காப்பாற்றுவது ஒன்றுதான் இலட்சியம் என்பது போலப் பார்த்தனர். பிறகு மிதவை கட்டைகளை கப்பலிலிருந்து எடுத்துக் கயிறுகளால் நுனியில் பிணித்துக் கடலில் தள்ளினர்.

     “இளவரசே, சோழர் தம் வாழ்வே, எங்கள் வாழ்வு என்று உறுதி கொண்டுள்ளவர்கள் நாங்கள். எனவே மேலும் தங்களை இந்த நிலையில் நாங்கள் வைத்திருந்தோமானால் அது பெருந்துரோகமாகும். இதோ பத்துப் பேர்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் நீங்கள் மிதவைகளைத் தாங்கிச் சென்றுவிடுங்கள். எத்தனை புயலடித்தாலும், அலை மோதினாலும் மிதவைக் கட்டைகள் நிச்சயம் கவிழாது. ஆனால் ஆட்கொள்ளி சுறா மீன்கள் அல்லது கடற்சிலந்திகளிடம் மட்டும் ஜாக்கிரதை. ஆட்கள் கையில் தற்காப்புக் கருவிகள் உள்ளன. மறுக்காமல் சென்று விடுங்கள்.”

     “என் உயிர் மட்டும் பெரிது. உங்கள் அனைவரின் உயிர் மட்டும் திரணமா? அசடன், ஆத்திரக்காரன் என்ற பேர் எனக்குப் போதும். சுயநலமி என்றும் என்னை எல்லோரும் ஏசவேண்டுமா?”

     “இல்லை இளவரசே! வீம்பு செய்யாமல் என் சொல்லுக்கு இணங்குங்கள். இறைவன் விருப்பமிருந்தால் நாங்கள் பிழைத்து விடுவோம்...” என்று அவன் கூறி முடிப்பதற்குள் திடீரென்று மீண்டும் ஒரு பெரும் காற்று. உடன் அந்தக் கப்பலே மளமளவென்று முறிந்துவிடுவது போன்ற பேரொலி. இளவரசன் ஏதோ சொல்ல முயன்றும் பயனில்லை. கப்பல் ஊழியர்களில், ஐந்தாறு பேர்கள் சேர்ந்து இளவரசனைக் குண்டுக் கட்டாகக் கொண்டு போய்க் கட்டையுடன் கட்டிக் கொண்டு கடலில் குதித்து விட்டனர்.

     மிதவைகள் அலையின் போக்கில் நகர்ந்தன. கப்பலோ காற்றின் போக்கில் ஓடியது.

     இளவரசன் இனி வேறு வழியில்லையென்று மிதவையைப் பற்றிக் கொண்டான். அம்மிதவையைச் சுற்றியிருந்த ஐந்தாறு மிதவைகளில் கப்பல் ஆட்கள் சென்றாலும் அலைகள் அவற்றை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டன. நடுக்கடலில் இளவரசன் ஒரு மிதவை மீது.. எத்தனை நாழிகை என்று புரியாத காலம்... அல்லது ஒரு நாளும் ஓடிவிட்டதோ... இருக்கலாம்... அக்கட்டை மீதே கிடந்தான்.

     இப்போது காற்றும் இல்லை. அலைகளும் மோதவில்லை. எங்கும் ஒரே அமைதி. இளவரசனும் மூர்ச்சையுற்றவனைப் போல கட்டை மீதே அமைதியாகக் கிடந்தான். பிறகு என்ன நிகழ்ந்தது என்றே புரியாதவனாய்க் கிடந்தான் பாவம்.

     தன் உடல் மீது ஏதோ கரங்கள் படுவது போல... சூடு உண்டாவது போல... ஏதோ ஒரு உணர்வு... நினைவு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது.

     “அப்பா! இந்தப் பையன் பிழைப்பானா?” என்று பரபரப்புடன் அப்பாவித்தனமாகக் கேட்டது ஒரு குரல்.

     அப்படியானால் தான் கடலில் மூழ்கிவிடவில்லை... இறந்துவிடவும் இல்லை.

     “ஆம் சிலா, இவர் பிழைத்துவிடுவார். ஆனால் இவர் தெளிந்ததும் நீ பையா, தம்பி என்றெல்லாம் இவரை அழைக்கக் கூடாது.”

     “அப்படியானால் இது... பெண்ணா?”

     “சேச்சே! நான் உன்னை மற்றவர்கள் போல உலகாயதம் அறிந்தவனாக வளர்க்காதது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. சிலாயனா, இவர் நம் சோழ இளவரசர். நம் பெரிய சக்கரவர்த்திகளின் குமாரர்... புரிகிறதா?”

     “பையன் இல்லை, தம்பியும் இல்லை. ஆனால்... ஆனால் இளவரசர்... எனக்குப் புரியவில்லை அப்பா.”

     “அதாவது நீ மரியாதையில்லாமல் இளவரசரைப் பையன் என்று அழைக்கக் கூடாது. அது முறையல்ல என்றேன்.”

     “பிறகு எப்படித்தான் அழைப்பது?”

     “முதலில் இவர் தெளிந்து எழட்டும். பிறகு நாம் அவரை முறைப்படி வணங்க வேண்டும்.”

     “எதற்கு? வணங்குவது என்றால் நீங்களும் நானும் அதோ அந்தக் காளி கோயிலில் வணங்குவதுதான் வழக்கம். இந்தப் பையன்... இல்லை இளவரசர் என்றீரே... இவர் என்ன அந்தக் கோயில்காரரா?”

     ஆனால் பெரியவரிடமிருந்து பதில் எதுவும் இல்லை. சிறிது நேரம் தொடர்ந்து நிசப்தம். இளவரசன் இப்போது நன்கு தெளிந்துவிட்டான். என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கண்களைத் திறக்கவில்லை. தன்னைப் பற்றிதான் பேசுகிறார்கள். எனவே காதுகளைத் தீட்டிக் கொண்டு சற்றே புரண்டு கொடுத்தான்.

     “ஓ! மகனே சிலாயனா... இளவரசர் தெளிவு பெறுகிறார். அவர் எழுந்திருக்கும் போது நீ பதறக் கூடாது. அவரை ஏதோ அதிசயப் பொருள் போலப் பார்க்கக் கூடாது. இதோ பார்க்க இப்படி... இது மாதிரி இரு கரங்களையும் கூப்பி அவரை வணங்க வேண்டும். தெரிகிறதா? அவர் தெளிந்ததும் ‘நான் எங்கே இருக்கிறேன்... நீங்கள் யார்?’ என்று எல்லாம் கேட்பார். நான் பதில் கூறிக் கொள்ளுகிறேன். நீ மவுனமாக வணங்கியபடி மரியாதையாக எட்டி நில்.”

     “எதற்கு இந்தச் சடங்குகள் எல்லாம்? எவரோ ஒருவர் கடலில் உயிருக்கு மன்றாடி வந்து ஆள் உயிர் பிழைத்ததும் அவர் வழி அவருக்கு, நம் வழி நமக்கு.”

     “உஷ்... மீண்டும் மரியாதையில்லாமல் பேசாதே.”

     “அப்பா! எனக்கு இதெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று இளவரசர், மரியாதை, வணக்கம், ஒழுக்கம் என்றால்... எப்படிப்பா? இவர் சோழ இளவரசர் என்றால்... அந்தச் சோழர் என்றால் யார்? அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவர் இளவரசர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்? நம்முடைய இந்தத் தீவுக்கு இவர் இப்பொழுதுதானே வந்தார். அதுவும் கட்டையோடு கட்டையாக வந்தார். திடீரென்று இவர் ஏதோ இளவரசர் என்றால்... நீங்கள் எப்படி அப்பா கண்டு பிடித்தீர்கள்? எனக்கு எல்லாம் புதுமையாக, குழப்பமாக இருக்கிறதே அப்பா.”

     “இதோ பார் தம்பி. இவர் கைகளை... இவர் மார்பைப் பார்... விரலைப் பார்...”

     “ஆமாம். அப்பா... கையில் ஏதோ ஒரு மோதிரம்... புலி... புலி... பொறித்துள்ளது. ஓ! கையிலும் மார்பிலும்.. நீங்கள் எப்பவோ ஒரு கதை சொன்னீர்களே அப்பா. தமிழ் நாடு என்று எங்கோ ஒரு நாடு உண்டு. அங்கு சேர, சோழ. பாண்டியர் என்று மூவேந்தர்கள் உண்டு என்றும், அவர்களுக்கு என்று தனித்தனி சின்னங்கள் உண்டு... புலிச்சின்னம் சோழர்களுக்கு... ஓ! இப்போது புரிந்தது அப்பா... நீங்கள் இந்த ஆளை மன்னித்திடுங்கள். அப்பா இந்த இளவரசரை கண்டு பிடித்தது எவ்வாறு என்று புரிந்துவிட்டது. அது சரி அப்பா... எனக்கு மட்டும் இம்மாதிரி ஏன் ஒரு சின்னம் இல்லை? நான்...”

     “தம்பி... உளறாதே. இதோ இளவரசர் கண்களைத் திறக்கிறார். பேசாமல் இரு...”

     இளவரசன் ஆதித்தன் கண்களை இலேசாகத் திறந்து பிறகு விழித்துப் பார்த்தான் சுற்றுமுற்றும். பிறகு தன்னைக் காத்தவனையும், அவன் பக்கத்தில் இருந்தவனையும் பார்க்கிறான். கண்கள் படபடவென்று அடித்துக் கொள்ள தனது இரு கரங்களாலும் அவற்றைக் கசக்கியபடி எழுந்து உட்கார முயன்றான்.

     “இளவரசே, மெல்ல மெல்ல...”

     ஆதித்தன் தனக்கு இவ்வளவு அன்பும் மரியாதையான முறையில் அடக்கம் காட்டிப் பேசும் இவர் யார் என்று ஆராய்வது போல் பார்த்தான்.

     தன் எதிரே நெடிய தோற்றத்தில் விரிந்த மார்பில் நீண்டு கிடந்த தாடி, நிற்கும் கம்பீர மனிதனை உற்றுப் பார்த்தான். அவரோ மிகப்பணிவுடன் தமது இரு கரங்களையும் கூப்பி... “சோழகுலச் செம்மலே, இறைவன் என் மீது கருணை வைத்துத் தங்களை உயிர்ப்பித்ததன் மூலம் என்னைக் காப்பாற்றி விட்டான்” என்றார்.

     இளவரசன் “உம்மையா? என்னையா?” என்று வியப்புடன் கேட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் பயந்த வண்ணம் அடக்கமான, அப்பாவித்தனமாக நிற்கும் இளைஞனைப் பார்த்தான்.

     ‘ஆகா! எவ்வளவு அழகுத் தோற்றமுள்ளவனாக இருக்கிறான் இந்த இளைஞன்... பரக்கப் பரக்க விழித்துப் பார்க்காதே என்று பெரியவர் கட்டளை இல்லையா? அதனால்தான் கண்களை மூடிக் கொள்ளப் பார்க்கிறானா?’

     “என்னைத்தான் இறைவன் காப்பாற்றினான் இளவரசே! இல்லையேல் சோழ குலச்செம்மலை என் இருப்பிடம் வந்து பிறகு ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் நான் அந்த மகக்தான வீரமறக் குலத்துக்கு கடமை கொன்ற கயவனாக விடுவேனே?” என்றார் பெரியவர்.

     சட்டெனத் துள்ளி எழுந்துவிட்டான் ஆதித்தன்.

     “பெரியவரே, நீங்கள் இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டுவது காண சோழர் பாக்கியசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனினும் நீங்கள் கடமையில் என்றுமே பின் வாங்கியவரல்ல என்பதும் உறுதியாகிறது. என் உயிர் காத்த உத்தமரான நீங்கள் யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று நிதானமாகவே கேட்டான்.

     “தேவைப்படும் போது நானே கூறுகிறேன். முதலில் நீங்கள் உடல் நலத்தைக் கவனியுங்கள். இதோ துணிகள்... முதலில் துவட்டிக் கொள்ளுங்கள். பிறகு சூடான உணவு... ஏதோ இந்த ஏழையின் எளிய உணவுதான்.”

     “என் உயிரையும் காத்து உம்முடைய உணவையும் தந்து என்னை என்றென்றும் உங்களுடைய அன்புக்கு, கடமைக்குக் கட்டுப்பட்டவனாக ஆக்கி விட்டீர்கள். நல்லது. பெரியவரே, உங்கள் அன்பு மகனைக் கண்களைத் திறக்கும்படி கட்டளையிடுங்கள். கும்பிட்டதும் போதும் என்று கூறுங்கள். இளவரசன் என்றாலும் நானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதை அவனிடம் அறிவியுங்கள்” என்றான் ஆதித்தன்.

     “சிலா, இப்படி வா” என்று அழைத்தார் பெரியவர். கண்களைத் திறந்தான் அந்த அழகு இளைஞன்.

     இளவரசனைப் பார்த்து மிரண்டவன் மாதிரி விழித்தான். பிறகு தந்தையின் பக்கத்தில் வந்து நின்றான் அடக்கமாகப் பயந்தவனைப் போலப் பரக்கப் பரக்க விழித்துப் பார்த்தான்.

     “இவன் என் ஒரே மகன் சிலாயனன். மகனே, இவர் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளின் திருக்குமாரர். நம்மையெல்லாம் ஆளும் சோழக்குல இளவரசர்” என்றார் பெரியவர்.

     “நம்ம இளவரசர் என்றால், இந்தத் தீவில் தனித்து வாழும் நமக்கு ஏதப்பா அரசரும் இளவரசரும் என்று கேட்க நினைக்கிறான் தங்கள் மகன்” என்று சிரித்துக் கொண்டே கூறினான் இளவரசன்.

     இப்போது இளைஞன் திருதிருவென்று விழித்தான். ‘தான் நினைத்தது எப்படித் தெரிந்தது இந்த இளவரசருக்கு? ஒருவேளை நம்ம காளி மாதிரி இந்த இளவரசரும் எல்லாம் அறிந்த ஆண் தெய்வாம்சமா? இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.’

     “ஆமாம் அப்பா. இளவரசன் இப்பச் சொன்னது சரிதான்” என்றான் அப்பாவித்தனமாக.

     “மகனே, அபசாரமாகப் பேசாதே. சக்கரவர்த்திகள் எதிரில் வாய் அடக்கமாக இருக்க வேண்டும்” என்றார் அந்தத் தாடிப் பெரியவர்.

     “பளா பளா!” என்றான் இளவரசன். பிறகு தாடிக்காரரைப் பார்த்து, “உங்களுக்கு அசாத்தியமான சோழ ராஜபக்தி. எனவே இந்த உலகமே சோழர்களின் ஆட்சிக்குட்பட்டது என்று கூறிவிட்டீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று உமக்கே நன்றாகத் தெரியும்” என்றான் புன்னகைத்தபடி.

     “இல்லை இளவரசே. என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் ஒரே ஒரு அரசர்தான்; இந்த உலகில் ஒரே நாடுதான்; அதுவே சோழ அரசர். அதுவே சோழ நாடு. எனவே இதில் மாறுதல் இல்லை இளவரசே.”

     “நல்லது பெரியவரே. நீங்கள் சோழர்களைவிட அதிகமாக சோழ பக்தி கொண்டவராயிருக்கிறீர். நல்லது. உம்மைக் கண்டு நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். சோழர்கள் உமக்கு இனி என்றென்றும் என் மூலமாக கடமைப்பட்டுள்ளார்கள். எனவே இனி அடுத்து ஏற்பட வேண்டிய மாறுதல் பற்றிப் பேசுவோம். முதலில் என் உடல்நலம் என்றீர்களே... அது சுகம். எங்கே சிலாயனா, நீ என்னைவிட வயதில் மூத்தவனா அல்லது இளையவனா என்று தெரியவில்லை. என்றாலும் நான் ஒருமையில் அழைப்பதைத் தவறாக எண்ணாதே. ஏனென்றால் நான் உனக்கு இந்நொடி முதல் இளவரசன் இல்லை. நீயும் உன் தந்தையும் என் உயிர் காத்தவர்களாதலால் இந்த கணம் முதல் உனக்கு உடன்பிறவாச் சகோதரன்.”

     “இல்லை, இளவரசே. பெருந்தன்மை காரணமாக நீங்கள் இப்படிச் சொல்லலாம். என் மகனும் என்னைப் போலத் தங்களுடைய ஊழியனே. அவனுக்கு இருபது வயதாகிறது. தாங்கள் அவனை ஏக வசனத்தில் பேச உரிமையும் தகுதியும் கொண்டவர். தங்கள் அன்பும் ஆதரவும் கிட்ட அவன் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.”

     “அப்படியா. நல்லது பெரியவரே. அவன் இந்தப் பாக்கியத்தைச் சற்று அதிகமாகவே கொண்டவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். எனவே அவன் என்னுடைய அன்புக்கு, ஆதரவுக்கு, பாசத்துக்கு உரிய உடன்பிறவாச் சகோதரன் என்று சோழ இளவரசனாகிய நான் கருதுறேன். மறுப்பில்லையே. ஏனென்றால் எனக்குப் புத்துயிர் கொடுத்ததால் நான் உங்கள் மகன் போலத்தானே. எனவே அவன்...”

     “மறுப்பில்லை. சிறிதும் மறுப்பில்லை இளவரசே.”

     “நல்லது. சிலாயனா, எனக்கு நீதான் இப்போது உதவ வேண்டும். என்னைச் சுமந்து வந்த கட்டை தவிர வேறு மிதவைகள் கடலில் தென்பட்டனவா... அல்லது தென்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.”

     “இல்லை இளவரசே. நான் உங்களையும் உங்கள் மிதவையையும் கண்டதும் தொலைவில் இயன்றவரை நோக்கினேன். கப்பல் வருகிறதா என்று... எதுவுமில்லை. மிதவைகள் எதுவுமேயில்லை. ஏறக்குறைய நாழிகை தூரம் நான் கடலில் நீந்தி வந்தே உங்கள் மிதவையைப் பிடித்தேன். என் மகனுக்கு நீந்தத் தெரியாது.”

     “ஓகோ! அப்படியானால் அவனை நீங்கள் பரம சாதுவாகவே வளர்த்திருக்கிறீர்கள்.”

     “ஆம். எதுவுமே தெரியாத நிலையில் வளர்ந்து விட்டான். இந்த உலகத்தின் எந்த அம்சமும் தெரியாது அவனுக்கு. இந்தத் தீவு தெரியும். மரம், செடி, கொடி, பிராணிகள் இப்படியாகச் சில ஜீவன்கள். தவிர நன்றாகப் பாடத் தெரியும்... பிறகு... அப்புறம் சொல்லுகிறேன் இளவரசே. சிலா நீ போய் மிதவையைப் பார்த்து வா” என்றார் தாடிக்காரர்.

     அவனும் சட்டென்று சென்றான். பெரியவர் ஏனோ எல்லாவற்றுக்குமே தயங்குகிறார் என்று ஊகித்தான் இளவரசன். என்றாலும் பொறுத்துத்தான் எதையும் அறிய வேண்டும்.

     “நாம் இருப்பது பவழத் தீவா?” என்று இளவரசன் கேட்டதும் பணிவாக நின்ற அந்தத் தாடிக்காரர் “அது இங்கிருந்து ஐங்காதத் தொலைவில் உள்ளது. இது முல்லைத் தீவு” என்றார்.

     இளவரசன் தலையை ஒருமுறை சிந்தனையுடன் அசைத்துவிட்டு “அழகான பெயர்... நம்மவர் நல்ல ரசிகர்களாயிருக்கிறார்கள். இது முல்லைத் தீவு என்றால் சம்பகத் தீவும் இதற்கு அருகாமையில்தான் இருக்க வேண்டும். இல்லையா?”

     “ஆம் இளவரசே. சம்பகத்தீவும் ஏழெட்டுக் காத தூரத்தக்குள்தான். எனினும் சம்பகத் தீவு போவது கூட மிக எளிமைதான். ஏனெனில் இடையில் கடல் அமைதியாயிருக்கும். பவளத் தீவு அப்படியல்ல. கடல் அங்கு அமைதியில்லை. சுற்றிலும் பாறைகள். அவையே பவழப் பாறைகள். ஏராளமாகப் பதுங்கி கிடக்கின்றன” என்று கூறியதும் இளவரசன் சற்றே பதறியவனாய், “அப்படியானால் நமது கப்பல் அவ்வழி நோக்கித்தான் காற்றின் வேகத்தால் விரட்டப்பட்டது. ஒருவேளை...” என்று அவன் சோகமான பதற்றத்துடன் ஏதோ சொல்ல முயன்ற போது தாடிப் பெரியவர் “நாம் நல்லதையே எண்ணுவோம் இளவரசே. பிறகு இறைவன் திருவருள்” என்றார். ஆதித்தன் பதில் பேசவில்லை. கவலை அவனை மவுனமாக்கியது.

     “இதோ பார் அப்பா.” என்று சொல்லிக் கொண்டே வந்த சிலாயனன் தொடர்ந்து “இதெல்லாம் என்னவென்றேப் புரியவில்லை எனக்கு” என்று சொல்லிக் கொண்டே சிலாயனன் இளவரசனின் ஆடை அணிகள், கேடயம், வாள்... இன்னும் பல ராஜ சின்னத்துக்குரிய பொருள்களைக் கொணர்ந்ததும் “பெரியவரே, நம் கப்பற்தலைவன் மிகவும் புத்திசாலி. இப்பொருள்களுடன் என்னைக் கண்டால் நான் சோழ அரசர் மகன் என்பதாக என்னைக் காண்பவர் அறிவர் என்ற நோக்கத்தில் என்னுடன் இவற்றை மிதவையில் வைத்திருக்கிறான்” என்று கூறினான்.

     “சோழர்களிடம் இருப்பவர்கள் எல்லாருமே புத்திசாலிகள். அங்கு முட்டாள்கள் யாரும் இல்லை. தப்பித்தவறி இருப்பினும் அவர்களுக்கு அங்கு இடமில்லை இளவரசே” என்று பெரியவர் கூறியதும், “அப்படியானால் எனக்கு அங்கு இடமில்லையா அப்பா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் அவர் மகன் சிலாயனன்.

     அவனுடைய அசட்டுக் கேள்வி காரணமாகத் தாடிப் பெரியவர் முகம் சட்டென சிறுத்தாலும் அவனை வெடுக்கென்று ஏசவில்லை. மாறாக “இவன் ஒரு அப்பாவி. உலகம் புரியாதவனாகவே வளர்ந்து விட்டவன்” என்றார்.

     “இல்லை... இல்லை. நான் ஒரு முட்டாள் என்றுதான் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதுவும் நடராசர் சிலையைச் செய்யும் போது...” என்று அவன் மேலும் ஏதோ உளறுவதற்குள் பதறிப் போன அவர் “சிலா, மூடு வாயை” என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டதும் அவன் நடுநடுங்கிப் போய் அப்படியே உட்கார்ந்துவிட்டான். அவன் விழிகள் பேந்தப் பேந்த விழித்தன. பிறகு கண்களிலிருந்து பொல பொலவென நீர் உதிர்த்தன.

     “பெண் பிள்ளையைப் போல அழத் தெரிகிறதே, அறிவுடன் ஏன் இருக்க முயலக் கூடாது?” என்று மீண்டும் அந்தத் தாடிக்காரர் அதட்டியதும் அவன் ஒடிந்து போன குருத்து மாதிரி நலிந்து குமைந்து விட்டான்.

     இளவரசன் இப்பொழுது தீர்க்கமாகப் பார்த்தான் தாடிக்காரரை.

     ‘மர்மம் மட்டும் இல்லை. வர்மமும் இருக்கிறது இந்த ஆளிடம். ஏன் இத்தனை ஆத்திரம்? ஒரு நொடிக்கு முன் அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்தவர் இப்படி மாறுவானேன்?’

     “பெரியவரே, இனி ஒருகணமும் நான் இங்கு தாமதிப்பதற்கில்லை. இப்பொழுதே நான் புறப்படுகிறேன். நீங்கள் தயார் செய்தாலும், செய்யாவிட்டாலும் கிடைக்கும் ஏதாவது ஒரு கட்டையை மிதவையாகக் கொண்டு நான் கிளம்புகிறேன். உங்களுக்கு இதயபூர்வமான நன்றி. உங்களைப் பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை. பரவாயில்லை. மர்மமாக இருப்பதால் எனக்கெதுவும் நஷ்டமில்லை. ஆனால் காரணமில்லாமல் மர்மமாக இருப்பது அது என்னால் பொறுக்க முடியாத ஒன்று” என்று சற்று வேகக்குரலில் கூறியபடி எழுந்தான்.

     “இளவரசே, மன்னிக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் என் நிலைக்கு இரங்கி...” என்று பெரியவர் கூறி முடிப்பதற்குள்...

     “வஞ்ச நெஞ்சம் இல்லை உமக்கு. அது நன்கு புரிகிறது. ஆனால் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றிடம் ஒரு பெரும் வெறுப்பு... தாங்க முடியாத வெறுப்பு. நீங்கள் எங்களிடம் பணிவும் மதிப்பும் காட்டும். அதே சமயத்தில் எங்களிடம் வெறுப்பைக் காட்டுகிறது,உமது மனமும் நினைவும். பரவாயில்லை. இனியும் தங்களுடைய வெறுப்புக்காளாகியவனாய் இங்கு இருக்கப் பிரியமில்லை. நண்பா, சிலாயனா, நீ என்னுடன் சம நட்பில் பழகுவதை ஏன் தடுத்தார் உன் தந்தை? அது என் மீதுள்ள வெறுப்பு காரணமாகத்தான், மரியாதை காரணமாக இல்லையென்று இப்போது புரிகிறது. உன் தந்தைக்குச் சோழர்கள் விளைத்த தீமை என்னவென்று எனக்குப் புரியவில்லை. விளக்கவும் தேவையில்லை. ஆனால் அவர் படும்பாடு எனக்குப் புரிகிறது. நல்லது. நான் புறப்படுகிறேன். என்னை நீங்கள் எவரும் இனியும் தடுக்கக் கூடாது. என்னுடைய இந்த முத்திரை மோதிரத்தின் மீது நான் இடும் ஆணை இது” என்று இளவரசன் கூறியதும் தாடிக்காரர் அதிர்ச்சியடைந்தார். பிறகு இளவரசனைப் பார்த்த பார்வை அவர் எத்தகைய நினைவை கொண்டுள்ளார் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை.

     “இளவரசே, நீங்கள் ஆணையிட்ட பிறகு நான் தடுப்பதற்கில்லை. ஆனால் நீங்கள் இப்பொழுது போவதற்கில்லை. நான் தங்களிடம் சில விஷயங்கள் பேசியாக வேண்டும். அதற்கு ஒரு மூன்று நாள் தாருங்கள். நான் யோசிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நீங்கள் இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்க எனக்கு உரிமையுண்டு என்று நான் நம்புகிறேன்.”

     “உங்கள் உரிமை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. எனினும் வயதில் மூத்தவரும் எனக்கு ஆபத்துக்கு உதவியாகவுமிருந்தவர் நீங்கள். இப்போது எதையும் என்னிடம் கூறப் போவதில்லை. அப்படித்தானே?”

     “ஆமாம். நான் இங்கு ஒரு இடத்தில் இருக்கும் காளி கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு என்னுடைய பிரார்த்தனை ஒன்று முடிய வேண்டும். பிறகுதான் எதையும் என்னால் கூற முடியும். நீங்கள் இறைவனை மீறிச் செயல்படும்படி என்னை வற்புறுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்...”

     “உங்கள் நம்பிக்கையை எதிர்க்க நான் விரும்பவில்லை. ஆயினும் நீங்கள் எப்பொழுது என்னைக் காப்பாற்றானீர்களோ, எப்பொழுது என்னை யார் என்று நீங்கள் அறிந்து கொண்டீரோ அப்பொழுதே நீங்கள் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா?”

     “சாத்தியமில்லை. தாங்கள் வந்தது முதல் நான் என்னுடனேயே போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறுவது போல வர்மம், வெறுப்பு எதுவும் இல்லை. மாறாக மர்மம் சிறிது உண்டு. இல்லையென்று கூறவில்லை. ஆனால் அதனால் நீங்கள் சிறிதும் பாதிக்கப்பட மாட்டீர்கள். தவிர இந்த மர்மத்தை மூன்று தினங்களுக்குப் பிறகு நான் உடைத்தெறியவும் தயார் என்று உறுதி கூறுகிறேன்.”

     “அதாவது காளி வரம் கொடுத்தால்தான்...”

     “ஆம். அது மிக மிக அவசியம் இளவரசே.”

     “மறுத்தால்...”

     “நான் எதுவும் பேசுவதற்கில்லை.”

     “தங்கள் தெய்வப் பக்தியை பாராட்டுகிறேன். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் மறைத்துக் கொள்ள முயலும் உங்கள் பகுத்தறிவை நான் அப்படிப் பாராட்டுவதற்கில்லை.”

     “எது எப்படியானாலும் சரி. இன்னும் மூன்று தினங்கள் நீங்கள் பொறுங்கள். தவிர நானும் என் மகனும் தங்களை இன்றிரவு முதல் இங்கே இந்தச் சிறு வீட்டில் தனித்திருக்க விட்டுப் புறப்பட்டுச் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.”

     “நான் தனித்திருக்க அஞ்சவில்லை. ஒருக்கால் ஏதாவது கப்பல் தென்பட்டால் நான்...”

     “அது எனக்கும் தென்படும். எனவே நான் விரைவில் வந்திடுவேன் இங்கு.”

     “ஓகோ! அப்படியானால்... சரி பெரியவரே. நீங்கள் கேட்டபடி நான் மூன்று தினங்கள் பொறுத்து இருக்கத் தயார்” என்றான் இளவரசன்.

     “தங்களுக்கு இங்கு எந்த ஆபத்தும் நேராது.”

     “ஆபத்துக்கு நான் அஞ்சவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன். ஆனால் எனக்குத் தனிமை ஒரு பெரும் சோதனையாகவே இருக்கும்.”

     “நீங்கள் இந்த இடத்தைவிட்டு எங்கும் செல்லக் கூடாது என்பதும் என் வேண்டுகோள்.”

     இளவரசன் சிரித்துவிட்டுத் தலையசைத்தான்.

     “அடுத்த மூன்று தினங்கள் வரை உங்களுக்கு நான் பூரணமாகக் கட்டுப்பட்டவன்” என்றான் பதிலுக்கு. ஆனால் அன்று நள்ளிரவிலேயே அப்பாவும் மகனும் தன்னைத் தனியே விட்டுவிட்டுப் போய் விடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தானா. நன்றாகத் தூங்கி விடியற்காலை எழுந்த பிறகே இதைத் தெரிந்து கொண்டான். சற்று நேரம் இங்கும் அங்கும் சுற்றியவன் பொழுது போகாமல் காலாறச் சிறிது தூரம் நடந்தான். ஒரு சிறு ஆறு குறுக்கிட்டது. அதில் இறக்கிக் கடந்து சென்றவன் எதிரே சிறு சிறு குன்றுகள் தென்பட்டன. இலேசான காற்றும் தொடர்ந்து நறுமணமும் வந்தது.

     ‘ஓகோ! முல்லைத் தீவு அல்லவா?’ நறுமணக் காற்றைச் சுவாசித்தபடி நகர்ந்தான் மூக்கால் ஒருமுறைக்குப் பலமுறை மணத்தை இழுத்தான்.

     ஒரு அழகான நந்தவனம் போன்ற பூக்காடு ஒன்று... ‘பரவாயில்லையே. நம் மாளிகைத் தோட்டம், ஆலய நந்தவனம் எல்லாம் இதன் எதிரே நிற்க முடியாது போலிருக்கிறதே.’ மேலும் நடந்தான்.

     சுவர் வைத்த மாதிரி சிறு சிறு குன்றுகள். உற்றுப் பார்த்த போது ஒரு பாறையில் குகை ஒன்று இருப்பதைக் கண்டான். உள்ளே ஊன்றிப் பார்த்தான். இருட்டு காரணமாக எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருள் கப்பிக் கொண்டிருந்தது. சற்றே நின்றுவிட்டுப் பிறகு அடுத்த பாறைக்குப் போனான். அதிலும் ஒரு குகை...

     ‘இதென்ன? ஒவ்வொரு குன்றிலும் ஒவ்வொரு குகையா...?’ நிதானித்தான். ‘வனவிலங்குகள் பதுங்கி வசித்திட ஏற்ற இடம். எனவே வம்பு தேவையில்லை. திரும்பிவிடலாம்’ என்று நினைத்தவன் சட்டென்று திரும்பியதும் சற்றே உயர்ந்த குன்றின் அடிவாரத்தில் இரண்டொரு மூளியான சிலைகள் கிடப்பதையும் பார்த்தான். இங்கும் கூட சிலைகள்.

     ‘ஏது இவை?’ அருகில் சென்று பார்த்தவன், குகையின் உட்புறமும் மிக உன்னிப்பாக நோக்கினான். ஏதோ நிழல்கள் மாதிரி...

     ‘சே! விலங்குகள்தான். ஆயுதம் எதுவும் இல்லாமல் வந்தது தவறு. வேகமாகத் திரும்பிப் புறப்பட யத்தனித்தவன் பார்வையில் குகைக்குள் ஏதோ ஒரு உருவம் நிற்பது போலத் தெரிந்தது. திடுக்கிட்டான். அவனுக்குப் பூத பிசாசுகளிடம் நம்பிக்கை இல்லை. எனவே அவை பற்றிப் பயமும் இல்லை. ஆனால் தனித்தீவில், நடுக்காட்டில், ஒரு குகையில் ஏதோ ஒரு உருவம் என்றால்... ஓடிவிடலாம் என்றால் சோழர் குலத்தவன் இல்லையா? எனவே துணிச்சலுடன் சற்றே நின்று ஊன்றிப் பார்த்தான் குகைக்குள்ளே மீண்டும். ஒன்றல்ல, இரண்டு மூன்று உருவங்கள் தெரிந்தன. ஆனால் அவை அசையவில்லை.

     கடவுள்விட்ட வழி என்ற துணிச்சலுடன் உள்ளே செல்லவும் விருப்பம் கொண்டான். ‘ஒருவேளை அவை...’ சந்தேகத்துடன் துணிந்து சென்றவன் அங்கு பல சிலைகள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அருகில் நெருங்கித் தொட்டுப் பார்த்தான். ஆம். அழகான சிலைகள். ‘வெளிச்சம் இல்லையே. சரி, பிறகுப் பார்க்கலாம்’ என்று நினைத்துச் சட்டென்று திரும்பினான் தன் இருப்பிடத்துக்கு. ஆனால் இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் ஆழ்ந்த யோசனையுடன் நடைபோட்டான்.

     ‘இந்தச் சிலைகள் யார் செய்தவை? இவை எப்படி இங்கே வந்தன? ஒருவேளை இந்தத் தாடிக்காரர், சிலாயனன் என்ற பெயர் எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி... ஆம். அப்பா சொல்லுவதுண்டே... அடிக்கடி யாரோ ஒரு சிற்பியின் அது... அது... ஆம் நினைவுக்கு வந்துவிட்டது. அவர் ஆம்... சத்தியசங்கர சிலாயன ஸ்தபதி என்பதுதான் அந்தப் பெயர். அப்படியானால் அவருடைய மூதாதையின் பெயர்தான் இந்தச் சிலாயன ஸ்தபதி... ஆகா! அடேடே, அப்படியானால்... இவர்... ஓ! எவ்வளவு பெரிய முட்டாள் நான்? இது நேரம் வரை இதை ஊகிக்காமல் போனேனே...’

     இளவரசன் தன் ஊகத்தை உண்மையானது என்று உறுதி கொண்டுவிட்டான். இதே சிந்தனை நாள் முழுமையும். மறுநாள் இரண்டு சிக்கிமுக்கிக் கற்களைக் கண்டு பிடித்து எடுத்துச் சென்றவன் கையில் சில சருகுகளும் கிடைக்காமலிருக்குமா.

     பெரிய குகையில் பத்துச் சிலைகள்... தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பார்த்திருக்கிறேனே இவற்றைப் போல. தீஜ்வாலையில் இவை மிகத் தெளிவாகக் காணப்பட்டன.

     அடுத்த குகையில் சின்னச் சின்னதாக ஆனால் மிக மிக அழகான பெண் உருவச் சிலைகள். இவ்வளவு அழகாகக்கூடச் செய்ய முடியுமா என்ன? உயிர் பெற்று எழுந்தால் இவை இன்றைய உலக அழகுப் பேரரழகிகளையெல்லாம் வெட்கித் தலைகுனியச் செய்திருக்குமே.

     அடுத்த குகையில் பல்வேறு தெய்வ வடிவங்கள். அதற்கடுத்ததில் பயங்கரமான யானை, யாளி சிங்கம் போன்றவை. ஏன் மான்கள், மயில்கள் கூட நிறைய உண்டு...

     அதற்கு அடுத்த குகையில்தான் அந்த அற்புதத்தைக் கண்டான். தில்லை நடராச பெருமானின் திருவுருவம் சிறிதும் பெரிதுமாக ஐந்தாறுக்கு மேல். இன்னும் முழுதாக உருவாக வேண்டியவை மூன்று.

     ‘ஆகா! சோழர் இழந்த மகத்தான கலைச்செல்வம் இன்று உலகம் சிறிதும் அறியாத இந்த முல்லைத் தீவின் பாக்கியமாக வாய்த்திருக்கிறதே.’

     இளவரசன் ஆதித்தனுக்கு தெரியும் அப்பா பாட்டி சொல்லியிருந்த உண்மை. இராஜராஜ சோழனிடம் வருத்தங் கொண்ட சத்திய சங்கர ஸ்தபதி நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட கதையை கேள்விப்பட்டிருக்கிறான். எனவேதான் அவர் இம்மாதிரி சோழர்களிடம் மர்மமாகவோ வர்மமாகவோ இருப்பதில் அதிசயம் இல்லை. ஆனால் வெறுப்பும் பகையும் இல்லை. அப்படி இருந்திருந்தால் சோழ இளவரசனான தன்னைக் காப்பாற்றி இருப்பாரா?

     மூன்றாம் நாள் அதிகாலையில் திரும்பிவிட்டார்கள் தந்தையும் மகனும்.

     “வாருங்கள் சிற்பியாரே!” என்று இளவரசன் புன்னகையுடன் அவர்களை வரவேற்றதும் தாடிக்காரர் திடுக்கிட்டார். இளவரசனை விழித்துப் பார்த்தார், வியப்பும் திகைப்பும் கலந்த முறையில்.

     “வியப்பு தேவையில்லை. சிற்ப கலாமேதையான சத்திய சங்கர ஸ்தபத்தியாரே. நீங்கள் போட்ட ஒரு நிபந்தனையை நான் இன்று மீறியதால் கிட்டிய பலன் இது. சோழர்களிடம் உங்களுக்கு ஏன் அன்பும் அதே சமயம் வருமமும் என்பது புரிந்துவிட்டது. ஆனால் காலம் மாறும் போது நீங்களும் மாறலாமில்லையா? அப்படி மாறியிருக்கக் கூடாதா? என் பாட்டனார் இல்லை. என் தந்தையார்தான் இருக்கிறார். அவரோ உங்கள் அன்புக்கு உரியவர். மதிப்புடன் உங்களை ஏற்று ஆதரிப்பது நிச்சயம். எனவே ஏன் மாறக் கூடாது?”

     “நான் மாறுவது இருக்கட்டும் சோழர் செல்வனே. எனக்கு காளி தேவி இட்ட கட்டளையுடன் திரும்பி வந்திருக்கிறேன். எனவே உங்களிடம் இனி எதையும் மறைக்கப் போவதில்லை. தவிரவும் என் மகன் உங்களுடன் தாய்நாடு திரும்புகிறான். இதுவும் காளியாத்தாள் இட்ட கட்டளை. எனவே, நான் எதையும் இனி மறைக்காமல் சகலத்தையும் கூறப்போகிறேன். முதலில் நான் பேரரசரின் சந்தேகம் பற்றி அடைந்த வேதனை என்னை நாட்டைவிட்டுக் கிளம்பச் செய்ததிலிருந்து துவங்குகிறேன். நாட்டைவிட்டுக் கிளம்பியவன் நேராகச் சிங்களம் சென்றேன். அங்கு ஒரு பெண்ணை மணந்தேன். அவள் இவனைப் பெற்றுவிட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டாள். சிங்களம் சென்றது முதல் எனக்குப் பேராதரவு தந்த சிங்கள மன்னர் வற்புறுத்தல் தாங்கவில்லை. சோழர் ஒருவர் தவிர வேறு யாருக்கும் சிற்பியாக மாற நான் விரும்பவில்லை. எனவே இங்கு வந்துவிட்டேன். இங்கு யாரும் இல்லை. நானும் என் மகனும்தான்.”

     “அப்படியா! நான் பிறந்த ஆண்டு... அதாவது என் தந்தை சோழ நாட்டாட்சியை ஏற்ற காலம் அது. பிறகு என்ன செய்தீர்கள்?”

     “இங்கு வந்தது முதல் எனக்கு தெரிந்ததையெல்லாம் இவனுக்கும் பயிற்றினேன். இவன் இப்போது நல்ல சிற்பி, நல்ல பாடகன் கூட. அற்புதமாக கற்பனை கொண்ட இசைவாணன் என்றாலும் உலக விவகாரங்களில் ஈடுபடச் சிறிதும் வாய்ப்பில்லாத காரணத்தால் அப்பாவியாகவே இருக்கிறான். இனி நீங்கள்தான் இவனுக்கு எல்லாம். இவனுடைய தாய்நாடான சோழ நாட்டுக்கு நீங்களே அழைத்துச் செல்லுங்கள். உலகை அறியும் வாய்ப்பையும் அளியுங்கள். இவன் வாழ வழி செய்யுங்கள். இனி இவன் உங்கள் அடைக்கலம். இங்குள்ள அத்தனை சிலைகளும் சோழ நாடு செல்ல வேண்டும். எனவே நீங்கள் நாடு சேர்ந்ததும் கப்பல்களை அனுப்பி வையுங்கள். அவை வரும் வரை நான் இங்கேயே இருப்பேன். சிலைகள் கப்பல் ஏறியதும் நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். பிறகு நான் இருக்கப் போகும் இடம் எவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பிறகு எனக்கும் இந்த உலகுக்கும் அப்புறம் எந்த ஒரு தொடர்பும் தேவையில்லை.”

     “உங்கள் மகன் முதிர்ந்த பிராயத்தினரான உங்களைப் பிரிந்திருப்பது நியாயமாகுமா?”

     “என் பிராயம் முதிர்ந்தது இயல்பாக நிகழ்ந்திட வேண்டியதுதானே? ஆனால் இவனுக்குத் தேவையான வயது வந்துவிட்டது. இனி நான் அவசியம் இல்லை என்ற நிலை ஒருபுறம், அவன் கால்களில் அவன் நிற்கட்டும். அவன் கலைத் திறமையும் கற்பனைச் செறிவுள்ள கவிதைத் திறமும் அவனைக் காப்பாற்றும். சோழர்கள் பூரண ஆதரவளிப்பார்கள் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. எனவே இனி அவன் உங்களவன்.”

     “சந்தேகம் வேண்டாம். உங்கள் விருப்பப்படியே நிச்சயம் செய்வோம். ஆனால் மகனுக்காகவாவது நீங்கள் நாடு திரும்பக் கூடாதா?”

     “இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னை வற்புறுத்த வேண்டாம் தயவு செய்து” என்று கூறிவிட்டார் சிற்பி.

*****

     “பிறகு நடந்ததென்ன என்று இனியும் நீண்டதொரு விளக்கம் வேண்டியதில்லை தந்தையே. என் அடைக்கலமாக வந்திருக்கும் அந்தச் சிலாயனன் வாழ்வதும் வீழ்வதும் இனி நம் கையில்தான் இருக்கிறது. நாம்தான் இனி அவனுக்குப் பூரண பொறுப்பு. எனவே நம்முடைய தெய்வீகக்கலை, கட்டுதிட்டம், கண்டிப்பு எல்லாம் பயங்கரமாகி அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.”

     “நான் எதையும் அவசரமாக முடிவு செய்யமாட்டேன். ஆயினும் இன்று நிகழ்ந்தது ஒரு திருஷ்டி பரிகாரம் மாதிரி. அன்னத்தம்மையார் இறைவனுக்கு அந்தப் பெண்ணை ஆளாக்கத் தீர்மானித்திருந்தாள். அவனோ இவளைப் போன்ற ஒரு அழகியை இதுவரை நேரிலேயே கண்டதேயில்லை என்றும் நீ கூறியவற்றிலிருந்து ஊகிக்க வேண்டியுள்ளது. எனவேதான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.”

     “நான் இடையே ஒரு வார்த்தைப் பேச அனுமதியுண்டா?” என்று அமைச்சர் அநிருத்தர் குறுக்கிட்டதும் வியப்புற்ற பரகேசரி, “நிச்சயம் அனுமதியுண்டு. நானே இது பற்றி உங்களைக் கேட்க நினைத்தேன். ஏனெனில் எந்த நொடியும் அன்னத்தம்மையார் வரலாம். வந்து தன் பெண்ணின் தெய்வீகப் பற்றை மாற்றி மானுடப்பற்றுக்கு மாறச் செய்தவனைக் கடுமையாகத் தண்டியுங்கள் என்பாள்.”

     “அதெப்படி இயலும் சக்கரவர்த்திகளே. அந்தப் பெண்ணும் இவனைப் பார்த்தாள் திரும்பத் திரும்ப. எனவேதான் தாளம் தப்புகிறது. ஜதி மாறுகிறது. மனம் பரபரக்கிறது. என்றாலும் அவள் பார்வை அவனை விட்டுச் சிறிதும் அகலவேயில்லை. எனவே அவள் மனமும் அவனை நாடியிருக்கிறது என்பதுதான் என் ஊகம். எனவே இவ்விஷயத்தில் மிகவும் நிதானிக்க வேண்டும். தவிர...” என்று கூறிவிட்டு நிறுத்தியவர் மீண்டும் எதையோ நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டார்.

     “தவிர...” என்று எடுத்துக் கொடுத்தார் மன்னர்.

     “நாளை கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையான் ஆலயம் அமையும் போது இந்தச் சிலாயனன் அவன் தந்தைக்குப் பதில் நமக்கு உதவுவான் என்று எனக்குக் தோன்றுகிறது.”

     இராஜேந்திரர் இது கேட்டதும் சிறிதே திகைத்தாலும் உண்மையில் மகிழ்ச்சி கொள்ளாமலில்லை. தந்தைக்குப் பதில் மகனாவது வந்தானே. ஆகவே நாம் இவ்விஷயத்தில் மிக எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

     “நல்லது. இவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இறைவனே ஒருவேளை முடிபோட்டிருந்தால் அதைத் தடுக்க அன்னத்தம்மாளோ நானோ அல்லது வேறு எவரோ முயன்றால் அது முழுத்தவறு” என்றார் இராஜேந்திர சோழ தேவர்.

     அநிருத்தர் புன்னகைத்தார். சோழ இராஜேந்திரனை வெகு நன்றாக அறிந்தவராயிற்றே?