உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 23 தன்னைத் தேடி சோழ மாமன்னரே வருவார் என்பதை அன்னத்தம்மையார் எப்படி எதிர்பார்க்க முடியும்? அல்லது நம்பத்தான் முடியும்? ஆனால் உண்மையில் அவரே அவளைத் தேடி அன்னத்துச்சாவடியெனும் அவ்வூர் வந்தார். அவ்வூர்ப் பெரிய கோயிலில் அவளை நேரில் வந்து சந்திக்கவே செய்தார். அவள் அந்தக் கோயிலுக்கு வந்து மூன்று தினங்களாகிவிட்டன. எதிலுமே பற்றில்லாதவளாய் அங்கேயே இருந்தாள். மாமன்னர் கோயிலுக்குள் நுழைந்தது அறிந்ததும் அவள் ஓடோடி வந்தாள். அதாவது தள்ளாடித் தள்ளாடி வேகநடையில் வந்தாள். “இந்தப் பரிதாபத்துக்குரியப் பாவியை உடனே அங்கே வா என்று உத்திரவிட்டால் நானே ஓடி வரமாட்டேனா?” என்று பதறிக் கூறினாள். “இல்லை அம்மையாரே. நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பியதும் வேதனையால். இங்கே ஆலயத்தில் விருப்பதும் வேதனையால். வீடு திரும்புவதற்கும் மனம் இல்லாமல் ஊண், உடை, உறவை மறந்திருப்பதும் வேதனையால். இத்தனை வேதனைகளுக் கிடையே நானும் உங்களுக்கு வேதனை கொடுக்க விரும்பவில்லை. எனவே நானே இங்கு வந்தேன். உங்கள் வளர்ப்பு மகளையும் அழைத்துப் பேசிவிட்டேன். என்னிடம் மனம்விட்டு அவள் பேசிய காரணத்தால் உங்களிடமே வந்தேன். அவள் ஒளிக்காமல் உண்மையைக் கூறினாள். எனவே நாம் அதை மதிக்க வேண்டும். இனி தான் ஆண்டவனின் அடியாளாக இருக்கத் தகுதியற்றவள் என்று அவளே கூறிவிட்டாள்.” “நீங்கள் அவள் இப்படிக் கூறிய பிறகுமா பொறுமை காட்டினீர்கள்?” “ஆம் அன்னையே. அவள் மறைக்காமல் புகன்ற உண்மையை நான் மதித்தேன். அவள் மனம் அந்த இளைஞனிடம் ஈடுபட்டு விட்டது. இது தெரிந்த பிறகும் அதை மாற்றி அவனை மற என்று கூறலாமா? ஒரு மனிதனிடம் சென்று விட்ட மனதைத் தெய்வத்திடம் திருப்பு என்று கூறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” “மன்னிக்க வேண்டும் மாமன்னரே. எப்பொழுது அவள் மனதில் இத்தகைய கேவல இச்சை புகுந்ததோ அப்பவே அவள் தங்கள் எதிரில் வரவே தகுதியற்றவள் என் முகத்தில் அவள் இனி விழிக்கவும் கூடாது. தாங்கள் அவளைத் தண்டிக்காமல் விட்டதும் எனக்காகத்தான்; என் மீது கருணை கூர்ந்துதான் என்று நினைக்கிறேன். ஆனால் இது தெய்வ குற்றம் ஆகாதா சக்கரவர்த்திகளே.” “ஆம், இல்லை என்று இரண்டையும் கூற வேண்டும். தங்களை நான் முதன் முதலில் பார்த்த போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம். இந்த மல்லிகையைப் போல நீங்கள் இளம் பெண்ணாக இணையற்ற அழகியாக ஆலயத்தில் ஆண்டவன் முன்னர் ஆடியதை நான் என் தந்தையின் பக்கத்தில் அவர் கரம்பிடித்து நின்று பார்த்தேன். வானத்து தேவதை போலத் தோற்றமளித்தீர்கள். அன்னையே, இன்றும் கூட அதே தோற்றம்தான் என் நினைவில், இதில் சிறிதும் மாறுதல் இல்லை. எனது தாயின் பிராயம் ஆகிவிட்டது உங்களுக்கு. அன்று முதல் தெய்வப் பணியில் ஈடுபட்ட நீங்கள் இன்றளவும் அந்தப் பணி தவிர, அந்த தெய்வம் தவிர மனதில் வேறு எதற்கும் இடமளிக்காமல் வாழ்ந்து உண்மையிலே தெய்வ அடியாளாக எவ்வாறு இருக்க வேண்டுமோ, அவ்வாறு இருந்து காட்டும் சிறப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் கூடத்தான் ஒரு தவறு செய்துவிட்டீர்கள் அம்மையே” என்று அரசர் கூறிவிட்டு அருகே இருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்றார். எட்டத்திலிருந்து பூசாரி இங்கே வரலாமா கூடாதா என்று பதறியபடி கையில் தீபாராதனைத் தாம்பூலத்தை வைத்தபடி நடுக்க நடனமாடிக் கொண்டிருந்தார். பக்தர்கள் சிலர் கைகட்டி வாய் பொத்தி எட்டவே நின்றனர். “நான் தவறு செய்தேனா?” என்று வெகுவாகப் பதறியவாறு கேட்டாள் மூதாட்டி. “ஆம். உங்கள் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்காது. ஏனெனில் நீங்கள் ஆண்டவனுக்கு உரியவராகிவிட்டீர்கள். ஆனால் குழந்தைப் பாசம் மனதிலே புகுந்திட இடமளித்ததுதான், அந்தத் தவறு. அதன் காரணமாகவே இந்த மல்லிகை என்னும் புதியதோர் பிணைப்பு. தெய்வத்திடம் ஈடுபட்ட மனதில் மனித பாசம் இருந்தால் அதனால் ஏற்படும் வேதனையையும் தாங்க வேண்டுமல்லவா?” “சக்கரவர்த்திகளே...!” என்று கதறிவிட்டாள் கிழவி. “தவிக்க வேண்டாம் தாயே. அவள் நம் கலையைப் பயின்று அதன் மூலம் ஆண்டவனின் அடைக்கலமாவாள் என்றுதான் நம்பினீர்கள். ஆனால் காலம், பருவம், மனித மனம் எல்லாம் கூடி தெய்வத்திடம் கொள்ள வேண்டிய ஈடுபாட்டுக்குத் திரை போட்டுவிட்டது.” “சக்கரவர்த்திகளே, நீங்கள் சொன்னீர்களே ஏதோ குழந்தைப் பாசம் என்று. அது எனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று ஏற்பட்டதல்ல. ஆனால் விதி செய்த சதி என்றுதான் கூற வேண்டும். தங்கள் தந்தையார் தெய்வமாகிவிட்ட அந்த மாமன்னர் கூட ஒருமுறை ஒரு சிறு தவறு செய்தார். அதைப் பிறகு என்னிடம் சொல்லிச் சொல்லி கழிவிரக்கப்பட்டார்.” “ஆம் தாயே. சிற்பி சத்திய சங்கர ஸ்தபதி சம்பந்தமானது அது. தந்தை என்னிடம் தம் பின்னாளில் இதை மிகவும் மனம் வருந்திக் கூறியிருக்கிறார்.” “ஆம் சக்கரவர்த்திகளே! சிற்பியிடம் அளவுக்கு மீறிய அன்பும் மதிப்பும் அவர் கொண்டு விட்டாலும் அவர் சேவை மாற்றார்களுக்குப் போய்விடக் கூடாதே என்றும் நினைத்தார். இதுதான் பெருந்தவறாக முடிந்தது. சிற்பி நாட்டைவிட்டு வெளியேறினார். பிறகுதான் எங்களுக்குத் தெரியும். அவரை நம்பி இங்கு சிலர் இருக்கிறார்கள் என்பது.” “அப்படியா எனக்கே தெரியாதே இதுவரை.” “அவருடைய மாமன் ஒருவன் இருந்தார். அவருக்கு ஒரு மகள். அந்த மகளை இந்தப் பூசாரியின் ஆதரவில் விட்டுவிட்டு அவர் சம்பாதனைக்காக கடல் கடந்து சென்றாராம். இந்தச் சிற்பியார் தன் மாமன் மகளை உடனடியாகச் சிவகங்கையிலுள்ள ஒருவனுக்கு மணம் செய்து வைத்தார். இது நடந்த சில ஆண்டுகளில் சிற்பியும் கடல் கடந்து சென்றுவிட்டார். சுமார் பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பெண் பூரண கர்ப்பிணியாக என்னிடம் வந்தாள். சிவகங்கையில் தன் கணவன் திடீரென இறந்தது, பஞ்சத்தில் இடிபட்டாரிடம், யாவும் கேட்டதும் நான் பரிதாபத்துடன் அவளை என்னிடமே வைத்துக் கொண்டேன். அவள் பெற்ற பெண் குழந்தையே இந்த மல்லிகை” என்று அன்னத்தம்மை கூறி முடித்ததும் அன்னத்தம்மையாரின் இந்த அதிர்ச்சிதரும் கதையை கேட்டதும் இராஜேந்திர சோழ தேவர் “அடக்கடவுளே!” என்றார் பதற்றம் தாங்காமல். ஏன்? வியப்பும் வேதனையும் தாங்காமல் என்று கூடச் சொல்லலாம். மூதாட்டி விழித்தாள். “மன்னிக்க வேண்டும் மகாராசா. நான் உங்களிடம் அசட்டுத்தனமாக தேவையில்லாததையெல்லாம் கூறித் தங்களைச் சிரமத்துக்குள்ளாக்கி விட்டேன்” என்றார். “இல்லை, அம்மையே இல்லை. நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு உண்மை புரிந்தது. அதுமட்டுமில்லை, இப்பொழுது நான் கூறப் போவதைக் கேட்டு நீங்களும் அதிர்ச்சியுற்று மனம் மாறப் போகிறீர்கள்” என்று பேரரசர் பரபரப்புடன் பகர்ந்ததும் மூதாட்டியும் பதறிவிட்டாள். “அப்படி என்றால் என்ன பொருள் சக்கரவர்த்திகளே!” “மல்லிகைக்கு முறைப்பிள்ளை வந்துவிட்டான் என்பது பொருள்.” “மகாராசா, நான் மரியாதையில்லாமல் பேசுவதாக நினைத்துவிடலாகாது. நீங்கள் எனக்கு விருப்பமில்லாதவற்றையே சொல்லுகிறீர்கள்.” “உண்மையைத்தான் கூறுகிறேன் அம்மையே. சத்திய சங்கர சிற்பிகளின் மகன்தான் இப்போது மூன்று தினங்களுக்கு முன்னால் ஆடல் அரங்கில் வந்து நின்று பாடியவன். உங்கள் வளர்ப்பு மகள் மல்லிகை மனதைக் கவர்ந்தவன்” என்று அரசர் சொன்னதும் பதறித் துடித்த மூதாட்டி, “கடவுளே! இதென்ன விந்தை... இப்படிக் கூட நடக்குமா? அப்படியானால் சக்கரவர்த்திகளே தங்கள் தந்தை தெய்வமானவர். நீங்கள் சொல்வதையெல்லாம் உண்மைதானா? அப்படியானால் சத்திய சங்கர வேளார் இன்னமும் உயிருடன் இருக்கிறார். அவர் மகனும் உயிருடன் இருக்கிறான். ஆனால் நமக்கு முன்பு வந்த தகவல் அவர் இவ்வுலகைவிட்டே போய்விட்டார் என்பதுதானே. இப்போது இந்த அதிசயத்தை நாம் உண்மை என்று நம்பும்படி யார் செய்தது சக்கரவர்த்திகளே?” “யாரும் நம்பும்படி செய்துவிடவில்லை அம்மையே. இளவரசன் ஆதித்தனுடன் சிற்பியாரே தம் மகனை இங்கு அனுப்பியுள்ளார்.” “என்ன... சிற்பியாரே அவனை இங்கு அனுப்பினாரா? அப்படியானால் அவர் ஏன் வரவில்லை?” “உங்களுக்கே காரணம் தெரியும். நீங்களும் எனது தந்தையாரும் அறிந்த அளவுக்கு சிற்பி வெளியேறிய காரணங்கள் எனக்கே தெரியாது. எனவே நான் எதுவும் இப்போதைக்குக் கூறுவதற்கில்லை. ஆனால் நீங்களே உங்கள் அன்பு ஆதரவில் உள்ள அபலை மல்லிகை தெய்வநெறியைப் புறக்கணித்து மனித மாயையில் சிக்கிவிட்டது பற்றிய விஷயமாக இனியும் தவிக்கக் கூடாது.” “மன்னர் பிரானே... தயவு செய்து அவளையும் அவனையும் ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்று மிக விநயத்துடன் கெஞ்சும் முறையில் கூறியதும் அரசர் புன்னகைத்தார். “தாயே, மூன்று தினங்களாக நீங்கள் ஊண், உடை, வீடு வாசலை மறந்து தெய்வமே என் உயிரை எடுத்துக் நாள் என்று இங்கேயே கிடப்பது எதற்காகவோ? அதை மாற்றி நேர் செய்வது என் கடமையில்லையா? அநிருத்தர் வெளியே வந்திருக்கிறார்; வருந்துகிறார். நீங்கள் உடனே அந்த நெறிகெட்ட நங்கையைப் பற்றி நடவடிக்கை எடுக்காது போனால் நாம் மாமன்னரின் பெருமதிப்புக்குரிய சோழ நாட்டின் கலைச் செல்வத்தை அன்னத்தம்மையை இழந்து விடுவோம் என்று பதறுகிறார். பேரரசியும் ஏன் இந்தத் தாமதம்? என்று விரட்டுகிறார்.” சோழ தேவர் குறும்புக்காரராக மாறிவிட்டார். “ஐயோ கடவுளே! இதென்ன கொடுமை. நான் மகாபாவி, மாமன்னரே நான் மகாபாவி. எந்தப் பெண்ணை நான் அன்பு காட்டி வளர்த்தேனோ அவள் எவனுக்கு உரியவாளோ அவனிடம் சேர்க்காமல் அவளை அழிக்கப் பார்த்தேனே. அக்கிரமக்காரி... எனக்கல்லவா நீங்கள் தண்டனை தர வேண்டும்.” “அபசாரமாகப் பேசி என்னைத் தளரச் செய்துவிடாதீர்கள். அவன் அவள் முறைப் பையனாக இருக்கலாம். அவளும் தன்னை மறந்து, உங்களை மறந்து அவனை நேசிக்கலாம். ஆனால் நீங்கள் சோழ நாட்டின் கலைச் சொத்து. எனவே நாங்கள் உங்களை இழந்திட முடியாது. முடியவே முடியாது. ஆகவே மூன்று தினங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலவாணர் ஆலயத்தில் சூளுரைத்த மாதிரி அவளை தெய்வப் பழிகாரியாகவே கருதித் தண்டித்தால்...” “ஐயோ... ஐயோ... வேண்டாம் சக்கரவர்த்திகளே... வேண்டாம். என்னை மன்னித்திடுங்கள். நான் இப்பவே ஒரு அண்டா சாப்பிடுகிறேன். பட்டாடை உடுத்துகிறேன். இந்தக் கோயிலும் ஆண்டவனும் கிடக்கிறார் விடுங்கள். அவள் வாழட்டும், அவளை வாழவிடுங்கள்... தெய்வத்தின் மீது ஆணை. தங்கள் தந்தை மீதாணை. இந்தச் சோழ நாட்டின் மீது ஆணை. அவளை எதுவும் செய்ய வேண்டாம். தயவு செய்து அவளை வாழவிடுங்கள் சக்கரவர்த்திகளே!” என்று கதறிக் கொண்டே அவர் காலில் விழாக்குறையாகத் தாழ்ந்தாள். பிறகு “சோழ நாட்டு மக்கள் யாவரும் நலமாக வாழ வேண்டும் என்று செங்கோலாட்சி நடத்தும் நீங்கள் எங்களையும் வாழவிடுங்கள். நான் முன்பு சூளுரைத்தது அறியாமையால். பெண் புத்திதானே... மன்னர்பிரானே மன்னித்திடுங்கள்” என்று அலறிக் கத்தியபடி மேலும் பொறுக்கவியலாது அவர் காலிலேயே விழுந்துவிட்டாள். சோழர் சிரித்துக் கொண்டார். பிறகு அவரே அவளை எழுப்பிவிட்டார். “தாயே, நீங்களா என்னிடம் இப்படிப் பணிந்து போய்க் கேட்பது? நல்லது. இப்போது நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறீர்கள்? புரியவில்லையே? அவளைத் தண்டிக்க வேண்டும் என்று ஆயிரம் பேர்களுக்கு முன்னர் அறிவித்த நீங்கள், எனக்கே அறை கூவல் விடுத்த நீங்கள்...” “இந்த ஆண்டவன் முன் இப்போது கோருகிறேன் சக்கரவர்த்திகளே. அவளை ஒன்றும் செய்ய வேண்டாம். அவள் அபலை. தாய் தந்தையற்ற அநாதை; என் அன்பான வளர்ப்பு மகள். அவள் அந்த உத்தமன் பெற்ற அழகனுக்கு முறைப்பெண். சக்கரவர்த்திகளே, தயவு செய்யுங்கள்.” “அவன் எவனோ வெறியன். அதாவது காமவெறி பிடித்த கயவன். என்று நீங்கள் அன்று...” மீண்டும் புன்னகைத்தார் மன்னர். “சக்கரவர்த்திகளே, நீங்கள்தான் உண்மையைக் கூறி என் கண்களைத் திறந்துவிட்டீர்களே?” “ஊரார்... உங்களைச் சேர்ந்தவர்கள், இதர தேவர் அடியார்கள் நாளை என்ன கூறுவர்? அரசர் எப்படி நெறிக்குப் புறம்பாக நடந்தார் என்று கேட்டால்?” “அத்தனை பேரையும் நான் மாற்றிவிடுவேன்.” “எப்படி? அன்று பல ஆயிரம் பேர்களுக்கு முன்னால் அரசனைப் பார்த்து நீங்கள் கூறியதென்ன? இப்பொழுது தனிமையில் பேசுவதென்ன?” “நானே போய் வீடு வீடாகக் கூறுகிறேன் உண்மையை.” “எந்த உண்மையை? சிற்பி செத்தவர் என்ற உண்மையையா? தனியாகச் சென்றவர் எங்கே போனார்... எவளையோ மணந்தார், ஒரு பிள்ளையை பெற்றார் என்பதையா? அல்லது ஊர் உலகம் அறியாத மல்லிகை அவருடைய உறவினள் என்பதையா? திடீரென்று நீங்கள் எந்த உண்மையைச் சொல்லப் போகிறீர்கள்?” “சக்கரவர்த்திகளே! மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. திடீரென்று நான் சொல்லுவதையும் திடீரென்று ஊர் ஏற்காது என்பதும் புரியத்தான் செய்கிறது. என்றாலும்...” “எனவே வாயை மூடிக் கொண்டு உறையூர் திரும்புங்கள். அங்கிருந்து சூரியனார் கோயிலுக்கு வாருங்கள். அங்கு பேரரசியுடன் தங்குங்கள். பிறகு எல்லாவற்றையும் முடிவு செய்யலாம்.” “உத்திரவு சக்கரவர்த்திகளே!” “நல்லது. இப்போது என்ன செய்வதாக உத்தேசம்? மீண்டும் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டு...” “இல்லை... இல்லை... உடனே போய் ருசியான உணவை, வயிறு நிறையச் சாப்பிடப் போகிறேன்” என்றாள் கிழவி. அரசர் சிரித்துக் கொண்டே “இறைவனையும் நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். “பொய் சொல்ல விருப்பமில்லை. இப்போதைக்கு என் மனதில் மல்லிகை, சிற்பி, மகன் அவன் பெயர் தெரியவில்லையே...” “சிலாயனன் என்றோ... என்னவோ...” “அழகான பெயர். சிலாயனன். மல்லிகை... இறைவன் எவ்வளவு கருணை வைத்திருந்தால் இப்படி இருவரையும் இணைத்திருப்பான்! இது உண்மையில் ஒரு பெரும் அதிசயம்தான்.” “இன்னும் இணையவில்லை. அது பற்றி நிரம்பவும் யோசிக்க வேண்டும்...” “தயவு செய்து அவர்களைப் பிரித்துவிடக் கூடாது சக்கரவர்த்திகளே. அவர்கள் பிரிக்கப்பட்டால் அடியேனின் உயிரும் பிரிந்துவிடும்.” “கெட்டுது பிடி! மீண்டும் சூளுரையா! ஏதேது இப்படிச் சூளுரைத்துக் கொண்டே போனால் முடிவு என்னவாக இருக்க முடியும் என்றே புரியவில்லையே?” “நீங்கள் என்னைக் கேலி செய்ய உரிமையுள்ளவர். ஆனால் இனி அதிர்ச்சி எதையும் தாங்க முடியாத பிராயத்தை எய்திவிட்டேன்.” என்றாள் மூதாட்டி. சோழர் மிக நிதானமாக “கவலையில்லாமல் வீடு திரும்புங்கள்.” என்றதும் அவள் வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார். அன்னத்தம்மை சென்றதும் அருகில் வந்து நின்றார் அநிருத்தப் பிரம்மமாராயர். “சக்கரவர்த்திகளே, இராஜராஜ விலாசம் இயற்றி இயக்கியவர் இப்போது இல்லாது போய்விட்டாரே” என்று இளநகையுடன் கூறியதும் பரகேசரி “ஆமாம் அமைச்சர் திலகமே.. கடந்த மூன்றாண்டுகளாக போர் அரங்க நாடகம், பிறகு அரசியல் நாடகம் இப்போது வாழ்க்கை நாடகம். நாம் எப்பவுமே ஏதாவது ஒரு வகையில் நடிக்கும் நாடகப்பாத்திரங்களாகத்தான் இருக்கிறோம்.” “வல்லபேந்திரரும், திரிபுவனரும், நாகச்சந்திரனும் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிவிட்டார்கள். கஜினி இனி இந்நாடு திரும்பாதபடி வழியனுப்பி வைத்த நாடகம்.” “அப்படி சொல்லுவதற்கில்லை அமைச்சரே. கஜினி சுல்தான் முட்டாளில்லை. மூர்க்கனும் இல்லை. தன் மனதில் பட்டதைச் சரி என்று உறுதிப்படுத்தி அதைச் செயலாக மாற்றிவிட்டான். அதற்கு வடநாடு இடமளித்துவிட்டது. அங்கு குட்டி குட்டி சமஸ்தானாதிபதிகள் இருக்கும் வரை இந்த நாடு படாத பாடுபடும் என்பதே நம் எண்ணம். எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவத்தின்படி பார்த்தால் விந்திய மலைக்கு அப்பால் இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளானாலும் சண்டையும் சச்சரவும் நிரந்தரமற்ற ஆட்சி முறைகளும், கொடுங்கோன்மையும், குழப்பமும் இருக்குமென்றே தோன்றுகிறது. ஆனால் அது அந்த எல்லைவரை நின்றுவிடுமா என்பதுதான் நமக்கு பெருங்கவலை.” “உண்மை. இங்கேயும் நாம் ஒருவருக்கொருவர் ஏறத்தாழ அப்படித்தானே இருக்கிறோம்.” “என்றாலும் நம்மவர்களுக்குள்ளே இருக்கும் தகராறுகளை நாம் மூன்றாம் பேர் வழிக்கு இடமளிக்கிற மாதிரி நடத்துவதில்லையே. இதுகாறும் தென்னகத்தில் அன்னியர்கள் வந்ததில்லை. ஏன்? நாம் வரவிடமாட்டோம். நமக்குள் ஆயிரம் இருக்கும். அன்னியர் இதை பயன்படுத்தித் தலை நீட்ட நாம் இன்று வரை அனுமதிக்கவில்லை. நாளையும் இப்படிதானே இருக்க வேண்டும்.” “காலமும் சூழ்நிலையும் மக்கள் மனநிலையும் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே நாமும் இருக்கிறோம். சக்கரவர்த்திகளே, எதிர்காலம் பற்றி ஆரூடம் எதுவும் கூறுவதற்கில்லை. நாம் நல்ல அஸ்திவாரம் போடுகிறோம். கட்டிடம் எழுப்பி வாழப் போகும் பரம்பரைச் சுற்றுச் சார்பு சூழ்நிலைக்கு ஏற்றபடிதானே விளங்கும்?” “ஆம். நீங்கள் கூறுவதும் சரிதான். காலம்தான் முடிவு செய்யும்...” “அதாவது காலத்தின் வயப்பட்ட மக்கள் சமூகம் முடிவு செய்யும். இன்று இந்நாடு முழுமையும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல அத்தனை பேரும் என்ன விரும்புகிறார்களோ என்றுதான் நாம் - நீங்கள் நினைக்கும் ஐக்கிய சுதந்திரமுள்ள ஏக தேசமாகப் பிறர் தலையிடும் அச்சுறுத்தலுமில்லாத நன்றாக இயங்க முடியும்” என்று அமைச்சர் கூறியதும் இராஜேந்திர சோழ தேவர் “உம்...” என்று இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டபடி “எல்லாம் பெருவுடையார் திருவருளை பொறுத்தே நடக்கும்” என்று பதிலளித்துவிட்டுத் தம் பரி மீதேறி நகர... அமைச்சர் வெளியே இருந்த சிவிகையை நாடிச் சென்றார். மனிதர் முயற்சிக்கலாம். ஆனால் முயற்சியின் பலனைத் தருவது இறைவனின் விருப்பமாகும் என்று நம்பிய காலம் அல்லவா அது. அவர்கள் யாவரும் சென்றதும், அதுவரை பிரகார மண்டபத்தின் ஒன்றின் பின்னே நின்ற ஒருவன் வெளிப்பட்டான். பூசாரி நெடுநேரமாக தட்டுடன் ஆடுகின்ற காரணம் நமக்கும் இப்போதுதான் புரிகிறது. இந்த முரட்டு ஆசாமியைக் கண்டு அப்படி நடுங்கியிருக்கிறார். “அய்யா பூசாரியாரே. நான் அப்பால் சென்ற பிறகு வாயைத் திறந்து நான் இங்கு வந்தது, மறைந்து நின்றது பற்றி ஒரு வார்த்தை சொன்னாலே போதும், உம் தலை உமக்கில்லை” என்று அவன் வாளை உருவியதும் அவர் “ஐயோ கடவுளே!” என்று இரைந்து கத்தியது நாலா திசையிலும் எதிரொலித்தது. பயங்கரமாக சிரித்த அவனும் வெளியே பாய்ந்தோடி மறைவிலிருந்த பரி மீது பறந்துவிட்டான். ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|