உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 24 இராஜேந்திர சோழ தேவரும் ஆடல் கலை மூதாட்டியும் ஆலய மண்டபத்தில் பேசிய பேச்சுக்களை அது காறும் மறைந்து நின்று கேட்டவன் கட்டுக்கு மீறிய உள்ளக் குமுறலுடன் அவ்வளவு ஆத்திரப்பட்டதில் அதிசயமில்லை. அன்னத்தம்மையின் உண்ணாவிரதத்துக்கு வீடு வாசலை வெறுத்து ராசனே துணை என்று அங்கு அடைக்கலம் புக வைத்துவிட்டது சூழ்நிலை மட்டுமல்ல, தில்லையிலே சூளுரை கூறும்படி கிழவியைத் தூண்டிவிட்ட வீரனும் இவன்தான் என்றால் வாசகர்களுக்குப் புதுமையாக இருக்கும். இவன் அம்மாதிரி கிழவியை இயங்கச் செய்ததற்குக் காரணம் இருந்தது. நீண்ட காலமாகவே மல்லிகை மீது இவனுக்கு ஒரு கண். அதுமட்டுமல்ல, ஏதோ அவளுக்கும் தனக்கும் முறையான உறவுமுண்டு என்று மூதாட்டியிடம் ஒரு வகையில் உறுதிப் படுத்தியிருந்தான். முதலில் அவள் தேவர் அடியாளாகட்டும். பிறகுதான் மற்றவற்றைப் பற்றி சிந்தனை என்று கூறிவிட்டாள் கிழவி. சோழர் படையிலே உள்ள பல உபதளபதிகளில் இவனும் ஒருவன். அம்பலவாணன் என்று பெயர். கிழவிக்கு அம்பலவாணன் என்ற பெயரிலேயே ஒரு பக்தி. எனவே அப்பெயரையுடையவன் நல்லவன், தவறான நோக்கம் எதையும் கொண்டு தங்களுடன் உறவு கொண்டாடமாட்டான் என்றே நம்பினாள். ஆகவே மல்லிகை இவனுடைய துராசை பற்றி கிழவியிடம் கூற முயன்றதை அவள் மல்லிகையின் அச்சம் நியாயம்தான் என்று நினைத்துத் தன் மனம் மாறவில்லை. எனவே மீண்டும் அது பற்றி அவள் பேச்சை எடுக்கவில்லை. ‘அம்பலத்தாடி’ என்றுதான் இவன் நண்பர்கள் அழைப்பார்கள். அவ்வளவு தந்திரமாக இயங்குபவன். எனவே தன் ஆசையை அவன் சமயம் நேர்ந்த போதெல்லாம் அதாவது மல்லிகை தனியாக இருக்கும் போது இவன் சந்திக்க நேர்ந்தால் அப்போது தன் மனநிலையை ஊமைச் சைகைகளாலும் நயமான குழைவான அசட்டுப் பேச்சுக்களாலும் காட்டிக் கொள்ள முயற்சிப்பான். ஆனால் நாளிதுவரை அவன் சிறிதும் வரம்பு மீறவில்லை. தானாகக் கனியும், அல்லது கனியவும் வைக்கலாம். அல்லது கிழவி மூலம் விட்டுப் பிடித்துக் கனிய வைக்கலாம் என்ற அம்பலத்தாடியின் நிலை அன்று இருதலைக் கொள்ளி எறும்பு போலாகிவிட்டது. ஏன் இந்த இளவரசனிடம் வந்தோம் என்று மனம் புழுங்கினான். ஆயினும் ஆதித்தன் வார்த்தைக்கு எதிர் வார்த்தையில்லை நாட்டில். விரைவாகத் திரும்பிவிடலாம் எண்றெண்ணி “உத்திரவு” என்று புறப்பட்டான். சிற்பியின் மகன் சிலாயனன் மாளிகையினுள்ளே நடுமுற்ற மண்டபத்தில் அமர்ந்து யாழில் சோக கீதம் இசைத்ததை இளவரசனால் பொறுக்க முடியவில்லை. ஏன் தந்தை முதலில் இருவருடைய இணைப்புக்கும் இணங்கிவிட்டு... இப்போது தேவையின்றி தாமதம் செய்கிறார் என்று வருத்தத்துடன் ஆராய்ந்தான். ஏனெனில் காரணமின்றி தந்தை எதையும் தாமதப் படுத்துபவரல்லரே. என்றாலும் தந்தையிடமே நேரில் சென்று கேட்டுவிட்டான். “மகனே, நான் அவர்கள் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன். நாளையிலிருந்து நாற்பதாவது நாள் கங்கைகொண்டானின் ஆலய நிர்மாணம் துவக்கம். இந்தச் சிற்பி மகனை துவக்கத்திலிருந்தே பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். உனக்கே தெரியும். துவக்கக் காலத்தில் பெண்களின் சம்பந்தமில்லாமல் தூய நிஷ்டைகளுடன் இருந்தாக வேண்டும் என்பது. எனவே தான் மீண்டும் கூறுகிறேன். கொஞ்ச காலம் போகட்டும் என்று... நீ அவனைவிட இளையவன் என்றாலும் என்னுடைய கட்டுப்பாடு ஏன் என்று நினைக்கிறாயா? அல்லது இதெல்லாம் ஏன், எதற்கென்று புரியவில்லையா?” என்று கேட்டார் மாமன்னர். ஆதித்தன் சட்டென்று, “இல்லையப்பா புரிகிறது. ஆனால் அவர்கள் இருவரும் இனி பிரிந்திருப்பது சாத்தியமில்லை. இருவரில் ஒருவர் அல்லது இல்லை, இல்லை இருவருமே இதனால் உயிர் பிரிந்தவர்கள் ஆகிவிட்டாலும் அதிசயமில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் கலையுள்ளங் கொண்டவர்கள். ஆனாலும் இளம் பிராயமும், இவ்விளம்பிராயத்தின் அடக்க இயலாத ஆர்வமும் கொண்டுள்ள கற்பனைப் பிரகிருதிகளாக இருப்பது உங்களுக்குப் புரியவில்லையா?” சோழன் உடன் பதில் கூறவில்லை. எனினும் சில நொடிகளில் “நான் அன்னத்தம்மையாரிடம் இது பற்றிப் பேசுகிறேன். இறைவன் திருப்பணி என்றால் அவர் தடை கூறமாட்டார். சில மாதகாலம்தானே... முயற்சித்தால் என்ன?” “அப்பா இது நிச்சயம் சாத்தியமில்லை. நான் என் நண்பனை இதன் காரணமாக இழக்கச் சம்மதியேன். நீங்கள் உங்கள் சிற்பி சத்திய சங்கர வேளாருக்கு நன்றிக்கடன் ஆற்றாமலிருக்க முடியாது. கிழவியோ தன் அன்பு மகள் நலனையே பிரதானமாகக் கருதுவாள்.” “ஒன்று செய்தாலென்ன சக்கரவர்த்திகளே!” என்று குறுக்கே புகுந்தார் பிரம்மமாராயர். அரசர் ‘சரி, இவர் தலையிட்டுவிட்டார். எனவே ஒரு தெளிவு நிச்சயம் காண முடியும்’ என்று நிம்மதி பெற்று “என்ன அது?” என்று கேட்டார் பரபரப்புடன். “நீங்கள் துவக்க காலத்தில் நாட்டில் தற்போதுள்ள முதிய சிற்பிகளையும், சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சிலாயனன் போன்றவர்களின் பணியை ஏற்பது என்று ஒரு திட்டம் தீட்டினால்...” “தீட்டினால்?” “இவன் திருமணம் இப்பவே நடைபெறட்டும். புதுமண வாழ்வைச் சில காலம் அதாவது ஒரு மண்டலத்துக்கு அனுப்விக்கலாம் என்ற அனுமதி தருவோம். பிறகு ஆலய வேலை முடியும் வரை பெண் ஆசை கூடாது. இவர்கள் சந்திக்கவும் கூடாது என்று உறுதியைப் பெற்றுக் கொண்டால் நம் நோக்கமும் நிறைவேறும். அவர்கள் வாழ்வும் முதலில் மலர்ந்து மகிழ்வேற்படும் அல்லவா?” என்று நிதானம் மாறாத குரலில் நயமாகக் கேட்டார். ஆதித்தன் இது பிரமாதமான யோசனை என்று கூறுவதற்குள்... “புது மோகம் கொண்டவன் உறுதியை நம்பலாமா?” என்று சக்கரவர்த்திகள் கேட்டதும் வாய் மூடிவிட்டான். “உண்மைதான். என்றாலும் இவன் சத்திய சங்கரன் செல்வன். எனவே ‘நீ ஒரு மாபெரும் சிற்பியின் மகன். முதலில் உன் தந்தையின் பெருமைக்குத் தகுந்தவனாகச் செயல்படு. முதலில் உன் ஆசை நிறைவேறிவிட்டது. எனவே நீ இனிக் கடமையில் கருத்துக் காட்டுவதுதான் சிறப்பு. பெரியோருக்கும் சிறப்பு’ என்று அவனிடம் சொல்லலாம்” என்றார். பிரம்மமாராயரின் யோசனையில் இளவரசன் ஈடுபாடு கொண்டுவிட்டான். முதலில் கலைஞன், பிறகுதானே காதலன். சந்தர்ப்பமளித்தால் என்ன? “அப்பா நான் அவனைத் தங்களிடம் ஒரு மண்டலம் கழித்துக் கடமையில் கருத்துள்ளவனாகச் சேர்க்கிறேன்” என்றான் உறுதியான குரலில். மன்னர் திரும்பவும் தயக்கத்துடன்... “உன்னால் இது இயலுமா? இது சாத்தியமாகுமா?” “சாத்தியம் ஆகும். நிச்சயம் இயலும் அப்பா” என்றான் மீண்டும். இந்த கடைசி உறுதியைப் பெற்ற மன்னர் மகனிடமிருந்து அகன்றார். இப்படி அரசன் அகன்று சென்ற பிறகுதான் நாம் முன்பு கூறிய நிகழ்ச்சி அதாவது அம்பலத்தாடி இளவரசனிடம் வந்ததும் அவன் நாகை செல்லும்படியான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. நடந்தது; ஆனால் மன்னர் இங்கு வந்ததும், முடிவான திட்டம் எதுவும் அவனுக்கு தெரியச் சந்தர்ப்பமில்லை என்றாலும் அன்று நிகழ்ந்ததுதான் என்ன? சோழ இளவரசனின் அவசரமான கட்டளைக்கு இணங்க நாகைக்குப் புறப்பட்ட அம்பலத்தாடியின் மனம் ஒரு நிலையிலில்லை. நேற்று வரை மல்லிகை தனக்குத்தான் என்று நம்பியிருந்தான் அவன். ஆனால் கடந்த ஐந்தாறு நாட்களில் ஏற்பட்ட மாறுதல் முற்றிலும் நேர்மாறாகி விட்டது. கிழவி அன்னத்தம்மாள் தன்னிடம் காட்டிய அன்பு, அனுதாபம் இரண்டும் முற்றிலும் மாறிப்போய் நேர்மாறாகத் திரும்பிவிட்டது. முன்னே தன்னைக் கண்டதுமே, ‘வா, வா தம்பி’ என்று வரவேற்றவள் இப்போது ‘போ, போ’ என்று கூறுவதுடன் நில்லாமல் “ஏன் வருகிறாய் இங்கே? அவளுடைய முறைப் பையன் நீ என்று சொன்னதை நம்பி ஏமாந்தேன். அது போதும். இப்போது உண்மையிலேயே அவளுடைய முறைப்பையன் வந்துவிட்டான். சக்கரவர்த்திகளும் பெரிய மனசு பண்ணி அவளுக்கும் அவனுக்கும் திருமணம் நடத்தி வைக்க உத்திரவு செய்துவிட்டார். எனவே நீ இனி இங்கு வருவது கூடாது. எனவே போ, போய்விடு, திரும்பவும் தலை நீட்டாதே...” என்றாளே... பற்களை நறநறவென்று கடித்தபடி குதிரையை முடுக்கி விட்டவன் எதிரே நாலைந்து மூடுபல்லக்குகள், அவற்றின் பாதுகாப்பாக இருபது வீரர்கள் வருவதைக் கண்டதும் சற்றே வேகத்தை மட்டுப்படுத்தி நிதான நடையில் குதிரையைச் செலுத்தியவன் அருகே காவல் படைத்தலைவன் வந்து நின்று முறைப்படி வணங்கினான். உபதளபதி அம்பலத்தாடி முரடன், முன் கோபக்காரன் என்னும் உண்மை மற்றவர்களைப் போல அவனுக்குத் தெரியும். எனவே முந்திக் கொண்டான். அம்பலத்தாடி வாய்திறந்து யார் என்று கேட்பதற்குள் அவனே, “இலங்கையின் இளவரசியும் அவளுடைய தோழிகளும் நம் தலைநகருக்கு இப்பல்லக்குகளில் வருகிறார்கள்” என்று மிகப்பணிவுடன் தன்னிடம் கூறி விளக்கியவனை ஊன்றி நோக்கினான். பிறகு நிதானமாக “இலங்கையின் தூதுவர் அவர் பரிவாரங்கள் யாவும் அங்கு தங்கியிருக்கின்றன அல்லவா? தூதுவர் அதிகாலையில் கடலோடியிருக்கிறார். இன்று காலை பத்து நாழிகை வரை இளவரசரிடமிருந்து ஏதோ தகவலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பிறகுதான் புறப்பட்டு விட்டார்” என்று காவலன் கூறியதும் அம்பலத்தாடி மனம் துணுக்குற்று அவனைத் திரும்பவும் உற்றுப்பார்த்தான். இளவரசன் சொன்னவுடன் தான் புறப்பட்டிருந்தால் நிச்சயமாக அந்தப் பத்து நாழிகைக்குள் நாகை சேர்ந்திருக்கலாம். ஆனால் நான் வேண்டுமென்றே தாமதித்தது இப்போது பெரும் தவறாகிவிட்டது. இவனும் என்னைச் சந்தித்த நேரத்தைக் கூறினால் இளவரசர் கோபம் கொண்டு விடலாம். ஆகவே இதற்கு ஏதாவதொரு தந்திரம் செய்தால்தான் தப்ப முடியும். “வேலா, அதோ பார் பல்லக்குகளிலுள்ள பெண்மணிகள் திரைகளை விலக்கிப் பார்க்கின்றனர், ஏன் தாமதம் என்று. அவர்களிடம் நீ போய் ஆவூர்ப்பாதையில் போவதுதான் தற்போது நல்லது என அறிவித்து வா. மணக்காட்டுப் பாதையில் புலிகள் நடமாட்டமாம். பரபரப்புடன் இதைச் சொல்லி மிரட்டிவிடாதே. நானும் நீங்கள் தலைநகர் எல்லையைச் சேரும்வரை உடன் வருகிறேன்” என்று கூறியதும் காவலன் பெரிதும் நிம்மதியற்று நடுநாயகமாக இருந்த பல்லக்கின் அருகில் ஓடினான். பத்து நொடிகளில் திரும்பினான் அவன். “நன்றி கூறச் சொன்னார்கள்” என்று அம்பலத்தாடியிடம் அறிவித்ததும் “உம்” என்று ஒரு உறுமல் மூலம் அதை ஏற்றுக் குதிரையைத் திருப்பினான். அது பாவம், இந்த முரடனிடம் இன்று சிக்கிக் கொண்டோமே என்று வாய்விட்டுச் சொல்ல இயலாது வேதனையுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வேகமாகவே ஓடியது. அரசூர் அம்பலத்தாடி முரடன்; படு முன்கோபக்காரன் என்பது உண்மையானாலும் வாழ்க்கையில் உல்லாச ஈடுபாடும் ரசிக மனமும் கொண்டவனல்ல என்று கூறிவிட முடியாது. மல்லிகா தனக்கே உரியவள் என்ற முடிவை அவன் உறுதியாக கொள்ளும்படியான பல நிலைகள் நேற்று வரை அவனுக்குச் சாதகமாகவே இருந்தன. ஆனால் இன்று அது முற்றிலும் மாறிவிட்டது. தன்னுடைய படையினர், சகாக்கள் யாவரும் தன்னை மல்லிகையின் வருங்காலக் கணவன் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே செய்துவிட்டனர். தவிர அன்னத்தம்மாளின் மகள் மல்லிகைக்கு ஏற்ற மணமகன் இவன்தான். எனவே சக்கரவர்த்திகள் தமது திக்விஜயத்திலிருந்து திரும்பியதும் நாட்டிய அரங்கேற்றம் நடத்தி முடித்த பிறகு அவருடைய ஆசி, ஆதரவுடன் இவனுக்கு அவளை மணம் முடித்திடுவது என்றுதான் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள் என்பது உண்மைதான். ஆயினும் சிற்பி சங்கரனாரின் திருமகன் சிலாயனன் செத்துப் பிழைத்து வந்திருக்கிறான் என்பதுடன் அழகுத் தோற்றம், அபாரக் கற்பனைச் செறிவுள்ள கவிதா சக்தி, அற்புதச் சிற்பி ஞானம் எல்லாம் மல்லிகைக்கு தகுந்த மணாளன் என்ற மதியை உண்டாக்கி விட்டதால் தன்னுடைய முந்தைய முடிவிலிருந்து ஆடற்கலையரசி அன்னத்தம்மாளை அடியோடு மாற்றிவிட்டது. அதுமட்டுமில்லை, தமிழகத்தின் சிற்பக்கலை மேதையான சங்கரனாரின் பேராதரவினால்தான் முன்னாளில் அன்னத்தம்மையே பேரரசர் இராஜராஜனிடம் அறிமுகமாக முடிந்தது. அவருடைய ஒரே சொல் இராஜராஜ சோழரிடம் எத்தகைய மதிப்பைப் பெற்றிருந்தது என்பதை அவள் அனுபவ பூர்வமாக அறிந்திட வாய்ப்பேற்பட்டது. “நீ சோழர் ஆதரவு நாடி வந்திருப்பது சிறப்பு. கலைஞர்கள் எந்த மூலை முடுக்கியிருந்தாலும் சோழ மாமன்னரின் ஆதரவைப் பெற்றிட முடியும். எனவே நம்பிக்கையுடன் நீங்கள் அரசரிடம் அணுகுவது முறையானது. எம்மாலானதையும் செய்வோம்” என்றார். அவ்வாறே செய்தார். அன்று முதல் சோழர் பரம்பரை அன்னத்தம்மாளுக்கு தொடர்ந்து ஆதரவு காட்டுவது மட்டும் இல்லை. பெருமதிப்பும்... ஆமாம், நாட்டிலேயே பெரும் அந்தஸ்து பெற்றுள்ள சோழரின் முதிய பிராட்டியாருக்கு ஈடான அளவு மதிப்பு கொடுத்து வருவது உலகறிந்த உண்மை என்றால் அதிகம் கூற வேண்டியதில்லை. சிற்பியாருக்குச் சோழர் எப்போர்க்கொத்த மதிப்பு கொடுத்திருக்கிறார் என்பதை அனுபவ பூர்வமாகவே அறிந்தவள் அன்னத்தம்மாள். தஞ்சைப் பெரிய கோயில் நிர்மாணித்து முடிந்ததும் முதல் மரியாதையை மக்கள் யாவரும் கூடி ஒரு முகமாக கூற, இராஜராஜ சோழச் சக்கரவர்த்திகள் “எனக்கு முதல் மரியாதை கொடுப்பதிருக்கட்டும். எனக்கு முன்னரே முன்னோடியாக மதிப்பும் பெருந்தகுதியும், உரிமையும் பெற்றவர் நமது சோழ நாட்டுப் பெரும் சிற்பியவர்களேயாகும். எனவே உங்கள் சார்பில் நானே முதல் மரியாதையைச் செய்கிறேன்” என்று எவ்வளவு உயர்ந்த மனப்பாங்குடன் செயல்பட்டார். ஒரு சாதாரணக் கலைஞனை அந்நாள் மாமன்னர் எவ்வளவுக்கு மதித்துச் செயல்பட்டார். அதை மறந்திட முடியுமா? அதுவன்றோ மக்கள்தான் மகிதலம் என்பதை உணர்ந்த மாட்சிமையான செயலாகும். ஆனால் சிற்பிதான் உணர்ச்சி வசப்பட்டு அன்று தன்னையே மறந்து போய் மன்னரின் சந்தேகத்தைப் பெரிது பண்ணிக் கொண்டு உணர்ச்சி வசப்பட்டுப் பின்னால் மாறிவிட்டார் எனும் போது... எது எப்படியானாலும் அவருடைய சிறப்பு இன்று குன்றிலிட்ட விளக்கு. திறமை வானத்துச் சூரியனுக்கொப்பானது. எனவே அவருடைய அருமைத் திருமகன் சிலாயனனுக்கே என் மல்லிகை உரியவள் என்று கூறிவிட்டாளே. அன்னத்தம்மாளின் இம்முடிவை அரசரிடம் அறிவித்ததும் அவராவது ‘சேச்சே! ஏற்கெனவே இவளை வேறொருவனுக்குத் தருவதாகச் செய்த ஒரு முடிவு... பிறகு திடீரென்று இப்பொழுது அதில் ஒரு மாறுதலா? கூடாது. முறையில்லை’ என்று கூறி முறையாக நிறுத்திடாமல் ‘நல்லது... நாம் இதை ஏற்கிறோம்’ என்று இணங்கிக் கூறுவதென்றால்... சினத்துடன் கைச்சாட்டையால் ஓங்கிப் பல முறைகள் குதிரையை அம்பலத்தாடி அடித்ததும் அது ஏழெட்டு முறை வலி தாங்காது அப்படியும் இப்படியும் துள்ளி உள்ளூரக் குமுறித் துடித்தது பாவம். ‘இவனுக்கு யார் மீதோ ஆத்திரம் என்றால் அதற்கு நான்தான் அகப்பட்டேனா?’ பரிமாவுக்கு வாயில்லை. அது இருந்தால் நடப்பதே வேறு. அம்பலத்தாடி மீண்டும் நகர எல்லைக்குள் வந்துவிட்டான். தன் பின்னே வந்து கொண்டிருக்கும் அந்தப் பல்லக்குகள் அந்தப் பகுதியை சேர... அதற்குள் நாம் ஏன் ஒரு காரியம் செய்திடக் கூடாது என்று நினைத்தவன் சட்டென்று குதிரையைத் திருப்பினான், அன்னத்தம்மாள் சாவடி என்னும் கலைஞர் சேரியை நோக்கி. ஆயினும் அங்கே நேராகப் போகாமல் அப்பகுதியின் எல்லை போல விளங்குவதுடன் அப்பகுதியைத் தஞ்சை மாநகரத்திடமிருந்து பிரித்த மாதிரியில் அழகு சேர்க்கும் நீரோட்ட நிலையாக விளங்கிய பெருவளத்தான் ஆற்றங்கரையை நாடி அதன் இருபுறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த பூந்தோட்டங்களைச் சுற்றிச் சுற்றி வந்தான். வளத்தாற்றின் சிறு சிறு வாய்க்கால்கள் பல அந்த மலர்ச் சோலையின் ஊடே பாம்புகள் போல வளைந்து வளைந்து ஓடுவதையும் கண்டான் அப்பலத்தாடி. அப்படியொன்றும் அவன் பெரிய கலை ரசிகனில்லை. சோலைகளும், மலர்களும், வாவிகளும், நீர்வீழ்ச்சிகளும் அவனைக் கவருவனவும் அல்ல. ஆயினும் அவன் சின்னஞ்சிறு வயதிலிருந்தே மல்லிகையின் அழகினை உரிமையுடன் ரசித்தவன். அவளுக்குப் பிராயம் வரும்வரை ஏன் இப்படி இந்த இளைஞன் தன்னையே சுற்றி வருகிறான் என்று வியந்ததுண்டு. என்றாலும் விரட்டிவிடவில்லை. ஆனால் அவளுக்குப் பருவம் வந்ததும் சிறுவன் மனம் வாலிபமனமாக மாறி வேறு மாதிரி இந்தக் கவனத்தைக் கணித்தது. இதைக் கண்ட மல்லிகை விபரீதம் என்று நினைத்தாள். பிறகு அன்னத்தம்மாளிடம் இது பற்றிப் புகார் செய்தாள். ஆனால் அந்த அம்மாள் “நாளைக்கு அவன்தானடி உன்னைத் திருமணம் செய்யப் போகிறான். ஏதோ சிறுபிள்ளைத்தனமாக அவன் உரிமையுடன் உளருவதைப் பொருட்படுத்தாதே. விளையாட்டு சேஷ்டை என்று விட்டுவிடு. அது பற்றி நீ ரொம்ப பெரிதுபடுத்தாதே” என்று சர்வ சாதாரணமாகச் செல்லத்துடன் சொன்னதும் மல்லிகாவுக்கும் ‘சே’ என்றாகிவிட்டது. அம்பலத்தாடிக்கும் கண்டணம் இல்லை, ஆதரவுண்டு என்று தெரிந்ததும் சுதந்திரம் அதிகமாகிவிட்டது. அன்னதம்மாள் சாவடி அப்பகுதியில் ஒரு பெரிய சிற்றூர் என்றாலும் அங்கு பெரும்பாலும் குடியேறி வசித்தவர்கள் கலைஞர்கள்தான். எனவே இயல்பாகக் கலைஞனல்லாத அம்பலத்தாடி, நாளடைவில், நாளை மல்லிகையை மணக்கப் போகும் உரிமையுள்ளவனானதால் கலைஞர் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டான். ஆனால் கடந்த சில தினங்களில் அந்தச் சாவடி வாசிகளில் பலரும் இவனை அலட்சியப்படுத்தி யாரோ ஒரு அன்னியன் மாதிரி மதித்திட துவங்கியதும் அம்பலத்தாடியின் உள்ளத்தில் ஆத்திரத் தீ பொங்கி எழுந்தது. அன்று துவங்கிய ஆத்திரமும் ஏமாற்ற உணர்வும் நாளாக ஆக வளர்ந்து வன்மமாக மாறியதே தவிர, போகட்டும் போடா என்று வெறுத்தொதுங்கத் தோன்றவில்லை. விட்டேனா பார் என்ற வேகமும் தாகமும் வேதனையும் வெறியுமாகப் பரிணமித்தது. மன உளைச்சலும், வேதனையும் மிதமிஞ்சிய ஆத்திரமும். கொண்டவன் மலர்வனத்தில் நுழைந்த பிறகுதான் நமக்கு இங்கென்ன வேலை என்று அவனை யோசிக்கச் செய்தது. உடன் அடேடே, அந்தச் சிலை செதுக்கும் பயலும், இந்த மல்லிகைச் சிறுக்கியும் கலைஞர்கள் அல்லவா? எனவே ஆற்றங்கரை, மலர்வனம், அழகுச் சோலைகளில் உல்லாசமாக இருந்திட விரும்பும் காதல் பறவைகள் இல்லையா? ஆமாம். இதை யார் எனக்குச் சொன்னது? உல்லாசப் பறவைகள் ஊரைச் சுற்றி வருகின்றன என்று. யார்... யார் அது... ஆமாம். அந்த ஆரூர்ச் சோழகப்பயல் அல்லவா... ஆமாம். எங்கெல்லாம் ஆட்டக்காரிகள் உண்டோ அங்கெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கும் காமவெறி கொண்ட தறுதலைப் பயல். என்றாலும் அவனும் நமக்கு இந்த இக்கட்டான விஷயத்தில் உதவி செய்திட முடியும். எனவே, நமக்கு அவன் குணம் பிடிக்காவிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அவனைப் பயன்படுத்திக் கொள்ளுவதில் தவறேதும் இல்லை என்றும் நினைத்தான். குதிரைக்கு ஏன் இவ்வளவு நிதானமாகத் தன்னை நடத்துகிறான் என்று கூட அதிசயமாக இருக்கும். ஓர் ஓடையை நெருங்கியவன் சிறிது நிறுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுடைய கூரிய விழிகள் நாலா திசைகளிலும் சுழன்றன. அதோ அதோ யார் அது? அடேடே, அவரேதான்... நாம் நினைத்த மாத்திரத்திலேயே திடீரெனத் தோன்றக் கூடிய காலகாலச் சோழகன்தான். சோழர்களின் பங்காளியும் ஆனால் பங்காளிக் காய்ச்சலால் பரவைரியுமான அதே பேர்வழிதான். “ஐயா, சோழகரே வணக்கம்” என்று அவன் அருகில் சென்றதும் சொல்லிவிட்டுக் குதிரையிலிருந்து இறங்கியவனைச் சலிப்புடன் நோக்கினான் காலகாலன். வயதில் பெரியன். வம்பன். பெரிய வீரனில்லை என்றாலும் கோழையில்லை. ஆனாலும் அபார தந்திரசாலி. குள்ளநரிகள் இவனிடம் குட்டிக் கரணம் போட வேண்டும். இப்படித்தான் அன்றைய ஊர்மக்கள் இந்தச் சோழகனைப் பற்றி மறைமுகமாகப் பேசிக் கொண்டார்கள். ஏனென்றால் அவன் சோழர்களின் பங்காளி முறை. உறவினன் என்ற உரிமை கொண்டவன். அவனுடைய கையாள்கள் முரட்டுப் பேர் வழிகள். “யாரு? ஓ...! அம்பலத்தாடியா...? வீராதி வீர அம்பலத்தாடியே, நீ ஏன் அப்பா இங்கே வந்து சேர்ந்தாய்? காதல் பறவைகளின் கானம் இசைத்திடும் சோலைவனத்தில் வாள் பிடித்த வீரனுக்கு என்ன வேலை?” என்று கேலி செய்துவிட்டு வலது கையைத் தூக்கி கண்களின் மேல்புருவ மண்டலத்தில் சற்றே, கரங்குவித்து எங்கோ பார்வையைச் செலுத்தினான் சோழகன். அம்பலத்தாடிக்குச் சிறிது கோபம்தான். என்றாலும் காரியத்திலே கண்ணாய் இருக்க வேண்டுமே. இவனிடம் ஜம்பமெல்லாம் பலிக்காதே. “ஐயா சோழகரே... அங்கே என்னய்யா அப்படி நீங்கள் சொக்கிப் போன காட்சி” என்று கேட்டவன் சட்டென அந்தத் திசையை நோக்கியதும் “ஓ” என்று ஒரு உறுமலுடன் துள்ளிக் குதித்தான் அம்பலத்தாடி. சோழகன் கேலியாகச் சிரித்தபடி... “இப்போது புரிகிறதா தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் தூங்கு மூஞ்சி ஏமாளி. அங்கே பார்த்தாயா? அந்த அழகு ஜோடிகளை. உம்... வயிறு எரிந்து என்ன செய்வது? அன்றே சொன்னேன் தூக்கிப் போய்விடு என்று. கேட்டாயா? தானாகக் கனியும் என்றாய். கனிந்தது உண்மை. ஆனால் அந்தக் கனி இன்னொருவன் மடியில் போய் விழுந்து அவன் வாயில்...” என்று மேலும் சொல்லும் முன் “சோழகரே, போதும் நிறுத்தும். நான் உங்கள் பேச்சைக் கேட்டிருந்ந்தால் இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?” என்று கத்திவிட்டான். “வேண்டாமே. சிங்களம், சாவகம், சீயம், யவனம் எல்லாம் இல்லையா? கப்பல்கள் ஓடவில்லையா? அல்லது இந்தக் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவதற்குதான் தெரியுமா?” “நான் நினைத்திருந்தால் அவள் உயிர்கூடத் தரித்திருக்க முடியாது.” “சரிதான்... பிடித்துக் கட்டிக்கொள் என்றால் இதோ வெட்டுகிறேன் என்று உறுமும் புத்திசாலிதான் நீ. அந்த இராமாயணத்தில் கூட இராவணண் சீதை வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவளைக் தூக்கிச் சென்றவன், தெரியுமா?” “ஆனால் அவள் அவனுக்கு கிடைக்கவில்லை.” “அவன் ஒரு முட்டாள். அங்கு சென்றதும் பொறுத்தான். அந்தப் பொறுமையைவிட்டு, பிடித்த மாத்திரத்திலேயே கசக்கி முகர்ந்து...” “ஏன் இவ்வளவு அசிங்கமாய்ப் பேசுகிறீர்கள்?” “இனி அவள் உனக்கில்லை என்பதை அதோ அந்தக் காட்சியே நிரூபித்து விட்டது” என்று கூறிவிட்டுக் கலகலவெனச் சிரித்தான். அம்பலத்தாடிக்கு ஒரே ஆத்திரம். ஆற்றின் மறுபுறத்தில் ஒரு படகில் அவனும் அவளும், உல்லாசமாகப் போவதைக் கண்டு குமுறினான். சே! இந்தச் சோழகன் சொன்ன மாதிரி அன்றே அவளைக் கவர்ந்து சென்றிருந்தால்... ஊகூம்... அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாள். இப்ப மட்டும் என்ன... ஒரே நொடியில் அந்தப் பயலை.. வெட்டிப் போட்டுவிட்டால்... “அம்பலத்தாடி, அதோ பார் எதிர்க்கரையில்” என்று சோழகன் மீண்டும் சொன்னதும் நான்கு குதிரை வீரர்கள் அங்கு உலாவுவதைப் பார்த்து ‘ஓ...! இது யாரோ செய்துள்ள எச்சரிக்கையான ஏற்பாடு. அவர்களின் பார்வையில் தான் சிக்கினால் வந்தது ஆபத்து. இந்நேரம் நாகையிலிருக்க வேண்டியவன் இங்கே என்றால்... அச்சமும் கலக்கமும் உண்டாகிவிட்டது. இதைக் கவனியாத மாதிரி “அம்பலத்தாடி, உன்னால் அந்த மம்முதப் பயலுக்கோ அந்த அழகுச் சிறுக்கிக்கோ, ஏதாவது ஆபத்து ஏற்படுமென்றே இளவரசன் ஆதித்தன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். அவர்கள் திருமணம் வரை உன்னை இந்தப் பகுதியிலேயே அவன் இருக்கவிடப் போவதில்லை; புரிகிறதா?” “பார்க்கலாம்” என்று ஒரு உறுமலுடன் பதில் வந்தது. சோழகன் சிரித்து விட்டான். “நீ இனி எதைப் பார்ப்பது? நான் சொல்வதையாவது கேள். உனக்கு அவள் வேண்டும். எனக்கு அந்த சோழன் பரிதவிக்க வேண்டும். புரிகிறதா? எனவே என் யோசனையைக் கேட்டால் பிழைத்தாய்... உனக்கும் இலாபம் எனக்கும் இலாபம். புரிகிறதா?” என்று கேட்டுவிட்டு “வா இப்படி” என்று பக்கத்தில் அழைத்து முணுமுணுப்பது போலச் சில வார்த்தைகளை உதிர்த்ததும் “அடப்பாவி மனுஷா?” என்று பதறிக் கத்திவிட்டான். ஆனால் சோழகன் அயரவில்லை. ஏனோ பயம் பிடித்துக் கொண்ட்து அப்பலத்தாடியை. சட்டெனக் குதிரை மீது ஏறிப் பறந்தான். சோழகனோ வத்தி வைத்தாயிற்று. இது பற்றி எரியாமல் போகாது என்று எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். இனியும் தாமதிப்பதற்கில்லை என்று அங்கிருந்து நாகைக்கு அடுத்த சில நாழிகைகளில் பறந்து சென்ற அம்பலத்தாடி இலங்கைத் தூதவரைச் சந்திக்க ஒரு முழு நாள் தேவைப்பட்டது. பிறகு மறுதினம்தான் அவர் பேட்டி கொடுத்தார். இளவரசன் தந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தான். அவர் பதறிப்போய். “நேற்றே நான் உன்னை எதிர்பார்த்தேன். நீ வரவில்லை. ஏன் இந்தத் தாமதம்?” என்று சற்றே சினந்து கேட்டதும் அவனும் சினத்துடன், “நேற்றைக்கு நீங்கள் கடலாடச் சென்றுவிட்டீர்கள். எனக்கோ படகும் இல்லை. அது பெறும் வசதியும் இல்லை” என்றான். தூதுவருக்கு சினம் அதிகரித்துவிட்டது. “இந்த மரியாதையற்றவனைக் கைது செய்து காவலில் வையுங்கள் நான் திரும்பி வரும் வரை” என்று கடுமையாக உத்திரவு போட்டார். இப்போது அம்பலத்தாடி பதறிவிட்டான். அயல் நாட்டுத் தூதுவர் மிகவும் மரியாதைக்குரியவர். அதுவும் சிங்களத் தூதுவரோ சோழ குலத்துடன் சம்பந்தம் கொண்ட அரசின் தூதுவர். எனவே தன்னுடைய தாமதத்துக்கு உடனடியாக சந்திக்காத நடத்தைக்கு மன்னிப்பு கோரினான். ஆனால் அவர் “மூன்று தினங்கள் வரை நீ எங்கள் கைதிதான். சோழ சக்கரவர்த்திகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை அவர் எடுக்கும் வரை நீ இங்குதான் எங்கள் சிறையில் கைதியாக அடைந்து இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுத் தலைநகர் புறப்பட்டுவிட்டார். பாவம் அம்பலத்தாடி. ஊர் உலகம், கடவுள், சமூகம், மன்னர், இளவரசன் எல்லாரையும் மனதாரத் (உள்ளூர) திட்டிக் கொண்டே சிறை கிடந்தான் அடுத்த மூன்று நாட்களும். நாலாம் நாள் இவன் விடுதலை செய்யப்பட்டு “உடன் தம்மை வந்து பார்க்குமாறு சக்கரவர்த்திகள் உத்திரவு” என்ற அறிவிப்புடன் வெளியில் அனுப்பப்பட்டான். விதியை நொந்து கொண்டு உறையூர் திரும்பியவன் காதில் முதலில் விழுந்த சொற்கள்... “சிற்பி சத்திய சங்கர வேளாரின் திருமகனுக்கும் கூத்தரசி அன்னத்தம்மாளின் அன்பு மகள் மல்லிகைக்கும் இன்று இருபது நாழிகையளவில் திருமணம்” என்று எவரோ பேசிக் கொண்டது கேட்டதும், “ஐயோ” என்று வாய்விட்டுக் கத்திவிட்டான். திருமணம் பற்றிப் பேசியவர்கள் காதில் இந்த அவச்சொல் கேட்டதும் “ஏய் நில்” என்று குறுக்கே நிற்கவே இதென்ன வம்பு என்று அரண்டு போன அம்பலத்தாடி ஒரு அசட்டுத் தைரியத்துடன் “நான் தளபதி... அரசகாரியம் அவசரம்” என்றான் கடிவாளத்தை பிடித்தபடி. ஆனால் அந்த திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் “அரசகாரியம் என்றால் உன் வாயில் அவலப் பேச்சு ஏன் வந்தது? எங்கள் உரையாடலில் கவனம் ஏன்?” என்று வேகமாகக் கேட்டதும் இன்னும் ஐந்தாறு பேர்கள் வீதிகளில் சென்றவர்கள் வந்து கூடினர். அவர்களிலே ஒருவர் சிற்பி மகன் திருமணத்துக்குப் போகும் நோக்கில் சென்றவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார். “நாங்கள் சிற்பியின் திருமணம் பற்றிப் பேசினோம். இவன் இடையே ‘ஐயையோ’ என்று கூக்குரல் போட்டான்” என்றான் ஒருவன். பெரியவருக்குக் கோபம் வந்துவிட்டது. “அப்படியா? சில தினங்களுக்கு முன்னால் கூத்தரசி அன்னத்தம்மை எவனோ ஒரு கயவன், படை வீரன் மாதிரி வேடமிட்டு நம் வீட்டுப் பக்கம் வந்து தமது அன்பு மகளிடம் அசட்டுத்தனமாக நடக்க முயற்சிக்கிறான் என்றார். ஒருவேளை...” என்று அவர் இவனை ஏளனமாகவும் வெறுப்பாகவும் பார்த்துச் சொல்லி முடிக்கு முன்னர் “ஐயையோ, அந்த அம்மாள் சொன்னது பொய்” என்றதும் அத்தனை. பேரும் “அஹஹ்ஹா...” என்று வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். பிறகுதான் அவனுக்குப் புரிந்தது தானாகவே மாட்டிக் கொண்டோம் என்பது. உடனே “கட்டுங்கள் இவனை” என்றார் அந்தப் பெரியவர். அவ்வளவுதான் ஒரு நொடியில் அத்தனை பேரும் அவன் மீது பாய்ந்து கட்டிப் போட்டுத் தரையில் உருட்டிவிட்டனர். “நான் படைத்தளபதி அம்பலவாணன்...” என்று அலறினான். அவரோ “ஆமாம் ஆமாம். அந்த வேடதாரியின் பெயர் கூட இது மாதிரி ஏதோ ஒன்றுதான்” என்று கூறிவிட்டுச் “சரி, இவனை நம் பொதுமண்டபத்துக்கு கொண்டு செல்லுங்கள்” என்று கூறினார். “கடவுளே! இதென்ன கொடுமை. அந்தத் திருமணத்தை நடக்கவொட்டாது எப்படியாவது நிறுத்த முயற்சிக்கலாம் என்றால்... இந்த முரட்டுக்காட்டான்கள் இப்படிச் செய்து விட்டார்களே. அங்கே அந்த முட்டாள் சிங்கள தூதுவன் மூன்று நாள். இங்கே இந்த முரட்டுப் பேர்வழிகள் எத்தனை நாளோ?” ஏன் இப்படித் தனக்கு ஒன்றன் பின் ஒன்றாகக் கஷ்டங்கள் தொடர்ந்து வருகின்றன? என்று ஆராய்வதற்குப் பதிலாக “ஏ! பெரிய மனுஷா, அரச காரியமாகச் செல்லும் என்னை அவதிக்குள்ளாக்கி விட்டாய். அரசர் இது அறிந்துதும், நீ படப்போகும் பாட்டைப் பஞ்சு கூடப்படாது” என்று கத்தினான். ஆனால் பஞ்சாயத்து ஆசாமி மசியவில்லை. “நான் படுவதிருக்கட்டும். நீ ஏன் அந்த மூதாட்டி மகளிடம் திமிர்த்தனமாக நடந்தாய்?” என்று கேலியாகக் கேட்டதும் “நானா? அப்படித்தான் நடப்பேன். இன்று அவள் கல்யாணம் நடக்க விடுகிறேனா பார். நான் அவள் முறைபிள்ளை. அந்தக் கூத்தாடிக் கிழவிக்கு...” அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் பஞ்சாயத்து தலைவர் கொடுத்தார் ஒரு குத்து. “ஐயோ!” என்று அலறிவிட்டான் அம்பலத்தாடி. “டேய் உலுத்தா. நான்தான் மூதாட்டி வசிக்கும் கிராமத்தின் நாட்டாண்மை. புரிகிறதா? இனி உன்னை விடப் போவதில்லை. சாவடிக் கொட்டகையில் இவனை அடைத்துப் போட்டு ஊர் அறிவிப்புச் செய்யுங்கள். மணியம் பஞ்சாயத்துக்கு அழைக்கிறார் உறுப்பினர்களை என்பதாக” என்று இறைந்து கூறினார். பாவம்! அம்பலத்தாடியின் பாடு உண்மையில் அம்பலத்தில் ஆடும்படியாகி விட்டது. பஞ்சாயத்து அடுத்த அரை நாழிகையில் கூடி சாவடி சிறையில் அறுபது நாழிகை வைத்திருப்பதென்றும் மன்னரிடம் போய் இதற்குள் அறிவிப்புச் செய்து விடுவதென்றும் பிறகு அவர் தீர்ப்புப்படி நடப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அம்பலத்தாடி மீண்டும் ஊர், உலகம், கடவுள், மக்கள் எல்லாரையும் திட்டித் தீர்த்தான். ஆயினும் மதியம் நகர்ந்து மாலை வந்ததும் உணவு கொண்டு வந்தவன் மண்டையில் அடித்துப் போட்டுவிட்டு இருட்டில் தப்பிச் சென்று விட்டான். கிராமக் கொட்டடிதானே அது. ஒரே ஒரு காவலன். அவனே உணவு கொண்டு வந்தவன். நகரத்தில் ஏகப்பட்ட அமர்க்களம். புதுமணத் தம்பதிகளின் ஊர்வலம்... அரண்மனை வாயிலில் தம்பதிகள் பணிந்து நின்று வணங்கியதை சக்கரவர்த்திகளே சிரக் கம்பம் செய்து ஏற்றதைக் கண்டு வயிறு எரிந்து போனான். பாவம்! வேறு என்ன செய்ய முடியும். பதுங்கிப் பதுங்கிப் பார்த்துப் பொருமினான். பிறகு அவனுடைய குயுக்தி மூளை சுறுசுறுப்படைந்து விட்டது. நடந்தது நடந்துவிட்டது. எனினும் அடுத்தபடி அவன் அவளை அனுபவிக்காதபடி செய்திட வேண்டும். நகர மையத்தில் நடு மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளை வரவேற்கவென்று அன்னத்தம்மாள் சாவடியின் அத்தனை மக்களும் குழுமியிருந்தனர். பெரும்பாலும் தெய்வத் தொண்டு புரியும் திருச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்கள்தான். ஆனால் தங்களிலே ஒருத்தியாக வளர்ந்த மல்லிகை தெய்வத் தொண்டுக்குப் பதிலாக ஒரு கணவனை மணந்து அவனுக்குத் தொண்டு செய்யத் தீர்மானித்ததை மிகவும் உவப்புடன் வரவேற்றனர். இது ஒரு நல்ல மாறுதல் என்றே கருதினர். எனவே எல்லோருமாகக் கூடி வந்து அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்திச் சிறப்பித்தனர். இதைக் கண்டும் வயிறு எரிந்தான் பதுங்கிப் பதுங்கிச் சென்ற பதிதன். மெய்யுதவிப் படையினர் இருவர் அம்மண்டபத்தருகில் வந்ததும் அவன் நடுங்க ஆரம்பித்தான். அவர்களில் ஒருவன் “கிராமச் சாவடியிலிருந்து தப்பியவனை இன்னும் ஒன்றரை நாழிகையில் கொண்டு சேர்த்திட வேண்டும் என்று உத்திரவாகியிருக்கிறதே. இந்த மாபெருங்கூட்டத்தில் அவனை எங்கேயென்று கண்டு பிடிப்பது?” என்று அங்கலாய்த்தது இவன் காதில் விழுந்ததும் ‘ஐயையோ! தன்னைத்தான் தேடுகிறார்கள், அடக்கடவுளே!’ என்று எண்ணித் தவித்து விட்டான். எப்படியாவது தப்பிவிட வேண்டும். “நீ எப்பவுமே இப்படித்தான். அம்பலத்தாடிக்கு இந்தப் பெண்ணின் மீது ஒரு கண் என்று பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதுமே நான் முடிவு செய்துவிட்டேன். அவன் இங்கே எங்கேயோதான் இருப்பான். கள்ளும் காரிகையும் ஒரு வெறியன் நினைவில் புகுந்தால் பிறகு அவன் அவற்றைத்தான் சுற்றுவான். எனவே அஞ்சாமல் வா. ஆளைப் பிடித்துவிடலாம்.” “ஐயோ கடவுளே!” என்று முணுமுணுத்தான் அம்பலவாணன். “சரி, சரி, நாம் இங்கு பேசிக் காலமோட்டும் ஒவ்வொரு நொடியும் வீணாகுகிறது. நீ அந்தப்புறம் வா... நான் இப்படி...” “தேவையில்லை முத்தா. இதோ இருக்கிறான்” என்று எங்கோ இருந்து வந்த ஒரு மெய்யுதவி அம்பலத்தாடி எதிரில் போய் நின்றதும் அவன் “ஐயோ!” என்று எப்படிக் கூவாமலிருக்க முடியும்...? லபக்கென்று பிடித்துக் கொண்டார்கள். அடுத்த சில நொடிகளில் அம்பலத்தாடியுடன் அவர்கள் மெய்யுதவிப் படைத்தலைவரான இளவரசன் எதிரில் போய் நின்றதும் அவன் “ஏன் உன் புத்தி இப்படிப் பேதலித்து விட்டது அம்பலத்தாடி?” என்று ஆத்திரத்துக்குப் பதில் அனுதாபமாகாவே கேட்டதும் தவிப்புக்குப் பதில் குரோதமே எழுந்தது அம்பலவாணனிடம். “என்னை ஒரு குற்றவாளியாக்கிக் கொண்டு வந்திருக்கும் போது நான் உண்மையை விளக்க வாய்ப்புண்டா?” என்று கேட்டான். இளவரசன் சிரித்தான். பிறகு “நல்லது. சக்கரவர்த்திகளே உன்னைத் தம்மிடம் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார். நீ அங்கு போய் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்” என்று உதறி விட்டான். “ஏ! அம்பலத்தாடி, காளி கோயிலில் தூண் மறைவிலிருந்து நானும் அன்னத்தம்மையும் உரையாடியதை நீ உற்றுக் கேட்ட போதே நான் உன்னை வெட்டிப் போட்டிருப்பேன். நான் அறியவில்லை நீ மறைந்திருப்பதை என்று தானே நினைத்திருந்தாய்” என்று அவனிடம் மாமன்னர் கேட்டதும் அவன் வாய் திறக்கவில்லை. அப்படியானால் மன்னர் ஏன் இது காறும் அதைச் செய்யவில்லை? இப்படிப்பட்ட குற்றங்களில் விட்டுக் கொடுக்கும் பழக்கமே இல்லையே அவருக்கு... “நீ அந்தப் பெண்ணிடம் ஆசை கொண்டது தவறா இல்லையா என்ற பிரச்னை வேறு. ஆனால் நீ அவளிடம் அத்துமீறி நடந்துவிடும் அளவுக்கு ஆசையை வெறியாகக் கொள்ளாதிருந்தற்காக நான் தொலையட்டும் இத்துடன் என்று கவனிக்காத மாதிரி இருந்து விட்டேன். ஆனால், இப்போது வெறியனாக மாறிவிட்டாய். ஒரு மணமான பெண்ணைச் சுற்றுகிறாய், பதுங்கிப் பதுங்கி வேறு ஏதோ கெட்ட எண்ணத்துடன். இதற்கு மன்னிப்பில்லை. எனினும் நீ இதுவரை நல்ல படைத்தளபதியாகவே பணியாற்றியிருக்கிறாய்... ஆகவே உன்னை இந்தக் குற்றத்துக்காக உள்ள கொடுந்தண்டனைக்குப் பதிலாக உடன் நாடு கடத்தும்படி உத்திரவிடுகிறேன்” என்று தீர்ப்பளித்தார். அம்பலத்தாடி அடுத்த நொடியே அப்புறப்படுத்தப்பட்டு நாலு காவலர்களுக் கிடையே கைதியாக மாறிக் கோடிக்கரை கொண்டு செல்லப்பட்டு படகு ஒன்றில் ஏற்றப்பட்டான். ஆனால் தன் எதிரிலிருந்த காவலர்கள் அவனை அப்புறப்படுத்திய போது மாமன்னர் ‘பாவம். நல்ல வீரன். பெண்ணாசை காரணமாகத் தன் நிலை இழந்துவிட்டான். வீரம் மட்டும் இருந்து என்ன பயன்? விவேகமும் சிறிதாவது இருந்தால்தானே... தனக்கு அவள் கிட்டவில்லை என்று உறுதிப்பட்டதும் புத்திசாலித்தனமாக ஒதுங்கியிருந்தால்... இன்று அவன் நிலை இவ்வாறு ஆகியிருக்காது’ இராஜேந்திர சோழன் இப்படி நினைத்ததும் சட்டென ஒரு வெட்டுப் போலச் சில காலத்துக்கு முன்னர் தான் கஜினி முகமதிடம் இதே நினைவை வார்த்தைகளாக மாற்றி “வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும்” என்று கூறியது மீண்டும் நினைவுக்கு வந்த போது மன்னர் பெருமூச்சு விடாமலிருப்பது எப்படி? அழகி மல்லிகையும் சிற்பி சிலாயன்னனும் கெடு நாள் முடியும் நாள் நெருங்கிவிட்டது என்று தெரிந்தது முதல் பட்ட அவதியின் வேதனையை விளக்குவதென்பது சாத்தியமில்லை. ஆயினும் இவர்கள் பிரிவினை என்னும் அதிர்ச்சியை நினைத்துப் படும் அவதியைக் காட்டிலும், தனக்கு மல்லிகை கிடைக்காமல் போய்விட்டாளே என்று அம்பலவாணன் பட்ட அவதிதான் மிக மிக விபரீதமானது. அதுமட்டுமா? தான் நாடு கடத்தப்பட்டாலும் இதனை முன்னிட்டுத்தானே என்று தவித்தவன் கோடிக்கரையிலிருந்து கடலில் தள்ளப்பட்ட நொடியிலிருந்து தனது அவதியை ஆத்திரமாக வளர்த்துக் கொண்டு மல்லிகை தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வேதனையை வஞ்சந்தீர்க்கும் வெறியாக மாற்றிக் கொண்டுவிட்டான். சோழருக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? மல்லிகையை எனக்கே மணம் முடித்து வைப்பதென்று அன்னத்தம்மாள் முன்பு உறுதியளித்தது அரசருக்கு தெரியாமலா இருக்கும்? திடுதிப்பென்று எவனோ ஒருவன் அவன் இளவரசனின் நண்பனாகத்தான் இருக்கட்டுமே, ரொம்பப் பெரிய சிற்பியின் மகனாக இருக்கட்டுமே, ஏற்கனவே செய்த உறுதியை மீறுவதோ விட்டுக் கொடுப்பதோ இவ்வளவு பெரிய மன்னனுக்கு முறையாகுமா? நாட்டிலே செங்கோலாட்சி நடத்துவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இவர்கள் ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு மட்டும் அதை இல்லை என்று நிரூபித்துள்ளார்கள் என்றால்... ஏன் அரசரோ இளவரசனோ நாளிது வரை மல்லிகைக்கு நான் ஒரு ஊறும் விளைக்கவில்லை, அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டதுமில்லை என்று அறிந்திருந்தும் இம்மாதிரி ஒரு கொடுந்தண்டனையை விதிப்பது முறையல்ல என்று ஏன் சிந்திக்கவில்லை? மாறாக மல்லிகையை நான் ஏதோ செய்திடுவேன் என்று அச்சப்பட்டு என்னை அதே காரணக்தைக் காட்டி நாடு கடத்தியிருக்கிறார்கள். அவ்வளவு பெரியவர்களே நெறிமுறை தவறி நடந்திருக்கும் போது நான் மட்டும் நல்லபடி யோக்கியமாய் நடந்ததற்குக் கிடைத்த பலன் இதுதான் என்றால் இனி மாறாக நடப்பதே முறை என்றல்லவா அவர்கள் தீர்ப்பு... வலியுறுத்துகிறது. கடலில் கட்டை மிதந்ததே தவிர அலைகள் அடித்த பக்கம் நகர்ந்து நகர்ந்து இப்படியும் அப்படியும் ஆடவிட்டுத் தன் மனம் போக்கிலே அதுவும் போகட்டும் என்று வாளாவிருந்தான். எந்த இடம் போவது என்ற முடிவு, தான் போவது அவசியம் என்று அவன் விரும்பினால்தானே அது சாத்தியம். கோடிக்கரைப் பக்கமே கடலில் சுற்றி சுழன்று கொண்ருந்தது. நேரம்தான் ஓடியதேயன்றி அவன் மிதவை நகரவில்லை. மாலை நெருங்கிவிட்டது. சூரியன் மறையும் நேரம் தாழம் புதர்கள் அடர்ந்த கரையோரத்தில் நாலுபேர் தென்படுவதைக் கண்டவன், தான் மீண்டும் உள்ளே நுழைகிறேனா என்று அறிய ஆட்களை அனுப்பியுள்ளான் என்று நினைத்துப் பற்களை நறநறவென்று கடித்தான். ஆனால் அந்த நால்வரும் கைகளை அசைத்த முறை தன்னைத் திரும்பு என்று கூறுவதற்கான சைகை என்ற ஊக்கமூட்டுவதாகும் என்று ஊகித்தவனாய் யாராயிருக்கும் இவர்கள் என்று தயக்கத்துடன் யோசித்தாலும், கடலைக் கடப்பதில்லை... உள்நாட்டுக்குத் திரும்புவதே தன் வஞ்சந்தீர்க்கும் நோக்கத்துக்கு வாய்ப்பளிக்கும் என்ற நோக்கத்தை விடவில்லை. நால்வரும் இப்போது தெளிவாகத் தெரிந்தனர். அதோ அவர்களுக்கு இடையில் நிற்பவர் சோழகர் மாதிரியல்லவா... அடேடே அவர்தான். அம்பலத்தாடி முகம் மலர்ந்தது. சமய சஞ்சீவி மாதிரி சரியான சமயத்தில் வந்ததுவும் சதுரர் எப்பவுமே நம்ம சோழகர்தான். மிதவை இப்போது கரையை நாடித் திரும்பி நகர்ந்தது. “எதிர்பார்த்தேன் உங்களை...” என்றான் கட்டையிலிருந்து இறங்கிய அதே வேகத்தில். “அப்படியா? நீ எனக்கு இம்மாதிரி தண்டனைக்கு உட்படப் போகிறேன் என்று முதலிலேயே சொல்லித் தொலைந்திருந்தால் நான் உனக்கு இந்த முப்பது நாழிகை வேதனையை ஏற்படாது செய்திருப்பேன்...” என்று அனுதாபித்தார் சோழகர். “நான் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்பதற்கு பதில் நீங்கள் இந்தப் பேருதவி செய்வதை நான் என்றும் மறக்கவே மாட்டேன். என் வேதனையெல்லாம் இப்போது மறந்துவிட்டது. ஆனால் ஒன்று மட்டும் ஒளியாது கூறிவிடுகிறேன். என்னை எந்த நொடியில் முறையற்ற தண்டனைக்குள்ளாக்கினாரோ சோழர் அந்த நொடியிலிருந்தே நான் வஞ்சந்தீர்க்கும் பழிகாரனாகி விட்டேன். நேற்று வரை நான் சோழர் உப்பைத் தின்றவன். அவர்களுக்கு ஒரு கெடுதியும் செய்யாதவன். இன்று அவர்கள் எனக்கு அநியாய தண்டனை வழங்கி விட்டார்கள். இதற்குப் பிறகும் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவனில்லை. எனவே நீங்கள் என் மீது இரக்கப்பட்டு செய்த உதவிக்கு நான் மனப்பூர்வ நன்றியுடையவனானாலும், நீங்கள் சோழரின் பங்காளி என்ற உறவு முறையில் இருப்பதால் உங்களிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. தவிர என்னுடைய இந்தப் பழிதீர்க்கும் மனப்பான்மை உங்களுக்குச் சோழரின் உறவினர் என்ற முறையில் உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் நீங்கள் என் நலத்தில் கருத்துள்ள நண்பர் ஆதலால் உங்களிடம் சொல்லாமல் மறைத்திட விரும்பவில்லை.” சோழகர் புன்னகைத்தார். ஆனால் இந்தப் புன்னகை புராணகாலச் சகுனியின் புன்னகையைத் தோற்கடிப்பதாயிருந்தது. “அம்பலத்தாடி, நான் இங்கிருந்து உன்னை மீட்டது விளையாட்டாக நடத்திய செயல் அல்ல. சோழரின் மனதில் இது எப்போர்க்கொத்த கொந்தளிப்பையுண்டாக்கும் என்பதையும் ஊகிக்க தேவையில்லை. ஆனால் நான் சோழர் நலனில் கருத்துள்ளவனா இல்லையா என்பதை நீ அறிய இப்போது இந்த ஒரு விஷயமே போதும் நான் உனக்கு உதவியதற்கு. ஆனால் நீ ஏதோ பழி வஞ்சம் என்றெல்லாம் சொன்னாயே, அதெல்லாம் நிரம்பவும் நிதானித்துச் செய்ய வேண்டிய விஷயங்கள்.” “இல்லை சோழகரே, நான் எந்த வகையிலும் நியாமில்லாத முறையில் தண்டிக்கப்பட்டவன்.” “புரிகிறது. இதோ இருக்கிறார்களே இவர்களும் உன்னைப் போல இல்லாவிட்டாலும் வேறு வகையில் நியாயமற்ற முறையில்தான் சோழனால் தண்டிக்க பெற்றவர்கள்.” “ஓ...! அப்படியானால் வலுவான சோழர்களுக்கு எதிராகத் தம்மால் எதுவும் செய்ய இயலாது என்று அஞ்சி அடங்கிக் கிடக்கிறார்கள் போலும்” என்று சற்றே ஏளனமாகத் கூறியதும், “கேலிப் பேச்சு ஆபத்து நண்பரே, உதவி செய்ய அழைத்தார் சோழகர். வந்தோம். உதவினோம். மற்றபடி நீங்கள் எங்களைப் பற்றி முறையற்ற கேலிப் பேச்சில் ஈடுபட நாங்கள் அனுமதிப்பதிற்கில்லை” என்று அவர்களில் ஒருவன் எச்சரித்ததும் வெகுண்ட அம்பலவாணன், சோழகரை நோக்கி, “நான் யார் என்பது இந்த நண்பர்களுக்குத் தெரியுமா?” என்று அதே கேலிக்குரலில் ஏகத்தாளமாகக் கேட்டதும் சோழகர், “அம்பலத்தாடி, ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது உன்னுடைய விஷயத்தில் சரியாகி விட்டது. இவர்கள் சிங்கள இளவரசியின் மெய்யுதவிகள். நாகையிலிருந்து இளவரசியைத் தலைநகருக்கு கொணர்ந்தவர்கள். யாரோ இவர்களுக்குத் தப்புவழி காண்பித்து இவர்களும் உண்மையறியாமல் அவர்கள் வார்த்தையை நம்பி அவ்வழி செல்ல... பாவம்... இளவரசியை எதிர்கொண்டு அழைக்கப் பட்டத்திளவரசன் முறையான பாதையில் வந்து ஏமாந்த காரணத்தால் ஏற்பட்ட கோபம் இவர்கள் மீது பாய, ஐயோ பாவம்... இவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? கைகால்களைக் கட்டி கடலில் தள்ளுங்கள் என்று...” சோழகர் சொல்லி முடிக்கவில்லை- “எங்களுக்கு தப்ப வழி காட்டிய தப்பிலி எங்களிடம் ஏகத்தாளமாகப் பேசும் நீங்களாக இருந்தாலும்...” “உங்களுக்கு உதவி செய்ய ஏன் வந்தோம் தெரியுமா?” என்று இன்னொருவன் கேட்க “எங்களுக்கு அபயமளித்த சோழகர் மீது எங்களுக்குள்ள மதிப்பாலும் அவருக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனாலும்” என்று அடுத்தவன் சொல்லி ஒரு கனைப்பு சிரிப்பு சிரித்ததும் அம்பலத்தாடி உண்மையிலேயே ஆடிப்போய்விட்டான். கடலில் மூழ்கி சாகும் கொடுமைக்குள்ளானவர்களைத் தப்புவித்துத் தன்னவர்களாக்கி அவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும் அளித்துத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகச் செய்த சோழகர் அசாதாரணமானவர் மட்டுமமில்லை, மிக எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவர் என்பதை புரிந்து கொண்ட அவன், “சோழகரே, என் பேச்சினால் இவர்கள் மனம் புண்பட்டிருக்குமானால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கோருகிறேன். நிச்சயமாக நான் இவர்களை...” “அம்பலத்தாடி, அவசரம் ஆத்திரம் இரண்டுமே காரியக்காரனின் விரோதிகள். நீ அடிக்கடி இந்த விரோதிகளிடம் சிக்கி விடுகிறாய். இதுவே உன்னுடைய முதல் தவறு. இரண்டாவது யார் நண்பர், யார் எதிரி என்று புரிந்து கொள்ள இயலாமல் நிதானமிழந்து விடுகிறாய். மூன்றாவதாக நான் மலையில் முட்டி மண்டையை உடைத்துக் கொள்ளவே செய்வேன் என்று வன்மம் பேசுகிறாய். இவர்கள் உன்னைவிடப் பெரிய தவறு செய்தவர்களும் இல்லை. ஆனால் இவர்கள் சோழர்களிடம் நேரிடையாக ‘இதோ மோதுகிறோம் பார்’ என்று குதிக்கவில்லை புரிகிறதா? புத்திசாலிக்கழகு பொறுமை காட்டுதல். பொறுத்தவன்தான் கருவறுக்க முடியும். நீ பதறுகிறாய். எனவே உன் வஞ்சம் தீர்க்கும் பேச்சு, பழி தீர்க்கும் சூளுரை எல்லாம் துகள் துகளாகச் சிதறிப்போகும் பயனற்ற பேச்சுக்கள்.” “சோழர் செய்தது மட்டும் முறையானதுதானா?” “இல்லை என்று நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நீ செய்தது அக்கிரமம் என்று நாம் அவன் மீது உடனே பாய்ந்துவிட முடியுமா?” “அதற்காக நாம் ஓடி ஒளிந்து அடங்கிக் கிடப்பதா?” “தேவையில்லை. இடம், காலம், சந்தர்ப்பம் அனைத்தையும் பொறுத்துச் செயல்படுபவன்தான் எதையும் சாதிக்க முடியும். தவிர ஒருவனைச் சரியான எதிரியாக்கச் சரியான காரணம் வேண்டும்.” “அப்படியானால்...” “அவசரப்படாதே அம்பலத்தாடி. நீ சோழர் மீது சாட்டும் குற்றம் பற்றியதல்ல விஷயம். நீ அவருக்கு ஈடான எதிரிதானா என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம். இதோ இந்த நண்பர்களுக்கு நீ தப்பு வழியைக் காட்டி குற்றவாளிகளாக காரணமாகி விட்டாய். எனவே இவர்கள் உன் மீது சினம் கொள்ளுவதில் தவறில்லை. நேரடியாக போவதும் தவறில்லை. ஏனென்றால் இருவரும் நாடுள்ளவர்கள். ஆனால் இவர்கள் என் காரணமாக உன்னுடன் மோதவில்லை. அவர் நிலை வேறு இவர்கள் நிலை வேறு. ஈடில்லை. எனவே நேர் மோதல் பேச்சையெல்லாம் தவிர்த்துவிட்டு புத்தியைச் சிறிதே உபயோகித்து அதையே கத்தியாகப் பயன்படுத்தக் காலம் கருதிக் காத்திருக்கிறார்கள் இவர்கள். எனவே அவசரப்பட்டால் காரியம் சிதறிவிடும். பிறகு நாசம்தான். புரிதிறதா?” என்று நயமாகவும் அதே சமயம் வெகுவாக இடித்துக் காட்டும் பான்மையிலும் அவர் கூறிய போது யாரும் அம்பலவாணன் உள்ளிட்டு வாய் திறக்கவில்லை. ஆனால் உள்ளக் குமுறல் தாங்காது மீண்டும், “அப்படியானால் என்னை என்னதான் செய்யச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டதும் சோழகர் “நாம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடம் போன பிறகு இது பற்றிப் பேசுவோம். முதலில் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு தேவை” என்று அவர் சொன்னதும் இனி இந்த ஆசாமி நம் நிலை ஆதரிக்கும்படி வற்புறுத்துவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த அம்பலத்தாடி, அவர்களுடன் புறப்பட்டு விட்டான். தற்போது இவர்களை தவிர அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர் வேறு எவருண்டு? என்றாலும் மறுநாள் அம்பலத்தாடி முற்றிலும் மாறிவிட்டான். சோழகரைத் தனது கடவுளாகக் கூட ஏற்றிடக் தயாராகி விட்டான் அவன். ஏனென்றால் சோழரின் அன்றைய மகோன்னத நிலை, ஆட்சிச் சிறப்பு, பெருமை கண்டு அவருக்குத்தான் எவ்வளவு ஆற்றாமையும் பொறாமையும் இருந்ததென்பதை அவனால் அன்றுதான் நன்கறிய முடிந்தது. “எங்கள் குலம் மனுநீதி சோழர் பரம்பரையைச் சேர்ந்தது. ஆனால் எங்கோ கிடந்த விஜயாலயன் வழி வந்த ஒரு கூட்டம், இங்கே வந்து நாடாளும் உரிமை பெற்று விட்டார்கள் என்றால் அது முறையாகி விடுமா? ஒண்ட வந்த கூட்டம், எங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். எனவே இன்று நேற்றல்ல, எத்தனையோ ஆண்டுகளாக எங்கள் மனம் குமுறிக் குமுறி இனியும் பொறுப்பதற்கில்லை என்ற ஒரு நிலைமை அடைந்து விட்டது. இன்று மிகப் பெரும் ஆலமரம் போல வளர்ந்துவிட்ட சோதனையை ஒரே நாளில் ஒரே மூச்சில் ஒரே அடியில் வீழ்த்துவது என்பது ஒருக்காலும் சாத்தியமேயில்லை. மிகப் பிரும்மாண்டமான கப்பலில் ஒரு சின்ன ஓட்டை எங்காவது உண்டாகுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படிக் கிடைத்த மாத்திரத்தில் அதைப் பெரிதாக்கி குபுகுபுவென்று கப்பலுக்குள் நீர் பெருகச் செய்து அதை ஒரேயடியாக மூழ்கடிப்பதுதான் என் நோக்கம். கடந்த பல ஆண்டுகளாகவே நான் இவ்வகையில்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சோழர் மீது ஆத்திரம், க்ஷாத்திரம், பகையெல்லாம் கொண்ட ஒரு கூட்டம் இன்று இங்கு என் தலைமையில் ஊடுருவி செயல்படுகிறது நாலா திசையிலும். இந்த இராஜேந்திரன் வாழ்வு... இன்னும் எவ்வளவு காலம்... இவனுடைய வாரிசுகள் எல்லாம் சக்தியற்ற பஞ்சைகள். குறிப்பாக மூத்த இளவரசன். அந்தப் பட்டத்துக்குரியவன் முதுகெலும்பற்றவன். தவிர இவன் அப்பன் ஒரு கோயிலைக் கட்டி மண்டையைப் போட்டான். இவனுக்கும் அப்படித்தான் லபித்திருக்கிறது போலும். அவனாவது கோயிலை முழுதாகக் கட்டினான். இவனுக்கு அது முழுசாக முடியும் வரை ஆயுள் இருக்குமாவென்பதே எனக்குச் சந்தேகம்.” “ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்?” “பொறுமையாகக் கேள். பிறகு சொல்லுகிறேன். ஆரூடம் கூறுவதென்றால் அதற்குக்கூட ஒரு ராஜதந்திரம் உண்டு. எனவே அவசரப்படாதே.” “என் கையைவிட்டு நழுவிவிட்டவளை நீங்கள் காட்டும் இந்தப் பொறுமை கொண்டு வந்திடுமா?” இது அம்பலத்தாடியின் கேள்வி. “வராது. வந்தாலும் தேவையில்லை” என்று கூறியதும் சினமுற்ற அவன், “சோழகரே, இன்னொருதரம் இப்படிப் பேசினால்...” “ஏன் பேசினால் என்ன? நீ பிறன் மனைவியை பற்றிப் பேசுவது தவறென்றால், அவளைக் கெட்ட எண்ணத்துடன்...” என்று கேலிக் குரலில் ஒரு தாக்குத் தாக்கியதும் முரட்டு அம்பலத்தாடி அவர் மீதே பக்கெனப் பாய்ந்து விட்டான். ஆனால் அடுத்த நொடியே அவன் கீழே புரண்டுவிழ நேரிட்டது. அம்பலத்தாடிக்குத் தாங்க முடியாத கோபம் உண்டாகி “என் மீது கை வைக்கும் தைரியமும் உங்களுக்கு உண்டாகிவிட்டதா?” என்று கேட்டபடி தன் இடை வாளை எடுக்க முயன்றவன் அது அங்கே இல்லாதது புரிந்ததும் திடுக்கிட்டான். சோழகர் ஒருமுறை வாய்விட்டுச் சிரித்தார். பிறகு “நண்பர்களே, அம்பலத்தாடி தன் முன்கோபத்தால் தன்னையே கெடுத்துக் கொள்ளும் தியாக புருஷன். எனவே நாம் இவனுக்குச் செய்துள்ள பேருதவியை உடனேயே மறந்துவிட்டு மரணத்திலிருந்து தப்புவித்த சமயோசித உதவியை மறந்து, பொறுமையாகச் சிந்திக்கவும் மறுத்துத் தன்னையே அழித்துக் கொள்ள விரும்பும் இந்த ஆசாமியைத் திரும்பவும் நாம் முன் போலக் கடலில் தள்ளி...” “இதோ...” என்று அந்த நால்வரும் அம்பலத்தாடியின் மீது பாய்ந்து மீண்டும் கயிறுகளால் கட்டத் துவங்கியதும்- “சோழகரே, இது முறைதானா? நீரும் நானும் சோழர்களின்...” என்று ஏதோ சொல்லிப் புலம்பத் துவங்கியவனை, “மூடு உன் வாயை அம்பலத்தாடி... நீ என்னுடைய பரம வைரிகளான இன்றைய சோழரின் ஆள். எங்கள் பரம்பரையின் எங்கள் நிழலில் கூட நீ ஒதுங்கியவனில்லை. ஒதுங்கவும் உரிமையில்லை உனக்கு. தவிர இன்று ஒரே நொடியில் நன்றி கொன்ற பாதகன். உன்னை இனியும் நம்பினால்..” என்று ஆத்திரமே உருவாக மாறி அவர் கத்தியதும்... “ஐயோ சோழகரே, நான்... நான்...” என்று திணறியவனை விழித்துப் பார்த்த அவர், “நீ நான் நான்... என்று அகம்பாவமாக நினைக்கும் நீ உன்னையே அழித்துக் கொள்ள வழி செய்து கொண்டவன். ஐயோ பாவம் என்று உனக்குதவ நான் புகாரிலிருந்து ஓடோடி வந்ததே தவறு என்பதை, நீயே உன் செய்கை மூலம் காட்டிவிட்டாய். எனவே இனி என்னிடமிருந்து நீ கருணையை எதிர்பார்க்காதே.” “இல்லை, இல்லை... நான் உங்களுக்கு வெகுவாகக் கடமைப்படடவன். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஏமாற்றத்துக்குள்ளாகினவன், வஞ்சிக்கப்பட்டவன். இதெல்லாம் தெரியும் உங்களுக்கு. நான் பேரிழப்பால்...” என்று அவன் மேலும் புலம்புவதற்குள் சோழகர், “என் இழப்பைவிடவா உன் இழப்பு பெரிது. என் உரிமையை, இந்த நாட்டையே இழந்து தவிக்கும் எனக்கு உன்னுடைய இழப்பு ஒரு தீரணம். அது ஒரு பெரிய விஷயமா? ஐயோ பாவம், வஞ்சிக்கப்பட்டானே; தொலைகிறான் என்று உனக்கு ஏதோ நமக்கும் உதவியாக இருப்பான், நாளை பழிவாங்க இவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமென்று ஓடோடி வந்தேன் பார்.. எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். நல்லது நண்பர்களே, நடத்துங்கள் உங்கள்...” “ஐயோ சோழகரே... நான் அசட்டுத்தனமாக...” “இல்லை அம்பலத்தாடி... நீ அயலான் மனைவியை விரும்பும் அளவுக்கு நெறிகெட்டவன். எனவே என் விஷயத்தில் நன்றி கொன்றவன் ஆனதில் விந்தையில்லை. உனக்கு மேலும் இரக்கங் காட்டுதல் தவறு... மிகப் பெருந்தவறு... நீ ஒரு சுயநலப் பச்சோந்தி.” “சோழகரே, நீங்களே இப்படிப் பேசலாமா? என்னை நம்பிக்கை மோசம் செய்தவளை...” “அவளாக உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுகிறேன் என்று எப்பவாவது சொன்னதுண்டா?” “பெரியவர்கள் இசைந்திருக்கிறார்களே...” “அவள் இசையவில்லை என்பது இன்று அவளால் வேறு ஒருவனை விரும்பி மணந்திருப்பதிலிருந்து புரியவில்லையா?” என்று சோழகர் கேட்டதும் அம்பலத்தாடிக்கு இந்த மனுஷன் எந்தப் பக்கம்தான் பேசுகிறார் என்று புரியாமல் திண்டாடினான். இனி வேறு வழியே இல்லை. இவரிடமிருந்து தப்ப முடியாது. தப்பினாலும் சோழர்கள் கையில் சிக்க வேண்டியதுதான். எனவே வேறு வழியில்லை. இவருடைய அடிமையாக, இவர் எப்படி இயக்குகிறாரோ அப்படியெல்லாம் இயங்கித்தான் நம் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவன், “சோழகரே, எனக்கு இனி வேறு வழி எதுவும் இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும் சரி, எது செய்தாலும் சரி. அதற்கு நான் மனப்பூர்வமாக இசைவதைத் தவிர வேறு வழி இல்லை. பிறகு உங்கள் விருப்பம்” என்று அனைத்தும் இழந்த ஆசாபங்கத்துடன் உறுதி சொன்னதும் சோழகர், “இந்த ஆணையிலிருந்து நீ இம்மியாவது பிறழ்ந்தால் அப்புறம் நீ இருக்குமிடம் உனக்கே தெரியாது. தவிர நான் உன்னை ஏவும் எந்த வேலையையும் நீ செய்தாக வேண்டும். மனச்சாட்சி, மண்ணாங்கட்டி என்று மாறிப் பேசினால் இந்த நாலு நண்பர்களும் உன்னை கட்டி... சரி, இனியும் விளக்கம் தேவையில்லை.. இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவர் தம் குதிரை அருகே சென்றுவிட்டார். அம்பலவாணன் உள்ளூரக் குமைந்து குமுறினான். போயும் போயும் இந்தச் சோழகனிடம் நாம் இவ்வாறு சிக்கித் தவித்து செல்லாக் காசாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என்று குமைந்த அவன் மனம் அடுத்த நொடியே எனக்கும் ஒரு காலம் வராமல் போகாது என்று வெகுவாகக் குமுறவும் செய்தது. கால காலச் சோழகர் சோழ நாட்டின் ஆட்சியுரிமையை விஜயாலயன் அநியாயமாக ஆக்ரமித்துக் கொண்டவன் என்றும், நாளிதுவரை ஒருவர் பின் ஒருவராக அவனுடைய வாரிசுகள் நாடாளுவதும் அக்கிரமம் என்றும் இன்றல்ல நேற்றல்ல, கடந்த ஐம்பதாண்டுகளாகக் கருவி எப்படியாவது இவர்களை விரட்டித் தன்னவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும், இதுவே தன் லட்சியம், தலையாய குறியுடன் செயல்படுபவர். இப்படி அவர் கொண்டாடுவதற்கு ஒரு சிறு ஆதாரம் இல்லாமலும் இல்லை. சோழன் நல்லடிக்கோன் என்னும் முற்காலச் சோழரின் கடைசி அரசன் பெண் வயிற்றுப் பேரர் ஒருவர் இருந்தார். அவர் வேட்டரையர் பெண் ஒருத்தியை மணந்தவர். அவர் வழிப்பேரனே இந்தக் கால கால சோழகர். சோழ மகா சக்கரவர்த்திகளான கரிகால் பெருவளத்தாரின் நினைவில் இவரைக் கால காலனாக்கினான் அவன். ஆனால் வேட்டரையர் குலத்தார் விஜயாலயனின் ஆட்சியை நிலைநாட்ட உதவியதும் பிறகு தொடர்ந்து அவர் வமிசத்தாரையே ஆதரித்ததும் இந்தப் பங்காளிக் குலத்தார் செய்வதெதுவும் அறியாது ஒதுங்கிவிட்டனர். எனினும் அவ்வழி வந்த காலகாலர் ஆலகால விஷம் அருந்தியவராய் மாறிவிட்டேனா பார் என்று முழு வஞ்சத்துடன் இயங்கினார். சிதறிக் கிடந்த சில சுயநலமிகளும் இவர் கூடச் சேர்ந்தனர். இங்கு மட்டுமில்லை, அன்றைய சிங்களத்திலும் சோழ ஆட்சி உரிமை கொண்டாடிய சிலர் பதுங்கியிருந்தனர். எனவே இவருடன் அவர்களும் தொடர்பு கொண்டு ஐந்தாம் படை வேலையை நடத்திக் கொண்டிருந்தனர். இதெல்லாம் அம்பலத்தாடிக்குத் தெரியாததல்ல. ஆயினும் இந்தச் சின்ன ஆளால் மாபெரும் சோழ வல்லரசை ஒரு நாளும் அசைக்க முடியாது என்பதையும் நன்கு அறிந்திருந்தான். ஆயினும் சோழகரின் பகையுணர்வும் தந்திரயுக்தி புத்திசாலித்தனமும் தனக்கும் நிச்சயம் பயன்படும் என்று ஊகித்தே அவரை அவ்வப்போது நாடினான். இப்பொழுது அவன் அவருடைய அடிமையாகவே மாறிவிட்டான். சோழகர் அவனைத் தனியானதொரு இடத்துக்கு அழைத்துச் சென்று “அம்பலத்தாடி, இப்பொழுது மல்லிகை பிறன் மனைவியாகி விட்டாள். உனக்கு நன்றாகத் தெரியும் சோழ நாட்டில் பிறன் மனைவியை நாடுபவனுக்கு மரணதண்டனை என்பது. அதுவும் பலவாறான சித்திரவதைக்குள்ளாக்கிய பிறகே நிறைவேற்றப்படும். ஏற்கெனவே கூத்தாடிக் கூட்டம் உன் மீது சோழனிடம் ஏகப்பட்ட புகார்களைச் செய்துள்ளது. இது போதாதென்று இளவரசன் ஆதித்தன் உன் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். எனவே நீ நிச்சயமாக இறுதிவரை வெளிப்படாது பதுங்கியிருக்கவே வேண்டும். அவசரம், ஆத்திரம் இரண்டும் கொண்டு வெளிவந்தால் அவை உன்னை உடனடியாக மரண வாசலுக்குத் தள்ளிவிடும். ஆகவே நான் கூறும் வரை நீ பொறுத்திருப்பதுதான் உனக்கும் நல்லது” என்று சொன்னதும் அவன் வெகுவாகப் பதறி “லட்சியமா?” என்று கேட்டதும் அவர் சிரித்துவிட்டு “ஆமாம் அம்பலத்தாடி. நீ மல்லிகையை அதாவது பிறன் மனைவியானாலும் பரவாயில்லை. கவர்ந்திட வேண்டும் என்று நினைப்பது போல நானும் இந்த சோழனிடமிருந்து என் நாட்டுரிமையைக் கவரவே விரும்புகிறேன். உனக்கும் காரியம்தான் பெரிதேயன்றி அதற்கான செயல் முறைகளின் நியாயம் தேவையில்லை. எனக்கும்தான். என் யோசனைப்படி நீ செயல்பட்டால் அந்த மல்லிகையும் கிடைப்பாள். அதே சமயம் என் மூலம் உனக்கு ஒரு பெரும் பதவியும் கிடைக்கும். புரிகிறதா?” என்று கேட்டதும் அம்பலவாணன் திகைத்துக் குழம்பினான். ஏனெனில் சோழகருக்கு என்று இந்த நாட்டில் ஒரு சிறு கூட்டமும், சிங்களத்தில் ஒரு பெரும் கூட்டமும் கையாட்களாக இயங்குவதும் தெரியும். ஏன் மல்லிகையை கவர்ந்ததும் தானும் அந்தச் சிங்களத்துக்குப் போய்விடக் கூடாது. ஓ...! “புரிகிறது சோழகரே.” “நல்லது. இந்தத் தலைநகரில் நீ ஒருக்காலும் மல்லிகையைக் கவர முடியாது. ஏனென்றால் அவ்வளவு கட்டுக்காவல். எனவே என் ஆட்கள் அவள் எங்கெங்கு போகிறாள், வருகிறாள் என்பதையெல்லாம் துப்பறிந்து அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். தகுந்த தருணம் வந்ததும் நானே உன்னை அவளிடம்... புரிகிறதா?” அம்பலத்தாடி இப்போது வெகுவாக மகிழ்ச்சி கொண்டுவிட்டான். “நன்றாகப் புரிகிறது சோழகரே...” “எனவே பொறு மகனே பொறு” என்று சொல்லிவிட்டு அவர் முன்னே நடந்ததும் பின்னால் நன்றியுள்ள நாய் போலத் தொடர்ந்தான். சோழகர் ஒரு குள்ள நரி. எங்கே முடுக்கிவிட்டால் யந்திரம் இயங்கும் என்பதை அவர் மிக நன்றாகவே அறிந்தவரில்லையா? ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|