ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

25

     கங்கைகொண்ட சோழபுரம் என்று பின்னாளில் வரலாற்றுப் புகழ்பெற இருந்த நகரை உருவாக்கும் திட்டம் சோழன் இராஜேந்திரனின் மனதில் நீண்ட காலமாகவே உருவாகிக் கொண்டிருந்தது. ஆயினும் சோழ பரம்பரை தெய்வ பக்தியில் திளைத்த பரம்பரையாதலால் முதலில் இறைவன் இருக்கை, பிறகே மக்களின் நகரம் என்ற வழக்கத்தை அவனும் கையாண்டான். எனவே நாடெங்கிலும்மிருந்த சிற்பிகள், கல் தச்சர்கள், கைவினைஞர்கள், ஓவியர்கள், வரைபட வல்லுநர்கள் என்று பல்வேறு படைப்புத் தொழிலாளரும் வரவழைக்கப்பட்டனர். குமரி முதல் காஞ்சி வரையுள்ள சிற்பக்கலை வல்லுநர்களான பலரும் அழைக்கப்பட்டனர். இன்னமும் வெளிநாடுகளில் குறிப்பாக, சிங்கை, சிங்களம், காவகம். சீயம், சீனம், காம்போஜம் ஆகிய நாடுகளிலிருந்தவர்களும் கொணரப்பட்டனர். ஏறத்தாழ ஒரு ஐந்நூற்றுவர், அத்தனை பேரும் அருங்கலை வல்லுனர்கள், சோழ மாமன்னனுக்கு எதிரே திரண்டு விட்டனர். அவர்கள் யாவரும் தங்கள் வணக்கமுள்ள மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்ளும் சடங்கு முடிந்ததும் சோழ பரகேசரி, தனது நீண்ட காலத்துக் கனவை கூறினான்.

     ஏதோ திக்விஜய நோக்கில் வடநாடு சென்றதும், அங்கு மன்னர்கள் சிலர் எதிர்த்தாலும் பிறகு தோற்று இணைந்ததுடன் பலரும் தன்னுடைய ஆதரவாளர்களாக, அன்பர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக மாறிவிட்டதால் தனது வெற்றி நாட்டின் ஒற்றுமைக்கு ஐக்கியத் தலைமை கொண்ட மகாபாரதமாக மாறினால் அதுவே தனக்குத் திருப்தி தரும் என்றும், அங்கு வெற்றி பெற்ற பெருமைக்காக இங்கு ஒரு நகரமோ கோயிலோ அமைக்கவில்லையென்றும், இந்த ஆக்கப் பணி, தான் ஆண்டவனுக்காகவே செய்யும் திருப்பணி, தந்தை எவ்வழியோ அவ்வழியே தன் வழியென்றும், எனவே பிறர் யாரும் இதில் வேறு பொருள்களைக் கற்பனை செய்து ஏதேதோ கதைகளைக் கட்டிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான் பரகேசரியான இராஜேந்திர சோழன்.

     பிறகு ஆலய வடிவுக்கான ஆலோசனைகள் கேட்கப்பட்டன. வல்லுனர்கள் பல வழிமுறைகளை, உருவகைகளை, அமைப்புக்களைப் பற்றி விளக்கினர். இவற்றில் சத்திய சங்கர வேளார் மகனான சிலாயனனும் கலந்து கொண்டான். தந்தையின் மேற்பார்வையில் அவன் கற்றறிந்த அரிய நுணுக்க வேலைகளை மையமாகக் கொண்டு பல அற்புதமான யோசனைகளைக் கூறிய போது அத்தனை பேரும் ஆனந்தத்துடன் வரவேற்றனர். உறையூர் உத்தம வேளார் என்னும் முதுபெரும் சிற்பி சத்திய வேளாரைவிட பிராயத்தில் முதிர்ந்தவர், இளைஞனுடைய நுணுக்கத்திறன் விளக்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.

     கோயிலின் அமைப்பு வேலைகள் துவங்கும் நல்ல நாளும் குறிக்கப்பட்டது. இடமும் தேர்ந்தெடுக்க முதியவர்கள் அங்கு சென்றனர்.

     மன்னர் இளவரசன் ஆதித்தனிடம் தனித்துப் பேசிய போது “மகனே, நாளை மறுதினம் சிலாயனன் புறப்படத் தயாராகட்டும். முன்பு சொன்னதை மறந்திடாதே. எல்லோருக்கும் அதாவது ஆலயப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உரிய கட்டுதிட்டங்கள் இவனுக்கும் உண்டு என்பதில் மாறுதல் எதுவும் இல்லை என்பதையும் நினைவூட்டி எச்சரிக்கையாக அனுப்பு” என்றார்.

     “திருமணமாகிச் சில தினங்களே...” என்று இளவரசன் இழுத்ததும் “தெரியும். ஆனால் கடமை பொதுவானது. அவசியமானது முக்கியமானது என்பதில் நீயும் அவனை ஊக்குவித்து அனுப்பும் கடமை உண்டு. புரிகிறதா?” என்று கேட்டுவிட்டு பதில் எதிர்பாராமல் போய்விட்டார்.

     பாவம். இளவரசன் தனது நண்பனிடம் சென்ற போது அவன் தனது மாளிகையின் உத்தியானவனத்தில் அமர்ந்து அற்புதமாகப் பாட அதற்கேற்ப அவன் மனைவி மல்லிகை ஆனந்தமாக ஆடிக் கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைக் கண்டதும் ‘சே! இப்படிப்பட்ட இன்ப ஜோடிகளைப் பிரிப்பதா?’ என்ற கிலேசத்துடன் அன்று அரண்மனை திரும்பிவிட்டான். ஆனால் மறுநாள் கூட இம்மாதிரி இரக்கப்பட்டு கடமையை மறந்திட முடியுமா?

     தன் வீடு தேடி வந்த இளவரசனைக் கண்ட சிலாயனன் “இளவரசே! ஆள் அனுப்பினால் நான் ஓடோடி வந்திருப்பேனே. எதற்கு இந்தச் சிரமம் தங்களுக்கு. தந்தை அறிந்தால் இப்படி மரியாதையற்றவனாய் இருக்கலாமா என்று ஏசிவிடுவாரே” என்று பதறினான்.

     இளவரசனோ இலேசாகச் சிரித்து “ஆனால் உன் தந்தை எங்கேயோ இருக்கிறார். இங்கு திடீரென்று வரமாட்டார். எனவே அஞ்சாதே. ஆனால் நான் திடீரென்று வரவில்லை. குறிப்பிட்ட நாளில்தான் வந்தேன்” என்று பூடகமாகப் பேசியதும் சிற்பி மகன் அதிர்ந்துவிட்டான்.

     அறைக்கு அப்பால் நாணத்துடன் மறைவில் நின்று இவர்கள் உரையாடலைக் கவனித்த மல்லிகை திடுக்கிட்டுப் போனாள். ஆம். கெடு முடிய இன்னும் இரண்டே நாட்கள்தான்.

     “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இளவரசே?” என்ற அளவற்ற அச்சம், குழப்பம், கவலை கலந்த குரலில் கேட்டான்.

     இளவரசன் தன்னுடைய கொடுமையான கடமையைப் பற்றி கொண்ட கலக்கமும் எல்லையில்லாததாயிருந்தது.

     “சிலாயனா, நீ சிறந்த சிற்பக் கலைஞன். இந்தத் திறமையை உலகம் அறிய வேண்டும். உன்னை உலகம் புகழும் ஒரு சிற்பியாக உருவாக்க வேண்டிய பொறுப்பு எங்களைச் சேர்ந்தது. எனவே உன்னை கங்கைகொண்டான் கோயிலுக்குப் பணி செய்யும் பேறு பெற்ற சிற்பியாக அரசர் தெரிந்தெடுத்துள்ளார்” என்றான் நிதானமாக.

     “நான் பாக்கியசாலி...” என்று கூறியவன் பரபரப்புடன் “மல்லி, மல்லி... என்னை ஆலயப் பணிக்கு...” என்று சொல்லியபடி உள்ளே ஓடியவன் சோர்ந்து துவண்ட கொடியாக நிற்பவளைக் கண்டு திகைத்துவிட்டான்.

     “ஏன் மல்லி, என்னைப் பெருமைப்படுத்தி உலகப் புகழ்பெறச் செய்யும் உன்னத நோக்கம் கொண்டுள்ள சக்கரவர்த்திகளுக்கு நாம்... ஏன் மல்லி... எதற்கு இந்தக் கலக்கம்... மகிழ வேண்டிய தருணத்தில் மனவருத்தம் ஏன் மல்லி?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் அந்தச் சிற்பி மகன்.

     “இளவரசர் வந்த காரணத்தை முழுமையாகக் கூறி முடிக்கும் வரை பொறுமையாக இராமல் இங்கே என்னிடம் ஓடி வந்தால்...” என்று தன் நிலையை மாற்றிக் கொண்டு சிணுங்கினாள் அவள்.

     “பூ... இவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோவென்று அஞ்சிவிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியவன் “நமக்கு இந்தப் பெருமை கிடைப்பதில் உனக்கு மகிழ்ச்சிதானே?” என்று குழந்தை போலக் கேட்டான்.

     அவள் பெண் அல்லவா? எனவே அனுபவசாலியாக மாறினாள்.

     “அங்கே இளவரசர் தனித்திருக்க வைப்பதும் நமக்கு மரியாதையா?” என்றாள்.

     “ஓ! நீயும் என் அப்பா மாதிரிதான். ஆனால் இளவரசர் என் நண்பர்... வருந்தவோ கோபிக்கவோ மாட்டார். அப்படித்தானே?” என்று கேட்டுக் கொண்டே திரும்பினான் கூடத்துக்கு.

     இளவரசர் அங்கே கவலை முகத்துடன் அமர்ந்திருப்பது கண்டு திகைத்தான்.

     “இளவரசே, மன்னிக்க வேண்டும். நான் ஒரு முட்டாள். அப்பா அடிக்கடி சொல்லுகிற மாதிரி நான் எப்பவுமே முழு முட்டாள்தான். தங்களிடம் தகுதியோ அந்தஸ்தோ இல்லாமல் நட்பு என்று மதித்து மரியாதையாக நடத்தத் தவறிவிட்டதை மன்னித்திடுங்கள். எனக்கு இப்போதுதான் புரிகிறது நீங்கள் கவலைப்படும் காரணம்” என்று உளறினான்.

     இளவரசன் மீண்டும் வரண்ட சிரிப்புடன் “சிலாயனா, நீ முட்டாளாக இருந்தாலே நல்லது. அப்பாவியாக இருப்பதுதான் தவறு. ஏனென்றால் நாம் இருவரும் அன்று அதாவது முப்பத்தெட்டு நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டதை, பேசி முடிவு செய்ததை மறந்து என்னென்னவோ உளறுகிறாயே. இதைத்தான் அப்பாவித்தனம் என்று கூறவது” என்றான்.

     சட்டெனத் தீயை மிதித்தவன் போலத் துள்ளி நகர்ந்தான் சிலாயனன். ஆம், நாற்பது நாட்கள்தான் திருமண வாழ்க்கை. பிறகு பிரும்மசரியம்தான்... இளவரசன் கேட்ட உறுதியை அன்று தான் கொடுத்தது மறந்துதான் போயிற்று. ஆம். அதை மறந்துவிட்டது ஒருபுறம் இருக்கட்டும். அது இனி சாத்தியமா? மல்லிகாவைப் பிரிந்து இனி ஒருகணம் கூட அப்பால் செல்ல முடியாதே. இது ஏன் இளவரசருக்குப் புரியவில்லை? ஏதோ ஒரு பேச்சுக்கு அன்று பேசியது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அந்த உறுதியை மறந்திடலாமா என்று கேட்பானேன்? அதையெல்லாம் மறந்துவிட வேண்டாமோ? மறப்பதுதானே பண்பாடு.

     “இளவரசே, நீங்கள் ஏதோ குடிமுழுகிவிட்டதாகவெல்லாம் வருந்த வேண்டாம். முன்பு நாம் ஏதோ பேசினோம். அவ்வளவுதான் என்று அதை மறந்திடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். நான் அதை எப்பவோ மறந்துவிட்டேன். நீங்கள் ஏன் அதை நினைத்து இப்போது வருந்த வேண்டும். விட்டுத் தள்ளுங்கள். வேறு ஏதாவது நிம்மதியாக நாம் பேசலாம்...” என்றான்.

     இளவரசன் நீண்டதொரு பெருமூச்சுவிட்டான், சிலாயனன் காட்டில் வளர்ந்தவன். கெடுபிடி, கட்டுப்பாடு, உறுதி என்பதெல்லாம் அவனுக்குப் புரியாத விஷயங்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது காடல்ல. சுதந்திரமாகச் செயல்படும் காடுவாழ் மனிதனல்ல. இங்கு அவன் ஒரு சிற்பி.

     “சிலாயனா, நீ இனியும் அப்பாவியாகப் பேசுவதில் அர்த்தமில்லை. இது சோழ நாடு. இங்கு உறுதியென்றால் உறுதிதான். அதில் அலட்சியம், மறந்திருத்தல், வெறும் பேச்சு என்பதெல்லாம் இல்லை. நீ இன்னும் இரு தினங்களில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்படத் தயாராக இருக்க வேண்டும். நீ மட்டும்தான் கோயில் பணிக்காலத்தில் தனித்திருக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத விதிமுறையாகும். அதனால்தான் எச்சரிக்க வந்தேன். மாறாக மறந்திடு, வருந்தாதே என்றெல்லாம் உளறுவதில் அர்த்தமில்லை. புரிகிறதா?” என்று சற்றே சலித்தவன் போல் வார்த்தைகளைக் கொஞ்சம் அழுத்திச் சொல்லிக் கேட்டான்.

     சிலாயனன் வியப்புடன் விழிகளைப் பெரிதாக்கி அவனை விழித்துப் பார்த்தான். பிறகு திரைமறைவில் வெகுவாகத் தவித்தபடி நிற்கும் தன் மனைவி மல்லிகாவைப் பார்த்தான். அப்படி மாறி மாறிப் பார்த்தவன் சட்டென்று திரும்பி, “இளவரசே! என்னையும் என் மனைவியையும் பிரித்திட எந்தச் சக்தியாலும் முடியாது” என்றான். ஒரு குழந்தைச் சினமுற்றால் எப்படி இருக்குமோ அப்படிக் காட்சியளித்தான் அப்போதவன்.

     “சிலாயனா, குழந்தை மாதிரி இப்படியெல்லாம் உளராதே. நீ ஒரு பொறுப்புள்ள சிற்பி. மணமானவன். அரச கட்டளை என்பது இந்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் பொதுவான ஒரு விதி. எனவே எதையும் சிந்திக்காமல் பேசலாகாது. உன் மனைவி மல்லிகாவுடன் இது பற்றி கலந்து பேசி முறையான வகையில் ஒரு முடிவு செய். ஆனால் அந்த முடிவு நான் கொடுத்த உறுதியினை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். மாறாக இருந்தால் நீ மட்டும் அல்ல, நானும் தண்டனைக்குள்ளாக நேரும். இந்நாட்டில் சக்கரவர்த்திகளின் மகனும் ஒரு சாதாரணக் குடிமகனும் சட்ட விதிகளின் முன் சமமானவர்களே.”

     “வியப்பூட்டுகிறது இளவரசே. நீங்கள் இந்நாட்டின் இளவரசர், மன்னர் மகன். உங்களுக்காவது தண்டனையாவது. நீங்கள்தானே சட்டத்தை விதியையெல்லாம் வகுத்து...”

     “இல்லை சிலாயனா. இந்நாட்டில் அரசனானாலும் சரி, ஆண்டியானாலும் சரி, சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம்தான். அதில் மாறுதலில்லை” என்றான் அழுத்தமாக.

     “முடியாது இளவரசே. பிரிந்து வா என்பதைவிட என்னைக் கொன்று போடுவதே சிறப்பு. உங்கள் தந்தையிடம் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சட்டெனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.

     இளவரசன் விக்கித்து நின்றான். சிலாயனன் தன்னிடம் இவ்வளவு முரட்டுத்தனமாக, அலட்சியமாக, எடுத்தெறிந்து பேசுவானென்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனவே சிறிதளவு சினமும் அவன் மனதில் தலை நீட்டியது. ஆயினும் அடுத்த சில நொடிகளிலேயே அவன் எதிரில் ஆடல் அழகி மல்லிகை வந்து பணிவாக வணங்கி “இளவரசே, அவருடைய அறியாமைக்கு இரக்கப்பட்டு நீங்கள் எங்களை முதலில் மன்னிக்க வேண்டும். உங்கள் உறுதியை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு. நான் துணிந்து கூறுகிறேன். அரசரிடம் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படாமல் செயல்படுவது எங்கள் பொறுப்பு. அவர் ஆலயப் பணிக்கு வருவார். நிச்சயம் வரச்செய்கிறேன். தனியாகவே வருவார். கவலைப்படாமல் கோபம் கொள்ளாமல் போய் வாருங்கள். சோழர் உப்பைக் தின்று வளர்ந்தவர்கள் நாங்கள். எனவே எங்கள் கடமைப் பொறுப்பிலிருந்து விலகும் நினைவு எக்காலத்தும் எங்களுக்கு ஏற்படாது” என்று வெகு தெளிவாக, அழகாக விளக்கமாகக் கூறினாள்.

     இளவரசனுக்குக் கோபம் வளராமல் போனாலும் குழப்பம் உண்டாகாமலில்லை. அவன் முறைக்கிறான். இவளோ அஞ்சாமல் திரும்புங்கள் அனுப்பி வைக்கிறேன் என்கிறாள். இது என்ன புதுமை? என்று திகைத்தாலும் கூத்தரசி அன்னத்தாம்மாள் சிவிகையில் வந்து அச்சமயம் இறங்கியது கண்டு சற்றே தெளிந்தான்.

     இளவரசனைக் கண்ட அவள் திகைக்க, அவள் சட்டென வணங்கினாள். அவனை அம்மையார் மிகவும் பணிவுடன் வணங்கி “குழந்தாய், சக்கரவர்த்திகளைச் சந்தித்துவிட்டுத்தான் நான் வருகிறேன். விஷயம் அறிந்தேன். கிடைத்தற்கரிய பாக்கியம் தேடி வந்திருக்கிறது சிலாயனனை. எனவே அதனை இழக்கும் படியான நிலையை மல்லிகையும் உண்டாக்க மாட்டாள். நானும் அனுமதிக்க மாட்டேன். நீங்கள் கவலையின்றி சென்று வாருங்கள்” என்றாள்.

     சரி, இனிக் கவலையில்லை என்று துணிந்தவனாய் இளவரசன் “நல்லது தாயே. தங்கள் தலையீடு இதில் நல்லதோர் திருப்பம். வருகிறேன்” என்று வேகத்துடன் கூறிவிட்டு சரேலென்று வெளியே வந்து குதிரை மீது தாவி ஏறிவிட்டான்.

     ஆனால் தனது அரச நண்பனிடம் ஆத்திரத்துடன் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த சிலாயனன் குழந்தை போல விம்மி விம்மி வெடித்தபடி அழுததைக் கண்டதும் மல்லிகைக்கே ஆத்திர மூண்டதென்றால் அன்னத்தம்மாளைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

     “சோழ நாட்டில் பிறந்த மகோன்னதக் கலைஞர் பெற்ற மகன் நீங்கள். நானோ சோழர் தம் வாழ்வே தமது வளமான வாழ்வு என்று நம்பித் தன்னை அர்ப்பணித்து வாழும் கலை மூதாட்டியின் அன்பு மகள். எனவே சோழர் பெருமையில், அவர்கள் ஆட்சியில், சிறப்பில் நம் வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்பது கிடைத்தற்கரிய ஒரு பெரும் பாக்கியம். அதுவும் உலகமெல்லாம் ஆளும் சக்கரவர்த்திகளே உங்களை மதித்து ஆலயப் பணிக்கு அழைத்திட்டார் என்றால், சாதாரணமாக இல்லாமல் இளவரசர் மூலமே அதை நமக்கு அறிவித்துள்ளார் என்றால் அது எத்தகைய சிறப்பு? எப்பேர்க்கொத்த பெருமை? அதைப் போய் நாம் உதறிட நினைக்கலாமா? இத்தகைய நினைப்பே ராஜத் துரோகமில்லையா? எப்படி உங்களுக்கு அவ்வாறு பேசத் துணிவேற்பட்டது? யாரிடம் என்ன பேசுகிறோம் என்று கூடப் புரியாமல் இளவரசனிடம் பேசிவிட்டீர்களே. அவர் பெருந்தன்மையால் மன்னித்துச் சென்றார். இதே சமயம் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வேறொருவராயிருந்தால் உங்களை என்ன செய்திருப்பார் தெரியுமா?” என்ற மல்லிகை பொருமிப் பொரிந்து தள்ளியதும் சிலாயனன் நிலை குலைந்துவிட்டான்.

     “என்ன செய்திடுவார்... இதற்காக இந்தச் சாதாரண விஷயத்துக்காக தலையைச் சீவிவிடுவீர்களா?” என்று விகல்பமாகக் கேட்டதும் ஆத்திரங் கொண்ட கிழவி, “ஆம். அதுவும் நடக்கும். ஆதித்தன் அண்ணனாயிருந்தால் இந்நேரம் அதுதான் நடந்திருக்கும்” என்று பதிலளித்தாள்.

     “சோழ நாட்டில் தானுண்டு தன் வீடுண்டு என்றிருக்கும் தம்பதிகளைப் பிரிப்பதை ஒரு கலையாகவே கொண்டிருக்கிறார்கள் போலும்” என்று மீண்டும் ஏளனமாகச் சொன்னதும் மல்லிகையால் தாங்க முடியவில்லை.

     “என்ன பேச்சு இது? உங்களுக்கு என்னதான் நேர்ந்துவிட்டது? கேவலம் இந்த வெறும் பெண் இச்சை காரணமாக நீங்கள் கலைத் திறனை மறப்பதா? அதற்காக கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்காமல் உதறுவதா? இது போல இன்னொரு சந்தர்ப்பம் வருமா?” என்று வெறுப்புடன் கேட்டாள்.

     சிலாயனனும் சளைக்கவில்லை.

     “உனக்குத் திடீரென்று என்னிடம் ஏன் இந்த வெறுப்பு? கோயிலாவது, குளமாவது, உறுதியாவது, அதிர்ஷ்டமாவது... அதையெல்லாம் தள்ளுங்கள். என்னைவிட அவை உயர்ந்தவை அல்ல என்று சொல்லாமல் இப்படி ஏன் நீ யாரோ நான் யாரோ என்று பேசுகிறாய்? ஏன் இந்த வெறுப்பு? ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று கூறுவது உண்மையாகி விடுகிறதே.”

     “நிறுத்து தம்பி... நிறுத்து உன்னுடைய வசனத்தையெல்லாம். இது சோழ நாடு. தான்றோன்றித்தனமாகப் பேசும் தறுதலைகளுக்கு இங்கு இடமில்லை. ஜாக்கிரதை. யாரிடம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசாதே. இன்னொரு முறை இம்மாதிரி பேசினால்...” என்று மூதாட்டி சினத்துடன் பேசியதும் சில நொடிகள் அவளை வெறிக்கப் பார்த்த சிலாயனன்.

     “அரசர்தான் முறையின்றி தலை சீவுவார் என்றால் என் மனைவியின் அருமைக் காப்பாளரான நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் அன்பு மகளை இன்ப வாழ்க்கை நடத்த அனுமதியாமல் துறவியாக்க முடிவா? அல்லது என் தலையைச் சீவி உங்கள் மகளை...”

     “யாரங்கே?” என்று கிழவி இறைந்து கத்திவிட்டாள்.

     “இதோ வந்தேன்?” என்று எதிரே வந்து நின்றவர் வேறு யாரும் அல்ல... திருமுனைப்பாடி நாட்டு முனையரையர் திருமகனான திரிபுவன அரைய பூபதி வேளார்.

     கிழவி திடுக்கிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு “ஐயா, நீங்களா... இங்கா... இந்தப் பஞ்சை வீட்டில் பெரும் தலைவரா! ஐயா, மன்னிக்க வேண்டும். நான் தங்களை அழைக்கவில்லை. எனது மெய்க்காவலனான மாதய்யனை அழைத்தேன்” என்று நடுநடுங்கியபடி கூறினாள்.

     ஆனால் அவர் புன்னகையே உருவாக நின்றபடி “அருங்கலைத்தாயே, அடியேனை மாதய்யனுக்குப் பதிலாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இட்ட பணியைச் செய்கிறேன்” என்று நயமாகக் கூறிவிட்டுப் பேந்த பேந்த விழித்து நிற்கும் சிலாயனனைப் பார்த்துவிட்டு, “இவன்தான் எனது நண்பன் மகனா? இது வரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. படைகளைக் கலைத்துவிட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பும் வேலை. நல்லது தம்பி.. உன்னுடைய தந்தை எனக்கு எழுதிய கடிதம் இதோ... முதலில் நீ இதைக் கவனமாகப் படி. நீ படித்து முடிக்கும் வரை நானும் இப்பெருமாட்டியும் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியபடி கடிதத்தை நீட்டியதும் அவன் பயந்து விழித்தபடி வாங்கினான்.

     “என் தந்தை எங்கு இருக்கிறார்? உங்களுக்கு அவர் எப்படி எழுதினார்? நீங்களும் அவரும்...”

     “இவர்தான் சோழ சாம்ராஜ்ய மகாசேனாபதி அரைய பூபதி. முதலில் இவரை வணங்குங்கள். பிறகு கேள்விகள் போடலாம்” என்று மல்லிகை முன்னே வந்து வணங்கியதும் அவனும் ஏதோ கைகளைத் தூக்கி இறக்கினான்.

     “மல்லிகை. நீ ஏன் சிறிது வாடிய மாதிரி இருக்கிறாய்? மல்லிகை மணமாக மட்டுமில்லை. வாடவும் கூடாதே. தம்பி, இவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளுவது உன்னுடைய தலையாய கடமை இல்லையா?” என்று விளையாட்டாகக் கேட்பது போல ஒரு கேள்வி போட்டதும் அவன் சலிப்புடன் “ஆமாம். ஆனால் இந்தச் சோழ நாட்டில் அதற்குத்தான் இடமளிக்க மாட்டேன் என்கிறார்கள். கொண்ட மனைவியுடன் கணவன் இணைந்து வாழ்வதைக் கூட அனுமதிக்காமல் பிரிக்க நினைத்து அவதிப்படுத்தினால் அழாமல் சிரிக்கவா முடியும்?” என்று கேட்டான்.

     அரைய பூபதி அவனைப் பார்த்த பார்வையின் உட்கருத்து யாருக்கும் புலனாகவில்லை. பிறகு கிழவியை ஒருமுறைப் பார்த்துவிட்டு “சோழ நாடு என்ன செய்யும், செய்யாது என்ற விவரம் எல்லாம் அறியும் அனுபவம் உனக்கு இன்னும் ஏற்படவில்லை தம்பி. எனவே சம்பந்தமில்லாததைப் பேசாமல் போய் முதலில் அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு என்னிடம் வந்து பேசு” என்று அழுத்தமாக கூறியதும் அவன் தயங்கித் தயங்கி அப்பால் சென்றான்.

     “காமம் இவன் கண்களை மறைத்துவிட்டது பூபதி. மல்லிகை ஒரு உன்னத மனிதரின் மகனை மணாளனாகப் பெற்றது கண்டு மகிழ்ந்தேன். இவனுக்காக நானும் இளவரசனும் பேரரசனிடம் போராடினோம். ஆனால் எங்களுக்கு இவனை அப்போதே புரிந்து கொள்ளத் தெரியவில்லை” என்று கிழவி துக்கமுடன் கூறியதும் “இல்லை அன்னத்தம்மையாரே. நீங்கள் இப்பவும் அவனைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறிவிட்டு அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்தார்.

     பரம பக்த சீலரான பூபதி ஏன் இம்மாதிரி பேச வேண்டும்? உத்தம ராஜபக்தரும் ஒப்பற்ற மகா வீரருமான அவர் இப்பொழுது புதிர் போடுவது போல எதை நான் புரிந்து கொள்ளவில்லை? என்று கூறுகிறார் என்று அதிசயித்தவளாய்க் கிழவி அவரையே ஊன்றிப் பார்த்தாள். பிறகு “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பூபதி?” என்று வியப்பும் வேதனையும் கலந்த குரலில் கேட்டதும் “நானா? ஒன்றும் சொல்லவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்றேன். அவ்வளவுதான். சத்திய சங்கரன் என்னுடைய நெருங்கிய நண்பன். சுயமதிப்பு சற்று அதிகமுள்ளவன். அதே சமயம் விவேகம் சற்றுக் குறைவானவன். முந்தையது வென்றதும் பிந்தையது தோற்றது. நாடுவிட்டு நாடு சென்றான். பிறகு காடு சென்றான். காட்டிலே வளர்ந்தான் இந்தக் காளை. நேற்று வரை பெண் எவளையும் பார்த்தவன் இல்லை. தந்தையின் கைவண்ணத்தில் உருவாகும் பெண் சிலைகளைப் பார்த்திருக்கிறான். அம்மையே, நீங்கள் என் தாய் வயதானவர். எனவே சற்றே வெளிப்படையாக கூறுவதில் தவறில்லை. பெண் சிலைகளையே பார்த்தவன் உயிர்ப் பெண் ஒருத்தியைக் கண்டுவிட்டான். இவன் இக்காட்டில் நுழையும் போது வேறு பெண்கள் இல்லையா? இருந்தனர். ஆனால் கலையே உருவாய்... இவன் தந்தை உருவாக்கிய சிலையே உருவாய் ஒருத்திதான் அன்று தென்பட்டாள். அவ்வளவுதான். அனுபவம் கூறுகிறதே? அதுமுதல் அழகு வென்றது. அழகின் உயிர் இவனை ஆட்டி வைக்கிறது. இதில் அதிசயம் இல்லை. நீங்களும் நானும் தெய்வத்துக்கு நம்மை அர்ப்பணித்து விட்டோம். நம் கதை அவ்வளவுதான். இவன் தன்னையும், உங்கள் மல்லிகை தன்னையும் வாழப் பிறந்தவர்களாக மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். எனவே இதில் காமம் என்றோ கடமை மறத்தல் என்றோ வெறும் மயக்கம் என்றோ பேசுவதற்கு இடமில்லை. நீங்கள் உறுதி கொடுத்தது உண்மை. இவனும் அப்போது ஒப்பியது உண்மை. ஆனால் நடைமுறையில் அது அசாத்தியமாகி விட்டது. அவனாக மாறினால் அன்றி நாமாக மாற்றுவதற்கில்லை. இதை அரசர் அறிவார். நாமும் அறிய வேண்டும்.”

     “அப்படியானால், இவன் வெறும் பெண்பித்தனாக இங்கே இருந்து சிற்றின்ப விளையாட்டுக்காரனாக இருப்பதற்குத்தான் தகுதியா? இது இழிவுக்குரியதில்லையா?” என்று குறுக்கிட்டு கேட்டாள், கிழவி.

     சேனாதிபதி சிரித்துவிட்டு, “இல்லை அம்மையாரே, இல்லை. இவன் போக்கில் இவனை விட்டுப் பிடித்தால்தான் இவனுக்கும் சரி, நமக்கும் சரி, நலந்தர முடியும். இரண்டு நாட்களுக்கு முன்னாள் ஒரு யவனக் கப்பல்காரர்கள் இவன் தந்தையை ஏதோ ஒரு தீவில் கண்டார்களாம். அவன் உடன் ஒரு கடிதம் எழுதி அதை என்னிடம் சேர்ப்பிக்கும்படி கோரியிருக்கிறான். எனக்கும் ஒரு கடிதம், அவன் மகனுக்கும் ஒரு கடிதம்.”

     “உங்களுக்கு என்ன எழுதி இருக்கிறார் என்று கூற இயலுமா?”

     “தாராளமாக... தனக்குத்தான் சோழர் சேவைக்குப் பாக்கியமில்லை என்றால் தன் மகனுக்காவது கிடைகட்டும். அதற்கு ஆவன செய்யுங்கள். குறைந்தது இன்னும் ஆறு ஆண்டுகளாவது அவன் சோழ நாட்டில் வேலைகளில் தனிக்கட்டையாகவே இருக்கட்டும். ஆமாம்.. இப்போதைக்கு மணம் செய்து விடாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். சீரிய பணியாற்றி சிறப்புப் பெறட்டும். பிறகுதான் அவன் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்ட வேண்டும் நீங்கள் என்று எழுதியிருக்கிறார்.”

     “அடக்கடவுளே!”

     “ஆம். கடவுள் வேறு மாதிரி நடத்திவிட்டார். எனவே பிரச்சனையும் ஏற்பட்டு விட்டது. அதைத் தீர்த்து வைப்பதும் அவராகவே இருக்கட்டும்...”

     “தன் மகன் தரணி புகழ் சிற்பியாக வாழ வேண்டுமென்பதில் எந்தத் தந்தைக்குதான் அக்கரையிருக்காது?”

     “ஆனால் ஆண்டவன் வேறு திட்டம் தீட்டியிருப்பது அவருக்கும் தெரியாதே.”

     “அப்படியானால்...”

     “வரட்டும் தாயே. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு வரட்டும். பிறகு நாம் ஆலோசிக்கலாம்” என்று அவர் அறிவித்த அதே சமயத்தில் சிலாயனனும் மல்லிகையும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அந்த நேரத்தில் அவன் முகம் அலாதியான களை பெற்றிருந்ததை அரைய பூபதியும் அன்னத்தம்மாளும் கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.