ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

26

     சிலாயனன் முகமாறுதல் கவலைக்குப் பதிலாக உள்ளக் கிளர்ச்சியைக் காட்டுவதாயிருந்தது. சேனாபதி பூபதிக்கு இது சற்றே தெம்பூட்டியது. கடிதத்தைப் படித்த பிறகு பையன் சற்றே மாறியிருக்கிறான். எனவே சற்றே நளினமாகக் கையாண்டால் தற்போதைய நிலையிலிருந்து மாறுவான் என்று கருதினார்.

     “தம்பி, உன்னுடைய தந்தை எழுதியுள்ள கடிதம் உண்மையிலேயே உனக்கு உற்சாகமூட்டியிருக்கும். கடந்த சில காலமாக நீ அவரிடமிருந்து பிரிந்திருக்கிற கவலை அதாவது தனிமைத் துன்பத்தை இக்கடிதம் போக்கியிருக்கலாம். அப்படித்தானே...” என்று பக்குவமாகக் கேட்டதும்,

     “ஆம் ஐயா. அக்கடிதத்தின் மூலம்தான் தங்கள் சிறப்பை, எனது தந்தைக்கு நீங்கள் எந்த அளவுக்கு வேண்டியவர் என்பதை அறிந்தேன். இது காறும் நான் தங்களைச் சந்திக்காமலிருந்தது பெருந்தவறு. அவர் நான் தங்களை தெய்வமாகக் கருதி..” என்று அவன் மேலும் ஏதோ சொல்லுவதற்குள்...

     “தம்பி... தம்பி. நிறுத்து. நம்மைப் பற்றிப் பேசும் போது தெய்வ நினைவு கொண்டுவிடுவது நல்லதுதான். ஆனால் அவரை ஒப்புவமையாகக் காட்ட முயலுவது பெருந்தவறு. உன்னுடைய தந்தை எனக்கும் ஒரு அன்புத் தம்பி. அவனை நான்தான் தஞ்சைப் பெருவுடையான் கோயிலுக்குப் பணியாற்றும் சந்தர்ப்பத்தை அளிக்கும்படி சக்கரவர்த்திகளை வேண்டினேன். அவரும் பெரிய மனதுடன் ஏற்றார். பிறகு உன் தந்தையின் திறன் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். ஆனால் காலம் இருவரையும் சோதித்தது. இருவரும் தோற்றனர். பேரரசர் ஒரு பெருங் கலைஞனை இழந்தார். ஒரு கலைஞன் தனது பேராதரவாளரை இழந்தான். இதனால் நாட்டுக்கு இரு வகையிலும் நஷ்டம்” என்று கூறிப் பெருமூச்செறிந்தார்.

     “அந்த நஷ்டத்தை முழுதாக ஈடுகட்ட முடியாவிட்டாலும் இயன்ற வரை ஈடுகட்ட நான் தயாராயிருக்கிறேன் ஐயா” என்று அடக்கமாகக் கூறினான்.

     அன்னத்தம்மை அதிசயத்துடன் அவனையும் தன் மகளையும் பார்த்தார்.

     “அப்படி என்றால்...”

     “நானும் ஒரு சிற்பியானாலும் என் தந்தை அளவுக்குத் திறன் பெற்றவனில்லை. ஆயினும் வாய்ப்பளித்தால் இயன்றதைச் செய்து அவர் மகனாயிருக்கும் தகுதி பெற்றவனாதான் என்பதைக் காட்ட முடியும்.”

     “நல்லது தம்பி. ஆனால் நான் சற்றுமுன் கேள்விப்பட்டது வேறு மாதிரியாயிருந்ததே...” என்றார் பூபதி.

     “உண்மை. ஆனால் கடிதம் வருவதற்கு முன்னர் நடந்தது அது. இப்போது அப்படியல்ல. தாங்கள் காலால் இடும் கட்டளையைத் தலையால் செய்யத் தயார். என் தந்தை எவ்வளவோ பாடுபட்டுள்ளார். இக்கடிதம் எழுத இலட்சத்தீவுகளில் பல காதம் நீந்தியே சென்றிருக்கிறார் நம் கப்பல்களைத் தேடி. எத்தனையோ நாள் ஏமாந்திருக்கிறார். முடிவில் யவனக் கப்பலைக் கண்டு, அதன் கடலோடிகள் மூலம் தங்களுக்கும் எனக்கும் எழுதியிருக்கிறார். தங்களைக் கண் கண்ட தெய்வமாகக் கருதி...”

     “தம்பி... தம்பி. திரும்பவும் நம்மை மறந்து எங்கோ ஓடுகிறாயே. விஷயத்துக்கு வா நீ. அப்படியானால் கங்கைகொண்ட சோழபுரம் செல்லத் தயார்தானே... தயாரா? இல்லையா? சுருக்கமான பதில் தேவை.”

     “இப்பவே தயார்.”

     “அப்படியா? நல்லது. நாளை வரை உனக்கு காலக் கெடு இருக்கிறது அல்லவா?”

     “ஆம்.”

     “நல்லது. நீ உன்னுடைய மனைவியைப் பிரிந்து தனித்திராமல் அதே சமயம் தனியாக வந்து ஆலயப் பணி ஆற்றவும் ஒரு வாய்ப்பு உண்டானால்...”

     சிலாயனன் திடுக்கிட்டான்.

     மல்லிகை விழித்தாள்.

     கிழவியும் இதென்ன புதிய பிரச்னை என்று திகைத்தாள்.

     சிலாயனன் மீண்டும் சொன்னான்... “என் மனைவியே கூறிவிட்டாள். ‘ஆலயப் பணிதான் முதலாவது. அரசர் ஆணையை அவமதித்ததால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’ என்று கூறிவிட்டாள். தந்தையோ ‘நீ ஒரு சிற்பி மகன் என்பதை சோழ நாடு அறியச் செய்வாயாக. நீ பெறும் மதிப்பு என் மனதுக்கு நிம்மதியூட்டும். உன்னைச் சீராக வாழச் செய்யக்கூடிய ஒரே நபர் சோழ நாட்டின் மகா சேனாதிபதி அரைய பூபதி வேளார்தான். அவர்தான் உனக்கு தெய்வம் மாதிரி உதவுவார். அவர் கீறிய கோட்டைத் தாண்டாதே. அவரால் நீ அகிலப் புகழ் பெறலாம். அதுவே எனக்கு நிம்மதி தரும்’ என்று எழுதியிருக்கிறார். எனவே நான் இனியும் தயங்குவதில் நியாயமில்லை. என் மனைவியும் என் வழி செல்லத்தடை கூறவில்லை” என்றான் சிலாயனன்.

     “நல்லது தம்பி. தடையெதுவும் இல்லையென்றால் நீ உன்னுடைய மனைவியின் நினைவை உன் மனதைவிட்டு அகற்ற முடியுமா? உண்மையாகச் சொல். நன்றாக யோசித்துப் பதில் சொல். அவசரம் கூடாது” என்று கேட்டார் புன்னகைத்துக் கொண்டே.

     சிலாயன்னால் சட்டெனப் பதில் கூற முடியவில்லை. ஏன் என்றால் உத்தமரும் தந்தையின் அரிய நண்பரும் பெரும் பக்தருமான அவரிடம் பொய் கூற முடியுமா? பதில் கூறாது யோசனையில் ஆழ்ந்தான்.

     “ஐயா, மன்னிக்க வேண்டும். என் மனைவியின் நினைவு என்பது என்னைவிட்டு ஒரு நொடியும் நீங்காத ஒன்று. எனவே உம்மிடம் பொய் கூற விரும்பவில்லை” என்று அவன் கூறியதும் மல்லிகை நாணத்தாலோ அல்லது வேறெதனாலோ தலைகுனிந்து விட்டாள். கிழவி மீண்டும் சினமுற்ற பார்வையை அவன் பக்கம் வீசினாள்.

     ஆனால் பூபதி மட்டும் இளநகை பூத்து “தம்பி, நீ உண்மையை மாற்றாமல் கூறியது பற்றி எனக்கு மொத்த மகிழ்ச்சி. எனவே நான் உனக்கு ஒரு யோசனை கூற விரும்புகிறேன். ஆனால் இங்கு இவர்கள் எதிரில் அதைக் கூறுவதற்கில்லை?” என்றதும் கிழவியும் குமரியும் சட்டென அப்பால் நகர்ந்து போய்விட்டனர்.

     கிழவனும் குமரனும் நீண்ட நேரம் பேசினார்கள். பிறகு அவர் விடைபெற்று புறப்படும் சமயத்தில்தான் அன்னத்தம்மை வெளியில் வந்தார் மல்லிகை தொடர.

     “அம்மையே, நாம் எல்லாவற்றையும் நடத்துவதாக நினைக்காமல் இறைவனே அனைத்தையும் இயக்குகிறார் என்று உறுதியுடன் நம்புவோமானால் எதுவுமே நலமாக முடியும். வருகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்று தமது குதிரை மீது ஏறும்வரை அந்த இரு பெண்மணிகளும் வியப்பே உருவாய் செயலற்ற சிலைகளாய் நின்றனர்.

     “நான் மட்டும் நாளை மறுதினம் கங்கைகொண்ட சோழபுரம் செல்வது உறுதி. இதில் மாற்றம் எதுவும் இல்லை” என்று சிலாயனன் அழுத்தமாகக் கூறியதும் அன்னத்தம்மாள் சில நொடிகள் அவனை வியப்புடன் பார்த்துவிட்டு பிறகு “நல்லது. அப்படியே நடக்கட்டும்” என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் தம் சிவிகையில் ஏறிவிட்டாள்.

     ‘தன் தந்தையின் கடிதம் கண்ட மாத்திரத்திலேயே எப்படி இவர் மாறினார்... நம்மாலெல்லாம் செய்ய முடியாத ஒன்றை ஒரு கடிதம் சாதித்துவிட்டதே. அதுவும் எப்பேர்க் கொத்த சாதனை’ என்று அதிசயித்த மல்லிகையிடம் அவன் தனித்திருந்த போது முடிவாகச் சொன்ன விஷயம் இருக்கிறதே. அதைக் கேட்டதும் முதலில் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. பிறகு. “என்ன இதெல்லாம்... பைத்தியக்காரத்தனமான யோசனைகள்” என்றாள்.

     அதற்கு அப்புறம் “அரைய பூபதிக்கு ஆண்டவன் சிலைகளைக் கண்டு கும்பிடும் வழக்கம் எப்போதுமுண்டு. இப்போது அதே போல இந்த. கணவன் மனைவி விஷயத்தையும் சிலைகளாக்கி விடுகிறார் போலிருக்கிறது. ரொம்ப அழகு” என்றாள்.

     அவனும் சலியாமல் “ஆம். அங்குதான் அதை அப்படியே கல்லில் வடிக்க முடியுமா என்று முயற்சிக்கத்தான் முடியும் என்றால் வெற்றி கிட்டுமா என்பது வேறு விஷயம். என்றாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா. எனவே முயற்சிக்கத்தான் போகிறேன். என் அழகு மனைவியை சிலையில் செதுக்கத்தான் போகிறேன். அந்தச் சிலை எனக்குத் துணையாக வருவதை எந்தச் சட்டமும் தடுக்க முடியாது. பார். சேனாதிபதி உண்மையில் தெய்வீக மனிதர்தான். இல்லாவிட்டால் அவருக்கு மட்டும் இத்தகைய அற்புத யோசனை தோன்றியிருக்குமா...? ஏன் மல்லிகை உனக்குப் பிடிக்கவில்லையா? அல்லது இந்த முட்டாளால் நம் அழகை சிலையில் வடித்திட முடியுமா என்ற சந்தேகமா?” என்று அவன் கொஞ்சிக் குழைந்து பேசிப் பரவசத்துடன் உணர்ச்சிப் பிழம்பாக மாறியது கண்ட மல்லிகைக்கு மேலும் மறுத்திட மனம் வருமா?

     ஆடலழகி அற்புதச் சிலையாக மாறினாள் அறுபதே நாழிகையில். ஆம். அழகு மட்டுமில்லை, அவள் உயரம், தோற்றம் அனைத்துமே கல்லிலே உருவாகி அவளே திகைக்கும் அற்புதமான சிற்ப தேவதையாக மாறியது சாதாரணமான ஒரு கல். ஆம். சிற்பியின் கைவண்ணம் தெய்வீகத்தின் படைப்பு.

     மல்லிகை திகைத்தாள், பிரமித்தாள். பரவசத்தால் திக்பிரமை கொண்டாள். ஏன்? மருண்டாள் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் அவளைவிட அவளுடைய அந்தச் சிலை அழகாயிருந்தது.

     தன்னைப் பார்த்தாள். தன் சிலையைப் பார்த்தாள். பிறகு எப்படி என் கைவண்ணம் என்று கேட்பது போல கடந்த இரவும் இன்றைய பகலும் அரும்பாடுபட்டுச் சிலை வடித்த சிலாயனன் வாய்விட்டுக் கேட்கிற மாதிரி அவன் பார்த்ததும் அவள் நீண்டதொரு பெருமூச்சுவிடுத்து “சுவாமி, ஆண்டவன் தங்கள் கையில் இப்போர்க்கொத்த சக்தியைக் கொடுத்திருப்பது ஒரு மகா பாக்கியமாகும். ஆனால் அது தெய்வீகப் பணிக்குத்தானே முதலில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். முதன்முதலாக கேவலம் இந்தப் பேதையைச் சிலையாக்கும் பணியிலா ஈடுபடுத்தப்பட வேண்டும்?” என்று அங்கலாய்ப்புடன் கேட்டதும் சிலாயனன் அவள் அண்டை நெருங்கி,

     “மல்லி. வீண் கதையளக்காமல் சொல்லிவிடு. சிறிதளவாவது உன் அழகு இச்சிலையில் வடிக்கப்பட்டுள்ளதா? உண்டு, இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறிவிடு. ஏனெனனில் உன்னுடைய இந்தத் தீர்ப்பில்தான் இருக்கிறது என் வருங்காலம். எனவே தயங்காமல் உண்மையைச் சொல்” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கேட்டதும் அவள் கண்கள் பனித்திருப்பது கண்டு திடுக்கிட்டான் அவன்.

     “அடக்கடவுளே! ஏன் மல்லி... இந்தக் கண்ணீர் எதற்கு?” என்று பரபரத்துக் கேட்டதும், “சுவாமி, எனக்கு உயிருடன் ஒரு சக்களத்தி வருவதற்குப் பதில் ஒரு சிலை... அதுவும் என் சிலை... என்னைவிட மிக அழகாக அமைந்து எனக்கு எதிரியாகி விட்டிருக்கிறதென்றால் நான் எப்படி சுவாமி அழாமலிருக்க முடியும்?” என்று அவள் கேட்டதும் “சபாஷ். நான் எதிர்பார்த்தது இதுதான். இது போதும்” என்று சொல்லியபடி அவளை இறுக அணைத்துக் கொண்டு விட்டான் சிலாயனன்.

     அன்று இரவு அவர்களுக்கு அளவுகடந்த இன்ப இரவுதான். மறுநாள் காலையில் இளவரசன் எதிரில் போய்ச் சிலாயனன் நின்ற நிலை இளவரசனையே திகைக்கச் செய்தது என்றாலும் சத்திய சங்கர வேளார் இளவரசருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே.

     “என்ன சிலா... திடீரென்று வந்திருக்கிறாய்? வருகை, அதுவும் இவ்வளவு அதிகாலையில்...” என்று கனிவுடன் கேட்டதும் “நான் இப்பவே கங்கைகொண்ட சோழபுரம் போகத் தயாராக வந்திருக்கிறேன்” என்றதும் இளவரசன் திடுக்கிட்டவன் போல, “அப்படியா? மிக்க மகிழ்ச்சி. அரசரிடம் போய் முதலில் இதை அறிவிக்கலாம். நீயும் வா” என்று அழைத்ததும் தயங்காமல் சென்றான் அவன் கூட.

     இராஜேந்திர சோழ தேவரும் திருமுனைப்பாடி நாட்டு அரைய பூபதியும் ராஜா ஸ்ரீ வல்லப தேவரும் அங்கு ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். ஆதித்தன் உள்ளே வரலாமா என்று ஆராய்வது போல எட்ட நின்று விட்டான் சிலாயனனுடன்.

     அரசர் அவர்களைப் பார்த்து சிரக்கம்பம் செய்ய இளவரசன் பணிவுடன் “நானும் இவனும் தங்களிடம் தெரிவிக்க வந்த விஷயம் அவசரமானதல்ல. எனவே பிறிதொரு சமயம் வருகிறேன்” என்றான் இளவரசன்.

     ஆனால் சக்கரவர்த்திகள் சற்று முன்னே வந்து “ஆதித்தா, நீ பிறகு வருவது இருக்கட்டும், சோழ நாட்டின் மகா சிற்பியின் மகனான இந்தச் சிற்பி ஆலயப் பணிக்கு வரத் தயாரா என்று மட்டும் கூறினாலே போதும்” என்றார் தன் குரலில் சற்றே அழுத்தங் கொடுத்து.

     ஆதித்தன் பதில் கூறுவதற்குள் சிலாயனன் “நான் தயார் சக்கரவர்த்திகளே... இப்பவே இன்றே புறப்படத் தயார்” என்றான் பரபரப்புடன்.

     சோழ மாமன்னன் அவனைச் சற்றே வியப்புடன் பார்த்துவிட்டு, “நல்லது இளைஞனே. நீ இன்று மாலை செல்லும் கலைஞர் குழுவுடன் செல்லலாம்” என்றார்.

     தயக்கத்துடன் “ஒரு சிறு வேண்டுகோள்...” என்றான் சிலாயனன்.

     “அது என்ன?” என்று வியப்புத் தொனியில் கேட்டார் மன்னர்.

     “நான் ஒரு சிலை செய்திருக்கிறேன். அதை என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும்” என்று பதில் வந்ததும் அரசர் மேலும் வியப்புற்று “சிலையா? எதற்கு? யார் சிலை அது? ஏன் இந்த விசித்திரமான கோரிக்கை...?” என்றார் சற்று திகைப்பும் கொண்டவராய்.

     இத்தருணம் குறுக்கிட்டார் அரையபூபதி.

     “நான்தான் இந்த யோசனை சொன்னவன். அவன் இளம் மனைவியை பிரிந்திருக்கத் தவிப்பாயிருந்தால் மாற்றாக அவள் சிலை ஒன்றைச் செய்து எடுத்துப் போயேன். அதற்கு எதிர்ப்பில்லை. நீ உன் மனைவிக்குப் பதிலாக இந்தச் சிலையின் துணையைப் பெறுவது உனக்கும் தெம்பாயிருக்கும். எங்களுக்கும் கஷ்டமில்லாமலிருக்கும் என்றேன்” என்று விளக்கிச் சொன்னதும்,

     இந்த அதிசயமான திருப்பங்கண்டு அரசர் அவரை வியப்புடன் நோக்கிவிட்டுப் பிறகு “பளா.. பளா!” என்று கூவி வாய்விட்டுச் சிரித்தார்.

     இன்னொரு சேனாபதியான வல்லபேந்திரரும் “பளா பாளா” கூறிவிட்டுச் சிரித்து விட்டார்.

     “சக்கரவர்த்திகளே, நம்ம பூபதி ஒரு சரியான உருவ வழிபாட்டுக்காரர். நல்ல காலம்... கஜினியிடம் இவர் உருவம் சிக்கவில்லை. சிக்கியிருந்தால் அதை அவன் துகள் துகளாக்கியிருப்பான். தப்பினார் இவர். ஆனால் அதே உருவத்தை தெய்வத்துக்கு என்று இதுகாறும் ஒதுங்கியிருந்தவர் இப்போது காதல் சிலை வழிபாட்டையும் செயல்படுத்துகிறார். பேஷ்... அசல் பிரும்மச்சாரியான இவர் அற்புதமான, புதுமையான காதல் யோசனைக்காரராகவும் மாறிவிட்டார்” என்றார்.

     அரைய பூபதி நிதானமாக “ஆமாம் வல்லபரே. இவன் தந்தை எனது நண்பன். அவன் மகன் சீராகப் பணியாற்ற வழிகாட்டுவது அவசியம். எனவே இந்த யோசனை உதயமாயிற்று. அவ்வளவுதான்” என்றார்.

     வல்லபர் மீண்டும் சிரித்து “தம்பி, யோசனை உதயமானது என்னவோ இவரிடம்தான். முடிவு காண்பது உன்னிடம். எனவே எச்சரிக்கை. சிலையைப் பார்த்து நினைவை ஒருமுகப்படுத்து. ஆனால் சிலையே நீயாய் மாறிவிடாதே. புரிகிறதா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.

     சிலாயனனுக்குப் புரியவில்லையென்றாலும் அந்தக் கம்பீரமான அண்டை நாட்டு மன்னரின் தோற்றம் ஒரு பிரமாதமான சிலைக்குப் பொருத்தமாயிருக்குமே என்று நினைத்தான் தொழில் முறையில்.

     “ஐயா, சந்தர்ப்பம் கொடுத்தால் உங்கள் சிலையையும் நான் உருவாக்க விரும்புகிறேன்” என்றான் அடக்கமாக.

     அவர் திகைத்தார்.

     ஆனால் சக்கரவர்த்திகள், “பார்த்தீரா வல்லபரே, நாங்கள் எல்லாம் சிலையாகத் தகுதியில்லை. நீங்கள்தான் அதற்குப் பொருத்தமாம்...” என்று சொல்லிவிட்டுச் சிரித்ததும் அரைய பூபதி கூடச் சிரித்துவிட்டார்.

     வல்லபருக்கு சற்றே நாணம் கூடத் தோன்றிவிட்டது.

     “தம்பி, உன்னிடம் உள்ள ஒரு சிலையே உனக்கு இப்போதைக்குப் போதும்” என்றார் கேலிக் குரலில்.

     மன்னர் “நல்லது, நீ புறப்படலாம்” என்று அனுமதித்ததும் சிலாயனன் சட்டென இளவரசனுடன் வெளியேறினான்.