ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

27

     தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சிறப்பூட்டி சீரான ஆட்சி நடத்தி தென்னகத்தில் பொற்காலத்தை உருவாக்கிய உன்னதமான சோழ சாம்ராஜ்யாதிபதியான பரகேசரி இராஜேந்திர சோழ தேவன் கங்கைகொண்ட சோழீச்வரமுடையார் கோயிலுக்குத் தன் தந்தையின் தனிப்பெரும் நண்பரும் தனது குருநாதரும் தண்டமிழாந் சிறந்தத் தகைமைப் பேராசானுமான கருவூர்த் தேவர் அவர்கள் முன்னிலையில், தில்லை மூவாயிரர், சைவ, வைணவ, சைன சமயச்சாரியர்கள், காஜுராஹோ போன்ற தலைநகர்களின் அரசர்கள், தமிழ் மூவேந்தர்களின் பிரதிநிதிகள், அறிஞர் பெருமக்கள், அநிருத்தர் போன்ற அரசியல் விவேகிகள், சிற்பிகள், ஸ்தபதிகள், ஓவியர்கள், கல்தச்சர்கள், வரைபட வல்லுநர்கள் மற்றும் எத்தனையோ பேர் குழுமி நிற்க நல்லதோர் ஓரையில் ஆலய அமைப்புக்கான அடிக்கல் நாட்டப் பெற்றது.

     அவ்வளவுதான். வானளாவ வாழ்த்தொலி முழங்க வையகம் ஆளும் மாமன்னன் அண்டபகிரண்டமாளும் ஆண்டவனுக்கு இருக்கை அமைக்க ஆரம்பித்தான். நாலா திசையிலும் கற்கள் விண் விண் என்று தெறித்து ஒலித்தன. எங்கிருந்தெல்லாமோ யானைகள் பல ஒன்றன்பின் ஒன்றாகக் கற்களைக் கொண்டு குவித்திட நூற்றுக்கணக்கான சிற்பிகள் தங்கள் கரங்களால் அக்கற்களின் தரம், நயம், பயன் ஆகியவைற்றை எளிதில் குறித்து ஆர்வமுடன் தங்கள் கையுளிகளைக் கொண்டு வெறுங்கல்லை உயிர்ச் சிலைகளாக, அற்புதத் தூண்களாக, மண்டப விதானங்களாக, மாடங்களாக, கூடங்களாக, விமானமாக, லிங்கமாக, நந்தியாக, பல்வேறு இறைவர்களாக உருவாக்குவதில் தங்கள் முழுக் கவனத்தையும் ஒரு முகமாக ஈடுபடுத்தி தங்கள் வேலையிலேயே ஒன்றிவிட்டனர்.

     பெருமிதம் கொண்டான் பேரரசன் இராஜேந்திரன். காலமெலாம் வென்று வாழும் இந்தக் கங்கைகொண்ட இராஜேந்திரன்.

     ஆம். இனி கனவோ கற்பனையோ அல்ல. உண்மை... உண்மை உருவாகி ஒரு மாபெரும் ஆலயம் எழுந்தது. நகர் உருவாகியது. ஒருநாள், இரு நாட்கள், பல நாட்கள், மாதங்கள்... ஆம். ஆறு திங்கள் ஓடிவிட்டன.

     அன்றாடம் அரசனே வருகிறான். நாள் முழுமையும் ஆலய வேலை மேற்பார்வை... பட்டத்திளவரசன்தான் அங்கே அரசாட்சியைக் கவனிக்கிறானே. அது போதும். மாமன்னர் ஆலய நிர்மாண மேற்பார்வை தவிர வேறெதிலும் ஈடுபடவில்லை.

     ஆறு திங்கள் ஓடிவிட்டன என்று சுலபமாக நாம் கூறிவிட்டால் இந்தக் காலம் மல்லிகைக்கு மட்டும் சுளுவாக நகரவில்லை. எப்பவுமே கணவன் நினைவு... இதைத்தான் விரகதாபம் என்கிறார்கள் போலும். அழகி இதனால் பேரவதியுற்றாள். பிரிவு... நீண்ட காலப் பிரிவு. அவளைப் பைத்தியமாக்கி விட்டது. நாளாக நாளாக கணவன் நினைவு முற்றி அது வரம்பு மீறி வெறியாகக் கூட மாறிவிட்டது என்று கூறலாம்.

     அவருக்கென்ன, பக்கத்தில் அழகுச் சிலையிருக்கிறது. சே, இந்த ஆண்களே இப்படித்தான். தன்னைக் கட்டி அணைத்து ஆனந்திப்பதை மறந்து அந்தச் சிலையைக் கட்டி அழுகிறாரே. ஐயோ பாவம். அவன் அங்கே உறையூரில் எனன பாடுபடுகிறாளோ என்று பரிதாபப்பட்டுத் தவிக்காமல் சிலையைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்து மயங்கி மறந்து.., சேச்சே!

     தெய்வமே? இனித் தாங்காது. என்னை மறக்கச் செய்துவிட்டது அந்தச் சிலை. ஆம். அந்தச் சிலை என் எதிரி... உண்மை இப்பத்தான் புரிகிறது... அது இல்லையேல் அவர் ஓடோடி வந்திருப்பார். ஆம்...

     “சிலை என் எதிரி” என்று வாய்விட்டுக் கூவிவிட்டாள். ஆம். புலம்பினாள் என்றாலும் சரிதான். திரும்பத் திரும்ப புலம்பினாள்... உத்தமியான ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க ஒரு சக்களத்தி வருவாள். என்னை நாசம் செய்ய போயும் போயும் ஒரு சிலை.

     “ஆம். சிலை என் எதிரி.”

     “ஆம். இதுதான் முக்காலும் உண்மை” என்று மிகவும் நயமாக ஒரு குரல் எழுந்து அவள் காதில் புகுந்ததும் திடுக்கிட்டாள்.

     “சே, நான் புலம்பியதை யாரோ சொன்ன மாதிரி நானே நினைத்துவிட்டேன்.”

     “இல்லை. நான் சொல்லுகிறேன். ஏன் என்றால் உன் நலத்தில் கருத்துள்ள ஒரே ஜீவன் இப்போது நான்தான்.”

     “யார் நீ?”

     “தெரியவில்லையா? திரும்பிப் பார் என்னை.”

     மல்லிகை விழிக்கிறாள். சுற்றும் முற்றம் பார்க்கிறாள்.

     “ஓ... நீ... நீ... நீயா?” பதறியெழுகிறாள், அதிர்ச்சியுடன்.

     “ஆம். நான்தான். நானேதான். உனக்காகத் துரோகி என்று பெயர் பெற்றவன். உனக்காக அந்தப் பொட்டல் வெளிக்கு ஓடியவன். அங்கே அந்தச் சிலையுடன் அவன் கொஞ்சுவதைப் பார்த்தவன். இந்தக் கண்களால் அந்தக் கண்றாவியைப் பார்த்துத் தவித்துப் போய் ஓடி வந்தவன்.”

     “மெய்யாகவா.”

     “மெய்யாக என்று இதய பூர்வமாகக் கூறுகிறேன். துர்எண்ணக்காரனில்லை நான் என்பதை நீயே போய் நேரில் அறியலாம். அந்தச் சிலையை இரவும் பகலும் தன்னுடன் ஒரே படுக்கையில் சே...”

     “நீ கண்ணால் பார்த்தாயா? பொய் கூறி என்னை துக்கத்துக்குள்ளாக்காதே...”

     “ஆம் மல்லிகா... இந்தப் பாவக் கண்களால் பார்த்தேன். எவனை நீ இரவும் பகலும் நினைத்து நினைத்து அவனுக்காக ஏங்குகிறாயோ, அவன் அங்கே கல்லாலான கேவலம் ஒரு சிலையின் காலடியில்...”

     “அது என் சிலை.”

     “இருக்கட்டுமே. அதற்காக உயிரும் உணர்வும், கவலையும், கனிவும் கொண்ட ‘நீ’ ஆகிவிட முடியுமா அந்தக் கற்சிலையால்? நீ இங்கே வாடிய கொடியாய்த் தவிக்கும் போது அவன் கேவலமான ஒரு கற்சிலையுடன் சரசமாடுவதென்றால். சே...”

     “அது என்னைப் பார்த்து அவர் செய்தது.”

     “செய்தால் என்ன? அதற்குப் போய் அடிமையாகிவிட வேண்டுமா என்ன? நீ இங்கே கவலையால் துரும்பாகிக் கிடைக்கும் போது அதன் காலடியில் அவன் கிடப்பதா? அப்படிப்பட்டவனை...”

     “வேண்டாம். அவரை அப்படியெல்லாம் பேசாதே. அவர் என் கணவர், என் தெய்வம். நீ அவதூறாகப் பேசி என் ஆத்திரத்தைக் கிளராதே போய்விடு...”

     “நீ இப்படி நினைத்து நினைத்து உருகினால் அவன் ‘கிடக்கிறாள் அந்தச் சிறுக்கி. என் சிலை... நான் செய்த சிலை; என்னுடைய கரங்களால் உருவான இதுவே அவளைவிட உயர்ந்தது. அவள் ஒரு பொருட்டல்ல’ என்று கூறுகிறானே கயவன்...”

     “நிறுத்து. மீண்டும் ஒருமுறை அவரை நீ இப்படித் திட்டினால் நான் பிணமாகி விடுவேன்” என்று அவள் கூறிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுத்தும் அந்த மூர்க்க அம்பலத்தாடி சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அவளை நெருங்கி வந்துவிட்டான்.

     “இங்கு நுழைந்ததை நீ பார்த்தாயா?” என்று ஒரு குரல் வெளியே கேட்டது.

     “ஆம் தலைவரே. பார்த்தேன். அவன் அப்ப நுழைந்தவன் இன்னும் இவ்வீட்டைவிட்டு வெளியேறவில்லை.”

     “மல்லிகை எந்த அறையில் இருக்கிறாள் பெண்ணே?”

     “அதோ அந்த நடுக்கூடத்து அறையில்.”

     “சரி. நீ உள்ளே போய் அவளை மெய்க்காவல் தலைவன் பார்க்க விரும்புவதாக அறிவித்து இங்கு அழைத்து வா. அவள் அறையில் அம்பலத்தாடி இருந்தால்... மல்லிகைக்கு எத்தகைய ஆபத்தும் ஏற்படாமலிருக்க...”

     வேலைக்காரி அச்சத்துடன் மல்லிகையின் அறைக்குச் சென்றாள். அங்கே அவள் கண்ட காட்சியால் கதிகலங்கிப் போய் “வீல்” என்று அலறியபடி அப்படியே சாய்ந்துவிட்டாள் அவள்.

     காவல் தலைவன் பாய்ந்தோடினான் அறைக்கருகே.

     “பயம் இல்லை தலைவரே. பாம்பு இதோ இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்” என்று கூறியபடி நெஞ்சுக்கு நேராக நீட்டிய வாளை தாழ்த்தாமல் வீராங்கனையாக நின்றாள் மல்லிகை. உலுத்தன் குனிந்த தலை நிமிரவில்லை.

     “அடப்பாவி... நீயா? சேனாபதி எச்சரித்தது உண்மையாகி விட்டதே. ‘எங்கும் தேடி ஓட வேண்டாம். அவனே வருவான் அபலையைத் தேடி’ என்றார். அப்படித்தான் நிகழ்ந்தது. கடைசியில் உன் விதி உன்னை இக்கதிக்கு ஆளாக்கிவிட்டதே” என்று சொல்லிக் கொண்டே காவலன் அவன் கைகளில் விலங்கைப் பூட்டினான்.

     “என்னை ஏமாற்றிவிட்டதாக எக்களிக்காதே பெண்ணே. உன்னை ஏமாற்றிவிட்டு அங்கு உல்லாசமாகச் சிலையுடன் சல்லாபித்திருப்பவனை விதி நிரந்தரமாகப் பிரித்து விட்டது...” என்று கத்தினான் அவன்.

     ஆனால் காவலன் அவன் மண்டையில் ஒரு தட்டுத் தட்டியதும் “ஐயோ...” என்று சுருண்டான்.

     காவலன் குதிரை மீது தூக்கிப்போட்டான் அவனை. அவர்கள் அங்கிருந்து செல்வதை வியப்புடன், வெறுப்புடன், கட்டுமீறிய உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நோக்கியபடி நின்றாள் மல்லிகை.

     மல்லிகைக்கு நெடு நேரம் வரை மனநிலை சீராக இல்லை. தன் கணவன் சிலையின் அடிமையாகி விட்டதால் தன்னை மறந்துவிட்டான் என்று கருதி அதே நினைவில் தவிக்கலானாள். அம்பலத்தாடி நல்லவன் அல்ல. ஆனால் தன்னை நாளிதுவரை நெருங்கி வந்து பலவந்தமாக நடக்கத் துணிந்தவனில்லை. என்றாலும் இன்று அவனுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படி மூர்க்கனாக மாறிவிட்டான். என் மீது அவன் கொண்டிருப்பது ஒருதலைக் காமவெறிதான். எனினும் இது நாள் வரை அவன் தன்னடக்கமாக நடந்துவிட்டு இன்று மட்டும்...

     நல்ல காலம் பக்கத்தில் வாள் இருந்தது. எனினும் அவன் அசட்டுத் துணிச்சல் கொண்டதேன்? ஒருக்கால் இவளுடைய கணவன், இவளை இனி எங்கே நாடி வரப் போகிறான் என்று நினைத்திருப்பானோ? அங்கே அவர் சிலையைக் கட்டிக் கொண்டு ஆனந்தித்திருப்பதை நேரில் கண்டிருக்கிறான். எனவே இனி அவரும் அவர் சிலையும்தான். இவள் இல்லை அவனுக்கு என்று முடிவு செய்திருப்பானோ?

     இருக்கலாம். அப்படியானால் அவர் சிலையின் அடிமையாகி விட்டதும் உண்மை. சிற்பிதானே... தனது படைப்பில் ஏற்பட்ட கவர்ச்சியில் தன்னை மறந்து என்னையும் மறந்துவிட்டார். உண்மைதான். இங்கே நான் படும் அவதியை மறந்திடச் செய்துவிட்டது அவர் செய்த அந்தச் சிலை.

     கேவலம், சிலை... வேறு சக்களத்தி உயிருடன் இருந்ததாலும் பொறுக்கலாம். போயும் போயும் ஒரு கல். உம்... சரிக்குச் சரி எதிரியாக எனக்கு ஒரு சிலையா வர வேண்டும்?

     குமுறி எழுந்தாள் கோதை மல்லிகை. சிவிகை தாங்கிகளை அழைத்தாள். அன்னத்தம்மைக்குக் கூடத் தகவல் கூற விரும்பவில்லை. சிவிகையில் ஏறிவிட்டாள்.

     “சூரியனார் மலைக்குச் செல்லுங்கள்” என்று உத்திரவிட்டாள்.

     அக்காலத்தில் சிவிகை தாங்கிகள் எங்கே, எதற்கு, எப்படி என்றெல்லாம் கேட்கும் பழக்கமுடையவர்கள் இல்லை. அவர்கள் தாங்கும் சிவிகையைப் போல அவர்களும் சுமை தாங்கும் உறுப்புக்களாக இயங்குவார்களேயன்றி உயிர் உள்ளவர்கள் போலல்ல. எது எப்படியிருப்பினும் சிவிகையில் அமர்ந்தவள், உணர்ச்சிப் பிழம்பாகத் தவிப்பவள் ஆயிற்றே. கணவன் ஏன் தன்னை உதாசீனம் செய்ய வேண்டும்? தன் அழகு குறைந்துவிட்டதா? ஒருமுறை தன்னையே பார்த்துக் கொண்டாள் பேதை. இல்லறம் சலித்துவிட்டதா? நாற்பது நாட்களுக்குள்ளாகவா? ஒருக்கால் தன் தந்தையைப் போல் தரணி போற்றும் சிற்பியாக மாற மனைவி ஓர் இடையூறாயிருப்பாள் என்ற நினைவா... சேச்சே. இவர் பேரும் புகழும் பெற்றிடும் பெருங்கலைஞனாக வாழ்வதுதானே தனது ஒரே லட்சியம். அரசர் பயமா? அதுதான் இளவரசர் இருக்கிறாரே. அதெல்லாம் இல்லை. அவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு பூரணமாக அடிமைப்படுத்தி விட்டது அந்தக் கொடிய சிலை. ஆம் வேறு எந்தக் காரணமும் இல்லை. நம்முடைய மனைவியின் சிலை, நம் மனைவியைவிட அழகாக நாமே உருவாக்கும் சிலை, நம்மால் உருவான இதுவே போதும் அந்தப் பயனற்ற பேதையைக் காட்டிலும்...

     இப்படியேவிடக் கூடாது. இனியும் இதை வளரவிடக் கூடாது. அரசரிடம் நியாயத்தை உண்மையைக் கூற வேண்டும். சேனாபதியின் விஷப் பரீட்சை தோற்றுவிட்டது. என் கணவர் எனக்கில்லாமல் ஒரு சிலைக்கு அடிமையாயிருப்பதை இனி பொறுக்கவே முடியாது. என்னால் மட்டும் இல்லை, எவராலும்தான்...

     இப்படியெல்லாம் பலபடச் சிந்தித்து மனதை உசுப்பிக் கொண்டிருந்தவள் சூரிய மூலையின் எல்லையில் சிவிகை நுழைந்து விட்டதைக்கூட கவனிக்கவில்லை. சிவிகை தாங்கிகளோ ஆலய வாயிலைச் சேர்ந்ததும் சிவிகையை இறக்கி விட்டனர்.

     இப்போதுதான் அவள் கவனித்தாள். சிவிகை இறங்கியமர்ந்ததை. திரையை விலக்கிப் பார்த்தவள் சூரியனார் கோயில் எதிரில் சிவிகை இறங்கியிருப்பதைக் கண்டு “பெரியபிராட்டியாரின் திருமாளிகைக்குச் செல்லுங்கள்” என்றாள்.

     ஆனால் இவள் இவ்வார்த்தைகளைக் கூறி முடித்ததும் “வழி வழி... தள்ளி நில்லுங்கள். சோழமாதேவி வருகிறார்” என்று எச்சரிக்கை குரல் முழங்கியதும் சட்டென இறங்கினாள் சிவிகையிலிருந்து.

     அரசி ஆலயத்துள்ளிருந்து வெளியில் வந்ததும் தன் எதிரே பணிவாகக் கும்பிட்டு நிற்கும் பாவையைப் பார்த்தாள். அதிசயத்துடன் “ஓ... நீ... நீ... அடேடே! மல்லிகா... நீ இங்கு திடீரென்று... அன்னத்தம்மையார் வந்திருக்கிறாரோ?” என்று கேட்டதும் “இல்லை பெரிய பிராட்டியாரே? நான் மட்டும்தான் வந்தேன்” என்றாள் நிதானமாக.

     “நீ மட்டுமா? எதற்காக இங்கே வந்தாய்?”

     “உங்களைக் கண்டு பேச..”

     “என்னிடம் பேச என்ன இருக்கிறது?”

     “என்னைப் பிரிந்து என் கணவர் கங்கைகொண்ட சோழீஸ்வரத்தில் இருக்கிறார்.”

     “இருக்கட்டுமே. எல்லோரும்தான் அப்படி. அவர்கள் கடமையில் நாம் குறுக்கிடாமல் இருக்க இந்தப் பிரிவு அவசியமாகிறது மல்லிகா.”

     “என் கணவரை நான் மணந்து ஒரு மண்டலம் கூட ஆகவில்லை.”

     “இருக்கலாம். எனது மெய்க்காவலன் மகன் கூட திருமணம் புரிந்து கொண்ட நாலாம் நாளே கடமை புரியச் சென்று விட்டான்.”

     “ஆனால் அவன் ஒரு சிலையைத் துணையாகக் கொண்டு செல்லவில்லையே பிராட்டி...” என்று குமுறும் குரலில் அவள் கூறியதும் திகைத்த அரசி, “என்ன உளறல் இது? சிலை என்றால் அது என்ன விவகாரம். இதெல்லாம் புரியாத புதிராகப் பேசுகிறாயே? விஷயத்தைத் தெளிவாகச் சொல் பெண்ணே.”

     “என் கணவர் என்னைப் போல ஒரு சிலையைச் செய்து கொண்டு சென்றார். அன்று முதல் அவர் அச்சிலைக்கு அடிமையாய் மாறி அடியாளை அடியோடு மறந்துவிட்டார் பேரரசி!” என்று விம்மி வெடித்துக் கதறிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டாள்.

     அரசி உண்மை அறிய சில விநாடிகளாயிற்று.

     ‘சரிதான், சக்களத்திக்குப் பதில் சிலையைச் சக்களத்தியாகக் கருதிவிட்டாள் பாவம்.’

     “நீ எதற்காக இப்படி வந்து அழுது புலம்புகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. உன்னுடைய கணவன் உன் சிலையுடன் சென்றான் என்றால் அது உன் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. இப்போது அவன் நினைவால் நீ புத்தி பேதலித்துப் போய் அந்தச் சிலை மீது பழி போடுகிறாய். தெளிந்த புத்தியுள்ளவர்கள் இதைக் கேட்டால் கேலி செய்யாமல் இருப்பார்களா? போகட்டும். அவன் சிலையின் அடிமையாகி விட்டான் என்று நீ எப்படி அறிந்தாய்? வெறும் ஊகம்தானே இதெல்லாம்?”

     “இல்லை. உண்மை மகாராணி... நேரில் போய்க் கண்டவர் கூறினார்.”

     “அப்படிக் கோள் மூட்டும் கோணல் புத்திக்காரன் பேச்சை நீ நம்பினாயாக்கும்...”

     “எனக்கு ஒரே ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேச அனுமதிக்கும்படி மாமன்னரிடம் சொன்னால் போதும் பெரிய பிராட்டி.”

     “அதனால் என்ன பலன்? சிலை உன்னைக் கண்டு பயந்து ஓடிவிடுமா?”

     “ஓடச் செய்வேன்...”

     “ஓகோ! அதை எடுத்து வந்துவிடுவேன் என்று கூறுகிறாயா?”

     “ஆமாம் பெரிய பிராட்டியாரே, அவ்வளவுதான்...”

     “இல்லை மல்லிகா... நான் சக்கரவர்த்திகளிடம் இதெல்லாம் பேச இயலாது. நான் அரசியானாலும் எனக்கும் சில வரம்புகள் உண்டு. அரசியல் விஷயம், ஆலயப்பணி ஆகியவற்றில் தலையிடும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆனால் உன்னுடைய பரிதாப நிலையைக் காண எனக்கும் பரிதாபமிருக்கிறது. எனவே ஒன்று செய். சக்கரவர்த்திகளை நீயே போய்க் கங்கைகொண்ட சோழபுரத்தில் முறையாகச் சந்தித்து விண்ணப்பித்துக் கொள். அதிர்ஷ்டம் இருந்தால் அனுமதி கிட்டலாம். இல்லாவிட்டால் திரும்பி விடலாம். இது தவிர நான் இதில் எதுவும் செய்வதற்கில்லை. செய்வதும் சரியில்லை பெண்ணே.”

     மல்லிகை இனி இங்கு கெஞ்சிப் பயன் இல்லை என்று சிவிகையில் ஏறிவிட்டாள்.

     அரசியை அவசர அவசரமாக வணங்கிவிட்டு மீண்டும் சிவிகை ஏறிவிட்டாள் சஞ்சலமே உருவாக மாறிய மல்லிகை.

     அரசரை சந்திப்பது என்பது தற்போதைக்குச் சரிபடக் கூடிய காரியம் அல்ல. ஆத்திரம் அடைவார். மீறி இருக்கவும் முடியாது. எதுவும் செய்ய முடியாது. எனவே கங்கைகொண்ட சோழபுர எல்லையிலேயே சிவிகையை நிறுத்திவிட்டு தனியாக, நகரம் செல்லும் இதர மக்களுடன் நடந்தே சென்று நகரத்துள் சாதாரணமாக நுழைந்து விடுவதென்று முடிவு செய்தாள்.

     நீண்ட தூரம் ஒரே நாளில் சிவிகை தாங்கிகள் உறையூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுர எல்லை வரை சுமந்து வந்த சிரமம் காரணமாக மல்லிகை எல்லையிலேயே நிறுத்தி இளைப்பாறுங்கள் என்று கூறியதும் மறுக்கவில்லை.

     கங்கைகொண்ட சோழீஸ்வரம் முழுமையிலும் அண்மைக் காலத்தில் ஏகப்பட்ட கூட்டம் வந்து போய்க் கொண்டிருந்தது. காவலர்கள் ஆலய வேலை காரணமாகப் பலர் வந்து போவதால் சற்றே கண்காணிப்பு விதிகளைத் தளர்த்தியிருந்தனர். ஆகவே மல்லிகை இதர பெண்மணிகளைப் போல உள்ளே நுழைந்து விட முடிந்தது. அரசரை உடனே காண இயலுமா? அவ்வளவு பெரிய இடத்தில் அவர் எங்கே இருக்கிறாரோ... தரிசனம் கிடைக்கா விட்டால் என்ன செய்வது. கலங்கினாள். பிறகு பெண் புத்தி பரபரப்பில்... நிதானமிழந்துவிடும் என்பதற்கு உதாரணமாகச் செயல்பட்டுவிட்டாள்.

     “சிற்பிகள் தங்கியிருக்கும் இடம் எங்கே?” என்று எவனையோ கேட்க, அவன் ஒரு மெய்க்காவல் படையைச் சேர்ந்தவனாக இருந்ததால் “இப்படி வாம்மா... இந்த வீதி வழிதான் போக வேண்டும்” என்று கூறி நேராகத் தன் படைத்தலைவன் முகாமுக்கு அழைத்துப் போய்விட்டான்.

     மெய்க்காவல் படைத்தலைவன், “ஓ...! நீ கூத்துக்கலை அரசி அன்னத்தம்மையார் மகள் அல்லவா? ஏன் இங்கே வந்தாய் நீ? உன் கணவனைப் பார்ப்பதற்கென்று நீ வரலாமா?” என்று பதற்றத்துடன் கேட்டதும் ‘ஐயோ கடவுளே!’ என்று உள்ளூரக் குமைந்து போனாள்.

     “அம்மா தாயே. நீ இங்கே வந்தது பெருந்தவறு. அதுவும் எல்லையைத் தாண்டி எங்கள் காவலை மீறி வந்துவிட்டாய். அரசரிடம் யாராவது போய்ச் சொன்னால் எங்கள் தலையே போய்விடும். ஏனம்மா எங்களுக்கு இப்படி ஒரு தீமை விளைவிக்க வந்து சேர்ந்தாய் நீ?” என்று கவலையுடன் கேட்ட பிறகுதான் அவள் ‘ஓகோ! நம்மால் இவர்களுக்கு ஆபத்தா? சரி, வந்தது வந்தாயிற்று...’ என்று உறுதி கொண்டு “ஐயா, நான் உடனடியாகச் சக்கரவர்த்திகளைத்தான் சந்திக்க வேண்டும். பிறகுதான் மற்ற விஷயங்கள் எல்லாம். அதுவும் அரசர் அனுமதி அளித்தால்தான்” என்று பரபரப்புடன் கூறியதும் காவலர் தலைவன் சிறிது கவலை நீங்கித் தைரியம் கொண்டு “நல்ல காலம்... நீயே அரசரைப் பார்க்கத் துணிந்து எங்கள் சுமையைச் சற்றே குறைத்து விட்டது நல்லதம்மா. ஏனென்றால் நாங்களே உன்னை அவரிடம் அழைத்துப் போக வேண்டியதுதான் வாலாயமாக உள்ள விதிமுறை” என்று கூறிவிட்டு, தனது உதவியை அங்கே நிறுத்திவிட்டு “வாம்மா அரசரிடம் போவோம்” என்று முன்னே செல்ல அவளும் தயங்காமல் அவனைத் தொடர்ந்தாள்.

     மாலை மயக்கம் மறுகி இரவு தன் இருள் பேர்வையை பூமண்டலத்தில் விரித்திட முயன்றாலும் அன்று நிலாக் காலமாதலால், வான்மதி இருள் விரிப்பை நீக்க முன்வந்து கொண்டிருந்தான். அரசன் தமது ஆலய நிர்மாண ஆலோசகர்கள் புடைசூழ மாளிகை வாசலில் அமர்ந்திருந்தார். அத்தருணம் மெய்க்காவலன் வந்துள்ள விவரத்தை மாளிகைக் காவலன் அறிவிக்க “வரச்சொல்” என்றார் நிதானமாக.

     ஆனால் காவலன் சற்றே தயங்கிச் சுற்றியிருப்பவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு பிறகு மிகவும் அடக்கத்துடன் “காவலர் தலைவர் மட்டுமில்லை, உடன் ஒரு பெண்ணும் இருக்கிறாள்” என்று அறிவித்ததும் “என்ன? பெண்ணா? யார் அவள்? அவளுக்கு இங்கென்ன வேலை...?” என்று பதறியபடி கேட்டவர் சட்டென எழ மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.

     அரசர் பரபரப்புடன் வாசலை நோக்கி நடந்தார். மெய்க்காவலர் தலைவன் குனிந்த தலை நிமிராமல் வணங்கினான் பாவம்.

     “யார் அவள்? இங்கு எப்படி வந்தாள்?” என்று வேகமாகக் கேட்ட சோழர் அருகே சென்றதும் “ஓ...! நீ... நீயா... மல்லிகை. ஏன் அம்மா நீ இங்கு வந்தாய்? எப்படி வந்தாய்? எங்கே அன்னத்தம்மையார்? உன்னை இப்படி இங்கு ஏன் அனுப்பினார் அவர்? யார் அனுமதி பெற்று நீ இங்கு வந்தாய்?” என்று சினத்துடன் வார்த்தைகளைக் கேள்விகளாக வீசியதும் அவள் நிலைகுலைந்து போனாள்.

     அவரைச் சந்திக்க வந்த போதிருந்த தைரியம் சிறிது சிறிதாக நழுவிக் கொண்டிருந்தது.

     “ஏன் விழிக்கிறாய் நீ? யார் உன்னை இங்கு வரச் சொன்னது?” என்று மீண்டும் அவர் குரலில் உஷ்ணத்தை ஏற்றிக் கேட்டதும் பேதை விசித்து விசித்து அழத் துவங்கிவிட்டாள்.

     அரசர் நிதானத்துக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா?

     “பெண்ணே, இங்கு வந்து அழுது தொலைக்கவா இவ்வளவு தூரம் வந்தாய்? இதை அங்கேயே செய்து தொலைப்பதுதானே. நீலிக்கண்ணீர் வடிக்க இது நேரமில்லை. இங்கு இடமுமில்லை. ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? எந்த தைரியத்தில் வந்தாய்?” என்று ஆத்திரத்துடன் கேட்டதும் கூடியிருந்தவர் கலக்கமுற்று சற்றே அப்பால் நகர அவளும் இதுதான் சமயம் என்று எண்ணி மேலே சரிபடாமல் விம்மியதும் மன்னர் திடுக்கிட்டார். பிறகு காவல் தலைவரை நோக்கினார்.

     அவன் “ஆம். இன்று காலை அம்பலத்தாடி இவள் இல்லத்தில் புகுந்து... பிறகு கைதானான். நானே கைது செய்தேன். ஆனால்...” என்று விழுங்கினான்.

     “ஆனால்... ஆனால் என்ன நடந்தது?” என்று அரசர் மீண்டும் ஆத்திரத்துடன் கேட்டதும் “அம்பலத்தாடி சிறையிலிருந்து மீண்டும் தப்பிவிட்டான். தப்பியவன் இந்தப் பக்கம் வந்ததாகச் செய்தி. எனவே மெய்க்காவல் படை உஷாராகிச் சுற்றி வருகிறது. அப்படி வரும் போதுதான் இவள் வந்தாள். தங்களைக் காண வேண்டும் என்றாள். அழைத்து வந்தேன்?” என்று சொன்னதும் “ஓகோ! அந்தக் கயவாளி சிறையிலிருந்து தப்பிய பிறகு நீங்கள் உஷாராகி விட்டீர்கள் இல்லையா?” என்று கர்ஜித்ததும் அங்கு வந்து சேர்ந்தார் சேனாபதி அரைய பூபதி.

     “அரையரே, கேட்டீரா செய்தி? கயவன் சிறையிலிருந்து தப்பி விட்டானாம். இந்தப் பெண் இங்கே நம்மிடம் வந்திருக்கிறாள்” என்று அரசர் ஆத்திரத்துடன் கூறிவிட்டு பற்களை நறநறவென்று கடித்தார்.

     அரையர் நிதானித்தார். பிறகு சட்டென்று நயமான குரலில் “அரசர்தான் உன்னைக் காக்க முடியும் அந்தக் கயவனிடமிருந்து என்று எந்தப் பிரகஸ்பதியம்மா உனக்கு யோசனை சொன்னான்?” என்று கேலியும், கவலையும் கலந்த குரலில் கேட்டார் அரைய பூபதி.

     அவள் கலக்கத்துடன் அரையரை பார்த்து விழித்தாள்.

     ஆனால் அரசர் சற்றே நிதானமுற்று “ஓகோ! அப்படியானால் அங்கே உறையூரில் இருப்பது ஆபத்து என்ற பயத்தில் நீ புறப்பட்டு வந்தாயா? அந்த அம்பலத்தாடி நாளை உயிர் இழப்பான். அதுவரை நீ சூரியனார் கோயிலில் போய் இரு. யாரங்கே... இவளை உடன் அழைத்துச் செல்லுங்கள். அரசியின் இருப்பிடத்துக்கு உம்...” என்று உறுமி உத்தரவிட்டதும் காவலன் ஓடினான் சிவிகை கொண்டு வர.

     “சக்கரவர்த்திகளே! மன்னிக்க வேண்டும்; அந்தக் கயவன் இங்கே என்னை துரத்தி வருகிறான் என்று காவலரே கூறினார். தவிர நான் சோழமாதேவியைச் சந்தித்தேன். அவர்தான் என்னை ‘நீ உடனே மன்னர்பிரானிடம் போய்ச் சேரு’ என்றார்” என்று கூறியதும் அரசர் மீண்டும் பதறிவிட்டார். இதற்கு என்ன பதில் கூறுவதென்று அரைய பூபதியையே நோக்கினார் அவர்.

     “தனக்கு பேராபத்து நெருங்கிவிட்டது என்ற பீதியில் என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம், எதற்கு என்று கூடப் புரியாமல் வந்திருக்கிறாய் நீ... இல்லையா?” என்று சேனாதிபதி கேட்டதும் அவள் தலையசைத்துவிட்டு “உன் கணவன் உன்னைக் கைவிட்ட பிறகு நான்தான் உனக்கு எல்லாம் என்று உறுதிபட எச்சரித்துவிட்டான் அந்தக் கயவன்” என்றாள் விநயமாக.

     “என்ன? உன் கணவன் உன்னை கைவிட்டானா? யார் சொன்னது? அவனுக்கு உன்னைக் கைவிட உரிமை ஏது? அவன் கட்டிய கதை இது?”

     “நீங்கள் தேடும் அதே அம்பலத்தாடிதான். அவர் ‘இனி என் மனைவி தேவையில்லை. சிலையே போதும். நான் இனி அந்த மாமிச பிண்டத்தைக் கண் எடுத்தும் பாரேன்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம் என் கணவர்.”

     “யாரிடம்?”

     “அம்பலத்தாடியிடம்..”

     “அப்பவே எச்சரித்தேன் அம்பலத்தாடியை வெளியே விட்டு வைத்தது தவறு என்று. அவன் அடிக்கடி இங்கு வந்து போவதையும் காவலர்கள் கண்டுங்காணாதது போல் இருப்பதையும் கூட எச்சரித்தேன்... பயனில்லை. இப்பொழுது அவன் குற்றத்துக்கு மேல் குற்றமாகச் செய்து விட்டான். இவள் தன் கணவன் ஆதரவையிழந்து விட்டாள் என்ற பிரமையை இவளுக்கு உண்டாக்கி விட்டான். எனவே எப்படியாவது கணவனைக் கண்டிட வேண்டும், அந்தக் கயவனிடமிருந்து தப்புவதற்கு அரசர் பாதுகாப்பை நாடிட வேண்டுமென்று வந்திருக்கிறாள். இங்கு வருவது தவறு என்று சிந்திக்கும் அளவுக்கு இவள் சித்தம் தெளிந்திருக்கவில்லை. இது ஒரு பெரிய பிரச்னைதான். நமக்குச் சம்பந்தமில்லாத ஆனால் நாமே தீர்த்தாக வேண்டிய ஒரு சிக்கல்தான் இது” என்று தமக்கே உரிய வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தினார் அரைய பூபதி.

     சோழ மன்னனுக்கு இப்போது எதுவுமே தெளிவுபடாத ஒரு குழப்ப நிலை. மல்லிகை தன் கணவனைக் காண வந்தது ஒரு விதத்தில் தனக்கு ஏற்பட்ட அல்லது ஏற்பட இருக்கும் ஆபத்திலிருந்து தப்பவே என்பது போல ஒரு சூழ்நிலையை அரையர் உண்டாக்கி விட்டதால் மன்னரின் குழப்பம் கூடியது.

     “அம்பலத்தாடி இவளிடம் வெறிகொண்டு அலைகிறான். இவளுடைய அந்தக் கணவனோ அந்தச் சிலையைக் கட்டிக்கொண்டு இரவும் பகலும் அதுவே கதியாய் கிடக்கிறான். அம்பலத்தாடி சொல்லிய மாதிரி அவன் சிலை காரணமாக இவளை மறந்திருந்தாலும் அதிசயமில்லை. ஒரு வகையில் அது நல்லது என்று நாம் நினைத்தது போக இப்போது...”

     “அரையரே, இருள் வெகுவாகப் பரவிவிட்டது. இவளை மீண்டும் சூரியனார் கோயிலுக்கு அனுப்புவது முறையல்ல; இவளை இங்கேயே எங்காவது...”

     “சக்கரவர்த்திகளே, கடைசி முறையாக நான் ஒருமுறை என் கணவரைப் பார்த்துவிட்டு..” என்று துக்கத்துடன் கூறியதும் பதறிப்போன மன்னர், “நீ என்ன பேசுகிறாய் என்று உனக்கே புரிகிறதா?” என்று கத்தியதும்...

     “என்னை எந்த நொடியிலும் அம்பலத்தாடியால் கவர்ந்திட முடியும்...”

     “இவ்வளவு கட்டுக்காவலை மீறி அவன் எதுவும் செய்ய முடியாது. உள்ளே வரக்கூட முடியாது.”

     “நான் வந்தேன் இல்லையா?”

     மன்னர் இப்போது திடுக்கிட்டார். பிறகு அரையரைப் பார்த்து, “ஏன் அரையரே, இந்தப் பெண்ணின் பரிதாப நிலையைப் பார்த்தால் நமக்கும் வேறு வழி புலப்படவில்லையே? இன்று ஒரு இரவு மட்டும் இவள் இங்கே சிலாயனனுடன் தங்கினால் என்ன? விடிந்ததும் அனுப்பிவிடலாமில்லையா?” என்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் கேட்டதும் அரையர் அடக்கமாக “தங்களுக்குத் தெரியாததல்ல; ஆயிரம் இருந்தாலும் நாமும் மனிதர்கள்தானே... சில சமயங்களில் விதிமுறை, கண்டிப்பு, உறுதியெல்லாம் தளர்த்த வேண்டி நேருகிறது...” என்று இழுத்ததும் “ஆம், தளர்த்தத்தான் வேண்டும். வேறு வழியில்லை. யாரங்கே... இவளை... சிலாயனன் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்திரவிட்டார் சோழ மாமன்னர், மேலும் அங்கேயே குழம்பியபடி நிற்க மனமில்லாது...