ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

28

     அழகுச்சிலை அந்த அறையின் நடுமையத்தில் ஒயிலாக நிற்க, அதன் அடியில், அதாவது பாதங்கள் உள்ள பகுதியில் நன்றாகச் சாய்ந்து தன் விழிகளை எங்கோ செலுத்தி மெய்ம்மறந்த நிலையில் இருந்தான் சிலாயனன். மல்லிகை அரவமின்றி அறையுள் வந்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அவள் கவனித்தாள். தன் கணவன் தலை சாய்ந்து தன் மடியில் கிடப்பது போல அதன் காலடியில்...

     ‘சே! கேவலம் ஒரு சிலையின் காலடியில் கிடக்கிறானே... இது கொடுமையிலும் கொடுமை இல்லையா? கொண்ட மனைவி அங்கே தவியாய்த் தவித்து உருகி இருக்க இங்கே ஒரு கல்லுக்கு அடிக்கிறதே யோகம். இது யாரால் பொறுக்க முடியும்? கடவுளே! உனக்கே இது நியாயமாகப்படுகிறதா? அபலை நான் அவதியுற கேவலம் ஒரு கல்லுக்கா இத்தனை மதிப்பு?’

     இன்னும் அவன் தன் பார்வையை மாற்றவில்லை. கதவில் விரலால் தட்டி சிறு அரவமுண்டாக்கினாள் மல்லிகை. ஊஹும் பயனில்லை. அவன் திரும்பினால்தானே?

     “சுவாமி...” என்றுதான் வழக்கமாக கணவனை எப்படி அழைப்பாளோ அப்படி அழைத்தாள் தனது இனிய குரலைச் சற்றே கடுமையாக்கிக் கொண்டு.

     பதறி எழுந்தான் சிற்பி. சிலையை வெறுத்து நோக்கிகினான். சட்டென எழுந்தான். சிலையின் கரம் பிடித்து... “நீ முடிவில் பேசிவிட்டாய். ஆம் என்னை சுவாமி என்று அழைத்தது நீதானே... தயவு செய்து... பேசு... பேசு... நீ என்னுடையவள். உம் பேசு. நீ என்னோடு வந்தவள். எனக்காக வந்தவள்.”

     “பைத்தியம் மாதிரி பிதற்றினால்...” என்று ஆத்திரத்துடன் கத்தினாள் மல்லிகை.

     “ஆகா! பேசிவிட்டாய் நீ... ஆம் நான் பைத்தியம்தான். உன்னுடைய பைத்தியம் நான்...” என்று அதை... உணர்ச்சிப் பெருக்குடன் இறுக அணைத்துக் கொண்ட போது பாய்ந்தாள் மல்லிகை.

     “போதும் சிலை வெறி... வெட்கமாய் இல்லை உங்களுக்கு? கல்லை கட்டியழும் ஜடமாக இருந்து இப்போது பைத்தியமாக மாறிவிட்டீர்களே...”

     திடுக்கிட்டான் சிலாயனன். திரும்பினான். அவன் கண்கள் திரையிடப்பட்ட மாதிரி ஒரே புகை மண்டலமாகத் தெரிந்தது. பிறகு உற்றுப்பார்த்தான். கண்களைக் கசக்கிக் கொண்டு...

     “எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது” என்று முணுமுணுத்தது அவன் வாய்.

     மல்லிகாவால் மேலும் பொறுமையாயிருக்க முடியவில்லை. அவன் முகத்தைத் திருப்பிவிட்டு “என்னைப் பாருங்கள். நான் யாரென்று தெரியவில்லையா...? என்னை நன்றாகப் பாருங்கள். பாழும் சிலையால் பாழ்பட்ட மனதைச் சற்றே சீர்ப்படுத்திப் பாருங்கள்” என்று ஆவேசத்துடன் கத்தியதும் அவன் மலர மலர விழித்து... “எல்லாம் ஒரே குழப்பம்... கனவோ கற்பனையோ. எல்லாம் மாயமாய் இருக்கிறது” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

     “மாயமும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. நான்தான் வந்திருக்கிறேன்... உங்கள் மனைவி மல்லிகை... நன்றாகப் பாருங்கள்” என்று அவன் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

     அவனோ அவள் பிடியால் சலனம் கொள்ளாமல், “கனவு... சிலை பேசுவதும் வருவதும் என்னைப் பிடிப்பதும் எல்லாமே கற்பனை மாயை” என்று கூறிவிட்டு மீண்டும் சாய்ந்து உட்கார்ந்து விட்டான்.

     பாவம்! இப்போது அவள் என்ன செய்வாள்? தன்னை அன்பாக ஆர்வத்துடன் வரவேற்கவில்லை அவன். தொட்டுப் பேசியும் உணர்ச்சி பெறவில்லை. பரவசமில்லை. அட! ஒரு புன்முறுவல் கூட இல்லையே... ஐந்து நாக்குகளை நீட்டிக் கொண்டு பந்தம் போல எரியும் மாடத்துக் கல்விளக்கை கோபத்துடன் நோக்கினாள். அது வீசும் ஒளியில் அந்தச் சிலையின் கண்கள் இவளை எடுப்பாகப் பார்த்தன.

     சிலையின் பார்வை தீட்சண்யத்தை அவளாலேயே தாங்க முடியவில்லையே...

     அதன் காலடியில் கிடந்தவன் தூங்குவது போலக் கிடக்கிறானே. ஒருவேளை அருகில் அமர்ந்து பார்த்தாள். ஆம். அவன் உறங்கத் துவங்கி விட்டான்.

     ‘அடக்கடவுளே! ஓடோடி வந்த காதல் மனையாளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த இடம்விட்டு நகராமல் சீராகக் குறட்டைவிட்டுச் சுகமாய்த் தூங்குகிறாரே... இதற்குத்தானா இங்கு வந்தேன். சே... இந்தப் பாழும் சிலை செய்துவிட்ட மாயச்சூது இது... என்னை மறக்கச் செய்துவிட்டது. இந்தப் பேய்க்கு...’

     சட்டென எழுந்துச் சிலை எதிரே போய் நின்றாள். ஆத்திரமும், அழுகையும் கொண்ட மனம் விழிகளிலும் வெறுப்பை ஏற்றிவிட்டதால் கொவ்வைக் கனியெனச் சிவந்த அவள் கண்கள் அந்தச் சிலை மீது வெறுப்பை உமிழ்ந்தன.

     “இனி நீ இருக்கக் கூடாது. ஆம். இருக்கவே கூடாது. எனக்குப் போட்டியாக கேவலம் ஒரு கற்சிலையா?” என்று கத்தினாள்.

     ஆழ்ந்து உறங்குபவன் இப்பக்கூட அசையவேயில்லை. சிலையும் அவளை ஊடுருவிப் பார்ப்பதை நிறுத்தவில்லை.

     மல்லிகையின் ஆத்திரமோ எல்லை மீறிவிட்டது.

     “விட்டேனா பார் உன்னை?” என்று சிலையைக் கைகளால் புடைத்தாள். பாவம்.

     “பாழும் சிலையே நீ... நீ...” அதைப் பிடித்து ஆட்டினாள். அசைத்தாள்... மீண்டும்.

     “தள்ளு வேகமாகத் தள்ளிவிடு.”

     “யார் அது?”

     “காவல் தேவதை. உன்னை மறந்திடச் செய்த இச்சிலையைப் பழிவாங்கிவிடு.. நான் உதவுகிறேன்.”

     “காவல் தேவதையா... அப்படியென்றால்...?”

     சிலை ஆடிற்று திடீரென்று.

     தன்னுடைய கைகளால் பிடித்த பிடிதான் சிலை ஆடக் காரணம் என்று எண்ணினாள் மல்லிகை. குறுக்கிட்டு பேசிய வரை மறந்துவிட்டாள். சிலை ஆடுகிறது. இனி தயங்கக் கூடாது.

     “நீ ஒழி. உம்.. அடியோடு ஒழி. உம்.. சில்லு சில்லாகச் சிதறிப் போய்விடு...”

     சிலை முன்னும் பின்னும் அதிவேகமாக ஆடுகிறது.

     “எனக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது. ஆம். நான் கொண்ட கணவனுக்காகப் போராட வந்தவள். உம்... போ, போ.”

     பயங்கரமாக இப்போது ஆடுகிறது சிலை.

     “ஐயோ! இதென்ன? நீ யார்... ஐயோ நீயா... ஆ! கடவுளே... என்னை... என் கணவர்... கணவர்... அவர் மீது சிலை. ஐயோ...”

     அவ்வளவுதான் சிலை அதிவேகமாக அவள் மீது சாய அவள் சிலாயனன் மீது விழுந்து உருள...

     “மல்லி..” என்ற தினக்குரல் எங்கோ கிணற்றிலிருந்து கத்துவது போல் தொடர்ந்து ஒலிக்க...

     “சுவாமி... நான் பாவி... உங்களை... ஐயோ கடவுளே... சுவாமி...”

     “மல்லி...”

     “சுவாமி...”

     “மல்லி...”

     ஓலம் சுருதி பேதமுற்றதுடன் பிறகு நலிந்துவிட்டது... ஆசைக் கணவனும் அருமை மனைவியும் உயிரற்ற சடலங்களாகச் சிலையினடியில் நசுங்கிக் கிடக்க பேய்ச் சிரிப்பு ஒன்று எழுந்து நாலா திசையிலும் எதிரொலிக்கிறது.

     காவலர் அங்கே ஓடிவர... அரசனே வந்துவிட்டார் அவ்வறைக்குள். சேனாதிபதி வந்தார்.

     “என்ன இங்கே...?”

     விளக்கு ஏற்றப்பட்டது. எதிரே கொலைகாரன் நின்றான் கொக்கரிக்கும் பாவனையுடன்.

     “இனி அவள் அவனுக்கும் இல்லை. எனக்கும் இல்லை... யாரும் யாருக்கும் இல்லை...” வாய்விட்டுச் சிரித்தான் வெறிகொண்டவனாக... ஆம். அவனுக்கு வெறி முற்றிவிட்டது. இனி முழுவெறி கொண்ட கொலைகாரப் பைத்தியம்தான் அவன்.

     அரசர் கண்களை மூடிக் கொண்டார், கீழே கிடந்தவர்களின் கோர நிலை கண்டு...

     “அரைய பூபதி.. விதி நம்மை வென்றுவிட்டது” என்று ஆதங்கத்துடன் தோல்விப் பொருமலுடன் கூறிய அரசர் “உம்... இந்த முழுப் பைத்தியத்தை இல்லை கொலைகார அம்பலத்தாடியைக் கொண்டு போய்க் கழுவேற்றுங்கள்... உம்” என்று கர்ஜித்தார்.

     வெளியே மன்னர் வேகமாக வந்ததும் அவர் அண்டை வந்து நின்றார். அரைய பூபதி.

     ஓடோடி வந்தார் பிரம்மமா ராயர்... தொடர்ந்து சற்றே பரபரப்புடன் வந்தார் அநிருத்தர்.

     “அமைச்சரே, ஆண்டவன் என் ஆசையை, ஆணவம் என்று கருதிப் பழி வாங்கி விட்டான். சத்திய சங்கர சிற்ப வேளாரை தந்தை இழந்தார். அவருடைய அருமை மகனை நான் இழந்தேன். சோழ நாடு இருபெரும் கலையரசர்களை இழந்து விட்டது” என்று குழந்தை போலக் கூறிவிட்டு விம்மி வந்த துக்கத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்க முயன்றார்.

     “இல்லை சக்கரவர்த்திகளே. நாம் தவறு எதுவும் செய்யவில்லை. பாரத காலத்திலிருந்து இப்படி நிகழ்வதுண்டு. ஒரு பலி இல்லாமல் எதுவும் துவங்குவதில்லை. இறைவன் நம் கலைஞனையே தன் காணிக்கையாகப் பெற்றுக் கொண்டு விட்டார். அவ்வளவுதான்” என்றார் நிதானமாக.

     “ஆம் சக்கரவர்த்திகளே. சிற்பி சிலாயனன் இறைவனுடன் இணைந்து விட்டான். கங்கைகொண்ட சோழீஸ்வரம் உள்ள வரை அவன் இருப்பான். அவன் சமைத்த உள்மண்டபம் என்றும் அழியாது. அவன் பேரும் புகழும் என்றும் அழியாது. இறைவன் தனக்குப் பிரியமான ஒன்றை நம்மிடமிருந்து தானாகவே எடுத்துக் கொண்டு விட்டான். அதுதான் அவன் திருவிளையாட்டு...” என்றார் அரைய பூபதி.

     ஆலய மணிகள் ‘டணார் டணார்’ என்று முழங்கி அரைய பூபதியின் விளக்க வார்த்தைகளை ஆமோதித்தன.

     வரலாற்று நிகழ்ச்சிகளுக்குத் தொடக்கமும் முடிவுமில்லை. மனித சமூகம் உள்ள வரை, இப் பூமண்டலம் உள்ள வரை வரலாறும் உண்டு. அதாவது உயிர்களும் உயிர்களைக் கொண்ட உலகமும் உள்ள வரை அவற்றின் வரலாறு இருந்துதானே ஆக வேண்டும். எனவே முடிவு ஏது?

     என்றாலும் அன்று சோழ இராஜேந்திரனின் மகத்தான வாழ்க்கை வரலாற்றில் உலகம் போற்றிடக் கூடிய பல நிகழ்ச்சிகள் இருந்தன வென்றாலும், அவன் வாழ்க்கையில் ஒரு சோக சம்பவமும் உண்டாகிவிட்டது. ஏனையவர்களை அது எந்த அளவுக்குப் பாதித்தது என்பதைக் காட்டிலும் இராஜேந்திர சோழனையே அது அதிகம் பாதித்து விட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது. ஆனால் அத்துடன் நிற்கவில்லை, அது சோக நாடகம் என்று கூறும் போது...

     ஆதித்தன் தன் நண்பன், அப்பாவியான கலைஞனை ஒரே மகனைத் தன்னிடம் ஒப்புவித்த அந்த உத்தம மாமேதைக்கு என்ன கூற முடியும் என்ற வேதனையால் பித்துப்பிடித்தவன் போல் மாறிவிட்டான். அரசர், அரசி, ஏனைய பலரும் எவ்வளவோ தேற்றியும் அவன் தெளிவடையவில்லை. நாளுக்கு நாள் அவன் ஏக்கத்தால், தன் நண்பனை இழந்துவிட்டோம், அவனுடைய அப்பன் தன் மீது வைத்த நம்பிக்கையை இழந்து விட்டோம்... சோழ நாடு பெறற்கரிய ஒரு கலைஞனை இழந்துவிட்டது. இனி என்ன... இப்படியெல்லாம் நினைத்து ஏங்கித் தவித்துப் படுத்த. படுக்கையாகி விட்டான்.

     பேரரசர் ‘இதென்ன சோதனை... கடவுள் புதியதோர் சாதனையைக் கொண்டு தன்னை வேதனைக் குள்ளாக்குகிறாரே... ஒருவேளை சிற்பி சத்திய சங்கர வேளார் அவர் மகனை இழந்தது போல, அந்தத் துர்மரணத்துக்குக் காரணமாக இருந்த தன்னை விதி பழி வாங்க இம்மாதிரி... தன் மகனைத் தன்னிடமிருந்து... தெய்வமே.’

     இராஜேந்திர சோழன் தெய்வத்தைச் சரண் அடைந்தாலும் நட்பும் நம்பிககையும் வென்றுவிட்டது.

     அடுத்த மூன்றாவது நாள் சோழ இளவரசன் ஆதித்தன் கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருவடிகளைச் சேர்ந்து விட்டான்.

     தன்னை நம்பி வந்தவன் உயிரிழந்த சோகம் தாளாமல் தன்னையே தன் உயிரையே இழந்துவிட்ட மகன் ஆதித்தன் உயிர்த் தியாகம் காரணமோ என்னவோ, இராஜேந்திரன் எல்லாம் முடிவுற்ற நிலையில் உள்ள ஆலயத்தில்... இன்னும் கோபுரம்தான் பாக்கி என்ற நிலையில் சட்டென்று உத்திரவு ஒன்று போட்டான்.

     “இத்துடன் நிறுத்துங்கள் ஆலய அமைப்புப் பணியை. இனி எக்காலத்தும் இப்பணி தொடர வேண்டாம்” என்று மாமன்னன் உத்திரவிட்டதும் அத்தனை பேரும் சிற்பிகள், கல்தச்சர்கள், ஓவியர்கள், வரைபடக்காரர்கள், கொல்லர், தச்சர் போன்றவர்கள் மட்டுமில்லை, அரசியல் நிர்வாகிகள் மட்டுமில்லை, நாடே, நாட்டு மக்களே ஆடி அதிர்ந்து போய்விட்டனர்.

     இதென்ன விபரீதம் என்றும் பதறினர். துக்கம் தாள முடியாத ஒன்றுதான். இறந்துபட்டவர் திரும்பப் போவதில்லை என்பது பேரரசர் அறியாத ஒன்றல்ல. எனினும் ஏதோ சில நாட்களுக்குத் துக்கம் காத்துவிட்டுப் பிறகு தொடர்ந்திட வேண்டியதுதானே.

     இப்படித்தான் எண்ணினர் அனைவரும். ஆனால் வாய்விட்டுச் சொல்லத் தைரியமில்லை எவருக்கும்.

     பட்டத்திளவரசனிடம் மட்டும் கூறினான் மன்னன். “தஞ்சையில் தெய்வீகமான எந்தை என்றென்றும் சிறப்பாக இலங்க பெருவுடையார் கோயிலைக் கட்டினார். அவரிடம் பக்தியும் சிரத்தையும் பூரணமாக இருந்ததால் இறைவன் எந்த இடையூறும் செய்யாது ஆலயத்தை உருவாக்கத் துணை செய்தார். என்னிடம் ஏதோ ஒரு குறை. பக்தியோ சிரத்தையோ குறைவு. எனவே தெய்வம் என் ஆணவ முயற்சியைச் சிதைத்து விட்டது. ஆலயத்தை வெற்றி மிதப்பில் அமைத்திடத் துணிந்தேன் போலும். கை மேல் பலன். நான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடலிலும் நிலத்திலும் நான் கண்ட வெற்றிகள் என் சொந்தச் சாதனைகளென்று நான் அவ்வப்போது நினைத்து இறுமாந்திருந்தால்... கஜினி நாடு நகரங்களை கோயில் குளங்களை அழிப்பதில் இறுமாப்படைந்து எக்களித்தது தவறு என்று எடுத்துக் கூறி அவனை நான் மாற்ற முயன்றது ஏதோ ஒரு நல்ல பணிதான். என்றாலும் அது என் மனநிலையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நிகழ்த்தியதாக இருக்கலாம். நானும் இங்கு இப்படி ஒரு கோயிலை நிர்மாணிப்பதென்ற திட்டம் இன்று நேற்றல்ல... எம் தந்தையார் காலத்திலேயே ஏற்பட்டதுதான். என்றாலும் இறைவன் வேறு வகையில் கருதியிருக்கலாம் அல்லவா?

     ‘தந்தை அமைத்திருக்கும் தனிச் சிறப்புள்ள பேராலயத்தில் நிறைவாக இருந்திடும் என்னை நீ மறந்து, ஏதோ எனக்கே புதியதொரு நிலையம் அமைப்பதாகக் கருதி இக்கோயிலை அமைக்கத் துணிந்தாயே... இது மமதை இல்லையா? கங்கை வென்ற காவிரி நாடன் என்று வடவர் வெகுவாக புகழ்ந்ததும் அப்புகழ்ச்சியில் தன்னையே மறந்து நாமும் சாதனை, ஆம், அகிலம் புகழும் சாதனை புரிந்துவிட்டோம். எனவே கங்கைக் கரையில் மட்டுமில்லை. இங்கேயும் வெற்றிச் சின்னம், அக்கங்கையின் பெயரில் நிர்மாணிப்போம் என்று நீ நினைத்திடவில்லையா? கங்கை பாயும் நாட்டில் நீ வெற்றிச் சாதனை புரிந்ததை வரலாறுதான் போற்றிட வேண்டுமேயன்றி நீயாக அதைப் பெரிதுபடுத்திடுவது நியாயமில்லை. இங்கே காவிரி வெற்றி நிலையத்தை உருவாக்குவதற்குப் பதில் நீ கங்கைகொண்ட சோழனாகி, நீ அமைத்திடும் நகருக்குக் கங்கைகொண்ட சோழபுரமாக மாற்றிடுவது எவ்வகையில் நியாயம் என்று கூறிட முடியும்...’

     “இறைவன் இவ்வாறெல்லாம் நினைத்திருக்கலாம். இத்தீர்ப்பின் வழி பிறந்ததாகவே, இப்படி ஒரு தீர்ப்பினையும் வழங்கியிருக்கலாம் மகனே. இனி வேறு வழியில்லை. அவர் தம் தீர்ப்புக்கே கட்டுப்பட்டு நடப்பதே சாலச் சிறந்த சிறப்பும் நிறைவுமாகும்” என்று பேரரசன் அறிவித்த தருணத்தில் அவர் தம் கருத்தினைப் பூரணமாக ஆதரிப்பது போல ஆலய மணிகள் ‘டண் டணார்’ என்று தொடர்ந்து ஒலித்தன.

     இறைவன் முன்னே சோழ இராஜேந்திரன் தன் குமாரர்களுடன், ஏனையோருடன் கலக்கமே உருவாக நின்று ஆண்டவனை வழிப்பட்ட காட்சியே அவனுடைய மனநிலைக்குச் சாட்சியாக நிலைத்தது.

முற்றும்