ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

4

     பூரணசந்திரர் தான் வருவதற்கு முன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததைச் சட்டென நிறுத்தி விட்டதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை மகிபாலர். ஏனெனில் அதைவிடக் கவலை தரும் விஷயம் அங்கு ஒன்றுடன் அவர் திரும்பவும் வந்திருந்தார்.

     ‘கூர்ஜரத்தைத் திரும்பவும் தாக்கிட வருகிறான் கஜினி முகமது’ என்பதுதான் அந்த விஷயம்.

     “லாகூரைத் தாண்டி விட்டான். மிகப் பெரும் படைகளுடன் வந்து கொண்டிருக்கிறான். இந்த தடவை பதினைந்தோ, பதினாறோ தெரியவில்லை, அவன் படையெடுத்து வருவது. ஆனால் இது மிகப் பயங்கரமான படையெடுப்பு என்றே கருதுகிறார்கள் நம்மவர்கள். சோமநாத ஊரில் உள்ள கோயில் ஒரு பெரிய சுரங்கம் என்று முகமது கருதுவதாகச் சொல்லுகிறார்கள். இதுவரை அங்கு நடத்திய கொள்ளைகள் போதாதென்று இன்னும் என்னதான் இருகிறது அங்கே கொள்ளையடிக்க” என்று பரிதாபத்துடன் கூறனார் மகிபாலர்.

     பூரணசந்திரர் இந்தத் தகவலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டார். முன் தடவை கஜினியின் தளபதியொருவன் தங்கள் பகுதிக்கு வந்து நடத்திய நாச வேலைகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. அந்த நாசம் இன்னும் கூட நிவர்த்தி அடையவில்லை. பங்கிமப் பிரதேசம் மட்டும் இல்லை, கோசலம், மகதம் கூடத்தான் அனுபவித்தது கொடுமைகளை.

     ராஜபுதனம் ஏற்கனவே அனுபவித்த துயரம் போதாதா? கூர்ஜரம் இன்னும் எத்தனை தடவைதான் இத்தகைய படையெடுப்புகளுக்கு இலக்காக முடியும்? ஏற்கனவே பாழடைந்த பகுதிகள் போதாதா? எத்தனை சிற்பங்களைப் பலி கொடுத்திருக்கிறது அந்தப் பூர்வீகமான நாடு? எத்தனை சிற்பிகளைக் கைது செய்து கொண்டு போனான் அந்தக் கஜினி! அவை போதாதா?

     மீண்டும் ஒரு படையெடுப்பு என்றால்... பூரணச் சந்திரர் மனம் கூர்ஜரத்துக்காக இரங்கியது. ராஜபுதனத்திற்காக வருந்தியது. ஆனால் தனது நாட்டைக் காக்கத் தன்னால் முடியாதென்று அஞ்சித் தவித்தது அவர் மனம்! இப்போதைய நிலையில் அவர் தங்கள் எல்லையில் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கு மகிபாலரின் உதவி நாடினார். அவரோ சோழரிடம் வேண்டி உபதளபதி விஜயனை அனுப்பி வைத்தார். ஆனால் இப்பொழுது உபதளபதி விஜயனுடன் பூரணச் சந்திரர் பெரிய தகறாறு ஒன்றை செய்து கொண்டுவிட்டார். அவனோ இவர் மகள் மதுமதியுடன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டு அவ்விவாகத்தின் பின்னணியாக ‘தேனிலவு’ அனுபவித்துக் கொண்டிருக்கிறான் சுந்தரவனத்தில். இவருடைய ஏச்சையும், பேச்சையும் இவர் மகளே இலட்சியம் செய்யாத போது அவன் எப்படி மதிப்பான்?

     இந்த நிலையில் மகிபாலரிடம் உதவி நாடினால், எங்கே அந்த விஜயன்? அவனே இருக்கும் போது வேறு உதவி கேட்டால் எப்படிக் கிடைக்கும் என்று திருப்பிவிடுவார்! மகளுடன் மறைந்து விட்டான் அவன் என்றால் இன்றைய வங்க நாடே தமிழ் வீரர்களை மருமகப் பிள்ளைகளாக ஏற்று விட்ட பிறகு நீங்கள் மட்டும் ஒதுங்கி நிற்பது சாத்தியமா? அடிக்கும் புயல் உங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு அடிக்குமா என்ன? என்று கேலி செய்வார்!

     அல்லது நேரிடையாகவே சோழ மாமன்னரிடம் உதவி கேட்டால் ஏன் புதிய வம்பை விலைக்கு வாங்க வேண்டும் நீங்கள்! எங்கள் உபசேனாதிபதி நடந்து கொண்டது போல மற்றவர்களும் நடந்து கொண்டுவிட்டால் பேராபத்து இல்லையா? என்று கேட்பாரே!

     “உங்களுக்கு இந்தச் செய்தியைக் கொணர்ந்தவர் யார் மகிபாலரே!” என்று இதுகாறும் மவுனமாயிருந்த இராஜேந்திரர் கேட்டதும் அவர் இப்பொழுதுதான் கன்னோசியிலிருந்து ஒரு தூதுவன் வந்தான்” என்றார் கவலைப் பரப்பரப்புடன். பிறகு தொடர்ந்து,

     “என்னை உடனே சந்திக்க விரும்புகிறார் அவர். உங்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு நான் அங்கு புறப்படுகிறேன்” என்றார் மகிபாலர்.

     சோழன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். பரகேசரியின் யோசனை கண்டதும் அரைய பூபதி கவலைக்குள்ளானார். மீண்டும் “ஏதோ ஒன்று நடக்கப் போகிறது! அது என்னவாயிருந்தாலும் தற்போதைக்கு அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கும். படைவீரர்கள் எத்தனைக் காலம்தான் சோம்பேறித்தனமாக இருக்க முடியும்? இதனால்தானே அவர்கள் பின் விளைவுகளையுணராது வங்கப் பெண்களைப் பிடித்து கொண்டு சுற்றுகிறார்கள்! சேனர்களோ, பாலர்களோ வங்கதேசத்தின் மக்கள் யாராயினும் அவர்களுடன் இருக்கட்டும். எந்த ஒரு சச்சரவும் என்றில்லாமல், இப்போது ஒரு புதிய பிரச்னை முளைத்திருக்கிறது இந்த தமிழர்கள் வங்க மகளிர் இணைப்பால். இது போதாதென்று இன்னொரு திடீர் விபரீதமா?

     கஜினிமுகமது என்பவன் யாரோ, எவனோ? நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? திடீரென்று அவன் படையெடுப்பு அது இது என்று இந்த மகிபாலர் புலம்பித் தள்ளுகிறார். இவரைப் போல இன்னும் எத்தனை மன்னர்கள் அவனுடைய கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றார்களோ? அவர்களும் இவருடன் சேர்ந்தாவது சோழராஜனை, ‘நீங்கள் பெரும்படையுடன் வடநாடு வந்து வெற்றி கண்ட வீரர். எனவே விக்கிரகநிக்கிரகனை விரட்ட உதவி செய்யுங்கள்’ என்றால்...

     மகிபாலர் ஏன் திடீரென்று போக வேண்டும்? அவர் கஜினியால் நேரிடையாக பாதிக்கப்பட்டிருக்கிறாரா? எனவே வாய்விட்டுக் கேட்டார்.

     “நீங்கள் யாவரும் அஞ்சிப் பதறும் அந்தக் கஜினியால் நீங்கள் நேரடியாக எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் அரையர்!

     மகிபாலர் சட்டெனப் பதில் கூறாமல் விழித்துப் பார்த்தார் அவரை. பிறகு, “நான் நேரிடையாக பாதிக்கப்படாவிட்டாலும் எனது நண்பர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக ஹிந்துக்கள் யாவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!” என்றார் அழுத்தமாக. ஆனால் பூரணசந்திரர். “எங்கள் குடதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களால் மீண்டும் ஒருமுறை தாங்க முடியாது!” என்றார் பதட்டத்துடன்.

     “உங்களால் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய இயலுமா?” என்று அரையர் மீண்டும் கேட்டதும், “போர் ஒன்று நடந்தால் உதவி செய்ய இயலாது. ஆனால் மாற்றாக பல உதவிகளையும் எம்மால் செய்ய முடியும்!” என்றார் மகிபாலர் தயங்காமல்.

     “அவர்கள் தேவை இப்பொழுது படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு. பிரும்மாண்டமாகப் படையெடுத்து வரும் கஜினியிடம் அவர்கள் சரண் அடைந்தால் கூடப் பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே பல லட்சம் பேர்களைக் கைது செய்த அவனுக்கு, இவர்கள் ஒரு பொருட்டல்ல. கொன்று குவிக்கவும் அவன் தயங்கமாட்டான்” என்றார் வல்லபர்!

     “அவனுக்குப் பயந்து என் நண்பர்கள் அப்படி ஓடினால் நாளை மக்கள் எதிரில் உலாவ முடியுமா?”

     “ஏன் முன்பே இந்த ஞானோதயம் ஏற்படவில்லை? ஒருமுறை இரண்டு முறை என்று பலமுறையும் வந்து கொள்ளை, கொலை, நாசம் செய்த கொடுமை மீண்டும் வரலாம் என்று எதிர்பார்த்திருக்க வேண்டாமா?”

     “இல்லை சேனாபதி, இல்லை! எதிர்பார்த்து ஒரு பயனும் இல்லை” என்றார் பூரணசந்திரர்.

     மகிபாலன் அவரை வெறுப்புடன் பார்த்தார், என்றாலும் மறுத்துப் பேசவில்லை. ஆனால் வல்லபர் ‘இவர் ஏன் இப்படி குறுக்கிட்டுப் பேசுகிறார்’ என்று விழித்தார். எனினும் அவரே மேலே சொல்லட்டும் என்றும் பொறுத்தார்.

     தம்முடன் முரண்பிடித்து தம்மைக் கேலி செய்யும் வல்லபரிடம் அவர் மேற்கொண்டு பேச விரும்பவில்லையாயினும் வேறு வழியில்லை. ஆபத்து சூறாவளியை போன்றது. மிலேச்சர்கள் சோமநாதபுரத்தை மட்டும்தான் தாக்குவார்கள். பிறகு நல்ல பிள்ளையாகத் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. எந்த நேரத்திலும் வங்கம், குடதேசம், அயோத்தி, கோசலம் எல்லாம் தாக்கப்படலாம். கஜினியின் சீடர்கள் அவனைவிட மோசம். எனவே பாரத பூமியின் வடபகுதி முழுமையும் இரத்த பிரவாகம் ஏற்பட்டால் தன் நாடு எந்த மூலை! என்று அஞ்சினார். இந்த அச்சம் அவரைப் பேசத் தூண்டியது. மகள் விஷயம் கூட மறந்துவிட்டது. பழி வாங்க வந்த வேகம் போய் பயம் பெரிதாகிவிட்டது.

     “கஜினி ஒருமுறையல்ல. இதுவரை பதினாறு முறைகள் இந்நாட்டுக்குள் புகுந்து விளைவித்துள்ள கொடுமைகளுக்கு எல்லையில்லை. சோமநாதபுரம் மட்டும் இல்லை பதினாறு ராஜ்யங்கள் அவன் நாசவேலைக்கு இலக்காகிவிட்டன. அத்தனையும் தரைமட்டம் ஆகிவிட்டன. கோட்டைகள், கொத்தளங்கள், கோயில்கள், வீடு வாசல்கள், பெருவாறியான மக்கள், ஆடு மாடுகள், விளைபொருள்கள், காடுகழனிகள் எல்லாம் நாசம்! படாத பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த அத்தனைப் பொருட்களும் கொள்ளை! இனி தலைதூக்க முடியுமா? என்று சிந்திப்பதற்குள் இன்னொரு அடி. முண்டியடித்து நிமிரலாம் என்றால் மீண்டும் ஒரு அடி. இப்படியாக அவன் நம்மவரை திரும்பத் திரும்ப தாக்கிக் கொண்டே இருந்தால், நாம் எதிர்த்தாவது அடிப்பதாவது... அவனை நாம் எதிர்த்திடத் தயாராகக் கூட இடம் அளிப்பதில்லை அவன். திருப்பித் தாக்கும் வரை பொறுத்திருப்பானா என்ன? எனவே மகிபாலர் சொன்னது உண்மை. வங்கத்தின், *அரிசியை வேண்டுமானால் இவர் அனுப்பி வைக்கலாம். ஆனால்...” என்று சொல்லிவிட்டு அவர் சற்றே தயங்கிய போது “அந்த அரிசிக்கும் இப்பொழுது வழியில்லை!” என்றார் மகிபாலர்!

*வங்க நாட்டின் வளமான பூமியில் வளைந்த பாக்மதி அரிசி வட இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக மிகப் பெருமை வாய்ந்ததாகும்.

     “ஆம்! நாங்கள் பல்லாயிரம் பேர்கள் இந்நாட்டில் இப்படி வந்து குவிந்திருந்தால்... பூரணசந்திரரே, நீங்கள் மிக உணர்ச்சிகரமாக பேசக்கூடிய வாசாலகர். நீங்கள் கூறுவதிலிருந்து நாம் ஒன்று ஊகிக்க முடிகிறது” என்றார் சோழ மாமன்னர் இராஜேந்திர சோழர்.

     “நானும் ஊகித்துவிட்டேன் மாமன்னரே! மகிபாலர் தமது நண்பர்களான மன்னர்களைச் சந்தித்த பிறகு நம்மிடம் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மிகமுக்கியமான ஒரு கோரிக்கையைக் கொணர்ந்திடலாம் என்பதுவே அந்த ஊகம்” என்று அரையபூபதி சொன்னதும் பதறி எழுந்த மகிபாலர் அவரை வியப்புடன் பார்த்தார்.

     சோழர் இப்போது கேட்டார் “இந்த ஊகம் சரிதானா மகிபாலரே?”

     “ஓரளவு சரிதான். ஆனால் நான் போய் வந்த பிறகுதான் எதையும் உறுதியாகக் கூற முடியும் சோழ தேவரே!”

     “எந்த உறுதியைக் கூற முடியும் வங்க மன்னரே! ஏற்கெனவே நாங்கள் இங்கு இருப்பது உமக்குப் பாதுகாப்பாக. இப்போது நீங்கள் எங்களை இன்னொரு வம்பில், முற்றிலும் நமக்குச் சம்பந்தமில்லாத வம்பில் சிக்கவைக்க முயன்றால் அதை எங்கள் மாமன்னர் ஏற்பார் என்று நீங்கள் எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் வல்லபதேவர். மகிபாலர் திடுக்கிட்டார், அவருடைய வேகவார்த்தைகளைக் கேட்டதும்.

     ஆனால் சோழ மாமன்னர் பதறாமல் “வல்லபரே, நாம் இங்கு வந்திருப்பது சண்டை போட அல்ல! இவர்களுடைய நண்பர்களும் நமக்கு நண்பர்களே! தவிர தான் ஒரு மாமன்னன் மட்டும் அல்ல, கொடிய போர் வெறியனும் கூட என்று அந்தக் கஜினி மன்னர் கொக்கரிக்கும் போது நீர் மட்டும் எட்ட நின்று பார்த்துக் கொண்டு நிற்பீரோ?” என்று குறுநகை புரிந்து கேட்டதும், அவர் எக்காளக் குரலில், “அவன் கொக்கறத்துப் பேசும் வரை நான் பொறுத்தால்தானே அதைப் பார்க்க?” என்று திரும்பக் கேட்டார்!

     “உங்களுக்குப் பாரதம், அதாவது வேதவியாசர் அவர்கள் அருளிய மகாபாரதம் முழுமையாகத் தெரியுமா? அதிலே வரும் பீமசேனன் உங்கள் மாநிலத்தை தாங்கிதான். எனவே உங்களுக்கு அந்தக் கதை அதாவது பாரதக்கதை நன்கு தெரிந்திருக்கும்!”

     “ஆமாம்! அதற்கென்ன இப்போது?”

     “சொல்கிறேன்! கிருஷ்ண பரமாத்மா தூது சென்றார் பாண்டவர் சார்பில் துரியனிடம். பயனில்லை. போர் துவங்கிவிட வேண்டியதுதான். எனவே கவுரவர்களும் பாண்டவர்களும் இந்தப் பரதகண்டத்தின் எல்லா நாடுகளுக்கும், ‘உங்கள் உதவி தேவை’ என்று ஐம்பத்தியாறு மன்னர்களிடமும் சென்றனர். துரியர் குழுவும் அப்படித்தான். எனவே யாரும் மறுக்கவில்லை. சிலர் பாண்டவர்களுடன், சிலர் கவுரவர்களுடன் சேர்ந்தனர். ஆனால் கிருஷ்ண பரமாத்மா ஏற்கனவே எல்லாவிதத்திலும் நொந்து கிடந்த பாண்டவர்களுக்கு உதவ வந்தார்! இது பழைய கதை. ஆனால் அவர் தூது போன விஷயம் அரசியல் ரீதியாக ஒரு முன்னோடிக் கதை! எனவே இந்த கஜினியிடம் வடபாரத மன்னர்கள் ஏன் இப்படி அஞ்சி அவதிப்படுகிறார்கள்? அப்படி என்ன அவன் அரக்கனா; மாய மந்திர பயங்கரனா என்பதைப் பார்க்க நானே ஏன் அவனிடம் ஒரு தூதனை அனுப்பக் கூடாது என்று இப்போது யோசிக்கிறேன்?” என்றார் வெகு நிதானமாக.

     அரையபூபதி புரிந்து கொண்டார்! நீண்ட நேரம் சோழ மன்னர் யோசிக்கிறார் என்றால் அதற்குப் பின் நிலை சற்று பயங்கரமானதாகவே இருக்கும். ஆனால் வல்லபதேவர் ஏன் சோழ மன்னர் சுற்றி வளைத்துக் கதையும் விளக்கமுமாகப் பேசிக் கடைசியாக ஒரு தூது விஷயத்தை அழுத்தமாகக் கூற வேண்டும் என்று குழம்பினார். இராஜேந்திர சோழர் எதையுமே யோசிக்காமல் பேசுவதில்லை. பேசிவிட்டால் அதிலிருந்து மாறுவதில்லை!

     எனவே சேனாபதி விஜயராய வல்லபேந்திர தேவராயர் இப்போது தம்மிடம் சோழ மன்னர் வெறும் பேச்சுக்காக இம்மாதிரி ஒரு யோசனையைக் கூறவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். மகிபாலர் இத்தகைய ஒரு யோசனையைச் சோழரிடமிருந்து சிறிதும் எதிர்பாராததால் வியப்பும் திகைப்பும் அடைந்தவராய் அங்கிருந்தவர்களை மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். பூரணசந்திரரோ இப்படி நடக்குமானால் வடபாரதம் மீண்டும் மிதிபடாது தப்பும் என்று கூட நம்பினார்.

     “என்ன ஜெகதேவ வல்லபேந்திரரே! நான் கூறியது உங்களுக்குப் புரிந்தது அல்லவா?” என்று கேட்டதும் அவர் புரிந்து கொண்டு விட்டார். தனக்குத் திடீரென்று விருதும் பெயரும் நீண்டு விட்டதேன் என்று வாய்விட்டுக் கேட்காவிட்டாலும் “நீங்கள் நம்முடைய அதாவது தண்டமிழ் நாட்டுச் சோழ மன்னனின் தூதுவராகக் கஜினியைக் காணச் செல்லுகிறீர்! சரிதானே?” என்று கேட்டதும் அவர் மலைத்து விட்டாரானாலும் மறுக்கவோ, மறுகவோ செய்யவில்லை. மாறாக, “உத்திரவு இதுவானால் மறுப்பதற்கு நான் யார்?” என்று திருப்பிக் கேட்டதும் மற்ற யாவரும் திகைத்து விட்டனர், மன்னரைத் தவிர!

     பேரரசன் இராஜேந்திரன் தீர யோசித்துச் செயல்படுபவர்தான், சிறிதளவும் சந்தேகமில்லை. ஆனால் ‘கஜினி’யுடன் என்ன பேச்சு! எதற்கு அவனிடம் தூது? அதுவும் பதற்றக்காரரான வல்லபதேவரை அனுப்புவதா என்று அரைய பூபதி மட்டும் திகைத்து விட்டார்!

     மன்னர் தன்னை எந்த ஒரு இடத்துக்கும் துவக்கக் காலத்தில் தூது அனுப்புவதில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு எதிரி சரண் அடையும் போது மட்டும் அதாவது இறுதி நேரத்தில்தான் அனுப்புவார்! எதிரியை ஏளனம் செய்யாமல் இங்கிதமாக உரிய மரியாதையுடன் நடத்தும் கடமையில் சிறிதும் தவறுவதில்லை சோழதேவர். எனவே அவர் மனப்பாங்குக் கேற்ப செயல்படக் கூடியவர் அரையபூபதிதான். ஆனால் இன்று திடுதிப்பென்று வல்லபரை ஒரு முரட்டுப் போர் வெறியனிடம் அனுப்புகிறார் என்றால் சற்று உள்ளூர நடுங்கவும் செய்தார் அவர்! இதே சமயம் இந்தத் திடீர் அறிவிப்பினால் வங்க மன்னர் மகிபாலருக்குத் திகைப்பும் வியப்பும் பன்மடங்காக, அதேசமயம் மகிழ்ச்சியும் அளவுக்கு மீறி ஆட்கொண்டுவிட்டது. சோழ மன்னர் பாரத நாட்டின் தலைசிறந்த வீரப்பேரரசர்தான். கடல் நாடுகளில் எல்லாம் சென்று வென்ற சிறப்புப் படைத்தவர்தான். நானூற்றியிருபது கப்பல்களைக் கொண்ட பெரும் கடற்படையுடைய ‘கீழை நாடுகளின் சூரியன்*’ என்று புகழப்படுகிறவர்தான்; தமது வாழ்நாளில் இது வரை தோல்வியே காணாதவர் என்பன யாவுமே உண்மையானாலும் இப்போது ‘கஜினி’யை எச்சரிக்க ஒரு தூதுவரை அனுப்புகிறார் என்றால், ஏன்? எதனால்? எவரால் தூண்டப்பட்டு... வடநாட்டு மன்னர்கள் பலரும் வருவரா சோழன் நம் உதவிக்கு என்று ஏங்கி நிற்கும் இவ்வேளையில், அவர்கள் வந்து கேட்பதற்கு முன்பு இவரே... முன் வருகிறார் என்றால் ‘கஜினி’ இன்று நம் நாட்டை குறிப்பாக வடநாட்டை ஆட்டி வைக்கிறான். ஆனால் இதுவரை தென்னாடு போகவில்லை என்பது உண்மை. அங்கே உள்ளவர்கள் இவனுடையக் கொடுமைகளைக் கேள்விப்பட்டிருக்கலாமே அன்றி நேரில் அனுபவித்து விடவில்லை. எனவே இவன் இந்த ‘தூது’ கண்டதும் குமுறி எழுந்து விட்டேனா பார்! என்று தென்னாட்டுக்கும் பாய்ந்து விட்டால்... அங்கு எத்தனையெத்தனை கோயில்கள்... அவற்றின் அழகு, சிற்பச் சிறப்பு, தெய்வீகச் சக்தியெல்லாம் உலகப் புகழ் பெற்றதாயிற்றே! இவன் அதை அறிந்தால் சும்மா விடுவானா? அல்லது சோமநாதபுரம் போதும், வேறு எதுவும் வேண்டாம், திரும்புகிறேன் என்று உதறி விட்டுப் போவானா? பேராசைக்காரனுக்கு எத்தனை வந்தாலும் போதாதே!

*மேலைநாட்டினரும் சரி, சீனா போன்ற மிக வல்லமை வாய்ந்த கீழை நாடுகளும் சரி, சோழனை ‘சூர்யா’ என்றும், ‘சூளியே’ என்றும் உச்சரித்தனர்.

     ஒருக்கால் இந்தத் ‘தூது’ போன்ற தலையீடு இல்லாமலிருந்தால் ஐயோ பாவம்! என்று இரக்கப்பட்டு போதும் இந்த நாட்டை நாம் சூறையாடியது என்று திரும்பலாமே அல்லாது, இந்த சோழர் தூது கண்டதும் வரம்பு மீறிய வெறி கொண்டு விடுவான் என்பதுதான் உண்மை!

     நாம் சோழர்களின் உதவியைப் பெற்று யுத்தத்தில் அவர்களைப் பங்கு கொள்ளுவதற்குப் பதில் அவர்கள் தாங்கள் நாட்டையே காப்பாற்றிக் கொள்ள விழுந்தடித்துக் கொண்டு ஓட வேண்டிய கஷ்ட நிலை ஏற்பட்டுவிட்டால் அப்புறம் நம்மவர் கதி! இப்படியெல்லாம் பலபட நினைத்த மகிபாலர் மனதில் பட்டதைக் கூறவும் துணிந்து விட்டார்.

     “சோழ மாமன்னரே! தங்களுடைய இந்த திடீர் யோசனை நான் கனவிலும் எதிர்பாராத ஒன்று! மிகவும் போற்றத்தக்கது; ஆனால் நான் இது பற்றி இரண்டொரு வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்... ஏற்பீர்களா?” என்று அடக்கமாக கேட்டதும் இராஜேந்திர தேவர் “அனுமதிக்கிறோம்!” என்றார் அமர்ச்சியாக.

     “கன்னோசி நாட்டதிபன் ராஜ்யபாலன் அசாதாரணமான வீரன். ஆனால் கஜினியின் கொடுமையான போராட்ட வெறிகண்டு தான் தோல்விக்கு இலக்கானால் மக்கள் நாசமாவர் என்று அறிந்து ஓடிவிட்டான் ராஜ்யத்தைவிட்டே! சோமநாதபுரத்து பீமதேவும் அப்படி ஒன்றும் சப்பை அல்ல. அவனும் கூடத்தான் நகரம் அழிந்துவிடக் கூடாதே, கோயில் நாசமாகிவிடக் கூடாதே, தானும் தன் படையும் இருந்தால் இதற்கெல்லாம் ஆபத்துதானே என்று அஞ்சி ஓடிவிட்டான். நான் இந்தப் பகுதி அனைத்துக்கும் அரசன்தான். ஆனால் நடந்ததென்ன? தங்கள் பெரும் படையுடன் இங்கு வந்ததும் எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் தங்களுடன் சமரசம் நலம் என்று எண்ணியதேன்? அச்சம் காரணம் என்பதைவிட நாசம் தேவையில்லை என்ற நினைவு சிறப்பில்லையா? என்றாலும் இன்று இதைச் சரணாகதி என்று கூறியவர்களும் ஏசுபவர்களும், மாசுபடுத்துபவர்களும் இல்லாமலில்லை. ஆதலால் நான் தங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். ராஜ்யபாலன் ஒதுங்கியதால் கஜினி கன்னோசியையோ அந்த நாட்டு மக்களையோ சும்மா விட்டுவிடவில்லை. கொள்ளையிட்டு அழித்து அக்கிரமம் செய்துவிட்டான். சோமநாதபுரத்தைத் தரை மட்டமாக்கிவிட்டான். மக்களைக் கொன்று குவித்திட்டான். இப்போது மீண்டும் வருகிறான் என்றால் அவன் நல்லவனாகவா வருகிறான்? உங்கள் சமரசத்தை அவன் மதிப்பானா? அல்லது மேலும் நாச வேலைகளைச் செய்யாமால் திரும்பி விடுவானா? மாட்டான்! காஷ்மீரம் முதல் கூர்ஜரம் வரை மன்னர்கள் பலரும் ஏதோ ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர் யாவரும் ஒன்று கூடித்தான் எதிர்க்க முயன்றனர். பலனில்லை. இவற்றையெல்லாம் முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறியதும்,

     “இல்லை மகிபாலரே! நான் ஏன் உண்மையைச் சொல்லப் பயப்பட வேண்டும்? நம்மவர்கள் பலர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொண்டார்கள்! ஒன்று கூடினால் யார் தலைமை தாங்கும் தகுதியைப் பெற்றவர் என்று முயற்சி துவக்கத்திலேயே முறிந்தது. எதிரிக்கு இது கொண்டாட்டமாகி விட்டது!” என்று குறுக்கிட்டார் பூரணசந்திரர்.

     சோழ மன்னர் இதையெல்லாம் கேட்டுத் தலையசைத்தாரே தவிர வாய் அசைக்கவில்லை. ஆனால் இதற்கு மேலும் வல்லபரால் சும்மாயிருக்க முடியவில்லை!

     “மகிபாலரே, நீங்கள் இன்னும் கூட உண்மைகளைக் கூறவில்லை. உங்கள் மன்னர்களில் ஓடிப் போனவர்கள் மட்டுமில்லை. ஒருவர் தன்னுடைய படை வீரர்களுடன் போய் சரண் அடைந்து மதம் மாறவும் செய்தார் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! ராஜ்யபாலரை அவருடைய மக்களே அவமானம் தாங்காது வெறுத்து எதிர்த்துக் கொன்று போட்டதையும் சொல்ல மறந்து விட்டீர்கள். உங்கள் மன்னர்களில் ஒருவரே போய் எதிரியிடம் சோமநாதபுர நிதிக்குவியல் பற்றி உளவு கூறிய அதிசய செய்தியையும் நீங்கள் சொல்லவில்லை. தவிர நீங்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கவும் பார்க்கிறீர்கள்! கோவிந்த சந்திரர் எங்களிடம் வம்புச் சண்டைக்கு வந்து தோற்ற பிறகுதான், தர்மபாலர் எங்களிடம் தோற்று சரண் அடைந்த பிறகுதான், கலிங்கத்தின் இந்திர ரதக் காலகாலன் கூட இனி எதிர்த்து நிற்க இயலாது என்று ஊகித்து அடங்கிய பிறகுதான், மனம்மாறி சமரசம் செய்து கொண்டீர்களே அல்லாது...” என்று படபடப்புடன் சொல்லிக் கொண்டே போவதை விரும்பாமலோ என்னவோ சோழ மாமன்னன் சட்டென்று, “அதெல்லாம் இப்போது பெரிய விஷயம் இல்லை! மகிபாலரே! நீங்கள் சற்று முன்னர் எம்மை எச்சரித்திடத் தீர்மானித்தீர். அதாவது ‘கஜினி ஒரு பயங்கர அரக்கன், சாதுவான தமிழர் நீங்கள் அவனுடன் போய்ப் பேசி அவதியுறுவானேன்!’ என்று நல்லுரை புகல முனைந்தது உங்கள் வரை சரியாக இருக்கலாம். நான் விரும்பியது வேறு. உங்கள் மன்னர்கள் அதாவது உங்கள் வடநாட்டு நண்பர்கள் உங்கள் மூலம் என் உதவி நாட நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் நான் அவனிடம் சரிக்கு சரி என்ற நிலையில் ஒரு தூது அனுப்பத்தான் போகிறேன். அந்தத் தூதுவரும் எங்கள் வல்லபராகத்தான் இருக்க முடியும், புரிகிறதா?” என்று கேட்டதும் மகிபாலர் ஆடிப் போய்விட்டார்.

     சோழன் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். வழக்கமாக உள்ள தனது நிதானத்தை விட்டுவிட்டு, தான் ஏன் முந்திரிக் கொட்டை மாதிரி அவசரப்பட்டு யோசனை சொன்னோம் என்று தவித்து விட்டார்!

     சோழ மகாசேனாபதி ஜெகதேவ வல்லபேந்திர தேவராயர்... ஒரு அசாதாரண வீரர் என்பதை மகிபாலர் அறியாதவர் அல்ல. அவரிடம் தோல்வி கண்டு அனுபவித்தவர் தானே. மிதிலையில் அவர் சாதனை அபாரம். கலிங்கத்தில் திரிபுவன அரைய பூபதி இந்திரரதனை எவ்வளவுக்கு ஆட்டிப் படைத்து மண்டியிடச் செய்தாரோ அவ்வளவுக்கு இவர் தம்மை விஹாரையில் ஆட்டி வைக்காமல் இல்லை! எனவே தான் வங்கம் இவருடைய ஆவேசப் போர் வேகத்துக்கு இலக்காகி விடக் கூடாது என்று சமரசம் செய்து கொண்டு விட்டார். இராஜேந்திரர் எப்போதுமே தனது சேனாபதிகளைச் சுதந்திரமாகச் செயல்படும்படி விடுவார். நேரில் அவர் போராடுவது என்பது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியல்ல.

     சோழர்களின் சேவையிலேயே ஊறிப் போனவர்களான இராஜராஜப் பிரமாதி மகாராயன், உத்தம சோழ மிலாடுடையார், உத்தம சோழ சோழ தேவன் ஆகிய மூவரும் இன்றளவும் அவர்கள் வேங்கியிலும், குவலாளபுரத்திலும், கல்யாணியிலும் தங்கி சோழ மன்னர்களின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள்.

     அதுபோல ஏன் தமது வடநாட்டுப் பிரதிநிதியாக வல்லப தேவரையே நியமிக்கக் கூடாது என்று இராஜேந்திரன் யோசிக்காமலில்லை. அவர் கன்னட ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, மாவீரர், அஞ்சாநெஞ்சர், கபடு சூதற்றவர், நம்பிக்கையையே உருவானவர். எனவே எல்லாவகையிலும் மிக உயர்வான, நம்பிக்கையான, மிகப்பெரும் பதவிக்குப் பொருத்தமானவர்தான். தான் ஒரு யோகி அல்ல, வேஷம் போடும் பரிசுத்தரும் அல்ல, பகட்டு வேலை தெரியாது என்று பளிச்சென்று சொல்லி அதன்படி நடப்பவர்தானேயின்றி, ஆளுக்கு ஏற்ற மாதிரி தாளம் போடுபவரும் அல்ல! அவர் இருக்குமிடம் எப்பவுமே கலகலப்பாக இருக்கும்.

     இன்னொரு சோழ சேனாபதியான அரைய பூபதியோ, இவர் நிலைக்கு நேர் மாறானவர். மனம்விட்டுப் பேசாதவர். ஆனால் மிகவும் உறுதியான கொள்கையும், அதே சமயம் பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளும் பண்பும் உள்ளவர். சோழர் சேவையில் பரம்பரை பரம்பரையாக ஊறிய குடும்பம், திருமுனைப்பாடி நாட்டு முனையரையர் வமிசத்தினர். எனவே வாய்மையும் தாய்மையும் வன்மையும் திண்மையும் வாய்ந்த பரம்பரை வீரர். கனவில் கூட பெண்கள் என்றால் அஞ்சிப் பதறும் ஒரே ஒரு விசித்திர குணத்தை மட்டும் இவர் விடமாட்டார்! இதனால்தான் பேரரசர் இராஜேந்திர தேவர் இவரிடம் தனி மதிப்பும் மரியாதையும் காட்டினார். சோழ வீரர்களில் கணிசமான பகுதியினர் இன்றளவும் வங்கத்தில் பெண்களை நாடிச் சுகம் காணும் புத்தியை கொள்ளாதிருந்தனர் என்றால் அதற்கு ஒரே காரணம் அவர்கள் இவரிடம் கொண்ட பயம், பணிவு, மதிப்பு, மரியாதைதான்.

     ஆனால் வல்லப தேவர் இந்தப் பரிசுத்தமான தன்னடக்கத்தை ஒத்துக்கொள்பவரும் அல்ல, மதிப்பவரும் அல்ல. போர் செய்யும் நாம் தன்னடக்கம் என்ற பேரால் அடங்கி நின்றால் நாம் இயலாமையைக் காட்டிக் கொள்ளுவது போன்றது, சுயமதிப்பும் அல்ல என்ற கொள்கையினர்!

     இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பது யாருக்கும் சிரமம் இல்லை. குறிப்பாகக் கன்னட நாட்டு வீரர்கள், அதாவது சோழப் படையினில் கணிசமான தொகையினர் இவர்கள். மிதிலையிலும் வங்கத்திலும் தங்கள் இகலோகபோக போக்கியங்களை சம்பிரம்மாகவே அநுபவித்தனர். ஏன்? தங்கள் நாட்டுக்குத் திரும்பக் கூடப் பலர் மனமில்லாதிருக்கும் அளவுக்கு மாறி விட்டிருந்தனர்! ஆனால் ஒரு முக்கியமான உண்மை யாதென்றால் அவர்களில் எவரும் சுகபோகங்களில் மூழ்கித் தங்களை மறந்து மூழ்கி விடவில்லை. போர் என்றால் இதோ தயார் என்ற நிலையில்தான் இருந்தனர். தவிர ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற வசனம் இந்தப் போர் வீரர்களிடையே சர்வசாதாரணம் போலும்.

     இதனால்தான் அரையபூபதி வல்லபரின் ஆட்கள் வங்கத்தின் குமரிகளைக் காந்தருவ மணம் புரிந்தது கண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் இந்த வீரர்களின் வன்மையை, அவர் கலிங்கத்தில் கண்டார். கடாரத்தில் கண்டார், மிதிலையில் கண்டார்! போக போக்கிய அனுபவங்களால் பராக்கிரமத்தை இழந்து விடவில்லை.

     இந்த வீரர்கள் பரம பவித்திரமான தெய்வ பக்தர்களாக இருந்தது காண சுத்த சைவரான அரையபூபதிக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டியது. வல்லபேந்திரர் தமது கன்னட நாட்டின் மாபெரும் சைவ சமய குரவரான அருட்பெருந்திரு திரிலோன சிவாசாரியரை வங்கத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது கண்டு பெரும் அளவுக்கு நிம்மதி கொண்டார். பெருமளவு மகிழ்வும் பெற்றார்.

     மாமன்னன் இராஜேந்திர தேவர் தமது மெய்க்காவலர்களை அனுப்பி சகல மரியாதைகளுடன் அவரை வரவழைத்தார். இதனால் கன்னட வீரர்கள் மட்டும் இல்லை, வல்லபர் மட்டுமில்லை, சோழரிடம் தோற்று விட்டோமே என்று மறுகிய கன்னர தேவனும் களிப்புற்றான். இந்தளன் ஒருவனைத் தவிர!

     திரிலோசனர், காஞ்சியில் தம் இளம்பருவத்தில் சைவ சமயாதீனத்தில் சமயக்கல்வி பயின்றவர். அன்றைய சைவாசாரியார்களுள் மகோன்னதமான நிலையைப் பெற்றிருந்தவர்.

     “எங்கு சைவம் தழைக்கிறதோ அங்கெல்லாம் நாம் அவர்கள் பேரன்புக்குப் பாத்திரமாயிருப்போம்” என்று மாமன்னன் இராஜராஜ சோழர் அறிவித்ததற்கொப்ப, அவர் மகன் இராஜேந்திரரும் அவ்வாறு இருந்ததில் வியப்பேதுவுமில்லை!

     ஜெகதேவ வல்லபருக்குத் தன்னை கஜினியிடம் தூது அனுப்ப இருப்பதாகச் சோழ மன்னன் அறிவித்த நேரத்திலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. சோழருடன் இணைந்து போர்க்களத்தில் செயலாற்றும் தனக்குத் ‘தூது போகும் வேலை’ ஏன் தொடர்ந்து வருகிறது? தான் ஒரு போர் வீரன். கோபமும் ஆக்ரோஷமும் தன்னுடன் பிறந்த குணங்கள். உண்மை இதுவாயிருக்க அமைதியும் ஆவேசமற்ற அடக்க குணமும் நயமும் வினயவசனமும் தேவைப்பட்ட தூதுவர் பதவிக்குத் தன்னை நியமிப்பதென்றால்...

     முன்பொரு நாள் இப்படித்தான் ராஜகுருநாதரான திரிலோசனர் சோழரிடம் தன்னைத் தூது போய் வா என்று கூறியதும்தான் எப்படியடா இந்தப் பொறுப்பை நிறைவேற்றப் போகிறோம் என்று அஞ்சிக் குழம்பியதும் இப்போது மீண்டும் நினைவுக்கு வந்ததும் உடன் அந்த நாளைய நிகழ்ச்சிகள் யாவும் ஒரேயடியாக மனதில் படையெடுத்து வந்தன.

     தனது இருக்கையில் சாய்ந்த ஜெகதேவருக்குப் பழைய நினைவுகள்! ஆம், அன்று சோழ மாமன்னரிடம் தூதுவராகச் செல்லும்படியான சந்தர்ப்ப நிகழ்ச்சி முதல் பிற்பாடு நடந்தனயாவும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் மிதந்தன. அந்த நிகழ்ச்சிகள் யாவும் இன்று நிகழ்ந்தன போலவே அவ்வளவு பசுமையாக அல்லவா இருக்கிறது!