ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

5

     சத்திய சைவ சமயாதீன அருட்பிரகாசர் என்று கன்னட நாட்டு மக்களால் அக்காலத்தில் பெருமளவு மதித்துப் போற்றித் துதிக்கப்படும் திரிலோசன சிவாசாரியார் சர்வமும் அடங்கிய சீலராக இருந்தாரேயன்றி தடபுடல் செய்யும் சன்னிதானங்களைப் போன்றவர் அல்ல. இராஜேந்திரன் சின்னஞ்சிறு வயதிலேயே இவரைப் பற்றி வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறான். தன் தந்தையின் குருவான சிவாசாரியர் இவரைப் பற்றி அடிக்கடி பேசும் போதெல்லாம் காஞ்சியில் இவர் சைவத்துக்காக ஆற்றிய தொண்டின் சிறப்பையும், அந்தச் சர்வ சமய நகரமான காஞ்சியில், ஒரே சமயத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய நான்கும் ஒன்றுடன் ஒன்று மோதியும், முரண்டியும், இருந்த காலை, இவர் வெகு அடக்கமாக முன்னாள் பல்லவ மாமன்னனின் சைவ சமய ஆசாரியரான சீல பத்திர சிவாசாரியரிடம் பயின்றதையும், சிவ காஞ்சியில் தமது சீலத்தாலும் சமய அறிவாலும் இதர சமயத்தினர் கூட பொறாமைக்குப் பதில் பயபக்தியும் கொள்ளச் செய்த தன்மையையும் பலர் வெகுவாகப் பாராட்டுவதை கேள்விப்பட்டிருந்தான்.

     நாளாக ஆக ஒரு தரமாவது இந்தத் திரிலோசனரை சந்திக்க வேண்டுமென்ற ஆவலும் அவன் மனதில் குடிகொண்டிருந்தது. ஆனால் ஒரு யுத்தம் நிகழும் போதுதான் அதுவும் கன்னட நாட்டில் அது நடக்கும் போதுதான் இவரை இராஜேந்திரன் சந்திக்க வேண்டுமென்று விதி வகுத்திருந்தது போலும்!

     யாதவ பீமன் என்னும் சோழ சேனாபதிதான் முதன் முதலில் இராஜேந்திர சோழனையும் இந்த திரிலோசனரையும் சந்திக்க ஏற்பாடு செய்தது. சோழனை எதிர்த்துப் போரிட வேண்டுமென்று திமிர்ந்தெழுந்த சந்திரபோக இந்தளதேவன் என்னும் கன்னர அரசன் சாளுக்கியருக்குத் துணை போகாதிருக்க வேண்டி, யாதவ பீமனை சோழன் அனுப்பி வைத்தான். ஆனால் அவன் பீமனின் பேச்சை மட்டும் அல்ல, தன்னுடைய சொந்த மனைவி நிம்மளதேவியின் பேச்சைக்கூட கேட்கவில்லை. அவள் திரிலோசனரின் பக்தை. சைவ சமயத்தில் பெரும் பற்றுள்ள அவள் சோழர்களுடன் பொருதினால் பேராபத்து என்று அஞ்சி எவ்வளவோ புத்திமதி சொன்னாள்.

     “இராஜேந்திரன் தஞ்சையில் பெருவுடையார் கோயில் சமைத்த திரிபுவன சக்ரவர்த்திகளான இராஜராஜன் மகன் மட்டும் இல்லை. தோல்வி என்பதையே கண்டறியாத மாவீரன். எனவே நாம் அடங்கிப் போதல் அவசியமாகும்” என்றாள். இந்தளதேவன் இதையெல்லாம் கேலி செய்தான். தன்னுடைய கதாயுதத்தின் ஒரு அடி கூடத்தாங்க முடியாது அந்தச் சோழனால் என்று வீம்பு பேசினான். தன் நாட்டின் வழியே வடபுலம் போக சோழன் முயன்றால் எதிர்த்து நின்று விரட்டியடிக்கப் போவதாக அறிவித்து விட்டான்.

     நிம்மளதேவி தவித்துப் போனாள். தன் கணவன் புத்தி தெளிய ஒரே வழி சைவ சமயகுரு திரிலோசனரை நாடுவதுதான் என்று முடிவு செய்தாள். அவரிடம் சென்றாள். உள்ளது உள்ளபடி சொன்னாள். அவர் உண்மையறிந்தவர். மக்களில் பெரும் பகுதியினர் யுத்தத்தை விரும்பாதவர்கள் என்பதையும் உணர்ந்தார். இந்தளதேவனுக்கு மக்களிடையே செல்வாக்கில்லை என்பதையும் அறிந்தார். எனவே நற்புத்தி கூறுவோம் எனறெண்ணி அவனை அழைத்தார்!

     அந்த நாளில் சமயாசாரியர் வாக்கு தேவவாக்கு மாதிரி. மாமன்னன் முதல் சர்வசாதாரண ஆசாமி வரை அவருக்கு மரியாதை செலுத்துவதில் வேற்றுமை இல்லை. தயக்கம் இல்லை. கட்டுப்பாடான விதிமுறை இது.

     ஆனால் இந்தளன் இதை மறந்துவிட்டு அவர் அழைப்பை நிராகரித்தான். நாடு பதறியெழுந்தது. சித்திர துர்க்க மடத்தில்தான் திரிலோசனர் தங்கியிருப்பார். அந்த சித்திர துர்க்கத்தின் மன்னன்தான் மாபெரும் வீரரும் ராஜதந்திரியும் மக்கள் நலமே மன்னன் நலம் என்ற உறுதியான கொள்கையும் கொண்ட வல்லபன். திரிலோசனர் அழைப்பினை இந்தளன் மதியாது நிராகரித்தான் என்று அறிந்ததும் அளவிலாச் சினங் கொண்டு விட்டான்.

     இந்தளனை அழைத்த காரணம் அறிய வல்லபனே திரிலோசனரிடம் சென்றான். முறைப்படி வணங்கி வழிபட்டான். அவரும் மிக்க அன்புடன் அமைதியாக வரவேற்றார். தான் வந்த காரணத்தைக் கூறினான். திரிலோசனர் சற்றே நிதானித்தார். சோழன் கன்னட நாட்டு வழியே வடநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதை இந்த வல்லபன் அறியாதிருக்க முடியாது. எனவே நிதானமாகவே பதில் கூற வேண்டும்.

     “சோழ மாமன்னன் இராஜேந்திர சோழர், இந்தளன் சாளுக்கியனுடன் சேர்ந்திருப்பதை விரும்பாது ‘தூது அனுப்பியுள்ளது’ உமக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்!” என்றார் அமர்ச்சியுடன்.

     “தெரியும், சோழ மகாசேனாபதி யாதவ பீமன் என்னும் உத்தம சோழ மிலாடுடையார் என்பவரே அவர்! தெலுங்கு பீமன் வமிசத்தில் வந்தவர். மகாவீரரை கோபக்காரர் என்றாலும் அரசியல் சதுரர். அத்தகையவரை இந்தளன் புறக்கணித்ததையும் அறிவேன் நான்!” என்றான் பரபரப்புடன்.

     திரிலோசனர் மிகவும் தன்னடக்கத்துடன் “அந்த பீமன் அவர்களே எம்மைக் காண வந்தார்” என்று கூறியதும் வியப்புற்ற வல்லபர் “அப்படியா? அதனால்தான் நீங்கள் இந்தளனை அழைத்தீர்கள் போலும்!” என்றான் பரபரப்பை விலக்காமல்.

     “ஆம்! அதுமட்டுமில்லை, இந்தளன் இல்லத்தரசி ராணி நிம்மளதேவியும் வந்திருந்தாள்!” என்று கூறியதும் வல்லபன் மீண்டும் திகைப்புற்று, “அப்படியானால் சோழர் இந்தளனை இணங்கிப் போகும்படி கோரியுள்ளாரா?” என்று கேட்டான்.

     “அது தெரியாது எனக்கு. ஆனால் சாளுக்கியர் உறவை விடச் சொல்லியுள்ளார். இந்தளன் இதனை ஏற்கவில்லை. யுத்தம் செய்வதே தன்மானச் செயல் என்று கூறுகிறான்!”

     “நியாயம்தானே? ஆனால் யுத்தம் செய்வதற்குக் காரணமும் நியாயமாக இருக்க வேண்டும். நான் முன்பே கூறிவிட்டேன், அவன் சாளுக்கியனுடன் இழையும் வரை உதவி செய்யமாட்டேன் என்று.”

     “‘சாளுக்கியன் உறவையும் விடமாட்டேன், யுத்தமும் செய்வேன். நீங்கள் கன்னடர், என் மாமன், எனவே கடமையறிந்த நீங்கள் எனக்குத் துணை செய்தாக வேண்டும்!’ என்று அவன் வேண்டினால்...” என்று வல்லபர் விநயமாகக் கேட்டதும் நிதானக் குரலில் “நியாயமான கேள்வி. ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலை முறையானது அல்ல, சாளுக்கியன் உறவு நமக்குத் தேவையில்லை, கங்கர், கடம்பர் உறவும் தேவையில்லை. எனவே தனித்து நிற்கிறேன் என்று அவன் உறுதி செய்தால் உடன் உதவி செய்வேன்.”

     “சோழர்கள் இதுவரை தோல்வியே கண்டதில்லை!”

     “உண்மை. ஆனால் இனியும் காணமாட்டார்கள் என உத்திரவாதமாகி விடாது. வெற்றி தோல்வி எப்பவுமே ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதில்லை.”

     “என்றாலும் நாட்டு மக்கள் உள்ள நிலையில் ஒரு யுத்தம் என்பது சர்வநாசம் என்பதாகத்தான் முடியும் என்பது நீங்கள் அறிந்ததே.”

     “அறிந்தவன்தான். ஆயினும் தன்மானத்தை விட உயிர் பெரிது அல்ல என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.”

     “தீ நம்மைச் சுடும் என்பதை அறிந்தும் அதைத் தீண்டுவதா?”

     “வேறு வழியில்லை என்னும் போது...”

     “இருக்கிறது ஒரு வழி. சாளுக்கியருடன் சம்பந்தமில்லை” என்று இந்தளன் உறுதிப்படுத்தட்டும். நானே சோழனிடம் தூது போய் ‘வேண்டாம் யுத்தம், அதனால் வீண் நாசம்’ என்று சொல்லுகிறேன்.”

     “அவன் மதிப்பானா?”

     “நிச்சயம் மதிப்பான். மதிக்காவிட்டால் நான் சோழ சாம்ராஜ்ய ராஜகுருவிடமே சொல்லுவேன். அவரை மீறி எவரும் செயல்பட முடியாது!” என்றார் திரிலோசனர்.

     வல்லபன் திடுக்கிட்டான்.

     “உறுதியாகவா!”

     “ஆம்!”

     “அப்படியானால் நானே இந்தளதேவனைக் கேட்கிறேன். அவன் ஒப்பினால் இந்த வல்லபன் என்றும் அவனுடைய கட்சிதான்.”

     “எந்த விதத்திலும் இது தங்கள் மனச்சாட்சிக்கு எதிரானதல்ல” என்றார் சிவாசாரியர்.

     வல்லபேந்திரன் தயங்கவில்லை.

     “செய்யத் தயார்” என்றார் ஒரே வார்த்தையில்.

     “உங்கள் மருமகனிடம் போய் புத்திமதி கூற வேண்டும்!”

     “ஏற்கனவே நானாகவே ஒப்புக்கொண்டுவிட்டேன். இரண்டாவது என்ன?”

     “சோழ மாமன்னர் பரகேசரி இராஜேந்திர தேவரிடம் செல்வது!” என்று சர்வ சாதாரணமாகத் திரிலோசனர் கூறியதும் “என்ன..?” என்று பதறியெழுந்தான் வல்லபேந்திரன்! அவரை ஆச்சரியத்துடன் நம்பிக்கையில்லாத தோரணையில் ஏன், சற்று வெறுப்புடன் கூட என்றாலும் சரியே, உறுத்துப் பார்த்தான் தன் உருட்டு விழிகளால். ஆனால் அவர் அயரவில்லை. வல்லபன் கொடுத்த வாக்கை மீறுபவனல்ல என்பது அவருக்குத் தெரியும்!

     “ஏன் வல்லபரே! சோழ மாமன்னரைக் காண்பதால் தங்கள் தகுதிக்கு களங்கம் ஏற்படுமா? அல்லது அவர்தான் நம் மதிப்புக்குகந்தவர் இல்லையா?” என்று சாவதானமாகவே கேட்டுவிட்டுச் சற்றே புன்னகைத்தார்.

     ஆனால் வல்லபன் “நீங்கள் கேட்ட கேள்வி இரண்டுக்கும் ஒரே பொருள்தான் சமயாசாரியரே! அந்த சோழனிடம் நான் போவதா? என்னை அவன் மதிப்பானா? வெற்றி மமதையில் இந்த நாட்டையே ஏன், இந்தப் பாரத பூமியையே கூட என்றாலும் சரி, தன் வசப்படுத்திவிட முடியும் என்று இறுமாந்திருக்கும் அவன் என்னை வரவேற்பானா?”

     “ஒப்பிவிட்டால்...”

     “நான் அவனுடைய கட்சியில்லை. அதே சமயம் யுத்தத்தில் எதிரியின் கட்சியிலும் சேரமாட்டேன்!”

     “யுத்தம் ஒன்று நடந்தால் இந்தளன் தோற்பது நிச்சயம் என்பது உங்களுக்குத் தெரியும்.”

     “பிறகு... இந்த நாட்டின் நிலை... மக்களின் வாழ்வு...?”

     “ஈசன்விட்ட வழி...”

     “இல்லை, சோழன் விட்ட வழி என்றுதான் கூற முடியும்!”

     “நீங்கள் எங்களுடைய குலகுரு. உங்களிடம் என் நிலை என்ன என்பதைக் கூறிவிட்டேன். என் மனச்சாட்சிக்கு மாறில்லாமல் நீங்கள் எது கூறினாலும் கட்டுப்படத் தயாராக இருக்கிறேன்” என்றான் வல்லபன்.

     திரிலோசனர் இந்த நல்ல சமிக்ஞையை விட்டுவிடத் தயாராயில்லை.

     “நாளை யுத்தம் என்று ஒன்று வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நீங்கள் நியாயத்தின் பக்கம் இருப்பதையே நான் விரும்புகிறேன் ஜெகதேவரே! உங்கள் வீர பரம்பரை வீர சைவ சமயத்தைச் சேர்ந்த வாய்மையான குலமாகும். இந்தளன் மனைவி அபாரமான தெய்வ பக்தி கொண்டவள். அந்தப் பெண்ணரசியின் பக்திக்கு நாம் கடமைப்பட்டவர்கள். இப்போது கர்நாடகம் ஒரு யுத்தத்துக்கு தயாராயில்லை. இந்தளன் என்று ஒருவனுக்காக இந்நாட்டு மக்கள் நாசத்தில் சிக்க அனுமதிக்க முடியாது. எனவே நீங்கள் எனக்காக இல்லை, இந்த நாட்டுக்காக இரண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.”

     “அது சரணாகதி யாகாவிட்டால் போர் என்று கூறுவது மிரட்டல் இல்லையா? தன்மானத்துக்கு இழுக்கு இல்லையா?” என்ற கேள்வி வேகமாக வந்தது ஜெகதேவரிடமிருந்து.

     “நியாயமான கேள்வி! ஆனால் நான் உங்கள் மீது போர் தொடுக்கவில்லை. எனினும் நீங்கள் என்னை உங்களுடைய மேலாவாக ஏற்று நமக்கு இணக்காக நடந்து கொள்ள முன் வந்தால் நீங்களே உங்கள் நாட்டு மன்னர். நமது கூட்டுக் குடும்பத்தில் அதாவது சாம்ராஜ்யத்தில் ஒரு பங்காளியே என்று கூறினால் அது மிரட்டலா? அல்லது வீண் சண்டை வேண்டாம் என்ற நேர்மையான, வெளிப்படையான முன் அறிவிப்பா?” என்று சிவாசாரியர் கேட்டதும் வல்லபேந்திரன் பதில் கூறத் திணறிவிட்டான்.

     சமயப் பிரசாரம் செய்யும் ஒரு சாதாரண ஆசாரியர்தான் திரிலோசனர் என்று தான் இதுவரை நினைத்திருந்தது தவறு. அவர் ஒரு அசாதாரண வாசாலகர், அரசியல் மேதை, சிந்தனையாளர், நாட்டு நலத்தில் கருத்துள்ள நேர்மையான சமய குரவர் என்பதறிந்து கொண்டுவிட்டார்.

     திரிலோசனர் சட்டுப்புட்டென்று இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை. சோழ மாமன்னன் தனது தூதுவராக எப்பொழுது யாதவ பீமனை அனுப்பி வைத்தாரோ அப்பொழுதே அவருக்குச் சமதைரான ஒருவரைத் தாம் அனுப்ப வேண்டும். அத்தகையவர் கெஜதேவவல்லபரே என்று முடிவு செய்துவிட்டார்.

     “இந்தப் பூ மண்டலத்தில் பலபல போர்களை நடத்திய பல மன்னர்கள் உண்டு ஆசார்யரே!”

     “உண்டு!”

     “அவர்களில் இவனும் ஒருவன்தான்! இந்த உண்மை தங்களுக்குத் தெரியாததல்ல” என்று கூறிவிட்டு நீண்டதொரு பெருமூச்சு விட்டான். அவன் பெருமூச்சில் ஆத்திரமிருந்தது. தன்னுடைய நிலை பற்றிய வேகம் இருந்தது. ஆசாபங்கமுமிருந்தது! ஏன்? சிறிது ஆதங்கமும் கூட இருந்தது!

     “ஜெகதேவ வல்லபரே! எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாராக. இராஜேந்திர சோழ தேவன் பக்தியுள்ள சைவ மன்னன். அவன் புகழ் ஆசை கொண்டவன் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் யுத்த வெறி கொண்டவன் என்பதை நான் ஏற்கவில்லை. நீங்களும் ஓர் அரசன். எனவே சோழனின் அகில பாரத இணைப்பு என்ற நோக்கம் அவனுடைய நாடு பிடிக்கும் ஆசையைச் செயல்படுத்துவதுதான் என்று நினைத்தால் நான் அதனைச் சரி என்றோ தவறு என்றோ ஆராயப் போவதில்லை. ஆனால் சோழன் ஒரு நாட்டுக்குள் வரும் முன்பு தனது நோக்கத்தைக் கூறி நம்மிடம் சமாதானமாகச் செயல்பட்டால் இரு சாராருக்கும் நன்மை. மாறுபட்டால் உங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு எங்களைச் சேர்ந்தது என்று அறிவிப்புச் செய்த பிறகே தனது படைகளை அனுப்புகிறான். இதெல்லாம் அவனுடைய வாலாயமான அரசியல் செயல் முறைகள் என்பதையும் நீர் அறிவீர்.”

     வல்லபர் நெடு நேரம் பேசவில்லை. திரிலோசனர் கூறிய விளக்கம் பற்றிப் பலவாறாகச் சிந்தனை செய்தார். தாம் இதுவரை சோழனை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவரைச் சந்தித்தவர்கள் பலர் பலவாக அவரைப் பற்றிக் கூறியதுண்டு. பெரும்பாலும் அவை அந்தச் சோழரைப் பற்றி நல்லதாகக் கொள்ளும்படியானதாக இல்லை.

     “சோழன் ஒரு முன் கோபக்காரன், பிடிவாதக்காரன், மூர்க்கன், நிதானமற்றவன், தற்பெருமை அபாரம். மனிதரை மனிதர் மதித்தாக வேண்டும் என்பதே அவன் அகராதியில் இல்லை. மமதையே உருவானவன். அறிவாளியானாலும் அகங்காரியாதலால் இங்கிதமறியாத இறுமாப்புக்காரன்!”

     வல்லபருக்கு இன்னும் என்ன வேண்டும்? அவனைப் பற்றி இவ்வளவுக்குக் கேள்விப்பட்டிருப்பது போதாதா? ஆனால் சில சந்தேகங்களும் அவர் மனதைக் குடையாமலில்லை. யாதவ பீமன் மகா முரடன். தன்னை எதிர்த்த எவரிடமும் அவன் தோல்வியே காணாதவன். அத்தகையவன் இன்று சோழனின் சேனாபதி என்றால்... உத்தமசோழ மிலாடுடையார் என்று சோழ நாட்டு மக்கள் போற்றிப் புரந்திடும் வெற்றி வீரத் துணைவனாக இருக்கிறான் என்றால்... நிம்மளதேவி ஒரு அருமையான சிவபக்தை. அப்பழுக்கற்ற குணமும் சிறப்பும் கொண்டவள். அவளே அந்த இராஜேந்திரனை உத்தமமான சிவபக்த சீலன் என்று புகழ்கிறாள் என்றால்... இந்தச் சிவாசாரியார் எவரையும் வீண் துதி செய்வதில்லை. இவர் கூட அவனை, அந்தச் சோழனை வெகுவாகச் சிறப்பித்துப் பேசுவதென்றால்... இது சாதாரண மனுஷத் தன்மையுள்ள மனிதாபிமானி என்ற வகையில்... இன்னொரு புறம்... வேங்கியின் விஜயாதித்தியன் அசாதாரண வீரன் மட்டுமில்லை, எந்த எதிரியையும் அலட்சியமாகவும் கேவலமுமாகவே மதிப்பவன். அவனே கூட ஒருமுறை ‘சோழ மாமன்னன் இராஜராஜ சோழன் மன்னர்களில் ஒரு மாமன்னன் என்றால் இராஜேந்திரன் வெற்றி வீரர்களில் ஒரு வெற்றி வீரன்’ என்று கூறியுள்ளான். கீழைக்கங்கனான வஜ்ரஹஸ்தன் இரண்டு முறை தோற்றிருக்கிறான். ஆனால் அவன் கூட இராஜேந்திரனை ‘அரசர்க்கரசன்’ என்று சொன்னதுண்டு! எனவே ஆசாரியரின் கோரிக்கையை ஏற்றுச் சோழனை சந்திப்பதில் தவறில்லை. இது ஒரு சோதனை என்பது உண்மை. ஏற்றுச் செல்வோம்... ஆனால் அவன் நம்மை மதிக்க வேண்டுமே!

     “நீண்ட நேரமாக யோசித்துச் செயல்படுவது நல்லதுதான் ஜெகதேவரே. ஆனால் நீங்கள் சித்திர துர்க்கத்து ராஜனாக அங்கு செல்வது பற்றி யோசிக்கிறீர்களா? அல்லது இந்தளனிடம் நம் புத்திமதி செல்லுமா? என்று சிந்திக்கிறீர்களா?” என்று திரிலோசனர் கேட்டதும் வல்லபன் சற்றே பதறிப் போய் “இரண்டும்தான் ஆசார்யரே!” என்றான்.

     “நல்லது. முதலில் இந்தளனிடம் சென்று முயற்சியுங்கள். ஒருவேளை அவன் இணங்கினால் நிலை மாறும். நாமும் நம்முடைய திட்டத்தை மாற்ற நேரலாம்!” என்று அவர் கூறியதும் வல்லபன் சட்டென எழுந்துவிட்டான்.

     ஆனால் இந்தளன், வல்லபேந்திரனை அடக்க ஒடுக்கமாக வரவேற்று உபசரித்தாலும் அவனுடைய யோசனைக்கு இணங்கவில்லை. “நான் மாபாரதக் கர்ணனைப் போல, கெட்டவனோ, நல்லவனோ, சாளுக்கியனுடன் இணைந்த நண்பனாகி விட்டேன். திடீர் என்று விலகினால், நான் தோற்று விட்டேன் என்றுதானே என்னை விட்டு ஒதுங்குகிறாய் என்று கேட்பான். ஒருவன் வலுவாக இருக்கும் போது வேண்டுமானால் ஒதுங்கலாம். தோல்வியால் நொந்து கிடக்கும் போது அப்படிச் செய்தால் அது துரோகம்!” என்று தத்துவ விளக்கம் கூறினான் அவன்.

     வல்லபர் திகைத்தார் என்றாலும், “இந்தளா, நீ என் சொல்லை ஏற்கவில்லை. எனவே நான் உன்னை ஆதரிக்கப் போவதில்லை. அதே சமயம் எதிரியாக வருபவனுடனும் ஒத்துழைக்கப் போவதில்லை. ஆனால் எந்தத் தரப்புக்கும் செல்லாத ஒரு நிலையாகவே இருப்பேன்” என்றான்.

     “நீங்கள் இப்படி ஒதுங்கினால் என் நிலைமை, மக்கள் நிலைமை இரண்டுமே மோசமாகிவிடும் என்பது நீங்கள் அறிந்ததுதானே?” என்று வேகத்துடன் கேட்டான் அந்த இந்தளன்.

     “சாளுக்கியனுடன் நீ இணைந்திருப்பதை நம் மக்கள் விரும்பவில்லை. இதர மன்னர்கள் பலரும் விரும்பவில்லை. இந்த நிலையில் ஒரு யுத்தம் வருகிறது என்றால் உன்னுடைய நோக்கம் ஏதுவாயினும் செய்கை நம் மக்களுக்கு விரோதமானதே. எனவே என்னுடைய ஒத்துழைப்பு கிடையாது” என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டான்.

     மீண்டும் ஆசார்யரைச் சந்தித்த போது அவர் வல்லபன் கூறிய விளக்கத்தைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு சொன்னார்: “ஜெகதேவரே, இப்போது நமக்கு வேறு வழியில்லை. எது எப்படியானாலும் ஒரு யுத்தம் உண்டாகாமல் தடுப்பதுதான் இப்போது நாம் செய்யக்கூடிய ஒரே நற்பணி. எனவே நீங்கள் நாளையே சோழ மன்னரைக் கன்னட நாட்டுச் சைவ சமயாதீனப் பிரதிநிதியாகச் சென்று சந்தித்துப் பேசுங்கள்” என்றதும் அவர் திடுக்கிட்டார்.

     அப்படியானால் தாம் ஒரு மன்னர் என்ற தகுதியை விலக்க வேண்டுமா? அது தன்மானத்துக்குச் சிறிதும் பொருந்தாதே!

     அவர் மனதில் ஓடும் சிந்தனையை அறிந்தவர் போல் திரிலோசனர் “வல்லபரே! ஒரு சிறு நாட்டின் மன்னர் நான் என்று நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ளுவதை விட அகில கர்நாடகத்தின் சைவ சமயிகளின் ஏகப் பிரதிநிதி என்ற அந்தஸ்து இருக்கிறதே, அது சிறப்பானது. சோழன் மதிப்புடன் வரவேற்று அளவளாவி நிச்சயமாகவே மதித்துச் சம ஆசனம் தந்து சமநிலையில் பேச வேண்டிய சிறப்புள்ள நிலையாகும். எனவே தன்மானப் பிரச்னைக்குப் பதில் உண்மையான உயிர்மான பிரச்னைதான் இருக்கிறது!” என்று கூறியதும் மேலும் விவாதிக்கவில்லை வல்லபர்!