உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 6 உறையூர் எப்படியோ அப்படித்தான் தஞ்சையும் சோழருக்குத் தலைநகர் என்றால், காஞ்சிக்கு இரட்டிப்பு மதிப்புண்டு! ஏன்? அது பாரதத்தின் ஏழு புனித நகரங்களுள் ஒன்று. வடநாடு நாலந்தா போல இங்கும் ஒரு பெரும் பல்கலைக் கழகம். அது எந்தக் காலத்தில், யாரால் துவக்கப் பெற்றது என்பது கூடத் தெரியாது. அவ்வளவு புராதனப் பெருமை கொண்டது; கலைப் பணியாற்றியது. பல்கலை வளர்த்த பல்லவர்களின் நீண்ட காலத் தலைநகராயிருந்த பெருமை கொண்டது. சைவம், சமணம், பௌத்தம். வைணவம் ஆகிய நாலு வகை சமயங்களும் தழைத்து வளர்ந்த சர்வ சமய சமரச நகரம் அது. ஏகாம்பரேசுவர், கைலாச நாதர், வரதராஜர் இப்படியாகப் பல கோயில்கள், கோட்டைகள், நகரத்தின் சிறப்புக்கும் முக்கியத்துவத்துக்கும் ஊட்டமளித்து உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் காஞ்சி என்றால் தலைநகரம் என்ற பெருமை பெறச் செய்தது. இராஜேந்திரன் தனது திக்விஜயத்தின் ஆரம்ப விழாவைக் காஞ்சியில்தான் துவங்கினான். முன்னைய தொண்டை நாடு அல்ல, இப்பொழுது இராஜேந்திரனுக்கு அடங்கிய சோழ நாட்டின் நாடு அது; தெற்கே கடல் தாண்டி இலங்கையை வென்று வாகை சூடியவன், சேரர், பாண்டியர், கொங்கர், தொண்டையர் என்று வரிசையாக வெற்றிக் கட்டிடத்தை ஆரம்பித்து இப்போது சாளுக்கியர், கங்கர், கதம்பர், ராஷ்டிரகூடர் என்று வெற்றி வேள்வியை முடுக்கி விட்டவன் கர்நாடகத்தைத் தன் வயப்படுத்த அடிமைப்படுத்திட முனைந்ததில் வியப்பில்லை. ஆனால் காஞ்சியில் இருந்த பெரியோர் பலர் “கர்நாடகம் சைவத்தின் சிறப்புத் தலமாக மாறியிருக்கிறது. சைவ பக்தையான நிம்மளதேவியார் தமிழகத்தின் பல கோயில்களுக்குப் பல நிவந்தங்களை அளித்திருக்கிறாள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல திரிலோசன சிவாசாரியார் கர்நாடகத்தின் முதல் சைவப் பேராதீனமாக இருக்கிறார். எனவே வெற்றி வேகத்தில் நாம் விபரீதம் செய்வதாக அந்நாட்டு மக்கள் கருதி விடக் கூடாது. பொறுமையாக அணுகுவோம். ஒரு தூதரை அனுப்பி நல்லதை கூறுவோம். இந்தளன் ஏற்கா விட்டாலும் ஏனையோர் மறுக்க மாட்டார்கள். மதிப்புடன் நம் நல்லெண்ண சமிக்கையை ஏற்றுச் சமரசமாகவே ஒத்துழைப்பர்” என்று கூறினார்கள். பரகேசரி இராஜேந்திரன் இதனை நிராகரிக்கவில்லை. இந்த யோசனையை ஏற்றுத்தான் யாதவ பீமனை அனுப்பினான் என்பதை முன்னர் கூறினோம். ஆனால் யாதவ பீமன் தனக்குப் பேட்டியளிக்கவே இந்தளன் மறுத்து விட்டான் என்று கூறியதும் இராஜேந்திரன் வெகுவாகப் பதறி சினங் கொண்டு விட்டான். திரிலோசன சிவாசாரியார் தன்னை வெகு மரியாதையுடன் அன்புடன் வரவேற்று பேசினார் என்றும் பீமன் கூறியதும் சற்றே சினம் தணிந்தான்! “என்ன சொல்லுகிறார் நம் மதிப்புக்குரிய சிவாசாரியார்?” என்று கேட்டான் சினத்தை அடக்க முயற்சித்தபடி. யாதவ பீமன் மன்னனிடம் இப்போது மிக மெதுவாக எச்சரிக்கையுடன் பதில் பேசினான். “கர்நாடகம் இன்று பல பகுதிகளாகச் சிதறுண்டு கிடக்கிறது. அரசர்கள் தங்கள் விருப்பம் போல சுதந்திரமாகவே இயங்குகிறார்கள். இவர்களில் வலிமை வாய்ந்தவர் ஜெகதேவ வல்லபேந்திர வீரவிஜயதேவர் என்பவர்தான். அதாவது சித்திர துர்க்கத்தின் அரசர் இவர். ஆசாமி யாருக்கும் தலைவணங்காதவர். அச்சமற்றவர், தன்மான வீரர். இந்தளனுக்கு தாய்மாமன். என்றாலும் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல. இவர் தயவு இல்லையேல் இந்தளன் ஒரு நொடிகூடத் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் அவர் வீர சைவர். திரிலோசனரின் சீடர்களில் ஒருவர். இன்னொரு அரசனான கன்னர தேவனும் சைவனே. அவனும் இந்தளனுக்கு வேண்டியவன் அல்ல” என்று கூறினார். இராஜேந்திரன் இவ்விவரத்தை யெல்லாம் தலையை அசைத்து கேட்டானேயன்றி குறுக்கே கேள்வி போடவில்லை. முதலில் தானாக வரும் விஷயங்களைத்தான் அவன் செவி சாய்த்துக் கேட்பான்! யாதவ பீமன் நிறுத்தியதும் மன்னன் கேட்டான். “அப்படியானால் நாம் இவர்கள் இருவரையும் கவனித்தாக வேண்டும் இல்லையா?” என்று சட்டென்று மாமன்னன் ஒரு கேள்வி கேட்டதும் யாதவ பீமன் திடுக்கிட்டார். பிறகு பரபரப்புடன், “தேவையில்லையென்று திரிலோசனரே கூறியுள்ளார். அவர்கள் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். இந்த நேரம் அவர்களுடன் அவர் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்?” “அப்படியா? நல்லது. ஏன் அந்த இந்தளதேவனை சாளுக்கியன் பிடித்துக் கொண்டிருப்பது போல இவர்களால் பிடித்துக் கொள்ள முடியவில்லை?” “அவன் இன்னமும் கூட சமணர்களிடம் ஆதரவாயிருக்கிறான். இன்னமும் கணிசமான பகுதியினர் சமணராகவே இருக்கின்றனர். திடீரென்று எது ஒன்று நடந்தாலும், சமணர்கள் தங்களுக்கு சைவர்களால் ஆபத்து என்று கூக்குரல் போடலாம் அல்லவா? இதன் காரணமாக மக்களில் ஒரு சிலர் கிளர்ந்தெழுந்து நியாய அநியாயம் புரியாமல் நாட்டில் புதியதோர் கொந்தளிப்பை உண்டாக்கலாம்.” “உண்மைதான், நமக்கு இப்போது சமயங்களுக்குள் சண்டை எதுவும் தேவையில்லை. சமயம் அவரவர்களுடைய சொந்த விஷயம். ஆனால் நாம் நம் போக்கிற்குச் சமயத்தை ஒரு இடையூறாக்கித் தடை போட அவன் முயன்றால் அதை நாம் பொறுப்பதற்கில்லை!” “இதை நான் அவனிடம் நேரில் கூறவில்லையாயினும் அவனுடைய அமைச்சர்களிடம் கூறிவிட்டேன்.” “ஆனாலும் ஒரு சாதாரண இந்தளன் உம்மை நேரில் சந்திக்க மறுத்தது முதலில் உம்மையும். பிறகு உம் மூலம் நம்மையும் அவமதிப்பாகும்.” “திரிலோசனர் நம்மைப் பெரிய மனது பண்ணி இதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.” “அவர் வாக்கை நாம் இப்போதைக்கு மதிப்போம். இன்னும் மூன்று தினங்களுக்குள் அவரிடமிருந்து நமக்குத் தகவல் எதுவும் இல்லையேல் நீங்கள் நம் படைகளை நடத்திச் செல்லுகிறீர்கள்.” “உத்திரவு!” “இந்தளன் பயந்து ஓடிவிட்டால் விட்டுவிடுங்கள். எதிர்த்து நின்றால் வென்று கைது செய்யுங்கள். ஆனால் கொல்ல வேண்டாம். நிம்மளதேவி நம் மதிப்புக்குரிய பக்த ரத்தினம்.” “உத்திரவு!” “சரி, நீங்கள் வேறு ஏதாவது என்னிடம் கேட்க வேண்டுமா?” “ஆம் சக்கரவர்த்திகளே!” “அது என்ன?” “இந்தளனுக்குப் பதிலாக திரிலோசனரே கர்நாடக நாடுகளின் சார்பாக நாடி வந்தாரானால்...” என்று மிக அடக்கமாகக் கேட்டார். இப்படி பீமன் கேட்டதும் சில நொடிகள் அவரை வியப்புடன் பார்த்துவிட்டு “அப்படியானால் அவருக்கு அந்நாட்டில் அவ்வளவுக்குச் செல்வாக்குண்டா!” என்று கேட்டதும் யாதவ பீமன் “ஆம் சக்கரவர்த்திகளே!” என்றார் அடக்கமாக. “அப்படியானால், நாம் அவர் சமரச சமிக்ஞைக்கு உரிய மதிப்பைத் தருவோம். அதுமட்டுமல்ல, இரத்தக் கறை இல்லாமல் கர்நாடகம் நம் சாம்ராஜ்யக் குடும்பத்தில் இணையுமானால் அவருக்கு அஞ்சலி செய்து அவர் வழி நடப்போம் என்பதும் உறுதி.” “நல்லது சக்கரவர்த்திகளே!” என்று பதில் தந்து பீமன் முறைப்படி வணங்கிவிட்டு அப்பால் சென்றதும் இராஜேந்திரன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். கர்நாடகம் முழுமையும் ஒரு காலத்தில் சமணர்களின் நாடாகவே இருந்தது. இன்று அது ஒரு சைவ நாடாக பெரியயோர்களின் சீரிய தொண்டும் பெரும் முயற்சியும்தான் அடிப்படைக் காரணமாயிருக்க முடியும். மாமன்னர் மீண்டு எழுந்து ஏதோ யோசனையுடன் அப்படியும் இப்படியும் நிதானமாக நடந்த போது “அடியேன் உள்ளே வர அனுமதியுண்டா?” என்ற அடக்க குரல் கேட்டு திரும்பியவன் எதிரில் ராஜராஜப் பிரும்மமாராயன் என்னும் உத்தம சோழப் பிரும்மமராயன் குனிந்து வணங்கி நின்றார். வியப்பும் திகைப்பும் கொண்ட மாமன்னன் “ஓ! இதென்ன அதிசயம்... வாரும்... வாரும்! பிரும்மமாராயரே திடீரென்று நீங்கள் இங்கே எப்படி வந்து குதித்தீர்? தில்லை உங்களுக்கு சலித்து விட்டதா? அல்லது உங்கள் இளவரசன் விட்டால் போதும் என்று உதறிக் கொண்டோடி விட்டானா?” என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே அவர் தோள் மீது தம் வலக்கரம் வைத்து, “எது எப்படியானாலும் இந்தச் சமயத்தில் நீங்கள் எதிர்பாராது இங்கு வந்தது மிகவும் நிம்மதி தருகிறது! ஆதித்தன் மீண்டும் உங்களை...” “இல்லை சக்கரவர்த்திகளே! இம்முறை நானே அவரை மாலித்தீவுகளுக்குப் போகும் ஒரு சிறு கடல் குழுவினருடன் அனுப்பியுள்ளேன்.” “அவனுக்கு இன்னமும் விளையாட்டுப் புத்தி போகவில்லை! அந்த விளையாட்டு கடல் ஓடுவதில்தானா தீவிரம் காட்ட வேண்டும்?” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார் சோழர். ஆனால் பிரம்மராயர் பேரரசர் கவலை கொள்ளக் கூடாது என்பதற்காகவோ, என்னவோ “நூற்றெட்டு கடலோடிகளும் உடன் இருக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே ‘கடல் சிங்கம்’ இது என்று. அந்த நாவாய்தான் ஆதித்தனை ஏற்றிச் சென்றுள்ளது” என்றார் குரலில் உறுதியைக் காட்டி. “நல்லது பிரமராயரே! நான் கடாரம் சென்ற பிறகுதான் சோழ மண்டலம் திரும்புவது பற்றி யோசனை! இடையில் எத்தனைக் காலமோ! அது சரி, ராஜாதிராஜன் எங்கிருக்கிறான்?” என்று கேட்டார் சட்டென்று! “சேரர் நன்னாட்டில்!” “நல்லது! இராஜேந்திரன்...?” “கொங்கு நாடு சென்றுள்ளார்!” “வீரராஜேந்திரன்...?” “தங்களுடைய தஞ்சைத் தரணியில்!” “ஆக உறையூரில் எவனும் இல்லை.” “பேரரசியும் இளைய பிராட்டிகளும்... சோழகர் புதிய படைகளை அங்குதான் தாமே நேர் பார்வையிட்டுப் பயிற்சி தருகிறார்.” “மிக்க மகிழ்ச்சி! திடீரென்று நீங்கள் இங்கு வந்ததன் காரணம்!” “சத்தியவாக்கிய சிவாசாரியரும், பேரையூர்ப் பெருமானும் பெரிய பிராட்டியாரும், செம்பியன் மாதேவியாரும் உத்திரவு செய்தபடி...” “மறையன் அருண்மொழிக்கு இவர்கள் எல்லோரும் உத்திரவு போட்டார்களா?” என்று கேட்டுவிட்டுக் ‘கலகல’வென்று வாய்விட்டுச் சிரித்தார் திரிபுவனச் சக்கரவர்த்திகளான பரகேசரி இராஜேந்திர சோழ தேவர்! அடக்கமாகவே நின்றார் மறையன் அருண்மொழி என்னும் உத்தமசோழ பிரம்மாராயன்! அரசர் வாய்விட்டுச் சிரித்ததில் சற்றே குன்றியவர் போல. “சொல்லுங்கள் பிரும்மராயரே! நீங்களே இங்கு வந்தாயிற்று. பிறகு அவர்கள் உம்மிடம் கோரியதென்ன?” “கன்னட நாட்டு மக்களை யுத்த முனையில் சந்திப்பதைத் தவிர்க்க வெகுவாக முயலும்படி வேண்டிக் கொண்டனர்!” “நல்லது! நீங்கள் அங்கிருந்து எப்படி முயற்சிக்க முடியும்? அதற்காக வந்தீராக்கும்!” “நான் மட்டும் வரவில்லை. திரிலோசனரின் தூதராக கன்னட நாட்டின் மூத்த மன்னரும் மாவீரருமான ஜெகதேவ வல்லப தேவர் வந்து கொண்டிருப்பதாகவும் அறிந்தேன்!” என்று நிதானமாகக் கூறியதும் “என்ன..? மெய்யாகவா? அவர் முரடர், பிடிவாதக்காரர், முன் கோபி! என்று கேள்விப்பட்டோமே நாம். அவர் நம்மிடம் வருவதென்றால்... எப்படித் தெரிந்தது?” “நம் ஊடுருவிகள் எப்பவுமே சுறுசுறுப்பானவர்கள். தவிர அவர்களுடைய தலைவரான திரிபுவன அரைய பூபதி தாம் இருக்குமிடம் தெரியாமல் தீவிரமாக செயல்படுவதில் திறமையானவர் என்பதும் தாங்கள் அறிந்ததே!” “அப்படியா? நாம் அவரை இனி இங்கு வைத்திருப்பதில்லை. உங்களுக்கும், உத்தம சோழ மிலாடுடையாருக்கும் சோழகருக்கும் இந்தப் பகுதிகளிலேயே ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளன. எனவே அவரை நான் என்னுடன் அழைத்து செல்வதாக முடிவு செய்திருக்கிறேன்.” “மிகவும் பொருத்தமான முடிவு. ஆனால் அவர் மட்டும் போதுமா? ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேர்களை அல்லவா நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்?” “உண்மை! கடல் கடந்து செல்லும் படைகளின் மகா சேனாதிபதிகளாக பூபதியாரையும், அறந்தை நெடுஞ்செழியரையும் நியமித்து உத்திரவு செய்கிறோம்.” “மிக மிக நல்ல ஏற்பாடு. தாங்கள் ஒவ்வொன்றையும் தீர யோசித்தே செயல்படுகிறீர்கள்!” “பிரமராயரே! புகழ்ச்சி வேறு எவரிடமிருந்தாவது வரவேண்டும். நான் இன்று சக்கரவர்த்தியாயினும் தங்களிடம் நெடுங்காலம் படை நடத்தப் பயின்றவன்தான்” என்று சொல்லிச் சிரித்ததும் மாராயர் மீண்டும் சற்றுக் கூசி நின்றார். எவ்வளவு பெரிய பதவி! அதைக் காட்டிலும் எவ்வளவு பெரியமனம்! கடந்த காலத்தை மறக்காத சிறப்பு! பின்னதை ஊகித்து செயல்படும் திறமை... அமரர் ஆன திரிபுவன சக்கரவர்த்திகள் பெற்ற அருமை மைந்தன் அவரைவிட... ஆம்! தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயத்தான் செய்யும்! சோழன் இராஜேந்திரன் ஒரு ராஜ சிம்மம்... மாராயருக்கு அந்த ராஜகேசரிச் சிங்கத்திடம் பேரன்பு, பக்தி, ஏன் சிறிது அச்சம் கூட உண்டு என்றால் இந்தப் பரராஜ சிங்கமான பரகேசரியிடம் சற்று அதிகமாகவே அச்சம் உண்டு. எனவே பேசுவதில் வெகு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்... “என்ன யோசனை மாராயரே! இந்தச் சோழன் இன்று வாழ்வதெல்லாம் உம் போன்றவர்களுடைய பெரும் உழைப்பின் சிறப்பால்தான்! உங்களுடைய மிக நம்பகமான வழிகாட்டும் வகை முறைகளால்தான். எனவே எங்கள் மறையன் அருண்மொழிக்கு யாரும் உத்திரவு முடியாது, என்னையும் சேர்த்து! அவருக்கு அவரே தலைவர். ஏனெனில் இந்தச் சோழ சாம்ராஜ்யம் அவர் தோள் மீதுதான் வளர்ந்தது!” என்று இராஜேந்திர சோழன் உணர்ச்சி வசப்பட்டுக் கூறும் போது அவன் குரலே தழுதழுத்துவிட்டது. அடக்கமே உருவாக நின்ற அவர் நிலையோ மிகமிகச் சங்கடமாயிருந்தது. என்றாலும், சற்றே துணிவு பெற்று, “சக்கரவர்த்திகள் இன்று என்னைச் சற்று அதிகப்படியாகவே கணிப்பது எனக்கென்னவோ பயத்தையே தருகிறது!” என்றார் இலேசாக முறுவலித்தபடி. “பளாபளா!” என்று கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்படி பரகேசரி “பிரும்மமாராயர் என்னிடம் பயப்படுகிறார். இல்லையா? உம்! மாராயரே! நான் விளையாட்டுக்குக்கூட உண்மைக்கு மாறாகப் பேசுபவனில்லை. அதுபோகட்டும். நான்... நான் கடல் கடந்து மும்முறை சென்றவன். நான் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் அங்கெல்லாம் காலமோட்டியிருக்கிறேன். கவலைப்படவில்லை. எனினும் இன்று ஏனோ என் மனதில் நம் மகன் ஆதித்தன் கடல் ஓடியிருக்கிறான் என்று கேட்டதும் ஏதோ ஒரு விரிசல் ஏற்படுவதைக் காண்கிறேன். தங்கள் பாதுகாப்பில் அவன் இருப்பது கண்டு, தங்கள் வார்த்தைக்கு அவன் கட்டுப்பட்டுக் இருப்பது கண்டு, நான் இனிக் கவலை இல்லை என்றுதான் தண்டெடுத்துப் புறப்பட்டுள்ளேன். பெரிய பிராட்டிக்கு, அவன் மீதுள்ள அன்பும் பாசமும் சற்று அதிகம். ராஜாதிராஜன் என்னுடனேயே இருந்து விட்டவன்; வீரராஜேந்திரனோ கொடும்பாளூரிலேயே தன் இளமையைக் கழித்து விட்டான். மிஞ்சி நின்ற ஆதித்தன் அரண்மனையின் செல்லப் பிள்ளையாக இருந்ததுதான் வம்பாகிவிட்டது. என்றாலும் நீங்கள் இந்தப் பகுதியில் இருக்கிறீர்கள். எனவே கலக்கமில்லை!” என்றார் வார்த்தைகளை அளந்து பேசிய அரசர். ஆனால் மாராயர் புரிந்து கொண்டார். கடைசிப் புதல்வன்! பாசம் மனதை அரிக்கிறது! நியாயம்தானே! இடையே பேசப் பயந்தார். ஆனால் இந்த மனோநிலைக் கிடையே சம்பந்தமின்றி ஏன் அதற்காகத் தன்னைப் புகழ் வேண்டும் என்று குமைந்தார். இராஜேந்திரர் சட்டென அவர் மனநிலையை ஊகித்தவர் போல, “மாராயரே, வடநாடு செல்லும் நம் படைகளுக்குத் தலைமை தாங்க அரையபூபதி மட்டும் போதாது என்பது புரியாமலில்லை. ஆனால் உம்மை நான் தமிழகத்தைவிட்டு வேறு எங்குமே கொண்டு செல்லுவதாக நோக்கமில்லை. பெரிய பிராட்டியார் உம்மை உறையூரைவீட்டுக் கூட அப்பால் செல்ல அனுமதிக்க வேண்டாம். தில்லைக்கு வேண்டுமானால் ஒரு பகல் போய் இரவு திரும்பட்டும். அவர் இல்லாத உறையூர் வெறிச்சோடி இருக்கிறது என்று கூறினார்! ஆம்! தஞ்சைக்கு நாங்கள் சென்ற பிறகு உறையூர் உம்மால்தான் உயிருள்ளதாய் இருக்கிறது என்பது உண்மை. அடிக்கடி என் தந்தை உம்மிடம்தான் எந்த சந்தேகத்தையும் விளக்கம் பெறும்படி கூறுவார். இப்போது எனக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அதைத் தீர்த்து வையுங்கள்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். பிரம்மமாராயர் தாம் வந்த வேளை சரியாய் இல்லை போலும் என்று வேளை மீது வெறுப்புக் கொண்டு வாய் மூடியிருந்தார் பாவம்! “வடநாடு செல்லத் தாம் தயார். ஆனால் கடல் வழியாக இயலாது என்று அரையபூபதி கூறிவிட்டார். நல்லது என்று நானும் இசைந்து விட்டேன். ஆனால் வடநாட்டு மனிதர்கள் அசாதாரணமானவர்கள். ஒட்ட தேசத்தில் முரட்டு இந்திரரதன், மிதிலையில் உள்ள பொல்லாத மன்னன். விஹாரையில் ஹரதத்தன், விராட நாட்டு பிட்டப்பன், பூபாளத்தின் வீரபாலன் ஆக எல்லோரும் யுத்தம் என்றால் கிள்ளுக் கீரையாக மதிப்பவர்கள். கூர்ஜரம் பற்றிக் கவலையில்லை. அங்கே ஏகப்பட்ட விபரீதங்கள். ரணசூரன் எதிர்ப்பான், தர்மபாலனும்தான். கோவிந்த சந்திரன் பற்றி ஏதொன்றும் ஊகிக்க முடியாது. மகிபாலன் எல்லையிலேயே என்னைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளானாம். ஆனால் ஒட்ட தேசத்து இந்திரரதன் நிலையைப் பொறுத்தது மகிபாலன் முடிவு என்று ஊகிக்கலாம். எனவே எனக்கு இன்னொரு சேனாபதி அவசியம் வேண்டும். வடநாட்டினரைப் போன்ற பழக்கவழக்க நெறிமுறைகள் உள்ளவனாக இருக்க வேண்டும். முரடனாக இருந்தால் நல்லது. அச்சமறியாதவனாக இருந்தால் மிகவும் நல்லது. நம்மைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுபவனாக இருந்தால் அதைவிட நல்லது!” என்று பேரரசன் வரிசையாக அடுக்கியதும் பிரம்மமாராயன் ‘சரிதான், புதிய வம்பு பிடித்துக் கொண்டுவிட்டது! யார் கிடைப்பார்கள்... அதுவும் வடநாடு செல்ல என்றால் திரும்பிவர சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற நிலையில் எவர் வருவர்...? கிடைக்கமாட்டார் என்று கூறிவிட முடியுமா? இந்நேரம் இருந்த மனநிலை மாறி நம் மீதே பாய்ந்து விடக் கூடுமே இந்தப் பரசேகரி!’ “நாளை ஒரு நாள் பொறுத்து கொள்ள இயலுமா?” என்று பணிவுடன் கேட்டார் பிரம்மமாராயர். இராஜேந்திரன் அவரை வியப்புடன் பார்த்துவிட்டு, “கடந்த பதினைந்து நாட்களாக எதுவும் புரியாது திணறும் எனக்கு நாளை என்ன, மேலும் இரண்டு வேண்டுமானாலும் பொறுக்கத் தயார்” என்றான் மனதில் ஏற்பட்ட பரபரப்பை வெளிக்காட்டாமல்! ஆனால் பிரம்மமாராயரும் தன் மனதில் ஏற்பட்ட கலக்கத்தை வெளிக்காட்டாது வணங்கிவிட்டுச் சட்டெனப் புறப்பட்டு விட்டார்! பேரரசர் முன்னே அடக்க ஒடுக்கமாக இருந்த பிரம்மமாராயர் வெளியே வந்ததும் பழைய பிரதம சேனாபதியாகிவிட்டார்! அவரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரையபூபதி, மிடுக்காக நடந்து வரும் முறையிலிருந்தே அரசர் ஏதோ யோசனை கேட்டிருக்கிறார் இவரிடம் என்று புரிந்து கொண்டார்! “அரையரே, வாளுக்கு இரையாக எவனாவது கிடப்பானா?” என்று எரிச்சலுடன் கேட்டதும், “யார் வாளுக்கு?” என்று திரும்பக் கேட்டார் பிடி கொடாமல். “வடவர் வாளுக்கு...” என்றார் பிரம்மமாராயர். “பூ! இவ்வளவுதானே... எத்தனையோ ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிடித்திருப்பது வாளாயில்லாமல் வெறும் இரும்பு பட்டையாயிருக்கும் என்பது உங்கள் எண்ணம்?” என்றார் பூபதி. “நீங்கள் ஒரு பழைய கந்தல்! நமக்குத் தேவை இப்பொழுது ஒரு முரட்டு மனிதன். ஆனால் அவன் உங்கள் தோழராக இருக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்? அதாவது நீங்கள் இப்பொழுது வடநாடு செல்லும் சோழப் படைகளின் பிரதம சேனாபதி! இது தெரியுமா உங்களுக்கு!” என்று மிடுக்காகவே கேட்டார். பழம் பெருச்சாளியான பிரம்மமாராயர் எப்பவுமே கோபமாக வந்தால் கேலியும் கிண்டலுமாகத்தான் பேசுவாரே தவிர சிறிதும் நிதானம் இழந்துவிடமாட்டார் என்பதை அரையர் அறிவார். “எனக்குத் தோழனாக ஒரு மாங்குடி முண்டன் வருவது என்றால் நான் சேனாபத்தியம் வேண்டாம் என்று ஒதுங்க வேண்டியதுதான்” என்றார் அரையர். பிரம்மமாராயருக்குத் தெரியும். அரையரை வற்புறுத்தி அவருடைய சுயவிருப்பத்துக்கு மாறாகச் செயல்படும்படி எவராலும், அவர் சோழ சாம்ராஜ்யாதிபதியாக இருந்தாலும் முடியாது என்று நன்றாகத் தெரியும். திருமுனைப்பாடிக் குடும்பம் என்றாலே அடி நாளிலிருந்து தனி மதிப்பு. எனவே இப்போது இவர் தயவு தேவை. இதற்கு தேவை நயமான பேச்சு! தந்திரமான அணுகுமுறை! “ஐயா அரைய பூபதியே! நீங்கள் வடநாடு போவதைப் பற்றி யோசிக்க முடியாது என்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை. எனக்குத் தேவை உண்மையிலேயே ஒரு மாங்குடி முண்டன்தான்... ஆம்... அடேடே! நீங்கள் விளையாட்டாக சொன்னது கூட நல்லதுதான்! ஏன்! நம்முடைய வேளாகுடி புலி கடிமால் முத்தரையர் இருக்கிறாரே! மறந்துவிட்டேனே நான் ஒரு...” பிரம்மமாராயர் மேலே பேசவில்லை. அரைய பூபதியின் முகம் போன போக்கு அவரைச் சட்டெனப் பேசாமற் செய்துவிட்டது! “புலி கடிமால் ‘போர் என்பதையே இனி கண்ணேடுத்துப் பாரேன்!’ என்று வல்லத்துப் போர் முடிந்ததுமே விலகிச் சென்றது நினைவில்லையா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டதுடன் நிற்கவில்லை. “நாம் எல்லோரும் போர் நடத்தியது முறையல்ல என்றுதானே அவர் விலகினார். இப்போது மட்டும் நாம் நடத்தும் போர் முறையானது என்று அவர் ஒப்புக்கொள்ளுவாரா?” என்றும் கேட்டார். “அன்று நடந்தது போர் மட்டும் அல்ல. நாசவேலை. எதிரிகள் தீப்பந்தங்களை கொளுத்தி எறிவர் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அதைக் கண்டதும் நாம் அவர்களில் பலரைக் கண் மண் தெரியாது சாடிக் கொன்று விட்டோம். இது எனக்குக் கூட ஒப்புதல் இல்லை. ஆனால் வேறு வழியில்லை... அவர்கள் நம் பயிர் பச்சையினை, வீடு வாசல்களை நாசம் செய்து விட்டனர். கிராமங்கள் அப்படியே சாம்பலாகிவிட்டது என்பது உண்மை ஆயினும்...” “நாம் திருப்பியடித்தது முறையில்லை என்று நீங்களும் கூறுகிறீர்கள். நல்லது பிரம்மமாராயரே! நீர் முதியவர், மாவீரர், எங்கள் தலைவர் இதெல்லாம் உண்மை! ஆனால் யுத்தம் என்று வரும் போது நாம் கடமையைச் செய்வதில் மாற்றம் கூடாது. நான் தேவாரம் பாடிப் பொழுது போக்க வீட்டிலிருக்க வேண்டும். இங்கு வரக் கூடாது. எனவே புலிகடிமாலைப் போய்க் கெஞ்சத் தேவையில்லை. எனக்கு அவர் தோழராக வருவதையும் ஏற்பதற்கில்லை. அப்படி மீறி அரசர் நியமித்தாலும் நான் ஒதுங்குவது உறுதி!” என்று அரையர் அடித்துக் கூறியதும் ‘இதென்ன கஷ்டம்!’ என்று பிரமமாராயர் மனம் நொந்து கொண்டார். ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|