ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

7

     அன்றையப் பகல் இரவு மட்டும் இல்லை. மறு நாள் முழுமையும் ஓடிவிட்டது. இன்னமும் ஒரு சரியான சேனாபதி அகப்படவில்லை. மறையன் அருண்மொழியான உத்தமசோழ பிரும்மமாராயருக்கு.

     அரையரும் ‘ஐயோ பாவம்!’ என்று இரக்கப்படாமல், தன் பூசைகள் உண்டு, சேனைகள் உண்டு, பயிற்சிகள் உண்டு என்று இருந்தாரே அன்றி உதவி செய்ய முன்வரவில்லை.

     பிரம்மமாராயருக்கு நேரம் ஓட ஓட எந்த ஒரு நிலையும் பிடிபடாமல் குழப்பமும் கலக்கமும் கூடிவிட்டது. இன்னும் அறுபது நாழிகைகள் கூட இல்லையே!

     காஞ்சிக் கோட்டைக் காவலன் ஒருவன் அதிவேகமாகத் தன் குதிரையை ஓட்டி வந்து அவர் எதிரே நின்று வணங்கிய போது கூட ஏதோ ஒப்புக்குத் தலையாட்டி ‘என்ன?’ என்று கேட்பது போல வாய் அசைத்தாரே தவிர, உற்சாகமாக எதுவும் கேட்டுவிடவில்லை!

     “கன்னட நாட்டு சிவாசாரியரின் தூதுவர் பெயர் வல்லபர் என்று கூறினால் போதும் என்று...” என்று அவன் அவசர அவசரமாக அறிவிப்பதற்குள் பதறி எழுந்த பிரம்மமாராயர் “என்ன? என்ன? வல்லபரா? தூதுவரா?” என்று முன்னே வேகமாக வந்து கேட்டதும் அவன் நடுநடுங்கி விட்டான்!

     எதிரி அவன் என்று தெரியாமல் இவரிடம் வந்துவிட்டோமே! என்று பயந்துவிட்ட காவலன் “மன்னிக்க வேண்டும்! தெரியாத்தனமாக வந்து சொன்னேன். இதோ போய் விரட்டி விடுகிறேன்” என்று கூறிவிட்டுக் குதிரை மீது தாவினான்.

     “முட்டாளே நில்!” என்று இரைந்து கத்திவிட்டார் பிரம்மமாராயர்.

     அவன் மீண்டும் நடுங்கியபடி இறங்கினான்.

     ‘ஏகம்பா! நீ இப்படிச் சோதிக்கலாமா இந்த ஏழையை? இன்று காலையில் உன் முகத்தில் விழித்ததன் பலன் இதுதானா?’ என்று நொந்தபடி பரிதாபமாகப் பார்த்தான் அவரை.

     “நீ என்ன சொன்னாய்? யார் வந்திருப்பது...?” என்று அவர் மீண்டும் கேட்டதும் “பதற வேண்டாம் பிரம்மராயரே! திரிலோசன சிவாச்சாரியாரின் சொந்தத் தூதுவனாகக் கன்னட நாட்டிலிருந்து சித்திர துர்க்கத்தின் மன்னன் ஜெகதேவ வல்லபேந்திர தேவன் வந்திருக்கிறான். நமது அனுமதிக்காக கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறான். அவ்வளவுதான்!” என்று சோழர் இராஜேந்திரனே அங்கு அவரிடம் வந்து சொன்னதும் அவர் அரண்டு போய் “மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்திகளே! ஏதோ நினைவு... ஏதேதோ சிந்தனைகள்...” என்றார் தம் நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பான்மையில்.

     இந்தப் பதிலைப் பாராட்டதவன் போல, “தவறில்லை மாராயரே! தயவு செய்து நீங்களே போய் அந்தத் தூதுவரை நம்மிடம் அழைத்து வருகிறீரா?” என்று கேட்டதும் அவர் புரிந்து கொண்டார், இராஜேந்திரன் சினங் கொண்டு விட்டான் என்பதை; எனினும் ஒரு நொடியும் தயங்காமல், “இதோ..” என்று பதில் கூறியவர் எதிரில் அரைய பூபதியே ஒரு குதிரையை கொண்டு நிறுத்தியதும் திடுக்கிட்ட அவர் சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு சட்டெனக் குதிரை மீது தாவினார்!

     “அரையரே! நான் ஒரு ஆள் பிடிக்கச் சொன்னேன். அவ்வளவுதான்! ஆனால் அவருக்குப் பேய் பிடித்துவிட்டது!” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மன்னர்.

     அரையரும் “ஆமாம்! நீங்கள் சொன்னது விஷயமாக அவர் ‘புலிகடிமால் போகுமா?’ என்றார். நான் ‘போரைக் கண்ணெடுத்தும் பாரேன் என்பவரை எதற்கு அழைக்க வேண்டும்’ என்றேன்.”

     “பளா! பளா...! அப்புறம்?”

     “அவ்வளவுதான். ஆனால் அது முதல் கடந்த தொண்ணூறு நாழிகையாக ஊண் உறக்கமின்றி தவியாய்த் தவிக்கிறார் மனிதர் பாவம்!” என்றார் அரையர்.

     ஆனால் கோட்டைக்கு வெளியே சென்ற பிரம்மமாராயர் பழைய பிரம்மமாராயர் ஆகிவிட்டார்! அற்புதமான நாலு புரவிகளில் நாலு வீரர்கள் புடை சூழ கனகம்பீரத்துடன் தன் குதிரை மீது அமர்ந்திருந்த கன்னடத்து வல்லபரை அவர் ஏறெடுத்துப் பார்த்ததும், அவனும் சோழ நாட்டின் மூத்த மஹாசேனாதிபதி பிரம்மமாராயர் என்பவர் இவர்தான் போலும் என்று ஊகித்தபடி உன்னிப்பாகப் பார்த்தான்.

     கோட்டைக் காவலன் விழுந்தடித்துக் கொண்டு முன்னே ஓடி வந்து “சோழ சாம்ராஜ்ய மஹாசேனாதிபதி...” என்று அறிமுகம் என்ற பேரில் உளறியதும் வல்லபர் “நான் சித்திர துர்க்கத்தின் மன்னன் ஜெகதேவ வல்லபேந்திரன்! எங்கள் மதிப்புக்குரிய சைவ சமயாதீன மகாபீடாதிபதி திரிலோசன சிவாசாரியரின் தூதுவனாக இங்கு வந்துள்ளேன்!” என்று கூறிய போது இடையே அங்கு திடீரென்று வந்து சேர்ந்த யாதவ பீமன் ஓடி வந்து “மறையன் அருண்மொழியாரே! இவர் தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டார். நான் தங்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அனுமதியுண்டா?” என்று ஒரு கேள்வி போட்டுப் புன்னகைத்து சிரக்கப்பம் ஒன்றுடன் அலாதி உறுமலும் வெளிப் போந்தது!

     “எங்கள் சூரிய குல மாமன் திரிபுவன சக்கரவர்த்திகள் பரகேசரி இராஜேந்திர சோழ தேவரின் நால்வகை போர்ப் படைகளின் முதல் பெருந்தலைவரான பிரதம சேனாதிபதி இவர்தான். அரசு முறைப்படி அமைந்த பெயர் உறையூர் உத்தமசோழப் பிரம்மமாராய மறையன் அருண்மொழி இராஜராஜ பிரம்மாதி மகாராயர். நால்வகைப் படைகளுக்கு நாற்பதாண்டுகளுக்கு மேல் முதல் தலைமை தாங்கும் இவர் சோழ நாட்டின் மூலபலம். இவர் இல்லையேல் இங்கு எவருமேயில்லை. மிகைபடக் கூறுவதல்ல. உண்மையைக் கூறுகிறேன்!” என்றவர் பதிலுக்கு சிரக்கம்பம் செய்யும் வல்லபேந்திரரையும் பார்த்தார்.

     மாராயர் அவருடைய சாதாரணமாகத் தலையசைக்கும் தோரணை கண்டு வியந்தாலும் உள்ளூரக் கோபம் கொள்ளவில்லை.

     ஆனால் பீமன் மீண்டும் அடக்கமாக, “மாராயரே, இவர் ஆயிரம் ஆண்டுகளாக சித்திர துர்க நாட்டை சிறப்பாக ஆண்டு வரும் வல்லபராய மகாராய குலத்தைச் சேர்ந்த ஜெகதேவ வல்லபேந்திர மன்னர். கன்னட நாட்டுச் சைவ மடத்தின் தலைமைப் பீடக் காவலர். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளாகச் சமணர்களாக இருந்த இவர்கள் குடும்பம் இன்று அந்நாட்டின் தலைமைச் சைவர்களாக மாறியுள்ள சிறப்பு இவருடைய பாட்டனாருக்கு உரியது. இவர் தந்தையார் வேங்கியிலே நம் மாமன்னர் ராஜகேசரி இராஜராஜ சோழ தேவருடன் கைகலக்க மறுத்து நேசக்கரம் நீட்டியவர். ‘ஒரு சைவன் இன்னொரு சைவனுடன் இன்றைய நிலையில் போராடுவது புத்திசாலித்தனமுமல்ல. சைவம் தழைப்பதற்கான விதிமுறையும் அல்ல’ என்று ஒதுங்கி நின்று உதவி செய்த உத்தம வீரர்!” என்று கூறியதும் சற்றே நிதானமடைந்த பிரம்மமாராயர் “ஓகோ! அப்படியாயின் மிக்க மகிழ்ச்சி! வல்லபேந்திரரே சோழ மாமன்னன் சார்பில் நானே வரவேற்க வந்தேன்!” என்று கூறியதும் வல்லபேந்திரனும் “இந்த சமிக்ஞையால் பெரிதும் மகிழ்ச்சி கொண்டேன். தங்களுடைய இந்த மதிப்பும் அன்பும் எங்கள் குருநாதரை திரிலோசனரைச் சேர வேண்டியது” என்றார் பிடிவிடாமல்.

     யாதவ பீமனைப் பார்த்தார் பிரம்மமாராயர்.

     அவரோ ‘வந்திருக்கும் தூதுவரை எடை போடுகிறார் நம்ம பிரம்மமாராயர். வந்திருப்பவனோ நம் எல்லோரையுமே எடைபோடப் பார்க்கிறானே!’ என்று வியப்புற்றவராய் பேசாமலிருந்து விட்டார்.

     தமது மைய மண்டபத்தில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த சோழ மாமன்னன் பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழ தேவன் இருபுறத்திலும் பூபதி, யாதவ பீமனும் உடன்வர இடையில் கம்பீரமாக வலது தோள் மீது பெரும் கதை ஒன்றைத் தாங்கி மிடுக்காக வந்த வல்லபேந்திரனை உற்றுப் பார்த்துவிட்டுச் சிரக்கம்பம் செய்ய அவர் தமது இடைவாளைக் கழட்டாமலே இடக்கரத்தில் கதாயுதத்தை மாற்றி சற்றே குனிந்து “கன்னட தேசத்துச் சைவ சமயாதீனமகா பீடாபதி திருலோசன சிவாசாரியாரின் தூதுவனாக வந்துள்ள ஜெகதேவல்லபேந்திர தேவனாகிய நான் அவருடைய நல்லாசிகளை முதலில் தெரிவித்து என் வணக்கங்களையும் அறிவித்துக் கொள்ளுகிறேன்” என்று எடுப்பான குரலில் சிறிதும் பிசிறு தட்டாத தொனியில் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்து தன்னைப் பற்றிக் கூறியதும், “நல்லது வல்லபேந்திரமே! சிவாசாரியார் நமது சமயாசாரியாரும் கூட. நம்மிடம் பேரன்பு கொண்டவர். எனவே அவர் தம் அன்பர்கள் நமக்கும் அன்பர்களே! முதலில் இப்படி அமரும்” என்று தமது அருகே இருந்த ஒரு இருக்கையை இராஜேந்திரன் காட்டியதும் திடுக்கிட்டார் வல்லபர்!

     ‘உண்மைதானா? அல்லது...’

     “தூதுவராக வந்திருக்கும் நீங்களும் ஒரு நாட்டரசரே. எனவே சோழன் மதிப்புத் தருவதில் குறை காட்டுவதில்லை!” அடுத்துச் சற்று அழுத்தமாகக் கூறியதும் வல்லபர் ஒருமுறை ஏனோ தெரியவில்லை, உள்ளூர நடுங்கிவிட்டார்! பிறகு சட்டென இரண்டெட்டில் முன்னே நடந்து இருக்கையில் அமர்ந்தார்.

     “மறையன் அருண்மொழியும் இப்படி அமரட்டும்! பீமரே! நீங்கள் பெயருக்காகவாவது இப்படி ஒரு கதையைத் தாங்கி வந்திருக்கலாம். மறந்துவிட்டீர்! ஆனால் நமது அரையபூபதியை மறந்துவிடலாமா?” என்று இளநகை புரிந்து சற்றே கேலி செய்வது போலக் கேட்டதும் இதோ அழைத்து வருகிறேன்?” என்று விரைவாகச் சென்றார்.

     ‘கதை பற்றிக் கேலிச் சொல்லா?’ என்று உள்ளூரப் பொருமிய வல்லபன் காதில், “வல்லபரே! பயணம் சிரமம் இல்லாமல் இருந்ததா? நமது திரிலோசன சிவாசாரியார் நலமாயிருக்கிறாரா? அவருடைய சமயத் தொண்டுகள் சிறப்பாக நடைபெறுகின்றனவா? நீங்கள் எல்லாம் அவருக்கு பூரண ஒத்துழைப்புத் தந்தால் அவருக்கு ஏது சிரமம்! மதிப்புக்குரிய சைவப்பிராட்டியார் நிம்மளதேவி நலமாக, நிறை பக்தையாக இருக்கிறார் அல்லவா? அது சரி, நீங்கள், உங்களுக்கு குடும்பம், மனைவியர் குழந்தைகள் யாவரும் நலம்தானே இறைவன் அருளால்!” என்று தொடர்பு அறுகாத கேள்விகள் புகுந்தன.

     “கடவுளே!” என்று வாய்விட்டுக் கத்திவிட்டார் வல்லபேந்திரர்.

     “ஏன்? என்ன ஆயிற்று?” என்று சற்றே பரபரத்தவர் போலக் கேட்டார் சோழப் பெருமன்னர்.

     என்ன ஆக வேண்டும் வல்லபருக்கு!

     ‘சோழன் மகா முன் கோபக்காரன், முரட்டுப் பிடிவாதக்காரன், நிதானமற்றவன், தற்பெருமைக்காரன், மனிதரை மனிதராக மதியாத மமதை கொண்ட அகங்காரி, இறுமாப்புக்காரன், கர்வி, கன்னெஞ்சன்.. முன்பு நாம் கேள்விப்பட்டதெல்லாம், அப்படியானால் முழுப் பொய்களா?’ திகைத்துக் குழம்பினான்.

     ‘இதோ சர்வ சாதாரணமாக, மதிப்பும் அந்தஸ்தும் அளித்து மிக நயமாக விசாரிக்கிறான். குழந்தைகள் பற்றி, அரசி நிம்மளதேவி பற்றி, குருநாதன் பற்றி... பயணம் பற்றி... இந்நாடு முழுமைக்கும் தான் ஒரு மாமன்னன் (ஆம்! இன்றைய உலகின் மாபெரு மன்னன்) என்பதைக்கூட மறந்து அருகில் இருக்கை தந்து அமரச் செய்து அன்பு காட்டி இங்கிதமாகப் பேசினால்... நம்ப முடியவில்லையே! பகவானே!’

     “பிரம்மமாராயரே நம்முடைய வல்லபர் திரிலோசனரின் சீடர் என்பதற்கு இதுவே போதும்! அடிக்கொருமுறை இறைவனைக் கூப்பிடுகிறார். பிறகுதான் இவ்வுலகுக்கு வருவார் போலிருக்கிறது!” என்று கூறிவிட்டு வாய்விட்டுச் சிரித்தார்.

     ‘ஆகா! எவ்வளவு களங்கமற்ற சிரிப்பு... இவரையா அந்தப் பாவிகள்..’ “கடவுளே!”

     இதற்குள் அரைய பூபதியுடன் யாதம பீமன் வந்துவிட்டார். வேறோர்புறத்திலிருந்து, பாலும் பழமும் தாங்கிய தங்கத் தாலங்களை ஏந்தி வந்தான் தலைமைச் சமையலாள். அரையர் தாழ்ந்து வணங்கி நின்றார்!

     “அரையரே! உமக்கு ஒரு பெரும் போட்டி வந்துவிட்டது” என்று கூறிவிட்டு தங்கத்தாலத்தை தம் பக்கத்தில் அமர்ந்திருந்த வல்லபரிடம் தன் கையாலேயே தள்ளி வைத்தார்.

     வல்லபர் அதிசயத்தால் சிலையானார்! ஆனால் பிரம்மமாராயரும் அரையரும் ‘போட்டி என்று அரசர் திடீரெனக் கூறுவானேன்? தம்முடன் எதற்காக எவர் போட்டி இடுவது?’ என்று திகைத்தார் அரையர்!

     “வல்லபேந்திரரே, முதலில் வயிற்றுப்பசி ஆறட்டும். அப்புறம் அறிவுப்பசி தீர்க்க முயலுவோம். இதோ இந்த அரையர்தான் எம்முடைய இப்போதைய வடநாட்டுத் திக்விஜயத்துக்காக செல்லும் படைகளின் சேனாபதி. இவர் பரம பக்தர். பக்தர் என்றால் சாதாரணம் அல்ல. நீங்கள் மூன்று முறை கடவுளை இப்போது அழைத்தீர் அல்லவா? இவர் அப்படி அல்ல! நொடிக்கு நொடி சிவ சிவா என்று செபித்துக் கொண்டேயிருப்பார். இதன் காரணமாக அந்தச் சிவன் என்ன செய்தான்?” என்று கேட்டுவிட்டு ஒருமுறை எல்லோரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு மேலும் சொன்னார்!

     “நீ உன் காலமெல்லாம் ஒரு தனிக்கட்டையாகவே இருந்துவிடு. சிவ பக்தி என்ற ஒன்றுதான் உனக்கு வீடு வாசல் மாடு மனைவி ஊர் உலகம்; அரசன் ஆண்டி, இரவு பகல் என்று விதித்துவிட்டார்!” என்று ஏதோ ஒரு அதிசயத்தைக் கூறுவது போல விளக்கியதும் அரையர் கண்கள் கலங்கி ஆனந்தக் கண்ணீர் உகுத்தன.

     அவர் மட்டுமல்ல, வல்லபேந்திரனும் வியப்பால், திகைப்பால், வரம்பு கடந்த உள்ளக் கிளர்ச்சியால் கண்ணீர் உகுத்துவிட்டார்.

     “அடேடே! இதென்ன விபரீதம் வல்லபரே! நான் ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னதை நீங்கள் விபரீதமாக எடுத்துக் கொண்டு... நான் ஏதோ எல்லாம் வல்ல இறைவனைக் கேலி செய்து விட்டதாக எண்ணிக் கலங்கலாமா? கூடாது. ஏனென்றால் எனக்கு அத்தகைய எண்ணம் இல்லைவேயில்லை. யாரிடம் விளையாடினாலும் சிவனிடம் விளையாட மாட்டேன். நான் அப்படிச் செய்தால் இதோ இருக்கிறாரே என் குருநாதர் மறையன் அருண்மொழி ராஜமாராயர். இவர் சும்மாவிடமட்டார்!” என்று கூறிவிட்டு மீண்டும் இரைந்து கலகலவெனச் சிரித்தார். மண்டபத்தில் இச்சிரிப்பு ஒலித்து எட்ட இருந்தக் காவலர்களை உட்பக்கம் எட்டிப் பார்க்கச் செய்தது.

     மாமன்னர் மிதமிஞ்சிய உற்சாகத்தில் இருக்கிறார் என்று ஊகித்த பிரமமாராயர் பலவகைக் கனிகளைச் சுவைக்காமல் கம்பீரமாக ஆனால் திகைப்பே உருவமாக அமர்ந்திருக்கும் வல்லபேந்திரரையே உற்று நோக்கினார். பிறகு அரையரைப் பார்த்தார்.

     அவரோ கண்களை மூடியும் மூடாமலும் எல்லாம் வல்ல சிவனே போற்றி என்று தியானித்தார்.

     “சோழ சாம்ராஜ்யாதிபதிகளே! நான் சின்னஞ்சிறு சித்திர துர்க்க நாட்டின் சின்ன அரசன். சர்வ சாதாரணமானவன் உங்கள் முன்னே...” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவரைச் சட்டென நோக்கிய பரகேசரி, “அதுமட்டுமில்லை, நீங்கள் எமது தந்தையாரின் உற்ற நண்பரான நரகேசரி ஹரதேவவல்லபரின் திருக்குமாரரும் ஆவீர் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சைவன் இன்னொரு சைவனோடு போரிடுவது தகைமையல்ல என்று ஒதுங்கிய அவ்வுத்தமரின் திரு மகன் நீங்கள் என்பதறிய நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். கன்னட நாட்டில் ஒரு சிவாசாரியார் மட்டும் இல்லை. ஒரு சைவ பிராட்டியான நிம்மளதேவியும் இருக்கிறாள். ஒரு சைவ உத்தமரின் மகனும் இருக்கிறார். எனவே நாம் ஒருமுறைக்கு இரு முறையல்ல, இரு நூறுமுறை யோசித்த பிறகே அப்பகுதியில் தீவிர நடவடிக்கை எடுக்கச் செய்வேன். வேண்டாம் போர், நாம் நண்பர்களாவோம் என்று இந்தளதேவரோ அல்லது கன்னர தேவரோ யார் வந்தாலும் சரி, நான் தயார். ஏனெனில் எங்கள் ராஜகுரு கட்டளை, உங்கள் ராஜகுரு கட்டளை இரண்டும் தெய்வத்தின் குரல். எனவே நாம் அதை மீற விரும்பவில்லை. அப்படி மீறினாலும் கன்னட நாட்டின் மீது போர் தொடுப்பதில் நான் முதலானவனாயிருக்க மாட்டேன். உங்களவர்கள்தான் முதலாவதாக இருந்து என்னை வலுச்சண்டைக்கு இழுப்பர். இதுதான் சுருக்கமான உண்மை! பிரத்தியட்ச நிலை!” என்று கூறியதும் வல்லபர் பேசவும் சக்தியிழந்து சிலையாகச் சமைந்து விட்டார்.

     கேலியாகவும், விளையாட்டாகவும் பேசத் துவங்கிய ராஜதந்திரி தன் நிலையை எவ்வளவு தெளிவாக ரத்தினச் சுருக்கமாகச் சட்டுப்புடடெனக் கூறிவிட்டார்.

     ஆம்! இராஜேந்திர சோழரை எதிரிகள் நன்கு புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மட்டும் சரியாகப் புரிந்து கொண்டால் நாட்டிலே வீண் சண்டை, உயிர் உடைமை, சொத்து சுதந்திர விஷயம் எல்லாம் நிச்சயமாக இல்லை. வேண்டுமென்றே இவரைப் படுமோசமான ஒரு மன்னனாக அவர்கள் வர்ணிப்பதெல்லாம் உண்மையை மறைக்க அல்லது உண்மையைக் காண அஞ்சும் கோழைத்தனத்தால்தான்.

     “நல்லது மாமன்னரே! நல்லது! இந்தச் சில நொடிகளிலிலேயே நான் புரிந்து கொண்டுவிட்டேன் உங்களை! எங்கள் சிவாசாரியார் கூறியது முற்றிலும் உண்மையாகி விட்டது. நீங்கள் நெறிமுறையற்ற போர் ஒன்றை கன்னட நாட்டின் மீது திணிக்க விரும்பவில்லை. மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன் என்பதை நான் என் வெறும் வாயால் கூறப்போவதில்லை. இதோ இந்தக் கதாயுதம் ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் குடும்பச் சொத்தாக இருந்து வருகிறது. இதன் மீது கைவைத்துக் கூறுகிறேன். நான் இனி உங்கள் எதிரி அல்ல. ஆயுள் உள்ளவரை நண்பன். நரகேசரியின் மைந்தனான இந்த வல்லபன் கரம் இனி உங்கள் கரத்தோடு இணைந்திருக்கும். எம் அன்னை சாமுண்டி மீது ஆணை!” என்று சிம்ம கர்ஜனைக் குரலில் அழுத்தந்திருத்தமாக கூறியதும் பரகேசரி அவர் தோள் மீது வலக்கரம் வைத்து தன் சிங்கப் பார்வையை அவர் திருமுகத்தில் நிலை நிறுத்தி, “வல்லபரே! மிக்க மகிழ்ச்சி.. மிகவும் நிம்மதி! நன்கு யோசித்து எந்த ஒரு முடிவையும் செய்யும். ஏனென்றால் இந்தச் சோழன் எதிரிகளின் காலன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு நண்பர்களிடமிருந்து கறந்து விடுவதிலும் வல்லவன். ஆமாம்! இவனுடைய இந்தச் சுயநலத்தை இந்த பிரம்மமாராயர் ஐம்பதாண்டுகளாக அறிவார்! எனவே நீங்கள் நாளை அறியும் போது மனம் சங்கடப்படக் கூடாதல்லவா?” என்று வார்த்தைகளில் வெகுவாக நயத்தைக் கலந்து கேட்டதும் வல்லபர் திடுக்கிட்டார். ‘இன்னும் என்ன கேட்கிறார் இவர்!’ என்ற வியப்பு நிலை அவரை மேலும் திடுக்கிடச் செய்தது.

     எந்த காரணத்தைக் கொண்டும் நாளை இந்தளனுடன் சண்டை என்று ஒன்று நடந்தால் நிச்சயமாக இவர் அவனுக்கு எதிரியின் பக்கம் இல்லை என்ற உறுதியை விடும்படி இவருடைய கோரிக்கை எதுவும் இருந்துவிடக் கூடாதே!

     “நீங்கள் கன்னட நாட்டில் சாதாரணமாக நுழைந்து செல்லுவதாக இருக்கிறீர்களா? அல்லது போர் செய்து ஊடுருவிச் சென்றுவிட முடிவா?” என்று பளிச்சென்று கேட்டதும் சோழ தேவர் தன் கையை அவர் தோள் மீது இருந்து இறக்கிவிட்டு, “நான் படைகளுடன்தான் அவ்வழியாகச் செல்வேன். அங்கு இருக்கும் மன்னன் என்னை, என் படைகளை எதிர்க்காமல் ஒதுங்கி நின்றாலே போதும். எங்கள் வழி செல்லுவோமேயன்றி மல்லுக்கு நிற்கமாட்டோம். அவர்கள் வரவேற்றால் மகிழ்ச்சி அடைவோம். எங்கள் படையின் ஒரு கவுரவ தளபதிக்கு உரிய விருதளிப்போம். மாறாக அவர்கள் எதிர்த்து நின்றால் போராடி வென்று மூன்று நிபந்ததனைகளுடன் விடுதலை செய்வோம். அவை: முதலாவது, எங்களுக்கு எந்நாளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது, இரண்டாவது போரில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு செய்வது, மூன்றாவது எங்கள் பிரதிநிதியாக எங்கள் ஆலோசனைகளுக்கு இணங்க அந்தப் பகுதியை நிர்வகிப்பது. இதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ நிபந்தனைகள் அல்லது விதி முறைகள் எவையும் இல்லை.”

     “வீரனாயிருப்பவன் ஒதுங்கியிருக்கலாமோ? சேனைளுடன் தன் நாட்டில் ஒருவனை நுழையவிடுவது அவன் வீரத்துக்கு சுதந்திர ஆட்சிக்கு இழுக்கு இல்லையா?” என்று வல்லபர் வெடுக்கென்று கேட்டதும் பிரமராயர் சடக்கென்று முன்னே வந்தார்.

     அரையர், ‘வந்தது ஆபத்து’ என்று வல்லபர் பக்கம் சேர்ந்தார். யாதவ பீமனோ ‘சூழ்நிலையைக் கெடுத்துவிட்டானே! தூதுவனாக வந்தவன்’ என்று பதறிவிட்டார்.

     ஆனால் பேரரசர் இவர்கள் பயந்தது போல் பதறவில்லை. மிகவும் நிதானமாகவே, “நீங்கள் சொல்லுவது உண்மையான வீரர்களைப் பொறுத்தவரை நியாயம். அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் வீரன் மாதிரி வேஷம் போடுபவர்களுக்கு இதெல்லாம் சிறிதும் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் காகிதப் புலிகளேயன்றி உண்மைப் புலிகள் அல்ல” என்றான் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.

     ‘அப்படியானால் யாரைச் சுட்டிக்காட்டுகிறார் சோழர்? கன்னரத் தேவனையா? இந்தளனையா? அல்லது தன்னையா?’

     அரையர் தாம் குறுக்கிட இது தக்க தருணம் என்று நினைத்து, “சாளுக்கியன் வீண் போர் நடத்திவிட்டு பிறகு முழுமையாக தோற்று ஓடினான். அவன் தோற்றதனால் அப்படி ஒன்றும் பெரிதாக கெட்டுப் போகவில்லை. நிபந்தனைகளுக்கு இணங்கி முன் போலவே நாடாளுங்கள் என்றோம். தோற்று ஓடியவன் உங்கள் இந்தளன் கொடுத்த இடத்தில் அவன் ஆதரவில் தங்கி, ‘விட்டேனா பார்! மீண்டும் போர் செய்வேன். புதிய படைகள் தயாராகும்’ என்று எங்களிடம் வீரம் பேசுகிறான். இது எத்தகையது? அல்லது இவனுக்கு இடமளித்துள்ள இந்தளன் நிலையும் எத்தகையது என்று யோசித்தால் எங்கள் மாமன்னரின் விளக்கம் புரியும்” என்றார்.

     வல்லபன் புரிந்து கொண்டான் சட்டென்று!

     “‘சாளுக்கியன் நட்பு. கல்லைக் கட்டி கடலில் குதிப்பது போன்ற சுமை’ என்று எச்சரித்தார் எங்கள் சிவாசாரியார். பயனில்லை. நானும் எச்சரித்தேன். ‘வீண் சண்டை நடத்தினால் உதவமாட்டேன்’ என்று கேட்கவில்லை. எனவேதான் என்னை உங்களிடம் அனுப்பினார் சிவாசாரியார். கன்னடர் சோழர்களைப் பகைக்கவில்லை. இந்தளன் தவறுக்காக ஒரு நாட்டையே, அந்நாட்டின் அப்பாவி மக்களையே பழி வாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. இதைத் தெரிவிக்கும்படிதான் எனக்கு உத்திரவு!” என்றார் வல்லபர்.

     சோழன், தூதுவராக வந்துள்ளவரின் சொற்செட்டையும் சுருக்க விளக்கத்தையும் உள்ளூரப் பாராட்டிக் கொண்டு சற்றே உவகையுடன் சொன்னார்.

     “திரிலோசனர் கருத்து சிறந்தது. மதிப்போம். ஆனால் இந்தளன் முரண்டினால் எமக்கு வேறு வழியில்லை!” என்றார் சுருக்கமாக.

     இது காறும் மவுனமாயிருந்த பிரம்மமாராயர் சொன்னார்: “இந்தௗனைச் சரண் அடையச் செய்வது. அடுத்தது சாளுக்கியனை என்னிடம் ஒப்படைத்தாக வேண்டும். இது இரண்டும் சாத்தியமில்லையானால்...” என்று அவர் கூறி முடிப்பதற்குள் “நிச்சயமாக சாத்தியமில்லை. நண்பனை காட்டிக் கொடுப்பதற்குப் பதில் போராடிச் சாவேன் என்கிறான் இந்தளன். ஆனால் நிம்மளதேவியின் தாலி பாக்கியம் கெட்டியாயிருந்தால் நிலைமை வேறாகலாம்!”

     “நாம் இந்தளனை வென்று கைது செய்வோம். அவ்வளவுதான்! சாளுக்கியனை உயிருடன் விடுவதும் விடாததும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது!” என்றார் மாமன்னர்.

     வல்லபர் என்ன கூற முடியும்! ஆனால் மாராயர் விடவில்லை. “அவன் கைது ஆகாமல் செத்துத் தொலைத்தால்...?” என்று கேட்டார்.

     “அவனைக் கொல்லும் படியாக உள்ள வாள் நிச்சயமாக நம்முடையவர்களுடையதாக இருக்காது” என்றார் மாமன்னர்.

     ஆனால் வல்லபர் பரபரப்புடன் “தற்கொலை செய்து கொள்ளும் கோழையும் அல்ல அவன்!” என்றார்.

     மாமன்னர் இதைக் கேட்டதும் அவரைச் சற்றே வியப்புடன் பார்த்துவிட்டு, “நல்லது வல்லபரே, நீங்கள் இந்தளனைப் பற்றி நல்ல கருத்தையே கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

     “ஆம் சோழ தேவரே! அவன் என் சகோதரி மகன்!” என்றார் ஆதங்கத்துடன்.

     இதைக் கேட்டதும் சோழர் “ஓ!” என்ற ஒரே சொல்லில் தமது வியப்பையும் இது காறும் தாம் அறியாத ஒன்றை திடீரென்று அறிந்து கொண்டு விட்டதால் உண்டான அதிர்ச்சியையும் இந்த ‘ஓ’ மூலம் காட்டிக் கொண்டு விட்டார்.

     பிரம்மமாராயர் அளவு கடந்த வியப்புடன் வல்லபரை நோக்க, அரைய பூபதி “ஆண்டவனே!” என்று பிறர் காதில் விழா வண்ணம் முணுமுணுத்தார்.

     யாதவ பீமருக்குத் தெரிந்த விஷயம் இது. எனவே அதிர்ச்சியடையாமல் ஆனால் எதற்கும் சித்தமாகவே இருந்தார்.

     எனினும் பிரமமாராயரால் நெடுநேரம் மவுனமாக இருக்க முடியவில்லை. “உங்கள் மருமகனான அவனை ஆதரித்து நீங்கள் யுத்தம் செய்யத் தயாரில்லை” என்றார்.

     “சாளுக்கிய உறவு வேண்டாம். சோழர் நட்பு நமக்கு உகந்தது. எனவே எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனே இதை விட்டு ஒழி என்றேன். கேட்கவில்லை அவன்” என்றார் வல்லபர்.

     “இதன் காரணமாகவே நீர் அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறீர் போலும்!”

     “ஆம்! யாரிடமும் பயந்தோ அல்லது உயிருக்கு ஆசைப்பட்டோ அல்ல!”

     “நீங்கள் இவ்வாறு வெளிப்படையாகப் பேசுவது பாராட்டுக்குரியது.”

     “எனக்கு எதையும் பூடகமாகப் பேசத் தெரியாது. ஆரம்பத்தில் நான் அடிக்கடி கடவுளைக் கூப்பிட்ட காரணத்தையும் கூறிவிடுகிறேன். சோழன் ஒரு முன் கோபி, மூர்க்கன், இறுமாப்புக்காரன், மனிதனை மனிதனாக மதிக்காத அகங்காரி என்றுதான் உங்கள் எதிரிகளில் சிலர் மூலம் நான் கேள்விப்பட்டிருந்தேன். திரிலோசனரோ என்னிடம் நீங்கள் எவ்வளவு அடக்கமாக நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவுக்கு நடந்து கொள்வதுதான் முறை. நமக்குப் பொருத்தமானது என்று எச்சரித்து அனுப்பினார். ஆனால் இங்கு வந்ததும் அதிசயம் நிகழ்ந்தது. ஏன் அப்படி எல்லோரும் உங்களைப் பற்றி பொய்க் கூற வேண்டும்? பொறாமை அல்லது வெறுப்பு. சாளுக்கியன், கங்கன், கடம்பன் எல்லோரும் இணைந்தாலும் கூட உங்களை எதிர்த்து நிற்க முடியாது என்று அறிந்தும் கூட!”

     “தெரியும் வல்லபரே! அவர்கள் ஏச்சும் பேச்சும் ஏக்கத்தால் உண்டானவை. தோல்வி புத்தியைத் திருத்துவதற்குப் பதில் மழுங்கச் செய்துவிடுகிறது! எனவே நாம் அதை மறந்துவிடலாம்!”

     “உண்மைதான்! ஆனால்...”

     “வெற்றி அரைகுறை வீரனுக்குத்தான் மமதையுண்டாக்கும். முழு வீரனுக்கு உற்சாகமூட்டும், நிதானத்தைக் கூட்டும். பெருந்தன்மையாக நியாயத்தைச் சிந்திக்கச் செய்யும். நேர்மையாக நடக்கச் செய்யும்!”

     “ஆகா! இது உண்மையான வார்த்தை! மிகவும் சரியான விளக்கம். அப்படியானால் நான் தூது வந்ததற்குப் பிரதிபலன் என்ன?”

     “சிவாசாரியாரிடம் சொல்லுங்கள். வீண் சண்டை போடமாட்டோம். வம்பு செய்தால் விடமாட்டோம். ஆனால் மக்கள், நாடு, நகரங்களை அழிக்க மாட்டோம். அரையர் தலைமை ஆதலால் கிரமந்தவறி எதுவும் நடக்காது. சமரசமாக வந்தால் சங்கடமேயில்லை” என்றார் மாமன்னர்.

     “நல்லது மாமன்னரே! சமரசம் என்ற வகையில், இந்தளன் வந்தால் சாளுக்கியனுக்கு விரோதமாக வேண்டும். அவன் ஒரு செத்த பாம்பு. ஆதலால் கவலையில்லை. மீண்டும் சொல்லிப் பார்க்கிறேன். இணங்கினால் நல்லது. இல்லையென்றால் நாம் நிச்சயமாகப் பகைவர்கள் இல்லை” என்றார் வல்லபர்.

     மாமன்னர் இந்த நறுக்குத் தெரித்தாற் போன்ற விளக்க வார்த்தைகளை கேட்டு மிக்க மகிழ்ச்சி கொண்டார்.

     அரையரோ ‘இத்தகையவர் நம்முடன் இணைந்திருந்தால்..’ என்று நினைத்து பெருமூச்செறிந்தார்.

     ஆனால் பிரம்மமராயர் தனது சாணக்கியத்தைக் காட்டிடக் கூடிய நேரம் வந்துவிட்டதைக் கண்டு கொண்டார்.

     “வல்லபரே, வீரம் வீரத்தை விரும்பும். நேர்மை நாணயத்தை விரும்பும். நாம் உம்மை நம்புகிறோம். உமது நட்பும் எம் போன்று நாட்டுப் பணியாற்றும் அனைவருக்குமே பெரும் துணையாகக் கூட இருக்கும். காரணம் நீங்கள் சொற்செட்டுடன் தெளிவாகக் குழப்பமில்லாமல் பேசுகிறீர்கள். சிந்தனை தெளிவானால், பேச்சு தெளிவு பெறும். பேச்சு தெளிவானால் செயலும் சிறப்பாகவே இருக்கும் என்பது அனுபவம்!” என்றார் இங்கிதத்துடன்.

     “நன்றி மகாசேனாபதி! என் தந்தை சோழ மாமன்னர் அமரர் இராஜராஜ தேவரை வெகுவாகப் புகழ்ந்து பேசுவார். அவருடைய வீரமும் தெய்வப் பக்தியும் எங்கள் ஆசாரியாரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நான் நேரில் காணக் கொடுத்து வைக்கா விட்டாலும் அந்தச் சிங்கத்தின் மைந்தனை இன்று நேரில் கண்டதால் பெரும் மகிழ்ச்சி. நேரமும் காலமும் கூடி வந்தால் கடவுளும் நமக்குத் துணை செய்தால் நாம் இணைந்து செயல்பட முடியும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டினால் உண்மையிலேயே அது என்னுடைய பெரும் பாக்கியமாகும் என்பதிலும் ஐயமில்லை.”

     “இறைவன் நிச்சயம் அப்படியொரு சந்தர்ப்பத்தைத் தருவார் வல்லபரே!” என்றார் அரையபூபதி.

     “எங்கள் அரையருக்கும் அந்த இறைவன் மிகமிக நெருங்கிய தோழர்!” என்றார் பேரரசர்.

     அவர் இப்படிக் கூறியதும் இலேசாகச் சிரிப்பொலி தொடர்ந்தது.

     “நாம் மீண்டும் சந்திக்கும் போது மேலும் இணக்கமான பிணைப்புள்ள முறையில் சந்தித்து இணையப் பார்ப்போம்!” என்றார் உத்தம சோழப் பிரம்மமாராயர்!

     “ஆண்டவன் அருள் புரிந்தால் அனைத்துமே நடந்திடும்” என்றார் வல்லபரும்!

     ஆம்! இப்படிச் சொல்லிப் புறப்பட்டுச் சென்றவர் அடுத்த தொண்ணூறாவது நாள் சோழர்களுடன் முற்றிலுமாக இணைந்தார் சோழப் படைகளின் இன்னொரு சேனாபதியாக என்பதை நாம் முன்பே கூறினோம். தம்மிடம் முன்பு தூதராக வந்தவரின் திறமையைக் கஜினியிடம் இன்று தமது தூதுவராகச் சென்று காட்டட்டும் என்ற நினைவில்தான் இப்போது அவரை அனுப்புகிறார் என்பது நமக்குப் புரிந்துவிட்டது.