ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

8

     நாம் இதை எழுதத் துவங்கிய போது வங்கத்திலிருந்தோம். இடையே காஞ்சிக்கும் கன்னட நாட்டுக்கும் சென்று நம் வல்லபர், சோழரிடம் சேர்ந்த கதை கூறினோம். மீண்டும் நாம் வங்கத்துக்கே செல்வோம்! இன்னும் கொஞ்ச காலம் நமக்கு அந்தப் பகுதியில்தான் வேலை.

     மாமன்னர் இராஜேந்திரனின் அன்புக் கட்டளை என்றுதான் அதைக் கூற வேண்டும். ஏனெனில் கஜினி முகமது என்றாலே கிடுகிடென்று நடுங்கிய வடநாடு, எங்கேயோ தெற்கேயிருந்து சோழன் என்பவன் வந்திருக்கிறான். வங்கத்தில் தங்கியவன் தனக்குள்ள பிரச்னை போதும் என்று நினையாமல் கொடிய சாத்தான் மாதிரி வரும் கஜினியிடம் போய் வேதம் ஓதும் வீண்வேலையாக, பாவம் ஒரு தூதுவனை அனுப்புகிறானாமே! நடக்கக் கூடியதா! கஜினியின் மூச்சே அவனை ஊதிவிடுமே! அப்புறம் முகதரிசனம் எங்கே? தூதுவன் பேச்சு ஏது? ஆனானப்பட்ட ராஜ்யபாலன் கூட கண்மண் தெரியாமல் ஓடிப் போய்விட்டதை மறந்துவிட்டானா இந்தச் சோழன்? சோமநாத ஆலயத்தைக் காக்கும் பொறுப்பை அந்தக் கடவுளிடமே விட்டு ஓடிவிட்டானே அந்தப் பலாதிபல பீமதேவன்! அதையாவது அறிய வேண்டாமா? கடவுளே தம்மைக் கஜினியிடமிருந்து காத்து கொள்ள முடியாத போது இந்தச் சோழன் பாவம்! தன்னுடைய நல்ல ஒரு சேனாபதியை இழக்கத் தயாராகி விட்டானே என்று இரக்கத்தால் வெகுவாக வருந்திய மன்னர்கள் பலர் உண்டு.

     ஆனால் கோவிந்த சந்திரன், தர்மபாலன், ரணசூரன் ஆகிய மன்னர்கள் சோழன் இராஜேந்திரனுடன் நேரிடையாக மோதித் தோற்ற அனுபவம் பெற்றவர்களாதலால் இவ்வாறு இரக்கப்படவில்லை! இது துணிச்சலான செயல், பாராட்ட வேண்டிய ஒன்று. கஜினியைச் சமாளிக்கும் சக்தி இந்தப் பாரத பூமியில் இன்றுள்ள மாமன்னர்களில் யாராவது ஒருவனுக்கு உண்டென்றால் அது பரகேசரி இராஜேந்திர சோழ தேவராகத்தான் இருக்க முடியும். அதுமட்டுமல்ல, அவருடைய இரு பெரும் சேனாபதிகளும் அசாதாரண சக்தி புத்தியுற்றவர்களாதலால் சோழன் துணிந்தது அசட்டுப் பெருமையால் அல்ல, ஆழ்ந்து யோசித்துச் செய்த முடிவென்றே நம்பி உள்ளூர பெருமிதமும் கொண்டனர். சோழரிடம் சென்ற பூரணசந்திரன் அங்கு காளிகட்டத்தில் நிகழ்ந்ததென்னவென்று அறியும் ஆவலுடன் இருந்தனர்.

     ஆனால் மாஸ்கீயியிலிருந்து வந்த மன்னன் சீலபத்திரனின் படை வீரன் ஒருவன் கூறிய விவரம் இவர்களுடைய பொறுமையைச் சோதிக்கத் துவங்கி விட்டது!

     ராஜ்யபாலன் தன் நாட்டு மக்களாலேயே கொலையுண்ட நாள் முதல் அவனுடைய இளைய மகனான நியாயபாலன்* காணப்படவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் பரவியிருந்தது. இப்போது அவன் பூபாள நாட்டில் காணப்பட்டதாகவும், ராஜ்யபாலனால் தங்கள் மானம் பறிபோய் விட்டதாகக் கருதி அவனைப் பழி வாங்கிய கன்னோசி நாட்டு மக்கள் தலைவனான முன்னாள் சேனாபதி ஜெயந்திரன், பேருக்கு ராஜ்யபாலனின் மூத்த மகனை அரசனாக்கிவிட்டு இளையவனை நாலா திசைகளிலும் தேடுகிறான். பிடித்துவிட்டால் கொல்லப்படுவான் என்ற செய்தியுடன் அவனுக்கு அடைக்கலம் அளிக்கும் அரசர்கள் யாராயிருப்பினும் அவர்களும் பழிவாங்கப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறான். இதற்குக் காரணம் இருந்தது. நியாயபாலன் சுதந்திரமாக ஆளவிரும்பியவன். ஜெயந்திரனின் எடுபிடியாக நாடாள விரும்பவில்லை அவன்.

     * இந்த நியாயபாலனை, நயாபாலன் என்றும் நயிபாலன் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவனுடைய உண்மையான பெயர் நியாயபாலனே.

     எனவே கோவிந்த சந்திரன் ஜெயந்திரனின் வேட்டையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மற்றவர்களை விட அதிகமாக ஆடிப்போய் விட்டான். உத்தர வங்கத்தின் இந்த கோவிந்த சந்திரனின் மைத்துனன்தான் உத்தரலாடத்தின் அரசனான பூபாலன். இவனுடைய மருமகன், அதாவது மகளின் கணவன்தான் கன்னோசி ராஜ்யபாலன். அதாவது இவள் அவனுடைய இரண்டாவது மனைவி. எனவே அவன் நிச்சயமாக பாட்டன் வீட்டுக்கோ அல்லது தன்னிடமோ வந்துதான் ஆக வேண்டும். வராதே போ என்றால் விரட்டிவிடவும் முடியாது. ஆயினும் நாளது வரை அவன் இந்தப் பகுதிக்கே வந்ததில்லை.

     ஜெயந்திரன் எதிரியுடன் போராடிச் சாவோம் என்று யோசனை கூறிய போது ராஜ்யபாலன் அதை நிராகரித்து ஓடிவிட்டது கேவலமான செயல்தான். ஜெயந்திரனே கூட தனித்துக் கஜினியை எதிர்த்துப் போராடியிருப்பான். ஆனால் சேனையில் பலர் தம் உயிர் மீது கொண்ட ஆசை காரணமாக ராஜ்யபாலனும் ஓடிவிட்டான். எனவே தன் யோசனையை ஏற்காது நாட்டை எதிரியிடம் காட்டிக் கொடுத்துவிட்டு ஓடிய மன்னனை, அவனுடைய கூட்டாளிகளையெல்லாம் இன்று பழி வாங்குகிறான் ஜெயந்திரன். இவனுடைய கைப்பாவையாகச் செயல்பட்டதால் சனபாலன் பேருக்குத்தான் கன்னோசி மன்னன்!

     கஜினி முகமதை எதிர்க்கும் துணிவு பெற்றவன் ஒருவன் அதாவது ஜெயந்திரன் நம்மிடையே இருக்கிறான் என்று அறிந்ததும் மக்கள் அவனை வெகுவாக மதிக்கத் துவங்கினர். அவனுடைய தலைமையில் தன்மானத்தில் கருத்துள்ள வீரர்கள் பலர் சேர்ந்தனர். சில சிற்றரசர்கள் கூட அவனுடைய தலைமையை மதித்தனர். எனவே தன் இலட்சியத்தை வெறுப்பவர் யாராயிருந்தாலும் அவரை எதிர்ப்பது இவன் வேலையாகிவிட்டது. என்றாலும் ராஜ்யபாலன் இளையமகன் என்ன செய்துவிட்டான்! இன்னும் இருபதைத் தாண்டாதவன் என்றாலும் தந்தையைப் போல் உயிருக்கு அஞ்சி ஓடும் குணமுள்ளவனா அல்லவா என்று கூட அவனைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் தராமல் அவனையும் துரத்துகிறார்கள் என்றால்...

     கோவிந்த சந்திரன் இதனால் பெரிதும் கவலையுற்றான். நியாயபாலன் தன்னிடம் வந்திருக்கிறானா என்று ஆட்களை அனுப்புவான் ஜெயந்திரன். அல்லது தனது மைத்துனனிடம் நிச்சயமாகச் செல்வார்கள்! இது வரை நியாயபாலன் எங்கிருந்தான்? மாதங்கள் பல ஓடிவிட்ட பிறகும் அவன் எப்படி யார் கண்ணிலும் படாமல் இதுகாறும் இருக்க முடிந்தது! இது காறும் அவன் என்னதான் செய்து கொண்டிருந்தான்? எது எப்படியிருப்பினும் ஜெயந்திரன் சுத்த வீரன்தான். கஜினியை நேரிடையாக எதிர்ப்பது அவனுடைய இலட்சியம்தான். சந்தேகமில்லை. ஆனால் இவனும் ஏனைய இவனுடைய நண்பர்களும் அந்த கஜினியின் மாபெரும் படைகளின் எதிரே புயலில் பறக்கும் சருகுகள் போலச் சிதறி விடுவார்களே! இதை ஏன் ஜெயந்திரன் ஊகிக்கவில்லை. ராஜ்யபாலன்தான் போய்விட்டான். அவன் மூத்த மகன்தான் அரசனாகிவிட்டான். இளைய மகன் எங்காவது உயிருடன் வாழட்டுமே என்று ஒதுங்காமல் அவனைப் பழிவாங்கத் தேடுவதை விட்டால் என்ன?

     கோவிந்த சந்திரன் இம்மாதிரி பல கவலைச் சிந்தனைகளில்டையே எங்கே நியாயபாலன் தன்னிடம் வந்துவிடுவானோ என்ற கவலையையும், இன்னும் பூரணச்சந்திரன் திரும்பவில்லையே என்ற பரபரப்பையும் உண்டாக்கிக் கொண்டு காலத்தை ஓட்டினான். ரணசூரன் பாடு வேறொரு விதத்தில் ஆபத்தாகி விட்டது. தன்னுடைய தட்சிணலாடத்தின் வழியாகத்தான் நியாயபாலன் வருவான். தன் பாடும் பெரும் பாடுதான் என்று தவித்துப் போனான். தர்மபாலனுக்கு இந்தக் கவலையில்லை. ஆனால் பூரணசந்திரசேனர் மகிபாலனைப் போல சோழருடன் உறவு கொண்டுவிட்டால் நிச்சயம் வங்கத்தின் எந்தப் பகுதியிலும் தனக்கு இடமில்லை. தான் உண்டு, தற்போது சோழனின் அடைக்கலமாகக் கப்பம் கட்டி வாழும் நாடான தந்தபுக்தியுண்டு என்று இருக்க வேண்டியதுதான். இதற்குத்தானா தான் இவ்வளவு நாள் தோல்வியைத் தாங்கி வாழ்ந்தது! என்று குமுறினான்.

     எப்படியாயினும் பூரணசந்திரர் சோழர் உறவைப் பெற்றுவிடுவார். பிறகு சேனர்கள் கை ஓங்கிவிடுவதும் நிச்சயம்! ஆனால் ஒரு திருப்தி! தன்னைப் போல மகிபாலனும் எதுவும் கிடைக்கப் பெறாத ஏமாளியாகி விட நேரிடும்!

     இப்படி எண்ணிப் பிறர் நஷ்டத்தில் தன் மனதுக்கு திருப்தியூட்ட முயன்று கொண்டிருந்தான் கோவிந்த சந்திரன்.

     ஆயினும் மனதின் இன்னொரு மூலையில் ஒரு துளி சந்தேகமும் உண்டாகாமலில்லை. பூரணசந்திரசேனரிடம் அவன் மகள் காமினிதேவியை அந்தக் கன்னடத்தான் வஞ்சித்து விட்டான் என்று எண்ணும்படி நாம் போட்ட தூபம் சரியான வேலை செய்துவிட்டது. இதனால் அவ்வளவு கோபமாகக் சென்றிருக்கிறார் சோழரிடம். கடவுள் இந்தக் கோபதாபத்தை ஆதரிக்கச் செய்து ஒருவேளை அவர்களிடையே வன்மம் உண்டாக்கி விட்டிருந்தால் நாம் அதை இன்னும் பெரிதுபடுத்தி பூரணரைச் சோழனுடன் வன்மையாக முட்டச் செய்யலாம். செய்தால் இவர் வலு நசிந்து ஆட்டம் அடங்கிவிடும். பிறகு சேனர்களாவது மண்ணாவது. ஹரசேனர் வம்சம் காலி என்றால் மகிபாலன் எம்மாத்திரம்?

     சோழன் எத்தனை நாளைக்கு இருப்பான் வங்கத்தில். நாடு திரும்பாமல் முடியுமா! திரும்பட்டும், பிறகு நாம் ஒரு கை பார்க்கலாம்! நானும் ஒரு பங்காளிதானே! என்று பொருமிக் கொண்டிருந்தான். என்றாலும் நியாயபாலன் பங்காளி உறவில் தன்னிடம் வந்துவிடக் கூடாதே என்றும் பயந்தான். ஏனென்றால் இந்த தர்ம பாலன், மகிபாலன், காலஞ்சென்ற ராஜ்யபாலன் ஆகியவர்கள் உறவு முறையில் தாயாதிகள் தான்!

     என்றாலும் நியாயபாலன் இவர் எவரிடமும் செல்லவில்லை! அன்று மட்டுமில்லை, மறு நாளும் அதற்கு மறு நாளும். பிறகு பல நாட்களான பிறகும் கூட இந்தப் பயங்கொள்ளிகள் பக்கமே போகவில்லை அவன்!

     பூபாள நாட்டின் மன்னர் நாகபத்மன் நாளிதுவரை எந்த ஒரு தரப்பிலும் இணையவில்லை. காரணம் அவனுடைய நாட்டைத் தாக்கும் எண்ணம் கொண்ட எதிரிகள் நாளது வரை முளைக்கவில்லை. அப்படி முளைத்தால்... ஆம்! அவன் இத்தகைய சந்தேகங் கொண்டது மாஸ்கி, சோழர்களால் வெல்லப்பட்ட போது! ஆனால் மாஸ்கியின் மன்னன் வலியப் போய் சோழரை சண்டைக்கு இழுத்தவன்தானே! அதனால் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது அந்நாடு! எனவே பூபாளத்தான் வெகுவாக நிதானித்தான்!

     “அமராவதியில் போய் ஆபத்தை தேடிக் கொணர்ந்தவன்” என்றுதான் மாஸ்கியின் மக்கள் கூறி நொந்துக் கொண்டனர். பூபாளம். பூர்ணபுரம், சக்கரதாரம், சர்வச் வரம் ஆகிய நாட்டின் அரசர்கள் இல்லையா? சோழனை அவர்கள் யுத்த முனையில் அல்லாது நட்புமுனையில் சந்திப்பது என்று முடிவு செய்த போது அவன் இவர்களை அமராவதிக்கு அழைத்தான். எல்லோரும் சென்றார்கள் இருவரைத் தவிர. ஒருவன் மாஸ்கியின் மன்னன் மகேச சந்திரன். மற்றொருவன் இஸ்லாத்தை தழுவி மதம் மாறிய இந்து மன்னன்!

     மாஸ்கியைப் பற்றி சோழன் வெகுவாகக் கேள்விப்பட்டிருந்தான். ஏனையவர்களைக் காட்டிலும், இந்தப் பகுதியில் மாஸ்கி மன்னனைத் தான் நண்பனாகப் பெற்றிருந்தால் மிகவும் ஆதரவாயிருக்கும் என்று சர்வோத்தமன் என்னும் ஒரு மகான் கூறியிருந்தார், காரணம். மாஸ்கி கேந்திரமான இடத்தில் அமைந்திருந்தது. இந்த மன்னனின் முன்னோர்கள் மாபெரும் ராஜ்யம் ஒன்றை ஆண்ட பரம்பரையில் வந்த பழம் பெருமை பெற்றவர்கள்.

     மகான் ஹரிசர்வோத்தமர் அன்றைய வடநாட்டுப் பெரியார்களுள் சமயப் பேரறிஞர். வடமொழியிலும் பிராக்ருதத்திலும் பேரறிவு பெற்ற சமய சீலர். சைவத்தின் முக்கியமான சாக்தம் என்ற வழிபாட்டு முறையை போதித்த புனிதர். காகதீயர்கள், சந்தேலர்கள், வாகாடர்கள் ஆகியோர் இந்த சாக்த சமயத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமின்றி சர்வோத்தமரைத் தமது பிரதம குருவாகவும் ஏற்றிருந்தனர். இவர் வாக்குக்கு எதிர்வாக்கில்லை. ராஷ்டிரகூடர்களில் ஒரு பகுதியினர் கூட இவர் சீடர்கள்தான் என்றாலும் இவரால் மாஸ்கி மன்னனையும் கன்னோசி நாட்டு ராஜ்யபாலனையும் தம் பக்கம் திருப்ப இயலவில்லை. காரணம் அவர்களைச் சுற்றியிருந்த சுயநலவாதிகள் செய்த துராலோசனைதான். இந்தத் துர்ப்புத்திக்காரர்களின் பேச்சைக் கேட்ட துர்ப்பாக்கியவானான மாஸ்கி மன்னர் சமாதானமாக நட்புக்கரம் நீட்டத் தனியாக தூது வந்த சோழ சேனாதிபதியைக் கைது செய்துவிட்டான்.

     அதுமட்டுமல்ல, தானே நேரில் சென்றான் அமராவதிக்கு. அங்கு கூடியிருந்த மன்னர்களை அதாவது சோழனுடன் பொருந்தாமல் சமாதானமாகப் போவதில் ஆர்வம் காட்டிய அரசர்களைத் திட்டித் தீர்த்தான். குரு சர்வோத்தமரைக் கூட ஏசினான். பிறகு தன்னிடம் சோழ சேனாதிபதி கைதாகியிருக்கிறான். தீரமிருந்தால் வந்து மீட்டுச் செல் என்று சோழனிடமே துச்சமாகப் பேசினான். இதற்குப் பிறகும் கூட சோழன் பொறுப்பானா?

     மாஸ்கியை மிக்க ஆத்திரத்துடன் தாக்கினான். பத்தே நாழிகைக்குள் மாஸ்கி மன்னன் வீழ்ந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெருமை வாய்ந்த அரசகுடும்பத்தினான வீரபத்திரன் ஒரே நாளில் சோழனிடம் நசுக்குண்டது கண்டு அவனுடைய நண்பர்கள், உறவினர்கள், ஏன் குரு சர்வோத்தமர்கூடப் பெரிதாகக் கலங்கி விடவில்லை. மாறாக சோழனின் படைகள் இங்கே தங்கினால் கஜினி முகமதின் புயலைப் போன்ற படைகளின் வேகத்தை அணைபோட்டுத் தடுக்கக் கூடிய சக்தியாக விளங்கக்கூடும் என்று நம்பினர். சர்வோத்தமருக்கு இதனால் ஓரளவு நிம்மதியுங்கூட!

     ஆனால் சர்வோத்தமரின் இலட்சியம் இத்துடன் நின்றுவிடவில்லை. வடநாட்டு மன்னர்கள் பலரும் தங்கள் சொந்தப் பெருமை ஒன்றையே பெரிதாகக் கருதுகின்றனர். தேசம் பற்றிய கவலை அவர்களில் பெரும்பாலோரிடம் இல்லை. எனவே தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகின்றனர். அல்லது எதிரிகளுக்கு விட்டுக் கொடுத்து நாட்டை நாசமாக்கி விடும்படி இடமளித்து விடுகின்றனர். எனவே பலமான மனோதிடமும் எதிரிகளைக் கண்டு அஞ்சாது, எதிர்த்து நின்று வெல்லக்கூடிய மகத்தான சக்தியுள்ள ஒரு மாமன்னன் தேவை. எப்பொழுது பல சிறு மன்னர்கள் ஒன்று கூட முடியவில்லையோ, தங்களுக்குள்ளேயே பகைத்துச் சிதறிக் கிடக்கிறார்களோ, அப்பொழுது இவர்களை இணைத்திடக் கூடிய சக்தியாக ஒரு வலிமை வாய்ந்த பேரரசன் தேவைதானே! இத்தருணம் இத்தகையவனாக இருக்க இந்தச் சோழனைத் தவிர இப்போது வேறு யார் உள்ளனர்? எனவே அவனை நாடி உதவி வேண்டுவது, மற்றும் ஆதரித்து நிற்பது முதற்கடமை என்றே நினைத்தார் சர்வோத்தமர்.

     சோழனும் அவர் தம் பிரதான படைத்தலைவர்களான அரைய பூபதியும், வல்லபதேவரும் குருநாதரின் இந்த நோக்கத்தை எதிர்க்கவில்லை.

     ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நம் படைகள் இப்பகுதியில் இருக்க முடியும். அதற்குள் இப்பகுதி வாழ் மன்னர்கள் தங்களுடைய உட்பூசல்களை மறந்து ஒன்றுபட்டு ஒரு உறுதியான கூட்டமைப்பை உருவாக்கட்டும் என்றே நினைத்தான் சோழன்.

     இராஜேந்திரன் இப்படி நினைத்ததற்கு ஒரு முக்கியமான காரணமிருந்தது. மாஸ்கியில் சோழர் படைகளை நிலைக்க விட்டால் ஏனைய அரசர்கள் நம்முடன் சமரசமாகப் போவது நமக்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையளிப்பது என்று சோழர் கூறுவதெல்லாம் பொய். இம்மாதிரி படைகளை அனுப்பி ஆக்கிரமிப்புச் செய்துவிடுவதுதான் அவர் நோக்கம் என்று முடிவு செய்து நமக்கு விரோதமாகச் செயல்படுவர். எனவே இத்தகைய கருத்து அவர்களிடையே உருவாக்கும்படி செய்துவிடக் கூடாது. அப்படி உண்டானால் கைபர் கணவாய் வழியாக வரும் எதிரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேற்றுமை என்ற பிரசாரம் பலமாகிவிடுமல்லவா!

     ராஜவித்யாதரனிடமிருந்து தூதுவர்கள் வந்த உடனேயே இராஜேந்திரன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். வடபுலத்து மன்னர்கள் ஐந்தாறு பேர்கள் ஒருவர் மாறி ஒருவர் அழைக்ததுமே அங்குள்ள நெருக்கடியைப் புரிந்து கொண்டதால் தனது மகா சேனாதிபதிகளுடன் கலந்து பேசத் தாமதிக்கவில்லை. எனினும் ராஜவித்யாதரனின் கடிதம் ஒரு அற்புதமான கவிதைப் பின்னணியைக் கொண்டிருந்தது. சோழன் மனதை வெகுவாக ஈர்த்துவிட்டது.

     ‘வடபாரதம் முழுமையுமே ஒரு ஆப்கானிய நாசகாலனால் இன்று எரிமலையாகி விட்டது. இமயம் முதல் விந்தியம் வரை பகைக்கனல் மிகப் பயங்கரமாகப் பரவிவிட்டது. பண்டை தொட்டுப் பாரதத்துக்குப் பெருமைதரும், புனிதமான பனிமலைப் பாவை இவ்வனலிடைப்பட்டு இன்று உருகி வேகுகிறாள். அவள் நாச வெப்பத்தால் உருகித் தவிப்பது காண எங்களுக்குத் தாங்கவில்லை. எனினும் எங்களுக்குள்ளே இணக்கமில்லையே! கஜினி என்னும் கொடிய தீ ஆப்கன் நாட்டிலிருந்து கனவேகமாகப் பரவி எங்கள் நாடு, ஊர், மக்கள், சொத்து, சுதந்திரம், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், பொருள்கள் யாவையும் அழித்து வரும் கொடுமைக்கு அளவில்லை.

     ‘புராண காலத்து இமவான் முன்பு ஒரு மாபெரும் தவறு செய்தான். அதன் பலனை அனுபவித்தான். நெற்றிக்கண் படைத்த எம்பிரானை அவமதித்த பலனை அனுபவித்தான் அவன் என்பது அக்கதையின் கரு. நாங்களும் தவறு செய்தோம், இல்லையென்று பசப்பவில்லை. எங்களிடையே இணக்கமில்லை என்ற உண்மையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இன்று நிலை மிஞ்சிவிட்டது. நாங்கள் வேறு வழி இல்லாது இப்போது ஒன்று சேர்ந்திடினும் பொங்கிவரும் எரிமலையின் கொடுமையைச் சமாளிப்பதற்கில்லை. மதுரா, சோமநாதபுரம் எல்லாமே அழிந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ எழில் நகரங்கள், ஆலயங்கள் அத்தனையும் நாசத்துக்கு இலக்காகிவிட்டன. வருமுன் காக்க மறந்துவிட்ட நாங்கள் வந்த பின்னர் உங்களிடம் இன்று எங்கள் அவல நிலையைக் கூறுகிறோம். உங்கள் முன்னோர் இமயம் வென்ற இணையற்ற பெருமை கண்டவர்கள். அவர் வழி வந்த நீங்கள் இன்று கிழக்குப் பாரதத்தையெல்லாம், பகையற்ற பயமற்ற, புனித பூமியாக மாற்றிவிட்டீர்கள். எங்கள் பனிமலைப்பாவை இனியும் நாசத்தின் வேதனையால் மேலும் உருகித் தவிப்பதை எங்களால் இனியும் தாங்க வியலாது.

     கஜினி முகமது முன்னேயும் பலமுறை வந்தான். மீண்டும் வருகிறான் என்றால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவனைத் தடுத்து விரட்ட முயன்றேன். சிலர் துணைவரவும் தவறவில்லை. ஆனால் அவன் புயலாகப் பாய்ந்து வருகிறான். இந்த நாட்டில் ஏராளமான செல்வம் பல்வேறு உருவில் எங்கெங்கோ குவிந்து கிடக்கிறது என்பதை அவன், அவனுடைய வீரர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டனர். ஒருமுறையல்ல, பத்துமுறை, பதினைந்து முறை என்று இன்று இங்கு பயங்கரப் படைகளுடன் வருகிறான். அவன் கால்பட்ட இடமெல்லாம், நாசம் நாசம்... நாசத்தை தவிர வேறு எதுவுமே இல்லை. இது முடிந்ததும் கொள்ளை.. கோயில், குளம், புனிதம், புண்யம் என்று எதுவுமே அவன் அகராதியில் இல்லை.

     எனவே நான் வேண்டுவதெல்லாம் இதுதான். காஜனி முகமதின் படையெடுப்பினை எதிர்த்து நீங்கள் எங்கள் சார்பில் போராட வேண்டும் என்பதில்லை. ராஜகுலத்தினராகிய நாம் நமது போர்களை நாமாக நடத்துதலே நியாயம், முறை, சிறப்புமாகும். ஆனால் அழிவு வேலேயை தன்னதாகக் கொண்ட கஜினி எங்களுடைய பலஹீனத்தைப் புரிந்து கொண்டு விட்டான். எங்களுடைய இணக்கமின்மையே அவனுக்குப் பெரிய சாதகமாயிருக்கிறது. எனவே இதைப் பயன்படுத்தியே அவன் நாசகாலனாக இந்நாட்டுக்குள் அடிக்கடி வருகிறான். அழிக்கிறான், கிடைப்பதை அள்ளிக் கொண்டு போகிறான். கொள்ளையடிக்க இயலாத்தை அழித்து ஒழிக்கிறான். இமயத்தாய் எங்களை ரட்சிக்கக் கூடியவள்தான். ஆனால் நாங்கள் எங்கள் ஒற்றுமையின்மையால் இந்த நாட்டெல்லையாக இருந்து காத்திடும் அவளுக்குத் துரோகம் செய்து விட்டோம் என்று கூடச் சொல்லலாம். அப்படிச் செய்ததனால் தானோ என்னவோ கஜினி என்னும் நாசசக்தி எங்களை நாசம் செய்யவே அடிக்கடி வருகிறது போலும்.

     எனவே உங்களை நான் வேண்டுவதெல்லாம் இதுதான். இன்று அவன் மீண்டும் வந்துவிட்டான். ஒன்றன்பின் ஒன்றாக அவன் ஆலயங்களை அழிக்கிறான். நகரங்களை நாசம் செய்து கொண்டே வருகிறான். இன்றைய பாரதத்தின் இணையற்ற தமிழ் மன்னன் என்று கீழைநாடுகள் உங்களை துதிப்பாடுகின்றன. கஜினியும் இறுமாப்பால் தன்னை மாபெரும் மன்னனாக நினைத்து அந்தத் திமிருடன் தாக்கி வருகிறான்.

     நீங்கள் இந்த இறுமாப்பு பிடித்தவனை போர் முகத்தில் இன்றி நேர் முகத்தில் சந்திக்கும் தகுதியும் சிறப்பும் உரிமையும் உள்ள மாபெரும் தென்னக மாமன்னன் என்பது எங்கள் கருத்து. நீங்கள் இந்நாட்டில் வசித்திடும் நிலை என்னவென்பதை அவன் அறிவான். தங்கள் நாட்டுக்கு வந்து பலகாலமிருந்து இரு பெரும் அறிஞர்கள் இன்று அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்கள் மூலம் உங்கள் பெருமையை அவன் அறிந்திருக்க முடியும். இன்று அவனுடைய முக்கிய நண்பர்களுள் அறிஞர் ஆல்பரூனியும் ஒருவர். நம் புனித பாரதத்தின் தத்துவங்களை நீண்ட காலமாக ஆராய்ந்து அறிந்து நம் புராதனச் சிறப்பினையும் வேத சாஸ்திரப் பெருமையினையும் உணர்ந்த அவர் அவனுடைய மதியாலோசகராக இருப்பது அவன் பெற்றுள்ள பெரும் பேறு. எனவே தாங்கள் அவனைச் சந்திப்பதனால், தாங்கள் நியாயத்தை, நம்முடைய நீண்ட கால பாரம்பரிய சீர்நிலையை எடுத்துக் கூறி இனியும் நாசம் வேண்டாம் என்று போதித்தால் பயனுண்டு என்று கருதுகிறேன். கீழைநாடுகளில் குறிப்பாகக் கடல் கடந்த பல நாடுகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய வீர வேந்தர் நீங்கள். கன்யாகுமரி, காளிகட்டம் வரையுள்ள அத்தனை நாடுகளையும் இணைத்துவிட்ட இணையற்றப் பேரரசர் என்பதை அறிஞர் ஆல்பரூனி அறிவார். ஆகவே கஜினியும் இவ்வுண்மைகளை இது நாள் வரை அறியாதிருக்க முடியாது. எனவே தயவு செய்து எங்கள் சார்பில் இந்த அரிய பணியை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். நான் மட்டுமில்லை, என்னுடன் இந்தப் பகுதியின் இருபத்தியொரு மன்னர்களும் வேண்டுகின்றனர்...’

     சோழ மன்னர் இராஜேந்திரன் அடுத்து முழங்கியது இதுதான்!

     “வல்லபரே, நாம் உடனடியாக மேற்கொள்ளக் கூடிய பணி அவனுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுவதுதான். பாரதக் கிருஷ்ணன் தூது போன மாதிரி நீங்களே என்னுடைய தூதுவனாகச் செல்வதுதான் பொருத்தம். தங்கள் மகன் ஏற்கனவே பனிமலைப்பாவை ஒருத்தியை மணந்து கொண்டு விட்டவன். இன்னொருத்தன் இதோ நானும் தயார் என்று உறுதி செய்துவிட்ட பிறகு நீங்கள் இப்பகுதி மன்னர்களுக்கு உறவுமுறை கொள்ளுவதற்குக் கூட உரிமை பெற்று விட்டவர்” என்று மறுநாள் வல்லபரிடம் விளக்கியதும், “இனியும் விளக்கம் எதுவும் தேவையில்லை சக்கரவர்த்திகளே. தாங்கள் ஆக்ஞை எதுவானாலும் தடையில்லாமல் நிறைவேற்றக் கடமைப்பட்ட எனக்கு இன்று ஒரு புதிய முறைப்பணியை... நல்லது சோழரே... நான் அந்தக் கஜினி முகமதிடம் செல்லுகிறேன். தங்களை அவன் வித்யாதரன் நாட்டிலேயே சந்திக்கும்படியான ஏற்பாட்டையும் செய்து விடுகிறேன். இந்தப் புதிய பணியில் நான் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவன் துணை செய்யும்படி நீங்கள் வேண்டுங்கள்.”

     “நல்லது வல்லபேந்திரரே, விரைவாகச் சென்று வெற்றியுடன் திரும்புங்கள். நாம் பெறும் வெற்றி நமக்கு மட்டுமல்ல, இந்த மாபெரும் நாட்டுக்கே நலமளிக்கும்” என்றான் சோழன்.

     அடுத்த நொடியே கிளம்பிவிட்டார் வல்லபேந்திரர்.

     இங்கத்திய நிலை இவ்வாறு ஒரு புதிய மாற்றங் கண்ட நேரத்தில் நிரந்தரமாக இல்லை என்றாலும் தற்காலிகமாக வேனும் தனது படைகளை வடபுலத்தில் நிறுத்தி வைக்கப் சோழ தேவர் இணங்கிபது பற்றி சர்வோத்தமர் வெகுவாக மகிழ்ச்சி அடைந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு ஒரு சாதகமாக ஏற்றுக் கொண்டு சற்றே ஆழ்ந்து சிந்திக்கலாமே இந்த சிதறி கிடக்கும் மன்னர்கள் யாவரும் ஒன்றுகூடி என்பது அவரது நினைப்பு.

     குரு சர்வோத்தமர் இவ்வாறெல்லாம் நினைத்த வண்ணம் தமது சக்திபீட ஸ்தலத்தில் இருந்த போது அவர் எதிரே வந்து நின்றான் ஒரு குறுந்தாடி இளைஞன். குதிரையிலிருந்து அதிவேகமாக இறங்கி அவரை வணங்கிய இளைஞன் தோற்றம், கம்பீரமாகத்தான் இருந்தது. நடை, நொடி, பாவனையெல்லாம் ஒரு அரசகுமாரனுக்கே உரியதாகத்தான் இருந்தது. எனினும் இந்த இளம் வயதிலேயே அவன் முகம் கவலைக் களையைக் கொண்டிருந்ததை அந்தக் குறுந்தாடி கூட மறைக்க முடியவில்லை.

     குதிரையை அருகே இருந்த ஒரு மரக்கட்டையில் கட்டிவிட்டுத் தன்னை நோக்கி நிதானமாகவே வரும் அவனை சிந்தனையுடன் நோக்கினார் சர்வோத்தமர். அவர் மனம் ஒருபுறம் அவனுக்காக இரங்கியது. இன்னொரு புறம் இவனால் இப்பகுதி மக்களுக்கு விமோசனம் உண்டாகுமா? என்றும் ஆராய்ந்தது.

     ஆனால் அவன் அருகே வந்து வினயமுடன் வணங்கிவிட்டு “சர்வசக்தி பீடாதிபதியே! நான் இன்று அறிந்து வந்துள்ள செய்தியால் நீங்கள் பெருமகிழ்ச்சியடைலாம். ஆனால் என் மனோநிலை எத்தகையது என்று கூறுவதற்கில்லை. தென் நாட்டிலிருந்து வந்துள்ள சோழ சாம்ராஜ்யாதிபதியின் தூதர் ஒருவர் நம் தாய் நாட்டை நாசமாக்கிட புயலெனப் பாய்ந்து வரும் கஜினி முகமதை சந்திக்கப் புறப்பட்டிருக்கிறார்...” என்று அவன் கூறி முடிப்பதற்குள், “என்ன? கஜினியிடம் சோழர் தூதுவனா? உண்மையாக வா?” என்று பதறிப்போய்க் கேட்டவர் “ஆம். அனேகமாக அந்தத் தூதுவர் இந்நேரம் மதுராவுக்குச் சென்றிருக்கலாம்” என்று மீண்டும் அவன் கூறியதும் சர்வோத்தமர் தனது பரபரப்பையடக்காமல்,

     “நீ நிச்சயமாக அறிவாயா?” என்று வேகமாகக் கேட்டார்.

     “ஆம், அவர் மாஸ்கி சென்றுவிட்டு நேற்று கன்னோசியிலும் நுழைந்து, தங்கி, இன்று காலை மதுராவுக்குப் புறப்பட்டுள்ளார்.”

     “மிகவும் வியப்புக்குரிய செய்தி. என்றாலும் மிகவும் உற்சாகமூட்டும் செய்தியும் கூட! இது உண்மைதான் என்பதை நீ உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டாய் அல்லவா?”

     “உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டேன். நாடெங்கும் இதே பேச்சாக இருக்கிறது!”

     “அப்படியா? இது நிச்சயமானால் உன்னையும் நான் ஒரு முக்கியமான இடத்துக்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்னர் அங்குப் போகக் கூடிய தைரியமும் துணிச்சலும் உனக்கு இருக்கிறதா என்பதையும் நான் முன்னதாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

     “சுவாமி! இதுவரை நீங்கள் என்னைப் பற்றி தேவையான அளவுக்கு உறுதி கொள்ள முடியவில்லையா?”

     “போதாது! நான் உன்னை அனுப்பப்போகும் இடம் அந்த இடத்திலுள்ள மனிதர், அனுப்பிடும் நோக்கம் மூன்றும் உன்னுடைய இந்த இளம் வயது தாங்குமா? திரிலோசனபாலனை நாடாளச் செய்தவர்கள் உன்னை விரும்பாததேன்? பார்க்கப் போனால் தான் ராஜ்யபாலனின் அன்புக்கு உகந்தவனாக வளர்ந்தாய். ஆனால் உன் தாய் வங்கத்தைச் சேர்ந்தவள். இது ஒரு காரணம். சண்டேலியரைச் சேர்ந்தவள் உன் மூத்த அன்னை. அதாவது திரிலோசனின் தாய். அவள் பட்டமகிஷி என்ற உரிமை பெற்றவள். ஜெயந்திரன் வங்கத்தினரை அடியோடு எதிர்ப்பவன். உன்னுடைய தாயை இரண்டாந்தாரமாக ராஜ்யபாலன் ஏற்றதைச் சிறிதும் விரும்பவில்லை ஜெயந்திரன். எனவே அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகி இறந்ததும் நீயும் இறந்திடாமல் இருக்கிறாயே என்றுதான் பலர் நினைக்கின்றனர். உன் அண்ணன் கூடத்தான் உன்னை வெறுக்கிறான். எனினும் உன்னுடைய மூத்த அன்னை இதுவரை உயிருடன் இருந்ததால், தன் மகனான திரிலோசனனைக் காட்டிலும் உன்னை அதிகம் நேசித்ததால், அவள் உன்னை உயிரைப் போல் பாதுகாத்து வளர்த்ததால் எந்த ஒரு கொடுமையையும் உனக்கு இவர்களால் இழைக்க முடியவில்லை. ஆனால் இன்று அவள் உயிருடன் இல்லை. ஆகையினால்தான் நான் உன்னை இங்கு கொண்டு வந்தேன். அரசியல் ரீதியாக உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஜெயந்திரன் என்னைப் பகைத்துக் கொண்டு ஒரு நாள் கூட இந்தப் பகுதியில் வாழ முடியாது. ஆனால் உன்னை எதிரியின் கையாள் என்று உன் அண்ணனான திரிலோசனனே பகிரங்கமாக அறிவித்து உன்னை உயிருடன் கொணர்ந்து ஒப்படைத்தால் பரிசுண்டு என்றும், ஒளித்து வைத்தால் அல்லது மறைந்திருக்க உதவி புரிந்தால் மரணதண்டனை என்றும் அறிவித்துள்ளான். இதை அவன் ஜெயந்திரன் தூண்டுதலால் செய்திருந்தாலும் அந்த சுயநலக்காரனும் உள்ளூர நீ உயிருடன் இருப்பதை விரும்பவில்லை.”

     “நான் கன்னோசியின் மன்னனாவதற்குச் சிறிதளவும் விரும்பவில்லையே!”

     “நீ விரும்பாமலிருக்கலாம். ஆனால் நீயும் ஒரு ஹரதத்தன்* என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது போதாதா?”

     * ஹரதத்தன் என்பவன் பாரண் நாட்டின் அரசன். இவன் தன்னுடைய பத்தாயிரம் வீரர்களுடன் கஜினி முகமதுவுக்குப் பயந்து சரண் அடைந்து இஸ்லாமியனாகி விட்டான் என்று கூறியுள்ளார் வின்ஸன்ட் ஸ்மித்.

     “நான் ஒரு ஹரதத்தனாவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

     “நிச்சயமாக ஆகமாட்டாய். உன் உடலிலும் வங்கத்தின் வீரரத்தம் ஓடுகிறது. நீ குடித்த தாய்ப்பால் வீர வங்க அன்னையின் பால். எனவே அம்மாதிரி எண்ணம் உன் மனதில் கடுகளவு கூட தோன்றாது. அதுமட்டுமில்லை, ஒருவேளை உன்னுடைய அந்த அண்ணன் மாறினாலும் மாறுவானே அன்றி நீ மாறவே மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். நன்றாகத் தெரியும்?”

     “என் அண்ணன் அப்படி மாறும்படி ஜெயந்திரன் விடுவான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?”

     “ஜெயந்திரன் விடமாட்டான். ஆனால் ராஜ்யபாலனின் மகன் அவன். எதிரி வந்துவிட்டான் என்று கேள்வியுற்ற மாத்திரத்திலேயே நாட்டைவிட்டு ஓடியவன். அவனுடன் உன்னுடைய பெரிய அன்னை அப்படி ஓட மறுத்தாள். மகனையும் அப்பனுடன் விடமறுத்தாள். நீயோ சிறுவன். எனவே உன்னைத் தன் கண்காணிப்பில் அவள் வைத்துக் கொண்டாள். பூபாளத்திலும், பூர்ணாவிலும் போய்த் தங்கி உங்கள் இருவரையும் பாதுகாத்தாள். ஆனால் திரிலோசனனைத் தான் மன்னனாக்குகிறேன் என்று அவளிடம் ஜெயந்திரன் வந்து கேட்ட போது நீ முறுக்கான வாலிபனாகி விட்டாய். நீ ஒருவனை மன்னனாக்குவது என்றால் உன் கைப்பாவையாக ஆட வேண்டு மென்பதுதானே பொருள் என்று கேட்டாய். அதைக் கேட்டதும் அளவில்லாத கோபம் கொண்டு விட்டான் ஜெயந்திரன். அன்று முதல் அவன் உன்னை வஞ்சந்தீர்த்துக் கொள்ள முயலுகிறான். உன் பெரிய அன்னை இறந்ததும் அவனுடைய வேட்டை வெறி தீவிரமாகி விட்டது. தவிர தன் தாய் இறந்ததும், ஜெயந்திரன் வார்த்தைக்கு எதிர் வார்த்தை போடுவதில்லை என்ற முடிவும் திரிலோசனனை உனக்கு விரோதியாகவே மாற்றிவிட்டது. ஆயினும் இன்னமும் கூட சிலர் திரிலோசனன் ஒரு ராஜ்யபாலனாக மாறி நாட்டைவிட்டு ஓடாவிட்டாலும் ஒரு கண்டதேவ சாந்தலன்* போல மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம் என்றே கேட்கிறார்கள்.”

     “ஜெயந்திரனை மீறியல்லவா அவன் இப்படிச் செய்ய வேண்டும்!”

     “வீரனை நம்பலாம். ஆனால் கோழையை நம்புவதற்கில்லை” என்றார் குரு சர்வோத்தமர்.

     நியாயபாலன் நெடுநேரம் பேசவில்லை. பிறகு கேட்டான்: “என்னை நீங்கள் எங்கோ அனுப்பவிருப்பதாக கூறினீர்களே! அதற்கான தகுதியும் உறுதியும் எனக்கு இருக்கிறதா என்றும் யோசித்தீர்களே! சற்று விளக்கிக் கூற இயலுமா?” என்று கேட்டான்.

     “காளிகட்டத்தில் இருக்கும் சோழ மாமன்னன் இராஜேந்திர சோழனிடம்தான் நீ செல்ல வேண்டும். அவனுடன் போராடித் தோற்று விட்டாலும் இன்று அவனுடன் சமநிலையில் நண்பனாக இருக்கும் மன்னன் மகிபாலனிடம் அதாவது இருவரும் இணைந்திருக்கும் அந்தக் காளிகட்டத்துக்கு... தவிர அங்கே எமது நண்பர் திரிலோசன சிவாசாரியாரும் வந்திருக்கிறார்!”

     “அவர் ஒரு சாக்தரா?”

     * கண்டதேவ் சந்தேல மன்னர்களில் ஒருவனான இவன் கஜினி முகமதை எதிர்க்காதது மட்டுமல்ல; தன் நாட்டு வழியே பிற நாட்டில் படையெடுக்க ஒருமுறைக்கு இருமுறையாக வணங்கி வழிவிட்டுக் கொடுத்திருக்கிறான்.

     “இல்லை! சைவர். ஆனால் மகா மேதை. உத்தமர். சத்தியமான சைவாசாரியார்! அவர் மூலம்தான் நீ சோழனைச் சந்திக்கப் போகிறாய். அவருக்கு ஒரு கடிதம் தருகிறேன். அதை நீ எடுத்துச் சென்று அந்த சிவாசாரியாரியிடம் கொடுத்தால் பிறகு மன்னர்களிடம் உனக்கு நல்ல வரவேற்பிருக்கும்!” என்றார்.

     நியாயபாலன் மீண்டும் கேள்வி போடாமல் நீண்ட நேரம் மவுனமாகவே இருந்தான், பிறகு சொன்னான்:

     “மஹாஸ்வாமி, எது எப்படியாயினும் நாட்டைவிட்டு ஓடிப்போன மன்னன் மகன் நான். எனவே என்னை ஒரு பொருட்டாக எண்ணி முகதரிசனம் கூட அளிக்க மாட்டார் அந்த சாம்ராஜ்யாதிபதி. ஒருவேளை வேண்டுமானால்... பாலர் மட்டும் வேறு வழியில்லாமல் பார்க்க ஒப்பலாம். எனவே அங்கு போய் நான் அவர்களிடம் அவமானப்பட விரும்பவில்லை. உத்தரவங்கம் போனால் ஜெயந்திரன் வேட்டை தொடரும். பஸ்சிமவங்கத்திலும் அப்படியே. ஆனால் மையவங்கத்திலும் சரி, விஹாரிலும் சரி, ஜெயந்திரன் கரம் நீள முடியாது என்பது உண்மை. ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு நான் அங்கு போய் அவமானப்படுவதைவிட எதிரியின் கோட்டைக்குள் போய் சாவதையே விரும்புகிறேன்” என்றான் ஆத்திரத்துடன்.

     சர்வோத்தமர் அவன் பேசி முடியும்வரை காத்திருந்துவிட்டு “நியாயபாலா! நான் உன்னை இன்றளவும் சிறிதளவும் மாறாத நம்பிக்கையுடன் ஆதரித்து வரும் காரணம் உன்னுடைய இந்த மனோநிலைக்காகத்தான். ஆனால் உன்னைப் பற்றி என் மனதில் எத்தனை எத்தனையோ திட்டங்கள் உண்டு. அவற்றில் ஒன்று நீ வங்கத்துக்கு அதாவது மகிபாலனிடம் போவது. இப்போது நம்முடைய நல்லதிர்ஷ்டம், சோழ தேவரும் இருக்கிறார் அங்கே. எனவே நீ அவசியம் போகத்தான் வேண்டும்!” என்றார் அழுத்தமாக.

     நியாயபாலன் அவர் தன்னிடம் சொல்ல வேண்டியதனைத்தையும் கூறவில்லை, எதையோ மறைக்கிறார். அது எதுவாயிருக்கும் என்று வற்புறுத்திக் கேட்பது மரியாதையில்லை. எனவே மாறாக ஒரு கேள்வி போட்டான்!

     “உங்கள் விருப்பப்படி நான் அங்கு சென்றால் என்னை அவர்கள் உதாசீனம் செய்து உதறி விரட்டினால்?”

     “மாட்டார்கள். நீ சிவாசாரியாரிடம்தான் முதலில் போகிறாய். பிறகு அவர் மூலம் அவர்களைச் சந்திக்கிறாய்! எனவே அவர் வாக்குக்கு எதிர்வாக்கில்லை!”

     “சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் நான் போவதால் என்ன பயனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்!”

     “அது போகப் போகத் தெரியும். இப்பொழுது வற்புறுத்தாதே!”

     “அப்படியானால் சரி, நான் எப்பொழுது புறப்பட வேண்டும்?”

     “இன்றிரவே புறப்படுவதுதான் நல்லது. நாளை உதயத்தில் விதேகத்தில் இருப்பாய். மதியத்தில் மிதிலையில், மாலையில் வங்கத்தில் நுழைவாய்.”

     “நல்லது குருசுவாமி! அப்படியானால் நான் புறப்படத் தயாராகிறேன்!” என்று எழுந்தான் அவன்.

     “நீ தயாராகி வருவதற்குள் நான் கடிதம் எழுதி முடிக்கிறேன்” என்றார் அவரும் பரபரப்புடன்!

     கடந்த ஆறு மாதங்களாக அவன் இந்த சர்வோத்தமர் இருக்கும் சக்திபீட ஸ்தலத்தில், அதாவது வனத்தில் உள்ள அவரது சாக்த பீடத்தில் காலமோட்டி விட்டான். சுற்றிலும் மலைகள், அருவிகள், மரங்கள். ஏன், மிருகங்களும் கூட இருந்தன. இயற்கை அழகும் தெய்வீகச் சூழ்நிலையும் நிலவிய அந்த இடத்தில் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஜெயந்திரன் மட்டும் இல்லை, வேறு எவருமே அவருடைய அழைப்பு இன்றி அந்தப் பிரதேசத்துக்கு வரமாட்டார்கள். சர்வோத்தமரின் ஸ்தலம் அவர் பூசைகளுக்காகவும், இதர பல்வேறு கிரியைகளுக்காகவும், அமைதியும் இதரர் தலையீடு இல்லாமலும் இருக்க வேண்டுமாதலால் எவரும் அவ்வமைதியைக் கெடுக்க முயலுவதில்லை. தேவையானால் சர்வோத்தமர்தான் அங்கிருந்து நகரம் செல்வார். அவருடைய நகரப்பிரவேசம் மக்களிடையே பயபக்தியுடன் புனிதத்துடன் மதிக்கப்படும். அரசன் முதல் ஆண்டி வரை அவர் பாததூளியைத் தொட்டுக் கும்பிட்டு ஆசிபெறுவர்.

     ஆக அந்தப் பகுதியில் சர்வோத்தமரின் சக்தி பீடத்திற்கு எல்லையில்லாத மதிப்பு. அவராக அழைத்தால் அன்றி அங்கு யாருமே வரக்கூடாது. அவர் வாழ்ந்த பகுதிக்கு அவ்வாறே மதிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

     நியாயபாலன் இந்த மதிப்பின் காரணமாகவே எவர் கண்ணிலும் படவில்லை நாளிதுவரை!

     இனி அவன் இப்படியே இங்கு இருந்துவிடுவதை விரும்பவில்லை அவர். அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி அவர் பெரியதொரு திட்டம் தீட்டி இருந்தார். அப்படி தீட்டிய திட்டத்தின் முதல் பகுதிதான் அவனுடைய வங்கப் பயணம் என்பதை அவன் அறிந்து கொண்டதும் புறப்படத் தயாரானான்.